கம்பராமாயணம் (உரைநடை)/அயோத்தியா காண்டம்
திருப்புமுனை
இராமனுடைய மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தசரதன், அவனை ஆட்சியில் அமர்த்தி, மணி முடிதரித்த அரசு கோலத்தில் காண விழைந்தான். அதற்குக் காரணம் என்ன? இராமன் தக்க பருவத்தை அடைந்தான். என்பது அன்று; தசரதன் முதுமையின் நுழைவாயிலில் கால் அடி எடுத்து வைத்தான் என்பதுதான். தன் தோள் சுமையை மாற்று ஆள்மீது ஏற்ற நினைத்தான்.
நரைமுடி ஒன்று அவனுக்குத் தன் முதுமையை அறிவித்தது; தான் இனி வாழ்க்கையில் கரை ஏற வேண்டும் என்று நினைத்தான். நிலைக் கண்ணாடி முன் புதிய நினைவு தோன்றிது. பெருநிலக் காவலனின் கறுத்து இருந்த மயிர்முடி ஒன்று வாழ்க்கையை வெறுத்து வெளுத்துக் காட்டியது; அவன் செவியில் வந்து மோதியது; அவன் மூப்பைப் பற்றி ஒதியது.
“ உனக்கு வயது ஆகிவிட்டது; இனி வாய்ப்புத் தர முடியாது; ஆட்சியை மாற்று; காளைப் பருவத்து ஆளை உன் மகனாய்ப் பெற்றிருக்கிறாய்; நாளையே அவனுக்கு மணிமுடி சூட்டு; நீ காட்டுக்கு நடந்து காட்டு; இம்மைக்கு வேண்டுவன தேடிக் கொண்டாய்; மறுமை வெறுமை யாய்க் கிடக்கிறது. தவம் செய்க; வாழ்நாளை அவம் ஆக்காதே; இளமைக்கு அழகு இன்புற்று இருத்தல்; முதுமைக்கு ஆக்கம் அறிவு மிக்க நோக்கம்; இங்கே இருந்தால் ஏற்படும் தேக்கம்; அமையட்டும் தவத்தில் ஊக்கம்” என்று அறிவுறுத்தியது.
“காடு வா வா என்கிறது; வீடு போபோ என்கிறது” என்னும் நிலையைத் தசரதன் அடைந்தான். அறிவுடை அமைச்சர் இருந்தனர்; செறிவு மிக்க வேள்வியர் இருந்தனர்; அவர்கள் எடுத்து உரைக்காத அறிவுரையை ஒரு மயிர்முடி தோற்றுவித்தது. அது வரலாற்றுத் திருப் பத்துக்குத் துணை செய்தது; “மாட்சிமிக்க இராவணன் வீழ்ச்சி அடைதற்கு உரிய காலம் வந்துவிட்டது” என்று அறிவிக்கும் முன்னறிவிப்புக் காட்சியாக இது விளங்கியது. அவன் ஆற்றிய தீவினைகள் இந் நரை முடி வடிவத்தில் வெளுத்து வந்து, அவனைக் கொல்லுமாறு செயல்பட்டது.
தசரதன் மனமாற்றம்
தசரதன் அமைச்சர் அவையைக் கூட்டினான்; வசிட்டரை அழைப்பித்தான்; ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரை அழைத்தான்; அரசியல் சட்டம் அறிந்தவர் அமைச்சர், சாத்திர சம்பிரதாயங்கள் அறிந்தவர் குலகுரு வசிட்டர்.
எந்த முடிவையும் தானே துணிந்து எடுக்கத் தசரதன் விரும்பவில்லை; வீட்டுப் பிரச்சனையாக இருந்தால் தம் மனைவியரைக் கேட்டுச் செய்யலாம்; இதனால், ஏற்படுகின்ற பாதிப்பு நாட்டு மக்களைச் சாரும்; அதனால், அமைச்சர் அவை கூட்டி ஆலோசனை நடத்தினான்.
தசரதன் அமைச்சர் எத்தகையவர்? வள்ளுவர் காட்டும் அமைச்சியல் நன்கு அறிந்தவர்; அரசியல் நுட்பம் உணர்ந்தவர்; விலை கொடுத்து வாங்க முடியாத மனநிலை பெற்றவர்கள்.
அமைச்சர் இயல்புகள்
தசரதன் அமைச்சர் குலத் தொன்மையும், கலைச் செல்வமும், கேள்வி ஞானமும், நடு நிலைமையும் உடையவராய் விளங்கினார். குலத் தொன்மை என்பது அக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. காலம், இடம், கருவி இம் மூன்றையும் நூல் வழியும் ஒற்றர் வழியும் ஆராய்ந்து, தெய்வ அருளையும் நம்பிச் செயலாற்றினர். அரசன் சினத்துக்கு அடங்கித் தாம் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்; அறவழிகளினின்று என்றும் பிழை செய்ய நினைக்கமாட்டார்கள். இடித்து உரைக்கும் துணைவர் இல்லாத ஆட்சி, வீழ்ச்சியுறும் என்பதை அறிந்தவராய்ப் படித்து உரைப்பர். உறுதிகளைக் கேளாத அர னதனக்கு இறுதிகளைத் தேடிக் கொள்வான். அதனால், அவனுக்கும் நாட்டுக்கும் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது எது என்று முடிவு செய்யும் இயல்பினர். அவர்கள் மருத்துவர்போல் தக்க அறிவுரைகள் தரும் செருக்கினை உடையவர்; கசக்கும் என்பதால் அவன் இசையான் என்று நினைத்து அடங்கி இருக்க மாட்டார்கள். மனதில் பட்டதை மட்டும் கூறாமல் நன்கு ஆராய்ந்து காரண காரியங்களைக் காட்டித் தம் முடிவுகளுக்குச் சான்றுகள் தருவர். முன்னோர் காட்டிய வழி இது என்று அறிந்து, அதனால் ஏற்பட்ட ஆக்கமும் கேடும் கண்டு உரைப்பர்; பழம்பொருள் ஆராய்ச்சி செய்து அதனை நிலை நாட்டக் கருதாமல் வருபொருள் இது என்று முன்கூட்டி அறிவிப்பர். அரசுக்கு இவர்கள் தூண்களாக நின்று செயல்பட்டனர்.
புறத்தாக்கு எதுவும் நிகழவில்லை; அகநோக்கு எதுவும் அவன் அறிவிக்கவில்லை; கூட்டிய சூழ்நிலை ஏதும் அறியாத அவர்கள், அவன் வாய் திறந்து மொழி வதைக் கேட்க ஆவல் நிரம்பியவராய் அமர்ந்திருந்தனர்.
தசரதன் தன் மனநிலையை எடுத்து உரைத்தான்; அவர்கள் செவிமடுத்தனர்.
“சொல்வது புதுமை; அதனால், அது அதிர்ச்சியைத் தரலாம்; என்றாலும், அறிவு முதிர்ச்சி உடையவர் தக்கது என்று இதனை ஏற்றுக் கொள்வர். இதுவரை என் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தீர்; இனி என் தவமாட்சிக்குத் தடையாக நிற்க மாட்டீர் என்று நினைக்கிறேன்.”
“என் மகன் இராமன் ஆட்சி ஏற்க, நீங்கள் தக்க துணைவர்களாக இருக்க வேண்டும்; வழி நடத்தித் தரவேண்டும்” என்றான்.
அமைச்சர் தந்த மாற்றம்
வாமனனாக வந்தவன் மூன்றடி மண் கேட்டான். இதை மாவலி எதிர்பார்க்கவில்லை; மாமன்னனாகிய தசரதன் மண் வேண்டாம்; விண் வேண்டும் என்று புதிய வரத்தைக் கேட்கிறான். இது புதுமையாய் இருக்கிறது.
ஆட்சியின் சுகத்தை நுகர்ந்தவன் அவன்; அதை விட்டுக் கொடுக்கிறான் என்றால், அது புதுயுகமாகத் தான் இருக்கும். நாட்டிலே மறுமலர்ச்சி உண்டாவது கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் அவர்கள் பழகி வந்த பழையோன், தன் கிழமையை விடுகிறான் என்றால் அவர்களால் வருந்தாமல் இருக்க முடியவில்லை; பாசம் அவர்களை இழுத்தது.
மூத்த கன்று விலகினால்தான் இளைய கன்றுக் குட்டிக்குத் தாய்பசு பால் தரமுடியும். அந்தத் தாய்ப் பசுவின் மனநிலையை அந்த அமைச்சர் பெற்றனர்.
‘அரசன் தம்மை விட்டு விலகுகிறான்’ என்பதால் வருத்தம்; இராமன் தம்மை வந்து அணுகுவதால் மகிழ்ச்சி; இந்த இரு உணர்வுகளுக்கு இடையில் அவர்கள் தள்ளப்பட்டுத் தத்தளித்தனர்.
“பாசம் எங்களைப் பிரிகிறது; இராமன்பால் நேசம் எங்களை அழைக்கிறது. எதற்கு நாங்கள் சாய்வது என்று தெரியாமல் வேகிறோம்” என்றனர். வருவது முறையா? என்று உம்மைக் கேட்கவில்லை.
நான் போவது சரியா இராமன் அந்த முடிவை நான் ஏற்கனவே எடுத்துவிட்டேன். ‘இரு’ என்று சொன்னாலும் நான் இனி இந்த ஆட்சியை விரும்பிச் சுமக்கப் போவது இல்லை”
“நீங்கள் இனிச் சொல்ல வேண்டுவது இராமனுக்கு ஆளும் தகுதி உளதா? என்பதை மட்டும் கூறினால் போதும்; உள்ளத்தில்படும் மதிப்புகளைக் கள்ளத்தால் மறைக்காமல் வெள்ளத்துக் கவிப்பெருக்குப்போலத் தடையின்றிச் சொல்ல வேண்டுகிறேன்” என்றான்.
“நீங்கள் மாற்றத்தை ஏற்கிறீர்களா? இல்லையா? என்பது கேள்வி அன்று; இராமன் ஏற்றத்தை மட்டும் கூறி, அவனை ஏற்க இசைவு தருகிறீர்களா இல்லையா என்பதை இயம்புக” என்றான்.
“நாட்டு மக்கள் அவனை விரும்புகின்றனர்; அதனால் ஆட்சி ஏற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளது” என்று சுருக்கமாகவும் தெளிவுபடவும் அமைச்சர் உரைத்தனர்.
“அமைச்சர் ஏற்கிறார்களா? அரசன் விரும்பு கிறானா என்பன அடிப்படை அல்ல; மக்கள் விருப்பம் தான் முடிவுக்கு உதவுவது” என்று கூறிய அரசியல் கருத்துப் போற்றுவதாய் இருந்தது.
வசிட்டர் கருத்து
வசிட்டரை அணுகி அவர் கருத்து யாது? எனத் தசரதன் கேட்டான்.
“அமைச்சர் ஆமோதித்து விட்டனர்; நீயும் இதை விரும்புகிறாய்; மக்களும் இதை வரவேற்பர்; இராமனுக்கும் தகுதிஉள்ளது” என்று வசிட்டர் கூறினார்; மேலும், தொடர்ந்து இராமனைப் பற்றிய தம் கருத்துகளை விரித்து உரைத்தார்.
“இராமன் யாரோ எவரோ என்று கூறும் நிலையில் இல்லை; மாமன்னன் மகன்; அதனால் ஆட்சி உரிமைக்கு அவன் தகுதி உள்ளவன்”.
“அடுத்து அவன் மனைவி சீதைபால் பட்டத்து அரசி ஆவதற்கு வேண்டிய நல்லியல்புகள் அனைத்தும் உள்ளன; அவள் மக்களுக்கும் நற்பணிகளுக்கும் நடு நின்று தடையாய் இருக்க மாட்டாள்”.
“நாட்டு மக்கள் அவனே தலைவனாய் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்; அவன் நல்லாட்சியில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; அவனும் அவர்களை மிகவும் நேசிக்கின்றான்”.
“நீ எடுத்த முடிவு இந்த நாட்டுக்கு நல்ல விடிவே யாகும்” என்று கூறினான்.
சுமந்திரன் இடையீடு
தேர் ஒட்டியாகிய சுமந்திரன் நா அடக்கம் இன்றி, நிலை கொள்ளாமல் தன் மனத்தில் பட்டதை உரைத்தான்.
“நீங்கள் ஆட்சியைத் துறப்பது தக்கதாகப்பட வில்லை; என் செய்வது? பழையன கழிகின்றன; புதியன புகுகின்றன. இது உலக இயலின் மாற்றம்; இதை யாரும் தடுக்க முடியாது.
“தோளுக்கு வந்துவிட்டவன் இராமன்; அரசு சுமை தாங்கும் ஆற்றல் அவனிடம் உள்ளது.”
“நேற்று எப்படியோ அப்படித்தான் இன்றும்; இன்று எப்படியோ அதுதான் நாளையும்; உங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. உலகம் மாற்றம் விரும்புகிறது. அதனால் அவன் ஆட்சிக்கு வருவது மாட்சிமை உடையது. எனினும், உம்மை இழக்கின்றோம்; அது எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது” என்று இரங்கற்பா பாடினான்.
தேர் ஒட்டி தன் நிலை மறந்து பேசுவதை தசரதன் விரும்பவில்லை; இராமனை அழைத்து வரச் சொன்னான்.
“அப்பம் எண்ணச் சொன்னேனே தவிர அதில் எத்தனை குழிகள் உள்ளன என்று உன்னைக் கேட்கவில்லை”.
“கடமையைச் செய்; கதைகள் பேசிக் கொண்டு இங்கு உன் மடமையைக் காட்டாதே”.
“தேரைச் செலுத்து; இராமனை இங்கு அழைத்து வா” என்று ஆணையிட்டான்.
அதற்குமேல் அங்கே அவன் நிற்கவில்லை. காற்றிலும் கூடிய வேகத்தோடு காகுத்தன் அரண் மனையை அடைந்தான்.
மனையில் இராமன், தன் மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தான்; மகிழ்வு நிரம்பிய சூழலில் அவன் தன் அகமுடையாளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவனிடம் என்ன சொல்வது? உண்மை சொல்வதா? மன்னன் உரைத்தை மட்டும் உரைப்பதா?
“ஆட்சி உனக்குத் தரத் தசரதன் அழைக்கின்றான் என்று கூறவில்லை. அப்படிக் கூறினால் அது மிகைப்படக் கூறுதல் ஆகும்; அதிர்ச்சியும் தருவது ஆகும். ஆசைகளைத் தூண்டிவிட்டால் அவை அணைக்க முடியாமல் போகும்; ‘செய்தி சொல்ல வந்தவன்’ என்ற தன் நிலையை மறக்காமல் செப்பினான்.
“'காவலன் உன்னைக் காண ஆவல் கொண்டுள்ளான்” என்றான். அவ்வளவுதான்; அவன் தன ஆருயிர்த் துணைவி யிடம் சொல்லிவிட்டுப் புறப்படவில்லை; ஆடை வேறு மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று உரை ஆற்றவில்லை; எதற்கு? ஏன்? என்ற வினாக்களைத் தொடுக்காமல் உடனே அவனோடு புறப்பட்டான்.
கரிய மேகம் சூழ்ந்ததுபோல நீல நிறத்தவன் ஆகிய அழகன் நேரில் ஏறிச் சொன்றான்.
இராமனைத் தழுவிக் கொள்ளுதல்
வந்தவனைத் தசரதன் தன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான். அத்தழுவலில் புதிய பொருள் இருந்தது போலக் காணப்பட்டது. அத்தோள்கள் திண்மை உடையனவா? என்ற உண்மையைக் காண எடுத்துக் கொண்ட முயற்சி போல இருந்தது.
“நிலமகள் தன்னைச் சுமக்க வலிமை மிக்க தோள்களை நாடுகிறாள்; முதியவன் நான்; ஆட்சிச் சுமையால் தளர்ந்து வாடுகிறேன்; வளர்ந்துவிட்ட நீ வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்”.
“நொண்டிக் குதிரை எத்தனை நாளைக்கு வண்டியை இழுக்கும்; அது சண்டித்தனம் செய்வதற்கு முன் முண்டி அடித்து நீ வந்து குடை சாயாமல் தாங்க வேண்டும்.”
“மகனைப் பெறுவதற்கு எதற்காக? மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பது போன்றது அன்று அது. மகனை மதலை என்பர் ஏன்? தாங்கும் சக்தி அவனுக்கு உண்டு என்பதால், ‘சுமை தாங்கி’ மகன் என்று கூறுவர்.
“மக்களைப் பெற்றவர் மகாராசர் என்கிறார்கள்; ஏன்? அவர்கள் ஆட்சியைத் தாங்க வந்து நிற்பதால்”
“பெற்றவர்க்குப் பெருங்கடமை செய்த பெருந்தகைகள் உன்முன்னோர், பகீரதன் கதை உனக்குத் தெரியாதா? செத்து மடிந்தவரின் சாம்பலுக்கு நித்திய பதவி தரக் கங்கையை வரவழைத்தான். அவன் அரிய முயற்சியை அகில உலகும் பாராட்டுகிறது.”
