கம்பன் கவித் திரட்டு 1/முன்னுரை
ஆதி காவியம்
இராமாயணம் என்ற காவியம் ஆதியிலே வால்மீகி முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது; இருபத்து நாலாயிரம் சுலோகங்கள் கொண்டது; ஆதி காவியம் என்ற பெருமை பெற்றது.
இராமர் அசுவமேத யாகம் செய்தபோது அந்த மகா மண்டபத்திலே லவன்-குசன் ஆகிய இருவராலும் பாடப் பெற்றது; உண்மைக்கு மாறுபடாத ஒன்று — நடந்ததை நடந்தவாறு கூறுவது - என்று எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
வால்மீகி முனிவரது காவியத்தினின்றும் உணர்ச்சி பெற்ற கவிஞர் பலர்.
மகாகவி காளிதாசன் ரகு வம்சம் என்ற சாகாவரம் பெற்ற காவியத்தை இயற்றினான்.
சம்பு எனும் கவியோடு உரை நடை தழுவிய நூலை அளித்தான் போஜன்.
இவை சம்ஸ்கிருத மொழியை வளம் பெறச் செய்தன.
இவற்றின் விளைவாக நமது நாட்டு மொழிகள் பலவற்றிலும் இராமாயணங்கள் தோன்றலாயின. அம்மட்டோ? இல்லை; இல்லை.
பெளத்தர்களும் சமணர்களும் தங்களுக்கு ஏற்ற முறையில் இராம காதையைத் தழுவிக் கொண்டார்கள். அந்த வகையில் தோன்றிய ராமாயணங்கள் பல; பலப்பல.
இராமாயணம் இந்திய எல்லையுள் மட்டும் அடங்கியதோ? இல்லை; இல்லை. கடல் கடந்து சென்றது.
கம்போதியாவிலே இராமாயணத்தைக் காண்கிறோம். அங்கோர்வாட்டிலே உள்ள கலைப் பொக்கிஷங்கள் இராமயணத்தை நமக்கு போதிக்கின்றன.
ஜாவாவிலே உள்ள கலைச் சிற்பங்கள் நம் கண்ணைக் கவர்கின்றன; கருத்தை ஈர்க்கின்றன; இராமாயண நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றன. ஜாவா நாட்டிலே முதன் முதலாக இராமாயணம் இயற்றப்பட்ட காலம் கி.பி. 929 என்று கூறப்படுகிறது.
சில ஆண்டுகள் முன்பு இராமாயண மகாநாடு ஒன்று மலேசிய நாட்டிலே நடைபெற்றது. இராமாயண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் இசைக் கூத்துகள் பலவும் அதுபோது நிகழ்த்திக் காட்டப் பெற்றன. இவை மலேசிய கலை வாழ்வில் ஒன்றியவை.
இராமருக்கு என்று எழுப்பப் பெற்ற கோயில்கள் நம் நாட்டிலே உள. அதுவன்றிக் கோயில்கள் பலவற்றிலே இராமாயண நிகழ்ச்சிகள் செதுக்கப் பெற்றிருத்தலும் காண்கிறோம்.
கி. பி. ஐந்தாம் நூற்றண்டிலே கட்டப்பட்டது தேவகார் விஷ்ணு ஆலயம். இதைக் கட்டியவர்கள் குப்த அரசர்கள். இந்த ஆலயத்திலே இராமாயண நிகழ்ச்சிகள் கற்களிலே வடிக்கப் பெற்றுள்ளன. அகல்யை சாபம் நீங்கப்பெற்றதும், சூர்ப்பணகை மூக்கு அறுபட்டதும் சிறப்பாக வடிக்கப் பெற்றுள்ளன. கல் உருவோ, உயிர் ஓவியமோ என்று காண்பவர் வியக்கத்தக்க முறையில் சிற்பி தம் கை வண்ணம் காட்டியுள்ளார்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டினது என்று அறுதியிட்டுக் கூறப்படுவது பாதாமி வைஷ்ணவ குகைக் கோயில். அங்கே கருங்கல்லால் செதுக்கப் பட்டுள்ளன இராமாயணச் சிற்பங்கள்.
கி.பி. 740ல் மேலைச் சாளுக்கியர் தம்மால் கட்டப்பட்டது விருபாட்சீசுவரர் கோவில். அங்கே சேதுவை அணைகட்டிய நிகழ்ச்சி சித்தரிக்கப் பட்டுள்ளது.
கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது கைலாசநாதர் கோவில். எல்லோராவில் உள்ளது. இராஷ்டர கூட மன்னர் கட்டியது. இங்கே அருமையான சிற்பம் காணப்படுகிறது. அதாவது இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது ஜடாயு எதிர்த்துப் போரிட்ட நிகழ்ச்சி.
இப்படியாக நமது பாரத தேசத்திலே தோன்றிய கவிகள் தங்கள் காவியங்கள் மூலம் இராம காதையை வடித்தார்கள்; மங்காப் புகழ் பெற்றார்கள்; என்றும் நிலை பெற்றார்கள்; மன்னர் தம் ஏவலால் சிற்பிகள் கருங்கற்களில் இராம காதையை வடித்தார்கள். அவை இன்றும் நிலைபெற்று நிற்கின்றன.
இராம கதைக்கு விதை ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதகாலம் கி. மு. 750 முதல் 1000 வரை ஆகும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
சீதை எனும் பெயர் ரிக் வேதத்திலே பல இடங்களில் காணப்படுகிறது. சீதை பயிர்த் தொழிலின் தெய்வம். தசரதன், இராமன் என்ற பெயர்களும் ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. ஜனகன் என்ற பெயர் சதபதப் பிராம்மணத்திலும், தைத்ரீய பிராம்மணத்திலும், காணப்படுகின்றன. ஆனால் இராமாயணம் கதை வடிவில் இல்லை.
வால்மீகி முனிவர்தான் இராமாயணத்தைக் காவியமாகப் பாடிய ஆதிகவி. அவர் காலத்திலே வழங்கி வந்த இராமகதைகளை எல்லாம் ஒருங்கு திரட்டிக் காவிய வடிவம் கொடுத்தார் வால்மீகி முனிவர் என்கிறார் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை.
(கம்பன் காவியம் — பக் 152)
ஆதி கவியாகிய வால்மீகி முனிவர் தமது இராமகாவியத்தை இயற்றிய காலம் கி. பி. 438 என்று அறுதியிட்டுக் கூறுகிறார் சென் குப்தா எனும் அறிஞர்[1]
மகா பாரதத்திலே இராம காதையைக் காண்கிறோம். இராமோ பாக்கியானம் எனும் பெயர் பெற்றுளது. இக்கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரருக்குச் சொல்கிறார்,
புத்த ஜாதகக் கதைகளிலே இராமாயணத்தைக் காண்கிறோம். ஜாதகக் கதைகளிலே மூன்று, இராம கதையைக் கூறுகின்றன. இராமரைப் பற்றிய கதையே ஆனாலும் இவை, வால்மீகி ராமாயணத்துக்கு மாறுபட்டவை ஆகும்.
ஜைனர்களும் தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ப இராமகாதையை அமைத்துக் கொண்டார்கள். ஜைனர்களிடையே இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று சுவேதம்பர ஜைனம், மற்றொன்று திகம்பர ஜைனம்.
சுவேதம்பரர் என்போர் வெள்ளை ஆடை உடுப்போர். திகம்பரர் என்போர், ஆடையே அணியாதோர். விமல சூரி என்பார் சுவேதம்பரஜைனர். இவர், தம் பிரிவுக்கு ஏற்ப இராம கதையை அமைத்துக் கொண்டார்.
திகம்பர ஜைனராகிய குணபத்திரர் என்பவர் தம் பிரிவுக்கு ஏற்ப இராமகாதையை அமைத்துக் கொண்டார். இவையாவும் வால்மீகி இராமாயணத்துக்குப் பின் தோன்றியவை என்பது அறிஞர் கருத்து.
புராணங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை பதினெட்டு. இவற்றுள் பலவற்றில் இராம கதையைக் காண்கிறோம். ஆயினும் இவை பல்வேறு மாறுதல்களுடன் காணப்படுகின்றன. பிரம்மாண்ட புராணத்தில் காணப்படும் இராமகதைதான் அத்யாத்ம ராமாயணம் என்ற பெயரில் விளங்குகிறது.
திபேத், துருக்கி, இந்தோனேசியா ஜாவா, இந்தோ-சீனா, சையாம், பர்மா, முதலிய நாடுகள் பலவும் தங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்ப இராம கதையை அமைத்துக் கொண்டுள்ளன.
தமிழ் நாட்டில்
தமிழ் நாட்டுக்கு வருவோம். கம்பர்தான் இராமாயணத்தை வட நாட்டிலேயிருந்து இறக்குமதி செய்தாரா? அல்லது அவருக்கு முன்பே இராமகாதை தமிழ் மக்கள் அறிந்த ஒன்றா? இது கேள்வி. விடை காண முயல்வோம்.
தமிழ் மொழியிலே மிகப் பழம் பெரும் காப்பியங்கள் என்று சொல்லப்படுவன ஐந்து. அவை முறையே சிந்தாமணி சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பனவாகும். இந்த ஐந்திலே ஒன்று சிலப்பதிகாரம். இது கி. பி. மூன்றாம் நூற்றண்டுக்கு முற்பட்டது. இதிலே என்ன காண்கிறோம்? கோவலனும் கண்ணகியும் புகார் நகர் நீங்கினர். இவ்விருவரும் அந்நகர் விட்டுச் சென்றபின் அந்நகர் எக் காட்சி வழங்கியது?
