கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/008-009
யுத்த காண்டம்
கடவுள் வாழ்த்து
“ஒன்றே. என்னின், ஒன்றே ஆம்;
‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்;
‘ஆமே’ என்னின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்;
‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி முடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ
பிழைப்பு? அம்மா!”
கடல் காண் படலம்
இராமபிரான் கடலைக் கண்ணாற் கண்டதை கூறும் படலம் இது. கடலைக் கண்ட இராமன் துயர் உறுகிறான். கடலிலே உள்ள முத்துக்களும் சங்குகளும் பிராட்டியின் நினைவையும் பிரிவையும் இன்னும் அதிகமாகத் தூண்டுகின்றன. தென்றல் தீயாகச் சுடுகிறது.
ஆரவாரத்துடன் ஓங்கிய அலைகள் எப்படியிருக்கின்றன? பெரியோர் முதன்முதலாக வருவதைக் கண்டு, தமது கைகளைத் தூக்கிய வண்ணம் மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்துகொண்டு விரைவோடு அன்னாரை எதிர் கொள்வது போலிருக்கின்றன.
மேலும் கம்பநாடன் அடுத்தப் பாட்டில் என்ன கூறுகிறான்?
***
இன்ன தாய கருங்கடலை
யெய்தி இதனுக் கெழு மடங்கு
தன்னதாய நெடு மானந்
துயரங் காத லிவை தழைப்ப
என்ன தாகு மேல் விளைவு
என்றிருந்தான் இராம னிக லிலங்கைப்
பின்னதாய காரியமும் நிகழ்ந்த
பொருளும் பேசுவாம்.
இராமன் கடலை யடைந்த பின், தன்மானம் ஆகியன ஏழு கடலாக தன்னுடைய உள்ளத்திலே மிக, மேல் நடக்க வேண்டியதைப் பற்றிச் சிந்தித்த வண்ணம் இருந்தான்,
***
இராமன்-இராமபிரான்; இன்னது ஆய கருங் கடலை எய்தி - இத்தகையதான கரிய கடலை அடைந்து; இதனுக்கு ஏழு மடங்கு - இந்தக் கடலைக் காட்டிலும் ஏழு மடங்காக; தன்னது ஆய - தன்னிடமுள்ள; நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப - மிக்க மானமும் துன்பமும் ஆசையுமாகிய இவைகள் மிக; மேல் விளைவு என்னது ஆகும் என்று - இனி நிகழக்கூடிய செயல் யாதாகும் என; இருந்தான் - ஆராய்ந்து கொண்டு இருந்தான் (இது நிற்க); இகல் இலங்கை - பகையால் மாறுபட்ட இலங்கையில்; பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் - (அநுமன் எரியூட்டிச் சென்ற) பின்னர் நடைபெற்ற காரியத்தையும் நிகழ்ந்த செயலையும் (இனிச்) சொல்வோம்.
***
இலங்கை அநுமனால் எரியுண்ட பின், தெய்வத்தச்சனை அந்நகரை மீண்டும் அமைக்கும்படி ஆணையிட்டான் இராவணன். புதிதாக அமைக்கப்பட்ட அந்நகர் முன்னைக் காட்டிலும் அழகுடன் விளங்கியது. இது கண்ட இலங்கேசன் பெருமகிழ்ச்சியடைந்தான். தெய்வத் தச்சனுக்கும் பிரம்மனுக்கும் சன்மானம் வழங்கினான். புதிதாக அமைக்கப்பட்ட ஆயிரந் தூண் மண்டபத்தில் மந்திராலோசனையும் நடத்தினான் இராவணன். இந்த மந்திராலோசனையில் இடம் பெற்றவர் முனிவர்களோ, மற்ற ஞானவான்களோ அல்லர்: இராவணனுக்கு வேண்டிய அரக்கர்கள், மந்திரி, சேனாதிபதி, தம்பிகள் கும்பகன்னன், வீபீடணன் ஆகியோரே. தன் நாட்டிற்கு ஏற்பட்ட தீங்கை (அநுமன் எரியூட்டியதை) நினைத்து வருந்துகிறான் இலங்கையின் கோன். சேனைத்தலைவன் மகோதரன் ஆகிய மற்றைய அரக்கர் தம் கருத்துக்களைக் கூறுகின்றனர்.
கும்பகன்னன் இராவணனை அவன் சீதையைக் கவர்ந்தது முதல் தவறு; மாற்றான் மனைவியை காமுறுவது பெருந் தவறு; என்று இடித்துக் கூறுகிறான்.
***
ஆசில் பரதாரம் அவை
அம் சிறை அடைப்பேம்;
மாசில் புகழ் காதல் உறுவேம்;
வளமை கூரப்
பேசுவது மானம்; இடை
பேணுவது காமம்;
கூசுவது மானுடரை;
நன்று, நம் கொற்றம்.
“பிறர் மனைவியைக் கொண்டு வந்து சிறை வைப்போம்; ஆனால் புகழ் வேண்டும் என்று ஆசை கொள்வோம்; மானம் என்று பேசுவோம்; ஆனால் காமத்தைப் போற்றுவோம், வீரம் பேசுவோம்; ஆனால் மானிடரைக் கண்டு கூசுவோம். இவ்விதம் முரண்பட்ட செயல்களே செய்கிறோம். நமது ஆட்சி எவ்வளவு நன்றாயிருக்கிறது!”
***
ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம் குற்றமில்லாத பிறன் மனைவியை நமது சிறையில் அடைப்போம்; மாசில் புகழ் காதல் உறுவோம் - குற்றமற்ற புகழை விரும்புவோம்; வளமை கூரப் பேசுவது மானம் - வளம் பெருகப் பேசுவதோ மானம்; பேணுவது காமம் - ஆதரிப்பதோ மானக் கேடான காமம். (இவ்வண்ணம் ஒன்றுக்கொன்று முரணாக செயல்புரிவதனால்) கூசுவது மானுடரை - கூச்சம் கொள்வது மனிதரைக் கண்டு. நன்று நம் கொற்றம் - நமது வெற்றி ஆட்சி நன்றாயிருக்கிறதே.
***
சிட்டர் செயல் செய்திலை;
குலச் சிறுமை செய்தாய்;
மட்டவிழ் மலர்க் குழலினாளை
இனி, மன்னா!
விட்டிடுது மேல், எளியம் ஆதும்;
அவர் வெல்லப்
பட்டிடுது மேல், அதுவும் நன்று;
பழி அன்றால்.
“பெரியோர் செய்யும் செயல் நீ ஏதும் செய்தாய் இல்லை; நம் குலத்திற்கே சிறுமை தேடிவிட்டாய்; இனி சீதையைக் கொண்டு போய் விட்டுவிடலாம் எனில் அது கேவலம். எனவே போர் செய்வது தவிர வேறு வழியில்லை. தோல்வியுற்று இறந்து பட்டாலும் நன்றே; பழியில்லாது போகும்.”
***
மன்னா - மன்னனே! சிட்டர் செயல் செய்திலை - பெரியோர் செய்யும் செயல் புரிந்தாயில்லை; குலச்சிறுமை செய்தாய் - நம் குலத்திற்கே இழிவு வரும் செயல் செய்தாய். இனி - இனிமேல்; மட்டவிழ் மலர்க் குழவினாளை - தேன் சொரியும் மலரணிந்த கூந்தலுடைய சீதையை; விட்டிடுது மேல் - விட்டுவிட்டாலோ; எளிமையாம் - நாம் எளியவர் ஆவோம்; (எனவே, சீதையை விடாமையால் அவர்கள் தம்மீது போர் தொடுக்க) அதுவுமவர் வெல்லப் - அந்தப் போரிலும் அவர்களே வெற்றிபெற; பட்டிடுதுமேல் - நாம் இறந்துபடுவோமாயின், அதுவும் நன்று - அதுவும் நல்லதே; பழியன்றால் - பழியில்லாது போம்.
***
ஊறுபடை ஊறுவதன்
முன்னம் ஒரு நாளே
ஏறுகடல் ஏறி, நரர்
வானரரை எல்லாம்
வேறு பெயராத வகை
வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம்
என்பது நுவன்றான்.
“மேலும் மேலும் பெருகி வரும் வானரப் படையானது இலங்கை வந்து சேருமுன்னம் கடல் தாண்டிச் சென்று நம் எதிரிகளான நரரையும் வானரரையும் தாக்கி வேறு திசைகளில் செல்லவொட்டாமல் நொறுக்குவதே இனி நாம் செய்யத்தக்கது ஆகும்.”
இவ்வாறு கூறினான் கும்பகன்னன்.
***
ஊறுபடை - மேலும் மேலும் பெருகிவரும் வானரப் படையானது; ஊறுவதன் முன்னம் - இலங்கை வந்து நிரம்புவதன் முன்னால்; ஒரு நாளே - ஒரே நாளில்; ஏறு கடல் ஏறி - அலை புரளும் கடலைத் தாண்டிச் சென்று; நரர் வானரரை எல்லாம் - மனிதர், வானரர் ஆகியவர் எல்லாரையும்; வேறு பெயராத வகை - வேறு எங்கும் போய்விடாதபடி முடக்கி; வேரோடும் அடங்க - பூண்டோடு அழிந்து போகும்படி; நூறுவதுவே - அடித்து நொறுக்குவதே; கருமம் - நாம் செய்ய வேண்டிய காரியம்; என்பது நுவன்றான் - என்று சொன்னான்.
***
கும்பகன்னன் கூறியதற்கு இசைந்து, போருக்குச் செல்லத் தீர்மானிக்கிறான். அப்போது, மண்டோதரியின் மகன் இந்திரசித்து, தந்தையின் செயலைத் தடுத்துக் கூறுகிறான்.
“உங்கள் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு வெற்றியே பெற்றுவரும் வலிமையுள்ள பலரிருக்கையில், அரசன் தானே போருக்குச் செல்வது சிறப்போ? இந்த அற்ப மானிடரை எதிர்க்க எங்களைப் படையுடன் அனுப்புதல் சிறுமையாகுமோ? உங்கள் மகன் நான்; உங்களுக்காகப் பொருது உங்களுக்கு வெற்றித் தேடித் தருவேன்” என்று வீர சபதம் செய்கிறான். “வானரர்களை எல்லால் முற்றும் அழிப்பேன். மாற்றார் வலிமை அற்றவர்; அவர்களை வெல்ல, என்னை அனுப்புங்கள்” என்று இராவணனை வணங்கி விடை வேண்டுகிறான். அப்போது விபீடணன் இந்திரசித்து சொல்லியதை கண்டிக்கிறான்.
“நீ சிறுவன்; அனுபவம் முதலியன பெற்ற பெரியோர் இருக்கவேண்டிய மந்திராலோசனைச் சபையிலே உனக்கிருக்க உரிமை இல்லை. உன்னை இச் சபையில் இருக்க வைத்தது, ஆலோசிக்கும் திறனோடு கண்ணையும் இழந்த குருடன் சித்திரம் எழுதுவதைக் கைக் கொண்டு, சித்திரத்தை அமைக்கத் தொடங்குவதுபோல் உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு பொருந்தாத முறையில் மற்றவரை ஏளனஞ் செய்கிறாய்; தேவர்களை வெல்லும் அளவுக்கு உனக்கு வலிமை இருந்திருக்கலாம். அது உன் தவப்பயனே ஆகும். அந்த வலிமை நிலைத்திருக்க வேண்டுமானால் நீ அறத்திற்குப் புறம்பானச் செயலை விட்டுவிடு; தீய வினைகளை நீக்கிவிடு.”
இவ்வண்ணம் இந்திரசித்தை அதட்டிக் கூறி, இராவணனை நோக்கி நல்லுரை கூறுகிறான் விபீடணன்.
அற்பமான ஒரு குரங்கு இலங்கையை சுட்டெரித்ததே எதனால்? சானகியின் கற்பு வலிமையால் அன்றோ? எத்தனையோ பேராற்றல் உடைய அரசுகள் எதனால் அழிந்தன? கூர்த்து ஆராய்ந்தால் காரணங்கள் தெரியும். ஒன்று பெண்ணாசை. மற்றொன்று மண்ணாசை. எனவே இந்த ஆசையை ஒழி. இன்றேல் உனக்குத் தீராப் பழி ஏற்படுவதுடன் கேடும் விளையும். “மனிதராவது என்னை வெல்வதாவது?” என்று இறுமாப்பு கொள்ள வேண்டாம். ‘வானரத் துணைக்கொண்டு உன்னை வெல்வான் இராமன்’ என்று உணர்த்த வேண்டி இராவணனுக்கு வேதவதி அளித்த சாபத்தை குறிப்பாக உணர்த்தினான்.
இராமனின் வீரமும் வலிமையும் வாய்மையும் வழி வழியாக வந்தவை. தேவர்கள் உன்னை வெல்லமுடியாது. அவர்களால் உன்னைக் கொல்ல முடியாது என்ற வரத்தை நீ பெற்றிருப்பது உண்மையே. எனினும் மானிடராய் பிறந்துள்ள இராம இலட்சுமணன் இந்த விதிக்கு விலக்காக மாட்டாரோ என்று விபீடணன் மேலும் கூறிக்கொண்டு போவதைக் கேட்டு இராவணன் கோபத்துடன் சீறுகிறான். தான் தேவர்களை வென்றது தன் சொந்த வலிமையால், எவருடைய வரத்தினாலும் அன்று, எவருடைய சாபமும் தன்னை தீண்டாது என்கிறான் ஆணவத்தோடு. யார்? இராவணன். இராமனுக்கு ஏற்பட்ட தாழ்ந்த நிலைமையை எள்ளி நகையாடுகிறான்.
***
இசையும் செல்வமும் உயர்குலத்து
இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொளக்,
கிளையொடும் மடியாது
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை
விட்ட ருளுதி; இதன்மேல்
விசையம் இல் எனச் சொல்லினன்
அறிஞரின் மிக்கான்.
"உனது புகழும், செல்வமும் உயர்குலப் பண்பும் அழிய, பழிப்பும், தாழ்வும் மேலோங்க உனது சுற்றத்தாருடன் மாண்டு போகாமல் மாசற்ற கற்புடையளாகிய சீதையை விட்டுவிடு. இதற்குமேல் வெற்றிதரும் செயல் எதுவுமில்லை. இதற்கு மேற்பட்ட விஷயம் எதுவுமில்லை." என்றான் அறிஞரில் சிறந்த விபீடணன்.
***
இசையும் - உனது புகழும்; செல்வமும் - செல்வச் சிறப்பும்; உயர்குலத்து இயற்கையும் - உயர் குலப்பிறப்பிற்குரிய இயல்பும்; எஞ்சி-அழிய வசையும் - பழிப்பும்; கீழ்மையும் - தாழ்வும்; மீக்கொள - நம்மேல் வந்து ஓங்க; கிளையொடும் - சுற்றத்தோடு; மடியாது - அழிந்திடாது; அசைவு இல் கற்பின் - நீங்காத கற்புடைய; அவ்வணங்கை- அந்தத் தெய்வ மகளாகிய சீதையை; விட்டு அருளுதி - விட்டு விடுவாயாக; இதன் மேல் விசையம் இல் - இதற்கு மேல் வெற்றிதரும் செயல் வேறு ஒன்றுமில்லை; என்று சொல்லினான் அறிவில்மிக்கவன்.
***
விபீடணன் தன் அண்ணனின் கோபத்தைக் கண்டு அஞ்சவில்லை. தொடர்ந்து முயற்சிக்கிறான். இரணியனின் கதையைச் சொல்லி அவன் மனத்தை மாற்றப்பார்க்கிறான்.
இரணியன் கதையைச் சொல்வானேன்? இரணியனும் ஓர் அரக்கன். தேவர், மானிடர் யாராலும் தனக்கு முடிவு ஏற்படக் கூடாதென்று வரம் பெற்ற வலிமை மிக்கவன். "தானே தெய்வம்" என அனைவரையும் அச்சுறுத்தி வாழ்ந்தவன். அவன் மகன் பிரகலாதன். திருமாலின் பக்தன்; தந்தை மகனுக்குப் பகையானான். "எங்கே உன் நாராயணன்? என்று மிரட்டிய தந்தைக்கு 'தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' எனக் கூறிய சிறுவனின் பதில் சினத்தைத் தூண்டியது. தூணை உடைத்தான். உடைத்த தூணிலிருந்து வெளிப்பட்டான் சிங்கப் பெருமாள், இரணியனைக் கொன்றான்.
இதே போன்று வரம் பெற்றுவிட்டதால், மறத்தை நிலைக்க செய்ய முடியாது. எந்த வரத்திற்கும் ஒரு விலக்கு உண்டு. எனவே சீதையை இராமனிடம் அனுப்பி நாட்டையும் வீட்டையும் காக்கவேண்டும் என்று மன்றாடுகிறான் விபீடணன்.
ஆனால், இராவணன் என்ன சொல்கிறான்?
விபீடணனைத் திட்டுகிறான். பகைவன் இராமனிடம் அவன் அன்பு கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறான். பிரகலாதனைப் போல் விபீடணனும் மாற்றானுடன் சேர்ந்து தன் செல்வத்தையும் அரசையும் பறிக்கத் திட்டமிட்டதாகச் குற்றஞ் சாட்டுகிறான்.“பகைவருடன் உறவு கொண்டாடும் உள்நோக்கத்துடன்தான், முன்னர் அநுமனை கொல்வதை தடுத்தாய் போலும். இராம இலட்சுமணனை விட நீயே என் பகைவன்!” என கூறும் இராவணனைக் கண்டு வேதனைப்படுகிறான் அறிஞர்க்கறிஞன். உண்மையை இடித்துக்கூறிய தம்பியை ‘போ, போ!’ என விரட்டுகிறான். ஏன்! அவனுடைய கெட்ட காலம் அவனுக்குக் கெடுமதியைத் கொடுக்கிறது.
***
அஞ்சினை ஆதலின்
அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர் பால்
வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை;
பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன் கொடு
வாழ்தல் நன்மையோ?
“அட! பயங்கொள்ளி! நீ போருக்குத் தகுதியற்றவன். தஞ்சம் என மனிதர்பால் சார்பு கொண்டுவிட்டவன் நீ. வஞ்சகா! அரக்கர் குலத்தில் பிறந்தும் அவ்வியல்பு சிறிதும் இல்லாது பிறவி மாறியவனே! பாம்புடன் வாழ்வது போல் உன்னுடன் வாழ்வது நலன் தருமோ?”
***
அஞ்சினை - நமது பகைவரைக் கண்டு நீ பயந்து விட்டாய்; ஆதலின் அமர்க்கும் ஆள் அலை - ஆகவே நீ போர் செய்யத் தகுதியற்றவன்: தஞ்சு என - நமக்குத் தஞ்சம் என்று; மனிதர்பால் வைத்த சார்பினை - மனிதர் இடத்திலே சார்ந்துவிட்டாய்; வஞ்சனை மனத்தினை - மனத்திலே வஞ்சனையுடையவனே; பிறப்பு மாறினை - அரக்கனாகப் பிறந்தும் அந்த அரக்க ஒழுக்கம் மாறிவிட்டாய்; நஞ்சினை விஷம் உள்ள பாம்பை; உடன் கொடு - உடன் வைத்துக்கொண்டு; வாழ்தல் நன்மையோ,
***
“பழியினை உணர்ந்து, யான்
படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்;
எல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல்,
விளிதி” என்றனன்,
அழிவினை எய்துவான்
அறிவு நீங்கினான்.
“உன்னை நான் கொன்று போடுவேன். தம்பியைக் கொன்ற பழி வருமே என்பதால் கொல்லவில்லை. எனக்குப் புத்தி சொல்வதை ஒழி. விரைவில் போ. என் கண்முன் நில்லாதே. நின்றால் கொன்று விடுவேன்!” என்றான் அழிவு காலத்தை அடைந்துவிட்ட அறிவிலி இராவணன்.
***
பழியினை உணர்ந்து - உடன் பிறந்தவனைக் கொன்ற பழி வருமே என்று உணர்ந்து; உனை யான் படுக்கிலேன் - உன்னை நான் கொல்லவில்லை; சில புகலுதல் ஒழி - எனக்குப் பிடிக்காத சில சொற்கள் கூறுதலை ஒழித்து; எல்லை நீங்குதி - உடனே ஒடிவிடு; விழி எதிர் நிற்றியேல் - என் கண்முன் நின்றால்; விளிதி - (என் கையால்) இறந்து படுவாய்; என்றனன் - என்று கூறினான்; அழிவினை எய்துவான் - அழிவு அடையும் பொருட்டு; அறிவு நீங்கினான் - அறிவு நீங்கப் பெற்ற இராவணன்.
***
விபீடணன் வானத்து எழுகிறான். மீண்டும் கூறுகிறான்;
“நீ வாழ நினைத்தால், இராமனின் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கேள், இல்லையெனின் அப்பிரானுடைய அம்பு உன்னையும், உன்னைச் சேர்ந்த அனைவரையும் அழித்துவிடும். என் குற்றத்தைப் பொறுத்தருள்க!” என இலங்கை விட்டு நீங்கினான்.
***
“எத்துணை வகையாயினும்
உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்;
உணரகிற்றலை;
அத்த! என் பிழை
பொறுத்தருளுவாய்” என,
உத்தமன் அந் நகர்
ஒழியப் போயினான்.
“எல்லா வகையாலும் உறுதி பொருந்தியனவும் நீதி நூற்கு ஒத்தனவுமான கருத்துக்களை எல்லாம் உனக்கு உணர்த்தினேன். ஆனால், அவற்றை நீ உணரும் ஆற்றல் அற்றவன் ஆனாய்; என் தந்தைப் போன்றவனே! (பெரியோனாகிய உனக்கு அறிவுரை கூறிய) என் பிழையைப் பொறுத் தருள்வாயாக!” என்று கூறிவிட்டுச் சிறந்த குண நலன்களை உடைய விபீடணன் அந்த இலங்கை நகரத்தை விடுத்துச் சென்றான்.
***
(அவனுடன் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரும் உடன் சென்றனர்).
***
எத்துணை வகையினும் - எவ்வளவோ விதங்களிலும்; உறுதி எய்தின - நன்மை பயக்கக் கூடியனவும்; ஒத்தன - (நீதி நூலுக்கு) இயைந்தனவும் ஆன நல்ல பொருள்களை; உணர்த்தினேன் - தெரிவித்தேன்; உணரகிற்றிலை - நீ அவற்றை அறியும் ஆற்றலற்றவன் ஆயினை; அத்த - என் தலைவனே; என் பிழை பொறுத்தருள்வாய் எனா - நான் செய்த தவறுதல்களை மன்னித்தருள்வாயாக! என்று இராவணனை நோக்கிச் சொல்லிவிட்டு, உத்தமன் அந்நகர் ஒழிய போயினான் - குணம் செயல்களால் மிகச் சிறந்தவனான விபீடணன் அந்த இலங்காபுரியை நீத்துச் செல்லலானான்.
***
அனலன் முதலிய நால்வருடன் கடற்கரை செல்கின்றான் விபீடணன். ஏன்? இராமன் அங்கு வந்துள்ளான் என்பதைக் கேட்டவுடன் அங்கு சென்றான். வானர சேனையைக் கண்டு வியப்படைகிறான். “என் செய்வது?” என்று அவன் அமைச்சர்களை நோக்கி கேட்கவும்,
***
மாட்சியின் அமைந்தது
வேறு மற்று இலை;
தாட்சி இல் பொருள்
தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்
என்று, கல்வி சால்
சூட்சியின் கிழவரும்,
துணிந்து சொல்லினார்.
தாழ்வு இல்லா ஞானப் பொருளைத் தரும் தருமமே வடிவாக உள்ள இராமனைக் காண்பதே இப்பொழுது செய்யத்தக்க கடனாகும். இதைப்போல சிறப்பமைந்த செய்கை வேறு ஒன்றும் இல்லை; என்று கல்வியறிவாற் சிறந்த, ஆலோசனைக்கு உரியவராகிய, அமைச்சர்களும் துணிந்து சொன்னார்கள்.
***
தாட்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியை- எவ்வகையான தாழ்வும் இல்லாத உறுதிப் பொருள்களை அளிக்க வல்ல அறக்கடவுளான இராமபிரானை; காட்சியே இனி கடன் - தரிசித்தலே இனி நாம் செய்யவேண்டிய கடமை; மாட்சிமையின் அமைந்தது - பெருமையுடன் கூடியதும் (அதுவேயாம்); மற்று வேறு இலை - பிறிதொன்றும் இல்லை; என்று - என்று; கல்வி சால் சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார் - ஆலோசனைக்குரியவரான அமைச்சர்களும் தெளிவாகச் சொன்னார்கள்.
***
(விபீடணன் அவர்கள் சொன்னதை ஆமோதித்தான். இரவு வந்தது. அவர்கள் ஓரிடத்தில் தங்கினர்.)
கடற்கரையில் இருந்த இராமன் இயற்கைக் காட்சிகளை கண்டான். அன்னையின் குவளைக் கண்களையும் பவளச் செவ்வாயையும் அவை நினைவூட்டின. சோலைகளைப் பார்த்தான். விரக தாபத்தால் வேதனைப்பட்டான். மனம் சோர்ந்தான். ஆணும் பெண்ணுமாக உறங்கும் அன்னப் பறவைகளைக் கண்டான். தன்னையும் அறியாது பெருமூச்சு விட்டான். ஆண் பறவை உணவு கொண்டுவரச் சென்றது. அது வரும் திசையை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெட்டை நாரையை கண்டபோது அவன் வேதனை அதிகரித்தது. இதனிடையே ஒரு பெண் பறவைக்காக இரு ஆண் பறவைகள் சினத்துடன் போரிட்டன. இராமன் தன் புருவத்தை வளைத்தான்.
இது போதாதென்று வேறொரு புறம், ஒரு ஊடல் காட்சி. இராமன் இதை கண்டான். தனிமை, துன்பத்தை அதிகப்படுத்தியது.
***
உள் நிறை ஊடலில்
தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில்
வெல்லக் கண்டவன்
தண் நிறப் பவள வாய்
இதழை, தற் பொதி
வெண் நிற முத்தினால்,
அதுக்கி விம்மினான்.
பெண் அன்னத்தின் உள்ளத்தில் நிறைந்த ஊடல் நிகழ்ந்த காலத்தில் (அதனை எதிர்த்தலாற்றாது பணிந்து) தோல்வியுற்ற ஆண் அன்னம், இரண்டுடம்பும் ஒன்று படுகின்ற கலவிக் காலத்தில் பேரின்பமுற்று வென்றதைப் பார்த்தான் இராமன்; இனிய நிறத்தையுடைய பவழம் போன்ற தன் வாயிதழை, வெண்மையான நிறத்தையுடைய முத்துப் போன்ற பற்களினால் அதுக்கிக்கொண்டு ஏக்கத்தால் விம்மினான்.
***
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம். உள்ளே நிறைந்த புலவியிலே தோல்வி உற்ற பெடையன்னம்; கண்ணுறு கலவியில் வெல்ல கண்டவன் - கண்ணுக்குப் புலப்படும் புணர்ச்சியிலே வெற்றி பெறக் கண்டவனான இராமன்; தண் நிறம் பவளம் வாய் இதழை -இனிய நிறத்தையுடைய பவளம் ஒத்த வாயிதழை; தன் பொதி வெண் நிற முத்தினால் - தன்னால் மறைக்கப்படுகின்ற முத்துப் போலுள்ள பற்களினால்; அதுக்கி விம்மினான் - கடித்தவண்ணம் பொருமலுற்றான்.
***
இராமன் நிலை கண்ட சுக்ரீவன் முதலியோர் அண்ணலைத் தேற்றி அவன் தன் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர்.
***
உறைவிடம் எய்தினான்
ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு
இருந்த சூழலில்
முறை படு தானையின்
மருங்கு முற்றினான்—
அறை கழல் வீடணன்,
அயிர்ப்பு இல் சிந்தையான்.
இராமன் தன் இருப்பிடத்தை அடைந்தான். சிறந்த அறிவு உடைய அநுமனும், மற்ற அனைவரும் அங்கு இருந்தனர். வானர சேனை, அணிவகுத்ததுபோல் அமர்ந்து இருந்தன. பக்கத்தில் வந்து நின்றான், விபீடணன். அவன் எப்படிப்பட்டவன்? வீரக் கழல் அணிந்தவன். மனத்தில் ஐயமே இல்லாதவன்.
***
உறைவிடம் எய்தினான் - தனது இருக்கையைச் சென்றடைந்த இராமபிரான்; ஒருங்கு - ஒரு சேர; கேள்வியின் துறை அறி துணைவரோடு - கேட்டறிய வேண்டிய நூல்களின் வழிகளை எல்லாம் அறிந்த தன் நண்பருடன்; இருந்த சூழலின் - அமர்ந்திருந்த எல்லையில்; முறைபடு தானையின் மருங்கு - (போர்க்கு) உரிய முறைப்படியே ஒழுகுகின்ற வானரப் படையின் அருகிலே; அறம்கொள் சிந்தையான் - தரும நெறியையே கருதுபவனான, அறைகழல் விபீடணன் - ஒலிக்கின்ற வீர கண்டை புனைந்த வீடணன்; முற்றினான் - சென்றடந்தான்.
***
அரக்கர்களைக் கண்டான் மயிந்தன். அவர்கள் யாரென கேட்டான். அமைச்சன் அனலன், வீடணன் பற்றியும், அவன் அங்கு வந்த காரணம் பற்றியும் கூறும் போது, அரக்கர்கோன் வீடணனை ஏன் விரட்டினான் என்பதைப் பற்றியும் கூறினான். இதை மயிந்தன் இராமனிடம் சொன்னான்.
***
“ஏந்து எழில் இராவணன்,
இணைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை,
என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில்
அகறியால்—எனப்
போந்தனன்” என்றனன்;
புகுந்தது ஈது என்றான்.
பிறரை வருத்துவதைத் தொழிலாகக் கொண்டுள்ள இராவணன், (விபீடணனை) நோக்கி, "இத்தன்மையான சொற்களைச் சொன்ன நீ என் முன் நிற்பாயானால் இறப்பதற்கே உரியவன் ஆவாய்; (ஆதலால்) தினையளவு பொழுதில் இவ்விடத்தை விடுத்துச் செல்வாயாக!" என்று வெகுண்டு கூறினான், எனவே அவனைத் துறந்து விபீடணன் இங்குச் சரணடைய வந்தான் என்று (அலைன்) கூறினான். நிகழ்ந்தது இதுவே என்று மயிந்தன் இராமனிடம் கூறினான்.
***
‘ஏந்து எழில் இராவணன் - உயர்ந்த அழகினையுடைய இராவணன்: இணைய சொன்ன நீ - இவ்வாறு எனக்கு பிடிக்காத வார்த்தைகளை மொழிந்த நீ; என் கார்பு நிற்றியேல் - என் பக்கம் நிற்பாயானால், சாம் தொழிற்கு உரியை . இறப்பதற்கே தக்கவனாவாய்; (ஆகவே) ஆம் தினை பொழுதினில் அகல்தியாய் என - பொருந்திய தினையளவு நேரத்திற்குள்ளாக என்னைவிட்டு அகல்வாயாக என்று மொழிய, போந்தனன் என்றனன் - (அவ்விடத்தை விடுத்து இங்கு) அந்த வீடணன் வந்தனன் என்று அனலன் தெரிவித்து; புகுந்தது ஈது என்றான் - நிகழ்ந்தது இது’ என்று (தான் கண்டதும் கேட்டதுமான செய்திகளை), மயிந்தன் என்ற வானர வீரன் இராமனிடம் அறிவித்தான்.
***
அப் பொழுது இராமனும்:
அருகில் நண்பரை
‘இப் பொருள் கேட்ட இவன்
நீர் இயம்புவீர்-
கைப்புகற்பாலனோ? கழியற்
பாலனோ-
ஒப்புற நோக்கி, நும்
உணர்வினால்’ என்றான்.
அப்போது இராமனும் தன் அருகில் இருந்த சுக்ரீவன் முதலிய நண்பரை நோக்கி. (அனலன் கூறியவற்றை) நீங்கள் கேட்பீர்கள். இவ்விபீடணன் நம்மிடத்தில் புகுதற்குத் தகுந்தவனா? அல்லது, புகாது திரும்பிப் போதற்குரியவனா? என்பதை உங்கள் உணர்வினால் பொருந்த நோக்கி ஆராய்ந்து சொல்வீர்களாக” என்று பணிந்தான்.
***
அப்போது மயிந்தன் கூறிய சொற்களைக் கேட்ட போது; இராமனும் அருகில் நண்பரை - இராமபிரானும் (தம் அண்மையில் அமர்ந்திருந்த) துணை வரைப் பார்த்து: 'இப் பொருள் கேட்ட நீர் - இப்போது நடைபெற்ற செய்திகளைக் (மயிந்தன் வாய் மொழியாற்) செவியேற்ற நீங்கள்: கை புகல் பாலனோ - இந்த விபீட்ணன் நம்மிடம் புகுதற்கு உரியவனோ? அல்லது, கழியல் பாலனோ - அப்பால் சென்றிடற்கே உரியவனோ?; நும் உணர்வினால் - உங்கள் அறிவினால்: ஒப்புற நோக்கி - நடுவர் நிலைக்கேற்ப ஆராய்ந்து; இயம்புவீர் என்றான் - உரைப்பீர்களாக என்று சொன்னான்.
