கரிகால் வளவன்/இமயத்தில் புலி
கரிகாலன் சின்னஞ் சிறு பிராயத்திலேயே சேர பாண்டியர்களை வென்றதனால் சோழ நாட்டு மக்களுக்கு அவனிடத்தில் அளவற்ற அன்பு உண்டாயிற்று. அவனுக்கும் இனி எத்தகைய பகை வந்தாலும் தன் நாட்டு மக்களின் உதவியால் வென்று விடலாம் என்ற நம்பிக்கை வன்மை பெற்றது.
ஆனால் பகைவர்கள் சும்மா இருப்பார்களா? மீண்டும் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்பது குறு நில மன்னர்கள் கரிகாலனுக்கு மாறாகச் சூழ்ச்சி செய்தார்கள்; “இப்போது தான் பெரிய போர் நடைபெற்றிருக்கிறது. வெற்றி உண்டான களிப்பில் படை வீரர்களெல்லாம் மூழ்கியிருக்கிறார்கள். கடுமையாகப் போர் செய்தமையால் அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு ஓய்வு வேண்டியிருக்கும். இந்தச் சமயத்தில் நாம் எதிர்த்தால் நம் கருத்து நிறைவேறலாம். இனி நமக்கு யாரும் பகைவர் இல்லை என்ற இறுமாப்போடு இந்தச் சிறு பையன் இருக்கிறான். இவனுடைய வாழ்வைக் குலைக்க வேண்டும்” என்று பேசினார்கள்.
வெண்ணிப் போர் நடந்த சில மாதங்களில் மீண்டும் சோழ நாட்டில் போர் தொடங்கியது. இந்த முறை வாகை என்னும் இடத்தில் போர் நிகழ்ந்தது. முடியுடை மன்னர் யாரும் எதிர்க்கவில்லை. பல காலமாக மண்ணாசையை வளர்த்து வந்த சிற்றரசர்கள் ஒன்பது பேருமே எதிர்த்தனர். ஒரு முறை வெற்றி கண்ட சோழ அரசன் விடுவானா? சோழப் படையின் ஊக்கத்தில் சிறிதும் குறைவே இல்லை. அவர்கள் எத்தகைய போருக்கும் ஆயத்தமாக இருந்தனர்.
வெண்ணியில் நிகழ்ந்த போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு இந்தப் போர் எம்மாத்திரம்? மிக எளிதில் வாகைப் போர்க்களத்தில் கரிகாலன் வாகை அணிந்தான். ஒன்பது குறு நில மன்னர்களிற் சிலர் மாய்ந்தனர்; சிலர் ஓடி ஒளித்தனர்.
கரிகாலன் இரண்டாவது முறையும் வெற்றி பெற்றுக் காவிரிப்பூம்பட்டினத்தை வந்து அடைந்தான். மீட்டும் மீட்டும் பகை மன்னர் எதிர்பாராமல் எதிர்த்தால் அடுத்தடுத்துப் போர் செய்ய நேருமே என்ற யோசனை அவனுக்குத் தோன்றியது. சோழ நாட்டின் வளப்பத்தைப் பெருக்குவதற்கு எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டியிருந்தன. முடியை அணிந்தவுடனே வில் ஏந்தும் நிலை வந்தது, கரிகாலனுக்கு.
வேண்டுமென்று அவன் போர் செய்யவில்லை. பகை மன்னர்களே அவனைப் போரில் ஈடுபடச் செய்தார்கள். அவனுடைய வீரமும், சோழ நாட்டுப் படைத்திறமும் வெளிப்படுவதற்குப் பகைவர்களே காரணமாக இருந்தனர். இனியும் குறும்பு செய்து கொண்டே இருந்தால் அமைதியாக அரசாட்சி செய்ய முடியாது. ஆதலால் கையோடு கையாகப் பகைவர்களை அடியோடு வேரறுக்கும் வேலையை முதலில் முடித்து விடவேண்டு மென்று வளவன் உறுதி பூண்டான். யார் யார் முன் நாட்களில் குறும்பு செய்தார்களோ அவர்களைப்பற்றிய செய்திகளை விசாரித்து அறிந்தான். கூட்டம் கூட்டமாகச் சில இனத்தினர் நாட்டில் கலகங்களை விளைத்து வந்தனர். அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துகொண்டான், சூட்டோடு சூடாகத் தன் படைப்பலத்தைப் பின்னும் பல மடங்கு அதிகப்படுத்திக்கொண்டான். இரண்டு போர்களில் வெற்றி பெற்றுவிட்ட உவகையினால் படையில் பல வீரர் சேர்ந்தனர். சோழ அரசன் சென்ற இடமெல்லாம் வெற்றி பூணுவான் என்ற உறுதி அவர்களுக்கெல்லாம் இருந்தது. படை வரவரப் பெருகியது.