இராமன் வனம் சென்ற பின் அயோத்தி எக்காட்சி வழங்கியதோ அத்தகைய காட்சி வழங்கியது புகார் நகரம்.
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புறஞ்சேரியிறுத்த காதையில் பின்வரும் வரிகளைக் காண்கிறோம். வேறு யாரும் சொல்ல வில்லை; இளங்கோ அடிகள் சொல்கிறார்.
பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று அருங்கானடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல்
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்
(சிலப்பு 12 — 63-66)
அதே சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைக்கு வருவோம். அங்கே என்ன காண்கிறோம்?
மூவுலகும் ஈரடியால்முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடு காண்போந்து
சோவரணும் போர்மடியத் தென்னிலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர்கேளாத செவி என்ன செவியே.
திருமாலே மனித உருக்கொண்டு இராமனாக வந்தான் என்ற கொள்கை சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்நாட்டில் வேர் கொண்டு விட்டது என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
மணிமேகலைக்கு வருவோம். அங்கே என்ன காண்கிறோம்? காய சண்டிகை என்பவள் யானைப் பசி எனும் நோயால் வாடினாள். அவள் மணிமேகலையிடத்திலே தனது பசி பற்றிப் பின் வருமாறு கூறினாள்.
“திருமால் தன் வடிவத்தை மறைத்துப் பூமியிலே இராமனாகத் தோன்றிக் கடலிலே அணை கட்டிய போது குரங்குகள் கொண்டுவந்து எறிந்த குன்றுகளை எல்லாம் கடல் விழுங்கி மேலும் மேலும் வேண்டி நின்றது போல” என்று தன் பசிக்கு உவமை கூறினாள்.
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலறு மூன்னீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு
(மணிமேகலை 17 — 10-14)
ஆக, இரண்டு காப்பியங்களை இப்போது கண்டோம். ஒன்று சிலப்பதிகாரம், மற்றொன்று மணிமேகலை. இவை இரண்டும் தமிழிலே உள்ள பழம் பெரும் காப்பியங்கள். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காப்பியங்கள்.
சங்க இலக்கியம் என்று சொல்கிறார்களே! அந்தச் சங்க இலக்கியத்திலே ஒன்று எட்டுத்தொகை. எட்டாகிய தொகை நூல்கள். “நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.
எட்டுத் தொகையிலே ஒன்று கலித்தொகை “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று புகழப் பெற்றது. அதிலே குறிஞ்சிக் கலியிலே பின் வரும் பாட்டு காணப்படுகிறது :
இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி
தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
மலையிலே வேங்கை மரங்கள் உள்ளன. அவை பூத்துக் குலுங்குகின்றன. அந்த வேங்கை மரத்தைப் பார்க்கிறது மதயானை ஒன்று. என்ன நினைக்கிறது? வேங்கையை நினைக்கிறது. நினைக்கவே சினம் பொங்குகிறது; ஓடி வருகிறது. வேங்கை மரத்தை முட்டுகிறது; முட்டவே என்ன ஆகிறது?
யானையின் கொம்புகள் மரத்திலே பதிந்து விடுகின்றன. மிக்க ஆழமாகப் புதைந்து விடுகின்றன, புதைந்த தந்தங்களை மீட்க இயலாது வருந்துகிறது மதயானை; அரற்றுகிறது; பெருங்குரல் எடுத்து ஓலமிடுகிறது.
இதைக் காண்கிறார் ஒரு கவி. அவருக்கு என்ன நினைவு வருகிறது? இராவணன் நினைவு வருகிறது. இராவணன் என்ன செய்தான்? கயிலையங்கிரியைப் பெயர்க்க விரும்பினான். பத்துத் தலைகள் கொண்ட அந்த இராவணன் தனது இருபது கைகளையும் கயிலையங்கிரி அடியிலே கொடுத்துப் பெயர்க்க முயன்றான், என்ன ஆயிற்று? கை சிக்கியது; எங்கே? மலை அடியிலே, நசுங்கியது; வலி தாங்க முடியவில்லை. அழுதான்; ஓலமிட்டான்.
இது போலிருக்கிறது மதயானை வேங்கை மரத்தை முட்டியது என்று ஒப்பிட்டுக் காட்டுகிறார் கவி. அவர் யார் தெரியுமா ? கபிலர்.
எட்டுத் தொகை நூல்களிலே ஒன்று புறநானூறு என்பது. புறம் பற்றிய பாடல்கள் நானூறு கொண்டது. ஆதலின் இந்நூல் புற நானூறு எனும் பெயர் பெற்றது. இதிலே ஒரு பாடல் காண்கிறோம். அது வருமாறு :
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிங்தாங்கு
அறாஅவரு நகை இனிது பெற்றிகுமே
(புறம் 378)
பசுங்குடையார் என்பவர் ஒரு புலவர். இளம் செட் சென்னி எனும் சோழ அரசனைப் புகழ்ந்து பாடினார் அவர்; அணிகள் சிலவற்றை அவருக்குப் பரிசாக வழங்கினான் அரசன். அந்த அணிகளைக் கொண்டு போய் தம் குழந்தைகளுக்குக் கொடுத்தார் புலவர்.
குழந்தைகள் என்ன செய்தன? காலுக்கு இடவேண்டிய அணிகளைக் கைக்கு இட்டன. கைக்கு இடவேண்டியவற்றைக் காலுக்கு இட்டன. இப்படி மாறி மாறி அணிந்து மகிழ்ந்தனவாம். அது எது போல் இருந்தது?
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவள் தனது அணிகள் சிலவற்றை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கீழே எறிந்தாள். அது ருசிய முக பர்வதத்திலே இருந்த குரங்குகள் நடுவே வீழ்ந்தது.
குரங்குகள் என்ன செய்தன? மூட்டையை எடுத்தன; அவிழ்த்தன; அணிகளை எடுத்தன; கையில் இடவேண்டிய அணிகளைக் காலில் இட்டன; காலில் இடவேண்டியவற்றைக் கையில் இட்டன. இப்படி மாற்றி அவற்றை அணிந்து கொண்டு குதித்தன. புலவரது குழந்தைகளின் செயலும் இம்மாதிரி இருந்ததாம். இவ்வாறு சங்க இலக்கியம் சொல்கிறது. மேற் கண்டவற்றால் என்ன தெரிகிறது?
இராம கதை தமிழ் மக்களுக்குப் புதியது அன்று, கம்பருக்குப் பலநூறு ஆண்டுகள் முந்திய காலத்திலேயே தமிழ் மக்கள் அறிந்த ஒன்று. அத்தகைய கதைக்குக் காவிய வடிவம் தந்தார் கம்பர்; கவிச்சக்கரவர்த்தி ஆனார்,
உலக மகா கவியாகிய ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல; அவற்றுள் ஒன்று ஹாம்லெட், சிறந்த சோக நாடகம் என்று ஆங்கில இலக்கிய உலகம் ஒப்புக்கொண்ட ஒன்று. இந்த நாடக பாத்திரப் படைப்புகளை ஆங்கிலப் புலமை மிக்கவர்கள் வியந்து வியந்து பாராட்டுகிறார்கள். ஹாம்லெட் கதை நிகழ்ச்சி ஷேக்ஸ்பியர் காலத்தது அன்று. டென்மார்க், ஸ்காண்டிநேவிய நாடுகளில் நாடோடியாக மக்களிடையே வழங்கி வந்த மிகப் பழங்கால நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு தாம் சொல்ல விரும்பிய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார் ஷேக்ஸ்பியர். அதே போலத் தாமும் செய்துவிட்டார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.
தமிழ் மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக நாடோடி கதையாக வழங்கி வந்த இராம காதையை எடுத்துக் கொண்டார். வால்மீகியைத் தழுவிக் கொண்டார். தாம் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்லிவிட்டார்.
கம்பர்
கம்பர் என்பது இவருக்கு இடப்பெற்ற இயற்பெயரே. வேறு எந்தக் காரணம் பற்றியும் இப்பெயர் இவருக்கு வரவில்லை.
கம்பர் என்பது திருமாலின் பெயர். கம்பத்திலே தோன்றியவர் கம்பர். கம்பத்திலே திருமால் தோன்றியது ஏன்? எப்போது?
பிரகலாதனுக்கு அருள் புரிய வேண்டித் திருமால் நரசிம்மாவதாரம் எடுத்தார் அல்லவா? அப்போது எங்கிருந்து தோன்றினார்? கம்பத்திலிருந்து தானே தோன்றினார்! ஆகவே, கம்பர் என்பது நரசிம்ம சுவாமிக்குரிய தமிழ்ப் பெயர்.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் பல்லவன் நந்தி வர்மன். இவனுடைய அரசியல் அதிகாரி ஒருவனது பெயர் கம்பன் அரையன் என்பது.
தெள்ளாறு எறிந்த நந்திவர்மப் பல்லவனின் இரண்டாவது மகன் பெயர் கம்பவர்மன்.
முதல் இராசராச சோழனுடைய படைத் தலைவன் ஒருவன் கம்பன் மணியன்[2] எனும் பெயருடன் இருந்தான். அரசியல் அதிகாரி ஒருவனுக்குக் கம்பன்[3] என்று பெயர்.