***
வெம் முனை விளைதலின் அன்று;
வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத்
துணிதலால் அன்று;
தம் முனைத் துறந்தது,
தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில்
யாவர் சீரியோர்?
விபீடணன் தன் தமையனைத் துறந்து வந்தது, அந்த இராவணனோடு தனக்குக் கொடிய போர் விளைந்தாலும் அன்று; அவனைக் கொல்ல நினைத்து. அவன் அண்ணன் இராவணன் வேறு எந்த அடாத செயலையும் செய்யவில்லை. இத்தகைய பெரிய காரணங்கள் ஏதும் நிகழாத போது, தன்னுடன் பிறந்த அண்ணனை துறந்து வந்தது தருமமோ? அன்றி நீதியோ? (இரண்டுமில்லை) மேலும் நேர்மைப் பண்பு இரண்டும் இல்லாத அரக்கர்களில் சிறப்புடையவர் எவருளர்? (எவருமிலர்)
(இங்கு சுக்ரீவன் வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பகையையும் விபீடணனுக்கு அவன் உடன்பிறப்புடன் ஏற்பட்ட பகையையும் ஒப்பிடுகிறான்.)
***
(இந்த விபீடணன் இச் சமயத்தில்) ‘தம்முனை துறந்தது - தன் தமையனான இராவணனை விடுத்து வந்தது; வெம்முனை விளைதலின் அன்று - தமையனோடு கடும்போர் நிகழ்ந்ததால் அன்று: வேறு ஒரு சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று - பிறிதொரு சுமையால் தன் உயிரையே கொள்வதற்குத் துணிவு கொண்டதாலும் அன்று; (ஆதலின் இவன் செயல்), தரும நீதியோ - அறநெறியாகுமோ? செம்மை இல் அரக்கரில் , சீரியோர் யாவர் - நடுவு நிலைமை முதலிய நேர்மைக் குணங்கள் அற்ற அரக்கர் குழுவில் மேன்மை உடையவர் என்று புகலற்குரியவர் யாவர் - யார்? (யாருமில்லை என்றபடி).
***
இராமன் சாம்பனை விபீட்ணன் பற்றிய கருத்தைக் கேட்டபோது சாம்பனும், ‘பகைவராகி நம்மை வந்தடைந்து உள்ள இவர்கள்பால் நற்குறிகள் மிகக் காணப்படுகின்றன என்பது கொண்டு இவர்களை ஏற்றுக் கொள்வதை உலகம் நன்றென ஒப்புமோ?’ என்றான். நீலனும் மற்றவரும் விபீடணனுக்கு புகலிடம் கொடுத்து ஏற்றுக்கொள்வது தீதென தீர்மானமாகக் கூறினர்.
***
‘உறு பொருள் யாவரும்
ஒன்றக் கூறினார்
செறி பெருங் கேள்வியாய்!
கருத்து என்? செப்பு’ என,
நெறி தரு மாருதி என்னும்
நேர் இலா
அறிவனை நோக்கினான்,
அறிவின் மேல் உளான்.
அறிவினால் எல்லோரினும் மேம்பட்டவனாகிய இராமன், அரசியல் நெறியனைத்தும் தெரிந்த,மாருதி என்ற ஒப்புவமை இல்லா அறிஞனை நோக்கினான். “பொருள் செறிந்த பெரிய கேள்வி அறிவுடையவனே! செய்ய வேண்டிய செயலைப் பற்றி எல்லோரும் ஒரு தன்மையராகக் கூறிவிட்டார்கள்; நின் கருத்து என்ன? சொல்லுக” என வினவினான்.
***
அறிவின் மேல் உளான் - உணர்ந்தார்க்கும் உணர முடியாதபடி யாவையும் கடந்து நின்ற பரம்பொருளான இராமன்; நெறி தரும் மாருதி என்னும் நேர் இலா அறிவனை - யாவர்க்கும் நன்னெறியைக் காட்டவல்ல காற்றின் மைந்தனான அநுமன் என்னும் ஒப்புயர்வற்ற ஞானியை; ‘செறி பெரும் கேள்வியாய் - பொருந்திய பரந்த கேள்வி ஞானமுள்ளவனே! உறுபொருள் யாவரும் ஒன்ற கூறினார் - செய்தற்குரிய காரியத்தைக் குறித்து யாவரும் ஒரு படித்தாக மொழிந்தார்கள்; (இனி, இவ் விபீடணனை ஏற்றுக் கொள்வதில்), கருத்து என் செப்பு, என - நீ கருதுவது சொல்வாயாக! என்ற கருத்துப் புலப்படுமாறு, நோக்கினான் - கண்ணால் பார்த்தான்.
***
அநுமனை இராமபிரான் விபீடணனைப் பற்றிய அபிப்பிராயம் கேட்டபோது அநுமன் தன் கருத்தினைக் கூறினான். விபீடணன் மற்றவர் கூறியதுபோல் தீயவன் அல்லன். இக் கருத்தினை அரக்கர்கோன் இராவணனின் தம்பி விபீடணனின் முகமும், பேச்சும் உறுதி செய்யும். சுக்ரீவன் தன் அண்ணன் வாலி, தன்னிடமிருந்து கைப்பற்றிய தனது அரசை, மீண்டும் பெறவே தங்களிடம் வந்தான். விபீடணனோ அப்படி அல்ல, இலங்கேசனால் துரத்தப்பட்டு தங்களிடம் புகலிடம் கேட்டு வந்துளான். அவன் தக்க சமயத்திலேதான் வந்துள்ளான். விபீடணன் இராமனை நாடியதேன்? இராமன் சத்தியத்தின் உரு; கருணையின் வடிவம்; என்ற உண்மையை உணர்ந்தே இராமனை நாடினான். சீதையைக் கவர்ந்த நாள் முதல் இலங்காதிபனைத் திருத்த அவன் எடுத்த முயற்சிகள் எத்தனை, எத்தனை! ‘சரண்’ என வந்த அவனையும், அவனுடன் துணை வந்தவரையும் சந்தேகிக்கலாமோ? அரக்கராகப் பிறந்து விட்டதால், அவர் நமக்கு எப்போதும் மாயமே செய்வரென்று கொள்வது முறையாகுமா? தீங்கு தான் செய்வான் விபீடணன் என்று நினைத்தால், என்னை இராவணன் கொல்வதை, ‘தூதுவரை கொல்லுதல் குற்றமாகும்’ என எடுத்துக் கூறி, காப்பாற்றியிருப்பானா? அரக்கர், விபீடணன் மாளிகையைச் சுற்றி பழிக்கக் கூடிய செயல்களைச் செய்தனர் என்றாலும் அவர் தம் தீயச் செயல்களை விபீடணன் மேற்கொள்ளாதது அவனுடைய நற்குணத்திற்குச் சான்று அன்றோ? அது மட்டுமா? விபீடணனின் ஒப்பற்ற மகள், திரிசடை அன்றோ பிராட்டியாருக்கு ஆறுதல் கூறி, அவர் உயிருடன் இருக்க உதவியவள்!
தான் கண்ட கனவைக் கூறி, அரக்கியர் அன்னையை துன்புறுத்தாவண்ணம் பாதுகாத்தவள் இங்கு, இன்று, வந்துள்ள விபீடணனின் மகள்தானே? அயனால் இராவணன் பெற்ற சாபத்தை அன்னைக்குக் கூறியவளும் அவளே அல்லவா?
***
தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே
முதலாய தேவ தேவர்
மூவர்க்கு முடிப்பரிய காரியத்தை
முற்றுவிப்பான் முண்டு நின்றாய்
ஆவத்தின் வந்த அபயம் என்றானை
யயிர்த்தல் விடுதியாயின்
கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது
ஒவ்வாதோ கொற்ற வேந்தே.
‘வெற்றியே பெறும் இயல்புடைய அரசே! தேவர்க்கும், அசுரர்க்கும், நான்முகனாகிய பிரமன் முதலான தலைமைத் தேவர்கள் மூவர்க்கும் முடித்தற்கு அரிய காரியத்தை முடிப்பதற்கு முனைந்திருக்கின்றோம்; (அத்தகைய நாம்) ஆபத்துக் காலத்தில் நம்மை நாடி வந்து அபயம் என்று கூறிய விபீடணனை ஐயுற்று விலக்கி விடுவோம் என்றால், பெரிய நீர் பரப்பையுடைய கடல், கிணற்றிலுள்ள சிறிய அளவான நீர் தன்னை அடித்துக் கொண்டு போய்விடுமோ என ஐயப்படுவதைப் போன்று ஆகாதோ?’
***
கொற்ற வேந்தே - வெற்றி பொருந்திய மன்னவ! தேவர்க்கும் தானவர்க்கும் - தேவகட்கும், அசுரர்கட்கும்; திசை முகனே முதலாய தேவதேவர் மூவர்க்கும் - பிரமதேவன் முதலான தேவாதி தேவர்களான மும்மூர்த்திகட்கும்; முடிப்பரிய காரியத்தை - செய்து முடிக்கவியலாத செயலை; முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் - முடித்து தரும் பொருட்டு முனைந்துள்ளாய்; ஆவத்தின் - துன்பம் நேர்ந்த காலத்து; வந்து - நம்பால் வந்து; அபயம் என்றானை - அபயம் என்று சொல்லிக் கொண்டு நின்ற இவனை; அயிர்த்து - ஐயம் கொண்டு; அகல விடுதி ஆயின் - நீங்கும்படி விட்டுவிடுவாயாகில்; (அச்செயல்) கடல் - பெரும் நீர்ப்பரப்பான கடலானது; கூவத்தின் சிறு புனலை அயிர்த்தது ஒவ்வாதோ? - கிணற்று நீரை (நம்மை அடுத்து கொண்டு சென்று விடுமோவென) ஐயுற்றதை நிகர்க்காதோ?
(அநுமன் கூறியதைக் கேட்டான் இராமன்) பின்,
***
இன்று வந்தான் என்று உண்டோ?
எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ?
புகலது கூறுகின்றான்
துன்றி வந்து அன்பு பேணுந்
துணைவனும் அவனே; பின்னைப்
பொன்றும் என்றாலும், நம்பாற்
புகழ் அன்றி பிறிது உண்டாமோ?
நம்பால் அடைக்கலம் கோரி வந்தவன் முன்பின் அறியாதவன்; அன்றைக்குத்தான் வந்தவன் என்று விலக்குவது சரியோ? காலம் இதற்குத் தடையாகாது. தந்தையையும், தாயையும், அண்ணனையும் கொன்று வந்தவன் அடைக்கலமாக வந்தாலும் ஏற்றுக் கொள்வதே முறையான செயல் எனின் அத்தகு கொடுமை ஏதும் செய்தறியாத விபீடணனை ஏற்றுக் கொள்வதே முறை. பல நாளாக பழகி வந்து அன்பு செய்கின்ற நண்பனுமாவான் அவன். பின்னர் அவன் அந்நட்பு முறையினின்றும் மாறுபட்டு நமக்குத் தீமை விளைவித்தாலும் அதனால் நமக்குப் புகழுண்டாகுமே அன்றி பழி உண்டாகாது.
***
‘புகலது கூறுகிறான்’ - ‘நான் உங்கள் அடைக்கலம்’ என்று சொல்பவன்; இன்று வந்தான் என்று உண்டோ - இன்றைக்குத்தான் வந்தவன் என்று விலக்கி விடுவதற்கு இடம் உண்டோ?; எந்தையை யாயை முன்னை கொன்று வந்தான் என்று உண்டோ - என் தந்தையையும் தாயையும் அண்ணனையும் கொலை புரிந்துவிட்டு வந்து சரணம் புக்கான் என்று கூறித் தள்ளத்தான் இடம் உண்டோ? துன்றி வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே - நம்மை நெருங்கி வந்தவனாகக் கருதி அன்பு பாராட்டுவதற்குத் தக்க நண்பனும் அவனே; பின்னை - இதன் பின்னை; பொன்றும் என்றாலும் - அவனால் நாம் இறத்தல் கூடும் என்ற போதும்; நம்பால் - அவனைப் புகலாக ஏற்ற நம்மிடத்து; புகழ் அன்றி பிறிது உண்டாமோ - புகழே அல்லாமல்; அதற்கு மாறான பழி நமக்குச் சேருமோ? (பழி அவனையேதான் சாரும்); ஓ எதிர்மறை.
***
ஆதலான், “அபயம்!” என்ற
பொழுதத்தே, அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது;
இயம்பினர், என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக்
கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்
வயின் கொணர்தி” என்றான்.
ஆதலால், “விபீடணன் அபயம் என்று சொன்னபோதே அபயதானம் கொடுத்தலே என் கடமையாகும். என்னிடம் வைத்த பேரன்பால் நீங்கள் அவனை ஏற்கலாகாது என்று முன் சொன்னீர்கள். இனி வேறு வகையாக எண்ண வேண்டுவது யாது? சூரியனின் மைந்தனாகிய சுக்ரீவனே! குற்றமற்றவனாகிய விபீடணனை நீயே என்னிடத்து அழைத்து வருவாயாக” என்று கூறினான்.
***
ஆதலான் - ஆகையால்; அபயம் என்ற பொழுதத்தே - அபயம் என்ற என்னை வந்து சார்ந்த அப்பொழுதே; கடப்பாடு என்பது - கடமை என்ற சொல்லப்படுவது; அபயதானம் ஈதலே - வந்தவர்க்கு அபயதானம் அளிப்பதேயாகும்; என்பால் வைத்த காதலால் இயம்பினீர் - நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பினால் (இவனை ஏற்பது சிறிதும் பொருத்தம் அன்று என்று) சொன்னீர்கள்; இனி வேறு எண்ணக் கடவது என் - இனிமேல் (இந்த வீடணனை ஏற்பதில்) வேறாக ஆலோசிக்க வேண்டியது யாதுளது? ‘கதிரோன் மைந்த - சூரியன் புதல்வனான சுக்கிரீவ! கோதிலா தவனை நீயே என் வயின் கொணர்தி என்றான் - குற்றமற்ற அந்த வீடணனை நீயே என்னிடம் அழைத்து வருக.’ என்று சொன்னான் இராமபிரான் .
***
சுக்ரீவன் விபீடணனை அழைத்து வந்தான் அண்ணலிடம். “உனக்கு அபயம் வழங்கின இராமபிரானை வணங்குக!” என்று கூறினான். வீடணனும் இராமனை வணங்க, இராமன் அவனுக்கு இருக்கை ஈந்தான்.
***
‘அழிந்தது பிறவி’ என்னும்
அகத்து இயல் முகத்துக் காட்ட,
வழிந்த கண்ணீரின் மண்ணில்
மார்பு உற வணங்கினானைப்
பொழிந்தது ஓர் கருணை தன்னால்
புல்லினன் என்று தோன்ற,
“எழுந்து, இனிது இருத்தி” என்னா
மலர்க்கையால் இருக்கை ஈந்தான்.
இவ்வாறு இராவணனால் துரத்தப்பட்ட விபீடணன் இராமனைச் சரண் அடைந்தான். கண்கள் நீர் சொரிய மண்ணில் விழுந்து வணங்கினான். வணங்கிய விபீடணனைக் கருணையோடு பார்த்து மலர்க்கையால் இருக்கை தந்தான் இராமன்.
***
பிறவி அழிந்தது - இனிப் பிறப்பெடுக்கும் தொல்லை ஒழிந்தது; என்னும் அகத்து இயல் - என்கின்ற அக எண்ணம்; முகத்துக் காட்ட வழிந்த கண்ணீரான் - ஆனந்தக் கண்ணீர் சொரியும் விபீடணன்; மண்ணில் மார்புஉற வணங்கினான் - தன் மார்பு தரையிலே கிடக்க வணங்கினான்; (இராமன்) பொழிந்தது ஓர் கருணை தன்னால் - சுரந்து வழியும் கருணையினால்; புல்லினன் என்று தோன்ற - தழுவினன் என்று சொல்லும்படி; எழுந்து - எழுத்திருந்து; இனிது இருத்தி என்னா - இனிதே அமர்வாயாக என்று கூறி; மலர்க் கையால் - தாமரை மலர் ஒத்த தனது திருக்கரங்களால் இருக்கை தந்தான்.
***
அத்துடனன்றி, ஏதுமின்றி வந்த வீடணனுக்கு இன்னும் ஒரு பெரிய பதவியையும் அளித்தான் கருணாமூர்த்தி.
அது யாது?
***
ஆழியான் அவனை நோக்கி,
அருள் சுரந்து, உவகை கூர
“ஏழினொடு ஏழாய் நின்ற உலகும்
என்பெயரும் எந்நாள்
வாழும் நாள் அன்று காறும்,
வளை எயிற்று அரக்கர்வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம்
நின்னதே தந்தேன்” என்றான்.
“ஈரேழு பதினான்கு உலகங்களும் என் பெயரும் உள்ள அளவும் இந்த இலங்கை ராஜ்யம் உனதே; உனக்கே அளித்தேன்.”
இவ்வாறு அருள் சுரக்க, மகிழ்ச்சி ததும்பக் கூறினான் இராமன்.
***
ஆழியான் - சக்கராயுதம் ஏந்திய திருமாலின் அவதாரமாகிய இராமன்; அவனை நோக்கி - விபீடணனை பார்த்து; அருள் சுரந்து - அருள் பொழிந்து; உவகை கூர - மகிழ்ச்சி பொங்க; ஏழினொடு ஏழாய் நின்ற உலகும் - இந்தப் பதினான்கு உலகங்களும்; என் பெயரும் - இராமன் என்னும் என் பெயரும்; எந்நாள் வாழும் நாள் - என்றுவரை நிலை நிற்குமோ; அன்றுகாறும் - அன்று வரை; வாள் எயிறு அரக்கர் - வாள்போல் கூரிய பற்கள் கொண்ட அரக்கர்; வைகும் - வசிக்கும்; ஆழ்கடல் - ஆழ்ந்த கடல் நடுவே உள்ள; இலங்கைச் செல்வம் - இலங்கை அரசும் செல்வமும்; நின்னதே - உனதே; தந்தேன்.
“மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசு
என்ற மின்னலங்காரன்”
—பெரியாழ்வார்.
விபீடணனுக்கு முடி சூட்டுமாறு இராமபிரான் லட்சுமணனைக் கட்டளையிட்டான். ஆனால் விபீடணன் ஒரு வரம் வேண்டினான். அது என்ன? இரகுவீரனின் தம்பி பரதனுக்குச் சூட்டிய மகுடத்தை தனக்கும் சூட்ட வேண்டும் என்று வேண்டினான்.
பரதனுக்குச் சூட்டிய மகுடம் இராமனின் பாதுகைகள். அதையே தனக்கும் வைக்கவேண்டுமென கேட்ட விபீடணனின் கருத்து யாது?
பிறப்பு இறப்பு ஆகிய இரட்டைகளிலிருந்து தனக்கு விடுதலை வேண்டுமென இராமனின் பாதங்களைப் பற்றினான் என்பது உட்கருத்து.
இதை அறிந்த இராமன், விபீடணனை நோக்கிக் கூறினான்:
***
“குகனொடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலரும் கானம் தந்து,
புதல்வரால் பொலிந்தான் நுந்தை.”
“ஆதியில் தசரத சக்கரவர்த்திக்கு நாங்கள் நால்வரே பிள்ளைகளாய் பிறந்தோம்; குகனொடு ஐவர் ஆனோம்; சுக்கிரீவனொடு அறுவர் ஆனோம்; உன்னுடன் எழுவர் ஆனோம். எனக்குக் காடு கொடுத்ததால் புதல்வர் எழுவரைப் பெற்று விளங்கினான் உன் தந்தை” என்றான்.
***
எம்முழை அன்பின் வந்த - எம்மிடத்திலே அன்போடு வந்த; அகன் அமர் காதல் ஐய - உள்ளன்பு கொண்ட ஐய; முன்பு - முதலில்; குகனொடும் ஐவர் ஆனேம் - குகன் எங்களோடு வந்து சேர்ந்ததால் நாங்கள் உடன் பிறந்தோர் ஐவர் ஆனோம்; பின் - அப்பால்; குன்று சூழ்வான் - மலையைச் சுற்றிவரும் சூரியன்; மகனொடும் - மகனாகிய சுக்கிரீவனொடும்; அறுவரானோம் - நாம் அறுவர் ஆனோம்; நின்னொடும் எழுவர் ஆனேம் - உன்னோடு எழுவர் ஆனோம்; உந்தை - உனது தந்தையாகிய தசரத சக்கரவர்த்தி; புகல் அரும் கானம் தந்து - புகுவதற்கு அரியகாட்டை எனக்கு அளித்து; புதல்வரால் பொலிந்தான். புதல்வரால் மேன்மையுற்று விளங்கினான்.
விபீடணன் அடைக்கலத்தின் பின் அன்னையைப் பிரிந்த அண்ணல் பிரிவாற்றாமையால் வாடுகிறான். சுக்ரீவன் அவனைத் தேற்றி மேற்கொண்டு செய்யவேண்டியதை விபீடணனுடனும் கலந்து ஆலோசிப்பதே நல்லது!” எனக் கூறுகிறான். இராமபிரான் சிறிது நெளிந்து விபீடணனை வரவழைத்து விவரங்களைக் கேட்டறிகிறான்.
கடல் கடந்து சேனையுடன் எப்படி செல்வதென்று தீவிரமாகக் கலந்தாலோசிக்கிறான். விபீடணன் இராமனுக்கு இலங்கையின் வலிய அரணைப் பற்றியும், இராவணனது வலிமைப் பற்றியும் அவனைச் சார்ந்தோர் போராற்றல் பற்றியும் விரிவாகக் கூறுகிறான். அரக்கர் கோனின் சேனைப்பற்றிக் கூறினான்; அநுமன் இலங்காபுரியில் புரிந்த வீர சாகசங்களைப்பற்றி மிகவும் புகழ்ந்து உரைக்கிறான். இராமனும் மகிழ்ந்து அநுமனுக்கு வரமும் அளிக்கிறான்.
பிறகு இராமன் விபிடணனை, “கடலைக் கடக்கும் உபாயம் என்ன?” என்று கேட்கிறான்.
அதற்கு விபீடணன், ‘வருணன் கடலின் கடவுள்; எனவே அவனைச் சரணடைந்து அவன் அருளைப் பெற்றால், கடலைக் கடக்க முடியும்’ என்று கூறுகிறான். இராமன் வருணனை வேண்டி ஏழு நாட்கள் வருண மந்திரத்தை தர்பைமீது அமர்ந்து செபிக்கிறான். எனினும் வருணன் வரவேயில்லை. இராமன் சினந்து, தன் வில்லைக் கொண்டு பற்பல அம்புகளைத் தொடுத்தான். என்றாலும், வருணன் வராமையால், பிரமாத்திரத்தைப் பூட்ட, வருணன் பயந்து உடன் வந்தான். காணிக்கைகளை செலுத்தி அவன் இராமனடியில் வீழுந்தான்; “அபயம், அபயம்!” என வேண்டினான்.
***
‘ஆழி நீ; அனலும் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று
உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை
மறப்பேனோ? வயங்கு செந்தீச்
குழுற உலைந்து போனேன்;
காத்தருள்—சுருதி மூர்த்தி!’
கடலுக்குத் தலைவனான வருணன் செருக்குக் குலைந்தான். இராமனை நோக்கி, “வேதங்களின் வடிவானவனே! இந்தக் கடலும் நீயே. இந்தக் கடலை எரிக்கின்ற தீயும் நீயே; இவையல்லாத எல்லாப் பொருள்களும் நீயே; உலகத்தை அழிக்கின்ற ஊழியும் நீயே; உலகும் நீயே; உலகின் உயிர்களும் நீயே. அத்தகைய பேராற்றல் உடைய இறைவனாகிய உன்னை, உன் அடியவனாகிய நான் மறப்பேனா? செந்தீ என்னைச் சூழ்ந்து கொண்டமையால் அழித்து போனேன். என்னை அழிவினின்று காப்பாயாக!” என்று மிகவும் தாழ்மையுடன் வேண்டினான்!
***
(வருணன் இராமபிரானை நோக்கி), “சுருதி மூர்த்தி - வேதங்களால் மேலான பொருளாகப் புகழப்படுகின்ற சுவாமி! ஆழி நீ, அனலும் நீயே - கடலும் நீ, தீயும் நீயே; ஊழி நீ - உலகினை அழிக்கும் ஊழிக்காலமும் உன்னிடம் நின்று வெளிப்படுவதே; உலகும் நீயே - உலக வடிவானவனும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே - அவ்வுலகங்களினிடத்துத் தங்கும் உயிர்குயிராய் இருப்பவனும் நீயே; வாழியாய் – என்றும் அழியாது வாழ்ந்திருப்பவனே! நின்னை அடியேன் மறப்பேனா? – நின்னை அடியேனாகிய நான் மறப்பேனா? வயங்கு செந்தீ சூழுற உலைந்து போனேன். ஒளியுடன் விளங்குகின்ற சிறந்த நெருப்பானது என்னைச் சூழ்ந்து; பொருந்த - மனம் வருந்தலானேன்; காத்தருள் - புரந்தருள்வாயாக.
***
இராமனைப் பலவாறு துதித்தான் வருணன். இராமபிரானும் சீற்றந் தணிந்தான். வருணனுக்கு அபயம் தந்தான். வருணன் தான் கட்டளைக்குப் பணியாத காரணத்தைக் கூறினான்.
“எடுத்த கணை சும்மா விடாது. எனவே இந்த பிரமாத்திரத்திற்கு ஒரு இலக்கு காட்டு” என்றான் கோசலை மகன். வருணனும் இலக்கு ஒன்றைக் காட்டினான். பிரம்மாத்திரத்தை அங்கு விடும்படி கடல் கடவுள் வேண்டினான். இராமனும் அங்ஙனமே செய்தான். இராமன் வழி வேண்டினான்.
வருணன் சேது கட்டச் சொன்னான். எங்கே?
***
‘கல்லென வலித்து நிற்பின்,
கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்;
இட்டது ஒன்று ஒழுகா வண்ணம்
எல்லை இல் காலம் எல்லாம்
ஏந்துவென்; இனிதின்! எந்தாய்!
செல்லுதி, “சேது” என்று ஒன்று
இயற்றி, என் சிரத்தின் மேலாய.
“எந்தையே! இக்கடலின் வற்றாத நீர், இறுகி கல்லாகிப் போனால் என்னிடத்து வாழ்கின்ற அளவிலா உயிர்கள்யாவும் விரைவில் மாண்டு ஒழியும். ஆதலால், என்மீது இட்ட கல் ஒன்றுகூட அழிந்து விடாதபடி, எக்காலமும் நிலைத்திருக்க அவற்றைத் தாங்கி நிற்பேன்; என் தலைமேல் ‘சேது’ என்ற ஓர் அணையைக் கட்டி அதன்மேல் எளிதாகச் செல்வாயாக” என்று கூறினான் வருணன்.
***
எந்தாய் – என் தந்தை போன்றவனே ‘கல் என வலித்து நிற்பின்–(நான் வற்றாமல்) கல்லை யொப்ப இறுகி நிற்பேனாகில்; கணக்கு இலா உயிரிகள் எல்லாம் – (என்னிடம் வாழும்) எண்ணிறந்த உயிர்கள் எல்லாம்; ஒல்லையின் உலந்து வீயும் – விரைவினில் கெட்டழியும்; இட்டது ஒன்று ஒழுகா வண்ணம் – வைத்தது நகராதபடி; எல்லையில் காலம் எல்லாம் இனிதின் ஏந்துவன் - எண்ணிறந்த காலம் எல்லாம் இனிது தாங்கி நிற்பன்; சேது என்று ஒன்று என் சிரத்தின் மேலாய், இயற்றி - சேது என்ற ஒரு அணையை என் தலைமீது அமைத்து, செல்லுதி - கடந்து செல்வாயாக; என்று மொழிந்தான் வருணன்.
***
வருணதேவன் தன்மீது அணைக் கட்டினால் அதைத் தாங்குவதாக உறுதி கூறினான்.
வருணன் சொல்லியபடி, நளனும் வானரரும் அணைக் கட்டத் தொடங்கினர்.
சேது அணையும் உருப்பெற்றது.
***
பப்பு நீர் ஆய வீரர்,
பரு வரை கடலில் பாய்ச்சத்,
துப்பு நீர் ஆய தூய
சுடர்களும் கறுக்க வந்திட்டு
உப்பு நீர் அகத்துத் தோய்ந்த
ஒளி நிறம் விளங்க அப்பால்
அப்பு நீர் ஆடுவான் போல்
அருக்கனும் அந்தம் சேர்ந்தான்.
பரவிய தன்மையினையுடைய வானர வீரர், அணை கட்டுவதற்காக பெரிய மலைகளைக் கடலிலே விசினர். இதனால் பவளமென சிவந்திருந்த சூரிய கிரணங்கள் கடுமையாகத் தோன்றும்படி, கடலின் உப்பு நீர் தோய்ந்து, அவன் உடல் ஒளி விளங்கியது. அப்பாலுள்ள தண்ணிரிலே முழுகுபவனைப் போலச் சூரியனும் அத்தகிரியை அடைந்தான்.
***
பப்பு நீர் ஆய வீரர் - பரவும் தன்மை வாய்ந்த வானர வீரர்; பரு வரை கடலில் பாய்ச்ச - பெரிய மலைகளைக் கடலிடை இட்டதனாலே; துப்பு நீர் ஆய தூய சுடர்களும் - பவழம் போன்று செந்நிறம் பெற்ற தூய்மையான தன் கிரணங்களும்; கறுக்க வந்திட்டு - கறுத்திடுமாறு (அக்கடலினின்று தெறித்து வந்து; உப்பு நீர் அகத்துள் தோய்ந்த - உப்பு நீர் தன்னிடம் படிந்ததனால் (மங்குதல் அடைந்த); ஒளி நிறம் - ஒளியுடன் கூடிய நிறம்; விளங்க - விளங்கும்படி; அப்பால் - அதன் பிறகு; அப்பு நீர் ஆடுவான்போல் அருக்கனும் அந்தம் சேர்ந்தான் - அப்பு என்று சொல்லப்படும் தூய நீரில் மூழ்குபவன் போன்று அத்தமன கிரியை அடைந்தான்.
***
சேதுவைக் கட்டிமுடித்தான் நளன், வானரர் உதவியுடன். நளனின் சேவையைப் போற்றி இராமன் தனக்கு வருணன் அளித்த காணிக்கையைப் பரிசாக அளித்தான். உடன் சேதுவை சேனையுடனே கடந்தனர். சுவேல மலையில் இறங்கி, நளனையும் நீலனையும் தமக்குப் பாசறைகளை அமைக்குமாறு கூறினான். இராவணனின் ஒற்றர் இருவர் வானர உருக்கொண்டு வானர சேனையை வேவு கண்டனர். அவர்களை உடன் கண்டுக்கொண்டான் விபீடணன். இராமனிடம் அவர்களை இழுத்துச் சென்றான். விவரத்தைச்ம் சொன்னான். அண்ணல் அவர்கட்கு அபயம் அளித்தான். இலங்கேசனுக்குச் சில செய்திகளைச் சொல்லி அனுப்பினான்.
இராவணன் மந்திராலோசனை நடத்திக் கொண்டிருந்தான்; அறிவுரை கூறிய மந்திரி மாலியனைக் கடிந்தான். பிரகதத்தன் பேசுகையில் ஒற்றர்கள் அங்கு வந்தனர். இராமன் கூறிய செய்திகளைக் கூறினர். இராவணனை வாழ்த்தினர்.
இராமன் சுவேல மலை மீதேறினான் - இலங்கையைக் கண்டான். அதே சமயம்,
மந்திராலோசனை சபையில், சேனைத்தலைவன், “இப்போது செய்யவேண்டியது போரே. வலிய அவர்களே இங்கு வந்துவிட்டதால், நன்மையே. ஆயிரம் வெள்ளம் சேனை நமக்குள்ளது. எனவே நமக்கு வலிமையைப் பற்றி கவலையில்லை. நீ எனக்கு விடை கொடு. நான் பகை வென்று வருகிறேன்!” என்றான் இராவணனிடம்.
ஆனால் மாலியனோ இராவணனுக்கு இராம இலட்சுமணர் தெய்வீகத் தன்மையைப் பற்றி எடுத்துரைத்தான். அநுமன் நம் நாட்டில் புகுந்து காவல் தேவதை இலங்கா தேவியை வென்ற செய்தியையும் கூறினான். “நாட்டின் நடப்புக்களோ நிம்மதியைத் தருவதாக இல்லை. நம் அரக்கர் குலத்தை முன்னர் திருமால் ஒடுக்கியதை அறிவோம் அங்கனம் இருக்க, இப்போது நிகழும் நிகழ்ச்சிகள் அச்சத்தைக் கொடுப்பதாக உள்ளன. எனவே, அழிவைத் தடுக்க, சீதையை இராமனிடம் கொடுத்தலே சரி” என்று வற்புறுத்திக் கூறினான்.
