கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை/ஆராய்ச்சிக் கட்டுரை


உலக வாழ்க்கையில் மனிதன் பெறக்கூடிய பேறுகள் பலவற்றுள்ளும் கம்பனுடைய ராமாயணத்தைப் படித்து அனுபவிப்பது மிகப் பிரதானமானவைகளில் ஒன்று என்பது எம்முடைய அபிப்பிராயம். ஏனெனில் ஆத்மானுபவத்துக்கு அடுத்தபடியில் கவிதானுபவம் தான் மனிதனுக்கு உன்னதமான ஆனந்தத்தைத் தருகிறது. கவிதையில், தமிழ்ப் பாஷையில் மாத்திரமில்லை, மற்றெந்தப் பாஷையிலும் கூட, கம்பராமாயணத்துக்கு மேலான கவிதை எங்கு காணலாகும்?

நமது முன்னோர் கம்பனுக்குக் கவிச் சக்ரவர்த்தி என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சியல்ல —— அது கேவலம் உண்மை உரைத்தலேயாகும். கவிதாலோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான். மேல் நாட்டாருக்குள் கவி சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியேர், கதே ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்தபட்டன், துளசீதாசர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும் தராசு முனை கம்பன் பக்கம் தான் சாயுமே ஒழிய அவர்கள் பக்கம் சாயாது. வால்மீகி, வியாஸர் ஆகிய இவ்விரண்டு கவிகளைத் தான் கம்பனுக்கு இணையாகவோ அல்லது ஒரு முனை எற்றமாகவோ சொல்லலாம். ஆனால் வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதையேயாகிவிடுகிறது. அதையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. ஆனால் கவிதாரீதியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்ப்பதாயிருந்தால் கம்பராமாயணம் வியாஸ பாரதத்துக்கு அதமபக்ஷம் சமமாகவாவது இருக்குமே ஒழிய எள்ளளவுகூடத் தாழாது. ஆகிலும், கவிகளில் ஆதியானவரும், ராமாயணத்துக்கே முதனூலாசிரியரும்,

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன், எனை !
வைதவைவின், மராமரம் ஏழ் தொளை
எய்த எய்வதற்கு எய்தியமாக் கதை
செய்த செய் தவின் சொல் நின்ற தேயத்தே!

என்றும், ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி, மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன். என்றும், கம்பனாலேயே தன்னால் ஏணிவைத்துப் பார்த்தாலும் எட்ட முடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி முனிவரின் கவிதா சாமார்த்தியத்தை அவனுடைய சாமார்த்தியத்தைவிட மேலானது என்று சொல்ல வேண்டாமா என்று ஓர் கேள்வி பிறக்கும். ஆனால் இரண்டு காவியங்களையும் பாரபக்ஷமில்லாமல் சிரத்தையோடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது!

இப்பேர்ப்பட்ட மகா காவியத்தை நமது நாட்டில் இப்பொழுது எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தொகை மிக மிகச் சொற்பமானதாகத்தான் இருக்கும். பழைய தமிழ்ப் பண்டிதரின் பரம்பரை அனேகமாய் அற்றுப் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாஷை தீண்டாச் சாதிகளின் கதியையடைந்து விட்டது. ஆகையால் அவைகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழில் சுவை ஏற்படுவதில்லை; தமிழ் ஞானமும் மிகக் குறைவாகத்தான் உண்டாகிறது. ரஸம் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நூல்கள் படிப்போரின் தொகை அருகிப் போய்விட்டது. அதிலும் தமிழ் நூல்களில் உண்மையான கவியின்பம் தேடுவோரின் தொகை ஒரு நூறு வரையில் கூடப்போகுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது. அப்படியிருக்க, இன்று தேதியில் கம்பராமாயணத்தை ஆசையோடு படித்து அனுபவிப்போரை இரண்டு கை விரல்களில் எண்ணிவிடலாம் என்று சொல்லுவது மிகையாகாது எனத் தோன்றுகிறது.

இதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், பிரதானமான காரணம் கம்பராமாயணமானது சாதாரண படிப்புள்ளவர்களுக்குப் - பொருள்படாது என்ற எண்ணம் பரவியிருக்கிறதுதான். ஆனால் கம்பனைப் படித்துப் பொருள் கண்டுபிடிப்பதற்குப் பெரிய இலக்கணப் படிப்பு வேண்டாம். ஒரு மகா வித்துவானிடம் போய்ப் பல வருஷங்கள் அப்பியசிக்க வேண்டாம். சாதாரணமான தமிழ்க் கல்வியினால் வருகிற செய்யுள் நடை அறிவும், பதச்சேதம் செய்யும் திறமையும், இயற்கையறிவும் உலகானுபவத்தால் வருகிற பாவ ஞானமும் இருந்தால் போதும், கப்ப ராமாயணத்தைப் படித்து அதில் பொதிந்து கிடக்கும் கவியின்பத்தை அனுபவிக்கலாகும்.

ஜனங்களுக்குக் கம்பராமாயணம்[1] என்றால் மலைப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் வேறொன்றுமில்லை, அந்த மகா காவியம் இது வரை எழுதப்பட்டும், அச்சிடப்பட்டும் வந்திருக்கிற ரீதியே தான் என்று ஏற்படும். இது வரையில் கையெழுத்திலும், அச்சிலும் வந்திருக்கிற பிரதிகளெல்லாம் புணர்ச்சிகளைப் பிரிக்காமலும், பதங்களைத் தனித்தனி எழுதாமலும், பொருளை நிச்சந்தேகமாகக் காட்டக்கூடிய குறிகளைச் சேர்க்காமலுமே எழுதப்பட்டும் அச்சிடப்பட்டுமிருக்கின்றன. இதனால் பாடம் கேட்காமல் படிக்க முயலுகிறவர்களுக்குச் செய்யுள்களைப் படிக்கும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கிறது. மகா வித்துவான்களிடம் முறையாகப் பாடம் கேட்டுத் தாங்களும் மகா பண்டிதர் என்று பேரெடுத்தவர்கள் கூட அங்கங்கே தடுமாறும் படி நேருகிறது. தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான பெயர்பெற்ற வித்துவான் ஒருவர் நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 'நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்' என்று ஆரம்பிக்கிற பாட்டில் 'எனை வைதவை' என்று அன்வயம் கூறி, அதற்கு 'என்னை வைத வசவுகள்' என்று பொருள் சொல்லிப் பிறகு, வாக்கியம் முடிவுபெறவில்லை என்பது கண்டு பாட்டை வேறுபல மாதிரி பிரித்துப் பார்த்தார். விருத்தங்களைத் தற்காலம் எழுதி வரும் ரீதியில் எழுதுவது இப்பேர்ப்பட்டவர்க்கே இடைஞ்சல் தந்தால் சாதாரண ஜனங்கள் படும்பாடு இப்படிப்பட்டது என்று சொல்லவேண்டாம்.

ஆகையால் படிப்பவர்களுக்கு எவ்வளவு சுலபமாக்கக் கூடுமோ அவ்வளவு சுலபமாக்கிக் கம்பராமாயணத்தை அச்சிடவேண்டும் என்கிற எண்ணம் எமக்கு நெடுநாளாக இருந்து வந்தது. ஆனால் வேறுபல காரணங்களுக்கிடையில் வித்துவான்கள் இந்தமாதிரிப் பதிப்பை ஒப்புவார்களோ என்கிற சந்தேகம் எம்மை இந்தக் காரியத்தில் புகுவதினின்றும் தடுத்து வந்தது. ஏனெனில் பண்டிதர்கள் திரஸ்காரம் செய்யக்கூடிய பதிப்பு பிரசுரிக்கத்தக்கதன்று. ஆனால் நாலாயிரப் பிரபந்தத்தைக் சந்தி பிரித்து அச்சிட்டிருப்பதில் வித்துவான்களுக்கு யாதொரு அதிருப்தியும் உண்டாகவில்லை. பண்டிதசிகாமணியான மகாமகோபாத்தியாயர் சுவாமிநாதய்யர் பதிப்பித்திருக்கும் சங்க நூல்கள் சீர் பிரித்தேதான் அச்சிடப்பட்டிருக்கின்றன. புங்கத்தூர் கந்தசாமி முதலியாரும் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தையும், ஆரணிய காண்டத்தையும் பதம் பிரித்தேதான் அச்சிட்டிருக்கிறார் *[2] ஆகவே கற்போரின் சௌகரியத்துக்காகச் சந்திகளைப் பிரிப்பதும் சீர்களைப் பிரிப்பதும் தவறல்ல என்று பெரியோர்களே வழிகாட்டி யிருக்கிறார்கள். இதற்குமேல் நாம் செய்ய உத்தேசித்த மாற்றங்களைச் செய்வதானது அவர்கள் போயிருக்கிற மார்க்கத்தில் முடிவு வரையில் செல்லுகிறதே தானாகிறதாகையால், அவ்விதம் செய்வது வித்துவான்களுக்கு அயுக்தமாகத் தோன்றாது என நிச்சயித்து, அவ்விதமே செய்யத் துணிந்தோம்.

இக்காலத்தில் கம்பராமாயணம் படிக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு அதன் பரிமாணம் இன்னொரு தடையாக இருக்கிறது. பதினாயிரம் விருத்தங்கள் என்றால் இக்காலத்தில் மலைப்பாகப் போய்விட்டது. இந்தச் சமுத்திரத்தை நாமெங்கே தாண்டப் போகிறோம் என்று அநேகர் அதில் இறங்காமல் இக் கரையிலேயே நின்றுவிடுகிறார்கள். இப்படி இருப்பதால், கம்பனைப் படித்து அனுபவிப்பவரின் தொகையைச் சீக்கிரம் அதிகப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று யோசித்ததில் இரண்டு வழிகள் புலப்பட்டன. அவைகளில் ஒன்று, ராமாயணத்தில் மிக உயர்ந்த கவிகளையாகப் பொறுக்கியெடுத்து ஒரு தொகுதியாக அச்சிடலாம் என்பது. மற்றொன்று, விடத்தக்க உபாக்கியானங்களை விட்டும், அங்கங்கே அதிவிஸ்தாரமாகக் காணப்படுகிற வர்ணனைகளில் ஒரு பாகத்தை வெட்டியும் காவியத்தைச் சுருக்கி, கதையை ஒரே தொடர்ச்சியாக வரும்படி செய்வது. ஆனால் பாடற்றிரட்டுகளை மனிதர் பொழுது போக்காகப் படிக்கிறது தான் வழக்கமாக இருக்கிறதே ஒழிய, சிரத்தையோடும் கவனத்தோடும் படிக்கிறது வழக்கமில்லை, தவிர பாட்டுகளின் பொருட்செறிவு அனைத்தும் அந்தந்த கட்டங்களில் தான் தெரியுமே யல்லது முன்பின் பாட்டுகளின் சம்பந்தத்தை விட்டுத் தனியாக நிற்கும்போது தெரியாது. ஆனதால் உபாக்கியானங்களில் பலவற்றையும், வர்ணனைப் பெருக்கங்களில் பெரும் பாகங்களையும் வெட்டிவிட்டு, கம்பனுடைய வாக்கிலேயே கதை தொடர்ச்சியாக வரும்படி எழுதி அச்சிட்டால்தான் கற்போருக்கு மேற்சொல்லிய இரண்டு இடையூறுகளும் நிவர்த்தியாகும் என்கிற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்திற்கேற்ப, வங்காளத்தில் கோவிந்தநாத குகன் என்பவர் வால்மீகி ராமாயணத்தை நாம் கம்பராமாயணத்தைச் சுருக்க நினைத்தவண்ணமே சுருக்கி 3000 சுலோகங்களுக்குள் அடக்கி லகு ராமாயணம் என்று பேர் வைத்துப் போட்டிருக்கிற பதிப்பும் வெளிவந்தது. இதையும் கவனித்து, நாம் செய்ய முயற்சிப்பதும் முறைத் தவறன்று என்று கற்றோர் கொள்ளுவார்கள் என நம்பி இந்தச் சுருக்கப் பதிப்பை வெளியிட நிச்சயித்தோம்.

இந்தப் புத்தகத்தில் பால காண்டத்தை மாத்திரம் சுருக்கி, பொருள் தெள்ளிதில் விளங்கும்படி பதங்களைப் பிரித்து எழுதியதோடு, கவிகளை முற்றிலும் அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய விவரங்களைக் கடைசியில் குறிப்புகளாக எழுதியும், ஒரு அருஞ் சொல் விளக்கம் அகராதியாகத் தொகுத்தும் இருக்கிறோம், இந்தப் பாலகாண்டம் கற்றோர்களுக்கும், கற்போர்களுக்கும் விருப்பம் தருகிறது என்று கண்டால் நாம் தயாரித்து வருகிற மற்றைக் காண்டங்களையும் இதே ரீதியில் அச்சிட்டு வெளியிடுவோம்.