“செல்வம் என்றால் உலகப் பொருள்கள் அல்ல; அவை நிலையாது கைமாறும். மக்கட் செல்வம்தான் மதிப்பு மிக்க செல்வம்; அது மட்டும் அன்று; யார் பெருமகிழ்விற்கும் மதிப்பிற்கும் உடையவர் தெரியுமா?”
‘பதவியில் உயர்ந்தவன் இந்திரன்; சுகபோகங்களை அனுபவிப்பதில் அவன் தொடர்ந்து இன்பம் அடைகிறான்’ என்று கருதுகிறார்கள். ‘மோன நிலையில் இருந்து தவம் செய்யும் ஞானிகள் பேரின்ப நிலை அடைகிறார்கள்’ என்று பேசலாம். அது முழு உண்மையன்று, நன்மக்களைப் பெற்றவர்களே நானிலத்தில் நன்மதிப்புப் பெறுகின்றனர்”.
‘உன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்; தோள்மேல் சுமந்து உன்னைத் துக்கி வைத்து மகிழ்ந்து இருக்கிறேன்; கல்வியும் படைப் பயிற்சியும் தந்து உன்னை மாவீரன் ஆக்கினேன்; சான்றோர் என்று உலகம் உன்னைப் புகழ்கிறது. நாட்டு மக்கள் நேசிக்கின்றனர்; சீதை கேள்வன் என்ற பெருமை உன்னைச் சார்கிறது. மணக்கோலத்தில் கண்ட நான் அரசு கோலத்தில் உன்னைக் காண விழைகின்றேன்.
“நான் காளைப் பருவத்தையும் கடக்கவில்லை; நாளை பார்த்துக் கொள்ளலாம், என்று நீ தள்ளிப் போட நினைக்கலாம். உன் சுதந்திரம் பறிபோகின்றது என்று நீ நினைக்கலாம்; சுமை மிக்க பொறுப்புகளை ஏற்பதால் சுவைமிக்க வாழ்வு நீ இழக்க நேரிடலாம் என்றும் என் வேண்டுகோளை மறுக்கலாம்; உன் விருப்பு வெறுப்பு களும் தடுக்கலாம்; நாடு உன்னை நாடுகிறது” என்றான்.
மன்னன் உரைத்த உரைகள் அவனுக்கு உவகையை ஊட்டவில்லை; அதே சமயத்தில் பொறுப்புச் சேர்கிறதே என்று சோர்வும் காட்டவில்லை. சுக துக்கங்களைச் சமமாகப் பார்க்கின்ற மனநிலை அவன் தகவாக இருந்தது; இடுக்கண் அது என்று அவன் நடுக்கம் கொள்ள வில்லை. வடுக்கள் மிக்கது என்று அதனை விடுவதாகவும் இல்லை.
பதவி என்பது பிறர்க்கு உதவி செய்வதற்கு அமையும் வாய்ப்பே தவிர, அதை வைத்துக் கோடிகள் குவித்துக் கேடுகளை வளர்ப்பதற்கு அன்று; அரச பதவி என்பது மக்களுக்குத் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பு; மாந்தர் வாழத் தலைமை ஏற்க ஒருவருக்கு ஏற்படும் நிலைமை; அரசன் என்பதால் உலகம் புகழ்மாலை சூட்டுகிறது; அதற்காக அவன் தலை சாய்க்கவில்லை; தந்தையிட்ட கடமை; அதைத் தள்ளக் கூடாது என்பதால் ஏற்க ஒப்புக் கொண்டான்.
முடிசூட்டு விழா முடிவு செய்யப்பட்டது. அவ் விழா நடத்துதற்குமுன் உலக மன்னர்க்கு ஒலை அனுப்பி அழைப்பு விடுத்தான். அவன் பெருநில மன்னன்; மற்றைய குறுநில மன்னர்களை அழைத்து அவர்தம் கருத்தைக் கேட்டான்.
“மகன் என்ற பாசத்தால் நான் மற்றைய நலன்களைக் கருதாமல் அவசரப்பட்டு எடுத்த முடிவாக இருக்கலாம்; அது தவறாகவும் அமையலாம்; உங்கள் கருத்தை அறிவித்தால் அது பொருத்தமாய் இருந்தால் இதை நிறுத்திக் கொள்ளக் காத்திருக்கின்றேன்” என்றான்.
அரசர் கருத்துரை
அவர்கள் இராமனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துகளை வரிசைப்படுத்தி உரைத்தனர்.
“தானம், தருமம், ஒழுக்கம், ஞானம், நல்ல வரைப் போற்றும் நயம், தீயவரை ஒறுக்கும் தூய்மை, பகைவரை அழிக்கும் தகைமை இவை எல்லாம் இராமனிடம் நிரம்ப உள்ளன”.
ஊர்ப் பொதுக்கிணறு பலருக்கும் பயன்படு கின்றது; பயனுள்ள மரம் பழுத்தால் நயம் உள்ளதாகப் பலருக்குப் பழங்கள் தருகின்றன. வானத்து மழை பயிர்களைப் பசுமையாக்குகிறது. கழனிகளில் நதிப்புனல் பெருகிப் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது. இவற்றை எல்லாம் யாராலும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. மக்கள் இராமனை எல்லா வகையிலும் நேசிக்கின்றனர். அவனும் அவர்களிடம் அன்பும், பரிவும் காட்டுகிறான். அதனால், அவனே தக்கவன்” என்று ஒருமித்த கருத்தை உரைத்தனர்.
தான் எடுத்த முடிவு ஏற்றம் உடையது என்பதால் தசரதன் மகிழ்வு கொண்டான். “இவன் என் மகன் என்பதைவிட உங்கள் ஏற்பு மகன் என்பதில் பெருமைப் படுகிறேன். இவன் உலகக் குடிமகன்” என்று கூறிப் பெருமிதம் கொண்டான். கோசலைக்கு அறிவித்தல்
நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த கணக்கரை அரசன் கூட்டினான். இச் செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட அணங்கு அனைய நங்கையர் கோசலை பால் தலை தெறிக்க ஓடினர்.
“மன்னன், உன்மகனுக்கு மணிமுடி சூட்டுகிறான்” என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர். தென்றலின் சுகத்தை அச்சொற்கள் தேடித் தந்தன. அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது. வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.
“ஈன்றபொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்ற குறட்பாவுக்கு அவள் விளக்கமாக மாறினாள். தன் மகன் மூத்தவன்; அறிவு முதிர்ந்தவன்; பொறுப்பு ஏற்கத் தக்கவன் என்பதால் தேர்வு சரி எனப்பட்டது. இவற்றோடு நால்வருள் இராமனைப் பெற்றதால் அவள் பேருவகை அடைந்தாள். தனக்கு நெருக்கமான சுமத்திரையை அழைத்துக்கொண்டு நாரணன் கோயிலை நண்ணிப் பூசனைகளும் வழிபாடுகளும் செய்தாள்.
வசிட்டர் அறிவுரை
அடுத்த நாளே முடிசூடும் நாள்” எனக் கணித்து உரைத்தனர். தசரதன் வசிட்டரிடம் முடிசூட்டுதற்கு முன் இராமனைச் சந்தித்து நல்லுரைகள் நல்க வேண்டினார்.
ஆட்சிக்கு வரும் இளவரசனுக்கு நல மிக்க வாசகங்களை வடித்துத் தந்தார்; பட்டம் தாங்கும் விழாவுக்கு முன் பார்வேந்தன் அறிய வேண்டியவை இவை என எடுத்து ஒதினார்.
“நாட்டுக்குக் கேடு விளைவிப்பது உட்பகையும் வெளித்தாக்குதலும் ஆகும்; பகை இல்லாவிட்டால் போர் இல்லை; போர் இல்லை எனில் அழிவு இல்லை; அமைதி நிலவினால்தான் மக்கள் ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்டுவர்; செல்வம் செழிக்கும்; அறங்கள் தழைக்கும்”.
“நாட்டு ஆட்சிக்குப் பொருள்வருவாய் தேவை; தேவைக்குமேல் மக்களிடமிருந்து வரித்தொகை பெறக் கூடாது. ஈட்டும் பொருளை நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட வேண்டும்; சொந்த சுகங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது”.
“நீதித் துறையில் அரசன் இரு தரப்பினரையும் விசாரித்து நடுவுநிலை பிறழாமல் நீதி வழங்க வேண்டும்; கொடியவரை ஒறுப்பது களைகளை நீக்குவதற்கு நிகர் ஆகும். அப்பொழுதே ஏனைய மக்கள் அச்சமின்றி வாழ முடியும்”.
“அரசன் மிக்க ஆற்றல் உடையவன் ஆயினும் போற்றத் தகு நல்லமைச்சரைக் கேட்டுச் செயல் ஆற்ற வேண்டும்; முதிர்வு உடைய அறிஞரைக் கலக்காமல் அதிர்வு தரும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது”.
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அவர்களை நல்வழி இயக்குவதற்கு மன்னன் வழி காட்டியாய் இருக்க வேண்டும். மன்னன் எவ் வழி மக்கள் அவ் வழி, அறவாழவும் அருள்நெஞ்சும் அவனுக்கு இன்றியமையாதன; இன்சொல், ஈகை, எண்ணிச் செயற்படும் திறன், முயற்சி, தூய்மை, விழுமியது நினைத்தல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்; நீதியும் நேர்மையும் உன்னிடம் இயல்பாக உள்ளன; அவற்றோடு பரிவும் பாடு அறிந்து ஒழுகும் பண்பும் இருத்தல் வேண்டும்”.
“நாட்டு மக்களை மதிக்க வேண்டும்; அற ஒழுக்கம் தவறாத அந்தணர், தவ ஒழுக்கத்தில் தலை சிறந்த முனிவர் இவர்களை மதித்து இவர்பால் பணிவு காட்ட வேண்டும்”.
“உழுவார் உலகத்துக்கு அச்சாணி போன்றவர்; அவர்கள் கை மடங்கிவிட்டால் தவசிகளும் பட்டினிதான். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; சோம்பித் திரியாமல் சுருசுருப்பாய்த் தொழில் செய்யும் ஏனைய தொழிலாளிகள் இவர்களை மதித்து, இவர்கள் தேவை களைக் கேட்டுத் திட்டங்கள் இயற்றிச் செயல்படுத்த வேண்டும்”.
“சோம்பலையும் மறதியையும் விட்டு ஒழிக்க வேண்டும்” என்று வசிட்டர் ஒர் ஆத்திச்சூடியை அறிவித்தார்.
“மேலும், இளைஞர் தவறும் இடங்கள் சில உள்ளன. மங்கையரின் அழகு மயக்கம் தருவதாகும்; அவர்கள் அங்கைகளைத் தொட்டுவிட்டோம் என்பதால் அவர்கள் மயக்கிய அறிவுரைகளைக் கேட்டுப் பாதை தவறக் கூடாது. கட்டிய மனைவி ஆயினும் அவளிடம் ஒட்டிய உறவு கொண்டு விட்டதால், ஆட்சியில் அவள் தூண்டும் தவறான செயல்களைச் செய்யக் கூடாது”.
“ஆடல் அழகியர் கூடலில், நாட்டின கடமையை மறந்து ஆட்சிய்ை இழந்தவர் பலர். காமக் களியாட்டம் வேண்டி அமைச்சரிடம் ஆட்சியைத் தந்து ஒதுங்கி விட்டவர் நாமம் இல்லாமல் மறைந்தது உண்டு”.
“அரச வாழ்வு சுக போக வாழ்வு அன்று; மக்களைச் சுகப்பபடுத்த எடுத்துக் கொள்ளும் சூளுரை; விருப்பு வெறுப்புக் காட்டாமல் பொறுப்பாய் ஆட்சியை நடத்த வேண்டும். கண்ணோட்டம் கண்ணுக்கு அழகுதரும்; அது பெண் நாட்டத்தில் முடியக்கூடாது. கலைகளை வளர்ப்பது வேறு; அவற்றை விலை பேசுவது வேறு. புலவர், கலைஞர் இவர்களை மதித்துப் பாராட்டிப் பரிசுகள் தந்து கலைகளை ஊக்குவிக்க வேண்டும்”.
இராமன் ஏற்பு
இவ் அறிவுரைகளை ஒரு சடங்காகமட்டும் அல்லாமல் தேவைக்காகவும் அவர் இராமனுக்கு எடுத்துக் கூறினார். வசிட்டர் கூறிய அறிவுரைகளைச் செவிமடுத்துப் “புவியாள்வது பொறுப்புமிக்கது” என்று எடுத்துக் கொண்டான்; அன்னை கோசலை தெய்வத்தை வழி பட்டதுபோல இவனும் ‘உலகுக்கு எல்லாம் ஒருதலைவன் உளன்’ என்பதை உணர்த்துபவனாகித் தெய்வ வழிபாடு செய்தான்.
விழாவுக்கு முன்னால் புண்ணியப் புதுப்புனல் கொண்டு வந்து அப்புனிதனை நீராட்டினர். நன்மைகள் அவனை வந்து அடையச் சடங்குகளைச் செய்தனர். வெள்ளை நிறப் புல்லில் கள்ளமில்லாத கார்வண்ணனை அமர வைத்தனர்; அப்புல்லிற்குத் தருப்பை புல் எனப் பெயரிட்டனர்.
மணநாளுக்கு முந்தியதினம் வழக்கமாக இயற்றும் சடங்குகளைச் செய்தனர். ஒரே நாளில் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பரபரப்பாய் நடந்து முடிந்தன. அடுத்த நாள் நடக்க இருக்கும் முடிசூட்டும் விழாவைப் பற்றிய செய்திகள் இறக்கைகள் கொண்டு பறந்தன; நாடறியச் செய்தனர் அயோத்தி மாநகர் இந்திரன் பொன்னகர் எனப் பொலிவு பெற்றது. திக்கு எட்டும் செய்தி பரவியது; திசைகள் எட்டிலும் இருந்து மக்களும் மன்னரும் வந்து குழுமினர்; வள்ளுவன் என்னும் செய்தி பரப்புவோன் யானை மீது ஏறி ஊரறியச் செய்தான்.
“இராமன் நாளையே முடி சூடுகிறான்” என்ற செய்தியைப் பரப்பினான்; மக்கள் களிப்பில் மூழ்கினர். வாழை மரங்கள் இடம்பெயர்ந்தன, கமுக மரங்கள் அழகு செய்தன; முத்துமாலைகள் ஒளி வீசின, பொற்குடங்கள் பொலிவு ஊட்டின.
மந்தரை குறுக்கீடு
ஊரே உவகையுள் ஆழ்ந்தது; மலர்ந்த பூக்களைக் காண முடிந்ததே அன்றிக் குவிந்த மலர் ஒன்றுகூட இல்லை; ஒரே ஒரு ஜீவன் மட்டும் புழுக்கத்தால் மனம் அழுங்கிக் கொண்டது. அவள் முதுகு கூனிக் குறுகி இருந்தது. அந்த ஊனம் அவள் மனத்திலும் ஏற்பட்டது. “மணிமுடி” என்றதும் “யாருக்கு?” என்ற வினாவை எழுப்பினாள்.
“இராமனுக்கு; அவன் இந்நாட்டுக் கோமகன்!” என்றனர்.
உண்டை வில்லால் இராமன் சிறுவயதில் தன் முதுகைக் குறிபார்த்து அடித்த பண்டைய நிகழ்ச்சி ஒன்று அவள் நினைவிற்கு வந்தது. “ கிறுக்கனுக்கா இந்தத் தருக்கு மிக்க வாழ்க்கை?” என்று அழுக்காறு கொண்டாள்.
கேகயன் மகள் அவளுக்கு மிகவும் வேண்டியவள்; அவள் தோழிகளில் இவள் மிகவும் நெருங்கியவள்; மனம் சுருங்கிய இவள், அவள் மருங்கு சென்றாள். காய்ச்சிய பாலில் ஒரு புரைத்துளி கலந்தால் அது தயிராகிறது; இனிப்பு புளிப்பாக மாறுகிறது. ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பது அவளுக்குத் தெரியும். பெண் மனம் என்பது என்ன என்பதை நன்கு அறிந்தவள். ‘மகனுக்காகக் கட்டிய கணவனை உருட்டிவிடுபவள் பெண்’ என்பதை அறிந்தவள்; கணவன் துணை; மகன் அவள் உயிர்; பாசம்; கணவன் இறந்த காலம்; மகன் எதிர்காலம். பழமையை நினைத்துத் தன் கிழமையை உதறித் தள்ளமாட்டாள். தாய்மை என்பது பெண்ணின் பெருமை; ஆனால் அதுவே அவள் வீழ்ச்சிக்குத் துணைமை என்பதையும் உணர்ந்தவள். ‘பாசம்’ என்பது நெஞ்சைப் பசையற்றதாக ஆக்க வல்லது” என்பதை அவள் அறிவாள்; பாரம்பரியப் பற்று வாரிசு நியமனம் மாமேதைகளுக்கும் வீழ்ச்சியைத் தரும் என்பதை அவள் அறிவாள். பிறந்த வீட்டுப் பாசத்தைத் தூண்டிவிட்டால் அது சுடர் விளக்காக எரியும்; அவள் மனம் திரியும்; கணவனை விட்டுப் பிரிக்கும் என்பது அவளுக்குத் தெரியும். கேகயன் மகளைவிட இவள் வயதில் மூத்தவள்; அதனால், முதிர்ந்த அறிவுடையவள்; அவள் உதிர்க்கும் சொற்களை அவள் தோழி விதிர்க்கமாட்டாள்; அவள் கூரிய அறிவு நிரம்பியவளாய் இருந்தாள். சூழ்ச்சித் திறன்மிக்கவளாயும் விளங்கினாள். “கருமத்தை முடிப்பதில் தருமம் எது”? என்று சிந்திக்கமாட்டாள்.