எனவே கம்பன் என்பது இயற்கையாகவே வழங்கி வந்த பெயர்; திருமாலுக்குரிய பெயர்.
கம்பர் பிறந்த ஊர் எது? இது அடுத்த கேள்வி. தஞ்சை ஜில்லாவிலே தேரழுந்தூர் என்று வழங்கப்படும் திருவழுந்தூரே இவர் பிறந்த ஊர் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.
கம்பன் பிறந்த ஊர்; காவேரி தங்கும் ஊர்
கும்பமுனி சாபம் குலைந்த ஊர் — செம்பதுமத்
தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா
ஓதகத்தார் வாழும் அழுந்தூர்
கம்பரை ஆதரித்தவர் யார்? சடையப்பவள்ளல். இவரோ திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர்.
திருவெண்ணெய் நல்லூர் எங்கே உள்ளது? தஞ்சை ஜில்லா குத்தாலத்துக்கு அருகே கதிராமங்கலம் எனும் ஊர் ஒன்றுளது. இதுவே திருவெண்ணெய்நல்லூர் என்று சொல்வர் சிலர். இங்கே தான் சடையப்ப வள்ளல் வாழ்ந்தார் என்பது இவர் தம் கூற்று.
இதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஒன்றுமில்லை. திருவெண்ணெய்நல்லூர் எனும் பெயர் கதிராமங்கலமாக மாறியது எப்படி? எப்போது? ஏன்? விளக்கமில்லை. ஆகவே இவர் தம் கூற்று ஏற்கப் பாலது அன்று.
தென் ஆற்காடு ஜில்லாவிலே இருக்கிறது திருவெண்ணெய் நல்லூர். நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்றது; தொண்டை நாட்டைச் சேர்ந்தது. பெண்ணையாற்றின் கரையிலே அமைந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை அதே பெயருடன் விளங்கி வருகிறது.
பித்தா பிறை சூடி
பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே
நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருட்குறையுள்
அத்தா உனக்கு ஆளா இனி
அல்லேன் எனலாமே.
இது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கம்பருக்கு முன் வாழ்ந்தவர்: சந்தேகமே இல்லை.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் முதல் இன்று வரை இந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது.
இதை விடுத்து எங்கோ ஓர் ஊரைப் பிடித்துக்கொண்டு எந்த வித ஆதாரமும் இல்லாமல் இதுதான் திருவெண்ணெய் நல்லூர் என்று சொல்கிறார்களே இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடியாது; முடியாது; முடியவே முடியாது.
சடையப்ப வள்ளல் வாழ்ந்த திருவெண்ணெய் நல்லூர். தென் ஆற்காடு ஜில்லாவில் உள்ளது; பெண்ணையாற்றின் கரையில் உள்ளது; சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல் பெற்றது, தஞ்சை ஜில்லாவில் உள்ள கதிராமங்கலம் அன்று; அன்று.
கம்பரது காலம்
கம்பர் காலம் எது? கம்பர் வாழ்ந்த காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் கருத்து. கம்பராமாயணத் தனிச்செய்யுள் ஒன்று இக்கருத்தை வலியுறுத்துகிறது. அஃதாவது வருமாறு:
ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறு ஒழித்துத்
தேவன் திருவழுந்துர் நன்னாட்டு மூவலூர்
சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
காரார் காகுத்தன் கதை
கம்பர் தமது காவியத்தைப் பாடி முடித்த காலம் சகாப்தம் 1100. அதாவது கி.பி. 1178
தமிழ் நாவலர் சரிதையில் பாடல் ஒன்று காணப்படுகிறது. இந்தப் பாடல் கம்பர் பாடிய ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட காகதீய அரசன் பிரதாபருத்திரன்.
அவனைப் பாராட்டிக் கம்பர் பாடிய பாடல் இது
அவனி முழுதுண்டும் அயிரா பதத்துன்
பவனி தொழுவார் படுத்தும்—புவனி
உருத்திரா உன்னுடைய ஓரங்கல் நாட்டில்
குருத்திரா வாழைக்குழாம்.
பிரதாப ருத்திரன் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு (1162—1179)
பிரதாப ருத்திரனைப் பாராட்டிக் கம்பர் பாடவேண்டிய காரணம் என்ன?
கம்பர் மீது சினம் கொண்ட சோழ அரசன் அவரைத் தன் சபையிலிருந்து விரட்டி விட்டான். கம்பரும் சோழனைச் சினந்து பாடி அவனது சபையை விட்டு வெளியேறினார். வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காகதீய அரசன் பிரதாபருத்திரன் சபையிலே சில காலம் இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமான பாடல்கள் இதோ:
போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
தூற்றினும் தூற்றுவர் - சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியவரே
–சோழன்
மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளஈத கொம்பு
—கம்பர்.
அங்ஙனம் சிலகாலம் இருந்தபின் மீண்டும் வந்து திருவெண்ணெய் நல்லூர் சடையப்பரின் ஆதரவு பெற்று இராமாயணத்தைப் பாடி முடிந்தார் என்பது செவி வழி வந்த கதை.
கம்பர் ராமாயணம் பாடியதேன்?
நம் நாட்டிலே எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அங்ஙனம் இருக்க அவற்றை யெல்லாம் விடுத்து இராம காதையைக் கம்பன் தெரிந்தெடுத்தது ஏன்? காவியமாகப் பாடியது ஏன்?
இதற்குப் பதில் கம்பரே சொல்கிறார்,
“ஆசை பற்றி அறையலுற்றேன் பற்று இக்காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ”
“ஆசை கொண்டதால் இந்த இராமன் கதையைச் சொல்ல முற்பட்டேன்” என்கிறார்.
என்ன ஆசை? சொல்லவேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை எதனால் எழுந்தது?
மாசற்றதோர் அரசியல் குற்றம் சிறிதும் இல்லாத ஓர் ஆட்சி - இராமனது ஆட்சி.
எனவே அத்தகைய உன்னத லட்சியவாதியாகிய இராமனின் உயரிய ஒழுக்கம் கண்டு சிந்தை பறிகொடுத்தான் கம்பன்.
“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்” என்ற விழுமிய கருத்தில் ஈடுபட்டான்.
தன்னுடைய ஈடுபாட்டை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள ஆசை கொண்டான்.
எனவே “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று தனது உள்ளக்கிடக்கையை வெளியிடுகிறான் கம்பன்.
மேலும் சொல்கிறான்:
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாதெனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கதை மாட்சி தெரிவிக்கவே
இந்த தெய்வப் பெருங் கதையின் பெருமையை - உயர்வை - எல்லாருக்கும் தெரிவிக்கவே கம்பன் இராம காதையைப் பாடினான்.
இந்த ஆசை கம்பனுக்கு வரக் காரணம் என்ன? காலமும் சூழ்நிலையுமே. காலமும் சூழ்நிலையும் எவ்வாறு இருந்தன?
ஆராய்வோம்.
காலமும் சூழ்நிலையும்
சங்க காலம் என்பது கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிந்தது. அவ்வளவில் மூவேந்தர் ஆட்சியும் மறைந்தது.
தொண்டை நாட்டிலே பல்லவர் ஆட்சி தோன்றியது. பல்லவ அரசின் தலை நகரம் காஞ்சி ஆயிற்று, பாண்டிய நாட்டிலே களப்பிரர் ஆட்சி தோன்றியது.
பின்னே சோழ நாடும் களப்பிரர் வசம் ஆயிற்று, களப்பிரர் ஆட்சி கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை நிலவியது.
களப்பிரர் சமண மதத்தையும், பெளத்த மதத்தையும் ஆதரித்தனர். கி.பி. 470ல் வச்சிர நந்தி என்பவர் மதுரையிலே தமிழ்ச் சங்கம் அமைத்தார். சமண அறிஞர் பலர் தமிழ் இலக்கியங்கள் வாயிலாகத் தங்கள் மதக் கருத்துகளைப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். சீவக சிந்தாமணி எனும் சிறப்புமிக்க தமிழ்க் காவியம் தோன்றிய காலம் இதுவே. இந்தக் காவியத்தை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார். சமணக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதே சீவக சிந்தாமணியின் நோக்கம் ஆகும்.
சங்க காலத்திலே தமிழ் நாட்டில் பெளத்த மதம் பரவியிருந்தது. சமண மதமும் பரவியிருந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் தாக்குதல் இல்லை. பெளத்த சமணப் போராட்டம் இல்லை. பின்னே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்தமும் சமணமும் தம்முன் பிணங்கின. பெளத்த சமணப் போராட்டம் தலைதூக்கியது.
குண்டலகேசி ஆகிய இரு நூல்களும் இதற்கு சான்று பகரும். குண்டலகேசி பெளத்தக் கருத்துக்களைக் கூறும். நீலகேசியோ சமணக் கருத்துக்களைக் கூறும். இப்பிரசாரப் போக்கில் ஒருவரை மற்றொருவர் தாக்குவர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்களில் முதன்மை பெற்றவன் சிம்மவிஷ்ணு. இவனுடைய காலத்தில்தான் காஞ்சியில் பல்லவப் பேரரசு நிலையாக ஏற்பட்டது. திருமாலிடத்திலே ஈடுபாடு உடையவன் இவன். இதனை இவனது பெயரே அறிவிக்கும். சிறந்த சமஸ்கிருத பண்டிதன் இவன். “கிராதார்ச் சுனீயம்” என்ற நூலை இயற்றிய சமஸ்கிருத கவியான பாரவி இவனது அவைப் புலவர். சிம்ம விஷ்ணு சமஸ்கிருத மொழிக்குப் பேராதரவு அளித்தான். மறை வல்ல அந்தணர் பலருக்குக் கிராமங்கள் இனாம் வழங்கினான். அவை சிம்ம விஷ்ணு சதுர்வேதி மங்கலம் எனும் பெயரால் அழைக்கப்பட்டன.