ஆனால் இராவணனோ அவன் அறிவுரைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. மாறாக, அவனை எள்ளி நகையாடினான். தன்னைப் பற்றி பெருமை அடித்துக்கொண்டான்.
இராமபிரானும் அவன் தம்பியும் சுவேல மலையின் உச்சியில் ஏறி இலங்கைக் கரையைப் பார்த்து அதிசயித்த போது, இராவணன், இலங்கையின் மிக்க உயரமான கோபுரத்தை அடைந்தான். ஏன்? வானரப் படையைக் கண்டு, சீர்தூக்கிப் பார்க்க.
இராமனைக் கண்டான், மருண்டான்.
இலங்கையின் வடதிசையின் இருந்த வாயிலின் கோபுரத்தின் மீது ஏறி நின்றான் இராவணன். அவனுடன் அவனுடைய படைத்தலைவர்களும் இருந்தனர்.
இவர்களைக் கண்ணுற்ற இராமன் விபீடணனை, இவர்கள் ஒவ்வொருவரும் யாரென்று கூறும்படி கட்டளையிட்டான். விபீடணன் அவர்களைச் சுட்டிக் காட்டிக் கூற ஆரம்பிக்கு முன்னரே பாய்ந்தான் சுக்ரீவன் சுவேல மலையிலிருந்து. யார் மீது? இராவணன் மீது. இருவருக்கும் நீண்ட நேரம் போர் நடந்தது. வெற்றி தோல்வியின்றி வெகு நேரம் மற்போர் நடந்தது. சுக்ரீவனை நீண்ட நேரம் காணாததால், இராகவன் கவலையுற்றான்; வருந்தினான்; அன்பனைக் காணாது துடித்தான்.
சுக்ரீவனும் பின்னர் வந்தான். இராமனின் திருவடிகளில் பற்பல உயர் ரக மணிகளை சமர்ப்பித்தான். தொழுதான். இந்த நாயக மணிகள் எங்கிருந்து கொண்டு வந்தான் வானர கோன்? இராவணனுடைய பத்து தலைகளிலிருந்த பத்து மகுடங்களில் இருந்து. எப்படி? மல்யுத்தம் செய்தான் அல்லவா? அப்போது இராவணனது மகுடங்களைக் கீழேத் தள்ளி, இந்த அரிய மணிகளைப் பறித்துவந்தான்.
இராமன் முதலில் சுக்ரீவனைக் கடிந்தான். விபீடணனோ, இராமன் கடிந்தவுடனேயே சுக்ரீவனின் வீரதீரச் செயலை வெகுவாகப் பாராட்டினான். இராமன் மனம் மாறி, சுக்ரீவனை பாராட்டியபோது, சூரியன் அஸ்தமித்தான். இதை கவி எவ்வாறு சித்தரிக்கிறார்?
***
தன் தனிப் புதல்வன் வென்றித்
தசமுகன் முடியில் தந்த
மின் தளிர்த்து அனைய பல் மா
மனியினை வெளியில் கண்டான்
“ஒன்று ஒழித்து ஒன்று ஆம்” என்று.
அவ் வரக்கனுக்கு ஒளிப்பான் போல
வன் தனிக் குன்றுக்கு அப்பால்
இரவியும் மறையப் போனான்.
தன் புதல்வனான சுக்ரீவன் இராவணனுக்கு வெட்கம் உண்டாகுமபடி செய்துவிட்டான். இராவணனின் மகுடங்களை குறை செய்திட்டான். சுக்ரீவனோ சூரியனின் புதல்வன். தன் மைந்தன் (சுக்ரீவன்) செய்த செயலுக்கு, தன் மீது பழிவாங்குவானோ என்று அஞ்சியதுபோல் கதிரோன் அத்தகிரிக்கு அப்பால் மறைந்தான்.
***
தன் தனி புதல்வன் - தன்னுடைய ஒப்பற்ற மகன்; வென்றி தசமுகன் முடியில் தைத்த - வெற்றி பொருந்திய இராவணனுடைய மகுடங்களிலே பதிக்கப்பெற்றிருந்த; மின் தளிர்த்தனைய - மின்னல் கொழுந்து விட்டாற் போன்ற; பல் மா மணியினை - பல சிறந்த மணிகளை; வெளியில் கண்டான். வெளிப்படுத்தி நின்றான்; (அதனால்) 'ஒன்று ஒழித்து ஒன்றாம் - ஒன்று அழிய ஒன்று பொருந்தும்; என்று - என்று பயந்து; அவ்வரக்கனுக்கு ஒளிப்பான் போல - அந்த இராவணனுக்குப் பயந்து ஒளிபவன் போன்று; வல் தனி குன்றுக்கு அப்பால் - வலிய தனிப்பட்ட மலைக்கு அப்புறத்தில், இரவியும் மறைய போனான் - சூரியனும் மறையும்படி சென்றான்.
***
எழுபது வெள்ளம் வானரப் படையோடு இலங்கையை முற்றுகையிட்டான் இராமன். இராவணனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு வடக்கு வாயிலில் காத்திருந்தான். இராவணன் வரவேயில்லை. “ஒருவேளை இராவணன் மனம் மாறி, சீதையை இப்போதாவது கொடுக்க நினைத்தால், கொடுத்து விடட்டும். இல்லா விட்டால் இருக்கவே இருக்கிறது, போர்!” எனக்கருதி, அமைதியாக சிந்திக்கலானான்.
இராவணனின் மனம் திருந்தியிருப்பின், உடன் செயல்படுவதற்கான வழிமுறைகளைச் சிந்தித்தான். அவைகளிலொன்றை விபீடணனிடமும் கூறினான். அது என்ன? “இப்போதவாது சீதையைக் கொடுப்பாயா?” என்று இராவணனை கேட்டு தூது அனுப்புவோம். இப்போதும் மறுத்தால், போருக்குச் செல்வோம் என்றான்"
இக்கருத்தை விபீடணனும் சுக்ரீவனும் ஆதரித்தனர். ஆனால் இளையவனோ, “எப்போதும் எல்லோரிடமும் இரக்கம் காட்டுவது தகுதியன்று; நாம் இவ்வளவு தூரம் வந்தபிறகு இனி சமாதானத்தைப்பற்றி கருதுவது சரியல்ல. அம்பைச் செலுத்திப் பகைவனை வெல்வதைத் தவிர, ஆலோசிக்க வேண்டுவது ஒன்றுமில்லை!” என்றான். தன் கூற்றை வலியுறுத்தும்படியாக இராவணன் செய்த முறைக் கேடுகளை எல்லாம் கூறினான். இத்தகையவனுடன் வலிய சமாதானம் பேசலாமோ? அதுவும் போகட்டும். ஒரு வேளை இராவணன் நம் கருத்தினை ஏற்றுவிட்டால், விபீடணனுக்கு இலங்கை அரசை கொடுப்பதாக அளித்த வாக்கு என்னாவது? தண்டகாரண்யத்தில் அரக்கரை கொல்வதாகச் சொல்லி இருடியர்க்கு அபயம் கொடுத்தோமே அது என்னாவது? எனவே தூதுக்கு இப்போது இடமேயில்லை!” என்றான் தீர்மானமாக.
தம்பி சொன்னதைக் கேட்டு புன்முறுவல் பூத்தான் இராமன். போர் தொடுப்பதில் எவ்வித அவசரமும் கூடாது என திட்டவட்டமாக காட்டியுள்ள அரச நீதியைச் சுட்டிக் காட்டினான்.
“பொறுமையை கடைபிடிப்போம்.நம் சமாதான முயற்சி எதுவும் பலனளிக்கா விட்டால் கடைசி பட்சமாகப் போருக்கு எழுவோம்.”
பின்னர் யாரை தூது அனுப்புவதென்றும் கூறினான் இராகவன். “முன்னம் ஒருமுறை சீதையைத் தேடுவதற்காக அநுமனை அனுப்பினோம். அவனையே மீண்டும் அனுப்பினால், நம் பக்கம் வேறு வீரரில்லையோ என்று தவறாக பகைவர் எடை போடக்கூடும். எனவே அநுமனைப் போல் மிகப் பெரிய வீரர் பலர் நம்மிடம் உண்டு என்று பகைவர் அறியும்படி இம்முறை அங்கதனை தூது அனுப்புவோம். தீமைகள் சூழ்ந்தாலும் வெற்றியுடன் திரும்பும் ஆற்றலுடையவன் அவன்!” என்று கூறினான் இரகுவீரன். விபீடணனும் சுக்ரீவனும் இதனை ஏற்றனர்.
***
நெடுந்தகை விடுத்த தூதன்
இனையன நிரம்ப எண்ணிக்
கடுங்கனல் விடமும் கூற்றும்
கலந்து கால் கரமும் காட்டி
விடும் சுடர் மகுடம் மின்ன,
விரிகடல் இருந்தது அன்னக்
கொடுந்தொழில் மடங்கல் அன்னான்
எதிர் சென்று குறுகி நின்றான்.
அடுத்தபடி என்ன? "தூதுவன் ஒருவன் தன்னை விரைவில் தூண்டி மாதினை விடுதியோ என்று கேட்போம். மறுக்குமாகில் போர் தொடுப்போம்" என்று கூறினான் இராமன். அவ்வாறே அங்கதன் தூது சென்றனன். ஊழித்தீயும், ஆலகால விஷமும், இயமனும் ஒருங்குசேர்ந்து கால்களாகவும் கைகளாகவும் உருப்பெற்று, பெருங்கடல்போல் வீற்றிருந்த இராவணன் முன் சென்று நின்றான்.
***
நெடுந்தகை - உயர்குணத் தோன்றலாகிய இராமன்; விடுத்த - அனுப்பிய, தூதன் - தூதனாகிய அங்கதன்; இணையன - இவ்வாறு; நிரம்ப எண்ணி - (இராவணனைப் பற்றி)ப் பலவாறு நினைத்துக்கொண்டு; கடும் கனல் - ஊழித் தீயும்;விடமும் -நஞ்சும்;கூற்றும்-இயமனும்; கலந்து - ஆகிய யாவும் ஒன்றாகி; கால் - கால்களாகவும்; கரமும் - கைகளாகவும்; காட்டி-தோன்றப்பெற்று; விரிகடல் இருந்தது என்ன - பரந்த கடல் இருந்ததுபோல; சுடர்விடு மகுடம் மின்ன - ஒளிவீசும் மகுடமானது தன் முடிமீது விளங்க; கொடுந் தொழில் மடங்கல் அன்னான் - பாய்ந்து கொல்லும் கொடிய தொழில் உடைய ஆண் சிங்கம் போன்ற இராவணன்; எதிர் சென்று - எதிரே போய்;குறுகி -நெருங்கி;நின்றான்.
***
நின்றவன் தன்னை, அன்னான்
நெருப்பு எழ நிமிரப் பார்த்து, ‘இங்கு
இன்று, இவண் வந்து எய்திய நீ யார்?
எய்திய கருமம் என்னை?
கொன்று இவர் தின்னா முன்னம்
கூறுதி, தெரிய’ என்றான்
வன்திறல் வாலி சேயும்,
வாள் எயிறு இலங்க நக்கான்,
அவ்வாறு நின்ற அங்கதனைஅவ்விராவணன் கண்களில் தீப்பொறி பறக்க நிமிர்ந்து பார்த்து,“நீ யார்? என்ன காரியம் பற்றி இங்கு வந்தாய்? இவர்கள் உன்னைக் கொன்று தின்பதற்கு முன் கூறு” என்றான்.
உடனே அங்கதன் சிரித்தான். சிரித்துவிட்டுப் பின் வருமாறு கூறினான்:
***
நின்றவன் தன்னை - அவ்வாறு வந்து நின்ற அந்த அங்கதனை; அன்னான் - அந்த இராவணன்; நெருப்பு எழ நிமிரப் பார்த்து - கண்களிலே தீப்பொறி தோன்ற நிமிர்ந்து பார்த்து; இன்று இவண் வந்து எய்திய நீ யார் - இன்று இங்கே வந்து அடைந்துள்ள நீ யார்?; எய்திய கருமம் ஏது - வந்த காரியம் என்ன?; இவர் கொன்று தின்னா முன்னம் - எனது பணியாளர் உன்னைக் கொன்று தின்பதன் முன்; கூறுதி தெரிய - நன்கு அறியுமாறு சொல்வாய்; என்றான் வன்திறல் - மிக்க வலிமையுடைய; வாலி சேயும் - வாலியின் மகனும்; வாள் எயிறு - ஒளிமிக்க பற்கள்; இலங்க - வெளியே ஒளிவீச; நக்கான் - சிரித்தான்.
***
(அங்கதன் தான் யார் என்பதைக் கூறினான்.)
★
‘பூத நாயகன்; நீர் சூழந்த
புவிக்கு நாயகன்,இப்பூமேல்
சீதை நாயகன்; வேறு உள்ள
தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற
விதிக்கு நாயகன், தான்விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம்
சொல்லிய வந்தேன்’ என்றான்.
***
பூத நாயகன் - நிலம், நீர், தீ, காற்று, வெளி என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பூதங்களுக்கும் தலைவன்; நீர் சூழ்ந்த - கடலால் சூழப்பட்ட; புவிக்கு - பூமிக்கு; நாயகன்-தலைவன்;இப்பூமேல்- இப்புவியின் புதல்வியாகப் பிறந்துள்ள; சீதை நாயகன் - சீதையின் கணவன்;வேறுள்ள தெய்வ நாயகன் - வேறுள்ள தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன்; நீ செப்பும் - நீ ஓதுகின்ற; வேத நாயகன் - வேதத்தின் பொருளாய் விளங்கும் தலைவன்; மேல் நின்ற - எதற்கும் மேலாக நிற்கும்;விதிக்கு நாயகன் - ஊழ்வினைக்குத் தலைவன்; (ஆகிய இராமன்) தான் விட்ட - உன் பால் அனுப்பிய; தூதன் யான் பணித்த மாற்றம் - எனக்குக் கட்டளையிட்டபடி; சொல்லிய வந்தேன் என்றான் - சொல்ல வந்தேன் என்றான்.
***
(இதைக் கேட்ட இராவணன் இராமபிரானைப் பற்றி என்ன கூறினான்?)
***
அரன் கொலாம்? அரி கொலாம்? மற்று
அயன் கொலாம்? என்பார் அன்றிக்
குரங்கெலாம் கூட்டி, வேலைக்
குட்டத்தைச் சேதுக்கட்டி
“இரங்குவானாகில், இன்னம் அறிதி”
என்று உன்னை ஏவும்
நரன் கொலாம் உலக நாதன்’ என்று
கொண்டரக்கன் நக்கான்.
'சிவன் என்று சொல்வார்கள்; திருமால் என்று சொல் வார்கள்; பிரமன் என்று சொல்வார்கள். இப்படி உயர்வாக வியந்த சொல்லப்பட்ட இவர்களன்றி கேவலம் குரங்குகளை எல்லாம் திரட்டிக் கொண்டு இந்தச் சிறு குட்டையாகிய கடலுக்கு அணைகட்டி வந்து விட்டதனாலேயே தன்னைப் பெரியவனாக எண்ணி, என்பால் தூது அனுப்பும் மனிதனோ உலகநாதன், என்று கூறி நகைத்தான் இராவணன்.
***
அரன் கொல் ஆம் - சிவபெருமானோ; அரிகொலாம் - திருமாலோ; அன்றி - அல்லது; அயன் கொலாம் - பிரமன் தானோ; என்பார் அன்றி -இவர்களேயன்றி; குரங்கு எலாம் கூட்டி - குரங்குகளை எல்லாம் ஒரு படையாகத் திரட்டிக் கொண்டு; வேலைக் குட்டத்தைச் சேது கட்டி - சிறிய குட்டை போன்ற இச்சிறு கடலை அணை சேர்த்து (வந்து விட்டதானாலே தன்னைப் பெரியவனாக எண்ணிக்கொண்டு; இன்னும் - இப்போதாவது; இரங்குவான் ஆகில் - தான் செய்த காரியங்களுக்கு வருந்துவான் ஆனால் (போர் செய்யாது விடலாம்); அறிந்து வா - என்று உன்னை ஏவும்; நரன் கொலாம் உலக நாதன் - அற்ப மனித உலகிக்கு நாதன்; என்று கொண்டு - என்று சொல்லிக்கொண்டு;நக்கான் - நகைத்தான்.
***
‘கங்கையும் பிறையும் குடும்
கண்ணுதல் கரத்து நேமி
சங்கமும் தரித்த மால், மற்று
இந்நகர் தன்னைச் சாரார்
அங்கவர் தன்மை நிற்க
மனிசனுக்காக அஞ்சாது,
இங்கு வந்து இதனைச் சொன்ன
தூதன் நீ யாவன்?’என்றான்.
“கங்கையையும், பிறைச் சந்திரனையும் முடியிலே சூடியுள்ள நெற்றிக்கண்ணனாகிய சிவனும் சரி, சங்கு சக்கரம் தரித்த திருமாலும் சரி, இந்த இலங்கை மாநகர் வாரார்;பயப்படுவர். அவர்களே அப்படி யிருக்கக் கேவலம் இந்த மனிதனுக்காக அஞ்சாது தூது வந்த நீ யார் சொல்!” என்று கேட்டான் இராவணன்.
***
கங்கையும் - கங்கா நதியையும்; பிறையும் - பிறைச் சந்திரனையும்; சூடும் - தன் முடிமீது அணிந்துள்ள ; கண் நுதல் - நெற்றியிலே கண் உடைய சிவனும்; கரத்து - கைகளிலே; நேமி, சங்கமும் - சக்கரமும், சங்கமும்;தரித்த -ஏந்திய,மால்-திருமாலும்; இந்நகர் தன்னைச் சாரார் - இந்த இலங்காபுரிக்கு வரமாட்டார்; அங்கவர் நிலைமை நிற்க - அவர்களது நிலைமையே அவ்விதம் இருக்க; மனிசனுக்கா - கேவலம் ஒரு மனிதன் பொருட்டு;அஞ்சாது-பயமின்றி; இங்கு வந்து - இந்த இலங்கை மாநகரை அடுத்து; இதனைச் சொன்ன - இவ்வார்த்தைச் சொன்ன; தூதன்-தூதினன்; நீ யாவன் - நீ யார்? என்றான் - என்று கேட்டான் இராவணன்.
***
தூதுவனைப் பார்த்து இராவணன் ‘நீ யார்?’ என்று கேட்கிறான்.
அப்போது அங்கதன் முதலில் தன் சிற்றப்பன் சுக்ரீவனை புகழ்கிறான். தன் தந்தை வாலியின பராக்கிரமத்தையும், இராவணனை அவன் என்ன செய்தான் என்பது பற்றியும் நகைக்கும் வண்ணம் கூறுகிறான்.
இந்திரன் செம்மல் பண்டு ஓர்
இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்களோடும்
வாலிடைத் தூங்கச் சுற்றிச்
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்
தேவர் உண்ண
மந்திரக் கிரியால் வேலைக்
கலக்கினான் மைந்தன் என்றான்.
“முன்பு ஒரு காலத்திலே இராவணன் என்பவனை அவனது அழகிய தோள்களுடன் தன் வாலிலே தொங்கக்கட்டி, மலைகள் தோறும் தாவித்திரிந்தவனும், தேவர்களுக்கு அமுதம் வழங்கும் பொருட்டு மந்திர கிரியால் பாற்கடலைக் கடைந்தவனும், இந்திரன் குமாரனுமாகிய வாலியின் மகன்” என்றான்.
***
இந்திரன் செம்மல் - இந்திரன் மகனும்; பண்டு - முன்பு ஒரு காலத்திலே; ஓர் இராவணன் என்பான் தன்னை - மிகப் புகழ்பெற்று விளங்கிய ஓர் இராவணன் என்பவனை; சுந்தரத் தோள்களோடும் - அவனது இருபது கரங்களோடும்; வாலிடைத் தூங்கச் சுற்றி - தன் வாலிலே சுற்றிக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு; சிந்துரக்கிரிகள் தாவித்திரிந்தனன் - யானைகள் உலவுகின்ற மலைகள்மீது தாவித்திரிந்தவனும்; தேவர் உண்ண - தேவர்கள் அமுதம் உண்ணும் பொருட்டு; வேலைக் கலக்கினான் - மந்தர கிரியால் பாற்கடலைக் கடைந்தவனுமாகிய வாலியின்; மைந்தன் - மகன்; என்றான்.
***
வாலியின் மைந்தன் அங்கதன்தான் இராமனின் தூதன் என்றறிந்த உடனே இலங்காதிபன் மிகவும் நயமாக அங்கதனை தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்கிறான்.
அவன் இராமனின் தூதுவனாக இருப்பது மாபெரும் தவறு என்னும்படியும், அங்கதனின் மனத்தைக் கலைக்கப் பார்க்கிறான். ஏன்? தன் தந்தை வாலியைக் கொன்றவனுக்கு பணி செய்வது பெருங் குற்றமன்றோ?
சுருக்கமாக இராமனிடம் இருந்து அங்கதனைப் பிரிக்கப் பார்க்கிறான் இலங்கை வேந்தன்.
***
‘உந்தை என் துணைவன் அன்றே
ஓங்கு அறஞ் சான்றும் உண்டால்
நிந்தனை இதன்மேல் உண்டோ?
நீ அவன் தூதன் ஆதல்
தந்தனன் நினக்கு யானே
வானரத் தலைமை; தாழா
வந்தனை நன்று செய்தாய்
என்னுடைய மைந்த!’ என்றான்.
“அடடா! உன் தந்தை எனது துணைவன் அல்லவா! இதற்குத் தக்க சாட்சியும் உண்டே! நீ போய் இராமனுக்குத் தூது வரலாமோ? இதைவிடப் பழி வேறுண்டோ? வா! எனது மகனே! நானே உனக்கு வானரத் தலைமை தந்தேன். கால தாமதம் செய்யாமல் வந்தாய்!” என்றான்.
***
உந்தை என் துணைவன் அன்றே - உனது தந்தை எனது நண்பன் அல்லவா! ஓங்கு அறம் சான்றும் உண்டு - இதற்கு அறக்கடவுளாகிய அக்கினி சாட்சியும் உண்டு; (அப்படி எனது நண்பனாய் மகா வீரனாய் இருந்த வாலியின் புதல்வனாகிய) நீ அவன் தூதன் ஆதல்- நீ [உன் தந்தையைக் கொன்ற அவன் தூதன் ஆதலாகிய, நிந்தனை - பழிப்பு; இதன் மேல் உண்டோ - இதற்குமேல் வேறு ஏதாவது உண்டோ? (ஆகையால் தூது வந்ததை விடு) நினக்கு - உனக்கு; வானரத் தலைமை - வானர அரசு; யானே தந்தனன் - நானே கொடுத்துவிட்டேன்; என்னுடைமைந்த . எனது மகனே! தாழாவந்தனை - காலந்தாழ்த்தாது வந்தாய்; நன்று செய்தாய் - நல்ல காரியம் செய்தாய்.
***
தாதையைக் கொன்றான் பின்னே
தலை சுமந்து இருகை நாற்றிப்
பேதையன் என்ன வாழ்ந்தாய்
என்ப தோர் பிழையும் தீர்ந்தாய்
சீதையைப் பெற்றேன் உன்னைச்
சிறுவனுமாகப் பெற்றால்
ஏதெனக்கு அரிது என்றான்
இறுதியின் எல்லை கண்டான்.
"தந்தையைக் கொன்றவன் பின் இருகைகளையும் தலைமேல் கூப்பிக் கொண்டு வாழ்ந்தான் அறிவிலி]. என்கிற பழிச் சொல்லும் அகலப் பெற்றாய். சீதையைப் பெற்றேன்- உன்னைச் சிறுவனுமாகப் பெற்றால் இந்த உலகிலே எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருள் வேறு என்ன இருக்கிறது?’ என்றான் வாழ்நாளின் இறுதிக் காலத்தை எட்டிவிட்ட இராவணன்.
***
இறுதியின் எல்லை கண்டான் - முடிவு காலத்தின் எல்லையினை விரைவிலே அடைந்து கொண்டு இருக்கும் இராவணன் (பின்னும் அங்கதனைப் பார்த்துச் சொன்னான்) தாதையைக் கொன்றான் பின்னே - தந்தையைக் கொன்றவன் பின்னால்; இருகை தலை சுமந்து நாற்றி - தன் இரு கைகளையும் தலைமேல் குவித்துக் கொண்டு; பேதையன் - அறிவிலி; என்ன - என்று; (உலகத்தார் பழிக்கும் வண்ணம், வாழ்ந்தாய் என்பதோர் பிழையும் தீர்ந்தாய்- என்று சொல்லப்படுகிற குற்றமும் நீங்கப் பெற்றாய்; சீதையைப் பெற்றேன் - சீதையைப் பெற்று விட்டேன்; இனி - இனிமேல்;உன்னைச் சிறுவனுமாகப் பெற்றால் - உன்னை எனது மகனாகவும் அடையப் பெறுவனேல்; எனக்கு அரிது ஏது என்றான் - இந்த உலகிலே நான் அடைய இயலாத அரியது எது? என்றான்.
***
‘அந்நரர் இன்று, நாளை,
அழிவதற்கு ஐயம் இல்லை;
உன்னரசு உனக்குத் தந்தேன்;
ஆளுதி ஊழிக்காலம்:
பொன் அரி சுமந்த பீடத்து
இமையவர் போற்றி செய்ய,
மன்னவனாக, யானே
சூட்டுவன்,மகுடம்’ என்றான்.
“அந்த மானிடர் இன்றோ அல்லது நாளைக்கோ அழியப் போகிறார்கள். அதில் சிறிதும் ஐயம் வேண்டாம். உனது அரசை உனக்கே நான் தந்தேன். ஊழிக் காலம்வரை பொன்னால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து, வானவர் உன்னைத் தொழ மன்னவனாக ஆளுதி. யானே நினக்கு மகுடம் சூட்டுவேன்!” என்றான்.
***
அந்நரர் - அந்த மானிடர்; இன்று நாளை - இன்றோ நாளையோ; அழிவதற்கு-இறந்து போவதில்; ஐயம் இல்லை - சந்தேகம் இல்லை; உன் அரசு உனக்குத் தந்தேன் - உனது அரசை உனக்கே தந்துவிட்டேன்; ஊழிக் காலம் - ஊழிக் காலம்வரை; பொன் அரி சுமந்த பீடத்து - பொன்னால் செய்யப்பட்ட சிங்காதனத்தில்; இமையவர் போற்றி செய்ய - வானவர் துதிக்க; மன்னவனாக ஆளுதி - ஆட்சி புரிவாயாக; மகுடம் யானே சூட்டுவன் - நானே உனக்கு மணிமுடி சூட்டுவேன்; என்றான் -
***
அங்கதன் அதனைக் கேளா,
அங்கையோடு அங்கைத் தாக்கித்
துங்கவன் தோளும் மார்பும்
இலங்கையும் துளங்க, நக்கான்;
‘இங்கு நின்றார்கட்கு எல்லாம்
இறுதியே’ என்பது உன்னி,
உங்கள் பால் நின்று எம்பால்
போந்தனன் உம்பி’ என்றான்.
அங்கதன் அதனைக் கேட்டுக் கைகொட்டிச் சிரித்தான். எப்படி? தன்னுடைய உயர்ந்த வலிய தோள்களும் மார்பும், இலங்கையும் குலுங்கும்படி உரக்கச் சிரித்தான். சிரித்துச் சொல்கிறான்:“இங்கு உள்ளவர்களுக்கெல்லாம் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து உனது தம்பி யாகிய விபீடணன், உன்னைவிட்டு நீங்கி எங்களுடன் சேர்ந்துவிட்டான்” என்றான்.
***
அங்கதன் அதனைக் கேளா - அங்கதன் அதனைக் கேட்டு; அங்கையோடு அங்கை தாக்கி கைதட்டி ஆரவாரம் செய்து; துங்க வன் தோளும் . உயர்ந்த வலிய தோள்களும்; மார்பும் . இலங்கையும் . இலங்காபுரியும்; துளங்க. குலுங்க, நக்கான் - சிரித்தான்: இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே - இங்குள்ளோர்க்கெல்லாம் அழிவு காலமே; என்பது உன்னி - என்பதை அறிந்து; உம்பி - உனது தம்பியாகிய விபீடணன்; நுங்கள்பால் நின்று எம்பால் போந்தனன் - உங்களைவிட்டு நீங்கி எங்கள்பால் வந்து விட்டான்; என்றான்
***
வாய் தரத்தக்க சொல்லி
என்னை உன்வசம் செய்வாயேல்
ஆய்தரத்தக்கது அன்றோ
தூது வந்து அரசது ஆள்கை
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு
இனி நிகர் வேறு எண்ணில்
நாய் தரக் கொள்ளும் சீயம்
நல்லரசு என்று நக்கான்.
தூதனாக வந்த அங்கதன் மேலும் சிரித்தான். கைகொட்டி சிரித்துக்கொண்டே கூறினான்:
“ஆகா! எப்படி? நீ, எனக்கு அரசு தருவாய். நானதை ஏற்கவேண்டும். தூதனாகச் சென்ற நான் மாற்றான் வார்த்தைகளுக்கு மயங்கி, (இராமனுக்கு) வேறுபட்டேன் ஆகில், எனக்கு பெரும் பழி வராதோ? அதுவும் போகட்டும். உன்னிடம் அரசு பெறுவது எதைப் போலிருக்கும் தெரியுமா? நாயிடம் இருந்து அரசு பெற்றது போல (இழிவாக) இருக்கும்!” என்றான் ஏளனமாக.
***
வாய்தரத்தக்க சொல்லி - வாயில் வந்தவைகளை எல்லாம் சொல்லி; என்னை உன் வசம் செய்வாயேல் - உன் பக்கம் சேர்த்துக் கொள்வாயானால்; தூது வந்து அரசது ஆள்கை - தூதனாக வந்து அரசாட்சி ஏற்பது; ஆய்தரத் தக்கது அன்றோ - பெரியவர்களால் ஆராயத் தக்கது அல்லவா! நீ தரக் கொள்வேன் யானே - ஆட்சியை நீ கொடுக்க நான் ஏற்பேனா? (மாட்டேன்) இதற்கு நிகர் - இதற்குச் சமம்; வேறு எண்ணில் - வேறு ஒன்று கூறினால் (அது எது?) சீயம் - சிங்கமானது; நல்லரசு - நல்லாட்சியை; நாய்தரக் கொள்ளும் - நாய்தர ஏற்குமோ? என்று நக்கான் - என்று நகைத்தான்.
***
‘கூவி இன்று என்னை, நீ போய்த்
தன்குல முழுதும் கொல்லும்
பாவியை அமருக்கு அஞ்சி அரண்
புக்குப் பதுங்கினானைத்
தேவியை விடுக அன்றேல்
செருக்களத்து எதிர்த்துத்தன்
ஆவியை விடுக என்றான்
அருள் இனம் விடுகிலாதான்.’
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இந்தக் கடைசி நிமிடத்திலும் இராமனிடம் சீதையைக் கொடுத்துத் தன்னுயிரை இராவணன் காப்பாற்றிக் கொள்ளலாம். தன் குலத்தையும் அழிவின்றிக் காக்கலாம். “இதை நீ செய்ய விரும்பாவிடில், போர்தான் முடிவு. அச்சத்தினால் அரணில் பதுங்கியிராமல் உன்னை வெளியே வரச்சொன்னான் அருட்செம்மல் இராமபிரான்” என்று அங்கதன் இராவணனிடம் கூறினான்.
***
அருள் இனம் விடுகிலாதான் - (நீ பெரும் பிழை செய்தும் கூட) இன்னமும் உன்னிடம் இரக்கம் நீங்காத இராமன்; என்னைக் கூவி -என்னை அழைத்து; நீ போய் - நீ சென்று; தன் குல முழுதும் கொல்லும் பாவியை - தன் குலம் முழுவதையும் கொல்கின்ற பாவியாகிய இராவணனை அடைந்து; அமருக்கு அஞ்சி - போருக்குப் பயந்து; அரண் புக்குப் பதுங்கினானை - பாதுகாவலில் பதுங்கியிருக்கும் அவனை நோக்கி; தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்த்துத் தன் ஆவியை விடுக - சீதையைவிடு. இல்லையேல் போர்க்களத்திலே நேர் நின்று போர் செய்து உயிர் விடுக; என்றான்.
***
இதைக் கேட்டு கடுங்கோபங் கொண்டான் இலங்கேசன், அங்கதனை பற்ற நால்வரை கட்டளையிட்டான். நால்வர் அவனைப் பற்றினர். ஆனால் அங்கதன் அவர்கள் தலையை துண்டித்து தண்டித்தான்.
சுற்றிலுமிருந்த வீரரை ஒருமுறை பார்த்தான் இராமதூதன்.
“இராமனின் அம்புகள் வந்து வீழ்வதற்கு முன்னரே வலிமையற்ற நீங்கள் எல்லோரும் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போய்விடுங்கள்!” என்று கூறிக் கொண்டே வானத்தில் எழுந்தான்.