நாம் பதம் பிரித்திருக்கிற மாதிரியைப் பற்றி இங்கே சில வார்த்தைகள் சொல்லுவது அவசியமென நினைக்கிறோம். ஆங்கிலம் முதலிய மேல் நாட்டுப் பாஷைகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதும், தமிழில் வசன நடை இப்பொழுது சகஜமாய்ப் போய் விட்டதுமான நிறுத்துக் குறிகளை நாம் காவியத்தின் உள்ளே தாராளமாக உபயோகப்படுத்தியிருக்கிறோம். சிலவிடங்களில், முக்கியமாய் நூலின் முற்பகுதியில் பொருளில் சந்தேகம் வராதிருக்க வேண்டும் என்று வசன நடையில் போடவேண்டிய குறிகளுக்கு மேலேயே கூடக் குறிகள் போட்டிருக்கிறோம். வல்லினம் இரட்டிருக்கிற இடங்களில் நிறுத்தம் ஏற்படும் போது வாட்குறி*[3] மாத்திரம்தான் போட்டிருக்கிறோம். இரட்டிக்கும் மெய்யை எழுதவில்லை. புணர்ச்சிகளையும், பொருள் விளங்குவதற்கு எத்தனை தூரம் பிரிக்கலாமோ அத்தனை தூரம் பிரித்தே எழுதியிருக்கிறோம். உதாரணமாக எங்குலத் தலைவர்கள், அருந்தவ முனிவர், அளப்பருங்காலம் என்ற மொழித் தொடர்களை எம் குலத் தலைவர்கள், அரும் தவ முனிவர், அளப்பு அரும் காலம் என்றேதான் எழுதியிருக்கிறோம். Ş[4] றன்னகரமும் தகரமும் புணருமிடத்து றகரம் இரட்டித் திருப்பதைப் பிரித்தெழுதும்போது, முதல் மொழி இரண்டாம் வேற்றுமையாக இருக்கையில் றன்னகரத்தைப் போட்டுவிட்டால் பொருளில் ஐயமேற்படு மாகையால் அந்த மொழியின் இறுதியில் றகர ஒற்றையேதான் போட்டிருக்கிறோம். ஆனால் அடுத்த வார்த்தையின் முதலெழுத்து தகரமாய்த்தான் இருக்கும். ஒரு அடைமொழிக்கு வேறு அடைமொழிகள் வரும்போது சாத்தியமான இடங்களிலெல்லாம் அடைமொழித் தொடரை நெருக்கிப் போட்டுப் பெயர்ச் சொல்லைக் கொஞ்சம் தள்ளியே போட்டிருக்கிறோம். ஒரு பெயர் அல்லது வினைக்குப் பல பெரிய அடைகள் வரும்போது தனித்தனி அடைகளுக்கு மத்தியில் ஒரு வாட்குறியும் போட்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் செய்திருந்தாலும் கம்பனுடைய வாக்கு எள்ளளவேனும் மாறுபட்டிராது. நாம் எழுதியிருக்கிற பாட்டுகளைப் புணர்ச்சி கூட்டிப் படித்துவிட்டால் சாதாரணமான பதிப்புக்களிலுள்ள பாடமாகி விடும். கம்பனுடைய பிரயோகத்தை உள்ளது உள்ளபடியே காட்டவேண்டும் என்று 46ஆம் செய்யுளில் ஆதி மதியும் நீதி நிலையும் என்று எழுதுவதற்குப் பதிலாக ஆதிம்மதியும் நீதிந் நிலையும் என்றே எழுதியிருக்கிறோம். பாதிம்முழுதும் என்று துவக்கும் நான்காம் அடியில் பாதி என்பதன் பிறகு பொருள் நிறுத்தம் வேண்டுவதனால் புள்ளி வாட்குறி போட்டிருக்கிற காரணம் பற்றியும், படிப்போர் எதுகை நோக்கி மகரம் இரட்டிக்குமென்று அறிந்துகொள்ளுவார்கள் என்பது பற்றியும், மகர ஒற்றைப் போடவில்லை. இதிலிருந்து கம்பனுடைய வாக்கு விஷயத்தில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம் என்று பண்டிதர் கவனிப்பார்களென நம்புகிறோம்.

இனி கம்பனுடைய சரித்திரத்தையும் அவன் விளங்கிய காலத்தையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கம்பனுடைய சரித்திரத்தைப்பற்றியும் காலத்தைப் பற்றியும் நம் காலம் வரையில் எட்டியிருக்கிற ஒன்றோடொன்று முரணுகிற பல கர்ணபரம்பரைகளுக்கிடையில் இன்ன இன்ன அமிசங்களை நிச்சந்தேகமாக நம்பலாம் என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், அந்த மகா கவியின் சரித்திரத்தில் உண்மையாக இருக்கலாம் என்று கொள்ளக்கூடிய அமிசங்கள் பின்வருபவைதாம் என்று ஒருவாறு நிச்சயித்து எழுதுகிறேம்.

கம்பன் ஜாதியில் உவச்சன், அதாவது 'காளி' கோயில் பூசாரி. அவன் தகப்பன் பெயர் ஆதித்தன், அவன் பிறந்தது திருவழுந்தூர். காலத்தில் அவன் திருவெண்ணெய் நல்லூரில் சடையன் என்னும் ஒரு வள்ளலை அடுத்து, அவனால் மதித்தற்கரிய நன்மைகள் பெற்று, அவனுக்கு உயிர்த் துணைவனாக வாழ்ந்து வந்தான்.

கம்பன் தனது கவித்திறமையை முதலில் காட்டியது வேளாளரைப் பாடிய ஏரெழுபது என்னும் நூலிலாம். சரஸ்வதியந்தாதி, மும்மணிக்கோவை என்ற நூல்களும் கம்பனால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் அவை எக்காலத்தில் பாடப்பட்டன என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுது இறந்துபோய்விட்டாலும் இன்னும் எத்தனையோ பாட்டுகளும் நூல்களும் கம்பன் பாடியிருக்க வேண்டியது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவனுடைய வாக்கின் செழுமையைப் பார்த்துவிட்டுத்தான் சடையப்ப வள்ளல் அவனை ராமாயணத்தைத் தமிழில் பெருங் காப்பியமாகப் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்.* [5] ராமாயணத்தைப் பாடப் பல வருஷங்களாகி யிருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு அங்கங்கேயுள்ள வித்துவான்களுக்கு அதைப் படித்துக்காட்டி அவர்களுடைய சாற்றுக் கவிகளைப் பெற்றுக் கொண்டு கடைசியில் அவன் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீமந் நாதமுனிகளும் மற்றுமுள்ள மகான்களும் பண்டிதர்களும் நிறைந்த சபையினில் தன் ராமாயணத்தை ஆதியோடந்தமாக வாசித்து அரங்கேற்றிக் கவிச் சக்ரவர்த்தி எனப் பட்டப்பெயரும் பெற்றான். அரங்கேற்றுவதற்கு முந்தி நம்மாழ்வார்மீது ஒரு அந்தாதி பாடி வைத்தான் என்றும் சொல்லப்படுகிறது.

கம்பனுடைய கவித்திறமை சோழ ராஜனுக்குத் தெரிந்தது முதல் அவனை அவன் தனது சபைக்கு வர வழைத்துக்கொண்டு அவனுக்கு ராஜோபசார தேவோபசாரங்களும் செய்து வந்தானாம்.

கம்பனுக்கு அம்பிகாபதி என்று ஒரு மகனிருந்தான். அவனும் ஒரு கவி. அவன் சோழன் மகளை விழைந்தான் என்றும் அதற்காகச் சோழன் அவனைச் சிரச்சேதம் செய்தானென்றும் சொல்லப்படுகிறது. அம்பிகாபதியைத் தவிர கம்பனுக்குக் காவேரி என்று ஒரு மகளும் இருந்தாளாம். அவளைச் சோழன் மகன் விரும்பி வரம்பு கடக்க முயன்றானாம். அப்பொழுது அவள் தன் கற்பைக் காப்பதற்கு வேறு மார்க்கமில்லாமல் வீட்டு முற்றத்திலுள்ள கம்பங் குழியில் இறங்கித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுவிட்டாளாம்.

இந்தக் கதைகள் உண்மையாயிருக்கும் பக்ஷத்தில் கம்பனுக்கும் சோழனுக்கும் மனஸ்தாபம் உண்டாவதற்கு வேறு காரணங்கள் வேண்டாம். ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும், கம்பன் சோழன் மீது கோவித்துக் கொண்டு, ஏகாங்கியாய்ப் புறப்பட்டு, தேச தேசாந்தரங்களெல்லாம் சுற்றினான் என்று எல்லாக் கர்ணபரம்பரைகளும் ஒத்துக் கூறுகின்றன. அந்த ஊர்களிலெல்லாம் கம்பன் தனது ஊர் பெயர் முதலானது ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் சாதாரண மனிதன் போலவே பிரயாணம் செய்தான். கடைசியில் அவன் ஒரு பலவானான அரசன் சபையில் போய்ச் சேர்ந்து அங்கே அஞ்ஞாதவாசமிருந்துகொண்டே தனது 'ராமாயணத்தைப்' பிரசங்கித்து வரும் நாளில், அவனை அவ்வரசன் கம்பன் என்று தெரிந்து கொண்டதும் அவனிடத்துப் பேரன்பும், மரியாதையும் காட்டி, அவனுக்கு யானை, குதிரை, பரிவாராதிகள் பரிசாகத் தந்து அவனை ராஜபோகத்தில் வைத்துவிட்டான்.*[6]

இப்படிச் சில வருஷங்கள் செல்லக் கடைசியில் கம்பனுக்குத் தன் சுதேசத்தைப் பார்க்கவேண்டுமென்கிற ஆசையுண்டாகி அதன்பேரில் அவன் அவ்வேற்றரசனுடைய அனுமதி பெற்றுக்கொண்டு சோழ நாடு வந்துசேர்ந்தான். உள்ளூற இல்லாமற் போனாலும் மேலுக்காகிலும் கம்பனுக்கும் சோழனுக்கும் சமாதானம் ஏற்பட்டது. கம்பன் பழையபடி அரண்மனைக்குச் செல்லுவதும் சோழன் கம்பனுக்கு முன்போலவே மரியாதைகள் செய்வதும் சிலகாலத்துக்கு நடந்து வந்தது. ஆனால் சோழன் மாத்திரம் மனஸ்தாபத்தை மறக்கவில்லை. ஒரு கர்ண பரம்பரையை நம்புவதாக இருந்தால், சோழன் கம்பன்பேரில் கரு வைத்துக் கொண்டே வந்து ஒருநாள் அவன் அரண்மனைக்கு வரும் நேரம் பார்த்து அவனுக்கு எதிரே ஒரு புலியை அவிழ்த்துவிடும்படிக் கட்டளையிட்டானாம். ஆனால் புலியை நோக்கிக் கம்பன் ஒரு கவிபாட, புலி அஞ்சி அடங்கிவிட்டதாம். அது கண்டு சோழன் கோபமூண்டு தன் கையிலிருந்த வில்லில் ஒரு அம்பைக் கோத்து கம்பனுடைய மார்பில் தைக்கும்படி விட்டுக் கம்பனைக் கொன்றுவிட்டானாம்.

கம்பனுடைய சரித்திரத்தைச் சுற்றி வளர்ந்திருக்கிற கதைகளை எண்ணித் தொலையாது. அவைகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லுவதில் பயனில்லை. ஆனால் கம்பன் காலத்தை நிர்ணயம் செய்வதற்கு அவனைப்பற்றி வந்திருக்கிற கர்ண பரம்பரைகளைச் சற்று ஆழமாக நோக்குவது அவசியமாகும்.

கர்ண பரம்பரையாக வருகிற விஷயங்களை விசாரியாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுவது சரியன்று. ஆனால் கர்ணபரம்பரையாக வருகிற காரணம் பற்றியே அவ்விஷயங்களைத் தவறென்று கொள்ளுவதும் பிழையாகும். ஐதீகம் ஒருவாறிருக்கும்போது பண்டிதர் அதை உண்மை யெனவே நினைத்துக்கொண்டு அதற்குச் சரித்திர ரீதியான ஆதாரங்கள் தேடவேண்டும். அப்படித் தேடிக்கொண்டு வருகையில் ஐதீகத்தைப் பொய்ப்படுத்தக்கூடிய சாக்ஷியங்கள் தென்பட்டால், அச்சாக்ஷியங்களைப் பலதடவை சோதித்தும், ஐதீகத்தோடு பொருத்தியும் பார்த்து, அவை நிச்சந்தேகமானவையாயும் ஐதீகத்தோடு முற்றிலும் முரணுபவையாயும் இருந்தால் மாத்திரம் ஐதீகத்தைத் தவறு என்று கொள்ளவேண்டும். புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் ஆதாரங்களின் விஷயத்தில் கொஞ்சம் சந்தேகமிருந்தாலும் சரி, ஐதீகத்தினுள்ளேயே அந்தர்கதமான அசாத்தியதை இல்லாத வரையில் ஐதீகத்தைத் தான் ஒப்புக்கொள்ள வேண்டியது.

