கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வந்தால் கப்பலுடன் வருவேன்; இல்லையானால் கடலிலே சாவேன்.

4. வந்தால் கப்பலுடன் வருவேன்
இல்லையானால் கடலிலே சாவேன்!

கப்பலோட்டிய ஒரு தனிமனிதனைப் பார்க்கிறோம், வரலாற்றிலே படிக்கின்றோம்! இந்தத் தமிழன் ஏன் கப்பலோட்டினார்? எதற்காகக் கப்பலோட்டினார்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, கப்பலோட்டும் கலை தமிழர்களுக்கே உரிய ஒர் பாரம்பரியம் மிக்கது என்பதற்குச் சான்றாக, மூவேந்தர்களில் ஒரு பிரிவினரான சோழ சாம்ராச்சிய மன்னர்கள் பலம் வாய்ந்த தங்களது கப்பற்படைகளால், கடாரம், சாவகம், இலட்சத் தீவுகள், சிங்களம் போன்ற நாடுகளை வென்றார்கள் என்ற வரலாறுகளுக்கும் சான்றாக, தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்திலே பிறந்த சிதம்பரம் பிள்ளை தன்னந்தனி மனிதனாக நின்று கப்பலோட்டினார்.

வெள்ளைக்காரன் தமிழர்களுடைய செல்வத்தைச் சுரண்டுவது கண்டு நெஞ்சு பொறுக்காத சிதம்பரம் பிள்ளை வெள்ளைக் கொள்ளையனை எதிர்த்துக் கப்பலோட்டினார்!

அவர் கப்பலோட்டியதற்கு அது மட்டுமே காரணமன்று. தமிழர்களது முன்னோர்களாகிய பண்டைத் தமிழர்கள் கப்பலோட்டிச் செல்வத்தைப் பெருக்கிக் கலைகளை வளர்த்து நல்லரசு நடத்தி வல்லரசுகளாக வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை மீண்டும், நமக்கெலாம் நினைவுபடுத்திக் காட்டவும் கப்பலோட்டினார் நமது சிதம்பரம் பிள்ளை.

வெள்ளையரை எப்போது விரட்டியடிக்கலாம் என்று சமயத்தை எதிர்பார்த்திருந்தார் வ.உ.சி. இந்நிலையில், ஆங்கிலேயரது ஆட்சி வங்காள மாநிலத்தை இரண்டாக வெட்டி துண்டு போட்டு ஒன்றை முஸ்லீம் வங்காளம், மற்றொன்றை இந்து வங்காளம் என்று பிரித்துப் பெயரிட்டது.

மண்ணைத் துண்டு போடும் இந்த மாநிலப் பிரிவைச் செய்தவன் லார்டு கர்சான் என்ற வங்கக் கவர்னர்.

ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த இந்து முஸ்லீம்களைப் பிரித்து வேற்றுமையை உருவாக்கவே கர்சான் இவ்வாறு செய்தான். ஆனால், வங்க மக்கள் ஆங்கிலேயரின் இந்த ஆட்சிச் சூதினை, வஞ்சகத்தைப் புரிந்து கொண்டார்கள். அதனால், பிரிவினையை எதிர்த்து இந்திய மக்கள் போராடத் துவங்கிவிட்டார்கள்.

இந்த வங்கப் பிரிவினைப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது. அந்நிய துணிமணிகளைப் பகிஷ்காரம் செய்தார்கள். மக்கள் மலைமலையாக அவரவர் ஆடைகளையும் கொண்டு வந்து குவித்து நெருப்பு வைத்து எரித்தார்கள். இந்தத் தீ “முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே, யானுமிட்ட தீ மூள்க மூள்கவே” என்று பட்டினத்தடிகள் பாடியதற்கேற்ப ஆவேசத் தீ போல, அந்நிய ஆடைகளுக்கு இந்தியர் இட்ட தீ ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்திற்கே வைத்த தீயாக மாறி கொழுந்து விட்டெரிந்து கொண்டே இருந்தது.

சிதம்பரனார் இதை சரியான நேரமாகக் கண்டார். வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தார். தேச விடுதலைப் போரில் குதித்தார். அதன் அறிகுறியாக தன்னிடம் இருந்த அன்னிய துணிமணிகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி எரித்தார். இனி பிற நாட்டான் பொருள் எதையும் வாங்குவதில்லை என்று சபதமெடுத்தார்.