இராமனிடம் வந்தான். அவன் காலடியில் விழுந்து வணங்கினான். பகைவரோடு பொருததால் இரத்தம் படிந்திருந்த அவன் கால்களை அண்ணலும் கண்டான்.
***
உற்றபோது அவன்
உள்ளக் கருத்து எலாம்
கொற்ற வீரன் உணர்த்து
என்று கூறலும்
முற்ற ஓதி என்?
மூர்க்கன் முடித்தலை
அற்ற போது அன்றி
ஆசை அறான் என்றான்.
வெற்றி வீரன் இராமன் அங்கதனை தூதின் விளைவைப் பற்றிக் கேட்டான்.
என்ன சொல்லி என்ன பயன்?
“இராவணனின் பத்து தலைகளும் மகுடங்களும் கீழே விழுந்தாலன்றி, நல்லறிவுக்குச் செவி சாய்க்கமாட்டான். தனக்குக் கேடு விளையுமென்று தெரிந்தும் திருந்தமாட்டான். விடாப் பிடியாகவே உள்ளான்” என்றும் சுருக்கமாகக் கூறினான்.
***
உற்றபோது - திரும்பி வந்தபோது; அவன் உள்ளக் கருத்து எலாம் - அந்த இராவணனது மனத்தில் உள்ள எண்ணங்களை எல்லாம்; உணர்த்து - தெரிவிப்பாய்; என்று கொற்ற வீரன் கூறலும் - என்று வெற்றி வீரனாகிய இராமன் கூறவும்;முற்ற ஓதிஎன்- முழுவதும் சொல்லி என்ன பயன்; மூர்க்கன் - விடாப்பிடி கொண்ட அந்த இராவணன்; முடித் தலை அற்றபோது அன்றி - கிரீடங்கள் பொருந்திய தலை அறுத்துத் தள்ளப்பட்டால் அன்றி; ஆசை அறான் - தன் மனத்துள்ள ஆசை நீங்கப் பெறான்; என்றான்.
***
அங்கதன் கூறியதைக் கேட்டான் இராகவன். இனி போரைத் தவிர்க்க முடியாது. நிகழ்த்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். வானர வீரர்களை அகழியைத் தூர்த்துக் கோட்டை மதிலை வளைக்க உத்திரவிட்டான்.
நான்கு வாயில்களிலும் அரக்கர் சேனை வந்தன. கடுமையாகப் பொருதன. வடக்கு வாயிலின் அரக்கப்படைத் தலைவன் வச்சிரமுஷ்டி. கடும் போருக்குப் பின் சுக்ரீவன் அவனைக் கொல்லவே, மற்றவர் அஞ்சி நகர் நோக்கி ஓடினர்.
கிழக்கு வாயிலிலும் கடும்போர் நிகழ்ந்தது. அரக்கர் சேனை சிதறியோடியது. ஓடும்போது வானர படையைக் குலைத்தது. எனினும் இடும்பன் என்ற கரடித் தலைவன் அரக்கப் படைத் தலைவனைப் பற்றி, உயிரிழக்கச் செய்தான். தலைவன் இறந்ததைக் கண்ட அரக்கன் பிரகஸ்தன் வானரப் படையைக் கோபமாகத் தாக்கினான். ஆனால் இறுதியில் வானரப் படைத் தலைவன் நீலன் அவனைத் தன் வாலால் கட்டினான்; சுழற்றினான்; வீழ்த்தினான்.
தெற்கு வாயிலில் அங்கதன் அரக்கரை ஓட ஓட விரட்டினான்.
மேற்கு வாயிலிலோ, அனுமன் அரக்கர் படைத் தலைவனை வீழ்த்தி, அரக்கர் படைகளைச் சின்னாபின்னம் ஆக்கினான்.
எல்லா திசைகளிலும் அரக்கர் படை தோல்வியைக் கவ்விய விவரம் இலங்கேசனுக்கு எட்டியது. இராவணன் போர்க் கோலம் பூண்டான். இராமனும் அவனைப் போரில் எதிர்க்கொள்ள வந்தான். அனுமனும், லட்சுமணனும் இராவணனுடன் பொருதனர்.போரிலே லட்சுமணன் சளைத்தான். அனுமன் இராவணனுடன் மற்போர் செய்தான்; அச்சமயம் லட்சுமணன் மீண்டும் பங்கு கொள்ள வந்தான். இராவணன் பிரம்மாத்திரத்தை எய்தான். லட்சுமணன் மூர்ச்சை அடைந்தான். அவனைத் தூக்கிச் செல்ல இராவணன் முயன்றபோது, மாருதி குறுக்கிட்டு லட்சுமனனை தூக்கிச் சென்று இராமபிரானிடம் சேர்ப்பித்தான்.
“என் தோளில் ஏறி, இராவணனோடு போர் புரியுங்கள்” என்று வேண்டினான்; வற்புறுத்தினான். இராகவனும் இசைந்தான். கடும்போர் நடந்தது.
பின்? முதல் நாள் போரின் இறுதியில் இராவணன் என்னவானான்?
***
ஒன்று நூற்றினோடு ஆயிரம்
கொடுந்தலை உருட்டிச்
சென்று தீர்வில எனைப்பல
கோடியும் சிந்தி
நின்ற தேரொடு இராவணன்
ஒருவன் நிற்கக்
கொன்று வீழ்த்தினது
இராகவன் சரம் எனும் கூற்றம்.
இராவணனை எதிர்த்து அம்பு மழை பெய்தான் தசரதனின் மகன். அந்த அம்புகள் எல்லா படை வீரர்களையும் வீழ்த்தி விடவே, இராவணன் தன்னந்தனியனாகத் தேருடன் நின்றான்.
***
இராகவன் - இராகவனுடைய; சரம் எனும் கூற்றம் - அம்பு என்ற யமன்; ஒன்று நூற்றினோடு ஆயிரம் - ஒரு நூறாயிரம்; கொடுந்தலை உருட்டி - கொடிய தலைகளை உருட்டி; சென்று தீர்வில - அதனோடு அமையாமல்; எனைப்பல கோடியும் சிந்தி - எத்தனையே பல கோடி வீரர்களையும் தலை சிந்தச் செய்து; நின்ற தேரொடு - நின்ற தேருடன்; இராவணன் ஒருவன் நிற்க - இராவணன் ஒருவன் மட்டும் தனியே நிற்க; கொன்று வீழ்த்தின - மற்றவர் எல்லாரையும் கொன்று வீழ்த்தியது.
***
ஆளையா! உனக்கு அமைந்தன
மாருதம் மறைந்த
பூளையாயின் கண்டனை;
இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன்
நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசலை
நாடுடை வள்ளல்.
இராவணன், படை அழிய, அனைத்தும் இழந்து தனியனாய் நின்றபோது) தான் வலியிழந்த நிலையில் இருப்பதையறிந்து வெட்கினான். கருணையால் அயோத்தி நாட்டுத் தலைவன் ‘இன்று போய் நாளை வா’ என்றது வேதனையைத் தந்தது.
***
ஆள் ஐயா - அரக்கரை ஆளும் ஐயா! உனக்கு அமைந்தன - உனக்குத் துணையாக அமைந்த படைகளும்; தேரும் பிறவும்; மாருதம் மறைந்த பூளையாயின-காற்றினால் வாரி எறியப்பட்ட பூளைப் பூண்டுகள்போல் ஆயின; கண்டனை - கண்டாய் அன்றோ! (ஆதலால்) இன்று போய் நாளை போர்க்கு வா - இன்று திரும்பிப் போய் நாளை உனது படை முதலியவற்றுடனே போருக்கு வா; என - என்று; நல்கினான் - உயிர் அளித்து விடை கொடுத்தான்; நாகு இளங்கமுகின் - மிக இளம் கமுகின் மீது; வாளை - வாளை மீன்; தாவுறு - துள்ளிப்பாய்கிற; கோசலை நாடுடை வள்ளல் - கோசல நாடுடைய வள்ளலாகிய இராமன்.
***
வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும்
சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போக்கி
வெறுங்கையோடு இலங்கை புக்கான்.
முதல் நாள் போரில் எல்லாம் இழந்து, இராமனின் கருணையால் வீடு திரும்பிய இராவணன் தன்னிலை எண்ணி மனங்குன்றினான்.
திக்கஜங்களை எதிர்த்து வெற்றிக் கண்ட தனக்கா இந்த அவல நிலை?
கைலாய மலையை பெயர்த்தெடுத்த தனக்கா இந்த இழிநிலை என மருகினான்.
இசை வல்லுனன் ஆகிய நாரதனே மகிழும்படி சாமவேதம் பாடிய எனக்கா (இலங்காதிபதியான எனக்கா)இந்நிலை?
***
வாரணம் பொருத மார்பும் - திசை யானைகளுடன் (நேர் நின்று) போர் புரிந்த மார்பும்; வரையினை எடுத்த தோளும் - கயிலாய மலையினை அகழ்ந்து எடுத்த புயமும்; ஆரண முனிவர்க்கு ஏற்ப - வேதங்களில் வல்ல முனிவர்களும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு; அருமறை பயின்ற நாவும் - அருமையான சாம கானம் பயின்ற நாவும்; தாரணி மவுலி பத்தும் - மாலை புனைந்து நின்ற பத்து மகுடங்களும்; சங்கரன் கொடுத்த வாளும் - சிவபெருமான் அளித்த சந்திரகாசம் என்ற வாளும்; வீரமும் - தன்னுடைய வீரப்பான்மையும் (என்ற அனைத்தையும்); களத்தே விட்டு - போர்க் களத்திலேயே போட்டு விட்டு; வெறுங்கையே மீண்டு போனான் -வெறுங்கையனாக ஊர் திரும்பிச் சென்றான்.
***
இராமனின் விற்திறனால் தனியனாகிய இராவணன். நகர் நோக்கி மீண்டான். எங்கும் உள்ள அரக்கச் சேனைகளையும் திரட்டிக் கொண்டு வருமாறு தூதர்களுக்குக் கட்டளையிட்டான். மாலியவான் இராவணனின் இருப்பிடம் சென்றடைந்தான். இராவணன் அவனிடம் இராமனால் தனக்கேற்பட்ட சிறுமையைப் பற்றி கூறினான். மாலியவான் இராவணனுக்குச் சில அறிவுரைகளைக் கூறி, ‘சீதையை விடச்’ சொன்னான்.
அங்கு இருந்த மகோதரனோ கண்ணில் தீப்பொறி பறக்க, மாலியவானை நோக்கினான். ‘இப்படி சிறுமையாக சொல்லியது என்னே!’ என்று அவனை அதட்டினான். இராவணனுக்கு மென்மேலும் துர்போதனை செய்தான், இராவணனும் தன் தம்பி கும்பகன்னனை துயில் எழுப்பி அழைத்து வருமாறு ஆணையிட்டான்.
அதன்படி கிங்கரர் உறங்குகின்ற கும்பகன்னனிடம் சென்றனர்.
***
உறங்குகின்ற கும்ப கன்ன
உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்ற தின்று காண்
எழுந்திராய்; எழுந்திராய்;
கறங்கு போல விற்பிடித்த
கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்;
இனிக்கிடந்து உறங்குவாய்.
‘உறங்குகின்ற கும்பகன்னனே! உங்களுடைய பொய்யான செழிப்பான வாழ்வு எல்லாம் (செல்வாக்கு) இன்று இறங்குவதற்கு (சீரழிய) தொடங்கிவிட்டது; இதனைக் காண்பாய்; எழுந்திருப்பாய், எழுந்திருப்பாய்; காற்றாடி போலத் திரிகின்ற வில்லைப் பிடித்த யமதூதரின் கையிலே இனி படுத்துறங்குவாய்!’ எனக் கூறினர்.
(கும்பகன்னன் சீக்கிரமே இறந்து போவான்! என்று அறிவுறுத்தினர்.)
உறங்குகின்ற கும்பகன்ன - தூங்கிக் கொண்டிருக்கின்ற கும்பகர்ணனே! உங்கள் மாயவாழ்வு எல்லாம் - உங்களது பொய்யான வாழ்வு எல்லாம்; இன்று இறங்குகின்றது காண் - இன்று இறங்கத் தொடங்கி விட்டது; காண் - காண்பாய்; எழுந்திராய் - எழுந்திராய்; கறங்கு போல - காற்றாடி போல; விற்பிடித்த - வில் ஏந்திய; கால தூதர் கையிலே-இயம தூதர் கைகளிலே; உறங்குவாய் - உறங்குவாய்; இனிக்கிடந்து உறங்குவாய்.
***
கும்பகன்னன் தன் அண்ணனை வணங்கினான்; அரக்கர்கோன் அவனை உபசரித்தான்; நெற்றியில் வீரப்பட்டமும் கட்டினான். கவசத்தையும் அணிவித்து போர்க் கோலஞ் செய்வித்தான்.கும்பகன்னன் ‘இக்கோலம் எதற்கு’ என்று கேட்டான்,
இலங்கேசனும் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, கும்பகன்னனை போருக்குச் செல்ல சொன்னான். கேட்டான் தம்பி இப்படி ஆகிவிட்டதே என்று வேதனைப்பட்டான்.
***
ஆனதோ வெஞ்சமர்
அலகில் கற்புடைச்
சானகி துயர்இனந்
தவிர்ந்த தில்லையோ
வானமும் வையமும்
வளர்ந்த வான்புகழ்
போனதோ புகுந்ததோ
பொன்றுங் காலமே
விவரமறிந்தான் கும்பகன்னன் ‘கொடிய போர், தோன்றி விட்டதோ? கற்புக்கரசி சானகியின் துயர் இன்னும் நீங்க வில்லையோ? வானத்திலும் வையத்திலும் வளர்ந்த உன் புகழ் போய்விட்டதோ; அரக்கர் குலத்திற்கு அழிவு காலம் வந்துவிட்டதோ?’ என்று வேதனையோடு கூறினான்.
***
வெம்சமர் ஆனதோ - கொடிய போர் மூண்டு விட்டதோ; அலகில் - எல்லையில்லாத கற்புடைச் சானகி-கற்புடைய சீதையின்; துயர் இனந் தவிர்ந்ததில்லையோ - துன்பம் இன்னும் நீங்கிய பாடில்லையோ; வானமும் வையமும் வளர்ந்த - விண்ணிலும் மண்ணிலும் பரவிய;வான்புகழ்-பெரும்புகழ்; போனதோ - போயிற்றோ; பொன்றுங் காலம் புகுந்ததோ - அரக்கர்க்கு அழிவு காலம் வந்து விட்டதோ.
***
புலத்தியன் வழிமுதல்
வந்த பொய்யறு
குலத்தியல்பு அழிந்தது
கொற்றம் முற்றுமோ?
வலத்தியல் அழிவதற்கு
ஏது மையறு
நிலத்தியல் நீரின் இயல்
என்னும் நீரதால்
அத்துடனா?
‘சீதை நிமித்தமாக வானரப்படையுடன் மானுடர் நெருங்கிவிட்டார்கள் என்றால், முன்னம் நந்தி, வேதவதி முதலியோர்களாற் கொடுக்கப்பட்ட சாபத்தைக் கருதி, சீதையை விட்டிடவேண்டியதுதானே! அங்ஙனமிருக்க, அவ்வாறு நீ செய்யாதது, கொடுவிதி உன்னை தூண்டுவதால் அன்றோ?
மறத்தின் வழி நடக்கின்ற உனக்கு வெற்றி கிடைக்குமோ? உனது செயல் வெற்றித் தன்மை அழிவதற்கே ஏதுவாகும் புலஸ்திய முனிவரின் வழியில் வந்த, வஞ்சகமில்லாத குலத்தின் மேன்மை உனது முறையற்ற செய்கையால் அழிந்தது!’ என இடித்துக் கூறினான்.
***
(அதர்ம வழி நடக்கும் உனக்கு) குற்றம் முற்றுமோ - வெற்றி கிட்டுமோ; வலத்தியல் அழிவதற்கு ஏது- வலிமை அழிவதற்கே ஏதுவாக; புலத்தியன் வழி முதல் வந்த - புலஸ்திய முனிவர் வம்சத்தில் வந்த; பொய்யறு - பொய்யில்லாத; குலத்து இயல்பு - நம் குல இயல்பு; அழிந்தது - அழிந்து போயிற்று; மையது நிலத்தின் இயல் - குற்றமற்ற நிலத்தின் தன்மை; நீரின் இயல் - நீரின் தன்மை; என்னும் நீரதால் - என்னும் நியதிப்படி ஆயிற்று.
***
அத்துடனா?
கொடுத்தனை இந்திரற் கரசும்
கொற்றமும்
கெடுத்தனை நின்பெருங் கிளையும்
நின்னையும்
படுத்தனை பலவகை அமரர்
தங்களை
விடித்தனை வேறினி வீடும்
இல்லையால்.
‘இந்திரற்கு அவனுடைய வாழ்வினையும், உன் கிளைஞர்க்கு அழிவினையும் கூட்டியதோடு உன் தீச்செயலால் உனக்கும் அழிவு தேடிக் கொண்டாயே’ என்றான் அண்ணனைப் பார்த்து.
***
(உனது செயலால்) இந்திரற்கு-இந்திரனுக்கு; உலகும் - அவனுடைய உலகமும்; கொற்றமும் - வெற்றியும்; கொடுத்தனை - கொடுத்துவிட்டாய்; நின்னையும் நின் பெரும் கிளையும் கெடுத்தனை - உன்னையும் உன் பெரிய சுற்றத்தையும் கெடுத்தாய்; பலவகை - பலவகைச் செயல்களை படுத்தனை - நீ அழியுமாறு செய்துவிட்டாய்; அமரர் தங்களை விடுத்தனை - தேவர்களை விடுவித்தவன் ஆனாய்; இவ்வேறு - இனியேல் (இந்தத் தீவினைப் பயன்களினின்று) வேறு வீடும் - விட்டு நீங்கும் வழியும்; இல்லையால்.
***
கும்பகன்னன் மேலும் இராவணன் மனத்தை மாற்ற மன்றாடுகிறான்.
“உனக்கு மேன்மை அளித்தது. தருமம்; இப்போது அதற்கு எதிராக நீ செயல்படுகிறாய். நீ அதனைக் கைவிட்டதால் நீ அழிவதோடு அன்றி நம் குலமே அழிய வழி கோலுகிறாய். சீதையை விட்டுவிடாவரையில் அநுமன் போன்றவரை துணைக்கொண்டு, இராமன், நம்மை அழிப்பான். இஃது உறுதி. விபீடணனைப் போல் இராகவனிடம் சரண் அடைந்தால் உய்ய வழியுண்டு. அதை நீ ஏற்க மறுத்தாலும், சீதையை விட்டு சமாதானஞ் செய்துகொள்ள மனமில்லாவிட்டாலும், போரைத் தவிர வேறு வழியே கிடையாது. கூட்டங் கூட்டமாக நம் சேனை போருக்குப் போய் அழிவதைக் கண்டு பின்னால் வருந்தாதே!” என்று நல்லுரை கூறினான்.
இராவணனோ அவனை ‘வீரம் இழந்த கோழை’ என்று குறைக் கூறினான். தானே போருக்குச் செல்வதாகக் கூறியபோது, கும்பகன்னன் தானே செல்வதாகக் கூறி அண்ணனிடம் விடைபெற்றுக்கொண்டான்.
“வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன் விதி
நின்றது பிடர் பிடித்து உந்து நின்றது.”
“நான் மீண்டும் உயிருடன் திரும்புவேன் என்று நினைக்கவில்லை! விதி என்னைப் பிடர் பிடித்துத் தள்ளுகிறது. நான் அனேகமாய் இறந்துவிடுவேன். நான் இறந்துவிட்டால் சானகியைவிட்டு விடலே உனக்கு நன்மை பயக்கும். ஒரு வேளை சீதையை விடாமல் இந்திரசித்தை போருக்கு அனுப்புவாயாகில், இலட்சுமணனின் அம்பு அவன் உயிரைக் குடிக்கும். நீயும் வெற்றி அடையமாட்டாய்! எனவே சீதையை விட்டுவிடு!” என்று மீண்டும் மீண்டும் கூறினான் கும்பகன்னன்,
“இது நாள்வரை நான் ஏதேனும் குற்றம் செய்திருப்பின், அவற்றையெல்லாம் பொருத்தருள்வாய், கொற்றவா! இனி உன் முகத்தில் நான் விழிப்பது அரிது. விடைபெற்றுக் கொண்டேன்” என அவன் விடைபெறும் காட்சி, கல்மனத்தையும் கரைக்காதோ?
போர்க்களத்தில் இராமனிடம் விபீடணன் கும்பகன்னனின் வீர ஆற்றல்களைப்பற்றி விரிவாகக் கூறுகிறான். சுக்ரீவன் கும்பகன்னனை தம்முடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னதைக் கேட்டு, விபீடணன் கும்பகன்னனை அழைத்துவர தன் அண்ணனிடம் செல்கிறான். இராகவனிடம் தஞ்சமடைந்து வாழவேண்டும் என்று விபீடணன் கும்பகன்னனை பணிவுடன் கேட்டுக்கொள்கிறான். ஆனால் கும்பகன்னனோ, “நான் தூங்கியெழுந்திருக்கும்போதெலாம் எனக்கு வேண்டிய மது மாமிசம் ஆகியவற்றை சித்தமாக வைத்துக்கொண்டு ஊட்டி வளர்த்தவன் இராவணன். அவன் என்னால் ஆனவரை பொருவேனென்ற நம்பிக்கையோடு இருக்கிறான்.
இராமனை சேர்தல் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்தது ஆகாது. எனவே போர்க்கோலங் கொண்டேன். என் உயிரைக் கொடாது அங்கு போகேன்!” என்றும் திடமாகக் கூறிவிட்டான். அதே சமயம் விபீடணனை எப்போதும் இராமனிடமே இருந்து, இலங்கை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றும் உறுதியாகக் கூறுகிறான் இளைய அரக்கன்.
இராமன் இதை அறிகிறான்.‘விதி வலிது’ என்கிறான். வானரங்களை படாதபாடு படுத்துகிறான் கும்பகன்னன். அங்கதனுக்கும் கும்பகன்னனுக்கும் பெரும்போர் நடக்கிறது. அங்கதன் மார்பில் சூலத்தை எறிகிறான் கும்பகன்னன். அநுமனுடன் போரிடுகிறான். அநுமனும் சளைக்கவே இலட்சுமணன் கும்பகன்னனுடன் நீண்டநேரம் பொருகிறான். சுக்ரீவனும் பொருகிறான். இளையவன் அரக்கனை பாதாரியாக்கி, அவனுக்குத் துணையாக வந்த சேனையையும் அழிக்கிறான். கும்பகன்னன் சூலத்தை எறிகிறான்; அநுமன் அதை முறித்தெறிகிறான். மூர்ச்சையான சுக்ரீவனை இலங்கைக்குத் தூக்கிக்கொண்டு செல்ல அவன் முயலும்போது, இராமனின் கணை கும்பகன்னனின் நெற்றியில் பாய்கிறது. அவன் மூர்ச்சிக்கிறான் சுக்ரீவன் கும்பகன்னனின் காதையும் மூக்கையும் அறுத்துக்கொண்டு செல்கிறான். இராவணன் தன் தம்பிக்கு மீண்டும் துணை செய்ய சேனை அனுப்புகிறான். அது இராமனின் அம்புக்கிரையாகி அழிகிறது. கும்பகன்னனின் இரு தோள்களையும் தாள்களையும் இராமனின் வில் துணித்துவிட்டாலும் வெறும் உடலுடனே வீரமாக பொரும் கும்பகன்னனின் வீரம்தான் என்னே!
இறுதியில் கும்பகன்னன் இராமனிடம் விபீடணனை பாதுகாக்கவேண்டும் என வேண்டுகிறான்.
தன் ஊனமுற்ற தலையைக் கடலில் தள்ளவேண்டும் என்ற அவன் கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இராகவன்.
பிராட்டியாரை வசப்படுத்த மாயத்தால் ஒருவனை சனகன் உருக்கொள்ளச் செய்து, அன்னையின் மனத்தைக் கலைக்கப்பார்க்கும் இராவணனை சீதையின் கற்பு தகர்த்தெரிகிறது.
இராவணனின் மகன் அதிகாயனை லட்சுமணன் பிரமாத்திரத்தால் மாய்க்கிறான். இதையறிந்த இராவணன் இந்திரசித்தை நாக பாசத்தால் இளையபெருமாளை பிணிக்குமாறு சொல்கிறான். இந்திரசித்தும் ஆயிரம் ஆண் சிங்கங்கள் பூட்டிய தேரில் செல்கிறான். மாருதி, சாம்பவான் சுக்ரீவன், அங்கதன், நீலன் ஆகியோர் லட்சுமணனுடன் போகின்றனர். இந்திரசித்துக்கும் அநுமனுக்கு கடும்போர் ஏற்படுகிறது. ஆனால் அங்கதன் இந்திரசித்தின் அம்புகளால் தளர்கிறான். இலக்குவன் அநுமன் தோளில் ஏறி பொருகிறான். இந்திரசித்தின் தேரை அழிக்கிறான். மாற்று தேர் மாயமாக வருகிறது. இந்திரசித்துக்கு. அதுவும் அழிக்கப்படுகிறது. இந்திரசித்தின் கவசத்தைப் பிளக்கவே,அவன் ஓடி மறைகிறான்.போகும் முன் இலக்குமணனின் தேரை அழிக்கிறான்.
நாகபாசத்தால் பிணிப்புண்ட லட்சுமணனைப் பார்த்து விபீடணன் வருந்துகிறான். இராமன் துன்பம் தாங்காது தவிக்கிறான். அண்ணல் வெகுண்டெழுந்து உலகத்தினையே அழிக்க நினைக்கிறான். ஆனால் நீதி,ஒருவருக்காக உலகை அழிப்பது நியாயமாகாது என்று நினைவூட்டவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறான். தம்பி இறப்பான் ஆகில் தானும் இறக்கப் போவதாக கூறும்போது, விபீடணன், “எவரும் பாசத்தால் உயிர் துறக்கவில்லை என்றும், பாசம் நீங்கினால் உயிர் பெற்றெழுவர்” என்றும் கூறுகிறான்.
அவ்வமயம் கருடன் அங்கு வந்து இராமனை வணங்குகிறான். கருடன் வருகையால் பிணி நீங்கி அனைவரும் உயிர் பெற்று எழுந்தவுடன் வானரர்கள் ஆரவாரம் செய்கின்றனர். போருக்குச் செல்ல அரக்கர் துடிக்க,இராவணன் பாரிசுவ, தூமிராட்சனை முதன்மை படைத்தலைவனாக்குகிறான். அதே நேரம் இந்திரசித்தை தனியே விட்டுவிட்டு அவர்கள் ஓடி வந்து விட்டதை ஒற்றர்கள் கூறுகின்றனர். இராவணன் கடுங்கோபமுற்று அவர்களது மூக்கை அறுக்கும்படி ஆணையிடுகிறான். ஆனால், மாலியன் இதைத் தடுக்கவே இராவணன் மனம் மாறினான். பத்து வெள்ளஞ்சேனையுடனே யக்ஞசத்துரு, சூரியசத்துரு ஆகியவர்களையும் இராவணன் ஏவுகிறான்.
விபீடணன் இராமபிரானுக்குப் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரையும் காட்டி விவரங்கள் கூறுகிறான். வானர சேனைக்கும் அரக்கர் படைக்கும் கடும்போர் நடக்கிறது. இப்போரில் துமிராட்சன் அநுமனுடன் பொருகிறான். மகாபாரிசுவன் அங்கதனை எதிர்க்கிறான்; மாலிநீலனுடனும், யக்ஞசத்துரு இளையவனுடனும், வச்சிரதந்தன் விருசபனுடனும் கடும்போர் செய்கின்றனர்.
வானரச் சேனையர் ஆறு வெள்ளம் அரக்கர்ச் சேனையை மாய்த்தனர். லட்சுமணன் மீதி நாலு வெள்ளம் அரக்கர் சேனையை அழித்தான். இரவு கழிந்து மறுநாள் போர் இன்னும் மும்முரமாக நடந்தது. அநுமன் துமிராட்சனைத் தரையில் தள்ளினான்; உதைத்தான்; அவன் தலைகளைக் கிள்ளினான்; அவைகளைக் கடலில் எறிந்த பின்னரே கோபந்தணிந்தான்.
அரக்கன் மகாபாரிசுவன் அங்கதன் மீது ஏராளமான அம்புகளை எய்தான்; உடன் அங்கதன் என்ன செய்தான்? அரக்கனது வில்லைமுறித்தான்; தேருடனே வானத்தின் மீது எறிந்தான். அரக்கனோ தேரினின்று இறங்கி, சூலத்தை அங்கதன் மீது எறிந்தான். இதைக் கண்ட இராமன் தன் அம்பால் சூலத்தை அறுத்துத் தள்ளினான். அங்கதன் அவ்வரக்கனைப் பிடித்தான்; இரு கூறாகப் பிளந்தான் அவைகளை எறிந்தான்.
மாலியன் வில்லை வாணரன் நீலன் ஒரு மலையினால் இரு துண்டாக்கினான். மாலி வாட்படையுடன் நெருங்கியபோது, குமுதன் அவன் தேரைச் சிதைத்தான். நீலன் எறிந்த மரத்தைப் பிளந்த மாலியின் தோளை வெட்டி வீழ்த்தி, அப்பால் சென்றான் லட்சுமணன். லட்சுமணன் யக்ஞசத்துருவையும் கொன்றான். வச்சிரதம்ஷ்டரனை அநுமன் குத்திக் கொன்றான். பிசாசன் என்ற அரக்கன் குதிரை மீது ஏறினான்.வானைரரை சுற்றிச் சுற்றி வந்து வருத்தினான்: இலட்சுமணன் வியாசாஸ்திரத்தினால் அவன் தலையை அறுத்தான்.
படைத் தலைவர்கள் மாண்ட செய்தியைச் சொல்ல, இலங்கேசனிடம் விரைந்தனர் ஒற்றர்.
படைத் தலைவர்கள் அழிந்ததைக் கேட்ட இராவணன் பெரிதும் வருந்தினான். அப்போதங்கே வந்தான் கரனின் புதல்வன் மகரக் கண்ணன்.
“என்னை அனுப்பினால் என் தந்தையைக் கொன்ற பகைவனை கொன்று தீர்ப்பேன்!” என்று உறுதிக் கூறினான். இராவணனும் இசைந்தான். அவனுடன் இருபது வெள்ளம் அரக்கர்ச் சேனை சென்றது. இரக்தாட்சசன் சிங்கன் என்ற தேர்ச்சக்கரக் காவலரும் சென்றனர். போர், போர்; மும்முரமான போர் இராமனிருக்குமிடத்தை நோக்கி தேர் சென்றது. “என் தந்தையைக் கொன்ற உன் உயிரை வாங்குவேன்!” என்று சபதம் செய்தான். பொருதான். மாயையினால் இருளை கவியச் செய்தான். தன் உருவந் தெரியாவண்ணம் நின்று பொருதான். இராமன் தனது அம்புகளை எய்தான். அவை மறைந்திருந்த மகரக் கண்ணனைத் தாக்கின. அவன் உடலிலிருந்த குருதி வழிந்த திசையை வைத்து, தன் கணையினால் அவனை வீழ்த்தினான். நீலன் மற்றவரை அழித்தான்.
மகரக்கண்ணன் தன் சேனையோடு அழிந்த செய்தியைக் கேட்டான் இராவணன். இந்திரசித்தை அழைத்தான். மகன் தந்தைக்கு ஆறுதல் கூறினான்.
“வருந்தாதீர்கள். நான் நரரையும் வானரரையும் கொன்று வருவேன்!” என்று கூறி அறுபது வெள்ளம் சேனையோடு சென்றான். வானர சேனை நிலை கெட்டு ஓடிற்று. அநுமன், சுக்ரீவன், அங்கதன், இராம லட்சுமணன், விபீடணன் ஆகிய சிலரே நின்றனர். அநுமன் தோளின் மீது இராமன் எழுந்து நின்றான். அங்கதனோ, தன் தோளின் மேல் இலட்சுமணனை சுமந்தான். நீலன் முதலாயினோர் மரங்களையும் குன்றுகளையும் ஏந்தி, அரக்கரை முன்னேற விடாமல் தடுக்கத் தொடங்கினர். இராமன் அவர்களை பின்னால் செல்லும்படி கூறினான். ஏன்? இந்திரசித்து தெய்வப் படைகளை ஏவுவான். அவைகள் அவர்களைத் தாக்கி அழிக்கும் என்பதை உணர்ந்ததால் அவ்வாறு செய்தான். முன் நின்ற இராம லட்சுமணன் அறுபது வெள்ளச் சேனையை அழித்ததும், அவர்கள் பேராற்றலைக் கண்டு பிரமித்துப் போனான் இந்திரசித்து. அநுமன் இது கண்டு தோள் கொட்டி ஆரவாரித்தான். இந்த ஆரவாரத் சத்தம் கேட்டு அரக்கர்பின்னோக்கி ஓட, இந்திரசித்து தான் ஒருவனே இராம லட்சுமணரை எதிர்க்க வந்தான். அவன் தனித்து வந்து ‘நீவிர் எவ்வண்ணம் பொரப் போகின்றீர்’ என்று கேட்டான்.