ஆனால் கர்ணபரம்பரைகள் ஒரே குணத்தவையாக இருப்பதில்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத பல சங்கதிகள் ஒரே கர்ணபரம்பரையில் ஒரே சரித்திரமாகச் சொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்தச் சந்தர்ப்பங்களில் உண்மையைக் கட்டுக்கதையினின்றும் பிரித்தெடுத்தல் கடினமாகத்தானிருக்கும். ஆனால் இதைப் பார்த்துவிட்டு ஒரு ஐதீகத்தில் சொல்லப்படுகிற சகல விஷயங்களையும் சகட்டுக்கு ஒரே ரீதியாகத் தவறென்றே கொண்டுவிடுவது சரியாகாது. ஐதீகத்தில் சொல்லப்பட்டு வருகிற எந்த எந்த விஷயங்கள் உண்மையாக இருக்கவேண்டியது, எந்த எந்த விஷயங்கள் கதையாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், என்று ஆராய்ந்து உண்மைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து அவைகளை மாத்திரம் ஸ்தாபித்து, மற்றவைகளை வெறும் கதைகளென்று நிரூபித்துக் காட்டி உலகத்தில் உண்மை பரவும்படி செய்யவேண்டியது தான் பண்டிதர்களின் கடமையாகும்.

இப்பொழுது நாம் கூறி முடித்த விசாரணைவழியை அனுசரித்துக் கம்பனுடைய காலத்தை நிர்ணயம் செய்ய முயலலாம்.

எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின் மேல், சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராமகாதை, பங்குனி அந்த நாளில்,
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கு ஏற்றினானே.

என்று கர்ணபரம்பரை சொல்லுகிறது. ஆகவே மிகப் பலமான காரணங்களிருந்தாலொழிய, கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றியது சாலிவாகன சகம் 807-ம் ஆண்டு என்பதைத் தள்ளிவிட நமக்குப் பாத்தியமில்லை. துவாபரயுகம் அல்லது வேறு யுகாந்தரங்கள் என்று மிகவும் தூரமான காலமாகச் சொல்லப்பட்டிருந்தால், கம்பனுடைய காலம் தெரியாததாலோ, அல்லது அவனுக்குப் பெரும் பழைமையைக் கற்பித்து அதனால் அவனுக்கு அபார பகிமையை உண்டாக்கலாம் என்கிற தவறான எண்ணத்தாலோ ஜனங்கள் அந்தப் பிரகாரம் கூறியிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் சகம் 807 மிகப்பழமையான காலமல்ல. ஆகையால் இந்தப்பாட்டு கம்பனுடைய நாளிலேயே அல்லது அதற்குச் சில நாட்களுக்குப் பிந்தியேதானோ பாடப்பட்டிருக்க வேண்டும் என நினைப்பது நியாய விரோதமாகாது. கம்பன் காலம் சகம் 8-9ம் நூற்றண்டுகளல்ல என்றும், அவன் சகம் 1042-ம் ஆண்டுக்கு அணித்தாகப் பிறந்து 1122-க்கு அணித்தாக இறந்திருக்க வேண்டும் என்றும் சில பண்டிதர்கள்*[7] அபிப்பிராயப் படுவதற்குக் காரணம், கம்பனும் ஒரு குலோத்துங்க சோழனும் ஒட்டக்கூத்தனும் பிரதாபருத்திர தேவனும் சமகாலத்தவர் என்று கர்ணபரம்பரைகள் கூறுவதும், ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய மூன்று சோழர்களும் பிரதாபருத்திரனும் சகம் 11-வது 12-வது நூற்றாண்டுகளுக்கிடையில் விளங்கினார்கள் என்று சிலாசாசனின் நிச்சயித்திருப்பதுமே. சிலாசாசனங்கள் எப்பொழுதும் ஒப்புக்கொள்ளத்தக்க பிரமாணம் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சாசனங்களில் குறிக்கப்படும் வருஷங்கள் எந்தச் சகாப்தத்திலிருந்து கணக்கிடப்படுகின்றன என்று நிர்ணயிப்பதில் எப்பொழுதும் அபிப்பிராய பேதங்களிருக்கின்றன. ஆகையால் சிலாசாசனிகளுடைய தீர்மானங்களைப் பூர்ணப் பிரமாணமாகக் கொள்ளுவது சரியாகாது. பிரதாபருத்திரனுக்கும் கம்பனுக்கும் சுற்பிக்கிற சம்பந்தத்தைப் பற்றி 20.ம் பக்கம். அடிக்குறிப்பில்

எழுதியிருக்கிறோம். ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய விக்கிரமன், குலோத்துங்கன், ராஜராஜன் என்ற பேர்களுள்ள சோழர் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சகம் 1040 முதல் 1122க்கு மேல் வரையில் அரசாண்டார்கள் என்பது சிலசாசனிகளின் அபிப்பிராயம். இது உண்மையாக இருக்கும்பக்ஷத்தில் கம்பனும் ஒட்டக்கூத்தனும் சம காலத்தவர்களாக இருந்திருக்க முடியாது என்று தான் நமக்குத் தோன்றுகிறதே ஒழிய, கம்பன் சகம் 21-வது 22-வது நூற்றாண்டுகளில் விளங்கியிருக்கவேண்டும் என்று நிச்சயிக்கத் தோன்றவில்லை.

கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவர் என்று எல்லாக் கரண பரம்பரைகளும் ஒத்துக் கூறும்போது இதை எப்படி மறுக்கலாகும் என்று ஓர் கேள்வி பிறப்பது இயற்கை. ஆனால் வேறு வேறு காலத்தி லிருந்த மகான்களையும் மகா கவிகளையும் ஒரே காலத்தி லிருந்ததாகச் சொல்லுவது கண்ண பரம்பரைகளுக்குச் சர்வ சாதாரணமாயிருக்கிறது. அராபியக் கதைக ளெல்லாம் "அரூன் அல்ரஷீத் காலத்திலே" என்று ஆரம்பிப்பதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். நம் நாட்டுக் கதைகளிலும் "அசோகன் காலத்திலே" என்றும், "விக்கிரமார்க்கன்” காலத்திலே என்றும், "போஜராஜன் காலத்திலே" என்றும் ஆரம்பிக்கிற கதைகளை நீக்கிவிட்டால் மிகுதியுள்ள கதைகள் மிகச் சொற்பமாகத்தானிருக்கும். காளிதாசன் விக்கிரமாதித்தன் காலத்திலிருந்தான் என்று ஒரு கதை கூறும். அவன் போஜராஜன் காலத்தவன் என்று மற்றொரு கதை சொல்லும். காளிதாசனும், பவபூதியும் ஏககாலத்தவர் என்பது நமது பழைய பண்டிதர்களின் கொள்கை. ஆனால் இவ்விருவருக்கும் மத்தியில் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் உண்டு என்று சில நவீன பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஔவையார், திருவள்ளுவர் காலத்திலும், நக்கீரர் காலத்திலும் இருந்தாள் என்று தமது கர்ண பரம்பரைகள் சொல்லுகின்றன. அப்படியானால் அவள் சுமார் 800 வருஷம் ஜீவித்திருந்தாளெனக் கொள்ளவேண்டி வரும். இப்படிக்கெல்லாம் இருப்பதினால் கம்பனும் ஒட்டக் கூத்தனும் வேறு வேறு காலத்தவர்களாயிருந்தால் கர்ணபரம்பரைகள் அவர்களை ஏககாலத்தவர் என்று சொல்லா என்று சொல்ல இடமில்லை.

கர்ண பரம்பரையாக வந்தன என்று சொல்லப்படும் கதைகளிலநேகங்களைப் பொழுதுபோகாமலிருக்கிற பண்டிதர்களால் சமயோசிதமாகக் கற்பிக்கப்பட்ட வையாகத்தான் மதிக்கவேண்டும் என்று பின்வரும், நாம் கர்ணபரம்பரையில் கேட்ட, கதையே நமக்குக் காட்டும். கம்பன் ஒட்டக்கூத்தனுடைய பொறாமைக்குச் சற்று நேரத்திற்காகிலும் ஒரு ஆறுதல் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மாறுவேடம் பூண்டு அவனிடம் சென்று கம்பன் இறந்து விட்டான் என்று சொன்னானாம். அது கேட்டதும், ஒட்டக்கூத்தன்,

இன்றைக்கோ கம்பன் இறத்த நாள் ! என் கவிதை
இன்றைக்கோ அரசு அவைக்கு ஏற்கும் நாள்!—இன்றைக்கோ
பூ மடந்தை வாழ, புவி மடந்தை வீற்றிருக்க,
நா மடந்தை நூல் வாங்கும் நாள்!

என்று பாடவே, பாட்டின் அரத்தினால் கம்பன் அங்கேயே உயிரற்று விழுந்து விட்டானாம். ஒட்டக்கூத்தன் உடனே பரிதபித்துக்கொண்டு அரத்தை மாற்றி,

இன்றைக்கோ கம்பன் எழுந்த நாள் ! என் கவிதை
இன்றைக்கோ அரசு அவைக்கண் ஏறா நாள்! —இன்றைக்கோ
பூ மடந்தை வாழ, புவி மடந்தை வீற்றிருக்க,
நா மடந்தை நூல் பூட்டும் நாள் !

என்று திருப்பிப் பாடினதும் கம்பன் உயிர்பெற்றெழுந்து விட்டானாம்.*[8]

ஆனால் “இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்" என்று துவங்கும் வெண்பாவானது, தமிழ் நாவலர் சரிதையில் சிறிது மாற்றப்பட்டு, "கம்பன் சோழனால் கொலையுண்டான் என்று கேட்ட புலவர்கள் பலராலும் பாடப்பட்டது" என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

அப்படியே சோழன் வில்லால் அடிபட்டு வீழ்ந்த காலத்தில் கம்பன், வில் அம்பு சொல் அம்பு மேதகவே ஆனாலும், வில் அம்பின் சொல் அம்பு வீறு உடைத்து;— வில் அம்பு பட்டு உருவிற்று என்னை; என் பாட்டு அம்பு நின் குலத்தைச் சுட்டு எரிக்கும் என்றே துணி! என்று ஓர் அரம் பாடினான் என்று தமிழ் நாவலர் சரிதையில் சொல்லப்படுகிறது. ஆனால், இது, பாண்டியன் அம்பாலடிக்க ஔவை பாடியதாகக் கூறும்,

வில் அம்பு சொல் அம்பு மேதினியில் இரண்டு உண்டு;
வில் அம்பின் சொல் அம்பே மேல் அதிகம் ;— வில் அம்பு
பட்டது, அடா, என் மார்பில், பாண்டியா நின் குலத்தைச்
சுட்டது, அடா, என் வாயின் சொல்!

என்ற பாட்டைச் சிறிது மாற்றிக் கம்பன்மேல் ஏற்றினதாக இருக்கிறதே ஒழிய வேறில்லை. இந்தக் கதைகள் சம்பந்தப்பட்ட வரையில் தமிழ் நாவலர் சரிதையின் கதைகள் தான் ஆதிக் கதைகள் என்று ஏற்பட்டாலும், கர்ணபரம்பரைகள் விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று இவை காட்டுகின்றன என்பதற்கும் சந்தேகமில்லை.

இனி ஒட்டக்கூத்தனையும் கம்பனையும் சேர்த்துக் கூறும் கதைகளைச் சற்று ஆராய்வோம்.

புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு
உதவித் தொழில் புரி ஒட்டக்கூத்தனை,

என்று ஆரம்பிக்கும் வரிகள், புதுவைக்கு அதிபதியான "சடையனுக்குப் பந்துவான' சங்கரனிடம், ஓட்டக்கூத்தன் உதவித்தொழில் புரிந்து வந்தான் என்று சொல்லுகிறன். கம்பனுடைய நண்பனாகிய சடையப்ப வள்ளலுடைய தகப்பனுக்குச் சங்கரன் என்று பெயர். இதனால் இந்தச் சங்கரனிடம் தான் ஒட்டக்கூத்தன் வேலைபார்த்தான் என்று சொல்லப் படுகிறது.*[9] ஆனால் பாட்டன் பெயரைப் பெயரனுக்கு வைக்கிற வழக்கம் தமிழ் நாட்டில் அதிகமாதலால் குடி அழியாதிருக்கிற வரையில் ஒவ்வொரு தலைமுறையிலும் புதுவை அதிபதிகளின் குலத்தில் ஒரு சங்கரனும் ஒரு சடையனும் இருந்தே தீருவார்கள் என்று நம்ப நிரம்ப இடமுண்டு. அப்படியே ஒட்டக்கூத்தன் பாடிய விக்கிரம சோழன் உலாவில்,

............................................மோட்டு அரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக்குவடு ஒடித்த
கொங்கைக் களிற்றுத் திரிகர்த்தனும், .......................................மட்டை எழக்
காதித் திரு நாடர் கட்டு அரணம் கட்டு அழித்த
சேதித் திரு நாடர் செல்வனும்,

விக்கிரமனோடு இருந்ததாகப் பாடியிருப்பதில், திரிகர்த்தன், சேதி என்கிற பெயர்கள் முறையே கம்பனுடைய ரக்ஷகனான சடையப்பனையும், கம்பன் ஏரெழுபது அரங்கேற்றிய காலத்தில் உடனிருந்த சேதிராயனையும் தான் குறிக்கின்றன என்று சொல்லப் படுகிறது.*[10] ஆனால் திரிகர்த்தன் என்னும் பட்டப் பெயர் கம்பனுடைய நண்பனுக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அவன் வழி முறையில் வந்தவர்களுக்கெல்லாம் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டு வந்திருக்கவேண்டும் என்று சொல்லுவதல். விகற்பம் ஒன்றுமில்லை. சேதிராயன் என்பதும் ஒரு மனிதனுக்கு இயற்பெயரல்ல, ஒரு குடியின் தலைவர்களுக்குப் பரம்பரையாக வரும் பொதுப் பெயரேயாகும். Ş[11] ஆகையால் கூத்தன் உலாவில் இவ்விரண்டு பெயர்களும் வருவதிலிருந்து கம்பன் காலத்திலிருந்து சேதிராயனையும் சடையனையும் தான் குறிக்கின்றன என்ற ஒரு தலையாகக் கூறிவிட முடியாது.