கரிகாலன் உள்ளம் பூரித்தான். எயினர், நாகர், ஒளியர் என்ற கட்டத்தினர் அங்கங்கே இருந்து தம்மைச் சூழ்ந்த பகுதிகளில் பயமுறுத்தி மக்களை அடக்கி ஆண்டு வந்தனர். அத்தகைய கூட்டத்தினரையெல்லாம் முதலில் அடக்கினான். பாண்டியனும் சேரனும் வெண்ணிப் போரில் தோல்வியுற்றாலும், அவர்கள் பரம்பரையினர் மீட்டும் பகைத்துப் போர் புரியக் கூடுமல்லவா? ஆதலின், அந்த நாடுகளுக்கெல்லாம் சென்று அங்குள்ளவர்கள் வழிபட, அந்த மன்னர்களைத் தன் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகச் செய்து கொண்டான்.
மேலும் மேலும் வெற்றி கிடைக்கவே, திருமாவளவனுக்கு ஊக்கம் எல்லையின்றி உயர்ந்து நின்றது. வெற்றி மிடுக்கு, பரந்த படை, பழம் பெருமை இத்தனையும் இருக்கும்போது அவன் நினைத்தால் எந்தக் காரியந்தான் கைகூடாது? தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இனிப் பல ஆண்டுகளுக்கு எதிர்த்துப் போரிட முன் வர மாட்டார்கள் என்ற நிச்சயம் வளவனுக்கு ஏற்பட்டது. அப்படியானால் இவ்வளவு படையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
தமிழ் நாட்டில் பகையின்றிச் செய்து கொண்டதுபோல, வடநாட்டிற்கும் சென்று யாரேனும் பகைமை காட்டினால் வென்றும், நட்புப் பூண்டால் ஏற்றும் வரலாம் என்ற யோசனை கரிகாலனுக்கு அப்போது உண்டாயிற்று. அமைச்சர்களையும் சான்றோர்களையும் படைத் தலைவர்களையும் அழைத்து அவர்களுடன் தனியிருந்து ஆலோசனை செய்தான். படைத்தலைவர்கள் யாவரும் வட நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்பதை ஆதரித்தனர். அவர்களுடைய தோள் தினவு இன்னும் தீரவில்லை. மன்னனும் தளபதிகளும் அவ்வளவு ஊக்கத்துடன் இருக்கும்போது அமைச்சர்கள் தடை கூற நியாயம் ஏது? ஆகவே, வடநாட்டுக்குப் படையுடன் செல்வதென்று முடிவு செய்தார்கள்.
நாளும் கோளும் பார்த்துப் புண்ணிய திசையாகிய வடக்கே நோக்கிப் புறப்பட்டான் கரிகாலன். போகும் வழியில் எதிர்ப்பு ஒன்றும் இல்லை. நேரே ஒவ்வொரு நாடாகக் கடந்து சென்றான். இமயம் அளவும் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. அவனுடைய நெஞ்சத் திண்மை எல்லாவற்றையும் சாதிக்கத் தக்கதாக இருந்தது. படைகள் தடையின்றிச் சென்றன. எங்கும் போரே இல்லை.
கரிகாலன் வேகம் தடைப்படவில்லை. போய்க் கொண்டே இருந்தான். கடைசியில் இமயத்தை அடைந்தான். வானளாவிய இமயமலையைக் கண்டவுடன் அவன் உள்ளத்தில் களி துளும்பியது. சோழர்களின் முன்னோர்களில் யாரும் செய்யாத பெரிய காவியத்தை அவன் செய்துவிட்டான். பகையரசர் யாரும் இன்றி வழியிலே உள்ள நாட்டினர்கள் அன்புடன் உபசரிக்க, இமாசலப் படை யெடுப்பு இமாசல யாத்திரையாக முடிந்தது. இந்தச் சிறப்பை உலகம் என்றும் நினைவு கூர்தற்கு ஏற்றபடி தான் சென்றடைந்த இமாசலப் பகுதியில் தன் புலிக்கொடியைச் சோழன் நாட்டினான். பல இடங்களில் தன்னுடைய புலிக்கொடியின் உருவத்தைக் கல்லிலே பொறிக்கச் செய்தான். இவ்வாறு சோழன் கரிகாலன் சென்று புலி பொறித்த இடம் சிக்கிம் பகுதியில் உள்ளதென்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். அந்தப் பகுதியில் சோழ மலைத் தொடர் என்றும், சோழர் கணவாய் என்றும் இரண்டு இடங்கள் வழங்கி வருகின்றனவாம்.