இவனுடைய மகன் மகேந்திர வர்மன். இவனும் சமஸ்கிருதம் நன்கு பயின்றவன், இசை வல்லவன், ‘சங்கீர்ணம்’ என்ற புதிய தாள வகை கண்டு பிடித்தவன், சிற்பத்திலே சிந்தை பற்றியவன்; ஓவியத்திலே உளம் கொண்டவன்; நாட்டியத்திலே நாட்டம் கொண்டவன்; கோவில்கள் பல கட்டுவதிலே ஆசை மிக்கவன். ‘மத்தகஜ விலாசம்’ என்பது இவன் எழுதிய சமஸ்கிருத நூல். காபாலிகர், பாசுபதர், காலாமுகர் ஆகியோரை இவன் இந்நூலில் தாக்கியிருக்கிறான்.
காபாலிகர் என்போர் பைரவரை வழிபடுவோர்; மண்டை ஓடுகளை மாலையாக அணிபவர்; நரபலியிடுவோர், மது அருந்துவோர், உடல் முழுவதும் சாம்பல் பூசித்திரிவோர், கையிலே மண்டை ஓடு ஏந்தித் திரிவோர். கையிலே மண்டையோடு (கபாலம்) இருந்தமையின் காபாலிகர் எனப்பட்டனர்.
மகேந்திரப் பல்லவன் சமண மதத்துக்கு ஆதரவு அளித்தான். தானும் சமண மதத்தைப் பின்பற்றினான். திருப்பாதிரிப்புலியூரிலே இருந்த சமண மடம் ஒன்று புகழ் பெற்று விளங்கியது. ‘லோக விபாகம்’ என்ற சமண நூல் இந்த மடத்திலிருந்தே தோன்றியது.
சிம்மசூரி, சர்வதந்தி என்ற சமணப் புலவர்கள் சமஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் வல்லவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்தான் மகேந்திரவர்மன்.
இங்கிருந்து தான் தமிழ்நாட்டில் சைவ சமணப்போர் தொடங்குகின்றது. சைவராக இருந்த திருநாவுக்கரசர் சமணர் ஆனார்; மீண்டும் சைவர் ஆனார். அவரைப் பலவாறு துன்புறுத்தினான் மகேந்திரப் பல்லவன், பின்னே திருநாவுக்கரசரின் பெருமையறிந்தான்; தானும் சைவன் ஆனான். இது அவன் ஆட்சிக்கு வந்த ஆரம்ப நாட்கள். பின்னே இவன் கோயில்கள் பல கட்டினான். இவனுடைய ஆதரவு பெற்ற திருநாவுக்கரசர் சைவம் தழைக்கப் பாடுபட்டார்.
இவருடைய காலம் கி. பி. 570 முதல் 655 வரை ஆகும்.
மகேந்திர வர்மனுக்குப் பிறகு அவனது மகன் நரசிம்மவர்மன் அரசன் ஆனான். இவன் மாமல்லன் என்றும் அழைக்கப்பட்டான்.இவனுடைய காலத்திலேதான் திருஞான சம்பந்தர் தோன்றினார் சைவ சமணப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.
சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக் காலம் இது எனலாம்.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பாடிய தேவார திருப்பதிகங்கள் ஆருயிரத்துக்கும் மேற்பட்டவை. தமிழ்நாட்டிலே சமண சைவப் போராட்டத்தின் முக்கியமான கால கட்டம் இதுவே.
மகேந்திரவர்மன் சைவ மதத்துக்கு மாறியபின் திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மடம் ஆதரவு இழந்தது. சமணர்களின் செல்வாக்கும் நாளடைவில் குன்றியது. அதே சமயத்தில் சைவம் ஏற்றம் பெற்றது. பக்தி வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து ஓடியது.
நரசிம்ம வர்மன் வைஷ்ணவன் திருமாலிடம் ஈடுபட்டவன்; திருமாலுக்குக் கோயில்கள் பல எடுத்தவன்.
இந்தக்காலத்திலே திருமால் ஈடுபாடு வளரத் தொடங்கியது. திருமங்கை ஆழ்வார் காலமும் இதுவே. அடுத்த இருநூறு ஆண்டுகளில் ஆழ்வார்கள் தோன்றினார்கள், பக்தியைப் பரப்பினார்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களால் திருமாலைப் போற்றினார்கள்; வணங்கினார்கள். பெருந்தேவனார் தமிழில் பாரதக் கதையைப் பாடினார்.
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே தஞ்சைச் சோழர்கள் தலைதூக்கினார்கள். பல்லவ ஆட்சி மங்கியது. தொண்டை நாடு சோழர் வசமாயிற்று
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான் இராசராச சோழன். சிவபாத சேகர் என்னும் பெயர் பெற்றான். இவனுடைய விருப்பத்தின்படி சைவ சமய நூல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வழங்கினார் நம்பி ஆண்டார் நம்பி
முதலாவது குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான்; வென்றான். இவ்வெற்றி குறித்து எழுந்த நூலே கலிங்கத்துப்பரணி. ஜெயங்கொண்டார் பாடியது.
பத்தாம் நூற்றாண்டிலே ஆளவந்தார் விரும்பியபடி ஶ்ரீரங்கத்திலே தங்கி ஶ்ரீவைஷ்ணவ தர்மப் பிரசாரம் செய்து வந்தார் இராமாநுசர், அதுபற்றிக் கேள்வியுற்ற சோழ அரசன் முதலாம் குலோத்துங்கன் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். இராமாநுசர் சோழனிடம் போகவில்லை. அவருக்குப் பதிலாகக் கூரம் சென்றார். “சிவனைவிட மேலானது இல்லை” “சிவாத் பரதரம் நாஸ்தி” என்று ஓர் ஓலையில் எழுதிக் கையெழுத்திடுமாறு பணித்தான் சோழன்.
சிவம் என்ற சமஸ்கிருதச் சொல் இரு பொருள் கொண்டது. சிவன் என்பது ஒரு பொருள்; நாலு படி கொண்ட குறுணி எனும் அளவைக் குறிப்பது மற்றொரு பொருள்.
“த்ரோணம் அஸ்தி தத: பரம்” என்று எழுதினார் கூரம். த்ரோணம் என்றால் பதக்கு. அதாவது குறுணிக்கு மேற்பட்டது பதக்கு. இந்தப் பொருள் தொனிக்க எழுதினார் கூரம். இது கண்டு சீறினான் சோழன். கூரத்தின் கண்கள் இரண்டையும் பிடுங்கிவிடும்படி கட்டளையிட்டான். இராமாநுசர் வரவில்லை; கூரமே வந்தார் என்று அறிந்த அரசன் மீண்டும் அவரை அழைத்து வருமாறு ஆட்களை ஏவினான். அதற்குள் இராமாநுசர் சோழநாடு விட்டு ஓய்சால நாட்டுக்குப் போய்விட்டார். இது நடந்தது 1104 ம் ஆண்டில் அப்போது இராமாநுசருக்கு வயது எண்பத்தேழு.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் பெரிய புராணத்தை இயற்றினார் சேக்கிழார். இரண்டாம் குலோத்துங்கன் காலம் எது? கி.பி 1133 முதல் 1150 வரை ஆகும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த கச்சியப்ப சிவாகாரியார் கந்த புராணத்தை இயற்றினார். புராணம் என்று அழைக்கப்பட்டாலும் இதுவும் ஒரு காவியமே. விருத்தப்பாவினால் ஆகிய சிறந்த காவியம்.
ஆக, சங்க காலத்துக்குப் பின் கம்பர் காலம் வரை நிலவிய கால கதியை ஒருவாறு கண்டோம். இந்த ஒன்பது நூற்றாண்டுகளில் சமயப் போராட்டங்கள் மூன்று நிகழ்ந்து உள்ளன. ஒன்று பெளத்த சமணப் போராட்டம்; இன்னொன்று சமண சைவப் போராட்டம்; மற்றொன்று சைவ வைணவப் போராட்டம்.
பெளத்த—சமணப் போராட்டம் ஒரு சிந்தாமணியைத் தந்தது; சமண—சைவப் போராட்டம் ஒரு பெரிய புராணத்தைக் கொடுத்தது. சைவ—வைணவப் போராட்டம் எதைக் கருக்கொண்டது? இராம காதையைக் கருக் கொண்டது. அது கம்பர் மூலம் உருக்கொண்டது. காவியமாக மலர்ந்தது. கம்பராமாயணம் எனும் பெயர் பெற்றது. என்னை? அரசியல் சமூகச் சூழ்நிலையே ஒரு கவியை உருவாக்குகிறது; கவிக்கு உணர்ச்சியூட்டுகிறது. அரசியலிலும் சமூகத்திலும் தோன்றும் கொதிப்பையே கவி எதிரொலி செய்கிறான்.