அந்நியத் துணி எவன் அணிந்திருந்தாலும், அவனை விரோதியாகவே பாவிக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது அந்நியனான ஆங்கிலேயனை எதிர்த்து இந்திய மக்கள் வங்கத்தில் போர்க்களம் கண்டு போராடுவதைக் கேட்டு மகிழ்ந்தார். அதே நேரத்தில் ஒவ்வொரு தமிழ் மகனையும் இந்தப் போராட்டக் களத்தில் குதிக்க வைக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதை ஒரு கடமையாகவும் கருதினார்.

வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதை சிதம்பரனார் உணர்ந்த காரணத்தால், அதே செல்வத்தைக் கொள்ளையடிக்கும் வெள்ளை வணிகர் கூட்டத்தினர் மீது தனது முதல் தாக்குதலைத் துவங்கினார்.

தூத்துக்குடி நகருக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே ஆங்கிலேயர்களது பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் என்ற வணிக நிறுவனத்தின் கப்பல்களே வியாபாரம் செய்து வந்தன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒர் ஆங்கிலேயர். இவர் இந்தியா சுதந்திரமடையக் கூடாது; வெள்ளையர்களின் வியாபார வேட்டைக் காடாகவே என்றென்றும் இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருப்பவர்.

ஆனால், இந்த வெள்ளை முதலாளியின் எஜமான மனப்பான்மையை வேரறுக்க எண்ணிய சிதம்பரனார், 1906-ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்தார். இந்த வியாபார நிறுவனத்துக்கு உதவியாகச் சில சிறு வியாபாரிகள் தங்களாலான உதவிகளைச் செய்தார்கள்.

தமிழர்களிலேயே சிலர் வெள்ளையனை எதிர்க்க முடியுமா என்று சிதம்பரனாரைக் கேலி செய்தார்கள். மலையை மடுவு எதிர்க்க இயலுமா? முயலுக்கேன் வீண் வேலை முள்ளம் பன்றியுடன் மோத என்று எகத்தாளமிட்டார்கள். வேறு சிலர், சிறு உளிதான் மலையைப் பிளக்கும் ஆயுதம்! சிதம்பரம் அஞ்சாதே துணிந்து செய். எம்மாலான உதவிகளை இயன்றவரைச் செய்கிறோம் என்று அவரது மனதுக்கு உரம் போட்டார்கள். எவர் என்ன பேசினாலும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சிதம்பரம், முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற மனதிடத்தோடு கப்பல் நிறுவனத்தை நிறுவிட அரும்பாடுபட்டார்.

1906-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினாறாம் தேதியன்று சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. கப்பல் கம்பெனியின் தலைவர் பொறுப்பை மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்தவருமான பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். சிதம்பரனார் அந்த நிறுவனத்தின் செயலாளர் ஆனார்.

கப்பல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 25 ரூபாய் என்றும், நாற்பதாயிரம் பங்குகளை விற்று பத்து லட்சம் ரூபாய் சேர்ப்பது என்றும் அந்த நிறுவனம் முடிவெடுத்துப் பணியாற்றியது. பங்குதாரர்கள் மளமளவென்று சேர்ந்தார்கள். ஜனாப் ஹாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் இரண்டு லட்சம் ரூபாய்க்குரிய பங்குகளை வாங்கினார். சுதேசிக் கப்பல் நிறுவனம் தமிழர்களுக்கு மட்டுமே உழைக்கும் நிறுவனமன்று ஆசியா கண்டத்திலுள்ள அனைவருக்கும் பேதமேதும் இல்லாமல் உழைக்கும் நிறுவனமாக இருந்தது.

சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கென்று சொந்தக் கப்பல் ஏதுமில்லை. வாங்கவும் இயலவில்லை அதனால் ஷாலைன் ஸ்டீமர்ஸ் என்ற கம்பெனியிடமிருந்து கப்பல்களைச் சுதேசிக் கம்பெனியார் குத்தகைக்கு வாங்கி ஒட்டினார்கள்.

ஆங்கிலேயர்களுடைய கம்பெனியை எதிர்த்து, போட்டி வியாபாரமாக, சுதேசிக் கப்பல்கள் ஓடுவதைக் கண்ட பிரிட்டிஷ் நிறுவனத்தாருக்குப் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டது. அதனால், இந்தியக் கப்பல் நிறுவனத்தை இயங்காமல் செய்வதற்குரிய முட்டுக் கட்டைகள் என்னென்னவோ அவற்றையெல்லாம் முடிந்த வரை வெள்ளை நிறுவனம் செய்து கொண்டே இருந்தது.

ஷாலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியின் உரிமையாளர் எஸ்ஸாஜி பாஜ்பாய் என்பவர். அவரைப் பிரிட்டிஷ் நிறுவனம் மிரட்டியதால் சுதேசிக் கம்பெனிக்கு குத்தகைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த கப்பல்களை ஷாலைன் நிறுவனத்தார் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். நடுக்கடலில் தத்தளிக்கும் ஓட்டைக் கப்பலைப் போல சுதேசிக் கப்பல் நிறுவனம் வணிகரிடையே சிக்கித் தவித்தது. அதே நேரத்தில் சுதேசிகளை நம்பி வெள்ளை நிறுவனத்தைப் பகைத்துக் கொண்ட வணிகர்கள் திகைத்தார்கள்.

இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் சிதம்பரனார் உள்ளம் கலங்கவில்லை. உடனே அவர் இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றார். அங்கே உள்ள கப்பல் கம்பெனி ஒன்றில், கப்பலைக் குத்தகைக்குப் பேசி தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தார். இதனைக் கண்ட தமிழ் வியாபாரிகள் சிதம்பரனார் சாதனையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

சொந்தமாகக் கப்பல் இல்லாமல் வெள்ளையர்கள் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து வாணிகம் நடத்திட முடியாது என்பதைச் சிதம்பரனார் உணர்ந்தார். அதனால், புதிய கப்பல்களை வாங்கிட அவர் பணம் திரட்டினார். துத்துக்குடி வணிகர்கள் முடிந்த அளவுக்கு சுதேசிக்கப்பல் கம்பெனிக்குப் பண உதவிதளைச் செய்தார்கள். ஆனால், அந்த நிதியுதவி கப்பல் வாங்கப் போதுமானதாக இருக்கவில்லை.

பம்பாய், கல்கத்தா போன்ற மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று எப்படியெல்லாம் யார் யாரைப் பிடித்துப் பணம் திரட்ட முடியுமோ அப்படியெல்லாம் சிதம்பரனார் பணம் சேகரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு பல வட நாட்டு வணிகர்கள் பங்குதாரர்கள் ஆனார்கள்.

சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கம்பெனிக்குப் பணம் திரட்டிடச் சென்ற போது, “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் தான் வருவேன். இல்லையென்றால் அங்கேயே கடலில் விழுந்து உயிர் விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு வடநாடு புறப்பட்டுச் சென்றார்.

வ.உ.சி. பம்பாய் சென்றபோது, அவரது ஒரே மகன் உலகநாதன் நோய்வாய்பட்டு இருந்தான். மனைவி மினாட்சி கர்ப்பிணியாக இருந்தார். சிதம்பரனார் நண்பர்கள் அவரை இப்போது போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் அவர் எனது மகனையும் - மனைவியையும் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறிவிட்டு பம்பாய் சென்றார். குடும்ப நலத்தை விட தேச சேவைதான் பெரியது என்ற எண்ணத்தோடு அவர் பம்பாய் போனார்.

எடுத்த காரியத்தில் மிகக் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடு பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் அவர் ஒரு கப்பலுடன் துத்துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்தார். கப்பலின் பெயர் ‘காலிபா’ என்பதாகும். கப்பலுடன் திரும்பி வந்த சிதம்பரனாரின் சாதனைத் திறனைக் கண்டு மக்களும், தமிழ் வணிகர்களும் பெரிதும் மகிழ்ந்தார்கள்.

அதே நேரத்தில் வேத மூர்த்தி என்ற அவரது நண்பர் பிரான்சு நாட்டுக்குச் சென்று ‘லாவோ’ என்றொரு கப்பலை வாங்கி வந்தார். அத்துடன் இரண்டு இயந்திரப் படகுகளும் சேர்த்து வாங்கப்பட்டன.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய கப்பல்களை வாங்கிய சிதம்பரனாரின் செயல் திறன் சாதனையைக் கண்டு இந்திய, தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பாராட்டின. மக்கள் கவி பாரதியார் தான் நடத்தி வந்த ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகையில், வெகு காலமாகப் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி பெறுவாளோ - அது போல, அளவற்ற ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாராதத்தாயும் - இந்த இரு பெரும் கப்பல்களைப் பெற்றமைக்காக மகிழ்ச்சி பெறுவாள் என்பது உறுதி” என்று அவர் எழுதி, சிதம்பரனாரின் சாதனைகளை பாராட்டினார்.

