கரிகால் வளவன்/இழந்து பெற்ற காதலன்
கரிகாலனுடைய புகழ் மேன்மேலும் வளர்ந்து வந்தது. அவன் முன்பு நாங்கூர்வேளின் மகளை மணந்து கொண்ட பிறகு, வேறு சில பெண்களையும் மணந்துகொண்டான். அவர்களுக்கு அறிவிற் சிறந்த மக்கள் பிறந்தனர். அவர்களுள் ஆதிமந்தி என்ற பெண்ணும் ஒருத்தி.
ஆதிமந்தி அழகும் அறிவும் சிறந்து விளங்கினாள். கரிகால் வளவனுடைய பெண்ணுக்குக் கலையறிவு மிகுவது இயற்கைதானே? பாண்டி நாட்டு இளவரசனும் வேறு பலரும் அவளுடைய காதலைப் பெற முயன்றார்கள்.
சேர நாட்டிலிருந்து ஒரு நாள் ஓர் அரசிளங்குமரன் கரிகாலனுடைய அவைக்கு வந்தான். சேர அரசன் கரிகால் வளவனுடைய ஆட்சிக்கு அடங்கினவனாக இருந்தான். ஆதலின், சேர நாட்டிலிருந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பூம்புகாருக்கு வந்து செல்வது வழக்கம். சேர அரசிளங்குமரனுக்கு ஆட்டன் அத்தி என்று பெயர். அவன் திரண்ட தோளும் மலர்ந்த முகமும் அறிவொளி வீசும் கண்களும் உடையவனாகத் தோன்றினான். எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் அஞ்சாத நெஞ்சமும் உடைய ஆட்டனத்தி சிலகாலம் அரண்மனையில் தங்கியிருந்தான். கரிகால் வளவனுடைய அன்புக்கு உரியவனானான். வளவனுடைய மகள் ஆதிமந்தியைக் கண்டு பேசும் பேறும் அவனுக்குக் கிடைத்தது. அவனுடைய எழில், வளவனுடைய மகளின் உள்ளத்தை வவ்வியது. அப்படியே அவனும் அவளைக் கண்டு காமுற்றான். இருவர் உள்ளமும் ஒன்று பட்டன.
இந்தச் செய்தியைக் கரிகால் வளவன் அறிந்தான். தாமே காமுற்று மணம் செய்து கொள்ளும் காதல் மணத்தைத் தமிழ் நூல்கள் மிகச் சிறப்பாகப் பாராட்டுகின்றன. ஆதலால் தன் மகளுடைய காதல் வளர இடம் கொடுத்தான் வளவன். பின்பு அவ்விருவருக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நிகழ்ந்தது.
திருமணம் நிகழ்ந்தது முதல் ஆட்டனத்தி சோழ நாட்டிலே தங்கியிருந்தான். தன் அரும்பெறற் காதலியாகிய ஆதிமந்தியுடன் பல இடங்களுக்குச் சென்று வந்தான். சோலைகளுக்குச் சென்று தண்ணந் தென்றல் வீச, மலர் மணம் எங்கும் பரவ, வண்டு பாட, குயில் இசையியம்ப, மயில் ஆட, அங்கே தங்கி இன்புற்றான். ஆற்றிலும் குளத்திலும் நீராடி இன்புற்றான்.
காவிரியாற்றைப் பார்த்துப் பூரித்துப் போனான் ஆதிமந்தியின் காதலன். வேலி ஆயிரம் கலம் விளையும்படி ஆக்கும் அந்த ஆற்று வளத்தால் தமிழ் நாட்டில் சோழ மண்டலத்துக்குத் தனி வளம் அமைந்திருப்பதை எண்ணி எண்ணி வியந்தான். அவன் தன் ஊரில் இருந்தபோது அடிக்கடி கடலில் நீராடுவான். கடலில் குதித்தும் மூழ்கியும் அலையில் மிதந்தும். நீந்தியும் விளையாடுவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். காவிரி நீரிலும் அப்படியே துளைந்து விளையாடினான். நெடு நேரம் நீருக்குள் மூழ்கியபடியே இருக்கும் பயிற்சியை அவன் செய்திருந்தான்.
