2. கவி உலகில் கம்பர் இடம்

லை, இலக்கியம், முதலிய காரியாதிகளிலே பழம் பெருமை வாய்ந்தவர்கள் கிரேக்கர். ஹோமர் போன்ற மகாகவிகளும், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஸாக்ரடீஸ் போன்ற அதிமேதாவிகளும் கிரேக்கர்களின் இலக்கிய வளத்திற்குப் பெருமை கொடுக்கிறார்கள். ஆதலால் எதற்கெடுத்தாலும், எந்த இலக்கியத்தையெடுத்தாலும் எந்தக் காவியத்தைப் பார்த்தாலும் கிரேக்க இலக்கியங்களோடு ஒப்பு நோக்கியோ அல்லது அரிஸ்டாட்டில் பிளேட்டோ முதலானவர்கள் சொல்லும் இலக்கண உரை கல்லில் உரைத்துப் பார்த்தோதான் எடை போடுகின்ற பழக்கம் ரசிகர்களிடையே, விமர்சகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

ஒரேயொரு சின்ன விஷயம். அதைப் புலவர், பல தேசத்துப் புலவர், பல பாஷைக் கவிஞர்கள் எப்படி எப்படி எல்லாம் சொல்ல முற்படுகிறார்கள் என்று பார்க்கலாம்.

கிரேக்கர்களின் சிறந்த இலக்கியம் ஹோமர் எழுதிய இலியட். டிராய் நகரத்து அரசன் பாரிஸ் என்பவன் ஹெலன் என்ற பெண்ணைத் தூக்கிச் செல்கிறான். அதனால் சண்டை மூளுகிறது. டிராய் நகரத்தில் எல்லாம் சீதாபஹரணத்தினால் ஏற்பட்ட இராம ராவணப் போர் போலத்தான். டிராய் நகரத்தின் மீது கிரேக்கர்களின் போர்க்கடவுளான மார்ஸ் (Mars) தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துவிடுகிறான். அந்த நேரத்தில் அந்த நாட்டில் எழுந்த உற்பாதங்களை ஹோமர் வர்ணிக்கிறார்.

The Mountains Shock
The Rapid Streems Stood Still.

என்றும் நிலைபெற்றிருக்கிற மலைகளும் நடுங்கிவிட்டன. விரைவாக ஓடிக் கொண்டிருந்த நதிகளும் அப்படியே நின்றுவிட்டன. சலனமில்லாததும், சலனமுடையதுமே ஸ்தம்பித்து விடுகின்றன, நாட்டில் ஏற்பட இருக்கும் ஒரு பெரிய தீமை காரணமாக என்று அறிகிறோம்.

ஆங்கில நாட்டில் உயந்த கவி என்று மதிக்கப்படுகிறார் ஜான் மில்டன். அவர் பாடியுள்ள சுவர்க்க நீக்கம் (Paradise Lost) சுவர்க்க (Paradise Regained) பிரசித்தமான இலக்கியங்கள். சுவர்க்க நீக்கம் மேலை நாட்டு மொழிகள் அத்தனையிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்தக் கவிஞனுக்கும் ஹோமருக்குக் கிடைத்தது போல ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இன்ப வாழ்வின் இருப்பிடமாகிய ஏதேன் தோட்டத்தில் ஆதி மக்களாகிய ஆதாமையும் ஏவாளையும் இருக்கும்படி பணிக்கிறார். இறைவன் அவர்கள் அங்கே வாழ்வதற்கு ஒரு சிறு நிபந்தனையையும் போடுகிறார் அவர். அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லா மரத்தின் கனிகளையும் பறிக்கலாம், சாப்பிடலாம். ஆனால் ஒரேயொரு மரத்தை மட்டும் அணுகக் கூடாது. அதில் பழுக்கும் பழங்களையும் விலக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால், சாத்தான் சும்மா இருப்பானா? ஏவாளை அணுகினான். விலக்கப்பட்ட மரத்தின் கனி ருசியைப் பற்றிப் பிரமாதமாகப் பேசினான். இந்தக் கடவுள் இந்த ஒரு மரத்தை மட்டும் விலக்கி வைத்திருப்பானேன்? அதிலே தானே அவருடைய சூது இருக்கிறது என்றெல்லாம் தூபம் போட்டான். அந்த மரத்தின் கனியை உண்டு தனக்கும் வருங்கால சந்ததியருக்கும் பாப மூட்டையைக் கட்டிக் கொடுக்கத் தயாராகிவிட்டாள் ஏவாள். எல்லாம் சாத்தானின் சாகசப் பேச்சில் மயங்கித்தான். ஏவாள் அந்த மரத்தை அணுகி பழத்தைக் கொய்கிறாள். அவளுடைய செய்கையால் உலகமே துன்பத்தில் உழல இருக்கிறது. ஒரு பெரிய உத்பாதமே நிகழ இருக்கிறதல்லவா? இயற்கை இந்தச் செயலை அறிந்து துடிக்கிறது. இதை வர்ணிக்கிறார் மில்டன்.