சிலப்பதிகார காவியத்தை அருளிய இளங்கோ அடிகள் இதனைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
— பதிகம் 55—60
கம்பர் காட்டும்
சமதர்ம சமுதாயம்
அரசியல் பொருளாதாரம் சமூகம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தவை. நல்ல சமூகம் ஒன்று அமைதல் வேண்டுமானால் அந்த சமூகத்தின் பொருளாதாரம் நன்றாயிருக்க வேண்டும். இவ்விரண்டும் நன்றாக இருக்க வேண்டுமானால் ஆட்சி நல்லதாக இருந்தால் தான் அரசியல் நன்றாயிருக்கும்.
அரசியல் நன்றாயிருந்தால் தான் ஆட்சியும் நன்கு அமையும். ஆட்சி நன்கு அமையுமானால் தான் நாட்டு மக்களின் பொருளாதாரம் வளம் பெறும், நாட்டு மக்களின் பொருளாதாரம் வளம் பெறுமாயின் நல்லதொரு சமூகம் அமையும். ஆகவே, அரசியல், பொருளாதாரம், சமூகம் இந்த மூன்றும் இணைந்தவை.
நல்லாட்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். நல்ல சமூகம் என்பது ஒரு நாளில் ஏற்படக் கூடியது அன்று; சில ஆண்டுகளில் ஏற்படக் கூடியதும் அன்று. தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பல ஆண்டுகள் நல்ல ஆட்சி நடைபெறவேண்டும். அப்படி நடைபெறுமானால் நல்லதொரு பொருளாதார அமைப்பு நாட்டிலே வேர் கொள்ளும். நல்லதொரு பொருளாதார அமைப்பு நாட்டிலே வேர் விடுமானால் நல்லதொரு சமுதாயம் அமையும். நல்ல சமுதாயம் அமையுமானால் நாடு நன்றாயிருக்கும். இஃது அடிப்படை. இந்த அடிப்படையைக் கம்பன் சுட்டிக் காட்டுகிறான்.
கோசல நாட்டை ஆண்ட அரசர்கள் சூரிய வமிசத்தினர்; அவர் யாவரும் வழி வழியாக - தலைமுறை தலைமுறையாக - நல்ஒழுக்கம் பூண்டவர்கள்.
இரவி தன்குலத்து எண்ணில் பார்வேந்தர்தம்
பரவும் நல் ஒழுக்கின்படி பூண்டது
சரயு என்பது; தாய்முலை அன்னது; இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.
கோசல நாட்டின் செழிப்புக்குக் காரணம் நீர்வளம். அந்த நீர் வளத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது சரயு என்ற ஆறு.
இவ்வாறு அந்த நாட்டிலே நல்ல ஆறு பாய்ந்து நீர் வளமும் நில வளமும் செழித்தன என்றால் அதற்குக் காரணம் யார்? சங்கிலித் தொடர் போலே தொடர்ந்து ஆட்சி செலுத்தி வந்த அரசர்கள்; அவர்கள் சூரிய குலத்தில் தோன்றியவர்கள்.
இவ்வாறு ஆற்றுப் படலத்திலே முன்னுரை கூறுகிறான் கம்பன். அந்த வழியிலே வந்த தசரதன் எப்படி இருந்தான்? அவனுடைய ஆட்சி எப்படி இருந்தது என்பதைப் பின் ஒரு கவியிலே கூறுகிறான்.
தாய் போல் இருந்தான் தசரதன். எதிலே? அன்பிலே, குடி மக்களிடம் அன்பு செலுத்துவதிலே. ஒரு தாய் எப்படித் தன் மக்களிடத்திலே அன்புடன் இருப்பாளோ அதே போலத் தன் குடி மக்களிடம் அன்பு வைத்திருந்தான்.
அன்பு கொண்டிருந்தால் மட்டும் போதுமா? நன்மை செய்ய வேண்டாமா? செய்தான். எது போல? தவம் போல. நல்ல தவம் செய்தால் அது எப்படி நன்மை பல தருமோ அதே போல தசரத மன்னனும் தன் குடிகளுக்கு நன்மைகள் பல செய்தான்.
அன்பு செலுத்த வேண்டியது தான்; நன்மைகளும் செய்ய வேண்டியனவே. குற்றம் செய்கிறவர்களைத் தண்டிக்க வேண்டாமா? அன்பு அன்பு என்று சும்மா விட்டு விடலாமா? விடக்கூடாது. எனவே குற்றம் செய்வோரைத் தண்டித்து வந்தான். எது போல? நோய் போல.
நோய் எப்படி வருகிறது ? இயற்கை வகுத்த நியதிகளை மீறி நடக்கும் போது, இயற்கை நெறி மீறி நடப்பவனைத் தண்டிப்பதற்காக. இப்படி வரும் நோய் போல அரசன் வகுத்த ஒழுங்குமுறைகளை மிறி நடப்பவரைத் தண்டித்தான். யார்? மன்னன் தசரதன்.
அப்படி தண்டித்தாலும் அவர்கள் பால் கருணை காட்டாது இருப்பானா? இருக்க மாட்டான். கருணை காட்டுவான் எது போல? நோய் தீர்க்கும் மருந்து போல.
தாய் ஒக்கும் அன்பில்; தவம் ஒக்கும் நலம் பயப்பில்
..............................................................................
..............................................................................
நோய் ஒக்கும் எனில், மருந்து ஒக்கும்.....................
என்கிறான் கம்பன்.
வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு மகுடாபிஷேகம் செய்கிற சமயத்திலே அந்த சுக்ரீவனுக்குச் சில நல்லுரைகள் கூறுகிறான் இராமன். இராமன் கூறுவது போல நமக்குக் கூறுகிறார் கவி. நமக்கு மட்டும் அன்று; எல்லா அரசர்களுக்கும் கூறுகிறார், நாடாள முன் வருவோர் பலருக்கும் கூறுகிறார்.
இவன் நமது அரசன் அல்லன்; நம்மைப் பெற்று எடுத்து அன்பு பாராட்டி வளர்க்கும் தாய் என்று உனது குடிமக்கள் உன்னை ஆதரிக்க வேண்டும். அந்த வகையில் நீ அவர்களைப் பாதுகாப்பாய்.
நாயகன் அல்லன்; நம்மை
நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என இனிது பேணத்
தாங்குதி தாங்குவாரை.
இவ்விதம் நீ பாதுகாக்கும் போது சிலருக்கு அச்சம் போய் விடும். “அரசன் நம்மிடம் அன்புள்ளவன், நல்லவன்; எது செய்தாலும் நம்மைத் தண்டிக்க மாட்டான் என்ற எண்ணம் ஏற்படும்.
நாட்டுக்குத் தீங்கு செய்வார்கள். அப்படித் தீங்கு செய்வோரிடம் நீ அன்பாயிருப்பது தவறு. சிறிதும் தயங்காமல் அவர்களை தண்டிப்பாய்; அறவழி நின்று தண்டிப்பாய்.
ஆயது தன்மை யேனும்
அற வரம்பு இகவா வண்ணம்
தீயன வந்த போது
சுடுதியால் தீமையோரை
எவர்க்கும் தீயன செய்யாதே. அதே சமயத்தில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யத் தவறாதே. உன்னைப் பற்றிப் பிறர் கூறும் வசை மொழிகளுக்குப் பதில் கூறாதே. எவர் கூறிய போதிலும் சரி. பதில் வசை கூறாதே. வசை இல்லாத இனிய சொற்களே கூறுவாய். உண்மையே பேசு; வழங்குதற்குரிய பொருள்களை வழங்கு பிறர் பொருள் கவர நினையாதே. இந்தப் பண்புகள் உன்னை உயர்த்தும்; எனவே இவை செய்வாய்.
செய்வன செய்தல் யாண்டும்
தீயன சிந்தியாமல்
வைவன வந்தபோதும்
வசை இல இனிய கூறல்
மெய் சொலல் வழங்கல் யாவும்
மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு
உயர்வன உவந்து செய்வாய்.
மக்கள் மிக்க நுண் அறிவு படைத்தவர்கள்: புகை கண்ட இடத்தில் தீ உண்டு என்று ஊகித்து அறியும் இயல்பு உடையவர்கள். ஆகவே உன்னைப் பற்றிய ஐயப்பாடுகளுக்கு இடம் கொடாதே. ஐயப் பாடுகளுக்கு அப்பாற்பட்டவனாக நடந்து கொள். வினயமாக இரு, உன்மீது பகையுடன் இருப்பர் சிலர், ஆனால் அப்பகையை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்; உன்னுடன் பழகுவர். அவரை நீ இன்னார் என்று அறிந்து கொள், ஆனால் அவருடன் பகை பாராட்டாதே. அவரவர் பண்புக்கு ஏற்ப நடந்துகொள்; எவரிடமும் ‘சிடுசிடு’ என்று சீறி விழாதே. எப்பொழுதும் சிரித்த மூகத்தோடு இனிய சொல் வழங்கு.