ஒட்டக்கூத்தனுக்கும் கம்பனுக்கும் நேரே சம்பந்தத்தைக் காட்டும் கதைகள் நமக்குத் தெரிந்தமட்டில் நாம் ஏற்கனவே சொல்லியதைத் தவிர இரண்டே இரண்டுதான். அவைகளில் ஒன்று, பின்வருமாறு சோழன் இவ்விரண்டு புலவர்களையும் ராமாயணம் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிலகாலம் கழித்து அவர்களை வரவழைத்துக் காவியம் எதுவரையில் சென்றிருக்கிறது என்று இருவரையும் கேட்க, சும்பன் எழுதத் துவக்கியே இல்லாவிட்டாலும் ஒட்டக்கூத் தனுக்குமேல் தான் எழுதிவிட்டதாகச் சொல்ல வேண்டும் என்று சேதுபந்தனப் படலம் வரையில் தான் பாடியதாகச் சொல்லி, அங்கேயே இந்தப் பாட்டைக் கவனம்செய்து பாடினானாம்.

குமுதன் இட்ட குலவரை, கூத்தரின்
திமிதம் இட்டுத் திரையும் திரைக்கடல்
துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழும்எனும் ஆசையால்!

இந்தச் செய்யுளில் வரும் துமிதம் என்னும் வார்த்தை நிகண்டுகளிலாவது வழக்கிலாவது இல்லை என்று ஒட்டக்கூத்தன் ஆக்ஷேபித்தானம். கம்பனும்; "நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்" என்று சொல்லிவிட்டு சாஸ்வதியைத் தியானிக்க, அவள் கற்பித்ததின் பிரகாரம் ஒட்டக்கூத்தனையும் அரசனையும் தன்னோடு இடைத் தெருவுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அங்கு இடைச்சிபோல் வந்திருந்த கலைவாணி தன் குழந்தைகளைப் பார்த்து "துமி தெறிக்கும் எட்டவிடுங்கள்” என்று கூறியதை ஒப்புக் கண்டு ஒட்டக்கூத்தன் ஒப்புக்கொண்டுவிட்டானாம்.

மற்றொரு கதை இதுவாம். கம்புனுடைய ராமாயணத்தின் பெருமையைக்கண்டு ஏங்கி, கூத்தன் தன் ராமாயணத்தை முதலிலிருந்து கிழித்துக்கொண்டு வருகையில், அகஸ்மாத்தாய் அவ்வழிபோன கம்பன், கூத்தன் வீட்டினுன் சென்று, உத்தரகாண்டம் சிதைவுறாமல் நிற்பதைப் பார்த்து, "நான் உத்தர காண்டம் பாட உத்தேசிக்கவில்லையாதலால், தங்களுடைய உத்தரகாண்டத்தைக் கிழிக்காமல் வைத்து என் ஆறு காண்டங்களோடு சேர்த்து வைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டானாம். கூத்தனும் அதற்கு இணங்கி அதை நிறுத்திக்கொண்டானாம். ஆனாலும் ஒட்டக் கூத்தனுடை அழுக்காறும் அகங்காரமும் நிறைந்த சுபாவத்தைக் கவனிக்கும் போது, கம்பன் அவன் காலத்தவனாய் இருந்தால் அவனிடம் இம்மாதிரி வார்த்தை சொல்ல துணிந்திருப்பான் என்றாவது, அப்படியே கம்பன் சொல்லியிருந்தாலும் ஒட்டக் கூத்தள் அதற்குச் சம்மதித்திருப்பான் என்றாவது நினைக்க முடியவில்லை.

தவிர, சோழ மண்டல சதகத்தில், பூண் நிலாவும் கம்பன் நலம் பொலியும் தமிழால் பொலிவு எய்திக் காணும் ஆறு காண்டம் உறும் கதையின் பெரிய கதை என்னும், தாள் நிலாவும் கழல் அபயன் சபையில் பயில் உத்தார கண்டம், வாணிதாசன் அரங்கேற்ற வைத்தார் சோழமண்டலமே, என்று வருகிற செய்யுள் வாணிதாசன் என்ற புனைபெயர் பூண்ட ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அபயன் என்னும் சோழ அரசன் சபையில் அரங்கேற்றினான் என்று கூறுகிறது. ஆனால் நாம் மேலே சொன்ன கதையில் ஏதேனும் உண்மையிருந்தால் ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அரங்கேற்றக் கூசியிருப்பான் என்று தோன்றுகிறது. இந்தப் பாட்டில் ஒட்டக்கூத்தன் முதல் ஆறு காண்டங்களைப் பாடியதாகச் சொல்லாதிருப்பதும் கவனிக்கத் தகுந்தது.🞸[12] அபயன் என்பதும் சகம் 992 முதல் 1040 வரையில் அரசாண்ட உபயகுலோத்தமன் என்கிற குலோத்துங்க சோழனுடைய பெயர்களில் ஒன்றாகும். சதகச் செய்யுள் அவனைத்தான் குறிக்கின்றது என்று வைத்துக்கொண்டால் ஒட்டக்கூத்தனை ஸ்ரீரா. ராகவையங்கார் முதலிய பண்டிதர் சொல்லும் காலத்துக்கு ஒரு தலைமுறை மேலே ஏற்ற வேண்டிவரும். ஆனால் “செந்தமிழ்"ப் பத்திரிகை மூன்றாம் தொகுதியில் நிர்ணயித்திருக்கிறபடி ஒட்டக்கூத்தன் சிலாசாசனிகளால் இரண்டாவன் என்று சொல்லப் பட்ட குலோத்துங்கனுடைய அவையில் தான் உத்தர காண்டத்தை அரங்கேற்றினான் என்று வைத்துக் கொண்டு பார்ப்போம். ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார் காலமாவதற்கு முன்பே இந்தக் குலோத்துங்கன் இறந்துபோய்விட்டானென்றும் ராமானுஜர் சகம் 1059இல் பரமபதமடைந்தார் என்றும் குருபரம்பரை கூறுவதால், இந்தக் குலோத்துங்க சோழன் சகம் 1059க்கு முன் நாலைந்து வருஷங்களே ஆண்டுவிட்டு இறந்துபோயிருக்கவேண்டும் என்று ஸ்ரீமான் ராகவையங்கார் ஒப்புக்கொள்ளுகிறார். அப்படியானால் ஒட்டக் கூத்தன் தன் உத்தரகாண்டத்தை சகம் 1059க்கு முன் அரங்கேற்றியிருக்கவேண்டும். நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிற கர்ண பரம்பரையை ஒப்புக்கொண்டால் கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஏககாலத்தில் ராமாயணம் பாட ஆரம்பித்தார்கள் என்று கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்ளாவிட்டால், ஏற்கனவே ஆறு காண்டங்கள் பாடப்பட்டுப் புகழெய்தியிருந்தால் தான் ஒரு கவிக்கு உத்தரகாண்டம் மாத்திரம் பாட வேண்டும் என்று தோன்றுவது இயற்கை என்கிற விஷயத்தை ஒப்புக்கொண்டு, கம்பன் தன் ராமாயணத்தை சகம் 1059க்கு அநேக வருஷங்கள் முன்னமேயே பாடி முடித்துப் பேர் பெற்றிருக்கவேண்டும் என்று நாம் கூறுவதற்கு இணங்கவேண்டிவரும். எதற்கும் கம்பன் சகம் 1042க்குச் சமீபத்தில் பிறந்திருந்தால் 1059க்குள் ராமாயணம் பாடி அரங்கேற்றிச் சீரெய்தியிருப்பது அசாத்தியமென்று சொல்லவேண்டுவதில்லை.

இன்னும் புகழேந்தியும் ஒட்டக்கூத்தனும் சம காலத்தவர் என்று கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. விக்கிரம சோழனையும், குலோத்துங்க சோழனையும் புகழேந்தியும் பாடியிருப்பதால் இவ்விரு கவிஞரும் ஒரே காலத்தவர் தாம் என்று நாமும் ஒப்புக்கொள்ளுகிறோம். கம்பனும் ஒட்டக்கூத்தன் காலத்தவன் என்று கொண்டால் ஏற்கனவே சொல்லியபடி, நாலைந்து வருஷங்கள் தான் அரசாண்ட குலோத்துங்கன் ஆட்சிக்கு நெடுங்காலம் முன்னதாகவே ராமாயணம் பாடி அரங்கேற்றியிருக்க வேண்டிய அவன் புகழேந்தி சீரோடு விளங்கின காலத்திலேயே தானும் விளங்கினான் என்று ஏற்படும். அப்படியிருந்தால் ஒட்டக்கூத்தனுக்கும் புகழேந்திக்கும் சம்பந்தம் கூறும் கதைகள் எத்தனையோ இருக்கையில், கம்பனுக்கும் புகழேந்திக்கும் நேரே சம்பந்தத்தைக் காட்டக் கூடிய ஒரு கவிதையேனும் என் இல்லை என்று இயற்கையாகப் பிறக்கக்கூடிய கேள்விக்குச் சரியான பதில் சொல்லமுடியாது. இம் மூன்று கவிகளும் உண்மையாகவே ஒரு காலத்தவராக இருந்திருக்கும் பட்சத்தில், ஒட்டக்கூத்தனுடைய அழுக்காற்றுக்கும், குரோதத்துக்கும் இலக்கமாயிருந்த மற்ற இருவருக்கும் மிகநெருங்கிய நட்பு இருந் திருக்கும். அந்த நட்பைக் காட்டக்கூடிய கதைகளும் நமக்கு எட்டியிருக்கும்.*[13] இன்னொன்று, கம்பன்‌ சகம்‌ 1042 முதல்‌ 1122 வரையிலுள்ள காலத்தில்‌ விளங்கினான்‌ என்று கொண்‌டால்‌ உடையவர்‌ காலத்திற்கு மிகவும்‌ நெருங்கிக்‌ கம்பன்‌ பிரபலத்துக்கு வந்திருக்கவேண்டும்‌ என்று ஏற்படும்‌. அப்படியானால்‌ அவருடைய திவ்வியப்‌ ிரபாவத்தைக்‌ கண்ணால்‌ கண்ட சிஷிய வர்க்கத்தில்‌ பெரும்பாலாரை நேரில்‌ பார்த்திருக்கவேண்டிய ஸ்ரீவைஷ்ணவ தாசனான கம்பன்‌ அந்த மகானைக்‌ குறித்து ஒரு துதியேனும்‌ எழுதாமலிரான்‌. அப்பேர்ப்‌பட்ட செய்யுள்கள்‌ ஒன்றேனும்‌ இப்பொழுது காணப்‌படாதது கவனிக்கத்‌ தக்கது.

தவிர, கம்பனுக்கு இந்தக்‌ காலத்தைக்‌ கற்பித்‌தால்‌ அவன்‌, உபயகுலோத்துங்கனைப்‌ பாடிய கலிங்‌கத்துப்‌ பரணி எழுதப்பட்ட காலத்துக்குப்‌ பின்தான்‌ விளங்கியவன்‌ என்று ஏற்படும்‌. ஆனால்‌ பரணியில்‌ சோழ நாட்டரசர்‌ சூரிய குலத்தவர்‌ என்றும்‌, சோழ ராஜ்ஜியம்‌ ஸ்ரீராமனுடைய மூதாதைகளில்‌ ஒருவனால்‌ ஸ்தாபிக்கப்பட்டது என்றும்‌ சொல்லப்படுகிறபோது, கம்பன்‌ ராமகதையில்‌ பாலகாண்டம்‌ குலமுறை. கிளத்துப்‌ படத்திலாவது, கிஷ்கிந்தா காண்டம்‌ நாட விட்ட படலத்திலாவது இதைப்பற்றிப் பேசாமலிரான். மேலும் தான் பரதெய்வமாகக் கருதியிருக்கிற ஸ்ரீமான் ராமன் குலத்தவரைப் பற்றித் தன் ராமாயணத்தில் உற்சாகத்தோடும் அபிமானத்தோடும் அவன் பேசாமலிருக்க முடியாது. ராமாயணத்தின் முடிவில்வரும் வாழ்த்துப் பாக்களில் கூடச் சோழ அரசர் பெயர் வரவில்லை. ஆகையால் சோழ வமிசம் இக்ஷ்வாகு வமிசத்திலிருந்து பிரிந்தது என்ற கலிங்கத்துப்பரணிக் கதை பிறக்கு முன்னரே கம்பன் ராமாயணத்தைப் பாடியிருக்கவேண்டும் என்று ஏற்படுகிறது.* [14] ஒட்டக்கூத்தன் காலத்திலிருந்து கம்பன் காலத்தை நிர்ணயிப்பதில் இத்தனை முரண்பாடு சம்பவிக்கிறது. தொன்றுதொட்டு வந்திருக்கிற தனியன் பிரகாரம் கம்பன் ராமாயணத்தை சகம் 807 இல் அரங்கேற்றினான் என்று கொள்ளுவதற்குச் சரியான ஆக்ஷேபணை ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை.