கள்ளம் புகுந்த உள்ளம்
வானத்து நிலா வையகத்தைக் குளிர்விக்கிறது. பாற்கடலில் இருக்கும் பவளக் கொடிபோலக் கேகேயி சயனித்து இருந்தாள். உறக்கம் அவளைக் கிறங்கச் செய்தது; எனினும், அவள் அருள் உள்ளம் கொண்டவள் என்பதை அவள் அமைதியான கண்கள் காட்டின. களங்கம் அற்ற அவள் முகம் பளிங்குபோல் ஒளிவிட்டது. தாமரை மலர் போன்ற அவள் சீறடியை அந்தப் பேரிடி போன்ற கரடி வந்து தீண்டியது; இராகு கேதுக்கள் தீண்டப் பெற்ற திங்களாய் மாறினாள் கைகேயி.
ஆழ்ந்த தூக்கத்திலும் தொட்டது யார்? என்பதனை அறியும் மெல்லிய உணர்வு அவள் பெற்றிருந்தாள்; வழக்கமாகத் தொடுவது; தன்னை வருடுவது தசரதன்; இது புதிய தொடுகை; எனினும், அவள் அறிவு விழித்துப் பேசியது. தெய்வக் கற்பினள் அதனால் அது தன் கணவன் கை அன்று என்பதை அறிந்து கொண்டாள்; கவலையற்ற மன நிலை. அதனால், தன் துக்கத்தைக் கலைத்துக்கொள்ள விரும்பவில்லை.
கூனி தட்டி எழுப்பினாள்; தரையைக் கொழித்தாள்; குரலை உரப்பினாள்; “நெருப்புப் பற்றிக் கொண்டு எரிகிறது; நீ பொறுப்பு இழந்து உறங்குகிறாய்” என்று பொருமினாள்.
“இராமனைப் பெற்ற எனக்கு இடர் உளதோ?” என்று வினவினாள் கைகேயி.
“அதனால்தான் உனக்குப் படர்கிறது வேதனை” என்று உரைத்தாள்.
“கோசலை உயர்ந்தாள்; நீ தாழ்ந்தாய்” என்று அறிவித்தாள்.
“இராமன் மகளிரின் எதிரி; அவன் சீர்மை தவறிய உதிரி; அவன் ஏற்றம் கண்டு இங்கு வந்து இருக்கிறேன் பதறி” என்றாள்.
“அவன் ஏற்றத்தால் ஏற்பட்ட மாற்றம் யாது?”
“அவன் பட்டத்துக்கு உரியவன் ஆகிறான்; அதனால், கோசலையின் திட்டம் செயல் பட்டுவிட்டது”.
பட்டுபட்டு என்று பேசிய பதற்றம் கண்டு அவள் வியந்தாள்.
“கோசலைக்கு அப்படி என்ன புதுவாழ்வு புகுந்து விட்டது? பரதனை அவள் வரதனாக ஏற்று இருக்கிறாள்; விரதம் மிக்கு உடையவள்; தசரதன் அவள் கணவன்; பட்டத்து முதல்வி; இவற்றைவிட அவளுக்கு உயர்வு வேறு என்ன தேவைப்படுகிறது?” என்று கேட்டாள்.
“நாளை இராமன் முடிசூடப் போகிறான்; நாளை வாழ்வு இது; கோசலை வாழ்கிறாள்; நீ தாழ்கிறாய்” என்றாள்.
“இவ்வளவு நல்ல செய்தி சொல்ல முன்னுரை ஏன்? முகவுரை தேவை இல்லை; பதவுரையும், விளக்கவுரையும், உன்னை யார் கேட்டது? இராமன் முடிசூடுகிறான் என்பதை முன்னமே கிளந்து இருக்கலாமே. என் உள்ளம் குளிர, நீ கூறிய உரை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது; உனக்கு என்ன பரிசு தருவது? என்று தெரியாமல் தவித்துக் கிடக்கிறேன். இது என் முத்துமாலை; இதனை ஏற்றுக்கொள்; இந் நல்ல செய்தியை நீட்டித்துச் சொல்லியது ஏன்? தோழி! நீ எனக்கு நல்லவள்; இதைவிட நல்ல செய்தி நீ வேறு என்ன சொல்ல முடியும்? கூனிலும் இந்த முத்துமாலை உனக்குப் பொலிவு சேர்க்கும்; வானினும் மிக்க பெருமை இதனால் அடைவாய்” கூறி அதனை நீட்டினாள்.
வாங்கி அதைத் தரையில் கொழித்தாள்; அவளைப் பழித்தாள்; சிவக்க விழித்தாள்.
சிந்திய முத்துகள் மாலையைத் தந்தவளைப் பார்த்துச் சிரித்தன.
மனம் கொதித்தாள்; நெஞ்சு பதைத்தாள்; நிலத்தை உதைத்தாள்; அவள் பேச்சினை வெறுத்தாள்.
“இதன் விளைவை நீ எண்ணிப்பார்; கோசலை இராமன் தாய்; தலைமை அவளுக்கு; அவல நிலைமை உனக்கு கைகட்டிப் பிழைப்பார் எல்லாரும் அவள் வீட்டு முற்றத்தில் காத்து இருப்பர்”
“விரும்பினால் நீ அவளுக்கு அடிமைப்படு அவளுக்கு உழைத்துப் பாடுபடு; என்னைவிடு; நான் அவள் தாதியர்க்கு ஆட்படுதல் செய்யேன்; இது உன் தலைவிதி; வேண்டாம் எனக்கு அந்த அவதி” என்றாள்.
“சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த ஆசனத்தில் இருக்கப் போகின்றார். அவந்தனாய் உன் மகன் பரதன் அவர்களுக்குக் கவரி வீசி அடிமைத் தொழில் இயற்றப் போகிறான்”.
“இராமன் பதவி பெறுகிறான் என்பதைக் கேட்டு, நீ நிலைகொள்ளாமல் மகிழ்கிறாய்; அதற்கு நீ பரதனைப் பத்துமாதம் சுமந்திருக்கத் தேவை இல்லை. பெற்ற மகனுக்கு வாழ்வு தேடாமல், செல்வ மகனுக்குச் சீர்கள் தேடுகிறாய்; உன் தாய்மை உறங்குகிறது. அதை நான் தட்டி எழுப்பவேண்டி இருக்கிறது”
“இந்தக் கிழவன், நயமாகப் பேசிப் பரதனைப் பாட்டன் வீட்டுக்கு ஏன் அனுப்பி வைத்தான்? திட்டமிட்டுச் செய்த சதி இது; நீ பிறந்தது அரசவீடு; அரசர் வீட்டில் வாழ்க்கைப்பட்டாய்; நீ விரசு கோலங்கள் இழந்து விரச வாழ்க்கை மேற்கொள்ளப் போகிறாய்; நினைத்துப் பார் பின்வருவது சிந்தித்துச் செயற்படுக” என்றாள்.
வரம்பு மீறி அவள் தரம் கெட்டுப் பேசுவதைக் கைகேயியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; விட்டால் விண்ணில் பறக்கிறாய்; எல்லை கடக்கிறாய்; அதனால், தொல்லைகளைத் தேடுகிறாய். அக்கம் பக்கத்தில் யாராவது நீ பேசுவது கேட்டு அறிந்தால், உன்னை அக்குவேறு ஆணிவேறாய்ப் பிய்த்துவிடுவர்; சூழ்ச்சி செய்கிறோம் என்று மன்னன் ஆள்கள் நம்மை வளைத்துக் கொள்வர்; அதனால், விளையும் விளைவுகளை நினைத்துப் பார்! மனம் போன போக்கில் உன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாய்” என்று அறிவிப்புத் தந்தாள்.
“அஞ்சுகமே! உன் சுகம் கருதியே பேசுகிறேன்; நீ அரசன் ஆணைக்கு அஞ்சுகிறாய்; இன்னும் எதுவும் மிஞ்சிப் போகவில்லை.”
“பாவம்! பரதன் பரிதவிப்புக்கு ஆளாகிறான்; அவன் செய்த குற்றம் உன் வயிற்றில் பிறந்தமையே; அதுதான் பெரிய குற்றம்.”
“அரசன் மாள, மற்றொருவன் நாடாள முடியும்; அவன் உயிரோடு இருக்க இராமன் ஆட்சிக்கு வருதல் முறையாகாது; மூத்தவன் தசரதன் இருக்கும்போது முன்னவன் என்று கூறிக் கொண்டு இவன் முடி ஏந்துவது தவறு அல்லவா?”
“காலம் கருதித் தக்கது செய்தால், ஞாலமும் கை கூடும்; இதை நன்கு பயன்படுத்திக் கொண்டவள் கோசலை; அரசனை அவள் மயக்கிவிட்டாள்; அவனை முடுக்கிவிட்டிருக்கிறாள்; இல்லாவிட்டால் தீடீர் என்று ஏன் அவன் இந்த முடிவுக்கு அடிவைக்க வேண்டும்? நான் படித்துச் சொல்கிறேன்; நீ மனம் இடிந்து அழியப் போகிறாய்.” “நாளைக்கு இராமன் ஆட்சிக்கு வருகிறான்; நடக்கப் போகும் காட்சி என்ன?”
“பெட்டிச் சாவி கோசலை கையில்; அவள் கெட்டிக்காரியாகிறாள்; நீ கைகட்டிக் கொண்டு நிற்பாய்”
“வறியவர் வந்து வாய்திறந்து கேட்டால் சிறியவள் நீ என்ன செய்வாய்? மூத்தவளைக் கேட்க அவள் தந்தால் நீ உன் மானத்தைக் காத்துக் கொள்ள முடியும்; ஆட்சி அவள் கையில்; அடிமைத்தளை உன் தாளில்; வள்ளலாக வாழவேண்டிய நீ, எள்ளல் நிலையில் தாழப் போகிறாய் ஏழ்மை உனக்கு; மேன்மை அவளுக்கு”.
“எந்த வகையில் மூத்தவளுக்கு நீ தாழ்ந்துவிட்டாய்; மூவரில் நீ பேரழகி, அரசன் ஆசைக்கிழத்தி, இப்பொழுது அனைத்தையும் இழத்தி”.
“கெஞ்சுவது உன்னிடம்; அவன் அஞ்சுவது கோசலைக்கு; மஞ்சம் உனக்கு தஞ்சம் அவளுக்கு இது வஞ்சம் என்று நினைக்கிறது என் நெஞ்சம்” என்றாள்.
“மானே தேனே, என்று தெவிட்டாமல் பேசுவான்; பழகியதால் பால் புளித்ததோ! “கட்டிக் கரும்பே” என்று பேசியவனுக்கு நீ எட்டிக்காய் ஆகிவிட்டாயோ? பித்தம் பிடித்தவள்போல் நீ பிதற்றாமல் இருக்கிறாய்; சித்தம் அடங்கி, நித்தம் அவனோடு குலவப் போகிறாயா?”.
பூ உனக்கு எதற்கு? அதைப் பிய்த்துப் போடு; திலகம் ஏன்? அதனைக் கலைத்துக் கலகம் செய்; சடை; அது உனக்குத் தடை; அதை விரித்துவிடு; சிரிப்பான் அவன்முன் சீர் குலைந்துநில்; பட்டுப் புடவை ஏன்? பகட்டை விடு; காசுக்கு உதவாதவர் கலகலப்புக் காட்டுகிறார்கள். சுகாசினியாக இருக்க வேண்டிய நீ, விகாசினியாய் இருக்கிறாய். அந்தப் புரத்து அழகி உன்னை எந்தப் புரமும் வளராமல் தடுத்துவிட்டான்; இட்டமகிஷி என்றால் பட்டமகிஷியாக ஏன் ஆகக் கூடாது?”
“கொஞ்சிக்குலவ உன்னை வஞ்சிக்கொடி என்றான்; நீ வஞ்சித்து அவனுக்கு அது உண்மை என்பதைக் காட்டு”.
“அழகி என்கிறான்; மனம் இளகிவிட்டாய்; இளயவள் என்றான்; வளைந்து கொடுத்தாய்; தாய்மை என்றால் அது அவனுக்குச் சேய்மையாகிவிட்டது. நீ பரதன் தாய் என்பதை அவன் தட்டிக்கழித்துவிட்டான்.
“இனி உன் தாய்மை பேசட்டும்; பரதன் வாழட்டும்; உனக்கு இழைத்த அநீதி ஒழியட்டும்; சொன்ன சொல் ஆற்றட்டும்” என்றாள்.
“என்னடி உனக்கு இந்த வேகம்?” என்றாள் கைகேயி
“அது என் விவேகம்; அவனிடம் உன் பிடிவாதம் காட்டு; உன் பிடியில் அவனை மாட்டு; சிறந்த தாய் என்பதை நீ அவனுக்கு எடுத்துக் காட்டு; இது இராமனுக்கு நான் வைக்கும் அதிர்வேட்டு” என்றாள்.
“நாவை அடக்கு உன் போக்கு நீக்கு: அக்கம் பக்கம் அறிந்தால் உன்னை மொட்டை அடித்து முழுக் காட்டிவிடுவர்” என்று அச்சுறுத்தினாள்.
“அதற்கு வேறு ஆளைப்பாரு, அஞ்சுவது நான் அல்ல; உன் நலம் தான் எனக்குப் பெரிது” என்றாள். அம்மிக் கல்லும் குழவிக் கல்லால் குழைந்துவிட்டது; தேய்ந்துவிட்டது; பரதன் தாய் மனம் நெகிழ்ந்தாள்; உறுதி குலைந்தாள்; மகனுக்கு உறுதி தேடினாள்; அதனால்; விழித்து எழுந்தாள்.
“வழி யாது?” என்று வினவினாள்;
“'நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?” என்று கேட்டாள்.
“அறிவுடையவள் நீ! இனி நீ பிழைத்துக் கொள்வாய்; தெரிந்தும் பிழை செய்வாய்” என்றாள்.
“'நீ வெல்வாய்; நான் சொல்வது செய்வாய்; கோமகன் வருவான்; கோமாளியாய்ச் செயல்படாதே; உன்னைத் தழுவ வருவான்; அந்த வாய்ப்பை நழுவவிடாதே; கடிந்து பேசு, படியவை”.
வரம் கேள்
“சம்பராசூரனோடு தசரதன் போர் செய்தான்; நீ அவனுக்குத் தேர் ஒட்டினாய்; வெற்றி உன்னால் கிடைத்தது. நெற்றிக்குமேல் வைத்து உன்னைப் புகழ்ந்து போற்றினான்; வரம் கேள் என்றான்; இரண்டு வரம் உன் கேள்வனிடம் கேட்டுப் பெற்றாய்; அவற்றை இப்பொழுது செயல்படுத்தச் சொல்” என்றாள்.
தசரதன் வருகை
கோலம் மிக்க அழகி, அவள் சீலத்தை மறந்தாள்; திலகத்தை அழித்துக் கொண்டு விதவையானாள். கூந்தலை விரித்தாள்; ஏந்தலைப் பகைத்தாள்; அணி கலன்கள் அவளுக்கு அழகு செய்தன; அவை அவள் பணிகேட்டுப் பதுங்கிக் கொண்டன! சேலை இது வரை கசங்கியது இல்லை; அது அவள் கண்களைப் போலக் கசங்கிக்காட்சி அளித்தது; கட்டிலில் புரண்ட அவள், தரையில் உருண்டாள்.
நள்ளிரவு வந்தது; கள்வர், காதல்வெறியர் உறங்காத நேரம்; யாழினும் இனிமை சேர்க்கும் குரலாள் கைகேயி; அவள் அந்தப்புரம் நோக்கி அயோத்தி மன்னன் அடலேறு போலச் சென்றான்; புதிய செய்தி சொல்லி, அவளைப் பூரிப்பு அடையச் செய்ய விரும்பினான்.
