5. கம்பன் பிறந்த ஊர்

மிழ்நாட்டின் சைவ வைணவச் சண்டை பிரசித்தம். கருது செம்பொன்னின் அம்பலத்திலே கடவுள் நின்று நடிக்கும். காவிரித் திரு நதியிலே கருணை மாமுகில்துயிலும் என்று ஒரே பாட்டிலே பாடத் தெரிந்த புலவர்களைப் படைத்திருந்தாலும், அந்த சிவன், அந்த விஷ்ணு அவர்களின் பக்தர்களுக்குள்ளே பூசல்களுக்குக் குறைவேயில்லை. திருவானைக்கா சைவர், ஸ்ரீரங்கத்துக் கோயில் மதில்மேல் மூக்கைத் தீட்டிய காக்கையைப் பார்த்து, ஓ! சைவ காக்கையே, சைவ காக்கையே, அப்படித்தான், இந்தப் பெருமாள் கோயிலை இடித்துத் தள்ளு என்று கூறின கதை நமக்குப் புதிதல்ல. அத்தோடு ஆலமுண்டான் எங்கள் நீலகண்டன் என்று சொன்ன சைவப் புலவனைப் பார்த்து, ஆம் அன்று ஆலமுண்டபோது எங்கள் பெருமாள் அந்த ஆலமுண்ட கண்டனையும் கூட உண்டான் என்றெல்லாம் ஒரு வைணவர் பேசினார் என்பதும் நாம் அறிந்ததே. இந்தப் பூசல் வளர்ந்திருக்கிறது தமிழ்நாட்டில் ஒரு காலத்தில். நம்முன்னோர் ஊர் தோறும் கோயில் கட்டினார்கள். ஈஸ்வரன் கோயில் எழுந்தது ஒரு புறம் என்றால் மற்றொருபுறம் பெருமாள் கோயிலும் எழுந்திருக்கிறது. என்றாலும் கோயில்களும் அடுத்தடுத்து இருக்காது. ஒன்றை ஒன்று ஒட்டியே இருக்கும்.

கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் இடையில் அமர்ந்த தீவிலே ஸ்ரீரங்கமும் திருவானைக்காவும் உருவாயிற்று என்றால், இரண்டு கோயிலுக்கு இடையில் உள்ள தூரம் இரண்டு மைலுக்கும் குறைதான். ஆனைக்கா அண்ணல் மேற்கே நோக்கி நின்றால், அவருக்கு நேரே காலை நீட்டிக் கொண்டு அலக்ஷியமாக பள்ளி கொண்ட ரங்கநாதர் அறிதுயில் அமர்ந்திருப்பார். நாயக்க மன்னர்கள் கட்டிய சிவன் கோயில்களில் எல்லாம் இலிங்கம் இருக்கும். கர்ப்பக்கிருஹத்தின் வெளிச்சுவரிலே மேற்கே பார்க்க. ஆம் சிவலிங்கத்தினைத் திரும்பிக் கூடப் பார்க்காத பெருமாளையே நிறுத்தி இருப்பார்கள். இப்படி இவர்கள் நிற்கிறார்களே என்று கண்டுதான் ஒரு சில பக்தர்கள் ஒரு கோயில் மதில்களுக்குள்ளேயே இரண்டு பேரையும் பிரதிஷ்டை செய்து வைத்துப் பார்த்திருக்கிறார்கள். பிரபலமான சிதம்பரம் கோயிலில் நடராஜன் சந்திக்கு அருகிலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கும் சந்நிதி உண்டு. சிக்கல் சிங்கார வடிவேலவரோ தந்தை வெண்ணெய் வண்ணப் பெருமானுக்கும், தாய்மாமன் நவநீத கிருஷ்ணனுக்கும் இடத்தை ஒழித்துக் கொடுத்துவிட்டுத் தான் கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொள்கிறார். இப்படி, இன்னும் சில கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றாலும் இருவருக்கும் இடையில் உள்ள வெளிமட்டும் குறையவில்லை.