ஆடி மாதம் பிறந்தது. காவிரியில் புது வெள்ளம் வந்தது. புது வெள்ளம் வந்தால் உழவர்களுக்கெல்லாம் ஒரே குதூகலம். அதைப் பறை கொட்டி வரவேற்றார்கள். நுங்கும் நுரையுமாகக் காவிரி வந்தது; புது மணப் பெண்ணைப் போல மலர்களையும் தளிரையும் சுமந்து வந்தது; தன் கணவன் வீட்டுக்கு விரைந்து செல்பவளைப் போலக் கடலை நோக்கி வேகமாக ஓடியது.
ஆட்டனத்தி காவிரி வெள்ளத்தைப் பார்க்க விரும்பினான். தன் காதலியையும் அழைத்தான். “அப்பாவையும் அழைத்துப் பார்க்கிறேன். வந்தால் எல்லாரும் ஒன்றாகப் போகலாம்” என்றாள் அவள்.
“அவருக்கு எத்தனையோ வேலை. இப்போது நம்முடன் எதற்காக வருகிறார்?” என்றான் ஆட்டனத்தி.
அவர்கள் இருவருமே புறப்படுவதாக இருந்தார்கள். ஆனால் புறப்படும்போது ஏதோ தடை நிகழ்ந்தது. “நாளைக்குப் போகலாம்” என்று நின்றுவிட்டார்கள். மறு நாளும் புறப்படுகையில் தடை உண்டாயிற்று. “தந்தையாரை அழைக்காமல் போவது தவறு என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்றபடி தடைகளும் உண்டாகின்றன. அவரையும் அழைத்துக்கொண்டு போவது தான் நல்லது” என்றாள் ஆதிமந்தி. அத்தி உடன்பட்டான்.
ஒரு நாள் கரிகாலனோடு அவர்கள் புறப்பட்டார்கள். அதிகப் பரிவாரங்களோடு புறப்பட்டால் காவிரியின் அழகை அமைதியாகக் காண முடியாது என்று எண்ணிச் சில ஏவலாளர்களை மாத்திரம் அழைத்துக்கொண்டு சென்றார்கள். காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சிறிது மேற்கே உள்ள கழார் என்ற இடத்துக்குப் போனார்கள்.
அங்கே இடம் வசதியாக இருந்தமையால் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். புது வெள்ளம் பரந்து ஓடும் காவிரியின் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு ஆட்டனத்தி கூத்தாடினான். “உன்னுடைய மேனியிலே அழகு வெள்ளம் பொங்குவது போலப் பொன்னி நதி வெள்ளப் பொலிவுடன் பூரித்து ஓடுகிறது” என்று ஆதிமந்தியிடம் சொன்னான்.
வெள்ளத்தைக் காணக் காண அதில் இறங்கி ஆடவேண்டும் என்ற ஆசை அவனிடம் உண்டாகிப் பெருகியது. ஆற்றில் குதித்தான். தன் மனம் போனபடியெல்லாம் துளைந்து விளையாடலானான்.
“இது கடலன்று. நீரின் ஓட்டம் வேகமாக இருக்கிறது. நெடுந்தூரம் போகாமல் கரைக்கு அருகிலே நீந்தி விளையாடுங்கள்” என்று ஆதிமந்தி சொன்னாள்.
“ஆழமும் கரையும் காணாத கடலிலே விளையாடினவனுக்கு இந்தக் காவிரி எம்மாத்திரம்?” என்றான் அவன்.
“கடல் வேறு, காவிரி வேறு. கடலில் ஓட்டம் இல்லை. இங்கே ஆளை இழுத்துப் புரட்டும் ஓட்டம் இருக்கிறதே!” என்று அவள் எச்சரித்தாள்.
“நீ பெண்பால்; ஆதலால் அஞ்சுகிறாய். உன் அச்சத்துக்குக் காரணமே இல்லை” என்று சொல்லி அவன் நீந்தத் தலைப்பட்டான்.