அப்போது லட்சுமணன்.
***
வாளிற் றிண்சிலைத் தொழிலினின்
மல்லினின் மற்றை
ஆளுற்று எண்ணிய
படைக்கல மெவற்றினும் அமரில்
கோளுற்று உன்னோடு குறித்தமர்
செய்து உயிர் கொள்வான்
சூளுற்றேன் இது சரதமென்று
இலக்குவன் சொன்னான்.
“வாள், வில், உடல் வலி, படை ஆகிய இவற்றினும் அதிக வலிமை பெற்ற உன்னோடு நேருக்கு நேர் நின்று பொருது, உன்னுயிரைக் கொல்வதாக நான் செய்த சபதம் இப்போது நிறைவேறுவதற்காகவே நான் பொருத வந்தேன்” எனக் கூறினான் இளையவன்.
***
வாளில் - வாள் கொண்டும்; திண்சிலை தொழிலினில் - உறுதியான வில் ஆற்றலினாலும்; மல்லினில் - மற்போர் புரிந்தும்; மற்றை - வேறான; ஆள் உற்று - ஆளுதல் பொருந்தி: எண்ணிய - எண்ணப்பட்ட; படைக்கலம் எவற்றினும் - போர்க் கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில் - போரில்; கோள் உற்று - வன்மை பொருந்த ;உன்னொடு குறித்து - உன் நேர் நின்று; அமர் செய்து - போர் புரிந்து; உயிர் கொள்வான் - உங்கள் உயிரைக் கொள்ளும் பொருட்டு; சூளுற்றேன் - வஞ்சினம் கூறினன்; இது சரதம் - இது உறுதி; என்று - என்று ;இலக்குவன் சொன்னான் - லட்சுமணன் சொன்னான்.
***
இந்திரசித்தும் எதிர் சபதம் செய்தான். அது என்ன? லட்சுமணனை நோக்கி “உன்னைக் கொன்று பின் இராமனைக் கொல்வேன்! என்றான். அத்துடனா? உங்களால் கொல்லப்பட்ட என் சிற்றப்பனுக்கும், இறந்த தம்பிமார்க்கும் உங்கள் இரத்தத்தைக் கொண்டு நீர்க்கடன் செய்வேன்!” என்றான் ஆணவத்துடன்.
லட்சுமணன், “உனக்கு, உன் தந்தையும், உன் தந்தை முதலியோர்க்கு விபீடணனும் அந்திமக் கடன் செய்வார்கள்!” என்று நிகழப்போகும் சங்கதிகளை முன்பே கூறினான்.
கொதித்தெழுந்தான் இந்திரசித்து. லட்சுமணனுடன் கடும்போர் செய்தான். இந்திரசித்தின் தேரை அழித்தான் இளையவன். இராவணனின் மகன், லட்சுமணன் மீதும், அங்கதன் மீதும் கணைகளைத் தூர்த்து, சங்கால் முழங்கினான். பத்து கணைகளை விட்டான் லட்சுமணன். இந்திரசித்தின் கவசத்தைப் பெயர்த்தான். இந்திரசித்தோ வானில் மறைந்தான். பிரம்மாத்திரத்தைத் தொடுக்க லட்சுமணன் முனைந்தபோது, இராமன் அதைத் தடுத்தான்.
இதை அறிந்த அரக்கன் மைந்தன் என்ன செய்தான்? போர்க் கோலம் களைந்த தசரத புதல்வர்கள் மீது பிரம்மாத்திரம் விடுத்தற்கு முயற்சி கொண்டு அதற்குரிய வேள்வியைத் தொடங்க ஆரம்பித்தான். சூரியன் அத்தமிக்கவே, வானர சேனைக்கு உணவு கொண்டு வருமாறு விபீடணனைக் கட்டளையிட்டான் அண்ணல். சேனையைக் காக்குமாறு இளையவனைப் பணித்தான். அத்திர பூசை செய்யச் சென்றான்.
இந்திரசித்து தன் தந்தையிடம் சென்றான். நடந்ததைச் சொன்னான். “மாறு செய்யாதபடி மாற்றான் என்னை மறந்திருக்கையில் வஞ்சனையாக பிரம்மாத்திரம் விடுத்து பகையை முடிப்பேன்” என்றான். இந்த வஞ்சனைக்கு உதவியாக மகோதரனை மாயைப் போர் புரியுமாறு இராவணன் ஆணையிட்டான். அரக்கர் வானரரைத் தாக்கினர். அநுமன் அரக்கரை நீராக்கினான். நீலன் முதலியோர் அரக்கர் படையுடன் கலந்தனர்.
அநுமனுக்கும் அகம்பனுக்கும் தண்டு போர் நடந்தது. அநுமனின் தண்டு, அகம்பனின் தண்டையும் வலக்கரத்தையும் இற்றது. குத்துச்சண்டையில் அநுமன் அவனை வென்றான்.
தங்கள் மாயையால் அரக்கர் அங்கதனையும் சுக்ரீவனையும், லட்சுமணனையும் வெவ்வேறு திசையில் ஈர்த்தனர். அநுமன் இளையவனைக் காணாது வேதனையுற்றான், என்றாலும் தன் அறிவாற்றலால் லட்சுமணன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான்.
“இவ்வரக்கப் போர் மாயத்தால் விளைந்திருத்தலால் மந்திரப்படை கொண்டுத்தான் போக்கவேண்டும்” என்ற தீர்வைக் கூறினான்.
லட்சுமணன் பாசுபத அத்திரத்தை விட்ட அக்கணமே மாயை மறைந்தது. மாயை விளைவித்த மகோதரன் என்ற அரக்கனும் மறைந்திட்டான். வானரர் இலட்சுமணனைக் கண்டனர்.
செய்தி அறிந்த இராவணன் அதை இந்திரசித்தினிடம் கூறுமாறு அனுப்பினான். மாயையினால் அரக்கர் தேவர் உருக்கொண்டு வந்தனர். லட்சுமணன் அதுகண்டு வியப்புற்றான். இந்திரசித்து பிரம்மாத்திரத்தை விட்டான். இந்திரன் உருக்கொண்டே இதைச் செய்தான். இளையவன் மூர்ச்சித்து விழுந்தான். இந்திரனாகத் தோன்றியவனைத் தண்டிக்க எழுந்த அநுமனையும் செயலிழக்கச் செய்தது அந்த அத்திரம். மற்றவரும் உயிரோடு சாய்ந்தனர்.
இது கண்ட இந்திரசித்து, “வானர சேனையுடனே இளையவன் இறந்தான்; இராமன் அகன்றிட்டான்” என்று வெற்றிச் சங்கு ஊதினான் குதூகலத்துடன்.
பூசை முடித்துவிட்டு வந்த அண்ணல் ஆக்கினேயாத்திரத்தினால் இருளைப் போக்கினான். சுக்கிரீவன் ஆகியோரைக் கண்டான். மயக்கமாகக் கிடந்த தம்பியைக் கண்டு புலம்பினான். அவனும் மூர்ச்சித்தான்.
‘இராமன் மாண்டான்’ என அரக்கர் கெக்கலித்தனர். செய்தி அறிந்தான் இராவணன். இறந்துபட்ட அரக்கர் உடல்கள் அனைத்தையும் கடலில் வீழ்த்தும்படி கூறினான். இதனால் ஏற்பட்ட விளைவு? பின்னர் வானரர் தெளிந்து எழுந்தனர். அரக்கரோ, இராவணனின் செயலால் ஒழிந்தனர்.
மீண்டும் மாயையால் பிராட்டியை வசப்படுத்த திட்டம் இட்டான். அன்னையை விமானத்திலேற்றி களத்தின் அவலநிலையைக் காட்டுமாறு செய்தான். அன்னை இராமன் லட்சுமணன் நிலைக் கண்டாள். அரற்றினாள்; அழுதாள்; சீதையின் நிலைக் கண்டாள் திரிசடை; “இராமன் புண்டரீகன்; அவனுக்கு இறுதி என்பது கிடையாது. இளையவனின் வதனம் ஊழ் நாளிரவி என்ன ஒளிர்வதால் உயிருக்கு இன்னல் இல்லை. அது மட்டுமா? இராமபிரான் இறந்தபின் ஈரேழு உலகங்களும் அல்லவா இறந்திருக்கும். மாருதிக்குப் பிராட்டி கொடுத்த ‘சாகாவரம்’ எப்படிப் பொய்யாகும்?” எனக் கூறி தேறுதல் கூறினாள். அரக்கியர் மன ஆறுதலடைந்த சீதையை மீண்டும் வனத்திற்கே அழைத்துச்சென்றனர்.
***
உணவு கொண்டு வந்தான் விபீடணன். போர்க்களத்திலுள்ள நிலைக் கண்டான். இராமனின் கலங்கிய நிலைக் கண்டு கலங்கினான். மெல்ல சென்று அநுமனின் களைப்பை நீக்கினான். இருவரும் சாம்பவானை நாடிச் சென்றனர். விவரம் கூறினவுடன் சாம்பவான் என்ன சொன்னான்?
***
‘எழுபது வெள்ளத் தோரும்
இராமனும் இளையகோவும்
முழுவதும் இவ்வுலக மூன்று நல்லற
மூர்த்தி தானும்
வழுவலின் மறையு முன்னால்
வாழ்ந்தன வாகு மைந்த
பொழுதிறை தாழா தென் சொன்னெறி
தரக் கடிது போதி.
“வாயு மைந்தனே! சிறிதும் தாமதியாமல் எல்லோரையும் உய்விக்கும் அருமருந்தைக் கொண்டு வந்தால், இராம இலட்சுமணன் மற்றும் எழுபது வெள்ளச் சேனையும் பிழைத்தெழும். எனவே நான் சொல்லும் வழியிலே சென்று அம் மருந்தினைக் கொண்டு வா!” என்றான் அநுமனிடம்.
***
மைந்த - மைந்தனே! (நீ மருந்து கொணர்வாயானால்); எழுபது வெள்ளத்தோரும் - எழுபது வெள்ளம் வானரச் சேனைகளும்; இராமனும் - இராமபிரானும்; இளையகோவும் - லட்சுமணப் பெருமாளும்; முழுவதும் இ உலகம் மூன்றும் - முழுதாகிய இந்த மூன்றுலகங்களும்; நல் அறம் மூர்த்தி தானும் - சிறந்த தரும தேவதையும்; வழுவல் இல் மறையும் - பழுதற்ற வேதங்களும்; உன்னால் வாழ்ந்தன ஆகும் - உன் உதவியால் அழியாது நிலைபெறுவன ஆகும்; ஆதலின், இறை பொழுது தாழாது - சிறிது காலமும் தாமதம் செய்யாமல்; என் சொல் நெறி தர - நான் சொல் வழிகாட்ட; கடிது போதி - விரைந்து எழுவாயாக.
***
“மருத்து மலையை விரைவிற் கொணர வேண்டும்” என்று சாம்பவான் சொன்னதைக் கேட்டவுடன், அநுமன் சாம்பவான் சொல்லிய வழியிலே பேருருக் கொண்டுச் சென்றான். விபீடணனும் சாம்பவானும் சென்று இரகுவீரனின் காலை வருடினர். இராமபிரான் கண்விழித்தான். தன்னைச் சார்ந்தோருக்கு ஏற்பட்ட நிலைக் குறித்து அண்ணல் வருந்தினான். அச்சமயம் சாம்பவான் அநுமன் உயிரளிக்கும் அரிய மருந்தைக் கொண்டுவரச் சென்றிருப்பதைக் கூறினான்; ஐயனைத் தேற்றினான். அப்போது,
“தோன்றினன் என்னும் அச்சொல்லின்
முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்தடி கடவுள்
ஓங்கறான்
வான் தனில் நின்றது வஞ்சர்
ஊர் வர
ஏன்றில, தாதலின் அநுமன்
எய்தினான்.
கடல் முதலியன நிலைக்குலைந்தன; காற்று பேரிரைச்சலோடு வீசிற்று. இதைக் கண்ட சாம்பவான் அநுமன் வந்திட்டானென்று சொல்லுமுன்னரே, மாருதி மருத்து மலையை வேருடன் பறித்துக்கொண்டு வான வழியாய் வந்தான். அம் மலையோ வஞ்சகருடைய ஊரிலே இறங்க உடன்படவில்லை. எனவே வானிலே நின்றது. அதன் மீது வீசிய காற்று லட்சுமணனையும், மற்றவரையும் உயிர்த்து எழச் செய்தது.
***
தோன்றினன் - வந்துவிட்டான்; (அநுமன்) என்னும் - என்ற; அ சொல்லின் - அந்தச் சாம்பன் சொல்லிய சொல்லுக்கு; முன்னம் வந்து, நிலத்து அடி ஊன்றினன் - தரையில் காலை அழுந்த வைத்தவனாய்; அநுமன் எய்தினன் - மாருதி வந்தடைந்தான்; வஞ்சர் ஊர் வர என்றிலது ஆதலின் - வஞ்சக அரக்கரின் ஊர்க்கண் வருவதற்கு மனம் கொள்ளாமையின்; கடவுள் ஓங்கல் வான் தனில் நின்றது - தெய்வத் தன்மை வாய்ந்த அந்த மருத்து மலை விண்ணிலேயே நின்றது.
***
அநுமனை வாழ்த்தினான் அண்ணல். சாம்பவானின் வேண்டுகோளின்படியே அம் மலையை முன்னிருந்த இடத்திற்கே எடுத்துச்சென்றான் அநுமன்.
லட்சுமணன் ஆகியோர் உயிர்ப் பெற்று எழுந்ததை அறியாத அரக்கர் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உயிர்தெழுந்தவுடன் வானரர் செய்த ஆரவாரம் அவர்கள் களியாட்டத்தை ஒடுக்கியது. இராவணன் வெறுப்புற்று, மந்திராலோசனை செய்ய கிளம்பினான். இராவணன் நடந்தவற்றை கூறியபோது, மாலியன் அவனை ‘சீதையை விட்டு விடுதல் நலம்’ என்று அறிவுரைக் கூறினாலும் இராவணன் செவிசாய்க்க மறுத்தான். இந்திரசித்து தான் நிரும்பிலைக்குப் போய் யாகஞ்செய்தால், நிச்சயம் பகைவரை வெல்ல முடியும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தான். அந்த யாகத்தை தடுப்பான் அநுமன். எனவே அநுமனைத் திருப்ப எண்ணி மாயம் செய்தான். சீதையை போல் மாயையால் ஒரு உருவத்தை செய்தான், அநுமன் எதிரில் அவ்வுருவத்தை வெட்டினான். அயோத்திமீது படையெடுக்கப் போவதாகச் சொல்லி, அநுமனை நம்பவைத்தான். விமானத்திலேறி நிரும்பிலைச் சென்றான்.
மாருதியின் மூலம் இந்திரசித்து சீதையை மாய்த்ததையும் பிறவற்றையும் அறிந்த அண்ணலும் இளையவனும் வேதனையால் துடித்தனர். அயோத்தியைக் காக்க துடித்தனர். இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த விபீடணன், ‘இது இந்திரசித்தின் மாயை எனக் கருதுகிறேன். நான் உண்மை அறிந்து வந்தபின் செய்ய வேண்டியதைச் செய்வோம்’ என்று கூறி, வண்டு உரு கொண்டு அசோகவனம் சென்றான். அன்னை இனிது இருப்பதைத் திரும்ப வந்து இராமனிடம் கூறினான். நிரும்பிலையில் இந்திரசித்து செய்யும் வேள்வி பற்றியும் விரிவாகக் கூறினான். லட்சுமணன் விபீடணனுடன் நிரும்பிலைச் சென்றான். வானர சேனையும் உடன் சென்றது.
***
கடல் வற்றின மலை உக்கன
பருதிக் கனல் கதுவுற்று
உடல் பற்றின மரமுற்றன
கடல் பற்றின வுதிரம்
சுடர் பற்றின சுறு மிக்கது
துணி பட்டுதிர் கணையின்
திடர்பட்டது பரவைக் குழி
திரியுற்றது புவனம்.
லட்சுமணனும் இந்திரசித்தும் ஒருவர் மீது ஒருவர் வீசியபாணங்களால் கடல்கள் வற்றின; மலைகள் பிளந்தன. சூரியனே பற்றி எரிந்தான்; இரத்த நாற்றம் எங்கும் பரவியது; வற்றிய கடல்களால் ஏற்பட்ட பள்ளங்களை அம்புச்சரங்கள் மேடாக்கின. பூமியே அலையலாயிற்று.
***
கடல்வற்றின - (அவ்விருவரும் எய்த அம்புகளால்) கடல்கள் எல்லாம் நீர்வற்றின; மலை உக்கன - மலைகள் பிளவு பட்டன; பருதி கனல் கதுவுற்று உடல் பற்றின - சூரியனுடைய உடல் முழுதும் கனலால் கதுவப்பட்டு பற்றி எரிந்தன; மரம் உற்றன கனல் பட்டன - தீயினால் தகிக்கப்பட்ட மரங்கள் அழிந்தன; உதிரம் சுடர்பற்றின சுறு - இரத்த நாற்றம்; மிக்கது - மிகுந்தது; துணிபட்டு உதிர் - துண்டிக்கப்பட்டு உதிர்கின்ற; கணையின் - அம்புகளாலே; பரவைக் குழிகடலாகிய குழிந்த இடம்; திடர் பட்டது - மேடாகிவிட்டது. புவனம் - பூமி; திரியுற்றது - சுழலத் தொடங்கியது.
***
புரிந்தோடின; புகைந்தோடின
பொரிந்தோடின புகை போய்
எரிந்தோடின கரிந்தோடின
விடமோடின வலமே
திரிந்தோடின செறிந்தோடின
விரிந்தோடின திசை மேல்
சரிந்தோடின கருங்கோளரிக்கு
இளையான் விடுசரமே.
நிரும்பிலையில் இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் கடும்போர் நிகழும்போது, லட்சுமணன் விடும் அம்பு சரங்களுள் சில வளைந்தோடின; இன்னும் சில புகை கக்கிக் கொண்டே ஓடின; வேறு சிலவோ தீப்பொறி சிதற ஓடின. மற்றவை கரிந்தோடின; எல்லா திசைகளிலும் ஓடி ஓடி அழித்தன.
***
கரும் கோளரிக்கு இளையான் - கரு நிறமுடைய வலிய சிங்கமாகிய இராமனுக்கு இளையவனாகிய லட்சுமணன்; விடுசரம் - விடுத்த அம்புகளில் சில; புரிந்து ஓடின - வளைந்து ஓடின; புகைந்து ஓடின; பொரிந்து ஓடின; புகை நீங்கி எரிந்த வண்ணம் ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலம் திரிந்து ஓடின; நெருங்கி ஓடின; ஒன்று நூறாகி விரிந்து ஓடின; திக்குகளில் சரிந்து ஓடின.
***
கடும்போர் நடந்தது. பற்பல அத்திரங்களை உபயோகித்தனர் இருவரும். கடைசியில் என்ன? யாகம் தடைப்பட்டது. இந்திரசித்து இராவணனை அடைந்தான்.
தந்தையிடம் இராம லட்சுமணனின் ஆற்றலைப் பற்றிப் புகழ்ந்து பேசிய இந்திரசித்து, விபீடணன் அவர்களுக்குத் தங்கள் இரகசியங்களைச் சொல்லி பக்கபலமாக இருப்பதையும் விவரிக்கிறான். எனவே, “சீதையை விட்டிடுவதே செய்யத்தக்கது” என்றும் சொன்னவுடனே, இராவணன் கடுங்கோபம் கொள்கிறான். தானே போருக்கு எழ உத்தேசிக்கும்போது, அவன் மகன் தடுத்து, தானே செல்ல இரதமேறுகிறான். போகுமுன் தானம் முதலியன செய்து, தன் தந்தை இராவணனை நோக்கிக் கண்ணீர் பெருக்கிச் செல்கிறான்.
இலட்சுமணனோடு கடும்போர் நடக்கிறது. சிவபெருமான் தந்த சீலையும் தேரும் இருக்கும்வரை இந்திரசித்தை அழிக்கமுடியாதென்ற பேருண்மையை விபீடணனிடமிருந்து அறிகிறான் லட்சுமணன்.
***
பச்சை வெம் புரவி வியா பல்லியச்
சில்லி பாரின்
நிச்சய மற்று நீங்கா வென்பது
நினைந்து வில்லின்
விச்சையின் கணவனானான்
வின்மையால் வயிரமிட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு
ஆக்கினான் அணி நீக்கி.
வில் வித்தைக்குத் தலைவனான லட்சுமணன், அந்தத் தேரில் பூட்டிய குதிரைகளைக் கூர்ந்து கவனித்தான். அந்த தேர்ச் சக்கரங்கள் உடையாதவை என்பதையும் உணர்ந்து, அவைகள் வீழும் வண்ணம் வில்லின் வன்மையால் தேர்ச் சக்கரத்தின் கடையாணியைக் கழற்றி, அச்சக்கரங்களை சுக்கு நூறாக்கிறான். (தேர் வீழவே, குதிரைகளும் சிதறின.)
***
வில்லின் விச்சையின் கணவனானான் - வில் வித்தைக்குத் தலைவனான லட்சுமணன்; பச்சை வெம் புரவி வியா - (இந்திரசித்து ஏறியிருக்கும் தேரிற் கட்டிய) பசிய நிறம் அமைந்த கொடிய குதிரைகளும் சாக மாட்டா; பல்லியச் சில்லி - (அத்தேரின்) பல ஒலிகளையுடைய உருளைகளும்; பாரின் - பூமியில்; அற்று - அழிந்துபோய்; நிச்சயம் நீங்கா - திண்ணமாய் ஒழியமாட்டா; என்பது நினைந்து - என்பதை எண்ணி; வின்மையால் - தன் வில்லின் திறமையால்; ஆணி நீக்கி - ஆணிகளை பிரித்து அப்புறப்படுத்தி; வயிரம் இட்ட அச்சினோடு ஆழி - வயிரம் பிடித்த (மரத்தாலான) அச்சையும், சக்கரங்களையும்; வெவ்வேறு ஆக்கினான் - தனித்தனியே பிரித்து எறிந்தான்.
***
குதிரை வலிமையற்று சிதறவே, இந்திரசித்து வானத்தில் மாயமாய் மறைந்தான். கல் மாறி பொழிந்து வானர வீரரை மடியச் செய்தான். வானில் மறைந்திருந்த அரக்கர்கோன் மகனை இளையவனின் வாளிகள் தாக்கின. இரத்தம் பெருக நின்றான் இந்திரசித்து. லட்சுமணன் இந்திரசித்தின் விற்பிடித்த கையை அம்பெய்தி, கொய்தான். இந்திரசித்து மாயப்போர் புரிந்து, லட்சுமணனை ‘நின்னை முடித்தன்றி முடியேன்’, என்று சபதம் செய்தான்.
லட்சுமணன் இராமனை மனத்தில் நினைத்தான். ‘நீ பரம்பொருளானால் இந்திரசித்தைக் கொல்க’ என்று அம்பு ஏவினான். அம்பு இந்திரசித்தின் தலையை அறுத்தது. அவன் உயிரற்ற உடல் முதலில் மண்ணில் விழுந்து துடித்தது. பின்னர் அங்கதன் இந்திரசித்தின் தலையை கையிலேந்தி, இராமனிடம் செல்கிறான்.
இந்திரசித்து இறந்ததைக் கேட்ட இராவணன், அவனது இழப்பால் பெரிதும் துயருற்றான். புத்திர சோகம் அவனை வாட்டியது. அவனது இருபது கண்களும் இரத்தம் சிந்தின. துயர் தங்காது தன்னையே திட்டிக்கொண்டான்.
இந்திரச்சித்தின் மார்பைக் கண்டான். எத்தகைய மார்பு? அம்புகள் அழுந்திய மார்பு. பின்? அவன் சோகம் கரை புரண்டு ஓடுகின்றது.
***
அப்பு மாரி யழுந்திய
மார்பைத் தன்
அப்பு மாரி யழுதிழி
யாக்கையின்
அப்பு மாரின் அணைக்கும்
அரற்றுமால்
அப்பு மானுற்ற
தியாவருற் றாரரோ.
அந்த அம்பு அழுந்திய மார்பைக் கண்ணீராற்றுவான்; மார்பில் அணைத்துக்கொள்வான். அர்க்கர்கோன். வாய் விட்டுக் கதறும் இந்த இராவணனின் துயருக்கு உவமைக்கூற இயலுமோ? இயலாது.
***
அம்பு - அம்புகளின்; மாரி - மழை போன்ற மிகுதி; அழுந்திய மார்பை - ஊன்றிய (இந்திரசித்தின்) மார்பை; அழுது - (மகன் இறந்ததால்) அழுது; தன் - (இராவணன்) தன்னுடைய, அப்பு மாரி இழ் யாக்கையின் - (கண்) நீர் மழை சொரிந்து வழிகின்ற உடலில்; அப்பும் - அப்புக் கொள்வான்; மாரின் - தன் மார்பிலே; அணைக்கும் - அணைத்துக் கொள்வான்; அரற்றும் - புலம்புவான்; அ பு மான் - (இராவணனாகிய) அப்பெரியோன்; உற்றது - அப்பொழுது பட்டதை; யாவர் உற்றார் - வேறு எவர் அடைந்தார்! (எவரும் இல்லை என்றபடி)
அப்பு - (முதலடியில்) மாரி,
அப்பு மாரி - (இரண்டாவது அடி) (கண்) நீர் மழை
அப்பும் (மூன்றாம் அடி) மார்பின்
அப் புமான் - புருடன்.
***
இலங்கையே சோகத்தில் ஆழ்கிறது. இலங்கேசன் தன் மகனுடைய உடலை எண்ணெய்த் தோணியிலிட செய்தாலும், அது அவன் சோகத்திற்கு மாற்றாகுமா?
“இத்தனை அவலத்திற்கும் காரணம் யார்? சீதை தானே! அவளை வெட்டுங்கள்!” என்ற இராவணனின் கட்டளை எதை காட்டுகிறது? அறிவையும் மனத்தையும் இழிவுபடுத்திய காமத்தை, மைந்தன் மேல் அரக்கன் கொண்ட பாசம் வென்றதை! ஆனால், சீதையை வெட்டி விட்டால், இந்திரசித்து உயிர் பெற மாட்டானே! என்ற உண்மை இராவணனின் வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. ‘பழிக்குப் பழி; தனயனின் குருதிக்கு அயோத்தி மைந்தர்கள் குருதி’ என்று போருக்கு எழுகிறான் இலங்காதிபன். படைகளைத் திரட்டுகிறான். மானிடர் இருவரையும் வானரரையும் அழிக்க. இதை கம்பன் எவ்வாறு வர்ணிக்கிறார் தெரியுமா?
“அறத்தைத் தின்று அருங்கருணையைப்
பருகி வேறமைந்த,
மறத்தைப் பூண்டு வெம்பாவத்தை
மணம் புணர் மணாளா!”
இம் மாபெருஞ் சேனையைக் கண்டு வானரங்கள் அஞ்சி ஓடின. இப்படைகள் வந்ததெவ்வாறு என்று விபீடணன் இராமனிடம் விளக்குகிறான். அங்கதன் ஓடிய வானரங்களை அழைத்து வருகிறான். சாம்பன் அஞ்சியோடிய குரங்குகட்கு பரிந்து பேசுகிறான். சாம்பனை அங்கதன் தேற்ற, லட்சுமணனை ஓடும் சேனையைக் காக்கச் சொல்கிறான் இராமன்.
“மாருதியோடு நீயும் சுக்கிரீவனும்
சேனை காக்கப் போருதி”
என்ற அண்ணனின் சொல்லுக்குக் கட்டுபடுகிறான்' லட்சுமணன்.
இராமன் தனியனாய் மூல பல படையுடன்[1] பொருகிறான். இருதிறத்தார்க்கும் பெரும்போர் நடக்கிறது. இராமபிரானின் அம்புகள் அவர்களை அழிக்கின்றன. எவ்வளவோ வெள்ளச் சேனைகள், எங்கிருந்து வந்தாலும், அவர்கள் அனைவரையும் அழிக்கிறது இராமனின் வில். அரக்கர் தேவ படைகள் விடுகின்றனர். இராமன் தேவர்படைகளைக் கொண்டே துணித்து வீழ்த்திவிட்டு, போர் முடிந்தவுடன் இளையவனிடம் செல்கிறான்.
***
தோல்வியே அறியாத இராவணன் தோல்வி மேல் தோல்வி அடைந்து துவள்கிறான். எனினும் தேர் ஏறி போர் களம் செல்கிறான். பெரும் போர். அரக்கர் சேனை நிலை குலைகிறது. இராவணன் சீறி, வானர சேனையின் நிலையைக் கெடுக்கின்றான். லட்சுமணன் அநுமன் தோளின் மீது ஏறி இராவணனை எதிர்க்கிறான், இராவணனின் மோகனா அத்திரத்தை இலக்குவன் அனுப்பிய திருமால் படை ஒழிக்கிறது. இராவணன் தன் தம்பியைக் காண்கிறான். உடன் விபீடணன் மீது வெகுண்டு, அவன் மீது மயன் கொடுத்த வேலால் அவன்தன் உயிர்கொள்ள எண்ணி,
***
விட்ட போதினில் ஒருவனை
வீட்டியே மீளும்
பட்ட போதவன் நான் முகன்
ஆயினும் படுக்கும்
வட்ட வேலது வலங்கொடு
வாங்கினன் வணங்கி
எட்ட நிற்கலாத் தம்பி மேல்
வல் விசைத் தெறிந்தான்.
இந்த வேல் ஒருவனை அழித்தே திரும்பக் கூடியது. தாக்கப்பட்டவன் நான்முகன் ஆயினும் சரி, அவனையும் ஒழித்துக்கட்டக் கூடிய அவ் வேலை வணங்கி, விபீடணன்மீது வீசினான் வேகமாக, ஏன்? அவனைக் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தால்.
***
விட்ட போதினில் _ தொடுத்த அளவில்; ஒருவனை வீட்டியே மீளும் - ஒருவனை அழித்தே திரும்புவதும் பட்ட போது - அது மேலே தாக்கிய அளவில்; அவன் - தாக்கப் பெற்றவன்; நான்முகன் ஆயினும் - பிரம தேவனே யானாலும்; படுக்கும். (அவனையும்) ஒழிக்க வல்லதும் ஆன; அது வேல் - அந்த வேலை; வட்டம் வலம் கொடு வணங்கி வாங்கினன் - வட்டமாக வலங்கொண்டு வணங்கி ஏற்று; எட்ட நிற்கலா _ சேய்மையினில்லாது அண்மையில் நின்ற; தம்பி மேல் - தம்பியான விபீடணன்மீது; வல் விசைத்து எறிந்தான் - வேகமாக வீசினான்.
***
வேல் தன்மீது ஏவப்பட்டதைக் கண்ட வீபிடணன், ‘இப்படை என்னுயிரை மாய்க்கும்’ என்றான் இளைய வனிடம்.
‘அஞ்சாதே!’ என்று லட்சுமணன் அம்பு மாரி பெய்தான். ஆனால் வேலை அம்பு மாரி தடுத்து நிறுத்த இயலவில்லை. அவ் வேலை ஏற்குமாறு லட்சுமணன் விபீடணன் முன் செல்கிறான். லட்சுமணனை தடுத்து முன் செல்கிறான் விபீடணன். இருவரையும் விலக்கி அங்கதன் முன்னேறுகிறான் சுக்ரீவனோ அவனை விலக்கு கிறான். அவனையும் விலக்கி அநுமன் முன் சென்றாலும், லட்சுமணன் அவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு தானே அந்த வேலைத் தன் மார்பில் ஏற்கிறான். இத்தருணத்தில் விபீடணன் கதையினால் இராவணனுடைய தேர்ப் பரிகளையும் பாகனையும் அழிக்கின்றான்.
வேலேற்ற லட்சுமணன் நிச்சயம் இறப்பான் என்று நினைத்து இராவணன் போர்க்களத்தை விடுத்துச் செல் கின்றான். லட்சுமணனுக்கு நேர்ந்த அவகேடு நோக்கி, சாகத் துணிகிறான் இராவணனின் தம்பி.
அப்போது சாம்பன் வருகிறான். அவனைத் தடுக்கிறான். எப்படி?‘அனுமனிற்க நாம் ஆருயிற்
கிரங்குவது அறிவோ?’
என்று கேட்கிறான்.
அநுமன் என்ன செய்கிறான்?
பறந்துச் செல்கிறான்.
மருந்து கொணர்கிறான்; லட்சுமணனை உயிர்ப்பிக் கிறான். லட்சுமணனையும் அனுமனையும் பாராட்டு கிறான் இராமன்.