Earth felt the wound
And nature from her seat
signinp though all her works
Gave signs of woe
That all was lost.

என்பது மில்டன் கூறுவதாகும். பூமாதேவியின் இதயமே புண்பட்டுவிட்டது. இந்தக் காரியத்தால் இயற்கை தன்னுடைய ஒவ்வொரு செய்கையாலும் பெருமூச்செறிகிறாள். ஐயோ எல்லாம் பாழாகிவிட்டதே என்று அங்கலாய்க்கிறாள் என்று மில்டன் கூறும்போது, ஏது ஹோமர் சொல்லிய கருத்துகளின் எதிரொலி போலல்லவா இருக்கிறது இது என்று தோன்றுகிறது நமக்கு.

சரி மேலைநாட்டினர் தாம் அவர் தம் இலக்கியங்களில் இப்படியெல்லாம் சொல்லக்கூடும் என்றில்லை. கீழை நாட்டுக் கவிஞர்கள் இலக்கிய கர்த்தர்கள் இதே விஷயத்தை எப்படி எப்படி எல்லாம் சொல்லுவார்கள். சொல்ல முற்படுவார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா.

வடமொழிக் கவிஞனான வான்மீகி, ராமாயணத்தின் ஆதிகர்த்தாதான், இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை வர்ணிக்க வேண்டிய அவசியம் ஒன்றை உண்டாக்கிக் கொள்கிறான். பஞ்சவடியிலே பர்ணசாலை அமைத்துக் கொண்டு, ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் வாழ்ந்து வருகிறார்கள். ராமன் மேல் தீராத மையல் கொண்ட சூர்ப்பனகை, சீதையைத் தாக்க முயன்று, இலக்குவனால் முக்கறுபட்டு, மானபங்கம் அடைகிறாள். சூர்ப்பனகையின் தூண்டுதலால் இராவணன் சீதையை எடுத்துப்போக விரைகிறான். மாயமானை ஏவுகிறான். இராமனையும் லக்ஷ்மணனையும் சீதையிடம் இருந்து பிரிக்கிறான். தனித்திருக்கும் சீதையிடம் மாய சந்நியாசி வேடத்தில் அணுகுகிறான். சீதாபஹரணத்தினால் என்ன என்ன விளைவுகள் உத்பாதங்கள் எல்லாமோ நேரிடப் போகிறதோ அரக்கர் குலத்தின் அழிவே அல்லவா அதனால் ஏற்பட இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இயற்கை எப்படி துடித்தது என்பதைச் சொல்ல விரும்பிய வான்மீகி

ஜனஸ்தானத்தில் நின்ற மரங்கள்
அசைவொழிந்தன
காற்று அடங்கிவிட்டது
கோதாவரி நதியும் பயந்து
அப்படியே ஸ்தம்பித்து மெல்ல
நகர ஆரம்பித்துவிட்டது

என்று நயமாகச் சொல்கிறார்.

இந்த வான்மீகி சொன்ன கதையே ஆசையோடு தமிழர்களுக்கு தர விரும்பிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் இதே கட்டத்தைச் சொல்கிறான்.