புகை உடைத்து என்னின், உண்டு
பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்
வினயமும் வேண்டற் பாலதே
பகையுடைச் சிந்தை யார்க்கும்
பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை யாகி
இன் உரை நல்கு நாவால்
உன்னுடைய மந்திரிகள் எப்படி இருக்க வேண்டும்? சத்திய சீலர்களாக இருக்க வேண்டும்; வாய்மையுடையவராக இருத்தல் வேண்டும். அது மட்டும் போதுமா? போதாது. நல்ல அறிவில் முதிர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
உன்னுடைய படைத் தலைவர்கள் எத்தகையோராயிருத்தல் வேண்டும்? போர்த் தொழில் வல்லவராக இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் போதுமா? போதாது. நல்ல பயில்வான்; மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றிலே வல்லவன். அந்த கர்வத்தினாலே நாட்டு மக்களுக்குத் தீங்கு செய்து கொண்டிருப்பான். உன்னுடைய படைத்தலைவர்கள் அத்தகையோராயிருத்தல் ஆகாது. போர்த் தொழிலில் வல்லவராக இருத்தல் வேண்டும். அதே சமயத்தில் எவர்க்கும் தீமை செய்யாத நல் ஒழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு பறவைக்கு எப்படி இரு சிறகுகள் உள்ளனவோ அப்படியே ஓர் அரசுக்கும் இரு சிறகுகள் உண்டு. ஒன்று மந்திரிசபை; இன்னொன்று படைத் தலைமை. இந்த இரு சிறகுகளோடும் நீ நெருங்கிய நல்லுறவு கொண்டு இயங்க வேண்டும்.
காட்சிக்கு எளியனாய் இரு. நீ உன் சபா மண்டபத்திலே உள்ளே இருப்பாய், குடிமக்கள் உன்னைக் காண வருவார்கள். உனக்கு முன்னே உள்ள பரிவாரங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி விடுவார்கள். அதனாலே குடி மக்களுக்கு உன்மீது கசப்பு ஏற்படும். அத்தகைய கசப்புக்கு இடம் கொடாதே. உன்னைக் காணவருவோர் அதிக சிரமம் இல்லாமல் எளிதில் உன்னைக் காணும் வகையில் இரு. அதே சமயத்தில் அவர்கள் உன்னைச் சுலபமாக எண்ணி விடக்கூடாது. உன்னுடன் நெருங்கிப் பழகி எது வேண்டும் ஆயினும் பேசலாம் என்று நினைக்கக்கூடாது. ஆகவே நெருங்குதற்கு அரியனாய் இரு. தேவர் போல உன்னை மக்கள் வணங்கும்படி நட, நல்லன செய்.
வாய்மை சால் அறிவின்
வாய்த்த மந்திரி மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த
திறத் தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணித்
துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மை யோடு அணிமை இன்றித்
தேவரின் தெரிய நெற்றி
மறபடியும் கோசல நாட்டுக்கு வருவோம். கோசல தேசத்திலே நல்லரசு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்றது. அதனாலே அந்த நாட்டிலே சிறந்த பொருளாதாரம் வேர் கொண்டது. எப்படி? கம்பர் வாயால் கேட்போம்.
கழனிகளின் வரம்பு எங்கும் முத்துக்கள். நீர் பாயும் மடைகளில் எல்லாம் சங்குகள். வாய்க்கால்கள் எங்கும் சிவந்த பொன் கட்டிகள்
வரம் பெலாம் முத்தம்; தத்தும்
மடைஎலாம் பணிலன்; மா நீர்க்
குரம் பெலாம் செம்பொன்
பரம்பு அடித்துச் சமன் செய்யப்பட்ட வயல்கள் தோறும் பவளம். இப்படியாக எங்கும் செல்வம்! சங்குகள் நீரிலே இனிது கிடக்கும். எருமைகள் மர நிழலிலே படுத்து உறங்கும். ஆடவரும் மகளிரும் அணிந்திருக்கின்ற மலர் மாலைகளிலே வண்டுகள் துயில் கொள்ளும். அங்குள்ள நீர் நிலைகளிலே மலர்ந்துள்ள தாமரை மலரிலே திருமகள் வீற்றிருப்பாள். நீர்த்துறைகளிலே முத்துச் சிப்பிகள் ஆனந்தமாகக் கிடக்கும், வைக்கோல் போர்களிலே அன்னப் பறவைகள் இனிது கிடக்கும். பூம் பொழில்களிலே மயில்கள் மகிழ்ந்து உறையும்.
நீரிடை உறங்கும் சங்கம்
நிழலிடை உறங்கும் மேதி:
தாரிடை உறங்கும் வண்டு
தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;
துறையிடம் உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம்;
பொழிலிடை உறங்கும் தோகை.
விவசாயிகள் கரும்பு பயிர் செய்வார்கள். பிறகு அந்தக் கரும்பை வெட்டி ஆலையிலே நசுக்கிச் சாறு பிழிவார்கள். கொண்டது போக மிஞ்சிய சாறு வழிந்து ஓடும். பாளைகளின் நுனியைச் சீவுவார்கள். அப்படிச் சீவுவதாலே கள் வடிந்து பெருக்கெடுத்து ஓடும். மலை உச்சியிலே உள்ள தேன் அடைமீது வேடர்கள் அம்பு எய்து தேன் எடுப்பார்கள். எப்படி எடுக்கிறார்கள்? அம்பிலே நூலைக் கட்டி விடுகிறார்கள், அம்பு தேனடை மீது பாய்ந்து சொருகி நிற்கும், அந்நூல் வழியே தேன் வழியும், தேன் பெருக்கெடுத்து ஓடும். பலா மரங்கள் காய்தரும். பலாக்காய் மரத்திலேயே பழுக்கும். பழுத்து வெடிக்கும். பலாச்சுளைகளிலே உள்ள இனிய ரசம் அந்த வெடிப்பு வழியே ஒழுகும். இவ்விதம் வழியப்பெற்ற தேன், கரும்புச்சாறு, கள் எல்லாம் ஒன்று கலந்து ஆறாகப் பெருகி கடலினை அடையும். கடல் மீன்கள் அத்தேனை உண்டு களிக்கும்.
ஆலைவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலை வாய்க் கனியின் தேனும்
தொடை இழி இறாலின் தேனும்
மாலை வாய் உகுத்த தேனும்
வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை வாய் மடுப்ப உண்டு
மீன் எலாம் களிக்கும் மாதோ
அன்னப் பேடுகள் என்ன செய்கின்றன? குளங்களிலும் கழனிகளிலும் மலர்ந்த தாமரை மலர்களிலே தங்கள் குஞ்சுகளைப் படுக்கவிட்டு ஆனந்தமாக உலவுகின்றன முழங்கால் வரையில் சேறு பூசிக்கொண்டிருக்கிற எருமைகள் வந்து அந்தக் கழனிகளிலும் குளங்களிலும் படுக்கின்றன. மீன்கள் துள்ளி அந்த எருமைகளின் மடியிலே முட்டுகின்றன எருமைக் கன்றின் நினைவு வருகிறது எருமைக்கு, தங்கள் கன்றுகளை எண்ணிக் கத்துகின்றன. உடனே என்ன ஆகிறது? பால் சுரக்கின்றது. தாமரை மலர்களிலே படுத்துக் கிடக்கும் அன்னக் குஞ்சுகள் அந்தப் பாலை உண்டு உறங்குகின்றன; குஞ்சுகள் உறங்க வேண்டுமானால் தாலாட்டுப் பாட வேண்டுமே! அந்த நீர் நிலைகளிலே உள்ள பச்சைத் தேரைகள் விடாமல் சப்தம் செய்வது தாலாட்டுப் போல் இருக்கிறது. அன்னக் குஞ்சுகள் ஆனந்தமாகத் துயில் கொள்கின்றன; இப்படிப்பட்ட வயல்கள் நிறைந்தது கோசலநாடு.
சேல் உண்ட ஒண் கணாரில்
திரிகின்ற செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி
வளர்த்திய மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி
கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை
தாலாட்டும் பண்ணை.
சோலைகளிலே ஆணும் பெண்ணுமாகக் குயில் இனங்கள் இன்புற்றிருக்கின்றன. குயில்களுக்குத் திருமணம். திருமணம் என்று சொன்னால் களிப்பு தானே. களியாட்டம் வேண்டும் அல்லவா! இந்தக் காலத்திலே திருமணம் என்று சொன்னால் வரவேற்பு என்று ஒரு நிகழ்ச்சி. அப்போது சிறந்த சங்கீத வித்வான்களை அழைத்துப் பாடச் சொல்கிறார்கள். நாட்டியம் பயின்றவர்களை அழைத்து நாட்டியம் ஆடச் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்கூடாகக் காண்கிறோம். அதே போல சோலைகளிலே நடக்கும் குயில்களின் திருமணத்துக்கு நாட்டியக் கச்சேரி வேண்டாமா? அங்கே உள்ள மயில்கள் அழகிய தோகையை விரித்து ஆடுகின்றன. பாட்டுக் கச்சேரி வேண்டும் அல்லவா! வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அது எப்படியிருக்கிறது? விடியற் காலையிலே பாடுகின்ற பள்ளி எழுச்சி போல் இருக்கிறது.
பள்ளி எழுச்சி எதற்காகப் பாடுவார்கள்? விடியற் காலத்திலே அரசர்கள் படுக்கை விட்டு எழுந்திருப்பதற்காகப் பாடுவார்கள். பள்ளி எழுச்சி பாடக் கேட்ட அரசர்கள் விழித்து எழுவார்கள். அதே போத தாமரை மலர்களிலே அதுவரை துயில் கொண்டிருந்த ராஜ ஹம்ஸங்கள் கண் விழித்து எழுகின்றன. எதற்கு? குயில்களின் திருமணம் காண்பதற்கு.