நிலைமை மாறிவிட்டது; அவள் அவல நிலை கண்டு கவலை கொண்டான் வேந்தன்; மானை எடுக்கும் யானையைப் போல அவளைத் தழுவி எடுத்தான்; அவள் நழுவி விழுந்தாள்; தரையில் தவழ்ந்தாள்; வானத்து மின்னல் தரையைத் தொட்டது; கட்டி அணைத்தான்; கொட்டிய தேளாகக் கடுகடுத்தாள் அவள்.
“'தேனே என்றான்; மானே என்றான்; தெள்ளமுதே உன்னை எள்ளியது யார்?” என்றான்.
“மங்கை உதிர்த்த கண்ணிர், அவள் கொங்கையை நனைத்தது; முத்துமாலை உதிர்ந்ததுபோல் இருந்தது; அவன், தன் அங்கை கொண்டு கண்ணிரைத் துடைத்தான்; அவள் தலையில் அடித்துக் கொண்டு பதைத்தாள்; பார் பிளந்தது போன்று ஒர் நினைவு அவனுக்குத் தோன்றியது; “யார் உமக்குத் தீமை செய்தவர்?” என்று வினவினான்.
“நீர் வாய்மை மன்னன்; வாய் தவற மாட்டீர் என்று கருதுகிறேன்” என்றாள். “விரும்பியதைக்கேள், அரும்பியதைப் போன்ற உன் திருவாயால்; உள்ளம் உலோபேன்; வள்ளல் இராமன் மீது ஆணை” என்றான்.
“'தேவர்களைச் சாட்சி வைத்தாய்; வரங்கள் இரண்டு தருவதாக மாட்சிபடக் கூறினாய்; அவற்றைத் தருக” என்றாள்.
“விளம்புக வழங்குகிறேன்” என்றான்.
“என் மகன் முடிசூட வேண்டும்; இது முதல் வரம்; இராமன் காடு ஏக வேண்டும்! இஃது அடுத்த வரம்” என்று தொடுத்துக் கூறினாள்.
நஞ்சு தீண்டியது; வேகம் அடங்கியது; யானை போலச் சுருண்டு விழுந்தான் வேந்தன்.
மருண்டு விழித்தான். மயக்கம் நீங்கினான்; தயக்கம் காட்டினான்.
“உன் சுய நினைவில் பேசுகிறாயா? மற்றவர் சொல்ல நீ கேட்கிறாயா?” என்று கேட்டான்.
“முடிந்தால் கொடு; இல்லாவிட்டால் விடு” என்றாள்.
சொற்கள் அவனுக்குத் துணை வரவில்லை, பற்களைக் கடித்துக் கொண்டான்.
அவன் தன் கைகளைப் புடைத்தான்; புழுங்கி விம்மினான்; அழுங்கி நைந்தான்; நெஞ்சு அழிந்து சோர்ந்தான்.
அவளைக் கொல்ல நினைத்தான்; அவள் சொல்லை வெறுத்தான்; “கேட்டது தருவது கேடு” என்பதை அறிந்தான்; எனினும், என் செய்வது? கொன்றால் பழி வந்து சேரும்; அதனால், அழிவுகள் மிகுதி, வேறு வழி இல்லை; ‘பணிவதுதான் பயன்தரும்’ என நினைத்தான்.
“நீ கேட்கிறாய்; நான் மறுக்கவில்லை; உன் மகன் வேட்கமாட்டான்; அரியணையை ஏற்கமாட்டான்; உலகம் அதற்கு உறுதுணை நில்லாது; ஆட்சிதானே வேண்டும்? இராமனைக் கேட்டால் தம்பிக்கு மறுப்புக் கூறமாட்டான். அவனைக் கேட்பதா என்று நீ தயங்கலாம்; மண்ணைக் கேள்; தருகிறேன்; என் கண்ணைக் கேட்காதே; அதனை மறந்து விடு. இராமனைப் பிரிந்து என்னால் உயிர்வாழ முடியாது” என்று கூறி இரந்தான்.
“வாய்மை விலகுகிறது” என்றாள்.
“சத்தியம் தலை காக்கும்; அது என் உயிரைப் போக்குகிறது” என்றான்.
“உயிர் இழக்க அஞ்சவில்லை; இளம்பயிர் அவன்; தழைத்து வாழவிடு” என்றான்.
“வாய் கொழிக்கப் பேசினாய்; வரம் தந்து மகிழ்வித்தாய்; இப்பொழுது தரம் கெட்டுப் பேசுகிறாய்”
“சிபிச் சக்கரவர்த்தி உன் முன்னோன்; வாய்மை தவறவில்லை; புறாவிற்காகத் தன் உயிரைத் தந்தான்; பின் விளைவைப்பற்றி அவன் சிந்திக்கவில்லை”.
“கொடு; இல்லாவிட்டால் என்னைச் சாகவிடு” என்று இறுதி ஆணை பிறப்பித்தாள்.
அரசன் செயல் இழந்தான்; உணர்வு ஒழிந்தான்; கீழே சவம் எனக் கிடந்தான்; காரியம் முடிந்தது; காரிகை மனநிறைவோடு அந்த இரவு கவலையின்றி உறங்கினாள்.
விழாக் கோலம்
அடுத்த நாள் திருவிழா; முடிசூட்டும் நாள். இராமனுக்காக அவ்விழா காத்துக் கிடந்தது; எங்கும் பரபரப்பு; சுருசுருப்பு: மக்கள் தேனி போல விழாவுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். அலங்காரங்கள் எங்கும் அழகு செய்தன.
மங்கலப் பொருள்கள் வந்து குவிந்தன. வேதபாரகர் மறைகளைச் சொல்லினர்; அவர்கள் வசிட்டரை வணங்கினர்.
கங்கை முதல் குமரிவரை உள்ள புண்ணிய நதிகளில் இருந்து குடங்களில் நீர் கொண்டு வந்து சேர்த்தனர்; அவையில் அமைச்சர்களும் பிரமுகர்களும் வந்து சேர்ந்தனர்; வசிட்டரும் வந்து அமர்ந்தார்; மன்னன் தசரதன் வந்து சேரவில்லை; அனைவரும் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
வசிட்டர் தசரதனை அழைத்து வரும்படி சுமந்திரனை அனுப்பிவைத்தார். அரண்மனையில் அவனைக் காணவில்லை; சேடியர் கூற அரசன் கைகேயின் அந்தப்புரத்தில் இருப்பதை அறிந்தான்; நேரே அங்குச் சென்றான்; சேடியர்பால் செய்தி அனுப்பி, அவையோர் மன்னனை எதிர்ப்பார்ப்பதாகக் கூறினான். மன்னன் அவனைச் சந்திக்கவில்லை; மன்னிதான் அவனுக்குச் செய்தி தந்தாள்.
“இராமனை அழைத்து வருக” என்று சொல்லி அனுப்பினாள் கைகேயி.
சுமந்திரன் தேரைத் திருப்பினான், இராமன் திருக்கோயிலுக்குச் சென்று செய்தி செப்பினான். இராமன் முடிசூடும்முன் அன்னையின் அடிசூட விரைந்தான்; திருமாலை வழிபட்டு வணங்கிப் பின் கேகயன் மகள் இருந்த மனை நோக்கிச் சென்றான். மாடவீதி வழியாகச் சென்றபோது மாநகர மாந்தர் அவன் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
மன்னன் தங்கி இருந்த மணிமண்டபத்தை அடைந்தான்; பதும பீடத்தில் மன்னனைக் காணவில்லை; மகுடம் கையில் ஏந்தி மன்னன் காத்திருப்பான் என்று நினைத்தான்; பிள்ளையார் பிடிக்கப் பூதம் புறப்பட்டது போல் புயல் கிளம்பியது; தாய் என நினைத்து வரும் இராமனை நோக்கி, உயிர் உண்ணும் பேய் போலக் கைகேயி வந்தாள்.
“மன்னன் தன் வாயால் சொல்ல நினைப்பதை நான் கூறுகிறேன்” என்றாள்.
“தந்தை கட்டளை இடத் தாய் அதைத் தெரிவிக்க, அந்த ஆணையை ஏற்று நடத்தத் தனயன் யான் காத்துக் கிடக்கிறேன்” என்றாள்.
“கடல் சூழ்ந்த உலகத்தைப் பரதன் ஆள்வான்; நீ சடைகள் தாங்கித் தவமேற்கொண்டு காடுகளில் திரிந்து, நதிகளில் நீராடி, ஏழிரண்டு ஆண்டுகளில் திரும்பி வர வேண்டும் என்பது மன்னன்” ஆணை என்றாள்.
வியப்போ திகைப்போ அவனைத் தாக்கவில்லை; அதிர்ச்சிகள் அவனை அணுகவில்லை; தாமரை மலரை நிகர்த்த அவன் முகப் பொலிவு முன்னிலும் அதிகம் ஆனது; அதனை வென்றுவிட்டது. சுமையை ஏற்றுக் கொள்ள அமைந்தது தசரதன் ஆணை; அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. சமையை ஏற்க வந்தவனுக்குச் சுதந்திரம் கிடைத்தது.
தசரதன் எருதினை இழுத்து வந்து வண்டியின் நுகத்தடியில் பூட்டினான். அருள் உள்ளம் படைத்தவள் கைகேயி; அதனை அவள் அவிழ்த்துவிட்டாள்; பாரம் அவனை விட்டு நீங்கியது; அதற்காக அவளுக்கு நன்றி காட்டினான்; அவன் முகம் மும்மடங்கு பொலிவு பெற்றது.
“அரசன் பணி அது அன்று ஆயினும், தாயின் கட்டளை இது; இதை மறுக்க மாட்டேன்; என் பின்னவன் பெறும் செல்வம் நான் பெற்றதேயாகும்; இதைவிடச் சிறந்த பேறு எனக்கு உண்டோ இன்றே காடு ஏகுகின்றேள்; விடையும் கொண்டேன்” என்று கூறி வருத்தம் சிறிதும காட்டாமல் அவன் அவளை விட்டு அகன்றான்.
கோமகள் கோசலை துயர்
இராமன் வருவான் என்று கோசலை எதிர்பார்த்தாள்; பொன்முடி தரித்து வருவான் என்று நினைத்தாள்; சடைமுடி தாங்கி அவள் முன் வந்து நின்றாள்; அரசனாக வேண்டியவன் தவசியாய்க் காட்சி அளித்தான்.
சாமரம் வீசும், கொற்றக் குடை சுற்றிவரும்; மகுடம் புனைந்து மகன் வருவான் என்று அவள் காத்திருந்தாள்; தவக் கோலத்தில் வந்து காட்சி அளித்தான் அவன்.
“இம் மாற்றத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டு அவன் மாற்றத்தை எதிர்பார்த்தாள்.
“பரதன், உன் நேய மகன், மணிமுடி புனைகின்றான்” என்றான்.
“முறையன்று; எனினும், அவனிடம் எந்தக் குறையும் இன்று. உன்னைவிடப் பரதன் நல்லவன்” என்று பாராட்டினாள்.
“தவசிகள் உறையும் காட்டுக்கு அவசியம் நான் போக வேண்டும் என்பது அடுத்த கட்டளை” என்றான்.
அதிர்ச்சி அடைந்தாள்.
“ஏழிரண்டு ஆண்டுதான்” என்று கால எல்லையைக் குறிப்பிட்டான்.
“ஆணையா? தண்டனையா? என்னால் வேறுபாடு காண இயலவில்லையே. இது வஞ்சனை, நஞ்சு அணையது; இனி உயிர் வாழேன்” என்றாள்.
ஒருகையை மற்றொரு கையால் நெறித்தாள்; பெற்ற வயிற்றைப் பிசைந்தாள்; வெய்து உயிர்த்தாள்; “மன்னன் கருணை நன்று” எனக்கூறி நகைத்தாள்; தானும் இராமலோடு செல்ல நினைத்தாள்.
“அரசனுக்கு நீ என்ன பிழை செய்தாய்? அறம் எனக்கு இல்லையோ?” என்று அலறினாள். தெய்வங் களை நொந்தாள்; கன்றைப் பிரியும் தாய்ப் பசுவைப் போலக் கலங்கினாள்.
இராமன் துயருறும் அன்னையைத் தேற்ற முனைந்தான்; “மன்னவன் சொல் கேட்டு நடப்பது தானே உனக்குப் பெருமை; கணவன் சொற் காத்தல். இல் காப்பவர்க்கு உரிய கடமை அன்றோ” என்றான்.
“மகனைப் பிரிந்து தவிக்கும் அவர் துயரை அவித்து ஆற்றுவது உன் கடன் அன்றோ! சாகும் போதும், மனம் வேகும் போதும் உற்றவர் அருகிலிருப் பது கற்றவர்க்குக் கடமை அன்றோ, அவரை ஆற்றித் தேற்றித் தவநெறிக்குச் செல்ல நீ துணை இருக்க வேண்டாவோ! பத்தினிப் பெண்டிர் கணவனுக்குப் பணி செய்வதுதானே பாரத நாட்டுப் பண்பாடு! இல்லற தருமம் அதுதான்; தவித்த வாய்க்குத் தண்ணிர் தருவது மானிட தருமமும் ஆகும்” என்று கூறி விடை பெற்றான்.
செய்தி முற்றிவிட்டது என்பதை அறிந்தாள்; முதலுக்கே மோசம் வந்துவிட்டது என்று முந்தினாள். கேகயன் மகளின் தனி அறையில் கீழ்த்தரையில் புழுதியில் மன்னன் படிந்துகிடப்பதைக் கண்டு அழுது அரற்றினாள்.
“பொன்னுறு நறுமேனி புழுதிபடிந்து கிடப்பதோ?” என்று கூறிக் கதறினாள்; “சந்தனம் கமழும் மார்பு சகதியில் கிடக்கிறதே?” என்று கூறி நைந்தாள்.
வீட்டிற்கு எட்டிய செய்தி நாட்டுக்கும் பரவியது; மங்கல ஒலி மயங்கியது; மகிழ்ச்சி மக்களிடம் இருந்து நீங்கியது; அலறல் ஓங்கியது.
அந்தப்புரத்தில் வசிட்டர்
வசிட்டர் கைகேயியிடம் நீதிகள், நியதிகள், மரபுகள், வரம்புகள், அறிவுரைகள் ஆயிரம் எடுத்துச் சொல்லியும் அவை செவிட்ன் காதில் ஊதிய சங்கு ஒலியாகியது. அவள் நெஞ்சு உறுதியை அசைக்க வில்லை.
தசரதன் விழித்துப் பார்த்தான்; வேர்த்தான்; தன் உள்ளத்துக் குமுறல்களைக் கொட்டி ஆர்த்தான். அவன் செயற்கையாய்ச் செவிடன் ஆகிவிட்டான்; எதிரொலிகள் எதுவும் எடுபடவில்லை.
அழுது அயர்ந்த அரசி கோசலைக்கு அவன் தன் நிலையை விரித்து உரைத்தான்.
“தரையில் கொட்டிய பால், அதை மீட்டு எடுக்க முடியாது; தயிர் புளித்துவிட்டது; மீண்டும் அதைப் பால் ஆக்க முடியாது; தந்த வரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது.”
“அது மட்டும் அன்று; விதியின் செயல் இது, சாபத்தின் விளைவு இது; நான் செய்த பாபத்தின் பரிகாரம்” என்று பழைய நிகழ்ச்சி ஒன்றை அவளுக்கு எடுத்துக் கூறினான்.
“இது உனக்குத் தெரியாது; அரசன் நான்; அதனால்; காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த வேட்டையாடச் சென்றேன்; அங்கே ஒரு யானை தட்டுப்பட்டது; அதனைக் கண்ணால் காணவில்லை; யானை நீர் குடிக்கும் அரவம் கேட்டேன்; ஒலி வருவழி கொண்டு நோக்கினேன்.”
“கூர்த்த செவிப்புலன் படைத்த யான், தவறி விட்டேன்; குருடன் ஆகிவிட்டேன்; அது யானை எழுப்பிய ஒலியன்று; ஒர் இளைஞன் பானை எழுப்பியது; நீர் மொள்ளும் முடுமுடுப்பு அது. அம்பு பட்டு அவன் அலறி விழுந்தான்; அலறல் கேட்டு ஒடினேன்; அவனைத் தேடினேன்; வாடினேன்.”
“ஐயா! நான் அந்தணச் சிறுவன்; விழி இழந்தவர் என் பெற்றோர்; அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வந்தேன் யான்; நீர் வேட்கையால் அவர்கள் தவித்தனர்; அதனால், இங்கு முகக்க வந்தேன்; நீ என் உயிரை முகந்துவிட்டாய்”.
“ஐயா! எனக்கு நீர் ஓர் உதவி செய்துதர வேண்டும்; இந்தத் தண்ணிர் மிடாவை அவர்களிடம் தந்து குடிக்கச் செய்; என் இறுதி அஞ்சலியை அவர்களுக்கு அறிவித்து விடு” என்றான்.