போர்க்களத்தை விபீடணனும் அவனைச் சார்ந்தோரும் பார்வையிடுகின்றனர். அரக்கர் சேனை அழிந்து கிடந்ததைப் பார்க்கின்றனர்.
இராவணனோ லட்சுமணன் மாண்டு போனான் என்ற பொய்யான நம்பிக்கையில் இன்பந் திளைக்கிறான். உண்மை அறிந்தவுடன் கோபுரமேறி பார்க்கின்றான், போர்க்கள் அவலக் காட்சிகளை. பின்னர் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.
சினத்துடன் தேரெறி போர்க்கோலத்துடன் செல்கிறான் எஞ்சிய சேனையோடு. அதே சமயம் இராமனும் தேவர்கள் அனுப்பிய தேரிற் ஏறுகிறான்.
இராவணன் ஏறிய தேர் எத்தகைத்து? கருதிய விடமெல்லாம் நொடியிற் செல்லக் கூடியது. சூரியன் தேர்க்குதிரைகளின் மரபின் வந்த குதிரைகள் உடையது.
போர்க்கோலம் பூண்டான் இராவணன். இக்கோலத்திற்கு என அவன் அணிந்த கவசங்கள் இரண்டு.
***
அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம்
அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர்
ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் கேள்வியில்
படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன்
கவசமும், சேர்ந்தான்.
நீரருவிகளைக் கொண்ட கருநிற மலையிலே ஆயிரஞ் சூரியர் வேற்று உருவத்தோடும் வந்து உதித்தனரோ என்னும்படி ஒளிவிட்ட பொற்கவசத்தை தன் உடம்பிற் கட்டி அணிந்தான் இராவணன். இது பிரம்ம தேவனால் வேள்வியிலேயே தோற்றுவிக்கப்பட்டது. மற்றொரு கவசம் தேவேந்திரன் இந்திரசித்தினிடம் தோற்றபோது வெற்றி கொண்டவனுக்குத் தந்தான்(இராவணன்) ஒன்றின்மேல் ஒன்றாக இவ்விரு கவசங்களை அணிந்தான்.
***
அருவி அஞ்சனம் குன்றிடை _ அருவிகள் யாவும் கரிய மலையினிடையிலே; ஆயிரம் அருக்கர் - ஆயிரம் சூரியர்; உருவினோடும் - தம் உண்மைத் திருவுருவங்களுடன்; வந்து உதித்தனர் ஆம் என வந்து உதயமானார்கள் என்று சொல்லும்படி; ஒளிர - ஒளி வீச; நான்முகன் வேள்வியில் படைத்தது கருவி உம் - பிரமன் தான் இயற்றிய ஒரு வேள்வியில் உண்டாக்கியதான கவசத்தையும்; கட்டி - கட்டி; (அதன்மீது) செருவில் - போரில்; இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் - (தோற்றோடிய) இந்திரன் அளித்த பொன்னாலான கவசத்தையும சேர்த்துக் கட்டினான்.
***
தேருக்குப் பூசை செய்தான். தானங்கள் கொடுத்தான். போருக்குக் கிளம்பும்முன் இராவணன் கூறினான் : “இன்றைய போரில் ஒன்று இராமனை மாள்வித்தல்; அன்றித் தான் அவனால் மாள்தல்; இவ்விரண்டுமின்றி தோல்வியோடு திரும்புதல் இன்று.”
***
ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய
இமையோர்
தேறினார்களும் தியங்கினார்;
மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் செயும் வினை இலை,
மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினர், உலகு
எலாம் அனுங்க.
இராவணன் அத் தேரை தொழுதான். அதன்மீது ஏறினான். அது போது; முதலில் தேவர்கள் அச்சமுற்றாலும், பின்னர் அரக்கரை அழிக்கவே இராமன் பிறந்து உள்ளான் என்ற உண்மை நினைவுக்கு வந்தவுடன் தெளிந்தனர். ஐம்புலன்களை அடக்கிய முனிவரும் தேரேறிய இராவணனைக் கண்டு அஞ்சினர்; தம்மால் செய்யக்கூடிய காரியம் எதுவுமில்லையே என்று ஏங்கி அஞ்சினர்.
***
(இவ்வாறு சபதம் கூறி) பொழுது - தேரினை வணங்கி; ஏறினான் - அதன்மீது ஏறினான்; தேறினார்களும் -(முன்பு அச்சத்தினின்று) மனம் தேறினவர்களாக இருந்தும்; இந்திரன் முதலிய இமையோர் - இந்திரன் முதலிய தேவர்கள்; தியங்கினார்-சோர்ந்தனராயினர்; மயங்கினார்-(அச்சத்தால்) மனமயக்கம் அடைந்தார்கள்; திகைத்தார் பிரமித்தார்கள்: உலகெலாம் - எல்லா உலகங்களிலுமுள்ள உயிர் வர்க்கங்கள் யாவும்: அனுங்க - வருந்த, மெய்யின் ஐம்புலனும் - உடலிலுள்ள ஐந்து அறிவுகளையும்; அறிஞர்களும்- அடக்கிய முனிவர்களும்; அஞ்சினார்கள் - அச்ச முற்றார்; ( அவர்களுக்கு) தாம் செய்யும் வினை வேறு இலை -தாம் (இராவணனுக்கு எதிராகச்) செய்யும் தொழில் (அஞ்சுவதையன்றி) வேறு இல்லாமற் போயிற்று.
***
இராவணன் வருகையைக் கண்டன வானர சேனைகள். நடுங்கின; தரையில் வீழ்ந்து வாய் குழறின. பெரியதான ஒலி அதனைக் கேட்டான் இராமன்.
***
தொழும் கையொடு, வாய் குழறி,
மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடுபூசல்
மிக, விண்னோர்
அழுந்து படு பால் அமளி,
‘அஞ்சல்’ என, அந்நாள்,
எழுந்த படியே கடிது எழுந்தனன்,
இராமன்.
கூப்பிய கையுடனே வாய் குழறி, வலி குன்றி வீழ்ந்தது வானரச் சேனை, அவ்வாறு வீழ்ந்தபோது அலறின. அந்த பேராரவாரம் மிகவே, இராமன் அவர்தம் துயர் தீர்க்க வேகமாக எழுத்தான். அது எப்படியிருந்தது? முன்னர், திருப்பாற்கடலில் திருமால், தேவர்கள் து ன் பு ற் று கதறியபோது, ‘அஞ்சேல்!’ என்று அபயம் அளித்து தசரத மன்னனின் மகனாகத் தோன்றுவதற்காக எழுந்ததுபோல் இருந்ததாம்.
***
(இராவணன் வருகையைக் கண்ட) கவிசேனை - வானரப் படைகள்; தொழும் கையொடு - (தம்) கூப்பித் தொழுது வணங்கும் கைகளொடு; வாய் குழறி - வாய் பேசமுடியாமல் குழறி; மெய் - உடல்கள்; முறை துளங்க - முறையாக நடுங்க; விழுந்து - தரையில் விழுந்து; இடு பூசல் மிக - இடுகின்ற பேரொலி அளவு மிக; இராமன் - {அவ்வொலி கேட்ட) இராமபிரான்; அந்நாள் - முன்னொரு காலத்தில்; விண்ணோர் அழுந்த- தேவர்கள் (தங்கள் துயர் தாங்கமாட்டாமல்) மனந்தாழ; 'அஞ்சல்' என - 'அஞ்சாதீர்கள்' என்று; அரவத்து அமளி எழுந்தபடியே- (திருப்பாற் கடலில்) ஆதிசேஷனாகிய படுக்கையினின்று எழுந்த அவ்வண்ணமே; கடிது எழுந்தனன் - (வானரர்களைக் காக்க) விரைவாக எழுந்தான்.
***
இந்திரன் கட்டளைப்படி, மாதலி தேர்கொண்டு வருகிறான். இத்தேர் தெய்வீகமானது. இராமனிடம் மாதலி இத்தேரின் பெருமைகளைக் கூறுகிறான். ஒருவேளை இது அரக்கரால் மாயமாக அனுப்பப் பெற்றதோ என சிறிது ஐயுறும்போது, அத்தேரின் குதிரைகள் வேதம் ஓதுவதைக் கேட்கிறான். என்றாலும் சிறிது ஐயமே. மாருதி இலட்சுமணன் ஆகியோருடன் ஆலோசித்து, பின் தெளிகிறான் இரகுவீரன்.
***
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு
வெதும்ப,
தொழும் தகைய நல்வினை
களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர்
அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது
ஏறினான் - இராமன்.
வந்தக் தேரில் ஏறினான் இராமன். அக்கணமே தீவினை மண்ணோடு மண்ணாகி அழிந்ததை உணர்ந்த அமரர், முனிவர், அந்தணர், முதலானோர் தம் துயர் தீர்ந்தது என்று பெரு மகிழ்ச்சியுடன் தலைமேல் கைகளை வைத்துத் தொழுதனர்.
***
விழுந்து புரள் - (இராமன் தேரேறினதால்) விழுந்து புரள்கிற; தீவினை - (உலகிலுள்ள) பாபங்கள்; நிலத்தொடு - (தாம் விழுந்த) பூமியோடு; வெதும்ப - வெந்து போக; தொழும் தகைய - யாவராலும் தொழப்படும் தகுதியுடைய; நல்வினை- புண்ணியங்கள்; களிப்பினொடு து ள் ள - மிகுந்த மகிழ்ச்சியோடு துள்ள; அழுந்து துயரத்து - தாம் ஆழ்ந்து போதற்குக் காரணமான துயரத்தை உடைய; அமரர் - தேவர்களும்; அந்தணர் - முனிவர்களும்; கை - தம் கைகள்: முந்து உற்று எழுந்து தலை ஏற - முன்னே நீட்டி மேலே எழுந்து தம் தம் தலைகளில் ஏறி; இராமன் இனிது ஏறினான் - இராமபிரான் (இந்திரன் அனுப்பிய தேரில்) இனிமையாக ஏறினான்.
***
இராமபிரான் தேரேறினமை இராவண சம்மாரத்தை உறுதி ஆக்கியதால் தீவினைகள் வெதும்பின; நல்வினைகள் துள்ளின; அமரரும் அந்தணரும் தம் கைகளைத் தம் உச்சியிற் கூப்பினர்.
இராமவதாரத்தின் நோக்கம் இங்குச் சுட்டிக்காட்டப்படுகிறது.
***
ஆழி அம் தடந் தேர், வீரன்
ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித் தன்மை
நோக்கிய புலவர்போத,
ஊழி வெங் காற்றின்
வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்.
வாழிய அனுமன் தோளை
ஏத்தினார், மலர்கள் தூவி
அமரர் அனுப்பிய அந்தப் பெரிய தேரில் ஏறினான் இராகவன் இராகவனுடைய தேர் புழுதியைக் கிளப்பிக் கொண்டு, எழுந்தது. இராமபிரானுக்கு உறுதுணையாய் நின்ற அநுமனின் தோள்களுக்கு மலர் தூவி வாழ்த்தினர். தேவர்கள்,
***
வீரன் - வீரனாகிய இராமபிரான்; ஆழி அம் தடம் தேர் ஏறலும் - சக்கரமமைந்த அழகிய அகன்ற (அந்தத்) தேரின் மீது ஏறலும்; அலங்கல் சில்லி - பிரகாசிக்கும் தேருருளை; பூழியில் - (மண்) புழுதியில்; சுரித்த - புதைந்த; தன்மை -தன்மையை; நோக்கிய - பார்க்க; புலவர் எல்லாம் - தேவர்கள் யாவரும் (இராமபிரானின் உடற்பாரத்தை உன்னி); ஊழிவெம் காற்றின் - யுகாந்தத்தில் வீசும் வெப்பம் நிறைந்த காற்றைக் காட்டிலும்; வெய்ய கலுழனை - கொடிய கருடாழ்வானின் ( ஆற்றலை); ஒன்றும் சொல்லார் - (புகழ்ச்சியாக) ஒன்றையும கூறாமல்; அநுமன் தோளை- அநுமனின் (ஆற்றல் மிக்க) தோள்களின் மீது; மலர்கள் தூவி - மலர்களைச் சொரிந்து; ஏத்தினார் - அவற்றைப் பாராட்டினார்கள்.
***
இராமனின் வலக்கைப் போன்றவன் மாருதி. இராமனாகிய பரந்தாமனையே சுமந்த பெருமை அநுமன் ஒருவனுக்கே உண்டு; அவ்வளவு வலிமை பொருந்திய மாருதிக்கு இங்கு ஏற்றம் தரப்படுகிறது.
(‘பெருந் திண் தேரை இராமன் மேல் விடுதி’ என்று இராவணன் தன் தேரோட்டிக்குக் கூறினான். அவ்வாறே அத்தேர் இராமனை நெருங்குகையில், தன் தேர்ப்பாகனான மாதலி இராவணனை எதிர்க்கத் துடிப்பதைக் கண்டான் இராமபிரான்.)
மாதலி வதனம் நோக்கி,மன்னர்
தம் மன்னன் மைந்தன்,
‘காதலால் கருமம் ஒன்று
கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய
பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி;
துடிப்பு இலை’ என்னச் சொன்னான்.
தேரோட்டி மாதலியைப் பார்த்து சக்கர வர்த்தி திருமகன் இராமன் சொல்கிறான்; “நான் சொல்வதை அன்புடன் கேள்; இராவணனுடைய ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கட்டும். இப்போது அவசரப்படாதே! பின் நான் சொல்கிறப்படி வேகமாக தேரை ஓட்டு!” என்றான்.
***
மாமறை அமலன் . பெரிய வேதங்களாற் கூறப்படும் அமலனான இராமன் (இராவணன் தன்னை நோக்கி வருவகைக் கண்டு); மாதவி வதனம் நோக்கி - மாதலியின் முகத்தைப் பார்த்து; மாரு காதலோய் - மாறுபாடற்ற அன்புடையோனே!; கருமம் ஒன்றும் - காரியம் ஒன்றினை; கேட்டி - (நான் சொல்லக்) கேட்பாயாக; களித்த சிந்தை ஏதலன் - (போர் வெறியினால்) களிப்பு மிக்க உள்ளத்தையுடைய பகைவனான இராவணன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை - தீமைகள் யாவற்றையும் செய்து முடித்த பிறகு; என் தன் சோதனை நோக்கி, என் குறிப்பினை நோக்கி; செய்தி - உன் செயல்களைச் செய்வாயாக; துடிப்பு இலை - விரைய வேண்டா; என்ன சொன்னான் - என்று கூறினான்.
***
இங்கே, எவ்வளவு துன்பம் வந்தாலும் பொறுமையே உருவாக உள்ள இராமனை படம் பிடித்துக் காட்டுகிறான் கவி சக்கரவர்த்தி.
மாதலி உடன்படுகிறான். போர் வீரனான மகோதரன், தன் தலைவன் இராவணன் இராமனுடன் போராடும்போது வாளா நிற்றலை விரும்பாது, அரக்கன் உத்தரவிட்டபடி லட்சுமணனுடன் பொருவதாகச் சொல்கிறான். ஆனால் இராமன்மீதே தேரை விடுமாறு சாரதியைக் கட்டளையிடுகிறான்.
***
அசனி ஏறு இருந்த கொற்றக்
கொடியின் மேல், அரவத்தேர் மேல்
குசை உறு பாகன் தன் மேல்
கொற்றவன் குவவுத்தோள் மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்;
விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்;
தீர்த்தனும், முறுவல் செய்தான்,
மகோதரன் இந்திரனிடமிருந்து வந்த தேரின் மீது அம்பு மாரி பொழிந்தான். ஏன், அது வெற்றிப் பொருந்தியது; தெய்வீகமானது; எனவே அதை அழிக்கவேண்டும் என்ற உறுதிக்கொண்டு தாக்கினான். தேரின் மீது இருந்த தேர்ப்பாகன் மாதலிமீதும் அம்புக் கணைகளை விடுத்தான். அத்துடனா? வெற்றி வீரனான இராமனின் தோளின் மீதும் வேகம் பொருந்திய அம்பு மழையை விகைத்தபடி, மகோதரன் ஆகாயம் இற்றும் திக்குகளெல்லாம் கிழியும்படி ஆரவாரஞ் செய்ததைக் கண்ட தூயவனான இராமன் புன்னகை பூத்தான்.
***
(மகோசுரன்). அசனி ஏற இருந்த கொற்ற கொடியின் மேல் - (இந்திரன் இடமிருந்து வந்த தெய்வத் தேரின்) பேரிடி எழுதப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின்மீதும்; அரவம் தேர்மேல் - ஒலி மிக்க அந்தக் தேரின் மீதும்; குசை உறு பாகன் தன்மேல் - கடிவாளத்தைக் (கையில்) கொண்ட பாகனான மாதவியின்மீதும்; கொற்றவன் - வெற்றியோனான இராமபிரானின்; குலவு - விளங்குகின்ற; தோள் மேல் - தோள்களின்மீதும்; விசை உறு பகழி மாரி - வேகம் நிறைந்த அம்பு மழையை; வித்தினான் - விதை தெளிப்பது போல் தூவினான்; (மேலும்) விண்ணினொடு திசைகளும் கிழிய - வானமும் திசைகளும் கிழிந்து போகுமாறு; ஆர்த்தான் - முழக்கம் செய்தான்; தீர்த்தனும் - தூயவனான இராமபிரானும்; முறுவல் செய்தான் - புன்சிரிப்புச் செய்தான்,
***
ஏன்? பின் நிகழ்ச்சியை அறியாது ஆர்ப்பரிக்கின்றானே என்று அவன் தன் ஆணவம் கண்டோ?
***
வில் ஒன்றால், கவசம் ஒன்றால்,
விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால்,
கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,
செல் ஒன்று கணைகள், ஐயன்
சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை
ஒன்றாய்த், துணிந்தனன், அரக்கன் துஞ்சி.
இராமன் என்ன செய்தான்? அவ்வரக்கன் (மகோதரன்) உடையவில்லை ஒரு பாணத்தினால் சிகைத்தான்.கவசத்தை மற்றொரு பாணத்தினால் உடைத்தான். அவனுடைய வலிமை பொருந்திய கைகளை ஒவ்வோர் பானமும் துணித்தன; மலையை ஒத்த தோளையும் ஒரு பாணத்தைக் கொண்டும், கழுத்தை ஒரே ஒரு பாணத்தினாலும் இடியையொத்த (தன்) கணைகளால் விரைவிற் போக்கிச் சிதறச் செய்தான். மகோதரன் தான் இராமனுடன் எதிர்த்து பொருது கொல்வதாகக் கூறியது பொய்யாகி, அவனே கொல்லபட்டதால், ‘சொல்லொன்றாய்ச் செய்கை ஒருவகையாகவும், துண்டுபட்டான்’ என்றான் கவி.
***
ஐயன் - இராமபிரான்; ஒன்றால் வில் - தன் ஒரு கணையால் மகோதரனின் வில்லையும்; ஒன்றால் கவசம் - ஒரு கணையால் அவனுடைய கவசம்: ஓர் ஒன்றால் - ஒவ்வொன்றால்; விறல் உடை கரம் - வெற்றி பொருந்திய கை; ஒன்றால் - ஒரு சுணையால்; கல் ஒன்று தோளும் . மலையை ஒத்த தோளும்; ஒன்றால் கழுத்து - மற்றொரு கணையால் கழுத்து (இவ்வாறு ஒவ்வொரு அம்பால் ஒவ்வோர் உறுப்பு வீதம் அறும்படி); செல் ஒன்று கணைகள் கடிதின் வாங்கி - செல்லுதல் பொருந்திய அம்புகளை விரைவில் எடுத்து; சிந்தினான் - வீசினான்: அரக்கன் - மகோதரனான அரக்கன்; செப்பி வந்த சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் - இராவணனிடம் சொல்லி வந்த மொழி ஒன்றாகவும் செயல் மற்றொன்றாகவும் ஆகுமாறு; துஞ்சி துணிந்தனன் - இறந்து உடல் பிளவுபட்டான்.
மகோதரன் வீழ்ந்ததைக் கண்டான் இராவணன், கோபாவேசமாக இராமனைத் தாக்கி பொருதான்.
***
‘பனிப் படா, நின்றது என்னப்
பரக்கின்ற சேனை பாறிக்
தனிப்படான் ஆகின் இன்னம்
தாழ்கிலன்’ என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன்,
அவன் ஒன்றும் நோக்காவண்ணம்
குனிப் படா நின்ற வில்லால்,
ஒல்லையின் நூறிக் கொன்றான்.
பணியானது ஒழிகின்றதுபோலப் பரந்துள்ள இந்த அரக்கச் சேனை சிதறிப் போனால் அன்றி அரக்கர்கோன் தாழ்ந்து வரமாட்டான். எனவே அவன் வணங்கி வர வேண்டுமென்றால் அரக்கர் சேனை முற்றிலும் ஒழிய வேண்டும்; என்று ஆராய்ந்துணர்ந்த வீரனான இராமன், விரைவிலே அரக்கச் சேனையைத் தவிடு பொடியாக்கினான்.
***
(அப்பொழுது இராமபிரான் தன் உள்ளத்தில்). பனி படா நின்றது என்ன - (மூடு) பனி உண்டாகி நின்றது என்று சொல்லுமாறு; பரக்கின்ற - விரிந்திருக்கிற; சேனை - (தன்) சேனைகள்; பாறி- சிதறி; (தான்) தனிப்படான் ஆகின் - தான் மட்டும் தனியாக ஆகாத வகையில்; இன்னம் தாழ்கிலன் - (இவ்விராவணன்) இன்னும் தாழ மாட்டான்; என்னும் தன்மை - என்னும் நிலையை; நுனிப்படா நின்ற வீரன் - நன்றாக எண்ணியறிந்த வீரனான இராமபிரான்; அவன் ஒன்றும் நோக்காவண்ணம் - (தன் செயல்) ஒன்றையும் அவன் கண்டு அறியாதபடி; குனிப்படா நின்ற வில்லால் – (தன்) வளைந்த வில்லால்; ஒல்லையில் - விரைவில்; (அச்சேனைகளை) நூறிக் கொன்றான் - பொடியாக்கிக் கொன்றான்.
***
இதே தருணத்தில் இராவணனுக்கு என்ன நேர்ந்தது?
***
அடல் வலி அரக்கற்கு அப்போழ்து,
அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால்
கிளர்ந்து உடற்றும் காலை,
வடவரை முதல ஆனமலைக்
குலம் சலிப்ப மானச்,
சுடர் மணி வலயம் சித்தத் துடித்தன,
இடத்த பொன் - தோள்.
இராமனின் கணைகள் வரும்போது, இராவணனுக்குத் தீயநிமித்தங்கள் தோன்றலாயின. பெருவலிமை படைத்த இராவணனுடைய இடது பக்கத்தின் பத்து தோள்களும், மணிகளழுத்திய தோள்வளை சிந்தும்படி துடித்தன; இதைத் தவிர, வானின்று இரத்த மழை பெய்தது. பெருமலைகள் இடியால் பொடிப் பொடியாகின. குதிரைகள் பின்வாங்கின; விற்கள் நாண் இடையே அறுத்துவிட்டன. இராவணனுக்கு நாவும் வாயும் உலர்ந்திட்டன; அவன் அணிந்த நறுமலர் மாலையோ புலால் நாற்றம் வீசியது.
***
அப்போழ்து - அச்சமயத்தில்; அடல் வலி அரக்கற்கு - மிக்க வலிமையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த - அண்டங்கள் யாவும் தாழவும்: மண்டும் கடல்களும் - பொங்கும் கடல்களும்; வற்ற - நீரில்லாமற்போகவும்: வெற்றி கால் - வெற்றியையுடைய (ஊழிக்) காற்று; கிளர்ந்து - மேலெழுந்து; உடற்றும் காலை - வருந்தும்போது; வடவரை முதல ஆன - வடக்கேயுள்ள மலையான மேரு முதலிய; மலைக்குலம்- மலைக் கூட்டங்கள்; சலிப்பமான - அசைவனபோல; சுடர்மணி வலயம் சிந்த - ஒளிவிடும் மணிகளழுத்திய வாகு வலயங்கள் சிதறுமாறு; இடத்த பொன் தோள் துடித்தன - இடப் பக்கத்திலுள்ள அழகிய தோள்கள் துடித்தன.
***
துர்நிமித்தங்களைப் பொருட்படுத்தவில்லை இலங்காதிபன். மாறாக இன்னும் மும்முரமாக பொருகிறான். இப்போர் எத்தன்மையது? கருமத்திற்கும் ஞானத்திற்கும் போர்; தீமைக்கும் நன்மைக்கும் நடக்கும் போர்; அதருமத்திற்கும் தருமத்திற்கும் நடக்கும் போர். இப்போருக்குக் கம்பன் எத்துணை அருமையான உவமைகளைத் தருகிறான்! ஆதிசேடனும் கருடனும் பொருதது போலவும், நரசிம்மமும் இரணியனும் பொருதது போலவும் இராமனும் அரக்கர்கோனும் பொருதணர் என்று வருணிக்கிறான். இராவணன் சங்கு ஊதுகிறான். ஆனால் திருமால் சொரூபமான இராமனின் வலம்புரி சங்கோதானே ஒலிக்கின்றது.தேர்க்கொடிகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன? வெல்பவர் யார்? தோற்பவர் யார் என்று தெளிவாக இல்லாத நிலை.
சினங்கொண்ட இராவணன் ஆணவத்துடன் மொழிகிறான்.
***
குற்றம் விற்கொடு கொல்லுதல்
கோள் இலாச்
சிற்றை யாளனைத் தேவர் தம்
தேரொடும்
பற்றி வானிற் சுழற்றிப்
படியின் மேல்
எற்று வேனென்று உரைக்கும்
இரைக்கும்.
ஆத்திரம் மேலிட்ட இராவணன் கூச்சலிட்டான். என்ன என்று கர்ச்சித்தான்? “வெற்றியே தரும் என் வில்லைக் கொண்டு இவனைக் கொல்ல எண்ணமாட்டேன். கேவலம், அற்ப மனிதனான இந்த இராமனைத் தேவர் தந்த தேருடனே பற்றி வானிற் சுழற்றி, பூமியின் மேல் மோதுவேன்!” என கத்தினான்.
***
கோள் இலா - வலிமை இல்லாத; சிற்றையாளனை -சிறுவனை; விற்கொடு - (நம் கை) வில்லைக் கொண்டு; கொல்லுதல் -கொல்லுதலானது;குற்றம் - (நம் பெருமைக்குச்) குறைவாவதாகும்; (ஆதலால்) தேவர் தம் தேரோடும் - தேவர்களுக்குரிய தேரோடும்; பற்றி-இவனைப் பிடித்து; வானில் சுழற்றி - வானத்தில் சுழலச் செய்து; படியின் மேல் - பூமி மீது; எற்றுவேன் - மோதுவேன்; என்று உரைக்கும் இசைக்கும் - என்று சொல்லிக் கூச்சலிடுவான்.
***
பயமும் சினமும் இராவணனை உந்தித்தள்ள அம்புமழை பெய்கிறான். அவை கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையன என்றாலும், அவைகள் நடு வழியிலேயே அற்றுப் போய்விடுகின்றன. வலிமையிழந்தன. இருள் கவியவும் செய்தன.
***
அல்லா நெடும் பெருந் தேவரும்
மறைவாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு
விழி பொத்தினர், இரிந்தனர்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும்
விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு. அவை
விலக்கும் தொழில் வேட்டான்.
இராவணன் பாணத்தால் வானர சேனைச் சிதறியது. இராமன் என்ன செய்தான்? தேவரும் வேதவிற்பன்னரும் அஞ்சித் தம் கையைக் கொண்டு இரு கண்களையும் பொத்தினர்; வானர சேனை முழுவதுமே சிதறிய காலை, இராமன் தன் அம்பினால், இராவணனின் அம்புகளை விலக்கினான்.
***
அல்லா - (சிவபெருமான்) அல்லாத; நெடு பெருதேவரும்- நீண்டு சிறந்த தேவர்களும்; மறைவாணரும் - அந்தணர்களும்; எல்லார்களும் - (ஆகிய) யாவரும்; (இராவணன் எய்த அம்புகளின் பெருமைகளைக் கண்டு), அஞ்சி - பயந்து, கரம் கொண்டு - தம் கைகளைக் கொண்டு; இரு விழி - (தம்) இரண்டு விழிகளையும்; பொத்தினர்; இரிந்தனர் - மூடிக்கொண்டு இடம் விட்டுப் பெயர்த்தார்கள்; சேனை - (வானர) சேனை; ஆயிரம் செல் விழுங்கால் - ஆயிரம் இடிகள் ஒரே நேரத்தில் விழும்போது ; உகும்-(பொடியாகிச்)சிந்தும்; விலங்கு - மலையை; ஒத்தது - ஒத்துச் சிதறிற்று. அது கண்டு - அந்த நிலைமையைப் பார்த்து; வில்லாளனும் - வில்லை ஆள்வதில் வல்லவனான இராமபிரானும்; அவை - (இராவணன் எய்யும்) பாணங்களை; விலக்கும்படி - தடுக்குமாறு; விரைந்தான் - விரைவு கொண்டான்.
***
இராவணன் தேருடன் வானத்து எழுந்தான். இராமனும் தன் தேரை மேலெழச் செய்தான்.
இருவருக்கும் விற்போர் நடந்தது. இராமன் சரங்கள் விட, அவற்றிற்கெதிராக தன் இருபது கைகளாலும் பலவகை படைகளை வாரி அவன் மீது வீசினான்.
***
உடைக்கடல் ஏழினும்,
உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை
ஓர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என
அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு
துளியின் பான்மைய.
இராமன் அரக்கன் படைக்கலங்களைத் தடுத்தான்.எப்படி? தன்னவர் மீது அரக்கர் வீசிய படைக்கலங்களின் மழை,சேதம் விளைவிக்காமல்,சிறு மழைத்துளிகள் போல மாறும்படியாக தன் வில்லால் அழிவுப் போக்கையே மாற்றினான்.
***
(இவ்வாறு இரு தேர்களும் சூழ்ந்து வரும்), உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் - ஏழு கடல்களிலும்;(அவற்றை) உடையாகக் கொண்டு ஏழு பூமிகளிலும்; இடைப்படு தீவினும் - அவற்றிற்கு இடையே உள்ள தீவுகளிலும்; மலை ஓர் ஏழினும் - ஏழு மலைகளிலும்; அடைக்கலம் பொருள் என - (இராவணன் தன்) பாதுகாவலுக்காக வைத்திருந்த பொருள்கள் என்னும்படி; அரக்கன் வீசிய - அவ்வரக்கன் (இராமபிரான் மீது) வீசியனவுமான; படைக்கலம் – படைக்கருவிகள்: மழைபடு துளியின் பான்மைய - மேகத்தினின்றும் விழும் துளிகளின் தன்மையவாயின.
***
தேர்கள் இலங்கையை அணுகின. இராமனின் இரதத்து இடிக்கொடியை அறுத்து சிதைத்து, கடலில் விழச் செய்தான் இராவணன். தொடர்ந்து நடந்த கடும் போரில், மாதலியின் மார்பினில் அம்பு செலுத்தினான் அரக்கன். வருந்தினான் இராமன். அவனை அம்புகளைக் கொண்டு மறைத்தான் இலங்கை வேந்தன். ஆனால் இராமனோ இராவணன் மீது அம்புகளை எய்தான். அவை அவனை வருத்தியதோடு அல்லாமல், அவன் தேர்க்கொடியையும் அழித்தன.
***
தூணுடை நிரை புரை கரம்
அவை தொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை
இடை குறைய,
சேணுடை நிகர் கணை
சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும்
உறைவுறும் ஒருவன்.
இராமபிரான் இராவணன் எய்த சரங்களைக் கொய்தான். அந்த இலங்கை வேந்தன் மீது பல அம்புகளை எய்து நோவச் செய்தான். அது மட்டுமா? இலங்காதிபதி, தன் பத்து கைகளில் பிடித்திருந்த மலைகளை ஒத்த வில்களையும் தன் சிறந்த அம்பினால் துண்டுபடும்படி செய்தான். இதைச் செய்தவன் யார்? ஞானிகளின் ஆன்மாக்களில் மிக்க மகிழ்ச்சியுடன் உறைந்துள்ள இராமன் என்ற பரம்பொருள்.
***
உணர்வொடு - நல்லறிவுடன்; ஊண் உடை - (தன்னை) ஊணாகவுடையவன் ; உயிர் தொறும் - ஞானிகளிடத்தில் எல்லாம்; உறை வுறும் ஒருவன் - (விருப்போடு) வசிப்பவரான திருமாலின் அம்சமான இராமபிரான்; தூண் உடை நிரை புரை - தூண்களினுடைய வரிசையை ஒத்தனவான; கரம் அவை தொறும் - (பத்துக்) கைகளிலும் கொண்டுள்ள: அ - அந்த, கோண் உடை - வளைதலை உடைய மலை நிகர் சிலை - மலை ஒத்த விற்கள்; இடை குறைய - நடுவிலே துண்டு படும்படி சேண் உடை - வெகு தூரம் செல்லுதலை உடையனவாய்; நிகர் கணை - ஒளி கொண்ட அம்புகளை: சிதறினன் - வாரியிறைத்தான்.