[15] அரங்கேற்றிய காலத்துக்குச் சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால் கம்பன் ராமாயணம் பாட ஆரம்பித்தான் என்று வைத்துக் கொண்டால் கம்பன் விஜயாலய சோழன் காலத்தில் அல்லது அவனுக்குப் பின் ஆண்ட ஆதித்த சோழன் காலத்தில் அந்தக் காவியத்தைப் பாடிவந்தான் என்று ஏற்படும். இந்தச் சோழர்களும் மற்ற தமிழ் நாட்டரசர்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு பல்லவர்களோடு கடும் போர் புரிந்து வந்தார்களாம். தமிழ் நாட்டுக்குச் சுதந்திரம் கொடுக்க முயன்ற பெருந்தகைகளைப் பற்றி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் தேவாரத்தில் ஓரிடத்தில் பேசியிருப்பது போலக் கம்பன் பேசவில்லை என்பது விசனிக்கத் தக்கதே. ஆனால் சடையப்ப வள்ளலைப் பாடிய அளவு கம்பன் ராமாயணத்தில் சோழர்களைப் பாடவில்லையாகையால் அவன் பாடிய காலத்தில் சோழர்கள் தமிழ் நாட்டில் தலைமை வகிக்கவில்லை என்றும் ஏற்படுகிறது என நினைக்கிறோம்.*[16]

கதைகள் கம்பனுக்கும் ஒரு குலோத்துங்கனுக்கும் சமகாலத்துவம் கற்பிக்கின்றன. தென்னாற்காடு ஜில்லா நாராயண வனத்திலுள்ள அகஸ்தியேச்சுவரன் கோவிலில் சகம் 429ம் வருஷமானது. ஒரு குலோத்துங்க சோழனுடைய 11வது ஆட்சி வருஷமாக இருந்தது என்று காட்டும் சாசனம் ஒன்று இருக்கிறதென்று ஸ்ரீமான் ரா. ராகவையங்கார் எடுத்துக் காட்டுகிறார்.ǂ[17] சகம் 407 இல் ராமாயணம் அரங்கேற்றிய கம்பன் சகம் 416 இல் குலோத்துங்கன் என்ற பெயரும் கொண்ட முதல் பராந்தகன் அவையிலும் பிரகாசித்தான் என்று சொல்லுவதில் அசம்பாவிதம் ஒன்றும் இல்லை.

தவிர, கம்பன் ஸ்ரீரங்கத்தில் ராமாயணம் அரங்கேற்றிய சபையில் ஸ்ரீமந் நாதமுனிகள் தலைமை வகித்தார் என்று கர்ண பரம்பரை சொல்லுகிறது.

நாதமுனிகள் கலி 4024, அதாவது சகம் 844ம் வருஷத்தில் முதிர்ந்த வய்தில் காலம் சென்றதாக ஒரு வைஷ்ணவக் கிரந்தம் கூறுகிறது. ஆனால் ஸ்ரீ கோபிநாதராயர் அபிப்பிராயப்படுவதுபோல சகம் 912 இல்தான் அவதரித்திருக்கவேண்டும் என்று நம்பினாலும் கூட, கம்பனும் நாதமுனிகளும் ஏககாலத்தவர் என்பதை வேண்டுமானால் மறுத்துக்கொள்ளலாம். கம்பனுடைய காலத்தைக் கீழே கொண்டுவர அவசியமில்லை. கம்பராமாயணத்திலிருந்து இரண்டு செய்யுள்கள் திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கர்ண பரம்பரை கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், நாதமுனிகள் காலத்தில் திவ்யப் பிரபந்தம் அனைத்தும் தொகுத்தாய்விட்டதாகையால் கம்பன் நாதமுனிகள் காலத்தவள் என்றாவது அவருக்கு முந்தினவன் என்றாவதுதான் ஏற்படுமேயல்லாது அவருக்குப் பிந்தியவன் என்று ஏற்படாது.

கம்பன் சகம் 10வது நூற்றாண்டு (கி. பி. 11 வது)க்கு முற்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதற்கு, இன்னும் இரண்டு துணைக்காரணங்களும் காட்டுவோம். சேக்கிழார் பெரியபுராணம் பாடியது சகம் 11வது நூற்றாண்டின் முதற்காலாக இருக்கவேண்டுமெனப் பண்டிதர் நிச்சயித்திருக்கிறார்கள். கம்பராமாயணம், பெருங் காப்பியமேயானாலும் வைஷ்ணவ பரமாயிருக்கிறதாகையால் சிவபரமாக ஒரு பெருங்காப்பியம் செய்து அருளுவீர் என்று, முதலவன் என்று நவீன சரித்திரக்காரரால் கூறப்பட்ட குலோத்துங்க சோழன் சேக்கிழாரைக் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் அவர் பெரிய புராணம் பாடினார் என்று ஓர் கர்ணபரம்பரை கூறுகிறது. இந்தக் குலோத்துங்கன் ஆண்டது சகம் 992 முதல் 1040 வரையிலாகையால், கம்பராமாயணம் இவன் காலத்தில் பிரசித்தமான காவியமாக இருந்தது என்று ஏற்படும். தவிர, கம்பன் காலத்தில் கம்பன் என்னும் பெயர் புதிதாயிருந்தது பற்றி அந்தப் பெயர் அவனுக்கு வந்ததற்கு நானாவிதமான காரணங்கள் சொல்லிவந்தார்கள். ஆனால் சகம் 934இல் கம்பன் என்ற பெயருள்ள அதிகாரி ஒருவன் திருக்கோவலூருக்கு மேற்கேயுள்ள கீழூரில் வீரட்டானேசுவரர் கோவிலில் பொன் பூக்களும், ஒரு மணிப்பட்டமும், ஒரு வெள்ளிப் பீடமும் சமர்ப்பித்தான் என்று அக்கோவில் கர்ப்பக்கிரகத்திலுள்ள கல்வெட்டினின்று ஏற்படுகிறது. இந்தக் கல்வெட்டில் நம் வாதத்திற்கு வேண்டிய பாகம் பின்வரும் வெண்பா:

வேலியர்கோன், வீதிவிடங்கன், விறல் கம்பன்,
ஆலியலமான், சோழன் அதிகாரி - கோலப்
படியின்மேல் பொன் பூப் பைங்கோவல் வீரட்டர்
முடியின் மேல் வைத்தான் முயன்று.*[18]

இதிலிருந்து கம்பன் என்னும் பெயர் சகம் 934இல் சகஜமான பெயராக இருந்தது என்று ஏற்படுகின்றது. நமது கம்பன் 12ஆவது நூற்றாண்டில் விளங்கினவனாக இருந்தால் அவன் காலத்தில் அந்தப் பெயரை அதுவரையில் மனிதருக்கு வைத்து வழக்கமில்லாத பெயராக நினைத்து அந்தப் பெயர் வந்ததற்குக் காரணங்கள் தேடியிருக்க மாட்டார்கள், என்பது அநேகமாய் நிச்சயம்.Š[19] இனி, பால காண்டம் கடிமணப் படலத்தில் ராமன் செய்துகொண்ட கோலத்தை வருணித்து வரும்போது,

என்றும் நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று, மீளாக் குறி சேரச் சேர்ந்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே,

என்று வரும் செய்யுளில் சொல்லும் திருநாமம் சாத்திக் கொள்ளும் வழக்கம் எக்காலத்தில் பிறந்தது என்று விசாரித்ததில், அந்த வழக்கம் ஸ்ரீமந் நாதமுனிகள் காலத்திலேயே இருந்தது என்று வைஷ்ணவ சம்பிரதாயம் அறிந்தவர்கள் எமக்குச் சொன்னார்கள். அது நெடுநாள் பிற்பட்டு உண்டான வழக்கம் என்று ஏற்படும் பக்ஷத்தில் கம்பனுடைய காலத்தை அதற்குப் பின்னேதான் கொண்டு போகும்படி நேரும். அது வரையில் இந்தச் செய்யுள் நாம் ஸ்தாபிக்கிற காலத்தை (சகம் 817-ஐ) வெட்டாது. எப்படியும் உண்மையைக் கண்டுபிடிப்பதே தான் நமது நோக்கமாதலால், கற்றோர் திருநாமம் அணிகிற வழக்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை நிர்ணயித்து, அவசியமானால் மேலே நாம் சும்பனுக்குத் தீர்மானித்திருக்கிற காலவரையைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடே இந்தச் செய்யுளை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

ஆகையால், ஒப்புக் கொள்ளத்தக்க வேறு ஆக்ஷேபனைகள் தோன்றும் வரையில், கம்பன் சாலி வாகன சகாப்தத்தின் 8-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 9-வது நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கினான் என்றும், மேலே எடுத்துக் காட்டியுள்ள தனியன் பிரகாரம் 807-இல் தான் தன் காவியத்தை அரங்கேற்றினான் என்றும் தான் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

இனி, கம்பனுடைய கவித் திறமையையும் ராம பக்தியையும், அவன் வால்மீகி ராமாயணத்தைப் பின் பற்றியிருக்கிற ரீதியையும், கம்பனுக்கும் உலகத்து மகா கவிகளுக்கும் உள்ள தாரதம்மியத்தையும் பற்றி இங்கே சவிஸ்தாரமாகப் பேச உத்தேசித்து இருந்தோம். ஆனால் முகவுரை ஏற்கனவே மிகப் பெரிதாகி விட்டதாலும், இவை பின்வரும் காண்டங்களில் தான் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயங்களானதாலும், இங்கே இவைகளைப் பற்றிச் சங்கிரகமாகவே எழுதி முகவுரையை முடிப்போம்.

கம்பன் தன் ராமாயணக் கதையில் வால்மீகியை மிகவும் நெருங்கிப் பின்பற்றியிருக்கிறான் என்பது பிரசித்தம். அங்கங்கே சில மாற்றங்கள் செய்துதான் இருக்கிறான்.[20] ஆனால் கதையின் போக்கில் வால்மீகி போட்டிருக்கிற வரம்பைவிட்டுக் கம்பன் எள்ளள வேனும் மாறவில்லை. அந்த அந்தப் போர்களில், பிரசித்தி பெறாத அரக்கர்கள் விஷயத்தில்கூட இன்ன அரக்கனை இன்ன வானரன் கொன்றான் என்று வால்மீகி கூறியபடியே தான் கம்பனும் சொல்லுகிறான். ராம ஜன்மத்தில் ஆரம்பித்து ராவண வதத்தில் (முதல் 6 காண்டங்களை) முடிப்பதும், மத்தியிலுள்ள கதைகளை வால்மீகியிலுள்ள அதே வரிசையில் சொல்லி வருவதும் கம்பனுடைய முறையாக இருக்கிறது.

மற்றப் பாஷைகளில் ராமாயணம் எழுதியிருக்கிற கவிகள் வால்மீகியைத்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்களானாலும், அவருடைய போக்கையும் வரிசையையும் மிக ஸ்தூலமாகத்தான் அனுசரித்திருக்கிறார்கள். வங்காளிகளுக்குள் விபீஷணனை ராமபக்தன் என மதிக்காமல் தேசத்துரோகி என்றும், குலத் துரோகி என்றும் நினைப்பதுதான் வழக்கமாக இருக்கிறபடியால், கிருத்திவாஸன் தன் வங்காள ராமாயணத்தில் அம்மதமே கொண்டு எழுதியிருக்கிறான் என நினைக்க எது இருக்கிறது. மதுசூதனதத்தன் என்னும் நவீன வங்காளிக் கவி ராமாயணக் கதையை மேகநாதவதம் என்று பெயரிட்டு, மேல் நாட்டார் காவியம் எழுதும் ரீதியாகக் கதையின் மத்தியில் ஆரம்பித்து, ஆரம்ப சம்பவங்களையெல்லாம் முக்கிய கதாநாயகர் ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லும் உபாக்கியானங்களாகச் செய்து எழு தியிருக்கிறான். துளசிதாசர் *'ராமசரிதமனஸ்' - என்ற தன் ஹிந்தி , ராமாயணத்தில் பாலகாண்டத்தைப் பல்வேறு உபாக்கியானங்களைப் புகுத்தி அளவுக்கு மிஞ்கிப் பெருக்கியும் மற்றக் காண்டங்களைச் சுருக்கியும் - செய்திருக்கிறார். தவிர, அவர் யுத்த காண்டத்துக்கு வங்கா காண்டம் என்று பேர் கொடுத்தும், அதற்குப் பின் வரும் சம்பவங்களை உத்தர காண்டம் லவகுச காண்டம் என இரண்டு காண்டங்களாகப் பிரித்தும் இருக்கிறார். பின் வரும் கணக்கு கம்பனும், வால்மீகியும், துளசிதாசரும் அந்தந்தக் காண்டங்களுக்கு எத்தனை இடம் தந்திருக்கிறார்களென்று காட்டும்.