அம் முதியவருக்குப் பருக நீர் கொண்டு சென்றேன்; அவர்கள் மனம் உருக, “'மகனே வருக! நீர் தருக” என்று குழைந்து பேசினர்.
“கரம் நீட்டினேன்”
“உன் உரம் எங்கே?” என்று என்னைத் தழுவினர்.
“என் தரம் அவர்களுக்கு அறிவித்தேன்”
“இப்பொழுதே விழி இழந்தோம்” எல்லு கதறினர்.
“நான் நாட்டு மன்னன்” என்றேன்.
கேட்டு அவர்கள் மன்னிக்கவில்லை; “நீயும் எம்மைப் போல் மகனைப் பிரிந்து தவிப்பாய்” என்றனர்.
அவர்கள் சாபத்தால் எனக்கு ஒர் நன்மையும் ஏற்பட்டது. ‘மகன் எனக்குப் பிறப்பான்’ என்ற நம்பிக்கையை அந்தச் சாபம் தந்தது.
மகனைத் தேடி அவர்கள் மயானம் அடைந்தனர்.
“சிதையில் மூவர் உடலையும் வைத்து எரித்தேன்”
“அதே நிலை எனக்கு வந்துதான் தீரும்; மகனைப் பிரிந்தேன்; என் உயிர் என்னை விட்டுப் பிரியும்” என்றான்.
மன்னன் மரணத்தால் ஏற்படும் அவலம்; மகனைப் பிரிந்ததால் ஏற்படும் துயரம்; “அவன் அவலத்துக்கு அழுவதா? மகன் பிரிவுக்குப் புலம்புவதா?” என்று அவள் அழுகைக்கே அர்த்தம் தெரியவில்லை. இராமன் பிரிவு நாட்டு மக்களை அழுகையில் ஆழ்த்தியது.
தம்பி சீற்றம்
செய்தி அறிந்தான் இளைய செம்மல் இலக்குவன்; அவனுள் எழுந்த எரிமலை வெடித்தது.
“சிங்கக் குட்டிக்கு இடும் ஊனை நாய்க் குட்டிக்குத் தந்திருக்கிறார்கள்; அவர்கள் அறிவு கெட்டுவிட்டது; ஒருபெண், அவலத்துக்கே காரணம் ஆகிவிட்டாள்; பெண்களே என் எதிரி” என்றான்.
“காரணம் யார்? பெற்ற தாய் ஆயினும் அவள் எனக்குப் பெரும்பகையே” என்று கொதித்து எழுந்தான்.
“சினவாத நீ சினந்தது ஏன்?” என்று சிறு வினாவினை இராமன் எழுப்பினான்.
“தந்தை தசரதன் பரதனுக்குத் தந்த ஆட்சியை மற்றோர் தம்பி நான், மீட்டுத் தருகிறேன்; இதை யாரும் தடுக்க முடியாது” என்றான்.
“தவறு செய்தவன் நான்; இப்படி அவதூறு வரும் என்று தெரிந்திருந்தால் மூளையிலேயே களைந்திருப் பேன்; ஆட்சியை ஏற்க நான் ஒப்புக் கொண்டதே தவறு.”
“சால்புடன் நடந்து கொண்ட தந்தை சால்பு உடையவர்; பாசத்தோடு பரிந்து பேசிய தாய் பண்பு உடையவள்; அவர்கள் நம் பால் அன்பு கொண்டனர்; அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எல்லாம் விதியின் செயல்” என்றான்.
“விதியா? இல்லை இது சதி; விதிக்கும் நான் ஒரு விதியாய் நிற்பேன்; சதிக்கு நான் ஒரு கதியாய் இருப்பேன்; என் வில்லின் முன் எவர் சொல்லும் நில்லாது” என்றான்.
“நீ கல்வி கற்றவன்; சாத்திரம் பயின்றவன்; பெற்றோரை எதிர்ப்பது பேதைமை யாகும்; சீற்றம் உன் ஏற்றத்தைக் கெடுக்கும்; என் சொல் கேட்டு நீ சினம் அடங்கு” என்றான் இராமன்.
“நன்மதியோடு விளங்க வேண்டியவன் நீ; நல் நீதிகளை மறுத்துப் பேசுகிறாய்; இனி எதையும் வீணாகக் கேட்டு உன்னை நீ அலட்டிக் கொள்ளாதே; நடக்க இருப்பவை இவை; எவற்றையும் நிறுத்த முடியாது; பரதன்தான் ஆட்சிக்கு உரியவன்; நீ எதிர்த்துப் புரட்சி செய்ய உனக்கு உரிமை இல்லை; அடங்கி இரு அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை நரகத்தில் சேர்க்கும்; நாம் காட்டுவாசிகள் அல்ல விருப்பப்படி நடக்க; பெற்றோரை மதிக்க வேண்டும்; அவர்கள் ஆணையைக் கேட்டு நடப்பதுதான் நம் கடமை” என்று கூறி இராமன் இலக்குவனை நெறிப்படுத்தினான். விவேகம் வேகத்தை அடக்கியது.
இலக்குவன் மழைநீர்பட்ட மலைக்கல் போலக் குளிர்ந்து ஆறினான். சூடு தணிந்தது; தன்னை அடக்கிக் கொண்டான்; தன் தமையன் கட்டளைக்கு அடி பணிந்தான்; அதன்பின் இராமன் நிழலாக அவன்பின் தொடர்ந்தான்; தன் தாய் சுமத்திரையைக் காணச் சென்றான்; இராமனும் அவனுடன் சென்றான்.
கைகேயி இராமனுக்காக அனுப்பி வைத்த மரவுரியை ஏற்று உடை மாற்றிக் கொண்டான், களம் நோக்கிச் செல்லும் போர் வீரனாக மாறினான்; தவக் கோலத்தில் தமையனைக் கண்ட இலக்குவன், கண் கலங்க நின்றான்; சுமத்திரை அவனைத் தட்டி எழுப்பினாள்.
“தமையனைக் கண்டு நீ கண்ணிர் விடுகிறாய்; அதனால் நீ அவனுக்கு அந்நியன் ஆகிறாய்; நீயும் புறப்படு; கோலத்தை மாற்று; வில்லை எடுத்து அவன் பின் செல்க! மரவுரி நான் தருகிறேன்; நீ உடுத்திக் கொள்; அதுதான் உனக்கு அழகு தரும்”
“இராமன் வாழும் இடம்தான் உனக்கு அயோத்தி; அவன்தான் உனக்கு இனித் தந்தை. சனகன் மகள் சீதைதான் உனக்கு இனி அன்னை, காலம் தாழ்த்தாதே; புறப்படு; இங்கு நிற்பதும் தவறு” என்றாள்.
மரிவுரி தரித்து இலக்குவனும் இராமன்பின் வந்து நின்றான்.
“இது என்ன கோலம்?” என்று வியப்புடன் கேட்டான்.
“அரச உடை அங்கு ஆகாதே” என்றான்.
“உன்னை யார் காட்டுக்கு ஏகச் சொல்லியது? வரம் எனக்குத்தானே தவிர உனக்கு அல்லவே”
“நான் உடன் வரக்கூடாது என்று அன்னையர் யாரும் வரம் வாங்கவில்லையே” என்றான்.
அவனும் தன்னுடன் வருதலை விரும்பாது, அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான்.
“உனக்கு இங்கே கடமைகள் மிக்கு உள்ளன; அன்னையர்க்கு ஆறுதல் கூற உன்னையன்றி யார் இருக்கிறார்கள்?”
“தந்தை நிலை கெட்டு உலைகிறார்; அவருக்கு என் இழப்பை ஈடு செய்ய நீ இருக்க வேண்டாவா?”
“பரதன் ஆட்சிக்குப் புதிது; வயதில் என்னைவிட இளைஞன், அவனுக்குத் துணையாக யார் இருப்பர்?”
“யான் இங்கிருந்து ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன; எனக்காக நீ இரு; என் வேண்டுகோளை ஏற்று நட” என்று அறிவுரை கூறினான்.
மூத்தவன் இந்த உரைகளைப் பேசுவான் என்று இலக்குவன் எதிர்பார்க்கவில்லை; இந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டுக் கடுந்துயரில் ஆழ்ந்தான்; விம்மி அழுதான்.
“ஏன் என்னை உன்னிடமிருந்து பிரிக்கிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை நான் விரும்பும் இடத்தில் வாழ விடு”
“மீனும் குவளையும் நீரில்தான் வாழும்; ஏனைய உயிர்களும் அவை அவை வாழும் இடம் இவை எனத் தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன; கட்டிய மனைவியை நீ விட்டு ஒதுங்கமுடியாது; ஒட்டிய உறவுடைய என்னையும் நீ வெட்டித் தள்ளமுடியாது; “எட்டப் போ” என்று கூறமுடியாது! நீ இல்லாமல் நான் வாழ முடியாது; அன்னை சீதையும் உன்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது; இது எங்கள் நிலை”.
“ஏன் என்னை ஒதுக்குகிறாய்; உனக்குக் கொடுமை இழைத்த தசரதன் மகன் என்பதாலா? நீ எதைச் சொல்லி இதுவரை மறுத்தேன்; சினம் தணிக என்றாய்; தணிகை மலையாயினேன்; சீற்றம் கொள்ளாதே என்றாய்? அதற்கு மறுப்பு நான் கூறவில்லை; நீ எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவன் நான்; ஆனால் ‘இரு’ என்ற கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது; இது கொடுமை மிக்கது; அரச செல்வத்தை விட்டுச் செல்லும் நீ, நானும் உன் உடைமை என்பதால் என் உறவை உடைத்து எறிகிறாயா?” என்று கேட்டான் அதற்குமேல் இராமன் பேசுவதைத் தவிர்த்தான்; அவனைத் தடுக்கவில்லை.
சீதை செய்கை
சித்திரப் பாவைபோல எந்தச் சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்த சீதைக்கு இந்தப் புதிய மாற்றங்கள் வசித்திரமாய்ப் பட்டன; “என்ன நடக் கிறது?” என்று எடுத்துக் கூற யாரும் முன்வரவில்லை; அவளும் தன் நாயகன் நா, உரையாததால் நலிந்து காத்திருந்தாள்.
“எதிர்பாராதது நடக்கலாம்; ஆனால், எதிர்த்துப் பேசும் உரிமையை நீ எடுத்துக் கொள்ளாதே; எல்லாம் மிகச் சிறிய செய்திகள்தான்,” என்றான்.
“பரதன் பட்டத்துக்கு வருகிறான்; மகிழ்ச்சிமிக்க செய்தி.”
யான் காட்டுக்குப் போகவேண்டும் என்பது மன்னன் கட்டளை”
“மாமியார் மெச்சும் மருமகளாய் நீ அவர்களுக்குத் துணையாய் இங்கே இருப்பாய்” என்று அறிவித்தான்.
“நான் காட்டுக்குச் செல்லும் தவசி; நீ வீட்டு ஆட்சிக்கு அமையும் அரசி; இவற்றை நீ தெரிந்து கொள் அலசி” என்று விளக்கம் கூறினான்.
“பரிவு நீங்கிய மனத்தோடு பிரிவை எனக்குத் தருகிறாய்; ஏன் என்னை விட்டு நீ நீங்க வேண்டும்?”
“கட்டிய மனைவி கால்கட்டு, என்று வெட்டி விடத் துணிகிறாயா! மனைவி என்றால் மனைக்குத் தான் உரியவள் என்று விதிக்கிறாயா? காட்டுவழி முள் உடையது; பரல்கற்கள் சுடும் என்று கருதுகிறாயா?”
“குளிர் சாதனங்களில் பழகிய இவளுக்கு உபசாதனங்கள் அமைத்துத் தர முடியாது என்று அஞ்சுகின்றாயா?
“ஒன்றே ஒன்று கேட்கிறேன்; இதற்கு மட்டும் விடை கேட்கிறேன்; பிரினுவினும் சுடுமோ பெருங்காடு?”
“என் ஒருத்திக்குத்தான் இவ்வளவு பெரிய காட்டில் இடமில்லையா?” என்று கேட்டாள்.
“உன் இன்ப வாழ்விற்கு நான் இடையூறு என்று பட்டால் நிற்பதற்கு எனக்குத் தடையாதும் இல்லை” என்றாள்.
அன்பின் அழைப்பிற்கு அவன் அடி பணிந்தான். அதற்கு மேல் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.
சீரை சுற்றிய திருமகள் முன்னே நடந்தாள்; காரை ஒத்தவன் அவளைத் தொடர்ந்தான்; இவ்விருவர் பின்னான் இலக்குவன் நடந்தான்; இராமன் தாயரைக் கைகூப்பித் தொழுது இறுதி வணக்கம் செலுத்தினான்.
மகனையும் மருமகளையும் அவர்கள் வாழ்த்தி அனுப்பினர்; இலக்குவனை ஏத்திப் புகழ்ந்தனர். இராமன் தாயரை அரிதிற் பிரிந்து வசிட்டரை வணங்கிப் பின் தன் தம்பியும் சீதையுமாய்த் தேர் ஒன்றில் ஏறிச் சென்றான்.
காடு அடைதல்
இராமனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பின் தொடர்ந்தனர்; இரண்டு யோசனை தூரம் நடந்தனர்; அவர்கள் வட்ட வடிவமாய் ஒரு யோசனை தூரம் இராமனைச் சூழ்ந்து கொண்டனர்.
இந்த மாபெருங்கூட்டத்தை எப்படித் திருப்புவது? என்று யோசித்தான்; இருட்பொழுது வந்தது; இராமன் சுமந்திரனைத் தனியே அழைத்தான்.
“நீ தேரை அயோத்திக்குத் திருப்பு” என்றான்.
சுமந்திரன் வியப்பு அடைந்தான்; இராமன் நாடு திரும்புகிறான் என்று நினைத்தான்.
“மக்கள் தேர்ச் சுவடு கண்டு நான் திரும்பிவிட்டதாய் நினைப்பர்; நாடு திரும்புவர்; அவர்களைத் திசை திருப்ப வேறு வழியில்லை; அவர்களைத் தடுத்து நிறுத்த இயலாது” என்று கூறினான்.
சுமந்திரன் சூழ்நிலையை அறிந்து கொண்டான்; வேறு வழி இல்லை.
சுமந்திரன் துன்பச் சுமையைச் சுமந்து நின்றான்; இராமன் திருமுகம் நோக்கினான்.
“என்ன? ஏன் தயக்கம்?” என்றான்.
மயக்கம் எனறான்.
“தசரதனை அன்னை கைகேயி கொல்லாமல் விட்டாள்; நான் கொன்று முடிப்பேன்” என்றான்.
“நின்று கொண்டு ஏதோ உளறுகிறாய்” சென்றுவா; என்றான்.
“இராமன் காடு ஏகினான் என்று நான் எப்படிச் சொல்வது? சொன்னால் அவர் வீடு சேர்தல் உறுதி” என்றான்.
“என் செய்வது? நான் திரும்புவேன் என்பது இயலாத செயல்; அதைத் தருமம் விரும்பாது, கடமை தவறினால் அது மடமையாகும்; அரசனும் வாய்மை தவறான்; அவர் சொல்லுக்கு உறுதி சேர்க்கிறேன்; அதனால் வரும் இறுதிகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்; இழப்பு சிறிது; புகழ் பெரிது; இதை அறிக: நீ திரும்புக”” என்றான். “மறுமொழி கூறாமல் வேறு செய்திகள் சொல்லத்தக்கன உளவேல் செப்புக” என்று வேண்டினான்.
இராமன் அவனே செய்தியாய் அமைந்தான். சீதை வாய் திறந்தாள்.
“அரசர்க்கும் அத்தையர்க்கும் என் வணக்கத்தை இயம்புக”
“பூவையையும், கிளியையும் போற்றுக என்று எம் தங்கையர்க்குச் சாற்றுக” என்று கூறினாள்.
அடுத்து இலக்குவன் பேசினான்.
“இராமன் காட்டில் காயும், கனியும், கிழங்கும் உண்கிறான்; மன்னனை நாட்டில் சத்திய விரதன் என்று சொல்லிக் கொண்டு நித்தியம் சுவை ஆறும் கொண்ட உணவினை உண்ணச் சொல்க”
“இலக்குவன் தம்பியுடனோ, தமையனுடனோ பிறக்கவில்லை; அவன் தன் வலிமையையே துணையாகக் கொண்டு வாழ்கிறான் என்பதை எடுத்துக் கூறுக” என்றான்.
இராமன் தக்க சொல் சொல்லித் தம்பியைத் தணித்தான்; சுமந்திரனை அயோத்திக்குத் திரும்புமாறு பணித்தான் தானும், தையல்தன் கற்பும், தன் சால்பும், தம்பியும், கருணையும், நல்லுணர்வும், வாய்மையும் தன் வில்லுமே துணையாகக் கொண்டு காடு நோக்கிச் சென்றான்.
சுமந்திரன் திரும்புதல்
சுமந்திரன் தானும் தேருமாகமட்டும் திரும்பி வந்த செய்தியை அறிந்து வசிட்டரும் தசரதனும் இராமனைப் பற்றி வினவினர்.