சுதேசி கப்பலிலேயே இலங்கைக்குப் போகும் பொருள்களை ஏற்றி அனுப்புவதென மக்கள் முடிவு கட்டினர். அதன்படி பொருள்களைக் கப்பலிலேயே ஏற்றுமதி செய்து அனுப்பி வைத்தார்கள்.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் கம்பெனி கப்பல்களில் இலங்கை போகும் பயணிகளும் ஏறவில்லை. கட்டுப்பாடாக எல்லாரும் தமிழர்களின் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தார்கள். வெள்ளைக்காரர்களுடைய கப்பல் கம்பெனி நிர்வாகத்தினர் தங்களது கப்பல்களுக்குரிய பயணக் கட்டணங்களையும் குறைத்துக் கொண்டு, தரகர்களை நியமித்து பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள். சுதேசிக் கம்பெனி மீது சில இல்லாத பொல்லாத பொய்ப் பிரச்சாரங்களையும் செய்தார்கள். ஆனால், சுதேசிக் கம்பெனியார் வெள்ளையர்களின் பித்தலாட்டப் பிரச்சாரங்களை மறுத்துத் தவிடு பொடியாக்கினர். தமிழர்களும் மற்ற பிரயாணிகளும் சுதேசிக் கப்பல்களுக்கே பேராதரவைத் தந்து அவற்றை முன்னேற்றுவித்தார்கள்.

மக்கள் ஆதரவு இல்லாததைக் கண்ட ஆங்கிலேய கப்பல் நிர்வாகம் தனது கட்டணத்தைக் குறைத்தது. அதற்குப் பிறகும் கூட யாரும் கப்பல் பயணம் செய்ய முன் வரவில்லை. ‘கட்டணமே இல்லாமல் இலவசப் பிரயாணம் செய்ய வாருங்கள்’ என்று பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள். அப்போதும் கூட மக்கள் ஆதரவு வெள்ளையர் கப்பல் வாணிகத்துக்கு இல்லை. இதற்கு மேலும், என்ன செய்யலாம் என்று யோசித்த பிரிட்டிஷ் நிர்வாகம், சிதம்பரனாரைச் சந்தித்து, ‘சுதேசிக் கப்பல் நிர்வாகத்தை விட்டு விட்டு வாருங்கள். லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்’ என்றும் கேட்டார்கள்.

‘இலஞ்சமா? எனக்கா? நான் துவங்கிய சுதேசிக் கம்பெனிக்கு என்னையே துரோகம் செய்யச் சொல்கிறீர்களா? முடியாது. ஊர் மக்களும், மனச் சான்றுடையாரும் இழித்துப் பழித்துப் பேசும் லஞ்ச ஈனச் செயலுக்கு நான் உடன்பட மாட்டேன்! போ, வெளியே’ என்று தூது வந்த ஆங்கிலேயத் தரகனைச் சிதம்பரனார் துரத்தியடித்தார். பொருளுக்காக தேச பக்தியை அடகு வைக்கும் மானமற்ற பணியைச் செய்ய தூது வந்த கதையைச் சிதம்பரனார் பொது மக்களிடம் அம்பலப்படுத்தினார்.

இதற்குப் பிறகு, கப்பல் வாணிகத்தோடும், கைத் தொழில், விவசாய வளர்ச்சி போன்றவற்றிலே கவனம் செலுத்தி, தொழில் துறையில் அனுபவமுள்ள பலரின் உதவியுடன் சென்னை விவசாய கைத் தொழிற்சங்கம் லிமிடெட் என்ற ஒரு சங்கத்தை சிதம்பரனார் தொடங்கி வைத்தார். இந்த சங்கத்துக்குரிய பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் சேர்ப்பது என்ற முடிவோடு அவர் பணியாற்றினார்.

ஏழைத் தொழிலாளர்களும், உழவர் பெருமக்களும் அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆனார்கள். இதற்கடுத்து, “தரும சங்க நெசவு சாலை”, “தேசிய பண்டக சாலை” என்ற இரு துணை நிறுவனங்களையும் சிதம்பரனார் துவங்கினார்.

இதே நேரத்தில் வங்காளத்தை இரு பிரிவாகப் பிரித்த ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பலத்த மக்கள் எதிர்ப்பு பலமாக உருவானது. இதைச் சமாளிக்க ஆட்சி எல்லா அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பிறகும் கூட நாட்டில் ஆங்கிலேயர் எதிர்ப்பு அதிகமாகவே உருவானது. இந்த நேரத்தில்தான் சிதம்பரனார் ஆங்கிலேயரின் வாணிபச்சுரண்டல் மீதான் எதிர்ப்பை மக்கள் இடையே மிகப் பலமாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.