இதிலிருந்து கம்பன் கதையைக் கூடிய வரையில் வால்மீகி கொண்டுபோயிருக்கிறபடியே கொண்டு போயிருக்கிறான் என்று ஏற்படும்.[21] தமிழ் நாட்டார் போரில் மிகவும் விருப்பமுள்ளவராதலால் கம்பனுடைய யுத்த காண்டம் பால காண்டத்தில் மூன்று கொண்டதாயிருக்கிறது. அயோத்தியா காண்டம் மாத்திரம் வால்மீகியில் பாதிதான் இருக்கிறது.

வால்மீகியை இவ்வளவு நெருக்கமாகத் தொடர்ந்து செல்பவன் தன் காவியத்தின் பெரும் பாகத்தை ஸம்ஸ்கிருத சுலோகங்களின் மொழிபெயர்ப்பாகத்தான் செய்திருக்கிறானோ என்றால் அவ்விதம் இல்லவேயில்லை. கதை சொல்லும் ரீதியும், வாக்கின் நடையும், வர்ணனைகளும், அலங்காரங்களும், மனித உள்ளத்தின் உணர்ச்சிகளையும் இயக்கங்களையும் எடுத்துச் சொல்லும் மாதிரியும், எல்லாம் கம்பனுடையதே, தினம் வால்மீகி ராமாயணத்தில் ஆறு சருக்கங்களும், கம்பனில் நூறு செய்யுள்களுமாக நான்கு மாத காலம் இரண்டு காவியங்களையும் தொடர்ந்து படித்தும், இந்த நான்கு மாதங்களுக்கு முன்னும் பின்னும் அங்கங்கே அப்போதைக்கப்போது தனித் தனிப் பாகங்களைப் படித்தும், சுமார் பத்து வருஷங்களாகச் சோதித்து வால்மீகியையும் கம்பனையும் தாம் சீர்தூக்கிப் பார்த்து வந்திருப்பதில் கதையை வால்மீகி இடத்தினின்று வாங்கிக் கொண்டுதான் கம்பன் எழுதி யிருக்கிறானானாலும், அவன் ஒரு தனிக்காவியம் செய்திருக்கிறான் என்றுதான் சொல்லவேண்டும், என்கிற தீர்மானத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

இவ்விரு கவிகளுக்குள்ளும் எடுத்த எடுப்பில் தெரியக்கூடிய பேதம் என்னவென்றால், கம்பனுக்கு ராமன் சாக்ஷாத் பரம்பொருளாக இருப்பதும், வால்மீகிக்கு அவன் கேவலம் மனிதனாக இருப்பதுமே. வால்மீகியில் மூன்று நான்கு இடங்களில் ராமன் விஷ்ணுவின் அமிசம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பாகங்களை நவீன பண்டிதர்கள் பிரக்ஷிப்தம் — பிற்பட்டுச் சேர்த்தது — என நினைக்கிறார்கள். ஆனால் எப்படியிருந்தாலும் மற்ற எல்லா இடங்களிலும் வால்மீகி ராமனை மனிதனாகவே தான் வர்ணித்திருக்கிறார். கம்பனோ என்றால், எங்கு பார்த்தாலும் ராமனை விஷ்ணுவாகவும் பரமாத்மாவாகவுமே வர்ணித்திருக்கிறான்.

பிரகிருதியின் தோற்றங்களை வருணிப்பதில் காடுகளில் சஞ்சரிக்கும் இயல்பினரான வால்மீகி கம்பனை முற்றிலும் வென்றுவிடுகிறார். கம்பனிடம் நல்ல பிருகிருதி வர்ணனை இல்லையென்று நாம் சொல்ல வில்லை. நாட்டுப் படலத்தில் நாம் தெரிந்தெடுத்திருக்கிற செய்யுள்களில் இயற்கை வனப்பு நன்றாகவேதான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. உவமை கூறுவதில் சில இடங்களில் நல்ல பிரகிருதி வர்ணனைகள் விழுந்திருக்கின்றன. ஓர் உதாரணம்:

கலை ஆழிக் கதிர்த்திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும்
அலை ஆழி என... ... ... ... ... ... ... (285)[22]

ஆனால் கம்பன் பட்டணத்து மனிதன், பிரகிருதியின் தோற்றங்களின் பெருஞ்சுவையை அவன் லயித்துப் போன மனதோடு அனுபவித்திருக்கிறான் என்று சொல்ல முடியவில்லை. ஸ்வபாவோக்தி சொல்லவே மாட்டேனென்கிறான்: சூரியன் உதித்தானா? உதயகிரியாகிற சிவனுடைய நெற்றிக்கண் திறந்ததுபோல எழுந்தான் (275) அல்லாது இருளாகிற இரணியனைக் கிழிப்பதற்கு உதயகிரியாகிய தூணைப் பிளந்து வரும் நரசிங்கம் போல் தோன்றினான் (371). சந்திரன் அஸ்தமித்தானா? அதர்மத்தில் நின்றவர்களுக்கு இடையில் வந்த செல்வம் போல அழிந்துபோனான் (412). இவ்விதம்தான் பெரும்பாலும்.

ஆனால் இதற்கு மாறாக, மனித இதயத்தின் உணர்ச்சிகளையும், பாவங்களையும், இயக்கங்களையும் வர்ணிக்கையில் கம்பன் வால்மீகியைத் தனக்குப் பின்னே வெகு தூரத்தில் நிறுத்திவிடுகிறான். இதற்கெல்லாம் பின்வரும் காண்டங்களில் தான் உதாரணங்கள் நிரம்ப அகப்படுமானாலும் பால காண்டத்திலும் அகப்படாமலில்லை. ஏன், பூக்கொய் படலம், உண்டாட்டுப்படலம், உலாவியல் படலம், பரகராமப் படலம் இவைகளிலுள்ள செய்யுள்கள் அனைத்தையுமே இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்விரு கவிகளினுடையவும் நடையைச் சீர் தூக்கிப் பார்த்தால், வால்மீகியின் ராமாயணம் திராக்ஷாபாகமாகும். அதன் ரஸத்தை அனுபவிக்க மிகுந்த சிரமம் வேண்டாம். நாக்கிற் பட்டமாத்திரத் திலேயே உருகிவிடும். கம்பனின் உத்பிரேக்ஷைகளும், புராதனக் கதைகளை மிகச் சூக்ஷ்மமாகச் ருசிப்பிக்கும் நடைகளும் மலிந்து கிடப்பதனால் அவனுடைய காவியம் அரைவாசிக்கு மதுபாகமாகச் செய்யப்பட்டது என்று சொல்லவேண்டும். தேன் திளைத்துப் பொங்கித் ததும்பிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் உத்பிரேக்ஷைகளாகிற வண்டுகளை ஓட்டிவிடவேண்டும்; தேனைப் பிழிந்தெடுத்துத்தான் சாப்பிடவேண்டியது போல, தொக்கி நிற்கிற கதைகளை வெளிப்படுத்திக் கருத்தைக் காணவேண்டும். ஆனால் கம்பராமாயணம் செம்பாதி திராக்ஷாபாகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இனி, கம்பனுடைய கவிதையை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால், அதன் சிறந்த குணம் காம்பீரியம் என்று சொல்லுவோம். கம்பன் சிருங்காரம் அழகாகச் சொல்லுகிறான் என்பதில் தடையில்லை. சோகம் சொல்லும் இடங்களிலெல்லாம் நம் கண்களினின்று தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகும்படி செய்துவிடுகிறான். ஆனால் அவன் வீரத்தையும் வியப்பையும் ரௌத்திரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டான். இவைதாம் அவனுக்கு இயற்கையாக வரும் ரஸங்கள், அவனுடைய காவியத்துக்குச் சமுத்திரத்தின் இயற்கையும் ஹிமாசலத்தின் தன்மையும் அமைந்துள்ளது. அவனுடைய ராமாயணத்தைப் படிக்கும்போது, மகாபல்லபுரத்துக் கற்கோவில்களைப் பார்க்கும்போதும், சமண பெல்கோளத்துச் சிலையைப் பார்க்கும் போதும், உண்டாகும் உணர்ச்சி உண்டாகிறது. உண்மையில், கம்பன் பல்லவ அரசர்களில் கீழ் வாழ்ந்திராமற் போனாலும், அவர்கள் பெருவாழ்வு. வாழ்ந்த நாட்களுக்கு மிகவும் அணித்தாகத்தான் வாழ்ந்திருக்கிறானாகையால் அவர்கள் காலத்தின் கலைவல்லாளர்க்கு இயற்கையானதாக இருந்த பெரிய தோரணையை அவன் கைக்கொண்டிருக்கிறான்.

அவனுடைய ராமனாகட்டும், சீதையாகட்டும், வாலியாகட்டும், ராவணனாகட்டும், இந்திரஜித்தாகட்டும் எல்லா நாயகர்களும் வால்மீகியிலிருப்பதை விடப் பன்மடங்கு கொண்ட ஆகிருதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இங்கே நாம் சரீர ஆகிருதியைப் பற்றிப் பேசவில்லை - ஆத்மாவை பற்றித்தான் பேசுகிறோம். யுத்த காண்டத்தில் ராவணன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் மகா நாதம் பொருந்தியுள்ள தாயிருக்கும். சீதையை விட்டு விடு என்று இந்திரஜித்தன் ராவணனிடம் சொன்னபோது,

முன்னையோர் இறந்தார் எல்லாம் இப் பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர் நின்றார் எல்லாம் வென்றனர் பெயர்வர் என்றும்,
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்று, ஆல்!
என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன் !

என்று ராவணன் சொல்லும் மொழிகளிலுள்ள மறமும் பெருமிதமும் அனேகமாய் எங்கும் பார்க்க முடியாது. ராவணன் முடியுங் காலத்தில் அவன் தோற்றத்தைச் சொல்லுகிற,

தேர் நின்று நெடு நிலத்துச் சிரமும் கீழ்ப்
பட விழுந்தான் சிகரம் போல்வான், என்றும்
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க,
மனம் அடங்க வினையம் வீய,
தெம் அடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த தாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள், அம்மா!

என்றும் வருகிற செய்யுள்களிலும், இப்பொழுதாவது நரசிங்கப் பெருமானை வணங்கி, "உய்வாய், தந்தையே;” என்று சொன்ன பிரகலாதனைப் பார்த்து, 

"கேள் இது! நீயும் காண, கிளர்ந்த கோளரியின் கேழ் இல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின் என் வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ?" என்னா, அண்டங்கள் நடுங்க நக்கான்![23]

என்று இரணியன் சேவகம் பேசும் செய்யுளிலும் உள்ள காம்பீரியத்துக்கு வேறு எத்தனைக் காவியங்களினின்று, உதாரணம் காட்டலாகும்?

தவிர, வால்மீகிதான் நமது ஆரிய நாட்டுக்குச் சீதை என்னும் கற்புக்கரசியைச் சிருஷ்டித்துக் கொடுத்தாரானாலும், அவருடைய சீதையினிடத்தில் சில குறைகளிருக்கின்றன. எந்த இடத்தில் கஷ்டம் நேர்ந்தாலும் கைகேயி சூழ்வினை பலித்ததே, பலித்ததே என்று சொல்லிக்கொண்டே அவளைத் திட்டிக் கொண்டே வருகிறாள். மாரீசன் வாக்கை ராமன் வாக்கு என நினைத்து லக்ஷ்மணனைப் பார்த்துவரச் சொல்லுகையில், அவன் சமாதானம் சொல்ல, சீதை, அவனைப் பார்த்து, "என்னைச் சுவீகரிக்க வேண்டும் என்றேதான் நீ ராமனிடம் செல்லாமல் இங்கே நிற்கிறாய் ” என்றும், " நீ தனியாக ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் என்னைக் காமித்தோ அல்லது பரதனுடைய ஏவுதலினாலோதான் வந்திருக்கிறாய் என நினைக் கிறேன்" என்றும் சொல்லுகிறாள்.[24] ஆனால் கம்பனுடைய சீதை இந்த மாதிரி அபசுவரமான வார்த்தைகள் சொல்லுவதே கிடையாது. அவள் லக்ஷ்மணனைக் கோவிப்பதைக் கூறும்,

"குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்றை வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும், என் அயல்
நிற்றியோ, இளையோய், ஒரு நீ !" என்றாள்;


"நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று !" என
வன் தறு கண்ணினள் வயிர்த்துக் கூறுவாள்:


"ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர், ஆல்!
பெரு மகன் உலைவுறு பெற்றி கேட்டு, நீ
வெருவலை! நின்றனை ! வேறு என்! யான் இனி
எரியிடை வீழ்ந்து உயிர் இறப்பல் ஈண்டு!" எனா,


என்ற செய்யுள்களையும், வால்மீகியிலிருந்து மேலே எடுத்துக் காட்டிய காட்டிய வாக்கியங்களையும், ஒத்திட்டுப் பார்க்கும்போது, கம்பன் சீதை வாயினின்று வரும் வார்த்தைகளை எவ்விதம் நிறுத்துப் போடுகிறான் என்பது இனிது விளங்கும்.