“நம்பி சேயனோ அணியனோ?” என்று தசரதன் கேட்டான்.
“அதை நான் கவனிக்க முடியவில்லை. மூங்கில் நிறைந்த காட்டில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினர்” என்று கூறினான்.
“சென்றவர் இனி மனம் மாறி வரப் போவதில்லை; அதே போலச் செல்லும் உயிரை நிறுத்துவதனால் விளையப்போவது யாதும் இல்லை” என்ற முடிவுக்கு வந்த மன்னன் விடைபெற்றுக் கொண்டான்; அவன் சடலத்தை மட்டும் அங்கே விட்டுச் சென்றான்.
கோசலையின் துயர்
“மன்னன் உயிர் பிரிந்தான்” என்ற நிலை கோசலையைத் துடிக்க வைத்தது. முதத்தை இழந்த அமரர்களைப் போலவும், மணியிழந்த நாகம் போலவும், இளம் குஞ்சுகளை இழந்த தாய்ப் பறவை போலவும், நீரற்ற குளத்து மீன் போலவும் பிரிவால் வாடினாள்; நிலைதடுமாறினாள்.
“காக்க வேண்டிய மகன், தந்தையின் உயிர் போக்கக் காரணமாய் இருந்தானே” என்று வருந்தினாள்.
“நண்டும், இப்பியும், வாழையும், மூங்கிலும் சந்ததிக்காகத்தான் அழிகின்றன. தசரதனும் மகனுக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்” என்று ஆறுதல் அடைந்தாள்.
மேகத்தில் மின்னல் புரளுவதைப் போலத் தசரதன் மார்பில் கிடந்து புரண்டாள்; சுமத்திரையும் துன்பச் சுமையால் அழுது உயிர் தளர்ந்தாள். மகனைப் பிரிந்த பிரிவும், கணவனை இழந்த துயரும் அவர்களை வாட்டின.
வசிட்ட முனிவர் ஈமக் கடனைச் செய்து முடிக்கப் பரதனை அழைத்துவர நாள் குறித்து, ஆள் போக்கி ஒலை அனுப்பினார்.
வழி அனுப்பச் சென்ற நாட்டு மாந்தர், உறக்கத் தினின்று விழித்து எழுந்தனர்; தேர்ச்சுவடு கண்டு “கார்நிறவண்ணன் ஊர் திரும்பிவிட்டான்” என்று அவர்களும் அயோத்தி திரும்பினர்.
கங்கையைக் கடத்தல்
வனம் புகு வாழ்வு, மனத்துக்கு இனிய காட்சிகளைத் தந்தது. கதிரவனின் ஒளியில் அவன் கரிய மேனி ஒளிவிட்டுத் திகழ்ந்தது. சீதையும் உடன்வரக் காட்டு வழியே நடந்தான். வழியில் களிஅன்னமும் மடஅன்னமும் உடன் ஆடுவதைக் கண்டனர். மேகமும் மின்னலும் போலவும், களிறும் பிடியும் தழுவிச் செல்லுதல் போலவும் இராமன் சீதையோடு நடந்து சென்றான்; அன்னம் தங்கும் பொழில்களை யும், சங்குகள் உறையும் எக்கர்களையும், மலாகள் சிந்தும் பொழில் களையும், பொன்னைக் கொழிக்கும் நதிகளையும் கண்டு மகிழ்ந்தனர்.
வழியில் தவசிகள் அவர்களை வரவேற்றனர்; தம் தவப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்; அரும் புனலில் நீராடித் தீயை ஒம்பிப் பின் அமுது உண்ணும்படி வேண்டினர்.
சீதையின் கரம்பற்றி இராமன் கங்கையில் நீராடினான். அவள் இடையழக்குத் தோற்று வஞ்சிக் கொடி நீரில் முழுகியது. அன்னம் நடைக்குத் தோற்று ஒதுங்கியது. கயல் கண்ணுக்குத் தோற்றது; நீரில் பிறழ்ந்து ஒளிந்தது. கூந்தலின் நறுமணம் கங்கையை வெறி கொளச் செய்தது; அலைகளில் நுரை பொங்கி யதால் கங்கை மூத்துவிட்டது போல் நரை பெற்றது; இதுவரை தன்னில் நீராடுவர்களைப் புனிதப்படுத்தியது; சீதை நீராடியதால் அது புனிதம் அடைந்தது.
நீராடிய பின் நியதிப்படி நிமலனை வணங்கி வேள்விக் கடன்கன் செய்து முடித்தனர்; பின் அம் முனிவர் இட்ட உணவை ஏற்றனர்; “அமுதினும் இனியது” என அதனைப் பாராட்டினர்.
குகன் வருகை
அங்கே அவர்கள் இருக்கும் இடம்தேடித் தறுக்கு மிக்கவேடுவர் தலைவன் குகன் வில்லேந்தியவனாய் வந்து சேர்ந்தான்; அவன் கல்லினும் வலிய தோளினன். படகுகள் ஆயிரத்துக்கு அவன் நாயகன்; கரிய நிறத்தினன்; யானைக் கூட்டம் போன்ற அரிய சுற்றத்தினன்; சீற்றமின்றியும் தீயெழ நோக்கும் விழியினன்; கூற்றுவனும் அஞ்சும் குரலினன்; சிருங்கிபேரம் என்னும் நகர் மருங்கு வாழ்ந்துவருபவன், தேனும் மீனும் ஏந்தி, மானவன் ஆகிய இராமனைக் காண வந்தான்; அவன் தங்கியிருந்த தவப்பள்ளியின் வாயிலை அடைந்தான்.
“இறைவா! நின் கழல் சேவிக்க வந்தனன்” என்றான். இலக்குவன் அவனை மேலும் விசாரித்தான்.
மீனும் தேனும் இராமன் உண்டு பழக்கம் இல்லை; எனினும், அன்பன் கொண்டு வந்து அளித்தவை ஆதலின் அவற்றை வேண்டா என்று மறுக்கவில்லை.
“அன்புடன் படைத்தது; தின்பதற்கு இனியது” என்று கூறி ஏற்றுக்கொண்டான் “அமுதினும் இனியது” என்று பாராட்டினான்; “இதை யாம் ஏற்றுக்கொண்டோம்; அதுவே உண்டதற்குச் சமம்; நீர் மனநிறைவு கொள்ளலாம்” என்று கூறி அவற்றை அவர்களிடமே திருப்பித் தந்தான்; கண்ணப்பன் ஒப்பதோர் அன்பினை அவ்வேடன்பால் கண்டான்; காளத்தி வேடனாகக் கங்கை வேடனைக் கருதினான்.
“உன்னை இந்நிலையில் பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இருக்கின்றேனே” என்று கூறி அங்கலாய்த் தான் குகன். அவன் ஆழ்ந்த அன்பு இராமனைக் கவர்ந்துவிட்டது. “யாதினும் இனிய நண்பனே என்னோடு இருப்பாயாக!” என்று குழைந்து அவனை ஏற்றுக் கொண்டான். குகன் தன் சேனையைச் சுற்றியும் காவல் செய்யுமாறு செய்து, தானும் உறங்காமல் கறங்கு போல் சுற்றி வந்து காவல் செய்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது; இராமன் காலைக் கடனை முடித்தான்; வேதியர் சிலர் அவனைத் தொடர்ந்து வந்தனர்; குகனைப் பார்த்து இராமன், “படகினைக் கொணர்க; “கங்கையைக் கடந்து அக் கரை போக வேண்டும்” என்றான்.
இராமன் மீது அக்கறை காட்டினான். “வனத்து வாழ்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமா? இங்கே எங்களோடு கங்கைக் கரையிலேயே நங்கை சீதையோடு தங்கிவிடலாமே?”.
“காலமெல்லாம் இங்கே தங்கி வாழ்ந்து முடிக்கலாம்; இங்கே உங்களுக்கு என்ன குறை? நாங்கள் காட்டு மனிதர்தான்; எனினும், உம் பகைவர்க்கு உங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்; உண்ண உணவு, உடுக்க உடை, தங்க உறையுள் இவற்றை அமைத்துத் தருகிறோம்.
“தேனும் தினையும், ஊனும் மீனும் உள்ளன; திரிந்து விளையாட விரிந்த காடுகள் உள்ளன. நீந்தி விளையாட நீர்நிறைந்த கங்கை நதி இருக்கிறது. உறுதுணையாகத் தறுகண்மை மிக்க எம் வீரர் உளர்; ஏவலுக்கும் காவலுக்கும் கணக்கற்ற வீரர்கள் இங்கே காத்துக்கிடக்கின்றார்கள்” என்று அன்பு காட்டி வேண்டினான்.
“வீரனே! இங்கு வந்தது சுற்றுலாப் பயணம் செய்ய அன்று; உண்டு உறங்கிக் களித்து விளையாட அன்று; புண்ணிய நதிகள் ஆடவும், ஞான நன்னெறி நண்ணவுமேயாகும்; இதுவே என் அன்னையின் அன்புக் கட்டளை; இது எமக்கு ஏற்பட்ட கால் தளை, பதினான்கு ஆண்டுகள் விரைவில் கழிந்துவிடும். திரும்பும்போது விரும்பி உங்களைச் சந்திப்போம்; உம் விருந்து ஏற்போம்” என்று கூறினான்.
“யாம் உடன் பிறந்தவர் நால்வர்; உன்னோடும் சேர்ந்து ஐவர் ஆகிவிட்டோம்” என்று ஆறுதல் கூறினான்.
குகன் அதற்குமேல் அதிகம் பேச, அவன் அடக்கம் இடம் அளிக்கவில்லை. அவன் கடமை செய்வதில் நாட்டம் கொண்டான். ஒடம் ஒன்று வந்து நின்றது. அதில் மூவரும் ஏறிக் கங்கையைக் கடந்து அடுத்த கரை சேர்ந்தனர்.
வனம்புகு வரலாறு
இளவேனிற் காலம் அந்தக் காட்டுக்குப் பொலிவை ஊட்டியது; இராமன் வரவும் முகில்கள் பூ மழை பொழிந்தன; வெய்யில் இளநிலவைப் போலத் தண் கதிர்களை வீசியது; மரங்கள் தழைத்து நறுநிழல் தந்தன. பனித்துளிகள் சிதறின. இளந்தென்றல் மலர்களில் படிந்து மணம் அள்ளி வீசியது; மயிலினம் நடமாடின; இத்தகைய காட்டுவழியில் இராமன் இனிதாய் நடந்து சென்றான்.
மூவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் பரத்துவாசர் ஆசிரமம் காணப் பட்டது. முனிவர் அவர்களைச் சந்தித்தார்; இராமன் துன்பக் கதையைக் கேட்டு, அன்பு மொழி பேசி ஆதரவு காட்டினார்.
“இந்த ஆசிரமத்திலேயே தங்கி, நீங்கள் அமைதியாகத் தவம் செய்துகொண்டு இருக்கலாம்; இங்கு நீரும், மலரும், காயும், கனியும் நிரம்ப உள்ளன; இது தவம் செய்யத் தக்க சூழ்நிலை உடையது. நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடம் இது; அவை கங்கை, யமுனை, சரசுவதி எனும் மூன்று நதிகளின் சங்கமம்” என்றார் முனிவர்.
“இது தவம் செய்யத்தக்க இடம்தான் என்றாலும், எம் நாடாகிய கோசலை நாட்டுக்கு ஒரு யோசனை தூரத்திலேயே இது உள்ளது. இங்கு இருப்பது அறிந்து மக்கள் தொக்கு வந்து தொல்லை தருவர்; அதனால், சேய்மையில் உள்ள சித்திரகூட மலைச் சாரலே தக்கது ஆகும்” என்று கூறி, அவர் கூற்றை மறுத்தான் இராமன்.
பரத்துவாசரிடை விடை பெற்று யமுனைக் கரையை அடைந்தனர்; அதனைக் கடத்தித் தர ஒரு குகன் அங்கே இல்லை; படகும் இல்லை; என் செய்வது? இலக்குவன் அங்கிருந்த மூங்கிற் கழிகளைக் கயிற்றால் பிணைத்துத் தெப்பம் அமைந்தான்; அவர்களை அமரச் செய்தான்; துடுப்புகள் தேவைப்படவில்லை. அவன் கைகளே துடுப்புகள் ஆயின, நீரைத் துடுப்புப் போலத் தள்ளி யமுனையைக் கடந்து அடுத்த கரை வந்து சேர்ந்தான். அந்தக் கரையைக் கடந்து சென்றபோது அவர்கள் கல்லும் முள்ளும் கலந்த பாலை நிலத்தைக் கடக்க நேரிட்டது. காலை வைத்து நடக்க முடியவில்லை. இராமன் ஆணைக்கு அஞ்சிப் பகலவனும் பால் நிலவைப் பொழிந்தான்; தணல் வீசும் இடங்கள் தண்பொழில்களாகக் குளிர்ந்தன. கற்கள் மலரென மென்மை பெற்றன. கூரிய பற்களை உடைய புலிகள் கொலைத் தொழிலை மறந்தன. அப்பாலை நிலத்தைக் கடந்து, சித்திரகூட மலையை அடைந்தனர்.
சித்திரகூட மலை
சித்திரகூட மலை எழில்மிக்கதாய் விளங்கியது. மலையடியில் ஏலக் கொடியும், பச்சிலை மரமும் தவழ்ந்தன; சாரல் பகுதியில் யானையும் மேகமும் வேறுபாடின்றிப் படர்ந்தன; மலை உச்சியில் வருடைமான் கதிரவனின் பச்சை நிறக்குதிரைபோல் பாய்ந்தது; யானைகளை விழுங்கிய மலைப் பாம்புகளின் தோல்கள், மூங்கில்களில் சிக்கிக் கொடிச் சீலைகள்போல் காட்சி அளித்தன; சிங்கம் தாக்கிய யானைகளின் தந்தங்களிலிருந்து சிந்திய முத்துகள் சிதறிக் கிடந்தன.
பாறைகளில் வேங்கைப் பூக்கள் படர்ந்தன; சந்தனச் சோலைகள் சந்திரனைத் தொட்டுக்கொண்டு இருந்தன; கொடிச்சியர் கின்னர இசை கேட்டு மகிழ்ந்தனர்; வேடுவர் கவலைக் கிழங்கை அகழ்ந்து எடுத்தனர்; குரங்குகள் நீரைச் சொரிந்து விளையாடின; கான்யாற்றில் விண்மீனைப் போல மீன்கள் துள்ளி ஒளி செய்தன; அரம்பையர் அங்கிருந்த அருவிகளில் நீராடி ஆரவாரித்தனர்.
அங்கேயே நிரந்தரமாய்த் தங்குவது என்று இராம இலக்குவனர் முடிவு செய்தனர். அவர்கள் தங்கி இருக்கப் பர்ணசாலை ஒன்று இலக்குவன் வகுத்துக் கொடுத்தான்.
மூங்கில் துண்டுகளைக் கால்களாக நிறுத்தினான்; அவற்றின்மீது நீண்ட துலத்தை வைத்து, வரிச்சில் களை ஏற்றிக் கட்டினான்; ஒலைகளைக் கொண்டு அவற்றை மூடினான்; தேக்கு இலையால் கூரையைச் சமைத்தான்; நாணல் புல்லை அதன்மீது பரப்பினான்; சுற்றிலும் மூங்கிலால் சுவரை வைத்து, மண்ணைப் பிசைந்து நீரைத் தெளித்து ஒழுங்குபடுத்தினான்.
கல்லும் முள்ளும் அடங்கிய காட்டில் சீதையின் மெல்லிய அடிகள் நடந்து பழகின. “இன்னல் வரும் போது எதையும் தாங்கும் ஆற்றல் உண்டாகிறது” என்று இராமன் கூறினான்; தம்பியின் கைகள் இப்பர்ண சாலையை அமைத்துத் தந்ததைக் கண்டு வியந்தான்; அவன் செயல்திறனைப் பாராட்டினான்.
இராமன் தம்பியை நோக்கி, “உலகில் பொருட் செல்வத்துக்கு அழிவு உண்டு; அறத்தின் அடிப்படை யில் விளையக் கூடிய இன்பத்திற்கு நிகர் எதுவும் இல்லை; ஆட்சி நிலைப்பது அன்று; தவம்தான் நிலையானது” என்று தத்துவம் போதித்தான்; தவ வாழ்க்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
பரதன் வருகை
வசிட்டர் அனுப்பிய தூதர் பரதனிடம் ஒலை தந்தனர். “தசரதன் அழைக்கின்றான்” என்று மட்டும் அதில் எழுதியிருந்தது.
முடங்கல் கண்டதும் தடங்கல் இன்றிப் புறப் பட்டான் பரதன், இராமனைக் காணும் ஆர்வம் அவனை உந்தியது; இளயவன் சந்துருக்கனனும் உடன் புறப்பட்டான்.