நடுங்கின மலைகளும்
மரமும் நா அவிந்து
அடங்கின பறவையும்
விலங்கும் அஞ்சின

படம் குறைந்து ஒதுங்கின
பாம்பும் பாதகக்
கடுந்தொழில் அரக்கனைக்
காணும் கண்ணினே.

என்று. ஹோமர், மில்டன், வான்மீகி, கம்பன் எனும் நான்கு மகாகவிகள் ஒரே விஷயத்தை எப்படி எப்படி எல்லாம் சொல்கிறார்கள் என்று பார்த்தோம். அறம் திறம்பிய ஒரு காரியத்தால் இயற்கையே துயருறும் என்ற சாதாரண விஷயத்தைத் தான் சொல்கிறார்கள் நால்வரும். மலைகளை நடுங்க வைக்கிறார், ஓடும் நதியை ஸ்தம்பிக்கச் செய்கிறார், ஹோமர். இயற்கையின் இதயத்தையே கீறிக் காட்டுகிறார் மில்டன். வான்மீகரோ மரங்களை அசைவற்றிருக்கச் செய்கிறார், ஓடும் நதியை ஸ்தம்பிக்கச் செய்கிறார். ஏன், காற்றின் மூச்சையே பிடித்து அமுக்கி நிறுத்திவிடுகிறார். இத்தனை பேர் சொன்னதையும் தொகுத்துச் சொல்பவன் போல கம்பன் மலைகளையும், மரங்களையும், நடுங்க வைக்கிறான். பறவைகளையும் விலங்குகளையும் அஞ்ச வைக்கிறான். மேலும் ஊரும் இனமாகிய பாம்பையும் படத்தைக் கீழே போட்டுப் படுக்க வைக்கிறான். கருத்துகள் எல்லாம் ஒரே படித்தாக இருந்தாலும் அவைகளைச் சொல்லுவதிலே சொல்லுக்குச் சொல்லழகு ஏற்றுவதிலே கம்பன் எல்லோரையும் விஞ்சத்தான் செய்கிறான். இக்கவிஞர்கள் ஒருவரிலிருந்து ஒருவரைப் பிரித்து வைக்கும் இடை நெடுங்காலமும், தூரமும் எவ்வளவினதாகவோ இருக்கிறது. இருந்தாலும் மகாகவிகள், மகா மேதாவிகள் எல்லாம் ஒரு படித்தாகவே எண்ணுவார்கள் என்ற உண்மையை விளக்கிவிடுகிறார்கள் இவர்கள்.

இதிலிருந்து தெரிகிறது கவிச் சக்கரவர்த்தி கம்பன் உலக மகாகவிகளோடு ஒருங்கு வைத்து எண்ணப்படுகிறார் என்று. கிரேக்கர்களுக்கு ஹோமர் எப்படியோ, ரோமர்களுக்கு விர்ஜில் எப்படியோ, இத்தாலியர்களுக்கு டாண்டி எப்படியோ, ஜெர்மானியர்களுக்கு கெத்தே எப்படியோ, ஆங்கிலேயர்களுக்கு மில்டன், ஷேக்ஸ்பியர் எப்படியோ வட இந்தியர்களுக்கு வான்மீகியும் காளிதாசனும் எப்படியோ அப்படியே தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமே பெருமை கொடுக்கிறான் கம்பன் என்பர் ராவ், சாஹிப், பால் நாடார் அவர்கள். அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மையே என்று நான் இப்போது தெரிந்துகொண்டேன்.

கவி உலகிலே கம்பனுடைய இடம் என்ன என்று கேள்வி எழும்போது, அது சாதாரணமாகத் தமிழ்க்கவி உலகிலே அவர் ஸ்தானம் என்ன என்பதைப் பற்றி அல்ல. தமிழ்க் கவி உலகிலே அவன்தான் ஏக சக்ராதிபத்யம் செய்கிறானே! கவிச் சக்கரவர்த்தி கம்பன் என்ற நிறைந்த மொழிகளால் அழைக்கப்படுகிறான். கல்வியில் பெரியவன் கம்பன் என்றும் பாராட்டப்படுகிறான். ஆதலால் அவனுடைய ஸ்தானத்தை தமிழ்க்கவி உலகிலே நிர்ணயிப்பது என்பது பிரமாதமான காரியமே இல்லை தான்.