இந்த நிலையில் ஓர் ஊரில் இரண்டு கோயில்கள். ஒன்று சிவன் கோயில் மற்றொன்று பெருமாள் கோயில். பெருமாள் கோயில் கிழக்கே பார்த்து, சிவன் கோயில் மேற்கே பார்த்து வழக்கமாக கிழக்கே பார்த்து நிற்கும் சிவனும் மைத்துனன் பேரில் உள்ள கோபதாபத்தையெல்லாம் விட்டு மேற்கே பார்க்கத் திரும்பி, பெருமாளுக்கு எதிராக நிற்கிறார். இரண்டு கோயிலுக்கும் இடையில் இரண்டு மூன்று பர்லாங்கு இருந்தாலும், இருவருடைய சந்நிதித் தெருவும் ஒரே தெருதான். சிவன் கோயில் மேலவிதியும் பெருமாள் கோயில் கீழவீதியும் ஒரே தெருதான். நிரம்பச் சொல்வானேன். திருவனந்தலிலிருந்து முக மலர்ந்து எழுந்திருந்தால் பெருமாள் சிவன் முகத்தில்தான் விழிக்க வேண்டும். சிவனும் அப்படியே. இப்படி அமைத்திருக்கிறார்கள் ஓர் ஊரில் சோழநாட்டில் அந்த ஊர் தான் அழுந்தூர். அந்த ஊர்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்.

தமிழ்நாட்டில் கம்பன் தான் பிறக்க தக்கதொரு சிறு ஊரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறான். நல்ல சைவ குலத்திலே பிறந்தவன் கம்பன். இறை மிடற்று இறை, திங்கள் மேவும் செஞ்சடைத்தேவன், பாதி மதி சூடி என்றெல்லாம் இறைவனைப் பாடிப் பாராட்டத் தெரிந்தவன் எப்படி விஷ்ணுவின் அவதாரமாக அமைந்த ராமனை

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர்
     மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த
     காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திரியு சங்கும்
     கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்
     விட்டு அயோத்தி வந்தான்


என்று பாராட்டத் தெரிந்தான் என்றால், அவனுக்கு ஒரு அருமையான காவியத்தை எழுத முனைந்தான் என்றால் அது இந்த ஸ்தலத்தின் மகிமை தானோ என்னவோ! இவ்வளவோடு நிற்கவில்லை. சிவன் பெரியவன் விஷ்ணு பெரியவன் என்று சண்டை போட்டுக் கொள்பவர்களுக்கு எல்லாம்

அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன்
    என்று ரைக்கும் அறிவில்லார்

என்றெல்லாம் பட்டம் சூட்டி விடுகிறான். எவ்வளவு நல்ல சமரச பாவத்தை வளர்த்திருக்கிறான் கம்பன். அப்படி அவன் வளர்க்க உறுதுணையாக நின்றிருக்கிறது இந்த ஊர். கம்பன் பிறந்த ஊர் என்று இந்த ஊர் பெருமைப்படுகிறது போலவே இந்த ஊரிலே பிறந்தோமே நாம் என்று கம்பனும் பெருமைப்படலாம் என்று தோன்றுகிறது எனக்கு.

கம்பனைப் பற்றிய விவாதங்கள் எத்தனை எத்தனையோ என்றாலும், அவன் பிறந்த ஊர் திருவழுந்தூர் என்பதைப் பற்றி இன்றுவரை விவாதமே இல்லை. இதை பேராசிரியர் வையாபுரி பிள்ளையவர்கள்கூட மாற்றிச் சொல்லக் காணோம்.

நாராயணன் விளையாட்டெல்லாம் என்ற பாடல் திருவழுந்தூரில் வாழ்ந்தவன் கம்பன் என்று தான் கூறுகிறது என்றால்

கம்பன் பிறந்த ஊர்
...