பரதன் பயணம் ஏழுநாள் தொடர்ந்தது; எட்டாம் நாள் கோசல நாட்டை அடைந்தான்; அயோத்தியை அடைந்தான். ஆனால், அந்நாட்டை அவனால் காண முடியவில்லை. ‘கொடிச் சீலைகள் ஆடி அசைந்து அவனை வரவேற்கும்’ என்று எதிர்பார்த்தான்; அவை அரைக் கம்பத்தில் தொங்கி உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தன; “வண்ண மலர்கள் கண்ணைப் பறிக்கும்” என்று எதிர்பார்த்தான்; இவை வாடி வதங்கிச் சோககீதம் பாடிக் கொண்டிருந்தன; வயல்கள் உழுவார் அற்று ஊடல் கொண்ட பத்தினிப் பெண்டிராய் விளங்கின. பல நிறச் சேலை அணியும் உழத்தியர், நிலத்தில் புகுந்து களை பறிக்கக் கால் வைக்கவில்லை; உழவர்களின் ஏர்கள் துறவுக் கோலம் பூண்டு, மூலையில் முடங்கிக்கிடந்தன. குவளை மலர்கள் கண்திறந்து பார்க்க மறுத்துவிட்டன. தாமரை மலர்கள் தடாகங்களில் தலைகாட்டத் தவறி விட்டன; பாவையர் மொழிகளைப் பேசி, இச்சைப்படி மகிழும் பச்சைக் கிளிகள் மவுனம் சாதித்தன.
மகளிர் பூ இல் வறுந்தலையராய்க் காட்சி அளித்தனர். மாறிமாறி ஒலிக்கும் யாழும் குழலும் இசைப்பார் அற்று அசைவற்றுக் கிடந்தன; அரங்குகளில் ஆடல் மகளிர் அடியெடுத்து வைப்பதை நிறுத்திக் கொண்டனர்; நீர்நிலைகளில் வண்ண மகளிர் குடைந்து நீராடிப் பண்கள் மிழற்றுவதை நிறுத்திவிட்டனர்; பொன்னகை இழந்த மகளிர் புன்னகை யையும் இழந்தனர்; அகிற்புகை, ‘அடுப்புப் புகை, வேள்விப்புகை எல்லாம் புகைபிடிக்கக் கூடாது என்ற விளம்பரத்திற்கு அடிமையாகிவிட்டன.
தெய்வங்கள் அந்த நகரில் தங்காமல் தேசாந்திரம் சென்றுவிட்டன; கோயில் மணிகள் நாவசைந்து நாதம் எழுப்பவில்லை; பயிர்கள் பசுமையை இழந்து விட்டன; தான் இருப்பது அயோத்திதான் என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.
நகரில் ஒவியத்தைக் காண முடிந்ததே அன்றி எந்தக் காவியத்தையும் காணமுடியவில்லை; சிலைகள் அசைவதை மக்கள் அசைவில் கண்டான். அவனுக்கு வரவேற்பே இல்லை. வாழ்த்துகள் மலரவில்லை; அவன் தேரைக் கண்டதும் மக்கள் ஒரம் கட்டினர்; ஒதுங்கி மறைந்தனர்; அந்நிய நாட்டில் அடியெடுத்து வைத்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
தசரதன் மாளிகை நோக்கிப் பரதன் தேரைச் செலுத்தினான். அரண்மனைக் கட்டடங்கள் விதவைக் கோலத்தை விரும்பி ஏற்றுக்கொண்டன. ‘தசரதனை அவன் கண்கள் துருவித்தேடின. தசரதன் கண்கள் மூடிக்கிடந்தன. இவன் வந்ததைத் தசரதன் பார்க்க இயலவில்லை. பார்வையை இழந்தான். அதற்குள் பணிப்பெண் ஒருத்தி பரதன்முன் வந்து நின்றாள்; ‘அன்னை உன்னை அழைக்கிறார்’ என்றாள்; அதற்குமேல் அவள் சொல்ல அனுமதி இல்லை.
தாயைக் காணச் சென்றான்; அங்குப் பேய் ஒன்று நின்று பேசியது.
“உன் தந்தைக்கு வானுலகத்தினின்று அழைப்பு வந்தது; மறுக்க முடியாமல் அவர் போய்விட்டார்” என்றாள்.
மங்கலமாகச் சொன்ன அச்சொற்களை அவனால் சுவைக்க முடியவில்லை.
“இது முதலில் தோன்றிய மின்னல்; அடுத்து இடி ஒலியும் கேட்டது.
“தவத்தை நாடித் தனயன் இராமன் வனத்துக்கு ஏகிவிட்டான்; பத்தினிப் பெண் ஆகையால், சீதையும் உடன் பயணம் மேற்கொண்டாள்; தம்பி யாகையால் அண்ணனை நம்பி இலக்குவனும் உடன் சென்றான்” என்றாள்.
முகத்திரை விலகியது; முழுமதியைக் காண வில்லை; பல்லவி முடிந்தது; அனுபல்லவி தொடர்ந்தது.
“உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன்; என் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிவிட்டது” என்றாள்.
“பாலூட்டி வளர்த்தவள் பழிதந்து அழிப்பாள்” என்று அவன் எதிர்பார்க்கவில்லை; அமுது என நினைத்து ஆலகால நஞ்சை அவள் தந்திருப்பதை அறிந்தான்; “பாற்கடலில் அமுதம் அன்றி, நஞ்சும் பிறக்கும்” என்ற கதையை அவள் மெய்ப்பித்துவிட்டாள் என்பதை அறிந்தான்; பாசம் விளைவித்த நாசத்தை அறிந்தான்; தன் தாய் கொடுமை செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்; மறுபடியும் அவள் முகத்தில் விழிக்க அவன் விழிகள் அஞ்சின; கோசலையிருக்கும் இடம் தேடி ஒடலானான்; “அரவுக்கு நஞ்சு பல்லில்; அன்னைக்கு நஞ்சு சொல்லில்” என்பதை உணர்ந்தான்.
அன்னை கோசலை அடிகளில் விழுந்து வணங் கினான்; “பரதனுக்கும் இச்சூழ்ச்சியில் பங்கு உண்டு” என்று தவறாகக் கருதினாள் அவள்; பார்வையில் அவ்வினாக்குறி அமைந்திருந்தது.
அவன் விழிகளில் வழிந்த கண்ணிர் அம் மாசினைத் துடைத்தது.
“பாசத்தால் உன்தாய் தவறு செய்துவிட்டாள்; தவறு நடந்துவிட்டது; முதலிலேயே களைந்து இருக்க வேண் டும்; இப்பொழுது முள்மரம் ஆகிவிட்டது” என்றாள்.
“சூழ்ச்சிக்கு உடந்தையாய் நான் இருந்திருந்தால் நரகத்தின் கதவு எனக்காகத் திறந்திருக்கும்; அக் கொடுமைக்கு நான் காரணம் அல்லன்; அவள் வயிற்றில் பிறந்ததுதான் கொடுமை” என்றான்.
நெஞ்சு துளைக்கப்பட்டுப் பரதன் அஞ்சி அழுது அலறுவதைக் கண்டாள்; ஆறுதல் கூறி ஆற்றினாள்; இராமனை அவன் வடிவிற்கண்டு ஆறுதல் பெற்றாள்; தன் கண்ணிரைக் கொண்டு அவனைக் குளிப் பாட்டினாள்; சத்துருக்கனன்; அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
“மன்னன் உயிர் நீங்கி, ஏழு நாள்கள் ஆகின்றன; இன்று நாள் எட்டு; அவனுக்கு ஈமக் கடன் செய்து முடிக்க வேண்டும்; எரி தழலில் வைத்து நெறிப்படி இறுதிக்கடன் செய்யவேண்டும்” என்றார் வசிட்டர். முனிவரோடு சென்று வாய்மை மன்னன் அறத்தின் திருஉருவைக் கண்டான்; விழுந்து அலறினான்; எண்ணெய் உண்ட எழில் மேனியைக் கண்ணிர் கொண்டு கழுவினான்.
“கருமக்கடன் செய்தல் தருமம்” என்று அவன் தொடங்கினான்; வசிட்டர் திருத்தம் கொண்டு வந்தார்.
“உனக்கு அருகதை இல்லை” என்றார்.
“அந்தச் சிறு கதை என்ன?” என்று கேட்டான்.
“நீ அவர் சடலத்தைத் தொடக்கூடாது, என்பது தசரதன் ஆணை; அவர் சாவுக்கு உன்தாய் காரணம் ஆதலின், நீ தொடக் தகாதவன் ஆகிவிட்டாய்” என்றார்.
“ஆட்சி உரிமை தந்த மன்னன் எந்த அடிப்படையில் தந்தான்? மகன் என்பதால்தானே! அதை எப்படி இப்பொழுது மறுக்க முடியும்? என்று வினவினான்.
“ஆட்சிக்கும் உரிமை இல்லை? என்பது இதனால் தெளிவாகிறது அன்றோ எனத் தெளிவுபடுத்தினான்.
“சத்துருக்கனன் எந்தத் தவற்றுக்கும் ஆளாக வில்லை; அவனே தக்கவன்” என்று வசிட்டர் கூறத் தம்பியைக் கொண்டு தணல் மூட்டித் தந்தையின் இறுதிக் கடனைப் பரதன் முடித்தான்.
நாள்கள் சில நகர்ந்தன; ஆள்கள் வந்து அவனைச் சூழ்ந்தனர்; அமைச்சர், அந்தணர், நகரமாந்தர் வசிட்டர் அவனை அணுகினர். “நாட்டுக்குத் தலைவன் இல்லை, என்றால், ஆட்சி செம்மையாய் நடைபெறாது; சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும்; மற்றைய அறங்களும் செம்மையாய் நடைபெறா; பகைவர் போர் தொடுப்பர்; நீதியும் நிலை குறையும்; உழவும் தொழிலும் ஒய்வு கொள்ளும்; ஆட்சி ஏற்று நடத்துக” என்று வேண்டினர்.
“அண்ணன் இருக்கத் தம்பி ஆட்சியை ஏற்பதில் நியாயம் இல்லை” என்றான் பரதன்.
“தெய்வம் அவனை வேறு வழியில் திருப்பி விட்டது: அறம் தழைக்க நீ ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன; இங்கு இருப்பது நீயும் உன் தம்பியும்தான்; சூரிய குலத்துக்குச் சுடர் விளக்காக இருக்கும் நீங்கள், பொறுப்பேற்று நானிலத்தை வழிநடத்த வேண்டும்; நல்லதோ கெட்டதோ அரசன் வாய்மொழி! அதற்கு நீ கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்; நீ மன்னனாய்ப் பொறுப்பு ஏற்க வேண்டும்; மணிமுடி சூட வேண்டும்” என்பது தசரதன் கட்டளை, ‘நீ அதனைச் செயல்படுத்த வேண்டும்” என்பது, நாங்கள் பூட்டும் தளை’ என்று தெரிவித்தனர்.
“உங்கள் ஆர்வத்தை மதிக்கிறேன்; ஆனால், அவசரத்தை எதிர்க்கிறேன்; இராமன் மணி முடிதரிப்பதில் உங்களுக்குத் தடை இராது என்று நினைக்கிறேன்” என்றான்.
கிணறு வெட்டப் புதையல் கிடைத்தது போல இருந்தது; புதுமையாய் இருந்தது; உள்ளப் பூரிப்பைத் தூண்டியது; மூச்சுச் சிறிது நேரம் நின்றுவிட்டது அவன் சொற்களை ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்.
“'நான் இராமனை அழைத்துவர ஏகுகிறேன்; அவன் வாராவிட்டால் தவசியர் நால்வர் ஆவோம் என்பது உறுதி; சடைமுடியைத் தரித்துச் சந்நியாசியராய் அங்கு அவனோடு காலம் கடத்துவோம்; அதற்கும் அனுமதி இல்லை என்றால், என் உயிர் என்னிடம் அனுமதி பெற்றுச் சென்றுவிடும்” என்றான்.
அவன் திண்மையைக் கண்டு நாட்டோர் திகைத் தனர்; உறுதியாய் நன்மை விளையும் என்று நம்பினர்.
“தனி ஒருவனால் இதைச் சாதிக்க முடியாது; இராமன் திரும்பி வரும்போது அரச மரியாதையோடுதான் வர வேண்டும்; அவனைப் பேரரசனாய்ப் பார்க்க வேண்டும்; நால்வகைப் படையும் அவனைத் தொடர்ந்து வர வேண்டும்” என்றான்.
நகரமாந்தரும் நல்லோர் அனைவரும் உடன் செல்லப் புறப்பட்டனர்; சுற்றத்தவரும் உடன் செல்லப் புறப்பட்டனர்; அன்னையரும் அங்கிருந்து அடையும் பயன் இல்லை ஆதலின், அவர்களும் உடன் செல்ல எழுந்தனர்; கைகேயியும் எதிர் நீச்சல் அடிக்க முடியாமல் வெள்ளத்தில் ஒருத்தியாய்க் கலந்து கொண்டாள்; அவள் எடுத்த முடிவு தோற்றுவிட்டது; குதிரையைக் குளத்திற்குக் கொண்டு போனாள்; குதிரை நீர் குடிக்க மறுத்துவிட்டது; குதிரை அவளைத் தட்டி அவளுக்குக் குழிபறித்துவிட்டது.
கூனி படைத்த கைகேயி மாய்ந்துவிட்டாள்; ‘மா கயத்தி’ என்று பேசப்பட்ட தீமை அவளிடமிருந்து நீங்கிவிட்டது; மூவரில் ஒருத்தியாய் மாறி நின்றாள்; புதிய அலைகளில் அவளும் ஒருமிதக்கும் சருகானாள்; பரதனுக்குக் கைகேயி மரவுரி எடுத்துக் கொடுக்க வர வில்லை; வற்கலையை அவனே உடுத்திக் கொண்டான்; தவக்கோலம் தாங்கி நின்றான்; முடிவில்லாத துன்பத்துக்கு உறைவிடமானான்; தம்பியும் தவக்கோலம் பூண்டு, பரதனுக்கு ஒர் இலக்குவன் ஆனான்; இராமனை அழைத்து வருவது, அல்லது உயிர்விடுவது, அல்லது தாமும் தவம் செய்வது என்ற உறுதியோடு புறப்பட்டனர்; இராமன் இருக்கும் இடம் சேய்மையாகையால் தேர் ஏறிச் சென்றனர்.
தாய்மாரும், தவத்தைச் செய்கின்ற முனிவரும், தன் தந்தை போன்ற பெருமைமிக்க அமைச்சரும், வசிட்டரும், தூய அந்தணரும், அளவற்ற சுற்றத்தினரும் பின் தொடர்ந்துவர, அயோத்தி மாநகரின் மதிலைப் பரதன் அடைந்தான்.
நொண்டிக் குதிரை ஒண்டியாகச் செல்வதைப் போல நச்சு வித்தாய் விளங்கிய கூனியும் கூட்டத்தில் ஒருத்தியாய் துரிதமாய் முன்னோக்கி நடப்பதைச் சத்துருக்கனன் பார்த்தான்; அவளைத் துக்கி எறிந்து தாக்க எழுந்தான்; பரதன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.
“அவள் பயணம் தொடரட்டும்; அதைத் தடுக்க நாம் யார்? மூல நெருப்பு அவள்; முண்டெழுந்த செந்தழல் என் தாய்; பாசத்தால் என் தாயை நான் கொல்லாமல்விட விரும்பவில்லை; ‘இராமன்முன் விழிக்க முடியாதே’ என்பதால்தான் விட்டுவிட்டேன்; அந்தத் தவற்றை நீயும் செய்ய வேண்டா என்று கூறித் தடுத்தான்.
இராமன் தங்கியிருந்த புல் தரைகளும், சோலைகளும் பரதனுக்குப் புண்ணிய கூேடித்திரங்கள் ஆயின; இராமன் தங்கியிருந்த சோலையில் பரதனும் தங்கினான்; கரடு முரடான பாதைகளையும், கல்லும் முள்ளும் கலந்த புல்தரைகளையும் காணும்போதெல்லாம் அவன் கண்கள் குளம் ஆயின; மலையில் கிடைக்கும் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு பசியைப் போக்கிக்கொண்டான்; இராமபிரான் தங்கியிருந்த புழுதியில் புல்படுக்கையில் தானும் படுத்தான்; ‘அங்கிருந்து இராமன் காலால் நடந்து சென்றான்’ என்ற காரணத்தால் தேர்களும் குதிரைகளும், யானைகளும் பின் தொடரத்தானும் காலால் நடந்து சென்றான்.
குகனைச் சந்தித்தல்
கோசலை நாட்டைக் கடந்து கங்கைக் கரையை அடைந்தான் பரதன், சேனைகள் எழுப்பிய துகள், அவன் வருகையைக் குகனுக்கு அறிவித்தது. குகன் கொதித்து எழுந்தான்; தன் படையைக் கொண்டு பரதன் எதிர்க்க அவற்றை அருகில் கூவி அழைத்தான்.
“அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகனாகிய இராமன் ஆளாமல், வஞ்சனையால் அரசு வவ்விய மன்னர்கள் வந்திருக்கிறார்கள்; யான் விடும் அம்புகள் தீ உமிழும் தகையன; அவை அவர்கள் மார்பில் பாயாமல் போகா, அவர்கள் தப்பிப் பிழைத்துச் சென்றால் என்னைக் கேவலம் “நாய்க்குகன்” என்று உலகம் ஏசும்; ‘குரைக்கத் தெரியுமே தவிரக் கடிக்கத் தெரியாது” என்று உலகம் இகழும்.
“ஆழம் மிக்க இவ் ஆற்றை இவர்கள் எப்படி என் உதவி இல்லாமல் கடக்க முடியும்? யானைப்படை கொண்டு வந்தால் அதைக் கண்டு நடுங்கிப்போக நான் ஒரு சிற்றெலியா? “தோழமை” என்று அவர் சொல்லிய சொல் ஒன்றேபோதும்; அவர்களை எதிர்த்து உயிர்விட்டால் அதுவே எனக்குப் பெருமை; “இந்தக் கோழை வேடன் எதிர்த்து இறக்கவில்லை” என்ற பழியை நான் ஏற்க மாட்டேன்.”
“பரதனது சேனையைச் சாடி அழித்து இராமனே ஆளும்படி வேடுவர் ஆட்சியை மீட்டுத் தந்தனர்” என்ற புகழுக்கு உரிமை உடையவன் ஆவேன்; நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்கள், நாம் ஆளும் காடும் கொடுக்க மறுக்கிறார்களே! படை எடுத்து அழிக்க வருகிறார்களே!” என்று வீரர்களிடம் உரை நிகழ்த்தினான்.
இராமனுக்கு அன்பனாகிய குகன், இவ்வாறு பேசி நிற்பதைக் கண்ட பரதன், “இவன் யார்? என்று சுமந்திரனைக் கேட்டான். சுமந்திரன் அவனை அறிமுகப் படுத்தினான்.
“கங்கையின் இருகரையும் இவன் ஆட்சிக்கு உட் பட்டவை; அளவற்ற மரக்கலங்களுக்கு உரியவன்; இராமனுக்கு உயிர்த் துணைவன்; களிறு போன்ற திண்மையும், பெருமையும் உடையவன்; கடல் போன்ற படைகளை உடையவன்; “குகன்” என்பது அவன் பெயர்; உன்னைக் கண்டு வரவேற்க நிற்கின்றான்” என்று கூறினான்.
‘சுமந்திரன் கூறிய சொற்களைக் கேட்டுப் பரதன் உள்ளம் குளிர்ந்தான்; இராமனுக்கு இனிய துணை வனாய் அவன் என்னைக் காண்பதற்குமுன் நானே போய் அவனைக் காண்பேன்’ என்று சொல்லிப் புறப்பட்டான்.
மரவுரி ஆடையும், மாசடைந்த மேனியும், சிரிப்பு இழந்த முகமும், கனியும் துயரமும் உடைய பரதனைக் கண்டான் குகன், கையில் இருந்த வில் தானாகவே கீழே நெகிழ்ந்து விழுந்தது; விம்மி விம்மி அழுதான்.
‘தாயுரை கொண்டு, தந்தை உதவிய தரணியைத் ‘தீவினை’ என்று கூறித் துறந்து, சிந்தனையை முகத்தில் தேக்கிக் காட்டுகிறான் என்றால் அவனைவிடச் சிறந்த தியாகி யாரும் இருக்க முடியாது; புகழுக்கு உரியவன் ஆகிவிட்டான்; அவன் தன்மைக்கு ஆயிரம் இராமர் ஒன்று கூடினும் நிகராய் இருக்க முடியாது’ என்று கூறிப் பாராட்டினான்.
‘இராமன் எங்கே உறங்கினான்? இலக்குவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்வி களைப் பரதன் கேட்டான்.
“அல்லை ஆண்டு அமைந்தமேனி அழகனும் அவளும் துஞ்ச, வில்லையூன்றியகையோடும் வெய்துயிர்ப் போடும் வரன்,
கல்லையாண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம் என்றான்”.
அழகனும் அவளும் துயில் கொள்ள இளவல் அவர்களுக்காகக் காவல் காத்தான்; உறக்கம் நீத்தான் என்று குகன் விவரித்தான்.
‘யான் துன்பத்துக்குக் காரணம் ஆயினேன்; இலக்குவன் அதைக் துடைக்க நின்றான்; அவன் அன்புக்கு ள்ல்லையே இல்லை; என் அடிமைத்தனம் அழகிது’ என்றான் பரதன்.
நங்கையர் நடையின் அன்ன நாவாய்கள் கங்கையில் இடமே இல்லாதபடி நிறைந்துவிட்டன; அவை வந்தவர் களைக் கரை ஏற்றின.
தன் தம்பியும், தாயர் மூவரும், சுமந்திரனும், குகனும் ஒரே படகில் ஏறிச் சென்றனர்.
குகன் கோசலையைத் தொழுது நோக்கி, “இவர் யார்?” என்று வினவினான்.
‘தசரதன் முதல்தேவி, இராமன் தாய்; அவனைப் பெற்றதால் அடைந்த செல்வத்தை யான் பிறந்ததால் இழந்த பெரியாள்’ என்றான் பரதன்.
அடுத்துச் சுமித்திரையை அறிமுகம் செய்தான்.
“இராமனுக்குப் பின்பிறந்தான் என்னும் பெருமைக் குரிய இலக்குவனைப் பெற்றெடுத்த பெருமை உடையவள் இவள் என்றான்.
அடுத்துக் கைகேயியை அறிமுகம் செய்தான்.
“இத் துன்பங்களுக்குகெல்லாம் காரணமாய் நின்றவள்; பழி வளர்க்கும் செவிலித்தாய்; இவள் குடலிலே கிடந்து பாவம் செய்தவன் நான்; இந்த உலகம் களை இழந்து, உயிர்ப்பு அடங்கி இருப்பதற்கு இவள்தான் காரணம்; இந்நிலையில் இடரே இல்லாத முகத்தினை உடையளாய் இவள் இருக்கிறாள் என்றால், இவளே என்னை “ஈன்றவள்” என்றான்.
தாய் என்பதால் இரக்கமற்ற அவளையும் குகன் கையெடுத்து வணங்கினான். தோணியை விட்டு இறங்கிய தாயர் மூவரும் சிவிகையில் ஏறினர். குகனோடு பரதன் காலால் நடந்தான். அனைவரும் பரத்துவாசர் இருப் பிடத்தை அடைந்தனர். அவர் இவர்களை இன்முகம் காட்டி வரவேற்றார்.
திருவடி சூட்டிய வரலாறு
பரத்துவாசர், ‘ஆள்வதை விட்டுக் காட்டுக்கு வந்தது ஏன்?’ என்றார்.
‘மாள்வதற்கு வழிதேடி வந்துள்ளேன்; முறை தவறி எனக்குத் தந்த ஆட்சியை நிறை மனத்தோடு இராமன் ஏற்றுக்கொள்ள வேண்டுதற்காக வந்தேன்; அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் யான் மாள்வது உறுதி’ என்றான் பரதன்.
முனிவர் மனம் குளிர்ந்தது; சேனையையும்; மற்றவர்களையும் வரவேற்று உபசரித்தார். அன்று இரவு அவர்கள் அங்குத் தங்கி இருந்தனர்; பொழுது விடிந்ததும் மறுநாள் பாலைவன வழியைக் கடந்து, அனைவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்றனர்.
சேய்மையிலேயே பரதன் சேனையோடு வருவதை இலக்குவன் கண்டான்; அவன்மீது ஆத்திரம் கொண்டான்; குகனைப் போலவே அவனும், பரதன் படை கொண்டு தாக்க வந்திருக்கிறான், என்று தவறாய் நினைத்தான்.
அவனை ஆற்றுவது இராமனுக்கு அரும்பாடு ஆயிற்று.
“நம் குலத்து உதித்தவர் இதுவரை தவறே செய்ததில்லை. அறம் நெகிழ்ந்தது இல்லை. பரதன் நீதி நெறியினின்று நிலை குலையான். அவன் இங்கு வருவது ஆட்சியைத் தரவே தவிர மாட்சிமை நீங்கிப் போரைத் தொடுக்க அல்ல” என்று விளக்கினான்.
படையை நிறுத்திவிட்டுப் பரதனும் தன் தம்பி சத்துருக்கனனோடு முந்திச் சென்றான்.
இறந்த தந்தையை எதிர் கண்டதுபோலப் பரதன் இராமனைச் சந்தித்தான்.
“அறத்தை நினைத்தாய் இல்லை; அருளையும் நீத்தாய்; முறைமையைத் துறந்தாய்” என்று கூறி இராமன் அடிகளில் விழுந்து வணங்கினான்.
அறத்தைத் தழுவியதுபோல இராமன் பரதனைத் தழுவினான்; அவன் புனைந்த வேடத்தைப் பன் முறை நோக்கினான்.
“துயருற்ற நிலையில் அயர்ச்சி கொண்டுள்ளாய்; தந்தை வலியனோ?” என்று கேட்டான்.
“ஐயா! நின் பிரிவு என்னும் துயரினால் மெய்யைக் காக்க வேண்டித் தன் மெய்யைவிட்டு அவன் மேல் உலகம் சென்றுவிட்டான்” என்றான் பரதன்.
“விண்ணிடை அடைந்தனன்” என்ற சொல் புண்ணிடை நுழைந்த வேல் போல் செவிபுகு முன்னர் கண்ணும், மனமும் சுழல மண்ணிடை விழுந்தான் இராமன், இடியேறு உண்ட நாகம்போல உணர்வு நீங்கினான்
இராமன் மனங்கலங்கிப் பலவாறு புலம்பினான்; “'நந்தா விளக்கனைய நாயகனே! தனியறத்தின் தாயே! அருள் நிலையே! எந்தாய்! பகை மன்னர்க்குச் சிங்க ஏறு போன்றவனே! நீ இறந்தனையே! இனி வாய்மைக்கு யார் இருக்கிறார்கள்? ஆட்சித் தலைமை இறக்கி வைத்து விட்டு நீ விரும்பிய ஒய்வு இதுதானா?! இதுதானா நீ செய்ய நினைத்த தவம்?” என்று கதறினான்.
இராமனை வசிட்டர் தேற்றத் தொடங்கினார்; பரத்துவாசரும், மற்றைய முனிவர்களும், அமைச்சர்களும், அரசர்களும், சேனைகளும் வந்து சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கூறிய ஆறுதல் மொழிகள் அவலத்தைத் தணித்தன. அவர்கள் இறுதிக் கடனை அவன் செய்கையால் செய்ய வேண்டினர்.
இராமன் புனலிடை மூழ்கினான்; சடங்கின்படி தருப்பண நீரை எடுத்துவிட்டான்; பின் பர்ண சாலைக்குச் சென்றான்.
உடன் சென்ற பரதன் சீதையின் கால்களில் விழுந்து அரற்றினான்; சீதை அவனை எடுத்து ஆற்றினாள். “'நாயகன் என் நெடிய பிரிவினால் துஞ்சினான்” என்று சீதைக்கு இராமன் உரைத்தான்.
அவள் நெஞ்சு திடுக்கிட்டது; நடுங்கினாள்; கண்களில் நீர் வழிந்தது; காட்டுக்குச் சென்றபோதும் துயரம் அடையாத சீதை, தசரதன் இறப்புக்கு மிகவும் வருந்தினாள். அவளை முனிபத்தினிகள் கங்கையில் முழுக வைத்துத் தேற்றித் துயரம் நீக்கி, இராமனிடம் சேர்ப்பித்தனர்.
இறுதிச் சுற்று
“தந்தை செய்த தவறும் தாய் செய்த கேடும் நீ ஆட்சி ஏற்றால் மாறும்” என்றான் பரதன்.
“முறை தவறியது என்று குறைபடாதே, குரவர் பணி இது ஆட்சி உனக்குமாட்சி தரும்; தவம் எனக்குத் தக்கது” என்றான் இராமன்.
“சட்டம் பேசுகிறாய்; பேச்சுக்கு ஒப்புக் கொள் கிறேன்; நீ பிறந்த பூமி எனக்கு ஆள உரிமை உடையது என்கிறாய்; அது என்னுடையதுதான். அதை உனக்கு வழங்குகிறேன்; மன்னா! நீ மகுடம் சூடுக” என்றான் பரதன்.
“நீ அறிவாளி; என்னை மடக்கி விட்டாய்; ஆட்சியை ஏற்கிறேன். தந்தை எனக்கு இட்ட கட்டளை, “நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும்” என்பது; “தாழிருஞ் சடைகள் தாங்கிக் கடும்தவம் மேற்கொண்டு பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடித் திரும்பி வருக” என்ற சொல் என்ன ஆகும்? பதினான்கு ஆண்டுகள் பொறுத்துக் கொள்; அதுவரை என் கட்டளை ஏற்று அரசு ஆள்வாய்! இது நான் உனக்கிடும் ஆணை; மறுக்காதே” என்றான் இராமன்.
வசிட்டர் இராமன் ஆட்சியை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்; “சூரிய குலத்து மன்னர்கள் முறை பிறழ்ந்தது இல்லை. மேலும் நான் தந்தையைப்போல மதிக்கத் தக்கவன், ஆசான், ஆசான் சொல்லைத் தட்டாதே! யான் இடும் ஆணையை ஏற்று உனக்கு உரிய நாட்டைப் பாதுகாப்பாய்” என்று கூறித் தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.
அம் ‘முனிவனைத் தொழுது’ “அறிஞ! ஒரு செயலைச் செய்வதாக ஒப்புக் கொண்டபின் அதனைக் கைவிடுவது அறமாகுமா, தாயும் தந்தையும் இட்ட கட்டளைகளை மேற்கொள்ளாத அற்பனாக நான் வாழேன்; அவர்கள் இட்ட பணியைத் தாங்கிச் செயலாற்றும்போது வேறுவிதமாக மாற்ற முனைவது நீதியாய்ப் படவில்லை; முறை தவறி நான் ஆட்சியைக் கைவிடுகிறேன் என்று சொல்கிறீர்; நீங்கள் முறை தவறி உரை செய்வதுதான் வியப்பாக உள்ளது” என்றான் இராமன்.
முனிவன் உரைத்தும் அவன் ஏற்கவில்லை என் பதை அறிந்த பரதன், முடிவாகத் தன் கருத்தைக் கூறினான்.
“அப்படியானானல் நாட்டை ஆள்பவர் ஆளட்டும்; நான் காட்டை மேவுதல் உறுதி” என்றான்.
“அது என் உரிமை, இதை யாரும் தடுக்க முடியாது” என்ற பரதன் உறுதியாக நின்றான்.
வானவரும் “என்ன ஆகுமோ?” என்று அஞ்சினர்.
“தெய்வத் திருவுளமும், அங்கு கூடியிருந்தவர் கருத்தும் பரதன் ஆட்சியை ஏற்று நடத்துவதே தக்கது” என்ற முடிவுக்கு வந்தனர்.
மறுபடியும் இராமன் பரதனை அன்புடன் கேட்டுக் கொண்டான்.
“என் ஆணையால் பாரினை ஆள்க” என்றான்.
“குறிப்பிட்ட ஆண்டுகள் பதினான்கு முடிந்ததும் நீ அங்கு வந்து சேர வேண்டும்; ஒருநாள் தாமதம் ஆனாலும் நெருப்பில் விழுந்து உயிர் துறப்பேன்” என்றான் பரதன்.
இராமன் உறுதிமொழி தந்தான். அதற்குமேல் பேச முடியாமல் “நின் திருவடி நிலைகளை ஈக” என்று கேட்டான். இராமன் தன் பாதுகைகள் இரண்டனையும் அவனுக்குத் தந்தான்.
பரதன் அழுத வண்ணம் பாதுகை இரண்டையும் தரையில் வைத்து வணங்கினான்; மணி முடிகளாய் அவற்றைத் தலையில் தாங்கிக் கொண்டான். பரதன் அயோத்திக்கு, அடியெடுத்து வைக்க வில்லை; கங்கையைக் கடந்து, கோசல நாட்டின் தென் எல்லையில் இருந்த நந்தியம் பதியை அடைந்தான்; சிம்மாசனத்தில் இராமன் திருவடி நிலைகள் இடம் பெற்றன. அவற்றை வணங்கி வழிபட்டு இராமன் ஆட்சியைப் பரதன் அங்கு இருந்து நடத்தினான்.
சித்திர கூடத்தில் மேலும் தொடர்ந்து தங்கி இருந்தால், அயோத்தி மாந்தர், வந்து வருத்துவர் என்பதால் தானும் தம்பியும் தையலுமாகத் தென்திசை நோக்கிச் சென்றான் இராமன்.