இயற்கைச் செல்வத்தையும் நீர்வள நிலவளத்தையும் இதுவரை எடுத்துரைத்தார் கம்பர். இனி பொருள்பற்றிச் சொல்கிறார்.
அந்நாட்டு மக்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொண்டு வந்து கொட்டுமாம். எவை மரக்கலங்கள், எத்தகைய மரக்கலங்கள்? வாணிபம் செய்கிற மரக்கலங்கள். பூமியோ நல்ல விளைச்சல் தரும், சுரங்கங்கள் நல்ல ரத்தினங்கள் தரும்.
கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா
நிலம் சுரக்கும்; நிறை வளம் நல்மணி
பிலம் சுரக்கும்.................................................
..................................................................................
ஒரு நாட்டிலே எல்லாச் செல்வங்களும் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? போதாது. செல்வம் முழுவதும் சிலர் வசம் குவிந்து விடும். அவர்கள் செல்வச் சீமான்களாக இருப்பார்கள். பலர் ஓட்டாண்டிகளாக இருப்பார்கள். ஏழை—பணக்காரன் என்ற வேறுபாடு நிலவும்; ஆண்டான் — அடிமை என்ற ஏற்றத்தாழ்வு நிலவும். உடையவர்—இல்லாதவர் என்ற வர்க்க பேதம் உண்டாகும். ஆகவே ஒரு நாட்டில் செல்வச் செழிப்பு இருந்தால் மட்டும் போதாது, அச்செல்வம் நாட்டின் பொது உடைமையாக வேண்டும். செல்வத்தை எல்லோரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்; சமதர்மம் வேண்டும்.
கோசல நாட்டிலே சமதர்மம் நிலவியது என்கிறார் கம்பர்,
எல்லாரும் எல்லாப் பெரும்
செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையாரும்
இல்லை மாதோ
அடிப்படையான பிரச்னை தீர்ந்துவிட்டது. அடுத்த பிரச்னை என்ன? கல்வி அந்த நாட்டிலே கல்வி எப்படி இருந்தது? கல்லாதவரே இல்லை. எல்லாரும் கற்றவர்கள். ஆகவே "இவன் கல்வி, கற்றவன்; அதிலே கரை கண்டவன் ரொம்பப் படித்தவன்; “இவன் கல்வி கல்லாதவன்; படிக்காதவன்” என்கிற வேற்றுமை அந்த நாட்டிலே இல்லை. எல்லாரும் படித்தவரே; கல்வி கற்றவரே. எழுத்து அறியாமை அந்த நாட்டிலே இல்லை. ‘இல்லிடரசி’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அது அந்த நாட்டில் இல்லை.
கல்லாது நிற்பர் பிறர்
இன்மையின் கல்விமுற்ற
வல்லாரும் இல்லை; அவை
வல்லர் அல்லாரும் இல்லை.
கல்விக்கு அடுத்தபடியாக வருவது விளையாட்டு. விளையாட்டு பற்றியும் விளையாடும் இடங்கள் பற்றியும் கம்பர் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்.
இப்போது பெருநகரங்களில் என்ன காண்கிறோம்? சந்து பொந்துகளிலும், சாக்கடை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடல் காண்கிறோம். கிரிக்கெட் பந்தை வீசுவான். ஒருவன் மட்டை கொண்டு சாடுவான் இன்னொருவன், தெரு வழியே போகிறவர்கள் பயந்து பயந்து போவார்கள். கோசல நாட்டிலே இப்படி இல்லை, இளம் பெண்கள் பந்து விளையாடுவார்கள். கந்தனைப்போல் அழகிய கட்டிளங்காளைகள் விற்போர், மல்போர் முதலியன பயில்வார்கள், இத்தகைய விளையாட்டுக் கூடங்கள் எங்கே இருந்தன? காற்றோட்டம் இல்லாத கட்டிடங்களில் இருந்தனவா? இல்லை; இல்லை, நறுமணம் வீசுகின்ற சண்பகத் தோட்டங்கள். மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் அத்தோட்டங்களிலே பெண்கள் பந்து விளையாடும் கழகங்கள் இருந்தன.
பந்தினை இளையவர் பயில் இடம்...............
..................................
சந்தன வனம் அல சண்பக வனமாம்
.....................மயிலூர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
.........................................
.........................................
நந்தன வனம் அல நறை விரிபுறவம்
மயிலேறும் பெருமானாகிய பாலமுருகன் போன்ற அழகுள்ள வாலிபர்கள் வாள் வித்தை, வில் வித்தை, குஸ்தி, குத்துச் சண்டை முதலிய கலைகளை எங்கே பயின்றார்கள்? நறுமணம் வீசும் முல்லைக் காடுகளிலே பயின்றார்கள். இப்படியாக இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களை நமக்குக் காட்டுகிறார் கம்பர்.
சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியவர்களின் விளையாட்டு பற்றிச் சொன்னார். பெரியவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? பெரியவர்களான ஆண் பிள்ளைகள் எப்படிப் பொழுது போக்கினார்கள்? கோழிச் சண்டையிலே பொழுது போக்கினார்கள் இரண்டு கட்சிக்காரர்கள். ஒவ்வொருவரும் ஒரு கோழி கொண்டு வருவார்கள். கட்சிக்கு ஒரு கோழி ஆக இரண்டு கட்சிக்கும் இரண்டு கோழிகள். இந்தக் கோழிகளின் கால்களிலே கத்தி கட்டியிருப்பார்கள், கூர்மையான கத்தி. இந்த இரண்டு கோழிகளையும் சண்டைக்கு விடுவார்கள். சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள்.
அது பற்றிக் கம்பர் சொல்கிறார் கேளுங்கள்.
வீரவாழ்வே விரும்பும் கோழிகள். அவ்வீர வாழ்வுக்கு ஊறு நேர்ந்தால் கணமும் உயிர்தரியாத கோழிகள். சினத்தால் சிவந்த கண்கள் அவற்றைவிடச் சிவப்பான உச்சிக் கொண்டை
கறுப்புறு மனமும் கண்ணில்
சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி
உறுபகை இன்றிச் சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர்
மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட ஆவிபேணா வாரணம்
பொருத்து வாரும்
இந்த மாதிரி கோழிச் சண்டையில் பொழுது போக்கினார்கள்.
கோசல நாட்டின் இயற்கை வளம் பற்றிச் சொன்னார். அந்நாட்டு மக்களின் பொருள் வளம் பற்றிச் சொன்னார். அவர்களுடைய கல்வி பற்றிச் சொன்னார். பின் அவர்களுடைய பிள்ளைகளின் விளையாடல் பற்றிச் சொன்னார். அந்நாட்டு மக்களின் பொழுது போக்கு பற்றிச் சொன்னார்.
அவர்கள் சாப்பிட்டார்களா? சாப்பிடவில்லையா? அது பற்றி இதுவரை ஒன்றும் சொல்லவில்லையே! அது பற்றி அவரையே கேட்போம்.
சாப்பிட்டார்கள், என்ன சாப்பாடு? சர்க்கரைப் பொங்கல்! எப்படிப்பட்ட சர்க்கரைப் பொங்கல்?
பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகிய நான்கு விதமான பருப்பு வகைகளைக் கலந்து சர்க்கரைப் பொங்கல் செய்து அது மூழ்கும்படியாக ‘கமகம’ என்று மணம் வீசுகின்ற பசுவின் நெய்யை நிறைய வார்த்துச் சாப்பிட்டார்கள்.
அது மட்டுமா? இல்லை; இல்லை. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய முக்கனிகளும் சேர்த்து உண்டார்கள். அதுமட்டுமா? சர்க்கரைப் பொங்கல் மட்டும் உண்டனரா? வேறு சாதம் இல்லையா? இருந்தது என்ன சாதம்? தயிர் சாதம்.
பாலை நன்றாகக் காய்ச்சித் தோய வைத்த தயிர். பாறை போல் உறைந்த தயிர், கட்டித் தயிர். கத்தி கொண்டு அறுத்து எடுக்கலாம்; அந்தத் தயிரை வார்த்துக் கொண்டு இடை இடையே கொஞ்சம் சாதமும் போட்டுப் பிசைந்து கொண்டு உண்டார்கள்.
எங்கே உண்டார்கள்? தங்கள் தங்கள் வீடுகளிலே அமர்ந்து உண்டார்கள். அவர்கள் மட்டுமா உண்டார்கள்? இல்லை, தம் சுற்றத்தாருடனும் விருந்தினருடனும் உண்டார்கள் சந்தோஷமாகச் சாப்பிட்டார்கள். அந்த மகிழ்ச்சி ஆரவாரம் எங்கும் கேட்டது.
முந்து முக்கனியின் நானா
முதுரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டம் கண்டம்
இடையிடை செறிந்த சோற்றில்
தம் தம் இல்லிருந்து தாமும்
விருந்தொடும் தமரினோடும்
அந்தணர் அமுதர் உண்டி
அயில்வுறும் அமலைத்து எங்கும்.