ஆனால் உலக மகாகவிகளோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் இக்கம்பன் அவர்களிடையே வகிக்கும் ஸ்தானம் என்ன என்பதைப் பற்றித்தான் கேள்வி. இந்தக் கேள்விக்குத் தீர்மானமாக ஒரு விடை நாம் பெறுவதற்கு மேல்நாட்டு இலக்கியரசிகர்கள் உதவியைத்தான் முதன்முதலில் நாம் நாடவேண்டும். மேல்நாட்டு இலக்கியங்கள் அத்தனையும் ஒன்றாய்ச் சேர்த்து எடை போட்டு அதன் தராதம்யங்களை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ரசிகர்கள், விமர்சகர்கள் ஒரு சிலரே உண்டு. அவர்களின் டிரைடன் (Dryden) என்ற ஆங்கிலப் புலவன் ஒருவன் அந்த வேலை செய்வதில் ஒப்பற்றவன்தான். அவன் சொன்னான், ஒரு காலத்தில் இந்த உலகத்திலே இத்தனை வருஷங்களுக்கிடையிலே மூன்றே மூன்று மகா கவிகள்தான் தோன்றியிருக்கிறார்கள். அவர்களால் புகழ்பெற்ற நாடுகள் கிரீசும் இத்தாலியும், இங்கிலாந்துமே. இம்மூவரில் முன்னவனான ஹோமர் அர்த்த கவுரவ முதிர்ச்சியுடைய பாக்களை அருளினான். இடைநின்ற வர்ஜிலோ கவிதா நடையின் உன்னதத்தினால் மாண்பு பெற்றான். மூன்றாவது கவிஞனை உருவாக்க இயற்கையன்னை நெடுநாள் தவம் கிடந்தாள். கடைசியாக அந்த கவுரவத்தில் தலைநின்ற ஹோமரையும் உன்னத கவிதாநடையினால் பெருமை பெற்ற வர்ஜிலையுமே இணைத்து மில்டன் என்ற பெயரோடு ஒரு மகா கவிஞனை உருவாக்கிவிட்டாள். அவனே உலக மகாகவி அவனுக்கு ஒப்பாரும் இல்லை. மிக்காரும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறான். இத்தனை அருமையான கருத்துக்களையும

Three poets in three distant ages born Greece Italy and England did adorn the first in Loftiness of thought surpassed; The next in Majesty; in both the last the force of nature could no further go; to make a third she joined the former two.

என்று ஆறு அழகிய அடிகளில் சொன்னான் அவன். இந்த முத்தாய்ப்பை மேல்நாட்டு அறிஞர்கள் எல்லாம் அப்படியே ஒப்புக் கொள்கிறார்கள். மறுப்பவர் ஒருவரும் இலர்.

சரி. இப்போது காரியம் எளிதாகிவிட்டது. உலக மகா கவிகளுக்குள்ளே ஒப்பற்ற ஸ்தானம் வகிக்கிறவன் மில்டன். அவனோடு மட்டும் கம்பனை ஒப்புமை காட்டி கம்பனுடைய ஸ்தானத்தை உலக மகாகவிகளில் விடுவது கஷ்டமான காரியம் இல்லையே. பார்க்கலாம் அதையும்.

மில்ட்டனது சுவர்க்க நீக்கம் என்ற காவியத்தில் எல்லோராலும் பாராட்டப்படுகிற பகுதி ஒன்று உண்டு. இறைவனோடு என்னேரமும் போராடுவதையே தன் நித்திய கர்மமாகக் கொண்ட சாத்தான் சுவர்க்கத்திலிருந்து அகற்றப்படுகிறான். எரிவாய் நரகத்தில் தள்ளப்படுகிறான். அவனுடைய சகாக்களுடன் நரகத்தில் கிடந்து உழலும் அவன் எழுந்து தன் சகாக்களைப் பார்த்தே பேசுகின்றான். அவன் பேச்சு அவன் தன் மனோவலிமையைக் காட்டுகிறது. அந்த நேரத்திலும் அந்தப் பேச்சை மில்டன் வெகு அழகாகத்தான் சொல்லியிருக்கிறான் அவனுடைய காவியத்திலே.