ஆனால், வெள்ளையர்களது ஆட்சி எங்கே பலவீனமாகி விடுமோ என்று பயந்த ஆங்கிலேயருடன், பிரிட்டிஷ் கம்பெனி முதலாளிகளும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து, சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழிக்க மூர்க்கத்தனமான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

வாலர் என்ற ஓர் ஆங்கிலேய சப்மாஜிஸ்திரேட் என்பவர், இந்திய அதிகாரிகள் எவரும் சுதேசிக் கப்பலில் பிரயாணம் செய்யக் கூடாது என்ற ஓர் இரகசிய சுற்றறிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் எதிரொலியின் முதல் பிரச்சனையாக, ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியப் பயணிகளை மிரட்டினார்கள். சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்யக் கூடாது என்று அதிகார வர்க்கத்தினர் கெடுபிடிகளைச் செய்தார்கள். அதே நேரத்தில் இந்திய அதிகாரிகள் சுதேசிக் கப்பலின் வளர்ச்சிக்கு உதவக் கூடாது என்று பகிரங்கமாகவே வெள்ளையர்கள் செயல்பட்டார்கள்.

இந்த அதட்டலையும் மிரட்டலையும் கண்டு அச்சப்பட்ட இந்திய அதிகாரிகளில் பலர், பொய்க் காரணங்களைக் கூறி பணியிலே இருந்து தாமாகவே ஒய்வு பெற்றார்கள். பலர் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல்களைப் பெற்றுச் சென்றார்கள்.

இந்த நேரத்தில், பிரிட்டிஷ் கப்பல் மீது வேண்டுமென்றே சுதேசிக் கப்பல் மோதியதாக, துறைமுக அதிகாரிகளிடம் ஆங்கிலேய நிர்வாகத்தினர் புகார் செய்தார்கள். இந்தப் புகாருக்குப் பிறகு வெள்ளையர் நிர்வாகக் கப்பல் புறப்பட்ட பின்புதான் சுதேசிக் கப்பல் துறைமுகத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்று சப் மாஜிஸ்திரேட் வாலர் உத்தரவிட்டார். ஏன், இந்த சூழ்ச்சியான உத்தரவை அவர் பிறப்பித்தார்?

பிரிட்டிஷ் கப்பலுக்குரிய பிரயாணிகளை முதலில் நிரப்பிக் கொண்டால், அடுத்துப் புறப்பட இருக்கும் சுதேசிக் கப்பலுக்குத் தேவையான பிரயாணிகள் இருக்க மாட்டார்கள் அல்லவா? அதனால், சிதம்பரனார் நிர்வாகத்துக்கு நஷ்டம் மேல் நஷ்டம் ஏற்பட்டு நிர்வாகச் சீர்கேடுகள் உருவாகி, கம்பெனியை மூடி விடும் நிலையும் ஏற்பட்டு விடும் என்று எண்ணியே அந்த மாஜிஸ்திரேட் இப்படிப்பட்ட சூழ்ச்சியான உத்தரவைப் பிறப்பித்தார் என்று துத்துக்குடிப் பொதுமக்களும், பிரயாணிகளும் பரவலாகப் பேசலானார்கள்.

இந்த சூது நிறைந்த உத்தரவை எதிர்த்து சுதேசிக் கம்பெனியார் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மேல் முறையீடு வழக்குப் போட்டார்கள். அதே நேரத்தில், ‘சுதேசிக் கப்பல் - பிரிட்டிஷார் கப்பல் மீது மோதவில்லை, அது பொய் புகார்’ என்பதையும் சுதேசி நிறுவனம் நீதி முன்பு நிரூபித்துக் காட்டியது. இந்த உண்மைகளை உணர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட், ‘சுதேசிக்கப்பல் எந்த நேரத்திலும் புறப்படலாம், அந்த உரிமை அதற்கு உண்டு’ என்று தீர்ப்பளித்தார்!

இந்த தீர்ப்பு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு இடி விழுந்தாற்போன்ற அபாய நிலையை உருவாக்கி விட்டது. சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கும், பிரயாணிகளுக்கும் உண்மையான நீதி கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆனாலும், கடற்சுங்க அதிகாரிகள், சுகாதார முறைகளை மேற்கொள்ளும் டாக்டர்கள், துறைமுக அதிகாரிகள் அனைவரும் - ஒட்டு மொத்தமாகவும், தனித்தனியாகவும் சுதேசிக் கப்பலில் பயணம் செய்யும் பிரயாணிகளுக்கு பல வழிகளில் தொல்லைகளைக் கொடுத்து, அவர்களது பயணத்துக்கு வெறுப்புணர்வைத் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள்.