இராமனின் தேரின் கொடியாக வந்தமர்ந்தான் கருடன். இராமன் இராவணன்மீது தாமதாத்திரம் விட்டான். இவ்அத்திரம் ஒன்றுக்கு ஒன்று எதிரிடையான பல விளைவுகளை விளைவித்தன. சிவ வாளியை விட்ட இராமன் திருமேனி மீது பல பாணங்களைச் செலுத்தினான் அரக்கன். இராமன் அக்கினிப் படையால் அரக்கன் செலுத்திய ஆசுர படையை அழித்தான்.
***
கூற்றுக் கோடினும் கோடல,
கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை
நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன,
உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன்,
இராவணன் நொடியில்.
கண்டான் இராவணன். கொண்டான் சினம், கொடானு கோடி உயிர்களைக் குடிக்கும் யமன் போன்ற நூற்றுக் கோடி
அம்புகளை இராவணன் எய்தான்; மிக மிக வேகமாக ஒரே நொடியில் எய்தான். அவை எத்தகையன? கடல் நீரை குடித்து, வற்றிடச் செய்யும் திறன் உடையன; மிகவும் வேகமாக காற்றையே ஈர்த்துக் கொண்டுச் செல்லும் வலிமை யுடையன. உலகையே கடந்துச் செல்லக்கூடிய அந்த அம்புகள் இடைவெளியின்றி பறந்தன.
***
கூற்றுக் கோடினும் யமன் தன்னுடைய கொல்லுதல் தொழிலினின்று வழுவினும்; கோடல - பிறழாதனவும்; கடல் எலாம் குடிப்ப - கடல் நீர் அடங்கலும் பருகுவனவும்; மேருவை - மேரு மலையை நீறு குப்பையின் நூறுவ புழுதித் தொகுதி போல ஆகுமாறு பொடி செய்வனவும்; நெடிய - நீண்டனவும்; காற்று பின் செல - விரைவில் காற்றும் தமக்குப் பின்னிட; செல்வன - செல்வனவும்; உலகெலாம் கடப்ப - உலகெல்லாம் தாண்டுவனவும் ஆன; நூறு கோடி அம்பு நூறு கோடி அம்புகளை இராவணன் நொடியில் எய்தனன் - இராவணன் ஓர் கைந் நொடிப் போதில் விடுத்தான்.
***
இருப்புக் கம்மியற்கு இழை
நுழை ஊசி என்று இயற்றி
விருப்பின், “கோடியால் விலைக்கு”
எனும் பதடியின்-விட்டான்,
கருப்புக் கார் மழை வண்ண!—
அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன்
மீள அரு மாயம்.
மாயா அத்திரம் விட்டான் இராவணன். இறந்த படைக்கலங்கள் எல்லாம் உயிரோடு எதிரிப்பது போன்ற ஒரு மயக்கத்தை உண்டாக்கியது அது. இந்த மாய அத்திரத்தைக் கண்ட மாதலி இராமனிடம், “கரிய நீர் கொண்ட மேகம் போன்ற வண்ணனே! நீயே மாயவன். அங்ஙனம் இருக்க உன் மீதே மாயா அத்திரத்தை இராவணன் ஏவியது, இரும்பு, வேலை செய்யும் கம்மியனிடம், ஊசி செய்து விலைக் கூறும் மூடச் செயலைப் போன்றது!” என்றான்.
***
கருப்பு- வற்கடக் காலத்து பெய்ய வெழுந்த; கார் மழை வண்ண - கரிய (நீர் கொண்ட மேகத்தைப் போன்ற நிறத்தவனே! இரும்பு கம்மியற்கு - இரும்புப் பணி செய்கின்ற கருங் கொல்லனுக்கு; இழை நுழை - நூலிழை புகுகின்ற; ஊசி ஒன்று இயற்றி - ஊசி யொன்றைச் செய்து; விருப்பின் - விழைவோடு விலைக்கு கொடியால் - (இந்த ஊசியை) விலைக்குப் பெற்றுக்கொள்வாயாக! எனும் என்று கூறுகின்ற; பதடியின் அறிவிலி போன்று; அ - அந்த; கடுதிசை களிற்றின் - கடுமை வாய்ந்த திசை யானையின்; மருப்பு - தந்தத்தினால்; கல்லி - அகழப்பட்ட தோளவன் - தோள்களை உடையவனான இராவணன்; மீள் அரும் - திரும்புவதற்கு அருமையான; மாயம் - மாயாத்திரத்தை; விட்டான் - விடுத்தான்.
இராமன் அதுகண்டு அஞ்சவில்லை. மறத்தை அழிக்க அறமே சிறந்தது என, ஞானக் கணையை விடுத்தான்.
***
மாயா அத்திரம் அழிந்தது கண்ட இராவணன். சூலம் கொண்டு இராமன் மீது வீசினான். இராமனின் அம்புகளால் சூலப்படையை அழிக்க முடியவில்லை. தன்னை நோக்கி வேகமாக வந்த சூலத்தைப் பார்த்தான் தசரதன் மகன். பெரிதாக ஊங்காரம் செய்தான். அடுத்த நொடி சூலம் பொடிப் பொடியாக விழுந்தது.
***
சங்காரத்தான் கண்டை ஒலிப்ப,
தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு
எதிர் ஓடி புகலோடும்,
வெங் காரத்தான் முற்றும்
முனிந்தான்; வெகுளிப்பேர்
உங்காரத்தால் உக்கது, பல்
நூறு உதிர் ஆகி.
எதிர்படும் பொருளை எல்லாம் ஒழிக்கக் கருதி சூலப் படையை இராமன் மீது ஏவினான் இலங்கை வேந்தன். இது கண்டு தேவர்கள் நடுங்கினர். இச் சூலத்தை வெல்வாய் என்று இராமனை வேண்ட, இராமன் அதை தன் உங்காரத்தினால் அழித்தான்.
***
(அந்த சூலம்), சங்காரத்தால் - அழிக்கும் தொழிலுடன் கண்டை ஒலிப்ப. மணிகள் சத்திக்கவும்; தழல் சிந்த . நெருப்புச் சிதறவும்; பொங்கு காரத்தான் - பொங்குகின்ற சினத்தினையுடைய (இராமபிரானுடைய) மார்பு எதிர் ஓடி - மார்புக்கு நேராக விரைந்து சென்று; புகலோடும் - நுழைந்த அளவில்; வெம் காரி ஒத்தான் முற்றும் முனிந்தான் - கொடிய மேகத்தை யொத்தான் மிகவும் சினந்தான்; வெகுளி - (அவனுடைய) சினத்தினால் எழுந்த; பேர் உங்காரத்தால் - பெரிய உங்கார ஒலியால்; (அந்தச் சூலம்) பல் நூறு உதிர் ஆகி - பல நூறு தூள்களாகி; உக்கது - சிதறியது.
***
சூலம் அழிந்ததை கண்கூடாகப் பார்த்தவுடன் அரக்கன் இராமனை வியப்புடன் பார்த்தான். இவன் ஒருவேளை “வேத முதல்வனோ?” என இராவணன் கருதினான்.
***
“வென்றான்,” என்றே உள்ளம்
வியந்தான், ‘விடுசூலம்
பொன்றான் என்னின் போகலது’
என்னும் பொருள் கொண்டான்
ஒன்று ஆம் உங்காரத்திடை
உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந் நாள் வீடணனார்
சொல் நினைவுற்றான்.
இராவணன் விட்ட சூலம் எத்தகையது? அவன் பகைவனான இராமன் இறந்தாலன்றி போகக் கூடியது அன்று. அவ்வாறிருக்க, ஓர் உங்காரத்தினால் அச் சூலத்தை பொடிப் பொடியாக உதிர்த்த இந்த இராமன், விபீடணன் சொன்னது போல் மும்மூர்த்திகளை விடச் சிறந்த பரம்பொருளோ? என்று வியந்தான்.
***
விடு சூலம் - நாம் எறிந்த குலப்படை, பொன்றான் என்னில் போகலது - (இராமன்) இறந்தாலன்றி (அவனை விட்டு) அப்புறம் செல்லாது; என்னும் பொருள் - என்கின்ற கோட்பாட்டை; கொண்டான் - மனத்திற் கொண்டவன் ஆன இராவணன்; ஒன்று ஆம் ஒப்பற்றதான; உங்காரத் இடை - (இராமனது) உங்காரத்தினால்; உக்கு ஓடுதல் - (அந்தப் படை) சிதறி ஓடுதலை; காணா நின்றான் - கண்டு நின்றவனாகி; வென்றான் - இவன் நம்மை வெல்பவனே ஆவன; என்றே - என்று கருதி, உள்ளம் - மனதில் எழுத்த (அச்சத்தால்); வெயர்த்தான் - வெயர்த்தான்; அந்நாள் – முன்னாளிலே; விபீடணனார் சொல் - விபீடணன் சொன்ன நல்லுரையை; நினைவுற்றான் - மனத்திற்கருதி நின்றான்.
***
“யாராயிருந்தால் என்ன? என் தனிப்பட்ட வீரத்தால் அவனை வெல்வேன்; எடுத்தக் காரியத்தை முடித்தே தீருவேன்; பின்வாங்க மாட்டேன்,” என்று உறுதி பூண்டு நிருருதி என்ற திக் பாலகருடைய படையை இராமன்மீது எய்தினான்.
***
‘ஆயிடை அரக்கனும், அழன்ற
நெஞ்சினன்,
தீயிடைப் பொடித்து எழும்
உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும்
விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடு சரம் உருமின்
தோற்றத்த.
நிருருதி படைகளை எரித்தது இரகுவீரன் ஏவிய கருடக்கணை. இந்தத் தோல்வி இராவணனின் ஆணவத்தை இன்னும் தூண்டியது. கோபக்கனல் சிந்தும் பெருமூச்சு விட்டான். இந்த உலகம், வானம், வெற்றிடம் எதுவுமே இல்லாது அழிந்துபோகட்டும் என இடியோசையுடன் கூடிய சரங்களைத் தூவினான்.
***
ஆயிடை - அப்போது; அரக்கனும் - இராவணனும்; அழன்ற நெஞ்சினன் - வேகின்ற நெஞ்சினனாய்; தீ - நெருப்பானது: இடை-இடையே; பொடிந்து எழும் - பொடியாகச் சிதறுகின்ற; உயிர்ப்பன - நெட்டுயிர்ப்புடன் கூடியவனும்; சீற்றத்தன் - சினம் உடையவனுமாகி; மா இரு ஞாலமும் விசும்பும் - விரிந்த இந்த உலகமும் ஆகாயமும்;வைப்பு அற - இடமின்றி ஒழிய, உருமின் தோற்றத்த இடியொத்த காட்சியை அடைய; சுடுசரம் - எரிக்கின்ற அம்புகளை; தூயினன் - வாரிஇறைத்தான்.
***
ஒக்க நின்று எதிர் அமர்
உடற்றும் காலையில்,
முக்கணான் தடவரை எடுத்த
மொய்ம்பற்கு
நெக்கன, விஞ்சைகள்,
நிலையின் தீர்ந்தன;
மிக்கன, இராமற்கு வலியும்
வீரமும்
இராவணனின் சரம், இராமசரத்தின் முன் வீழ்ந்தன. இராம சரம், அரக்கர்கோன் மார்பிற் பாய்ந்தது. அப்போது என்னவாயிற்று? கையிலாய மலையை எடுத்த வலிமை உடைய இராவணனுக்கு நினைவாற்றல் குறைந்தது. அவனும் தளர்ந்தான். அவன் தளர்ச்சி, இராமனுக்கு மிகுந்த வலிமையும் வீரத்தையும் கொடுத்தது.
***
ஒக்க நின்று - சரிசமமாக நின்று; எதிர் - எதிர்த்து; அமர் உடற்றும் காலையின் - போர் புரியுங்கால்; முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு - மூன்று கண்களை உடையவனான சிவபெருமானுடைய பெரிய கயிலை மலையைத் தூக்கிய தோளையுடைய இராவணனுக்கு; விஞ்சைகள் - (கற்ற) மாய வித்தைகள், தெக்கன - நினைவினின்றும் நெகிழ்ந்தனவாய்; நிலையில் தீர்ந்தன - (தம்) நினைவில் இருந்தும் அகன்றன; இராமற்கு - இராமபிரானுக்கு; வலியும் வீரமும் - வன்மையும் ஆண்மையும்; மிக்கன் - அதிகரித்தன.
சரிசமமான பலமுடைய இருவர் போரிடுகையில், எதிரி சிறிது சளைக்கக் கண்ட அளவில் மாற்றானுக்கு உற்சாகம் நிகழ்வது இயல்பு. இராவணன் தளர்ச்சியால் இராமற்கு லலியும் வீரமும் மிக்கன.
***
வேதியர் வேதத்து மெய்யன்
வெய்யவர்க்கு
ஆதியன் அணுகிய அற்றம்
நோக்கினான்
சாதியில் நிமிர்ந்தது ஓர்
தலையைத் தள்ளினான்
பாதியின் மதிமுகப் பகழி
யொன்றினால்
ஆணவத்துடன் நிமிர்ந்து நின்ற இராவணனது தலையை இராமன் அறுத்தான். அது கடலில் போய் விழுந்தது. என்றாலும் அந்தத் தலை மீண்டும் முளைத்தது. இராமனை திட்டி அதட்டியது.
***
வேதியர் வேதத்து மெய்யன் - அந்தணர்கள் ஓதுகின்ற நான்மறையின் உண்மைப் பொருளான இராமபிரான்; வெய்யவர்க்கு - தீயவர்களான அரக்கர்க்கு; ஆதியன் - முதல்வனான இராவணன்; அணுகிய அற்றம் நோக்கினான். கிட்டிய சமயம் பார்த்து; (இதுவே அரக்கன் தலையைத் துணிக்கத்தக்க சமயம் என்று கருதி); சாதியில் - இனத்தில்; நிமிர்ந்தது ஓர் தலையை - நிமிர்ந்து விளங்கும் தோற்றம் உள்ளதொரு தலையை; பாதியின் மதிமுகம் பகழி ஒன்றினால் - அர்த்த சந்திரபாணம் ஒன்றினால்; தள்ளினான் - அறுத்து வீழ்த்தினான்.
***
கடலில் விழுந்த இராவணனின் தலை ஆரவாரம் செய்தது, இராமனின் தோளில் இராவணன் பதினான்கு அம்புகளை விட்டான்.
இராவணன் கையை இரகுவீரன் அறுத்தான். என்றாலும் அதுவும் முன்போல் முளைத்தது. அற்ற தன் கையை மற்றொரு கையால் எடுத்து அரக்கன் மாதலிமீது எறிகின்றான். மாதலி நிலை குலைகிறான். இராவணன் மாதலிமீது எறிந்த தோமரம் இராகவனால் துகளாக்கப் படுகின்றன.
இராகவன் இப்போது முழுமூச்சாக அரக்கனை அழிக்க முற்படுகிறான்.
***
ஓய்வு அகன்றது, ஒரு தலை
நூறு உற,
போய் அகன்று புரள,
பொரு கணை
ஆயிரம் தொடுத்தான்—
அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை
நடத்தியே.
ஞான நாயகனான இராமன் ஓய்வின்றி கைவிசையைச் செலுத்தி, இராவணனின் தலைகளை அறுத்தான். என்றாலும் அவை மீண்டும் மீண்டும் முனளத்தன. எனவே வெகு தொலைவுக்கு அப்பால் அவை பலவிடங்களில் போய் புரளும்படி ஆயிரம் ஆயிரம் அம்புகளைத் தொடுத்தான்.
***
அறிவின் தனி நாயகன் - ஞானத்தின் ஒப்பற்ற தலைவனான இராமபிரான்; கைக்கடுமை நடத்துவான் - (தனது) கைவேகத்தைச் செலுத்துபவனாய்; ஓய்வு அகன்றது - ஓய்வு நீங்கப் பெற்றதாகி; (ஒழிவின்றி) ஒருதலை நூறு உற - ஒரு தலை நூறாக முளைக்கவும்; (அவை அனைத்தும்) அகன்றுபோய் - (வெகு தூரம்) நீங்கிச் சென்று; புரள - புரளுமாறு: பொருகணை - பொருதற்கு உரிய வாளிகள்; ஆயிரம் தொடுத்தான் - ஆயிரம் விடுத்தான்.
***
(இராவணனுடைய சிரங்களைக் கண்டன பேய்கள். முன்னர் இராவணனைக் கண்டு அஞ்சி அவனைச் சுற்றி பணிந்துவந்த பேய்கள், அவனுக்கு நேராக நின்று கண்களைத் தோண்டின. இதன் உட்பொருள் என்ன? ஒருவனுடைய புண்ணியம் அகன்றபின் அவனுடைய புகழ் முதலிய அனைத்தும் பழுதுபடும்.)
மூர்ச்சித்தான் இராவணன். அவனைக் கொல்லச் சொன்னான் மாதலி ‘நீதியன்று!’ என்றான் இராமன்.
இராவணனோ தன் தோளின் வரிசைகளில் சுமந்திருந்த ஆயுதங்களை இராமபிரான் மீது வீசி எறிந்தான். “இவனை வெல்வது எங்ஙனம்?” என்று ஆலோசித்தான் இராமன்.
***
காலும் வெங் கனலும் கடை
காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை,
மா முகம்
நாலும் கொண்டு நடந்தது,
நான் முகன்
மூல மந்திரம் தன்னொடு
மூட்டலால்.
பின்னர், அயன் படையை விடுத்தான். இது கொடுங்கனலும் வேகமுடைய கூரிய கணை. இந்த அத்திரத்தை நான்முகனுக்கு உரிய முக்கிய மந்திரத்தை உச்சரித்து விட்டதால், பெரிய நான்கு முகங்களையும் கொண்டு சென்றது.
***
மாலும் - திருமாலின் அவதாரமான இராமபிரான்: கொண்டி - கைக் கொண்டதாகி; காலும் - காற்றும்; வெம் கனலும் - கொடிய தீயும்; கடை காண்கிலா - முடிவு காணமுடியாத; (விரைவும் கொடுமையும் கொண்ட): வடிகணை - கூரிய அந்த அத்திரமானது; நான்முகன் மூலம் மந்திரம் தன்னொடு மூட்டலால் - பிரமதேவனுக்குரிய பீஜாச்சரத்தைக் கொண்ட மத்திரத்துடன் செபித்து விட்டளவில்; மா முகம் நாலும் கொண்டு நடந்தது - பெரிய முகங்கள் நான்கினையும் கொண்டு சென்றது.
***
முக்கோடி வாழ் நாளும் முயன்று உடைய
பெருந்தவமும் முதல்வன் முன்னாள்
எக்கோடி யாராலும், வெலப்படாய்
எனக் கொடுத்த வரமும் ஏனைத்
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த
புயவலியும் தின்று மார்பில்
புக்கோடி உயிர் பருகிப் புறம் போயிற்று
இராகவன் தன் புனித வாளி
தூயவனான இராமனின் அந்த அம்பு, இராவணனது முக்கோடி ஆயுளையும், முன் செய்த பெருந்தவத்தையும் பிரமன் கொடுத்த வரத்தையும், அவன் போர் வலி, புயவலி இரண்டையும் ஒழித்து அவன் மார்பிலே புகுந்து உடலெங்கும் குடைந்து உயிரைப் பருகிவிட்டு, புறத்தே போயிற்று.
இராகவன் தன் புனித வாளி - இராமன் விடுத்த தூய அத்திரமானது; (இராவணனுடைய) முக்கோடி வாழ் நாளும் - மூன்று கோடி ஆயுளையும்; முயன்று உடைய பெரு தவமும் - முயன்று செய்த பெரிய தவத்தையும்; முதல்வன் - முதற்கடவுளான பிரமதேவன்; முன் நாள் - முன் காலத்தில், எக்கோடி எவராலும் - முப்பத்து முக்கோடி தேவர்களில் எந்த வரிசையிற் சேர்ந்தவராலும்; வெலப்படாய் - நீ வெல்லப்படமாட்டாய்; என கொடுத்த வரமும் - என்று தந்த வரமும்; ஏனை - மற்றும்; திக்கு ஒடும் - திசைகளோடும்; அனைத்து உலகும் - எல்லா உலகத்திலும்; செரு கடந்த - போரினால் வென்ற புயம் வலியும் - புய வலிமையும்; தின்று - அழித்துவிட்டு; மார்பில் புக்கு - (அவனுடைய) மார்பில் நுழைந்து, ஒடி - உடலெங்கும் இசுற்றி, உயிர் பருகி - உயிரைக் குடித்துவிட்டு; புறம் போயிற்று - வெளிச் சென்றது.
***
கார் நின்ற மழை நின்றும் உரும் உதிர்வ
என, திணி தோட் காட்டின் நின்றும்,
தார் நின்ற மலை நின்றும், பணிக் குலமும்
மணிக்குலமும் தகர்ந்து சிந்த,
போர் நின்ற விழி நின்றும்பொறி நின்று
புகையோடும் குருதி பொங்கத்
தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப்
பட விழுந்தான், சிகரம் போல்வான்.
போரில் நிலைத்து நின்ற அரக்கருக்குச் சிகரமாக விளங்கிய இராவணன், கருநிற மேகத்தினின்று இடி உதிர்வது போல உதிர்ந்தான். தோள் பகுதியிலிருந்த ஆபரணங்களும் இரத்தினங்களும், மாலை அணிந்த மார்பிலே இருந்த ஆபரணங்களும் உடைந்து சிந்தின. குருதி புகையுடனே பொங்கியது. அத்தகைய பெரியவனான இராவணன் தேரினின்று தலைகீழாக விழுந்தான்.
***
சிகரம் போல்வான் - அரக்கர்க்குச் சிகரம் போன்றவன் ஆன இராவணன்; கார் நின்ற - கருமை அமைந்த; மழை நின்றும் - மேகத்திலிருந்து; உரும் உதிர்வ என - இடி உகுவது போன்று; திணி - வலிய; தோள் காட்டின் நின்றும் - தோள் தொகுதியினின்றும்; தார் நின்ற மாலை அணியப்பட்ட; மலை நின்றும் - மலை போன்ற மார்பினின்றும்; பணி குலமும் மணி குலமும் - நூதனத் தொகுதிகளும் ஆபரணத் தொகுதிகளும்; தகர்ந்து சிந்த - உடைந்து சிதறவும்; போர் நின்ற - போரில் நின்ற; விழி நின்றும் - விழியிலிருந்து: பொறி நின்று; தீப்பொறி வெளிப்பட்டு நின்று; புகையோடும் குருதி பொங்க - புகையுடனே உதிரம் பொங்கவும்; தேர் நின்று - தேரிலிருந்து; நெடு நிலத்து - அகன்ற பூமியிட்த்து; சிரம் முகம் கீழ்பட விழுந்தான் - தலையுடன் கூடிய முகம் கீழ்ப்பட (குப்புற) விழுந்தான்.
இராவணன் வீழ்ந்தாலும் அவன் முகம் பொலிவுற்றது. ஏன்? போர் சினம், சூழ்ச்சிகள், காமம், தோள் வலி ஆகியன அடங்கின. மனத்திலே நீண்ட காலத்திற்குப் பின் பிறந்தது அமைதி. அந்த அமைதி, முகத்தை மும்மடங்கு பொலிவுறச் செய்தது.
***
பூதலத்தின் ஆக்குவாய் நீ விடுமிப்
பொலந்தேரை என்ற போதின்
மாதலிப் பேர் அவன் கடவ மண்டலத்தின்
அப்பொழுதே வருதலோடும்
மீதலைத்த பெருந்தாரை விசும்பளப்பக்
கிடந்தான் தன் மேனி முற்றுங்
காதலித்த உருவாகி அறம் வளர்க்கும்
கண்ணாளன் தெரியக் கண்டான்
தேரினின்று கீழே இறங்கினான் கோசலையின் மகன், உதிர வெள்ளத்தில் கிடந்தான் இராவணன்.
தேரை இந்திரனிடம் கொண்டுபோகுமாறு மாதலியை அனுப்பிய இராமன். இராவணனைச் சென்று கண்டான். புறங்கொடா வீரன் இராவணனின் பராகிரமத்தை பாராட்டினான். அரக்கனின் மார்பில் பாய்ந்த திக்கயத்தின் தந்தம் முதுகில் அணிபோல் விளங்கக் கண்டான். மனம் உளைத்தான். விபீடணனை இராவணனின் வீழ்ச்சி மிகவும் பாதித்தது. சோகத்தால் துடித்தான்; துவண்டான்; அரற்றினான். இராமன் அவனுக்கு ஆறுதல் கூறினான். ‘உலகுள்ள அளவும் இராவணன் வாழ்வான்’ என்று கூறி, பகைமையைவிட்டு இராவணனுக்கு இறுதி கடன்களைச் செய்யப் பணித்தான்.
***
இராவணன் மாய்ந்ததை அறிந்தாள் அவன் மனைவி மண்டோதரி. ஓடி வந்தாள். அவன் உடலைத் தழுவினாள்.
***
என்று அழைத்தனள் ஏங்கி
எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு அரு
மார்பினைத்
தன் தழை கைகளால் தழுவித்
தனி
நின்று அழைத்து உயிர்த்தாள்
உயிர் நீங்கினாள்.
கணவனின் உடலைத் தழுவினாள் அவன் இன்னுயிர்த் துணைவி. அப்போதே அவ்வுடல் மீது அவளும் உயிர் துறந்து வீழ்ந்தாள். அதுகண்டு யாவரும் அம் மாதரசியைப் புகழ்ந்தனர்.
***
என்று அழைத்தனள் - கூக்குரலிட்டு அழுதவளாய்; (அந்த மண்டோதரி) ஏங்கி ஏக்கமுற்று, (பின்னர்) எழுந்துஎழுந்து அவன் - அந்த இராவணனுடைய; பொன் தழைத்தல் பொன் அணிகள் மிகுதியாக அணியப்பெற்றிருந்த; பொரு அரு மார்பினை - ஒப்பற்ற மார்பினை; தன் தழை கைகளால் தழுவி - தனது தளிர் போன்ற கரங்களால் அனைத்து; தனி நின்று - தனித்து நின்று அழைத்து - கூவி, உயிர்த்தால் - நெட்டுயிர்ப்புக் கொண்டு; உயிர் நீங்கினாள் - உயிர் நீங்கப் பெற்றாள்.
***
‘ஞானிகள், இறந்தவர்க்குறித்து, இறந்ததற்குத் துன்பப் படமாட்டார்’ என்ற உண்மையைக் கூறி விபீடணனை தேற்றுகிறான் இராகவன். இலட்சுமணனை வானர வீரர்களுடன்சென்று விபீடணனுக்கு முடி சூட்டுமாறு ஏவுகிறான். இளையவனும் அவ்வாறே செய்தான். முடிசூட்டப்பட்டபின் விபீடணன் இராமனிடம் செல்கிறான். தொழுகிறான்.
அப்போது இராமன் விபீடணனுக்கு என்ன கூறினான்?
***
உரிமை மூவுலகும்
தொழ உம்பர்தம்
பெருமை நீதி
அறன் வழிப் பேர்கிலாது
இருமையே அரசாளுதி
ஈறிலாத்
தரும சீல என்றான்
மறை தந்துளான்
எப்படி அரசு செலுத்த வேண்டுமென்ற அரச நீதியைப் போதித்தான். மூவுலகும் வணங்கும்படி, தேவர்கள் பெருந்தன்மை கொண்டும், நீதி, தருமம் ஆகிய நெறியுடன் அரசு செலுத்துமாறு கூறினான். “உனக்கு உரிய இலங்கை நாட்டின் புகழும் பெருமையும் நிலைப் பெற்றிருக்கும்படி ஆளுக.” என்றான்.
***
மறை தந்துளான் - ஆதியிலே வேதங்களை வெளியிட்டு அருளிய திருமாலின் அவதாரமாகிய இராமன்; (விபீஷணனை நோக்கி) ஈறுஇலா - அழிவு இல்லாத; தரும சீல - அற ஒழுக்கம் உடையவனே; மூவுலகும் தொழ - மூவுலகத்தினரும் உன்னை வணங்கிப் போற்ற; உம்பர்தம் பெருமை - தேவர்களின் பெருமைக்கும்; நீதி - அரச நீதிக்கும்; அறன் வழி - தரும மார்க்கத்துக்கும்; உரிமை - உரிய வழி நின்று; இருமையே - இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரும் புகழும் புண்ணியமும்; பேர்கிலாது - பிறழாமல்; அரசாளுதி - இலங்கா இராச்சியத்தை அரசாள்வாய்; என்றான்.
இப்பு றத்தின வெய்துறு காலையில்
அப்பு றத்ததை யுன்னி அனுமனைத்
துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்பு உறு இப்படிப் போயெனச் செப்பினான்
அநுமனை நோக்கினான் அண்ணல். “அழகிய மயில் போன்ற சாயலுடையவளான பிராட்டியினிடம் இங்கு நடந்த செய்திகளைச் சொல்வாயாக!” என்று சொல்லி அநுமனை அன்னையிடம் அனுப்பினான்.
***
இ புறத்து - இந்தப் பக்கத்தில்: இன - இப்படிப்பட்ட செயல்கள்; எய்துறு காலையில் - நிகழா நின்ற போதில்; அ புறத்தை - அப்பால் நடைபெற வேண்டியதை; உன்னி - ஆராய்ந்து; அநுமனை - மாருதியை (நோக்கி); துப்பு உறு அ செய்ய வாய் மணி தோகை பால் - பவளம் போன்ற அந்த சிவந்த வாயையுடைய அழகிய மயில் போன்ற சாயலளான பிராட்டியினிடம்; இ படி போய் - இங்கு நடந்த செய்திகளை; செப்பு உறு - சொல்வாயாக; என - என்று; செப்பினான் - சொல்லினான்.
***
அநுமன் பிராட்டியை அடைந்தான். தொழுதான் அன்னையை. செய்தியையும் சொன்னான். பிராட்டியும் மகிழ்ந்தாள். ஆனால், அப்பெரு மகிழ்ச்சியில் பேச முடியாது தவித்தாள். அன்னையை அண்ணலைக் காணவேண்டி அழைத்துச் செல்ல வருகிறான் விபீடணன். துறவுகோலம் விடுத்து, எல்லா அணிகலன்களை அணிந்து அலங்கரித்து வரவேண்டும் என்ற இராமனின் கட்டளையை ஏற்கிறாள் அன்னை. பிராட்டியை விமானத்திலேற்றி, இராமனிடம் அழைத்துச் செல்கின்றாள். பிராட்டி அண்ணலைக் கண்டு தொழுகிறாள்.
***
பிறப்பினுந் துணைவனைப் பிறவிப்
பேரிடர்
துறப்பினுந் துணைவனைத் தொழுது
நான் இனி
மறப்பினும் நன்றிது மாறு
வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று என்
வேக்க நீங்கினாள்.
அண்ணலைக் கண்ட அன்னை தொழுதாள்; சேவித்தாள். “நான் இனி இப் பெருமானை மறக்க நேர்ந்தாலும் நல்லதே. இதற்கு மாறாக, இப்போது உயிர் நீங்கப் பெற்றாலும் நன்றே!” என நினைத்தாள். ஏன்? அவனே பிறப்பிலும் இறப்பிலும் துணைவன் என்பதால்.
***
பிறப்பினும் - (இப் பிறப்பில் மட்டுமன்றி) எந்தப் பிறவி எடுத்தாலும்; துணைவனை - (வாழ்க்கைத்) துணைவன் ஆகின்றவனும்; பேர் பிறவி இடர் துறப்பினும் - பெரிய பிறவித் துன்பம் ஒழிந்தாலும்; துணைவனை - என்றும் உயிர்த் துணைவனாகின்றவனுமான மூர்த்தியை; நான் தொழுது - (கண்ணுற்றுச்) சேவிப்பதனால்; இனி, மறப்பினும்-(அப் பெருமானை)மறக்க நேர்ந்தாலும்; நன்று - நல்லது; இது மாறு - இதற்கு எதிரிடையாக; வேறு வீழ்ந்து இறப்பினும் - வேறு வகையாக (நான்) விழுந்து உயிர் நீங்கப் பெற்றாலும்; நன்று - (அதுவும்) நல்லதே; என - என்று நினைந்து; ஏக்கம் நீங்கினாள் - துயரம் ஒழியப் பெற்றாள்.
***
(ஆளுடை நம்பி, ‘ஆரூரானை மறக்கலுமாமே’ என்று கூறினார். அன்னை பத்து மாதங்கள் பிறன் மனைகளில் இருந்து பேராரவாரத்துடன் வெற்றி வீரன் இராமனைக் கண்ட பின்னர் அவனை மறக்கமுடியாது என்பது திண்ணம். அத்துடன் அன்றி உலகத்தில் சிருட்டிக்கப்பட்ட அனைத்திற்கும், வாழ்வளிப்பன் பரமனே. இறுதியில் இரட்டைகள் ஆனபிறப்பு இறப்பினின்று விடுவிப்பவனும், அவனே. எனவே பெத்த நிலையும் முத்தி நிலையிலும் உற்ற துணைவனான அவன் பிறப்பினும், துறப்பினும் துணைவன் என்றார் கவியரசர்.