இன்பத்தையும் துன்பத்தையும் உருவாக்குவதெல்லாம் மனம் தானே. தான் இருக்கும் நிலையில் இருந்து கொண்டே சுவர்க்கத்தை நரகமாக்கும், நரகத்தைச் சுவர்க்கமாக்கும் அது. அதனால் நமக்கென்ன? நாம் மட்டும் மன உறுதியைத் தளரவிடாமல் இருந்தால் அந்தக் கடவுளை அவர் சிருஷ்டித்தபடி பெரியவராக ஆக்கியிருக்கலாம். அதனால் நாம் ஏன் அவருக்குத் தணிந்து போக வேண்டும். இங்காவது நாம் சுதந்திரமாக வாழலாம். இங்கே நாம் இருப்பதைக் கண்டு அந்தக் கடவுள் பெருமைப்படவும்மாட்டான். இங்கிருந்து நம்மைத் துரத்தவும் செய்யான். இங்கே நம்முடைய ஏகச் சக்ராதிபத்யம்தான். அரசாள வேண்டியதுதானே நமது குறிக்கோள். அது நரகத்திலேயானாலும் சரி தான். சுவர்க்கத்திலே அடிமையாக வாழ்வதைவிட நரகத்தில் அரசனாக இருப்பது மேல்தானே என்பதுதான் சாத்தானின் ரணரங்கப் பிரசங்கம். இதைப் படித்தவர்கள் எல்லாம் (High water mark of poetry) உயர்ந்த கவிதை, கருத்து கருத்தின் அர்த்த கவுரவ முதிர்ச்சியும் கவிதா நடையின் உன்னதமும் மில்டனுக்கு ஒரு பெரிய ஸ்தானத்தையே அல்லவா அளிக்கிறது கவிதை உலகிலே, என்றெல்லாம் பாராட்டப்படுகின்றார்கள்.

இதைப் போலவே ஒரு சந்தர்ப்பம் நமது கம்பனுக்கு வாய்த்தால் அவன் எப்படிச் சொல்லுவான்? மகா கவியாகிய கம்பனுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கத்தான் செய்கிறது. அவன், ஆளப் பிறந்தவன் நான், அது நரகம் ஆனாலும் சரி சுவர்க்கம் ஆனாலும் சரி என்று மட்டும் சொல்லித் திருப்தியடைந்துவிடமாட்டான். அவன், சொன்னால் அதற்கு ஒரு தனிப் பண்பே இருக்கும்.

இலக்குவனும் இந்திரசித்தனும் நிகும்பலையில் போர் புரிகின்றார்கள். இந்திரசித்து விடும் சரங்களையெல்லாம் இலக்குவன் தடுத்து விடுகிறான். அவ்வாறு தன் வலிமிகுந்த படைகள் எல்லாம் பலனற்றுப் போவதைக் கண்ட இந்திரசித்தன் கடைசியாக நாராயணாஸ்திரத்தையே எடுத்து இலக்குவனைக் குறி பார்த்து விடுகிறான். நாராயணாஸ்திரம் தானே அந்த ராம ராவணர் காலத்து அடாமிக்பாம். அந்த நாராயணா ஸ்திரம் என்ன செய்தது தெரியுமா? இலக்குவனை வலம் வந்தது. நமஸ்கரித்தது. இந்திரசித்தனிடமே திரும்பவும் வந்து சேர்ந்தது. பார்த்தான் இந்திரசித்தன். “இத்தகைய புயவலியும், இறைவனது அருள்வலியும் கொண்ட இந்த ராம லக்ஷ்மணர்களோடு போர் புரிந்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம். அரக்கர்கள் வாழ வேண்டுமானால் அவர்கள் சந்ததி அழியாதிருக்க வேண்டுமானால் சீதையை அவர்களிடம் திருப்பி அனுப்பிவிடுவதுதான் சரி. அவர்களும் பெருந்தன்மையுடனே போரை நிறுத்தி விடுவார்கள். இதுவரை நாம் செய்த பிழைகளையெல்லாம் மன்னித்து விடுவார்கள் என்றெல்லாம் எண்ணினான். சரி, கடைசி முறையாக நாம் சொல்ல வேண்டியதையும் தந்தையிடம் தெரிவித்து விடுவோமே இப்போதாவது திருத்த முடிகிறதா என்று பார்ப்போமே, என நினைத்து மாயையில் மறைந்து இராவணன் கொலுவீற்றிருக்கும் அந்த ராஜ சபைக்கே வருகிறான். நடுங்கும் உடலோடும் நனைந்த உடையோடும் இராவணனைப் பார்த்தே பேச ஆரம்பித்துவிடுகிறான். அவன் பேச்சை கம்பன் சொல்கிறான்.