என்ற பாடல் கம்பன் பிறந்த ஊர் இந்த திருஅழுந்தூர் என்றே அறுதியிட்டு உணர்த்தி விடுகிறது. வேதங்கள் அறைகின்ற உலகெலாம் என்று அந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் வேதபுரி ஈஸ்வரனைப் பாடிய வாயிலேயே

தாய் தன்னை... அறியாத கன்றில்லை

என்று அங்கே இருக்கும் அமருவியப்பன் பெருமாளையும் பாடியிருக்கிறான் கம்பன். இந்த அத்தாட்சி போதாதா நமக்கு.

இந்த ஊர் மாயவரம் என்னும் பிரபலமான மாயூரத்தினுக்குத் தென்மேற்கே மூன்று மைல் தொலைவில் குத்தாலத்துக்குத் தென்கிழக்கே இருக்கிறது. இப்போது ரயில்வேக்காரர்கள் கூட ஒரு சின்ன கொடி வீட்டை (Flag Station) அங்கு வைத்திருக்கிறார்கள். அத்தோடு அழுந்தூர் கம்பன் மேட்டுக்கு இங்கே இறங்குங்கள் என்று ஒரு பெரிய போர்டு வேறே எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஊர் அந்த ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. கம்பன் பிறந்த ஊரைக் காண சும்மா ரயிலில் இருந்து இறங்கிவிட்டால் மட்டும் போதாது. காலில் தெம்பு உள்ளவர்கள் எல்லாம் நடக்கத் தயாராக வேணும். இல்லை கொம்பில்லாத மொட்ட மாடுகள் பூட்டிய வண்டிகளில் ஏறி ஊர் சென்று சேர வேண்டும்.

ஊர் செல்லுமுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கே ஓடும் காவிரி நதியிலே இறங்கி குளித்துக் கொள்ளலாம். இதைத் தவற விட்டவர்கள் ஊரை அடுத்துள்ள ஒரு குளத்தில்தான் குளிக்க வேண்டும். ஆனால் குளமும் நமக்கு வேண்டாம் என்பவர்கள் கூட கிணற்றில் குளித்துக் கொள்வதில் அதிக வேலை இல்லை. வேதங்களும் விரைந்தவர்களும் அஷ்டதிக்குப் பாலகர்களும் பூஜித்த இடம். அந்த வேதபுரி ஈஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடிய தேவாரம் உரை

தொழுமாறு வல்லார் துயர்தீர நினைந்து
எழுமாறு வல்லார் இசைபாட விம்மி
அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே.,

என்ற அழகான பாடலைப் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம். அம்பிகை சௌந்தரவல்லியையும் கண்டு தொழலாம். ஆனால் இந்தக் கோயிலை விட்டு வெளிவரும் போது இதுக்கு ஏதோ ஏழைப் பங்காளன் கோயில் என்ற எண்ணத்தோடேதான் வெளியே வருவோம். பணத்தில் மட்டுமல்ல, ஏழ்மை; சிற்பச் செல்வத்திலுமே ஏழ்மையானதுதான்.