தொழுத அன்னையை நோக்கினான் அண்ணல்.
***
கற்பினுக் கரசியைப் பெண்மைக்
காப்பினைப்
பொற்பினுக்கு அழகினைப் புகழின்
வாழ்க்கையைத்
தன் பிரிந்து அருள் புரி தருமம்
போலியை
அன்பின் அத்தலைவனும் அமைய
நோக்கினான்
முன்பு இதே அண்ணல் அவளை நோக்கினான். அதைக் கம்பன், “அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்” என்றான். ஆனால் இப்போது தொழுது நின்ற இனிய துணைவி சீதையைக் காண்கிறான் இராமன். எத்தகைய சீதை? பெண்மைக்கு இலக்கணமான அழகிய சீதை; தன்னை துன்புறுத்திய அரக்கியருக்கு அபயம் அளித்த மாதரசி சீதை; தருமமும் கற்பும் உருக்கொண்ட பதிவிரதை சீதை. அன்றைய பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் எத்துணை வித்தியாசம்? மனத்தில்தான் எத்தனை முதிர்ச்சி!
அன்னை அவனைக் கண்டு கண்ணீர் உகுத்தாள். பத்து மாத பிரிவிற்குப் பின் கூடியபோது பெருகிய இன்பக் கண்ணீர் ஒருபுறம்; பிரிந்ததற்காக வருந்தி ஓடிய துன்பக் கண்ணீர் மற்றொருபுறம். இதைக் கண்ணுற்ற இராமன் அவளைசினந்து, கடிந்துரைத்தான். காரணம்? அந்தப் பெண் மயிலின் கற்புறுதியை வெளிப்படுத்த “உன்னை ஏற்பேன் என்ற நம்பிக்கையில் வந்தாயா?” என்பது முதல் சுடுசொல். தொடர்ந்து, “நான் கடல் தாண்டி அரக்கரைப் பொருது வென்று இலங்கேசனையும் கொன்றது, உன்னை சிறையினின்றும் மீட்க அன்று; மனையாளை பிறன் கவர யாதொன்றும் எதிராகப் புரியாதுவாளா இருந்தனன் இராமன் என்ற வசைக்கு அஞ்சியே அங்ஙனம் செய்தேன். மாற்றானிடத்தில் பத்து மாதமிருந்த நீ மாசற்றவள் என கொள்வதெங்ஙனம்?”
***
கலத்தினிற் பிறந்த மாமணியிற்
காந்துறு
நலத்தினிற் பிறந்தன நடந்த
நன்மைசால்
குலத்தினிற் பிறந்திலை கோவில்
கீடம் போல்
நிலத்தினிற் பிறந்தமை நிரம்பினாய்
அரோ.
மேலும் தொடர்ந்தான் இராமன். “நீ எங்கே பிறந்தாய்? உயர் குடியிலா? இல்லையே! சனகராசன் யாக பூமியை உழுதபோது உழுபடைசாலில் தோன்றியவள் தானே! எனவே சிறந்த அணிகளில் உரிய உம் மிச்சங்களில் பதிக்கப்பெறும் மதிப்பிற்குரிய நவமணிகள் ஒளி செய்வதுபோல், புகழுடன் ஒளிரும் நற்பண்புகள் உன்னிடம் இல்லாமல் ஒழிந்தன! அத்துடனா? நீ ஒருத்தி பிறந்ததால், அரசனுடைய புகழும் அழிந்தது!” என்றான் கடுமையாக.
***
கலத்தினில் - ஆபரணங்களில்; பிறந்த - அமைக்கப்படுகிற; மாமணியில் - சிறந்த இரத்தினங்கள் போன்று; காந்துறு - விளங்குகிற; நலத்தினில் - நன்மையுடன்; பிறந்தன - பொருந்தியனவான, குணப் பண்புகள்; நடந்த - (உன்னை விட்டு) விலகின; (ஆகவே) நன்மை சால் - மேன்மை மிக்க; குலத்தினில் பிறந்திலை - உயர்ந்த குலத்திற் பிறவாமல்; கோள இல் - வலிமை இல்லாத; கீடம் போல் - புழுப் போன்று; நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் - நிலத்தினின்று நீ தோன்றியதற்குப் பொருந்திய தன்மையை நன்றாக விளக்கிக் காட்டிவிட்டாய்.
***
கண்ணினை யுதிரமும் புனலும்
கான்றுக
மண்ணினை நோக்கி மலரின்
வைகுவாள்.
புண்ணினைக் கோலுறுத் தனைய
பொம்மலாள்
உண்ணினைப் போவி நின்று
உயிர்ப்பு வீங்கினாள்.
கேட்டாள் அன்னை; தலை குனிந்தாள் அவள் கண்கள் இரத்தம் சிந்தின. தன்னை மறந்தாள்; அறிவிழந்தாள்; பெருமூச்செறிந்தாள்.
★★★
மண்ணினை நோக்கிய - (நாணத்தால்) பூமியை நோக்கித் (தலை கவிழ்ந்து) நின்ற; மலரின் வைகுவாள் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் அவதாரமாகிய பிராட்டி; (இச் சொற்களைக் கேட்டு) புண்ணினை கோல் உறுத்து அனைய - புண்ணினைக் கோல் கொண்டு குத்தினாற் போன்ற; பொம்மலாள் - வருத்தத்துடன் கூடியவளாய்; கண்ணினை - (தனது) இரண்டு விழிகளினின்றும்; உதிரமும் புனலும் - இரத்தமும் கண்ணீரும்; கான்று உக - மிகுதியாகச் சிந்த; உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் - உள்ளத்தில் அறிவிழந்தவளாய், பெருமூச்செறிந்தாள்.
★★★
தன்னை நொந்துக் கொண்டாள். இவ்வளவு வேதனைக்குப் பின்னும் மீண்டும் துயரமா? என மலைத்தாள். மாருதியை நோக்கினாள். இராமனையும் பார்த்தாள். அநுமனைக் கேட்டால் நானிருந்த தவநிலையைச் சொல்வான். ஒருவேளை அவன் இராமனிடம் தன்னுடைய அவசர நிலையைக் கூறவில்லையோ? ஆனால் அநுமன் யார்? மெய்மையான் அன்றோ. தவறு செய்வானோ? அபாண்டமாகத் தன்னை - தவம் மேற்கொண்டு இருந்த தன்னை தூற்றி, பழிகளை சுமத்தியது ராஜோ குணமல்லவா? இராமனோ சத்துவ குணமுள்ளவன் ஆயிற்றே! இத்தகைய தவற்றை செய்யலாமோ?
★★★
பார்க்கெலாம் பத்தினி
பதுமத் தானுக்கும்
பேர்க்கலாஞ் சிந்தையன்
அல்லள் பேதையேன்
ஆர்க்கலாங் கண்ணவன்
அன்று என்றால் அது
தீர்க்கலாம் தகையது தெய்வந்
தேறுமோ.
இராமனே தன் கற்பு நிலையைச் சந்தேகிக்கிறான். தானே நிரூபித்துக் காட்ட இயலாத நிலையில் பரந்தாமன் உடைய இந்த ஐயத்துடன் கூடிய உள்ளப் பாங்கினை எந்தத் தெய்வந்தான் மாற்றமுடியும் என்று சீதை இரங்குகிறாள். இதைவிட, இறந்து போயிருந்தால் இத்தகைய பழிச்சொற்களை கேட்காமலாகவாவது இருந்திருக்கலாமே என நினைக்கிறாள் பேதை.
***
பேதையேன் - பேதைப் பெண்ணாகிய யான்; பார்க்கு எலாம் - நில உலகம் அடங்கலும்; பத்தினி - (உத்தமமான) கற்பரசி; பதுமத்தானுக்கும் - (ஆக்கும் கடவுளான) பிரமதேவனுக்கும்; பேர்க்கலாம் சிந்தையன் அல்லள் - பேதிக்கக் கூடிய மனநிலை யுடையேன் அல்லேன்; (இங்ஙனம் எனினும்); பார்க்கெலாம் ஆர்க்கலாம் கண்ணவன் - புலத்தோரெல்லாம்; மகிழ்ந்து ஆரவாரிக்கும்படியான; அருட்கண்ணோக்குடையவன் ஆன இராமபிரான் - (தனது கற்பு); அன்று என்றால் - அத்தன்மைய தன்று என்று பகர்வதால்; அது - அந்த எண்ணத்தைத் தீர்க்கலாம்; தகையது - போக்கும் படியான வகையை; தெய்வம் தேறுமோ - பிறிதொரு தெய்வம் அறிந்து கொள்ளக் கூடுமோ?
***
திருமாலேதான் இராமன் என்றாலும் மங்கையர் மனநிலையை உணர்வரோ?
எனவே இனி இந்த அவப்பெயரை நீக்குவது எப்படி?
***
ஆதலிற் புறந்தினி யாருக்காக
என்
கோது அறு தவத்தினைக் கூறிக்
காட்டுகேன்
சாதலிற் சிறந்த தொன்று இல்லை
தக்கதே
வேதநின் பணியது விதியும்
என்றனள்
பிராட்டி இராமனிடம் “என் கற்பு நிலையை நிரூபித்துக் காட்டுகிறேன்?” எனக் கூறி தீக் குளிக்கப் போவதாகச் சொல்கிறாள். தீ ஒருவேளை அவளை உயிரைக் கொண்டு விட்டால், “அதுவும் நல்லதே!” என்கிறாள் விரக்தியோடு.
***
வேத - வேத வடிவினனே! ஆதலால்-இவ்வாறு ஆதலின் - இனி - இனிமேல்; என் - என்னுடைய; கோது அறு தவத்தினை - குற்றம் தீர்ந்த கற்பு நெறியை; புறத்து - வெளியே; யாருக்கு ஆக கூறி காட்டுகேன் - (வேறு) யாருக்குத்தான் சொல்லி அறிவிக்கக் கடவேன்; சாதலில் சிறந்தது ஒன்று இல்லை - இறந்துபடுதலைக் காட்டிலும் மேலானது யாதும் இன்று; நின் பணி - (சாதி) என்று நீ கட்டளை விட்டருளியது; தக்கதே - தகுதியானதே; விதியும் அது - என் தலைவிதியும் அவ்வாறு உள்ளது போலும்; என்றனள் - என்று மொழிந்தாள் பிராட்டி.
***
சீதை லட்சுமணனை நோக்கினாள். தீ யமைக்கச் சொன்னாள். இராமனும் இதற்கு அனுமதி தந்தான். பிராட்டியின் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்த வருத்தந் தோய்ந்த வார்த்தைகள் உலகையே ஆட்டி வைத்தன. இலட்சுமணனும் தீ மூட்ட, பிராட்டி அதன் அருகில் சென்றாள். தீயில் புகும் பொருட்டு அக்கினியை வலம் வந்த போது உலக சிருட்டிகளெல்லாம் ஓலமிட்டன. அது எப்படி இருந்தது? இந்தக் கோபம், தகுதியல்லாதது என்று சொல்லியது, போலிருந்தது. தேவர் நடுங்கினர், உயிர்கள் துடித்தன; கடல்கள் பொங்கி எழுந்தன; இயற்கை தன்னிலை மாறி தவித்தது.
***
கனத்தினாற் கடைந்த பூண்
முலைய கைவளை
மனத்தினால் வாக்கினான் மறு
உற்றேன் எனின்
சினத்தினால் சுடுதியாற்றிச்
செல் வாவென்றான்
புனத்துழாய்க் கணவற்கும்
வணக்கம் போக்கினாள்.
சீதை அங்கியக் கடவுளை வணங்கினாள்.
‘நான் கற்பு குறையுடையேன் ஆயின் என்னைச் சுடுக’ என்று தொழுதாள். “மனத்தாலோ, மொழியாலோ நான் களங்க முற்றவள் எனின் என்னை கோபத்தினால் சுட்டெரிப்பாயாக!” என்று சொல்லி, இராமனையும் வணங்கினாள்.
***
(அப்பொழுது), கனத்தினால் கடைந்த பூண் - பொன்னால் அராவிச் செய்யப்பட்ட அணிகலம் புனைந்த; முலைய தனங்களையுடையவளும்; கை வளை - கையில் வளை தரித்தவளுமான சீதை; (அங்கியைப் பார்த்து); தீ செல்வா - அக்கினி தேவனே! (நான்) மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் - மன, மொழிகளால் களங்கம் உற்றவள் எனின்; (என்னை நீ), சினத்தினால் சுடுதி - கோபத்தினால் சுட்டெரிப்பாயாக; என்றாள் - என்று சொல்லி; புனம் துழாய் கணவற்கும் - புனத்திற் செழிக்கும் திருத்துளவம் அணிந்த கணவனான இராமபிரானையும்; வணக்கம் போக்கினாள் - வணக்கம் செய்தாள்.
***
அக்கினியில் இறங்கினாள் சனகனின் மகள். பஞ்சு தீயில் எரிந்தது போன்று, அக்கினியானது அன்னையின் கற்புத் தீயால் வெந்தது. அன்னையோ தாமரை மலரில் செல்வது போல் எவ்வித பாதிப்புமின்றி சென்றாள். அக்கினி தேவன் அன்னையின் கற்பில் வெம்பினான்; தவித்தான்; பிராட்டியை ஏந்திக்கொண்டு, எழுந்தான்! இராமனிடம் ஓலமிட்டான்.
தீக்குளித்த அன்னை எவ்வாறு தோன்றினாள்? அவள் மேனியில் எவ்வித வாட்டமுமின்றி, பொலிவுடன் வெளிப்பட்டாள். இராமனிடம் அக்கினி முறையிடும் போது என்ன கூறினான்? ‘நான் சாதாரண தீ, எல்லாவற்றையும் எரிக்கக் கூடியவன் தான். ஆனால் சீதையின் கற்பு, தெய்வீக ‘தீ’. அந்தத் தீயிக்கு முன் இப்புறத் தீ திறனற்றதாகிவிடும். அதுவுமன்றி, அத் தீ, இத் தீயை பொசுக்கும்.’
(இராமன், ஏன் சீதை தீக்குளிக்க அனுமதித்தான்? பண்டை காலத்தில் எந்நாட்டிலும் இந்த வழக்கு பிரபலமாக இருந்தது. தாம் நெறி தவறாதவர் என்பதை நிரூபிக்க மேற்கொள்ளப்பட்ட இவ் வழக்கத்தின்படியே இராமன் சீதை தீக்குளிக்க ஒப்பினான்.)
மேலும் அக்கினி தேவன் கூறினான்; “சீதை கற்புக்கரசி, இவள் வெகுண்டு சாபமிட்டால் உலகமே அழிந்துவிடும்.” என்று கூறி பிராட்டியை இராமனருகிற் கொணர்ந்தான். அப்போது மூவுலகும் அன்னையை வாழ்த்தியது.
இராமன் என்ன செய்தான்?
***
அழிப்பில சான்று நீ யுலகுக்கு
ஆதலால்
இழிப்பில சொல்லி நீ இவளை
யாதுமோர்
பழிப்பிலள் என்றனை பழியும்
இன்றி இனிக்
கழிப்பிலள் என்றனன் கருணை
உள்ளத்தான்.
அருகில் வந்த அன்னையை கருணையுடன் நோக்கினான் கொடிய பகைவனுக்கும் கருணைக் காட்டிய அண்ணல். “நீ உலக சீவராசிகட்கு எல்லாம் நெறி பிறழாத சாட்சி ஆவாய். ஆதலால், சீதையின் கற்பின் திறத்தை உலகுக்கே உணர்த்தினாய்; இவள் ஒழுக்கம் குற்றமற்றது; பழி ஏதும் இல்லாததை உணர்த்தினாய். எனவே சீதை இனி நீக்கத் தக்கவள் அல்லள்!” என்று அக்கினியிடம் கூறி அன்னையை ஏற்றான்.
***
கருணை உள்ளத்தான் - அருளொடு கூடிய நெஞ்சினன் ஆன இராமபிரான்; நீ உலகுக்கு அழிப்பில சான்று - நீ உலகத்துச் சீவராசிகட்கெல்லாம்; (நெறி பிறழாத) சாட்சியாவாய் ஆதலால் - ஆதலின்; இழிப்பு இல - இகழ்வதற்கு இடமில்லாத; சொல்லி - உயர்ந்த மொழிகளைக் கூறி; நீ இவளை - நீ இந்தச் சீதாதேவியை; யாதும் ஓர் பழிப்பிலள் - எந்தவிதமான குற்றம் இல்லாதவள்; என்றனை - என்று பகர்ந்தாய்; பழியும் இன்று - எனவே (இவளிடம் எவ்வகைப்) பழியும் இல்லை; இனி கழிப்பிலள் - இனி (இவள்) நீக்கத்தக்கவள் அல்லள்; என்றனன் - என்று கூறினன்.
***
இராமபிரான் பரதனைச் சந்திக்கும் காலம் வந்ததை அறிந்தான். அயோத்திக்குச் செல்ல விபீடணன் கொண்டு வந்த புட்பக விமானத்தில் பிராட்டியுடனும் இளையவன் உடனும் ஏறுகிறான். விபீடணனையும், சுக்ரீவனையும், அநுமனையும், அங்கதனையும் மற்றைய எல்லோரையும் தத்தம் ஊருக்குச் செல்ல கூறியபோது, அவர்கள் இராமபிரானின் முடிசூட்டு விழாவைக் காண விரும்புவதாகக் கூறுகின்றனர். இராமன் மகிழ்கிறான். வானரர் அனைவரும் மனித வடிவங் கொள்கின்றனர். அவர்களும் விமானம் ஏறி வருகின்றனர். வடக்கு நோக்கிச் செல்கையில் ஒவ்வோர் இடத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறிக் கொண்டே செல்கின்றனர். அநுமனை சுக்ரீவன் வானர மகளிரை அழைத்து வருமாறு பணிக்கிறான். அவர்களையும் அழைத்து வருகிறான் அநுமன். தண்டகவனம், சித்திரக் கூடம், பாரத்துவாச ஆசிரமம் ஆகியவைகளைக் கடக்கும்போது, பாரத்துவாச முனிவர் இராமனை எதிர்கொண்டு தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அம் முனிவர் பரதனைப் பற்றி கூறுகிறார்.
இராமன் மாருதிக்கு ஒரு அரிய பணியைச் செய்யும்படி கூறுகிறான்.
இன்று நாம்பதி வருது முன்
மாருதி யீண்டச்
சென்று தீதின்மை செப்பியத்
தீயவித் திளையோன்
நின்ற நீர்மையு நினைவு நீ
தேர்ந்தெம்மின் நேர்தல்
நின்றெ னாவான் மோதிரங்
கையொடு நடந்தான்.
அப் பணி யாது? “நான் ஊர் வந்து சேரும் முன்பே, நீ இப்போதே நந்தி கிராமத்திற்கு விரைந்துச் செல். பரதனைச் சந்தித்து நான் நலமாகயிருப்பதை தெரிவி. அவன் செய்ய நினைத்திருக்கும் செயலைத் தடுத்து நிறுத்து. இந்த மோதிரத்தை அவனிடம் கொடு!” என்று மோதிரத்தை அநுமனிடம் கொடுத்தான். வாயு மைந்தன் பறந்தான்
***
மாருதி - அநுமான்! நீ - நீ; நாம் பதி வருதும் முன் - நாம் அயோத்தி நகர்க்கு வருவதன் முன்னரே; இன்று - இப்பொழுதே; ஈண்ட சென்று - விரைந்து போய்; (நந்திக் கிராமத்தின் கண் உள்ள பரதனுக்கு); தீ தின்மை செப்பி - எனது நலத்தைப் பகர்ந்து; அ தீ அவித்து - (அவன் புகுவதற்காக மூட்டப்பட்ட) தீயை அணைத்து; இளையோன் - (எனது தம்பியாகிய) அப் பரதன்; நின்ற நீர்மையும் - மேற்கொண்டு நின்ற தன்மையும்; நினைவும் - அவன் மனத்து எண்ணத்தையும்; தேர்ந்து - ஆராய்ந்தறிந்து; எம்மின் நேர்தல் - எம்பால் வந்து அடைதல்; நன்று - நல்லது; எனா - என்று கூறி; (தன் கை மோதிரத்தைத் தர) அவன் - அந்த மாருதி; மோதிரம் கை கொடு நடந்தான் - மோதிரத்தைக் கையில் ஏற்றுக்கொண்டு சென்றான்.
***
பரதன் ஏன் தீ வளர்த்தான்? எதற்கு தீயில் விழத் துணியவேண்டும்? இது, ஏன், ஏன்?
***
என்ன தாகுங் கொலவ்வர
மென்றியேல்
சொன்ன நாளில் இராகவன்
தோன்றிலன்
மின்னு தீயிடை யானினி
வீடுவேன்
மன்னன் ஆதியென் சொல்லை
மறாது என்றான்.
இராமபிரானைச் சித்திரக் கூடத்தில் சந்தித்து, அயோத்தி அரசை ஏற்கவேண்டுமென்று பதினான்கு ஆண்டுகளுக்கு முன் வேண்டிக்கொண்டான் அல்லவா? அப்போது இராமன் இன்று - பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நாளன்று வருவதாக வாக்களித்தான். “அவன் சொன்ன நாளில் வரவில்லை. எனவே, முன்பு சூளுரைத்தபடி நான் தீயில் விழுந்து உயிர் துறப்பேன். நீ அயோத்திக்கு மன்னன் ஆவாய்!” என்று பரதன் சத்துருக்கனனிடம் கூறினான்.
***
(பின்னும் பரதன் இளவலைப்பார்த்து), அ வரம் என்னது ஆகும் கொல் என்றியேல் - அந்த வரம் யாதாகுமோ என்று வினவுவாயாகில் (கூறுவேன்); சொன்ன நாளில் - நான் வருவதாகச் சொல்லிய நாளில்; இராகவன் தோன்றிலன் - இராகவன் வரவில்லை; (ஆதலின் நான் முன்னரே சூளுரைத்தபடி)[2]
இனி - இப்பொழுது; மின்னு தீ இடை - ஒளி விட்டெரிகின்ற தீயினில்; யான் வீடுவென் - விழுந்து உயிர் துறப்பேன்; என் சொல்லை மாறாது - (நீ) என் சொல்லை மறுக்காமல்; மன்னன் ஆதி - (அயோத்திக்கு) அரசன் ஆவாய்; என்றான் - என்று மொழிந்தான்.
***
பரதனுக்குச் சத்துருக்கனன் எவ்வளவோ சமாதானம் கூறினான். பரதன் அதனை ஏற்க மறுத்தான். தீ மூட்டக் கட்டளையிட்டான்.
கோசலை விவரம் அறிந்தாள். ஓடோடி வந்தாள். பரதனுக்கு நீதி பல உரைத்தாள். பரதனை தடுத்து நிறுத்த பார்த்தாள். பரதன் கோசலையின் சொல்லை ஏற்க மறுத்தான். இராமன் வராதது அவனை நிஷ்டூரமாகப் பேச வைத்தது. தீயிக்குப் பூசை செய்தான் பரதன். திடீரென்று எதிரே பெரு வடிவுகொண்டு மாருதி நின்றான்,
***
ஐயன் வந்தனன்;
ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய்யன்ன
நின்னுயிர் வீடினால்
உய்யுமோ அவன்
என்று உரைத்து உட்புகா
கையினால் எரியைக்
கரியாக்கினான்.
“தலைவன் இராமன் வந்தனன்; வாய்மையின் உருவான அவன் வரும்போது, நீ உயிர்விட்டால், அவன் மட்டும் வாழ்வனோ?” என்று உரக்கக் கூறிக்கொண்டே அப் பெருங்கூட்டத்தில் நுழைந்தான் வாயு மைந்தன். கையால் அத்தீயைப் பிசைந்து கரியாக்கினான்.
***
ஐயன் வந்தனன் - தலைவனாகிய இராமன் வந்தான்; ஆரியன் வந்தனன் - பெரியோன் வந்தான்; மெய்யின் மெய் அன்ன - வாய்மையின் உடல் போன்ற (வாய்மை வழுவாத) நின் உயிர் வீடினால் - உனது உயிர் போனால்; அவன் உய்யுமோ - அந்த இராமன் உயிர் வாழ்வானோ; என்று உரைத்து - என்று கூறி; உட்புகா - அந்தக் கூட்டத்தின் உள்ளே புகுந்து; கையினால் - தன் கைகளால்; எரியை - அத் தீயை; கரியாக்கினான் - அவித்துக் கரியாக்கினான்.
***
அத்துடன் இராமபிரான் பாரத்துவாச முனிவர் ஆசிரமத்தில் இருப்பதையும், கடிது வருவான் என்றும் கூறினான். அண்ணல் கொடுத்த மோதிரத்தைப் பரதனுக்குக் காட்டினான். பெரு மகிழ்ச்சி அடைந்தான் பரதன். அங்குள்ள யாவரும் மகிழ்ந்து ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.
பரதன் அநுமனைப் பாராட்டி, ‘நீ யார்?’ என்று கேட்டான். அநுமன் தன் வரலாற்றைக் கூறினான். ‘நான் இராமனின் அடிமை’. பின் தன் பேருருவத்தையும் காட்டினான். பார்த்தவர் அச்சமுற்றனர்.பரதனின் வேண்டுகோளுக்கிணங்க தன் சுய உருவு கொண்டான். பரதன் அவனுக்குப் பரிசளித்தான்.
பரதன் அயோத்தி நகரை அலங்கரிக்குமாறு கட்டளை இடுகிறான். நகரம் விழாக் கோலம் பூணுகிறது. பலரும் இராமபிரானை எதிர்கொண்டழைக்கச் செல்கின்றனர். மாருதியுடன், தாய்மார் மூவரும், பரதனும் செல்கின்றனர். வழியில் மாகுதி பரதனுக்கு இதுவரை நடந்தவற்றைக் கூறிக்கொண்டே போகின்றான். கங்கை கரையும் அடைந்தாயிற்று. இன்னமும் இராமன் வரவில்லையே என்று ஏங்குகிறான் பரதன். குகன் தன் சேனையோடு வருகின்றான். சுக்ரீவனும் விபீடணனும் வருகின்றனர். இராமனும் விமானத்தில் வருவதைக்கண்டு பேருவகைக் கொள்கிறான் பரதன். விமானத்திலிருந்து இறங்கிய இராமன் வசிட்ட முனிவனை வணங்குகிறான். முதன்முதலில் கைகேயியை வணங்குகிறான். பின்னரே ஏனைய தாய்மாரையும் வணங்குகிறான்! பிராட்டியும் இளையவனும் வணங்கி, ஆசி பெறுகின்றனர்.
பரதன் லட்சுமணனை தழுவுகிறான்.
‘தனிமை நீக்கி, காடுறைந்தது
உலைந்த மெய்யோ கையறு கவலை
உரநாடுறைந்து உலைந்த மெய்யோ நைந்தது.’
என உலகம் நைந்தது.
வந்தவர்களை தம்பியர்க்கு அறிமுகம் செய்விக்கிறான் இராகவன். சுமந்திரனும் அமைச்சர்களும் வருகின்றனர். விமானம் நந்திக் கிராமத்தை அடைகிறது.
***
நம்பிய பரதனோடு நந்தியம் பதியை
நண்ணி
வம்பலர் சடையும் மாற்றி
மயிர் வின முற்றி மற்றைத்
தம்பியரோடு தானும் சரயுவின்
புனலிற் தோய்ந்தே
உம்பரு மூவகை கூர ஒப்பனை
ஒப்பச் செய்தார்.
நந்திக் கிராமத்தை அடைந்த இராமன் தன் சடா முடியை கழிக்கின்றான். சரயூ நதியில் நீராடி அலங்காரம் செய்துக்கொள்கிறான், தம்பியர் செய்யும் ஒப்பனையை புன்சிரிப்புடன் ஏற்கிறான்.
***
நம்பிய - தன்னிடம் விசேடப் பற்றுள்ள; பரதனோடு - பரதனுடனே; மற்றைத் தம்பியரோடு - மற்றைத் தம்பியரும்; தானும் - தானுமாக; நந்தி அம்பதியை நண்ணி - நந்திக் கிராமமாகிய அழகிய நகரத்தை அடைந்து; வம்பு அலர் சடையும் மாற்றி - நறுமணம் கமழ்கின்ற சடையைக் கழித்து; மயிர் வினை முற்றி - மயிர் கழிக்கும் செயலையும் முடித்து; சரயுவின் புனலிற் தோய்ந்து - (சரயூ நதியின்) நீரில் முழுகி நீராடிய பின்; உம்பரும் உவகை கூர - தேவர்களும் மகிழ்ச்சி மிகுமாறு; ஒப்பனை ஒப்பச் செய்தார் - அலங்காரங்கள் தக்க வகையில் செய்தார்கள்.
***
இராமன் வரவு கேட்ட பரதன் பெரிதும் மகிழ்ந்தான். துள்ளினான்; குதித்தான். நகரை அலங்கரிக்கக் சொன்னான். நால்வகைச் சேனையும், மந்திரியும் மற்றையோர் புடைசூழச் சென்று இராமனை அழைத்துக்கொண்டு அயோத்தி அடைந்தான்.
அயோத்தி மாநகர் மக்கள், மகிழ்ச்சியால் துள்ளினர்.
இராமனின் திருமுடிசூட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திருமுடிசூட்டுவதற்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடக்கின்றன. அபிடேகத்திற்காகப் பல புண்ணிய நதிகளினின்றும் தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது, அநுமனால், மறுநாளே, முடிசூட்டு விழா நாளும் ஓரையும் ஆராய்ந்து ஓலை தீட்டி அனைவருக்கும் அனுப்புகின்றனர்.
பளிங்கு மாடத்தில் அண்ணலும் அன்னையும் பீடத்தில் அமர்ந்திருக்கும் கண்கொளாக் காட்சியைக் காண திரள்கிறது மூவுலகும். விழா ஆரம்பிக்கிறது. அபிஷேகம் முடிகிறது. பின்?
***
அரியணை அநுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச
விரை செறி கமலத்தாள் சேர்
வெண்ணெயூர் சடையன் தன்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மெளலி
***
இந்த விழாவிலே அரியணையை அநுமன் தாங்குகிறான்; அங்கதன் உடைவாளைப் பற்றுகிறான். பரதன் வெண்குடை பிடிக்கிறான். மற்ற இரு சகோதரர்களும் சாமரம் வீச, அப்போது சடையப்ப வள்ளலின் முன்னோர் எடுத்து கொடுக்க வசிட்டன், இராமனுக்குப் புனைந்தான் மெளலி.
***
அரியணை - சிங்காதனத்தை; அநுமன் தாங்க - அநுமன் தாங்கவும்; அங்கதன் உடைவாள் ஏந்த - அங்கதன் உடைவாள் ஏந்தி நிற்கவும்; பரதன் வெண்குடை கவிக்க - பரதன் பூச்சக்கரக் குடை பிடிக்கவும்; இருவரும் - மற்ற சகோதரர் இருவரும்; கவரி வீச - சாமரை வீசவும்; விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணெயூர் சடையன் தன் மரபுளோர் - நறுமணம் வீசப்பெற்ற தாமரையில் வசிக்கும் திருமகள் சேர்ந்திருக்கப் பெற்ற திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர்; கொடுக்க, வாங்கி வசிட்டனே - எடுத்துக் கொடுக்கவும் வசிட்ட முனிவனே; புனைந்தான் மௌலி - முடிசூட்டினான்.
பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்படுகிறது.
முடிசூட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவர்க்கும் விடைகொடுக்க, ஶ்ரீராமன் சீதாதேவியுடன் ஓலக்க மண்டபம் வருகிறார். சிங்காதனத்தில் வீற்று, அந்தணர்களுக்கு தானமளிக்கிறார். வந்த அரசர்களுக்கும் வெகுமதி அளித்து விடை தருகிறார். குகன், அநுமன், விபீடணன், சுக்ரீவன் ஆகியோருக்கு விடை கொடுத்தனுப்ப, அவர்கள் தத்தம் இடத்திற்குச் செல்கின்றனர்.
***
வாழிய சீர் இராமன்
வாழிய சீதை கோமான்
வாழிய கௌசலேசை
மணி வயிறு உதித்த வள்ளல்
வாழிய வாலி மார்பு
மராமரம் ஏழும் சாய
வாழிய கணை ஒன்று ஏவும்
தசரதன் மதலை வாழி
***
- ↑ மூல - என்பது தொன்றுதொட்டு வருஞ்சேனை. பல - என்பது படை பலம்: மூல படை தவிர ஏனைய படைகள்: நாட்டுப் படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப் படை, கூலிப்படை. ஆக ஆறு வகைப் படைகள்.
- ↑
ஆ மெனில் ஏழிரண்டாண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோமுறை புரிகிலை என்னில் கூர் எரி
சாம்; இது சரதம்; நின் ஆணை; சாற்றினேன்.(சித்திரக் கூடத்தில் பரதன் செய்த சபதம்)