நிலஞ் செய்து விசும்பும் செய்து
நெடியவன் படைநின்றானை
வலம் செய்து போவதா னால்
மற்றினி வலிய துண்டே

குலஞ்செய்த பாவத்தாலே
கொடும் பழிதேடிக் கொண்டோம்
சலஞ் செயின் உலகம் மூன்றும்
இலக்குவன் முடிப்பன் தானே

என்று சொல்லியதுடன் நிறுத்திக் கொண்டானா? இல்லை

ஆதலால் அஞ்சினேன் என்று
அருளலை ஆசைதான் அச்
சீதைபால் விடுதியாயின்
அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த
தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான்
உலகெலாம் கலக்கி வென்றான்

என்றெல்லாம் பன்னிப் பன்னித்தான் சொல்கிறான் இந்திரசித்தன்.

இந்திரசித்தனது பேச்சைக் கேட்டு இராவணன் அப்படியே தோள்கள் குலுங்கச் சிரித்தான். “என்னடாப்பா என் மகன் இந்திரனையே ஜெயித்தவன் என்றல்லவா எண்ணினேன். இப்படி மனிசரைமதித்து அவர்கள் வீரத்தைக் கண்டு மயங்க ஆரம்பித்து விட்டாயா? போதும்! போதும்! அதோடாவது விட்டாயா? குலம் செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக் கொண்டோம் - என்று குலத்தின் பேரிலே வேறு பழியைப் போடுகிறாய். நான் சீதையை அன்று தண்டகாரண்யத்திலிருந்து தூக்கி வந்தேனே, அன்றே தெரியும் எனக்கு இப்படி ராமலக்ஷ்மணர் பகை வரும் என்று. ஆனால் அன்று நான் அந்த பகையை வலிந்து தேடிக் கொள்ளும்போது, இப்போது இதுவரை இந்த இலங்கையில் போர் செய்து மாண்டு மடிந்த வீரர்கள் என்னைக் காப்பாற்றுவார்கள் என்றாவது, அல்லது இன்னும் என் பக்கத்திலேயே இருந்துபோர் புரியத் தயாராக இருக்கும் வீரர் பலர் என் பகையை முடிப்பார் என்றாவது, அல்லது என் மகன் இந்திரசித்தன் இந்த வலியுடைய பகைவர்களையெல்லாம் கொன்று குவித்து விடுவான் என்றாவது எண்ணி நான் இந்தப் பகையைத் தேடவில்லை. நான் நெடும் பகை தேடினால் அக்கொடும்பகை முடிக்கும் வலி என்னிடம், ஆம் என்னிடமே தான் உண்டு என்று நினைந்து தானே தேடிக் கொண்டேன் என்றெல்லாம் ஆங்காரமாய்ப் பேசுகிறான். அத்துடன் விட்டானா?