ஆகவே, மற்றக் கவிகளைப் படத்திலும், அரண்மனை மண்டபச் சுவர்களிலும் சித்திரம் எழுதுபவர்களாய்ப் பாவித்தால், கம்பனை வானமாகிற முகட்டையே தன் ஓவியத் தொழிலுக்கு இடமாகக் கொண்டு ஆஜானுபாகுவான சித்திரங்களை வரைகிறவனாகக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய ஆகிருதியுள்ளவையாக இருந்தாலும் அவனுடைய நாயகர் நாயகிகளின் உருவங்கள், அவரவர்கள் குணங்களுக்கேற்ப, மாசு, மறு, கோணல் முதலிய குற்றங்களின்றிச் சமாங்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்பனுடைய ராமாயணமானது, பல்லவச் சிற்பிகளின் பெரிய வீச்சையும், சாளுக்கியச் சிற்பிகளின் சிற்றுளி வேலையையும், மொகலாயர் காலத்துச் சின்னஞ்சிறு சித்திரம் வரைபவர்களின் கை நயத்தையும் ஒருங்கே ஞாபகத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. நினைத்துப் பார்த்தால் வேறு ஒரு கவியினிடத்திலும் இத்தனை வேறுபட்ட அருங்குணங்கள் இந்த அளவுக்கு அகப்படாது என்று தோன்றுகிறது.

கம்பனே சீதையை வர்ணிக்கிற,

உழை குலாம் நயனத்தார் மாட்டு ஒன்றொன்றே
விரும்பற்கு ஒத்தது,
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரோ
ஆற்ற வல்லார் ? (448)

என்ற வர்ணனை கம்பனுடைய காவியத்துக்கே பெரிதும் பொருந்துகிறது.

இன்னும் சும்பனுடைய கவிதை விஷயமாகச் சொல்லவேண்டியது எத்தனையோ இருந்தும் விரிவஞ்சி இதனோடு நிறுத்திக்கொள்ளுகிறோம். அயோத்தியா காண்டப் பதிப்பின் முடிவுரையில் இதைப்பற்றி விஸ்தாரமாகப் பேசுவோம்.

இப்பொழுது, இந்தப் பதிப்பைப் படிக்கிறவர்களுக்குக் கம்பராமாயணம் என்கிற தேவாமிர்தத்தை இதுவரையில் சுவைக்காமற் போய்விட்டோமே என்கிற அங்கலாய்ப்பும், இனியேனும் அதைப் பருகி அனுபவிக்கவேண்டும் என்கிற அவாவும் உண்டாகுமானால் நாம் கொண்ட நோக்கம் நிறைவேறிவிட்டது என்று திருப்தியடைவோம்.


————


  1. கம்பராமாயணத்தைப் பற்றி இங்கு சொல்லும் வார்த்தைகள் நமது இதர இலக்கியங்களுக்கும் பொருந்தும்.
  2. கந்தசாமி முதலியார் தமது அயோத்தியா காண்டப் பதிப்பில் அச்சிட்டிருக்கிற விளம்பரம் வேடிக்கையாயும் அதே காலத்தில் உண்மைப் பொருள் நிரம்பியதாயும் இருப்பதால் அதை இங்கே மாற்றாமல் அப்படியே எடுத்து எழுதுகிறோம் ! இதனாலே சகலருக்கும் தெரியப்படுத்துகிறது என்ன என்றால், இந்த ஸ்ரீமத் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் 100ஆம் பக்கம் தொடங்கி, பின் தொடர்ந்து வருகிற அந்தந்தத் திரு விருத்தத்திலும், அடிதோறும் உள்ள சொற்கள் எல்லாத்தையுமே, எழுத்துச் சந்தி பண்ணாமலும் விகாரப் படுத்தாமலும், அடி தொடை தோக்கியும், வேண்டும் இடம் அறிந்தும் சில துகளை மாத்திரம் எழுத்துச் சந்தி பண்ணியும் விகாரப் படுத்தியும், மற்றதுகளை எல்லாம் சந்தி பிரித்தும் அச்சிற் பதிப்பித்து இருக்கிறோம். அப்படி ஏதுக்காக செய்யப்பட்டது என்றால், இதற்கு முன்னமே லோகோபகாரம் ஆக, எம்மால் அச்சில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்ற சில சுவடிகளை பார்வை இட்டவர்களில், இந்த பிராந்தியத்து பிரபுக்களும் வித்துவான்களும் புலவர்களும் கவிராயன்மார்களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள் அந்த சுவடிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது, லோகத்துக்கு உபகாரம் ஆக வேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம். ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்படவேணும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள்.. இதுவும் அல்லாமல் தமிழ் இலக்கணம் படித்தும், பல சொற்களுக்கும் உறுப்புகளுக்கும் சொன்ன பொது விதிகளையும் சில சொற்களுக்கும் உறுப்புக்களுக்கும் சொன்ள சிறப்பு விதிகளையுங்கொண்டு, இன்ன இடத்திலே சந்தியாவது விகாரமாவது வேண்டும், இன்ன இடத்திலே அது வேண்டாம், என்று ஓர்ந்து உணர்ந்து, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையுமே அனுசரித்து, நமது முன்னோர்கள் கருதியபடிக்கு, லோகோபகாரத்தை நிலை நிறுத்தாமல், பயன் இல்லாத் சந்தியையும் விகாரத்தையுமே எங்கெங்கும் அனுசரிக்கப் புறப்பட்டு, அந்த லோகோபகாரத்தை நிலை கெடுக்கிற இளங் கல்விமான்கள் பல பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களை சந்திப் பேய் அறையாமலும், விகாரவெறி பிடியாமலும், அவர்களுக்கு தெளிவு உண்டாகி, கலகம் தீரும்படியாய், இந்த சந்தியையும் விகாரத்தையும் குறித்து, சந்தி விளக்கம் என்று ஒரு நூல் செய்யவேணும் என்றும்கூடக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களாலே கேட்டுக்கொள்ளப்பட்ட இந்த இரண்டும் லோகோபகாரமா இருக்கையால், யாமும் அதுகளுக்கு உடன் பட்டோம். அதற்காக, கற்றவர்களுக்கே செம்பாதிபொருள் விளங்காது என்று லோகவதந்தி ஆகியிருக்கிற, இந்த ஸ்ரீமத் கம்பராமாயணத்திலே, மேற்படி சத்தியையும் விகாரத்தையும் தகுந்தபடி. பிரிவினை செய்தால், அது முழுதுப் பொருள் விளங்கும் என்று எண்ணி, முதலிலே அயோத்தியா காண்டத்தில் அறுபதாம் பக்கம் தொடங்கி, தேர்ந்த ஒரு நல்ல கல்விமான் ஆனவர் ஒருவரிடத்தில் தாம் கற்ற போதும், தாமே கற்கிறபோதும், தாம் ஒருவனுக்குக் கற்பிக்கும்போதும், தமக்கும் கேட்போர்க்கும் பொருள் வினங்கி, இவர் கற்றவர் தாம் என்று கேட்டோர் தம்மை மதிக்கும்படியாய், எப்படி சந்தியையும் விகாரத்தையும் விலக்கி பதங்களைப் பிரித்துப் படிப்பாரோ, அப்படியே பிரித்து அச்சிற் பதிக்கப்பட்டிருக்கிறது ......"

    இவர் பிரித்திருக்கிற மாதிரி பின் வருமாறு:
    வெயில் இள நிலவே போல் விரிகதிர் இடைவீச
    பயில் மரம் நிழல் ஈனப்பனி புரை துளிமேகப்
    புயல் தர இளமென் கால்பூ அளவிய தெய்த
    மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்.

    அயோத்தியா காண்டம்— வனம்புகு படலம்.

    தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
    தீய்வினை என்ன நீத்துச்சித்தனை முகத்திற்றேக்கிப்
    போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
    ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோதெரியின் அம்மா.

    அயோத்தியா காண்டம் குகப்படலம்.

  3. 🞸 , என்னும் குறி உடைவாள் போலிருப்பதாலும், அது வாக்கியத்தை இடையில் வெட்டுவதாலும் அதற்கு வாட்குறி என்று பெயர் கொடுத்திருக்கிறோம்.
  4. Ş ஆனால் எங்கெங்கே சந்தி பிரித்தால் பொருளில் சந்தேகம் வருமோ, அல்லது தெளிவு குறையுமோ, அங்கேயெல்லாம் புணர்ச்சியைப் பிரிக்கவில்லை.
  5. *கம்பன் நெடுநாள் வரையில் காவியத்தைத் துவக்காமலே இருந்துவிட்டதாகவும், அதைக்கண்டு சடையன் எப்படியாவது, கம்பனை ராமாயணம் பாடும்படி செய்துவிட வேண்டும் என்று சோழனை வேண்டிக்கொள்ள, அவன் கம்பனையும். ஓட்டக்கூத்தனையும் போட்டியில் விட்டால் நலமாயிருக்கும் என நினைத்து அவ்விருவரையும் ராமாயணம் பாடும்படி ஆக்ஞாபித்ததாகவும் கர்ண பரம்பரை கூறும்.
  6. இந்த அரசன் பெயர் பிரதாபருத்திரன் என்று தமிழ் நாவலர் சரிதை கூறும். ஆனால் இன்னொரு கர்ண பரம்பரை கம்பன் அஞ்ஞாதவாசமிருந்தது சேர அரசன் அவையில் என்று சொல்லுகிறது. தன்னுடைய கவித்திறமையை அறிய முடியாத ஆந்திர அரசன் சபைக்குக் கம்பன் சென்றான் என்று கூறும் கர்ணபரம்பரையை ஒப்புக்கொள்ளுவது நமக்குக் கடினமாக இருக்கிறது. மூன்று இடங்களில் கம்பன் தெலுங்கு மொழிகளைப் பிரயோகித்திருப்பதினின்று கம்பன் தெலுங்கிலும் பண்டிதனாயிருந்திருக்கவேண்டும் என்று தீர்மானித்து ஸ்ரீமான் ரா. ராகவையங்கார் இதற்குப் பொருத்தம் கூறுகிறார். இவை பாடப் பிழைகளல்ல, உண்மையில் தெலுங்கு மொழிகளே என்று ஏற்பட்டாலும்கூடக் கம்பனுக்குத்தான் சிறிது தெலுங்கும் தெரியும் என்று ஏற்படுமே ஒழிய, பிரதாபருத்திரனுக்கும் அவன் அவையத்தாருக்கும் தமிழில்க்கியங்களைக் கேட்டு அனுபவிக்கும் சக்தி இருந்தது என்று ஏற்படாது. ஆகையால் கம்பன் சேர அரசனிடம் சென்றான் என்று கொள்ளுவது தான் நியாயம் என்று தோன்றுகிறது.
  7. இவர்களுக்குள் கல்வியாலும், கேள்வியாலும், கூரிய அறிவாலும் தலையாயவர், “செந்தமி"ழின் பத்திரிகாசிரியராக இருந்த ஸ்ரீமான் ரா.ராகவையங்காராவர். கம்பன் காலத்தைப் பற்றி அவர் செய்திருக்கிற நிர்ணயத்தை நாம் மறுக்கிறோமானாலும், அவருடைய நுண்ணறிவையும் தமிழபிமானத்தையும், கம்ப பக்தியையும் நாம் பெரிதும் மதிக்கிறோம். அவர் “செந்தமிழ்" 2, 3-வது தொகுதிகளில் சேர்த்துள்ள அரிய மேற்கோள்கள் இல்லாவிடில் இந்த வியாசத்துக்குப் போதுமான ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திராது. ஆகையால் அவருக்கு நாம் கடப்பாடுடையோம் என்கிற விஷயத்தை, இங்கே மனப்பூர்த்தியாகத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
  8. அரம் பாடியதும் கம்பன் இறந்து விழுந்தானென்றும், மாற்றிப் பாடியதும், கம்பன் பிழைத்தெழுந்தான் என்றும் கூறும் கதையானது, "ப்ஹோஜராஜே தீவம் தே"என்று காளிதாசன் சொன்னதும், மாறுவேடம் போட்டு வந்து 'போஜன் இறந்தான்' என்று பொய்யாகச் சொல்லிய போஜன் பிணமாய் விழுந்துவிட்டான் என்றும், அதை மாற்றி "ப்ஹோஜராஜே ப்ஹீவம் ததே" என்று சொன்னதும் போஜனுக்கு உயிர்வந்து விட்டது என்றும், சொல்லும் கதையைப் பார்த்துத் தமிழ்ப் பண்டிதர் கற்பித்திருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தோன்றும்.
  9. " செந்தமிழ்", தொகுதி; பக்கம்.
  10. "செந்தமிழ்", தொகுதி, பக்கம். —
  11. Ş சேதி நில் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி, மாது ஒரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் என்னும், 'மெய்ப்பொருள் நாயனார்' புராணத்திலுள்ள, செய்யுள் இங்கே கவனிக்கத் தக்கது. (ஸ்ரீமான் து. அ) கோபிநாத ராயர் "செந்தமி"ழில் எடுத்துக் காட்டியது. புதுவைச் சேதிராயனும் வெண்ணெயூர்ச் சடையனும் ஒரே மனிதன் தான் என்று, மூவலூர்ச் சிவன் கோவிற்சுவர்களில் ஒன்றில் வெட்டி யிருக்கும்.