இமயத்தில் புலி பொறித்த ஏற்றத்துடன் கரிகாலன் தமிழ்நாட்டை நோக்கி மீண்டான். அதுகாறும் அவனை எதிர்க்காமல் விட்ட மன்னர்களில் சிலருக்கு அவன். இமாசலத்தில் தன் அடையாளத்தை நாட்டினான் என்ற செய்தி சினத்தை மூட்டியது. கரிகாலன் திரும்பி வருகையில் வச்சிர நாட்டைக் கடக்க வேண்டி வந்தது. அந்த நாட்டு வேந்தன் கரிகாலனை எதிர்த்தான். இப்போது பண்டில்கண்ட் என வழங்கும் பகுதி அது. அங்கே நிகழ்ந்த போரில் கரிகாலனே வென்றான். வச்சிர நாட்டு மன்னன் கரிகாலனுக்குப் பணிந்ததோடு தன் தோல்விக்கு அடையாளமாக ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க முன்வந்தான். கரிகாலனது வெற்றியை வெளிப்படுத்தும் சின்னமாக அது சோழ நாட்டில் விளங்க வேண்டும் என்பது சோழப் படைத்தலைவர்கள் எண்ணம். முத்தினால் பந்தர் அமைப்பதாக வச்சிர நாட்டு மன்னன் ஒப்புக்கொண்டான்.
வச்சிர நாட்டினின்றும் வெற்றி முழக்கத்தோடு புறப்பட்ட கரிகாலனை மகத நாட்டு மன்னன் எதிரிட்டுப் போர் செய்தான். அவனும் தோல்வியுற்றான். காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பட்டி மண்டபத்தை அமைத்துத் தருவதாக அவன் வாக்களித்தான்.
வச்சிர நாட்டிலும் மகத நாட்டிலும் கரிகாலன் பெற்ற வெற்றியைக் கேட்ட பிறகு இடைப்பட்ட நாடுகளில் உள்ள யாரும் கரிகாலனை எதிர்க்கத் துணியவில்லை. யாவரும் அன்புடன் உபசரித்து வழிவிட்டனர். அவந்தி நாட்டை வளவன் அடைந்தபோது அந்த நாட்டு மன்னன் கரிகாலனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றான். தக்க வண்ணம் உபசரித்து அவனோடு நட்புப் பூண்டான். அந்த நட்புக்கு அறிகுறியாகக் காவிரிப்பூம் பட்டினத்தில் தோரணவாயில் ஒன்றைச் சமைப்பதற்கு இசைந்தான்.
இத்தகைய சிறப்புகளையெல்லாம் பெற்ற கரிகாலன் காவிரிப்பூம்பட்டினத்தை வந்தடைந்தான். நகர மக்கள் அவனை வரவேற்று உபசரித்துக் களிக்கூத்தாடினர். சோழ நாடு முழுவதும் ஆனந்தக் கடலில் அமிழ்ந்தது. தமிழ் நாட்டில் உள்ள அனைவருமே தமிழ் நாட்டு அரசன் வடக்கே சென்று திக்கு விசயம் செய்து வந்தான் என்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.
முன்பு வாக்களித்தபடி வச்சிர நாட்டு மன்னன் குவை குவையாக முத்துக்களையும் கலைஞர்களையும் அனுப்பிக் காவிரிப்பூம் பட்டினத்து அரண்மனையில் பெரிய முத்துப் பந்தர் ஒன்றை அமைக்கச் செய்தான். அந்தப் பந்தர் வச்சிர நாட்டுக் கலை முறையில் அமைந்து விளங்கியது. வச்சிர நாட்டு மன்னனைக் கரிகாலன் அடிப்படுத்திய தன் சின்னமாக அது நிலவியது. அவ்வாறே மகத மன்னன் தன் நாட்டுச் சிற்பியர்களை அனுப்பிக் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பெரிய பட்டி மண்டபத்தை அமைக்கச் செய்தான். புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்யும் மண்டபத்திற்குப் பட்டி மண்டபம் என்று பெயர். மதுரைமா நகரிற் சங்க மண்டபம் இருந்தது போலக் காவிரிப்பூம்பட்டினத்திலும் ஓர் ஆராய்ச்சி மண்டபம் எழும்பியது. மகத வேந்தன் தன் நாட்டுப் பொருள்களால் அந்த மண்டபத்தை அணி செய்தான். புலவர் கூடும் இடமாய், மகத நாட்டுச் சிற்பத்திற்கு உறைவிடமாய், கரிகாலன் மகத மன்னனைப் பணிவித்ததைக் குறிக்கும் அடையாளமாய்ப் பட்டி மண்டபம் இலங்கியது. கரிகாலனிடம் நட்புப் பூண்ட அவந்தியரசன் இன்னும் பெரியதொன்றை நாட்டினான்; பூம்புகாராகிய காவிரிப்பூம் பட்டினத்தின் முகப்பில் மிக உயர்ந்த தோரணவாயிலை அமைக்கச் செய்தான். யார் வந்தாலும் நகரத்தில் நுழையும்போதே அதன் அழகு அவர் கண்ணைக் கவர்ந்தது. சோழ மன்னனுடைய புகழ் வட நாடெல்லாம் பரவியிருப்பதை அந்தத் தோரண வாயில் ஓங்கி உயர்ந்து நின்று அறிவித்துக்கொண்டிருந்தது.
ஒருவாறு தன்னுடைய வீரத்தால் பகையை ஒடுக்கி நான்கு திசையிலும் புகழ் பரப்பிய கரிகாலன் சிங்காதனத்தில் அமர்ந்து தன் நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலானான்.