கம்பன் தொகு

ஆசிரியர்: கவிமணி தொகு



1. ஆரியம் நன்குணர்ந் தோன் - தமிழின்
ஆழம் அளந்து கண்டோன்;
மாரி மழைபோலக் கவியின்
மழைபொ ழிந்திடு வோன்.

2. அயன்ப டைப்பினையும் - திருத்தி
அழகு செய்திடு வோன்;
நயம்தெ ரிந்துகதை நடத்தும்
நாட கக்கவி ஞன்.

3. இந்திர சாலமெல்லாம் - கவியில்
இயற்றிக் காட்டிடு வோன்;
மந்திரச் சொல்லாலே உள்ளம்
மயங்கச் செய்திடு வோன்.


4. உலக உண்மைகளை - எவரும்
உணரக் கூறிடு வோன்;
அலகிலாக் கலைகள் - உறையும்
ஆலய மாகிடு வோன்.

5.பண்டைத் தமிழ்மொழியைப் - படித்து
பக்குவம் செய்துவைத் தோன்;
கண்டின் சுவையெல்லாம் - சொல்லில்
கனியக் காட்டிடு வோன்.

6. எவரும் போற்றிடவே - தமிழில்
இராம கதைபுனைந் தோன்;
புவனம் உள்ளளவும் - அழியாப்
புகழ்பரந்திடு வோன்.

7. விருத்தப் பாவினிலே - கருத்தை
விளங்கச் செய்தளித் தோன்;
திருத்தம் பெற்றநடை - தமிழில்
தெரியக் காட்டிநின் றோன்.

8. அணி யணியாக - அணிகள்
அடுக்கி வைத்திடு வான்;
மணிமணி யான - பொருள்கள்
வாரி வழங்கிடு வான்.

9. பண்ணுக் கிசைவாக - விருத்தம்
பாடி அளித்திடு வான்;
எண்ணும் கருத்துடனே - சந்தம்
இசையச் செய்திடு வான்.

10. தீது நன்மை யெல்லாம் - ஆய்ந்து
தெளியச் சொல்லிடு வான்;
வாதி பரிதிகளின் - வழக்கை
வரைந்து காட்டிடு வான்.

11. அரக்கர் நெஞ்சறி வான் - முனிவர்
அகமும் கண்டறி வான்;
குரங்கின் உள்ளறி வான் - வேடன்
குணமும் நன்கறி வான்.

12. நாடகக் காட்சி யால்லாம் - கவியில்
நன்கு காட்டிடு வான்;
பாடகர் போற்றி டவே - இனிய
பண்கள் தந்திடு வான்.

13. மூவர் முடிவேந்தர் - போற்றும்
முத்தமிழ்ப் பாவேந்தன்,
தேவி அருள்பெற் றான் - தமிழ்த்தாய்
செய்தவத் தால்பிறந் தான்.

14. நன்று செய்த வள்ளல் - சடையன்
நாமம் இப் புவியில்
என்றும் நின்றிடவே - கவியில்
இடம் அறிந்தளித் தோன்.

15. புவி யரச ரெல்லாம் - நிகழும்
புகழ்ந்து பாராட்டும்
கவியரசர் தொழும் - பெரிய
கம்ப நாடாள் வான்.

16. கம்பன் கவி வாழ்க! - இராம
காதை நிதம் வாழ்க!
அம்புவி மீதெங்கள் - அருமை
அமுதத் தமிழ் வாழ்க!


(வேறு)
17. எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத்
தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து - நித்தமும்
அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்த
கம்பன் கவியே கவி.
18. உள்ளம் மகிழ உரைநா அமுதூறக்
கொள்ளும் இருகாதும் குளிரவே - தெள்ளரிய
செந்தமிழ்க் கம்பத் திருநாடன் செய்நூலுக்(கு)
எந்தநூ லாகும் இணை.
19. பாரில் பெயரோங்கு பன்மொழிக்கும் நாணாது
நேரில் நிமிர்ந்து தமிழ் நிற்பதுதான் - சீருயர்ந்து
ஏறுபுகழ்க் கம்பன் இராமகதை யால்வந்த
வீறுகொண் டென்று விளம்பு.


2. கவியமுதம் தொகு

(வெண்பா)

1. அம்புவிக்கு வாய்த்த அருட்கவி, ஐயமின்றி
உம்பரமு தொத்த உயிர்க்கவி - கம்பனும்தன்
மந்திரச் சொல்லால் வனைந்தகவி, என்றேனும்
வெந்திடுமோ, தீயால்? விளம்பு.

(வேறு)

2. ஓலை எரியும் தாளெரியும்
உள்ளத் தெழுதி வைத்துநிதம்
காலை மாலை ஓதுகவி
கனலில் வெந்து கரிந்திடுமோ?

3. சிந்தை மகிழ விழாக்கண்டு
lதேர்ந்த புலவர் முன்வந்து
சந்த மெழவே பாடுகவி
தழலில் வெந்து நீறாமோ?

4. உள்ளத் துவகை பொங்கியெழ
உரைகள் சொல்லப் பொருளேறித்
தெள்ளத் தெளிந்த கவியமுதம்
தீயில் வெந்து பொடியாமோ


கவிமணியின் கவிமலர்கள் தொகு

[[ ]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்&oldid=444516" இலிருந்து மீள்விக்கப்பட்டது