ஆனால் இந்தக் கோயிலை விட்டு வந்து சந்நிதித் தெருவில் கண்ணை முடிக்கொண்டு நேரே நடந்தாலும் நம்மை பெருமாள் கோயில் வாசலில் கொண்டு வந்துவிட்டுவிடும். ஆனால் கோயில் இடத்திலே வருவதற்கு முன் கண்கள் திறந்து புஷ்பகரணியையும் சுற்றிக் கொண்டு வந்தால் ஊஞ்சல் மண்டபத்திற்கு வராது போகலாம். இனி பெருமாள் கோயிலுக்குள் நுழையலாம். நுழைந்ததும் ராஜ கோபுரத்தின் இடப்பக்கத்திலே இரண்டு மாடங்கள் இருக்கும். அந்த மாடங்களில் இருப்பவர்கள் கம்பர்களும் அவர் மனைவிகளும் இதென்ன கம்பர்கள் என்று கேட்காதீர்கள். இங்குள்ளவர்களைக் கேட்டால் கம்பனையும் அவர் மனைவியையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்த சதிபதிவிக்கிரஹங்கள் பின்னம் அடைந்துவிட்டது. அதனால் புதிய சிலைகளை பண்ணி அவைகளையும் வைத்திருக்கிறோம் என்பார்கள். சரி இருக்கட்டும். நான் அறிந்த மட்டிலும் நாம் படித்த அறிவுகளைக் கம்பனுக்கும் இந்தச் சிலைக் கம்பனுக்கும் யாதொரு ஒற்றுமையும் இல்லைதான். இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் கம்பன்கள், கம்பன் போன்றவர்கள் பலர் தோன்றத்தானே வேண்டும். அதற்கு அறிகுறியாக ஒன்றுக்கு இரண்டாக இங்கே கம்பன் நின்று கொண்டிருக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி காலதாமதம் செய்ய நேரமில்லை, நேரே விறுவிறு என்று துவஜஸ்தம்பம், இரண்டாவது கோபுர வாயிலில் மகாமண்டபம் எல்லாவற்றையும் கடந்து பெருமாள் சந்நிதிக்கே வந்துவிட வேண்டியதுதான். அங்கு வேலை நிறைய இருக்கிறது. அர்த்தமண்டபத்தின் படிக்கட்டுகளின் பேரில் ஏறுகின்றபோதே கிட்டத்தட்ட பன்னிரண்டு அடி உருவில் நின்றிருக்கும் கோலத்தில் ஆஜானுபாகுவாக நல்ல சிலை உருவில் பெருமாள் சேவை சாதிப்பார். அணிந்திருக்கும் ஆடைகளும் அணிகளும் அவன் திருவுக்கும் திருவாகிய செல்வன் என்பதைப் பறைசாற்றும். தலையிலே தங்கக் கிரீடம், இடையிலே தசாவதார பெல்ட், கழுத்திலே சஹஸ்ரநாமமாலை, தோள்களிலே வாகுவலயம், மார்பிலே லக்ஷ்மி, எல்லாம் தங்கத்தால் ஆனவை. நெற்றியிலோ வைரத்திருநாமம். இப்படியே பொன்னாலும் மணியாலும் வைத்து இழைத்திருக்கிறார்கள் பக்தர்கள். ஆனால் இவைகளை எல்லாம் விட அழகொழுகும் சாந்தமும் அற்புதமான புன்னகையுமே தவழும் அந்த திருமுகத்தில். இந்த மூலமூர்த்திக்கு முன்னாலேதான் பசு வந்து அணையப் பெற்ற ஆமருவி அப்பன் செப்புவிக்ரக உருவில் காட்சி கொடுப்பார். ஸ்ரீதேவி பூதேவி இருவரும் உடனிருப்பார்கள். மூவரும் ஆடை அணிகளால் தங்களை நன்றாக மூடி இருப்பார்கள். நகைகள் எல்லாம் ஒரே சிவப்புக் கல் மயம். இந்த நகைகளையோ உடைகளையோ களைவது பெருமாள் திருமேனியின் அழகை எல்லோரும் கண்டுவிட முடியாது. காணவிடமாட்டார்கள் அர்ச்சகர்கள். ஆனால் இந்த அர்ச்சகர்கள் முதுகுக்கும் மண்காட்டியவன் நான். ஆடி பதினெட்டில் ஆமருவியப்பன் காவேரிக்கு திருமஞ்சனத்திற்கு எழுந்தருளிய போது நானும் உடன் போனேன். அங்கு மறைந்திருந்து மேனியின் முழு அழகையும் கண்டு களித்தேன். சிற்பி அளவோடே பெருமாளுக்கு அணிகளை அணிவித்திருக்கிறார். நீண்டுயர்ந்த மணிமகுடம் தலையை அலங்கரிக்க சங்கு சக்ரதாரியாய் அபயஹஸ்தத்துடன் அழகாக நிற்கிறார். கையில் கதை வைத்திருக்கும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாம். இவனை ஆமருவி நின்ற மயக்கும் அமரர் கோமான் என்று பாடினாரே அந்தத் திருமங்கை மன்னன், அவனது எல்லைதான் என்ன.