‘அந்த நாட்டிலே பெண்கள் கல்விஅறிவு மிகுந்தவர்கள் ஆக இருந்தார்கள். பெண் கல்வி நிலவியது. அதுமட்டும் அன்று, பெண்களுக்கு சொத்து உரிமை இருந்தது. எல்லாம் நிறைந்து இருந்தன. ஆசைப்படுவதற்கு வேறு எதுவுமே இல்லை. ஒரே ஓர் ஆசைதான்.
வெளி நாட்டிலிருந்து வறுமையுற்றோர் எவராவது வர மாட்டாரா? அவர் வறுமை போக்க நம்மால் இயன்றன எல்லாம் வழங்க மாட்டோமா? வெளி நாட்டிலிருந்து ‘பசி’ என்று எவராவது வர மாட்டார்களா? அவருக்கு விருந்தளிக்க மாட்டோமா என்னும் ஆசைதான். வேறு எவ்வித ஆசையும் இல்லை.
பெருந் தடங்கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விழைவன யாவையே ?
அந்த நாட்டிலே ஊட்டிடங்கள் நிறைய இருந்தன. அதாவது அன்ன சத்திரங்கள். வேற்று நாடுகளிலிருந்து வந்தவராயினும் சரி, உள் நாட்டிலே இருந்து இயலாமை காரணமாக உணவு தயாரிக்க முடியாது போனாலும் சரி, பசி வந்த நேரத்தில் சிறிதும் கலங்க வேண்டுவது இல்லை. பசி வந்தால் புசிக்கலாம். எவரையும் கேட்க வேண்டுவது இல்லை, யாசிக்க வேண்டாம். பல்லைக் காட்ட வேண்டாம். நேராக அன்ன சத்திரத்திலே சென்று உணவு பெறலாம். உணவு சத்திரங்கள் எல்லாம் பொது உடைமை. எவ்விதமான குற்றமும் இல்லாமல் நன்கு நடைபெற்று வந்தன. இத்தகைய அன்ன சத்திரங்கள் பல அங்கே இருந்தன.
இஃது ஓர் அன்ன சத்திரம், எக்காட்சி வழங்குகிறது? இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள் மனை கொண்டு நறுக்கப்பட்ட காய் கனிக்குவியல் ஒரு பக்கம், பருப்புக்குவியல் இன்னொரு பக்கம். நிறைந்த வெண்முத்துப் போன்ற அன்னக் குவியல் இன்னொரு பக்கம்.
பிறை முகத்தலைப் பெட்பின் இரும்புபோழ்
குறை கறித்திரள் குப்பை பருப்பொடு
நிறை வெண்முத்தின் நிறத்து அரிசிக்குவை
உறைவ கோட்டமில் ஊட்டிடம் தோறெலாம்
கோசல நாட்டின் இயற்கை வளம் பற்றிச் சொன்னார் கம்பர்; அந்நாட்டு மக்களின் பொருள் வளம் பற்றிச் சொன்னார், பின் அவர்களுடைய கல்வி பற்றிச் சொன்னார். அவர்களுடைய பிள்ளைகளின் விளையாட்டு பற்றிச் சொன்னார். அந்நகர மக்களின் பொழுது போக்கு பற்றிச் சொன்னார். அவர்களது சாப்பாட்டைப் பற்றிச் சொன்னார். இவை எல்லாம் நிரம்பிய பிறகு எதிலே நாட்டம் செல்லும் ? கலைகளிலே. எனவே அவர்களது கலைத்திறன்—கலைவாழ்வு—பற்றிச் சொல்கிறார்.
ஆங்காங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தனவாம். சங்கீதக் கச்சேரி என்றால் எப்படி? தோல் கருவி துளைக் கருவி முதலிய வாத்தியங்கள் அதாவது மிருதங்கம் புல்லாங்குழல் - கஞ்சிராதந்தி வாத்தியங்கள் முதலியவைகளோடு தழுவிய பாட்டுக் கச்சேரிகள் ஆங்காங்கே நடைபெற்றன. அவற்றைக் கேட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
...........................................
.......... ............ ............
பருந்தொடு கிழல் சென்றன்ன
இயல் இசைப் பயன் துய்ப்பாரும்
மற்றும் சில இடங்களிலே நல்ல சொற்பொழிவுகள் நிகழ்ந்து கொண்டு இருந்தனவாம். எத்தகைய சொற் பொழிவு?
தேவாமிர்தம் போன்ற இனிய சொற்பொழிவுகள். ஆராய்ச்சியும் நல்ல பயிற்சியும் உள்ளவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள். அவற்றைக் கேட்டு மக்கள் மகிழ்வார்களாம்.
மருந்தினும் இனிய கேள்வி
செவி உற மாந்துவாரும்
......................................
அவர்களது கலைவாழ்வு இப்படி இருந்தது என்று சொல்கிறார் கவி. இப்படிப் பல ஆராய்ச்சிகளும் சொற்பொழிவுகளும் கேட்டு அறிவு வளம் பெறுவதாலே அந்த நாட்டிலே அறியாமை என்பதே இல்லையாம்.
வெண்மை இல்லை ; பல்
கேள்வி மேவலால்
இவ்வளவு சொல்லி விட்டு அந்த நாட்டின் பொதுவான நிலவரம் பற்றியும் சொல்கிறார். எப்படி? மக்கள் மிகுந்த நாணயம் உடையவர்களாக இருந்தார்கள். பிறர் பொருள் மீது ஆசை கொள்ள மாட்டார்கள் எனவே களவு என்பதே இல்லை. “கள்வர் வந்து எங்கே நமது பொருளைக் கொண்டு போய் விடுவார்களோ என்கிற அச்சம் சிறிதும் இல்லை அந்த நாட்டு மக்களுக்கு, ஏன்? “எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையாரும் இல்லை” யல்லவா? அதனாலே இல்லாதவர் இருந்தால் தானே உடையவரிடமிருந்து அவர் தம் பொருள்களைக் களவாடுவான்! கள்வர் பயம் இன்மையாலே அந்த நாட்டு மக்கள் பொருள் உள்ள இடங்களைக் கதவு கொண்டு சாத்திப் பூட்டுப் போடுவதே இல்லை. திறந்தபடி அடைக்காத நெடுங்கதவு . கொண்ட வீடுகளாக இருக்கும். காவலரும் இருக்க மாட்டார்.
கள்வார் இலாமைப் பொருள்
காவலும் இல்லை.
அந்த நாட்டிலே யாரும் பொய் சொல்ல மாட்டார்; மெய்யே பேசுவார். ஆகையினாலே ‘இது உண்மை; இது பொய்’ என்கிற பேச்சே அங்கு இல்லை.
உண்மை இல்லை ; பொய்
உரை இலாமையால்
மக்கள் மேம்பாடுற்று விளங்கினார்கள். தாழ்வு என்பதே அங்கு இல்லை. காரணம் என்ன? அவர்கள் அறவழி நின்று நல்லனவே செய்தார்கள். அதனால் அவர் தம் எண்ணங்கள் சிறந்து விளங்கின. உள்ளத்திலே உயரிய கருத்துக்கள் இடம் பெற்று விட்ட படியால் கோபத்துக்கு இடமே இல்லை. கோபமே இல்லாமையால் சினத்தால் விளையும் சிறு குற்றங்கள் அந்த நாட்டிலே இல்லை. சினத்தால் வரும் சிறு குற்றங்கள் எவை? சிறு சிறு பூசல்கள், குடும்பச் சண்டைகள், தெருச் சண்டைகள், இவை காரணமாகக் கொலை செய்தல்; தற்கொலை செய்து கொள்ளல் முதலியன இவை இல்லாமையாலேயும் கவலையற்ற வாழ்க்கையாலும் எமனுக்கு அங்கே வேலை இல்லை. இயற்கையாக எய்தும் மரணம் தவிர வேறு எதுவுமில்லை. அதாவது அகால மரணம் இல்லை. சிசு மரணம் — அதாவது குழந்தைச் சாவு இல்லை. கருச்சிதைத்தல் போன்றன இல்லை.
கூற்றம் இல்லை ; ஓர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை ; தம் சிந்தையில் செவ்வியால்
ஆற்றல் நல் அறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.
இப்படியாக - ஓர் ஆன்மீக சோஷலிச - சமதர்ம சமுதாயம் கோசல நாட்டிலே இருந்தது என்று சொல்கிறார் கம்பர்.
நிலம் வளமுடையதாக இருந்தால்தான் அதில் விளையும் பயிரும் செழிப்பாயிருக்கும். வளமற்ற பூமியிலே பயிர் செழிக்காது.
அதே போல சமுதாயம் நன்றாக இருந்தால் தான் அந்த சமுதாயத்திலே நல்லவர்கள் தோன்றுவார்கள்; உயர்ந்த எண்ணங்கள் கொண்டோர் தோன்றுவர்; சிறந்த குணங்கள் மிக்கோர் தோன்றுவர்; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இத்தகைய சமுதாயத்திலேதான் தோன்றுவர்.
சமுதாயச் சூழ்நிலையே ஒரு மனிதனை உருவாக்குகின்றது. நல்ல சமுதாயத்திலே நல்லோர் தோன்றுவர்.
இந்த அடிப்படை தத்துவத்தைக் கூறி, அதன் அடிப்படையில் தனது காவிய மாளிகையை எழுப்புகிறார் கம்பர்.
இனி மாளிகையின் உள்ளே போவோம். ஆங்குள்ள அழகிய சித்திரங்களைக் காண்போம்.
தொகுப்பாசிரியர்கள்.