    தே மா வயங்கு செய்யா...ம பாற்கடல் சேதியர் கோன்
    மாமால் புதுவைச் சடையன்...

    என்னும் வரிகளும் வேறு பிறவும் காட்டுகின்றன என்று பி. அ. நாராயணசாமி ஐயர், "செந்தமிழ்" —இல் சொல்லுகிறார். பழைய சாத்திரங்தனில் இருக்கும் மயக்கங்களைக் களைந்து உண்மையைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமான காரியமாக இருக்கிறது!

  12. அரகேசரி என்றொரு கவி "ரகுவமிசம்" என்றொரு காவியம் பாடியிருக்கிறான். அதில் அவன் "செந்தமிழ் " 44-இல் எடுத்துக் காட்டியபடி

    பொன் தாமரை மான் ஒழியாது பொலியும் மார்ப—
    எல் தாங்கு மேனி ரகு ராம சரிதை யாவும்
    கற்று, ஆர்கலியின் பெரிது ஆம் தமிழ்க் கம்ப நாடன்
    உற்ற ஆங்கு உரைத்தான் : உரையாதன ஓதுகிற்பாம்,

    என்று சொல்லிவிட்டு உத்தரகாண்டக் கதைகளைச் சொல்லத் துவக்குகிறான். இவன் காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இவன் காலத்தில் ஒட்டக்கூத்தரின் உத்தரராமாயணம் இருத்திருந்தால் ஒன்று அதையும் பாடி இருக்கமாட்டான், அல்லது அதைப்பற்றி இந்த இடத்தில் புகழ்ச்சியாகவோ இகழ்ச்சியாகவோ பேசியிருப்பானாகையால், இவன் கம்பனுக்கும், ஒட்டக்கூத்தனுக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்திருப்பான் என்றும், இதிலிருந்து ஒட்டக் கூத்தன் இவன் காலத்துக்குப் பிற்பட்டவன் என்றும் வாதிக்க ஏது இருக்கிறது. பண்டிதர் இவர் காலத்தை நிர்ணயிக்க முயலுவது அவசியம்.

  13. ஒட்டக்கூத்தனும் கம்பனும் ஒரு காலத்தவரல்லாத போது கதைகள் ஏன் பிடிவாதமாக இருவரையும் பிணைத்தே கூறுகின்றன என்று கேட்டால், நாம் ஏற்கனவே 27-ம் பக்கத்தில் சொல்லியதோடு இதுவும் சொல்லுவோம்: கூத்தனுடைப அகங்காரத்தையும்‌ அழுக்காற்றையும்‌ கண்டு புழுங்கிய அவன்‌ காலத்துப்‌ புலவர்களோ, அல்லது ஆச்சரியப்பட்ட பிற்காலத்துப்‌ பண்டிதர்களோ, அவனுடைய அந்தத்‌ தீய குணங்களை மிகவும்‌ வற்புறுத்திக்‌ காட்டுவதற்‌காக, கவியிலும்‌ கல்வியிலும்‌ பெரிய கம்பன்‌ இருந்தால்கூட இவன் தூக்கியெறிந்து விடுவானடா என்பதைப்‌ புனைந்‌துரைக்க விரும்பி, கம்பன்‌ இவன்‌ காலத்தில்‌ இருந்ததாகவும்‌, இவன்‌ அவனை அவமதிக்க முயன்றதாகவும்‌ சுதை கட்டியிருத்தல்‌ வேண்டும்‌. நெடுங்காலத்துக்கு முன்‌ கம்பன்‌ பாக்கியாக விட்டுவிட்ட் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தன்‌ பாடியதும்‌ இந்தக்‌ கதையை "ஜோடிப்பதற்குப்‌ பண்டிதர்‌களுக்கு ஒரு சிறந்த உபகாரமாக இருந்திருக்கவேண்டும்‌.
  14. கம்பன் சோழர்களைப் பற்றி ராமாயணத்தில்தான் இரண்டு இடங்களில் தான் சொல்லுகிறான். அவை, கிஷ்கிந்தா காண்டம், பிலநீங்கு படலத்தில்,

    புவி புகழ் சென்னி, போர் அமலன், தாள் புகழ்
    கவிகள் தம் மனை என,

    என்று துவக்கும் செய்யுளும், யுத்த காண்டம் மருந்துமலைப் படலத்தில் அநுமானுடைய மார்க்கத்தை வருணிக்கையில் வரும்.

    சென்னி, நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன் தெய்வப்
    பொன்னி நாட்டு உவமைவைப்பைப் புலன் கொள நோக்கிப் போனான்}}

    என்ற அடிகளுமே. இவற்றில் சொல்லிய 'சென்னி' 'வீரன்' என்கிற பெயர்கள் ஒரு சோழனுடைய இயற்பெயர் என்றும், அந்தச் சோழன்தான் ஓட்டக்கூத்தனால் பாடப் பட்ட 'இரண்டாங் குலோத்துங்கன்' என்றும், ஸ்ரீ ராகவையங்கார் சொல்லுகிறார். ஆனால் சென்னி என்பது சோழர்களுக்கே பொதுப்பெயர் ஆனதாலும், அரசர்களை வீரன் என்று ஏற்றிச் சொல்லுவதும் மரபானதாலும் இந்தப் பெயர்களை ஒரு சோழனுடைய சிறப்புப் பெயர்களாகக் கொள்ளவேண்டியது அவசியம். தவிர, இந்தப் பெயர்களுள்ள சோழன் வீரசைவன் , சிதம்பரத்திலுள்ள கோவிந்த ராஜப் பெருமான் விக்கிரகத்தைக் கடலிலிட உத்திர விட்டவன். இப்பேர்ப்பட்டவனை, ஸ்ரீவைஷ்ணவனாகிற கம்பன் தன் ராமாயணத்தில் ஏற்றிச் சொல்லியிருப்பான் என நினைக்க முடியவில்லை.

  15. சில ஏட்டுப்பிரதிகளில் கம்பராமாயணத்தின் முடிவில்,

    ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து, தேவன் திருவெழுந்தூர் நல் நாட்டு ——மூவலூர்ச்
    சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
    கார் ஆர் காகுத்தன் கதை.

    என்று ஒரு வெண்பா காணப்படுகிறது என்றும், சகரர் ஆண்டு என்பது சாலிவாகன சகாப்தமே என்றும், இந்த வெண்பாவானது கம்பன் ராமாயணத்தை சகம் 1100-இல் பாடினான் என்று சொல்லுகிறது என்றும் ஸ்ரீமான் ராகவையங்கார் கூறுகிறார். இதில் விசாரிக்கவேண்டிய விஷயங்கள் பின்வருபவை: இந்தப் பாட்டு எழுதப்பட்டு இருக்கும் ஏட்டுப் பிரதிகளில் 'எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின் மேல்' என்கிற வெண்பா ஏதாவது ஒரு பாகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? சுகரர் ஆண்டு சாலி வாகன சகாப்தம்தான் என்பதிற்கு ஆதாரம் என்ன? கம்பன் மூவலூரான் என்பதற்கு வேறு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? இந்தப் பாட்டில் சொல்லும் 'கவியின் தகப்பனார் பெயர் ஆதித்தனா, குணாதித்தனா? எமக்கேற்படி ராமாயணம் *எக்காலத்தும், எல்லோரையும் ஆகரிஷிக்கும் கதையாதலால் பிற்காலத்தில் மூவலூரிலுள்ள வேறொரு கவி ராமாய்ணம் பாட, அதன் பாசுரத்தில் இந்த வெணபா வந்திருக்கலாம். பலராம கதைகளைச் சேர்த்து ஒரே வரிசையில் கட்டு வைத்தவர்களிடமிருந்து. கம்பராமாயணத்தைப் பெயர்த்து எழுதுவோர், இதற்குச் சேராத, குணாதித்தன் மகன் எழுதிய ராம கதையைச் சேர்ந்த, இந்த வெண்பாவைக் கம்பராமாயணத்தின் இறுதியில் சேர்த்தெழுதியிருக்கலாம். தவிர இந்தக் குணாதித்தன் சேயும் கம்பன் வமிசத்தவனாக இருந்தும் இருக்கலாம். அப்படி இருந்தால், இந்தப்பாட்டு இடம் மாறிக் கம்பராமாயணத்துக்கு வருவதற்குக் காரணங்கள் அதிகப்படும். எதற்கும், நூல் செய்த காலத்தைக் குறிப்பிடும் பாட்டுக்கள் நூல்களின் துவக்கத்தில் தான் வருகிறது வழக்கமாதலாலும், இந்த வெண்பாவில் நம் கம்பனுடைய பெயர் இல்லாததாலும், ஊரும் தகப்பன் பெயரும் மாறாக இருப்பதாலும், இந்த வெண்பா நமது விவகாரத்தில் ஒன்றையும் விளக்கவில்லை என்று தீர்மானிக்கிறோம்.

  16. மன்னவனும் நீயோ? வள நாடும் உன்னதோ?
    உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் ? — என்னை
    விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்து உண்டோ?
    குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு? (உண்டோ

    என்றும்,

    காதம் இருபத்து நான்கு ஒழியக் காசினியை
    ஓதக்கடல் கொண்டு ஒளித்ததோ? - மேதினியில்,
    கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா, நீ முனிந்தால்
    இல்லையோ எங்கட்கு இடம் ?

    என்றும் கம்பள் சோழனைக் கண்டித்துப் பாடியிருக்கிறதில் இருந்து, அவன் காலத்தில் சோழ ராஜ்ஜியம் மிகக் குறுகியதாயிருந்தது என்று ஏற்படும்.

  17. வேறு அநேக சாசனங்களில் இந்த அரசன் பெயர் பராந்தகன் என்று வருகிறது. இவன் சிங்காதனம் ஏறியது அகம் 429 இல் என்று ஸ்ரீமான் கோபிநா தாரயர் எழுதுகிறார்.
  18. "செந்தமிழ்" 4, 295.
  19. "செந்தமிழ்" 2. 99 இல் ஸ்ரீ. ரா. ராகவையங்கார் கூறியுள்ள பிள்வரும் வார்த்தைகளும் இங்கே கவனிக்க தக்கன :- "அன்றியும் முற்காலத்து நூல்களையே எடுத்தாண்ட 'பறத் திரட்டு' என்னும் நூலில், கம்பராமாயணச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருத்தலும், கி. பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்தவரும், 'வீரசோழிய' உரையாசிரியரும் ஆகிய "பெருந்தேவனார், 'கம்பனாரிடைப் பெருமையுளது' எனவும், நச்சினார்க்கினியர் 'கம்பன்' எனவும், உதாரணங்கள் காட்டியமையும் கம்பர்க்குள்ள பழமையைக் குறிப்பிக்கின்றன.
  20. இவைகளில் நமக்குத் தற்காலம் ஞாபகமிருக்கும் வரையில் முக்கியமானவை பின் வருமாறு:- (1) பால காண்டத்தில் வால்மீகி விஸ்தாரமாகச் சொல்லும் சுப்பிரமணிய ஜனனத்தைக் கம்பன் விட்டுவிட்டான். (2) வால்மீகி இரணியன் வதையைப் பற்றிப் பேசவில்லை. கம்பன் யுத்த காண்டத்தில் இந்தக் கதையை விஸ்தாரமாயும் கம்பீரமாயும் சொல்லுகிறான். (3) மாயையால் ஓர் அரக்கனை ஜனகன் போலச் செய்து அவனைக்கொண்டு ராவணன் சீதையைக் கலைக்க முயலுகிறான் என்று கம்பன் சொல்லுகிறான். இதுவால்மீகியில் இல்லை. (4) கம்பன், மூல பல யுத்தத்தை ஒரு பெரும் போராக்கிவிட்டான். வால்மீகியில் இதற்கு 4 சுலோகங்கள் இருக்குமோ என்னவோ.
  21. நிகனத்தில் கம்பனுடைய ஒரு விருத்தத்திற்கு, வால்மீகியின் 2 சுலோகங்களும், துளசிதாசரின் 2 செய்யுள்களும் சரியாயிருக்கும்.
  22. இம்மாதிரி வேறு விபரமின்றி வரும் எண்கள் இந் நூலிலுள்ள செய்யுள் வரிசையைக் காட்டும்.
  23. 'வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ' என்பது காம்பீர்யத்தைக் குறைக்கக்கூடிய பாவமானாலும் கூட, முதற்கண் சொல்லிய மொழிகளின் பெருமை இதற்கும் ஓர் ஒளி தந்துவிடுகிறது.
  24. இதற்கு லக்ஷ்மணன் சொல்லும் பதிலின் ஆரம்ப வாக்கியமும் நன்றாக இல்லை. அது பின்வருமாறு : "சீதையே, தகாத வார்த்தைகள் நீ சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்திரீகள் இயற்கையாக தர்மத்தினின்று நீங்குகிறவர்களாயும், சபல சித்தர்களாயும், கடூர குணம் உள்ளவர்களாயும், கலகமுண்டாக்குகிறவர்களாயும் இருக்கிறார்கள்".