கர்ப்பக் கிரகத்தில் இப்படியெல்லாம் ஊரைப் பற்றியும் கோயிலைச் சுற்றியும் புராண வரலாறுகள் பின்னிக் கிடக்கின்றன.

கோயிலை விட்டு வெளியே வந்து, தேர்வீதியில் நடந்தால் கீழ் விதியில் எண்ணிறந்த முஸ்லிம்கள் குடியிருப்பதைக் காண்பீர்கள். இந்த முஸ்லீம்கள் சைவ வைணவர் சண்டை ஈடுபடுகிறதில்லை. தமிழ்நாட்டின் கவிச்சக்கரவர்த்தி கம்பனை சைவ வைணவர்களுக்கு மாத்திரம் விட்டு விடுவதில்லை கம்பன் திருவிழாவிலே வந்து கலந்து கொள்வார்கள். கம்பரைப் புகழ்ந்து பாடுவார்கள். ஏன் கம்பன் கவிதையைப் பற்றிப் பேசும் முஸ்லீம் இளைஞர்களும் உண்டு என்றால் அதிசயிக்கத்தானே செய்வீர்கள்.

இந்த முஸ்லிம் சகோதரர்கள் இருக்கும் ரதவீதியையும் தெருவையும் கடந்து மேற்கே வந்து தெற்கே திரும்பினால், ஒரு சிமிண்ட் போர்டு இருப்பதைப் பார்ப்பீர்கள். கம்பன் மேடு என்று எழுதியிருக்கும். பக்கத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர் நிறுத்தியிருக்கும். இரண்டு போர்டுகள் இருக்கும். கம்பன் காலத்தைப் பற்றி இரண்டு அபிப்பிராயம். ஒன்று ஒன்பதாம் நூற்றாண்டு என்று, இல்லை பன்னிரெண்டாம் நூற்றாண்டுதான் என்று. இந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள், இருவருக்கும் விரோதம் இல்லாமல் சராசரி விகிதம் பார்த்து தென்காசி வழக்காக பத்தாம் நூற்றாண்டில் பிறந்த கம்பன் என்று போட்டிருப்பார்கள். பொற்காசுகள் சில முன்பு கிடைத்ததாகச் சொல்கிறார்கள். தங்க சாலை அங்கிருந்திருக்கலாம் போலும். இதை வைத்துக் கொண்டு கம்பன் பொன் வாணிக மரபில் வந்தவன் தான் என்று ஆராய்ச்சியாளர் சொன்னால் ஆச்சர்யமில்லைதான். இந்தப் புனிதமான இடத்திற்குச் சென்ற நான் அங்கிருந்து சில ஒட்டாஞ்சல்லிகளை கம்பன் ஞாபகமாக எடுத்து வந்திருக்கிறேன். இப்படியே அங்கு செல்லும் தமிழர்கள் எல்லாம் செய்தால் மேடு, சமதளம் ஆகிவிடும் சில வருஷங்களில்

இந்தக் கம்பன் பிறந்த ஊரில் கம்பனுக்கு ஒரு கலைக்கோயில் கட்ட முயற்சி நடக்கிறது. கவர்னர் பிரகாசா அஸ்திவாரக் கல் நாட்டிவிட்டே சென்றுவிட்டார்கள். தமிழ் மக்கள் தான் அஸ்திவாரத்தின் மேல் கட்டிடம் எழுப்ப முனையவில்லை. பங்குனி உத்திரத்தில் கம்பன் திருநாள் நடக்கும் நாளில் இதற்கான உருப்படியான முயற்சிகள் நடந்தால் நல்லது. அதைச் செய்வார்களா தமிழ் தலைவர்கள்.

பி.கு. இப்போது கம்பன் மேட்டில் கட்டிடம் எழுப்பியிருப்பதாகத் தெரிகிறது.

❖❖❖

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/005-012&oldid=1346412" இலிருந்து மீள்விக்கப்பட்டது