மகனே! சீதையை விட்டுவிடு என்று வேறே சொல்லுகிறாய். உன் பேதைப் புத்தி இதிலிருந்தே தெரிகிறதே. சீதையை எதற்காக விடவேண்டும். எல்லாம் இந்த உடலையும் உயிரையும் காப்பதற்குத்தானே. இந்த உடலும் உயிரும் என்ன அவ்வளவு சாஸ்வதமா? என் புகழை விட, இப்போது நடக்கும் போரில் வெற்றி எனதே தான். ஒருவேளை நீ சொல்கிறபடி நான் வெற்றி பெறாமல் தோற்றே போகிறேன் என்று தான் வைத்துக் கொள்வோமே. அப்போதும்தான் என்ன குடிமுழுகிப் போய்விடுகிறது. இந்த ராமனுடைய பெருமையெல்லாம் வலி மிகுந்த ராவண வீரனை வென்றான் என்பதில் தானே. ராமனது புகழ் உலகில் என்றளவும் நின்று நிலவுகிறதோ அன்று வரை என் புகழும் நின்று நிலவத்தானே வேண்டும். அத்தகைய புகழுக்கு மடிவும் உண்டா? சரி, போருக்கு நீ போக வேண்டாம் நானே போகிறேன். வருக தேர் - வருக என்று ஆரவாரித்துக் கொண்டே எழுந்து விடுகிறான் ராவணன். இதைச் சொல்கிறார் கம்பர் மூன்று அருமையான பாடல்களிலே.

முன்னையோர் இறந்தாரெல்லாம்
இப்பகை முடிப்பார் என்றும்
பின்னையோர் நின்றாரெல்லாம்
வென்றனர் பெயர்வர் என்றும்
உன்னைநீ அவரை வென்று
தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கியான் இந்
நெடும்பகை தேடிக் கொண்டேன்

பேதமை உரைத்தாய் மைந்த!
உலகெலாம் பெயரப் பேராக்
காதை என் புகழனோடு
நிலைபெற, அமரர் காண
மீதெழும் மொக்குளண்ண
யாக்கையை விடுவதல்லால்
சீதையை விடுவதுண்டோ
இருபது திண்தோள் உண்டு
வென்றிலன என்றபோதும்,
வேத முள்ளளவும் யானும்
நின்றளன் அன்றோ அவ்
இராமன் பேர் நிற்குமாயின்
பொன்றுதல் ஒரு காலத்தும்
தவிருமோ? பொதுமைத்தன்றோ
இன்றுளார் நாளை மாள்வ்ர்
புகழுக்கும் இறுதி யுண்டோ

மூன்று பாக்களையும் பாடப்பாட இராவணன் மனோ வலி, அவன் புகழுக்குச் செய்யும் வியாக்கியானங்கள் எல்லாம் நம்மை அப்படியே அதிசயித்து நிற்கச் செய்துவிடும்.

மில்டனுடைய காவியத்திலே ஈடுபட்டு உள்ளம் பறி கொடுத்திருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியிடம், நான் மேலே சொன்ன பாக்களின் கருத்துக்களை மட்டும் (தாளலயத்தில் அமைந்துள்ள அருமையான கவிகளையல்ல) சொன்னபோது, அந்த அம்மாள், அடேயப்பா உங்கள் கம்பன் எங்கள் மில்டனோடு தோள் தட்டியே அல்லவா நிற்கிறான். (your kamban stands shouldor to shoulder with our Milton) என்று சொன்னாள். அதற்கு நான் சொன்ன பதில் இதுதான்.

இல்லை, அம்மணி! எங்கள் கம்பன் உங்கள் மில்டனோடு தோள் தட்டி மட்டும் நிற்கவில்லை. அந்த மில்டனது தோள் மேலேயே அல்லவா ஏறிக் கொண்டு நிற்கிறான். (Our kamban stands over the shoulder of your Miltan) என்று நான் சொன்னவுடன் அந்த அம்மாள் புன்னகையுடனேயே என்னுடைய திருத்தத்தைக் கூட அங்கீகரிக்கத்தான் செய்தாள்.

மில்டனுக்கு உலக கவிகளிடையே கிடைத்திருக்கும் ஸ்தானம் தெரியும். அந்த மில்டனையே முதுகுக்கு மண் காட்டி விடுகிறான் கம்பன். பின் கேட்பானேன். கவி உலகில் கம்பன் ஸ்தானம் என்ன என்று இதையெல்லாம் தெரிந்துதானே சொன்னார் வ.வே.சு ஐயர், கவிதாலோகத்தின் பேரரசர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கவிச் சக்கரவர்த்தி கம்பன் சந்நிதியிலே முடி சாய்த்துத் தலைவணங்க வேண்டியதுதான் என்று.

❖❖❖

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/002-012&oldid=1346288" இலிருந்து மீள்விக்கப்பட்டது