நீந்த நீந்த அவன் ஆவல் பெருகியதே ஒழிய அடங்கவில்லை. கரையினின்றும் நெடுந்தூரம் நீந்திச் சென்று மீண்டும் வந்து கரையேறினான். இவ்வாறு துணிவோடு அவன் காவிரியினிடையே நீந்துகையில் நீரோட்டம் வேகமாக உள்ள இடத்தில் அவன் அகப்பட்டான். அந்த இடத்தில் நிலை கொள்ளாத ஆழம் இருந்தது. அங்கே அவன் சென்றவுடன் அவன் கைகள் ஓய்ந்தன. தடுமாறினான்.
கரையில் இருந்த ஆதிமந்தி அவன் தடுமாறியதைக் கண்டாள். “ஐயோ! ஐயோ!” என்று கதறினாள். கூடாரத்துக்குள் இருந்த கரிகாலன் வெளியிலே வந்து பார்த்தான். ஏவலாளர்களும் வந்தார்கள். “அதோ பாருங்கள். அவர் ஆற்றோடு போகிறாரே!” என்று கதறினாள் ஆதிமந்தி. ஆட்டன் அத்தி ஆற்றின் நீரோட்டத்திலே சிக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவன் கைகள் வலிமையை இழந்தன. கரிகாலன் ஏவலர்களை ஏவினான். மன்னன் ஏவுவதற்கு முன்பே சிலர் ஆற்றில் குதித்து அரசிளங் குமரனை மீட்க முயன்றார்கள். அவர்களால் அவனைப் பிடிக்க முடியவில்லை. ஆதிமந்தி, “ஐயோ! ஐயோ!” என்று கதறிக் கொண்டு காவிரிக் கரையின் வழியே ஓடினாள். நீரின் வேகம் மிகுதியாக இருந்தது. ஆட்டனத்தியின் உருவம் சிறிது தூரம் வரையில் தெரிந்தது. அதைப் பார்த்துக்கொணடே அவள் ஓடினாள்.
“ஓடாதே, ஓடாதே! நான் ஆட்களை அனுப்புகிறேன்” என்று கரிகாலன் கூவினான். அவள் காதில் அது விழவில்லை.
அரசனுடைய பணியாளர்கள் ஆதிமந்தியை அணுகிச் சமாதானம் சொன்னார்கள். “இதோ பரிசல்களையும் தெப்பக் கட்டைகளையும் போட்டுக் கொண்டு இளவரசரைத் தேட ஏற்பாடு நடைபெறுகிறது. வெகு வேகமாகத் தேடிக் கண்டு பிடித்து விடலாம். நீங்கள் அலையவேண்டாம்” என்றார்கள். “நான் மாட்டேன். அவரைக் கண்டு பிடிக்காவிட்டால் அவர் போன வழியே நானும் போகிறேன். இரண்டு முறை புறப்பட்டும் தடை உண்டாயிற்றே. அதை இந்தப் பாவி உணரவில்லையே!” என்று அவள் புலம்பினாள். நில்லாமல் கரைவழியே ஓடினாள். புதிதாகப் போட்ட கரை ஆகையால் தடையில்லாமல் ஓட முடிந்தது. குதிரை யேறிய சிலர் அவளுக்குப் பாதுகாப்பாக உடன் போனார்கள். அவளை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆட்டனத்தியின் உருவம் இப்போது மறைந்துவிட்டது. குதிரையின்மேல் ஏறி முன்னே சென்றவர்களுக்கும் புலப்படவில்லை. ஆற்றுக்குள்ளே பரிசலை விட்டுச் சென்றவர்களுக்கும் கிடைக்கவில்லை. வெள்ளம் இரு கரையையும் தொட்டுச்சென்றது. அந்த ஆற்றில் எங்கே என்று தேடுகிறது? ஆனாலும் தேடினார்கள். பல இடங்களில் தேடினார்கள். அரசகுமாரன் அகப்படவில்லை.
ஆதிமந்தி போய்க்கொண்டே இருந்தாள். “தாயே, காவிரி மகளே! என் கணவனை விழுங்காமல் என்னிடம் ஒப்பிக்கமாட்டாயா?” என்று கதறினாள். “தெய்வமே! போக வேண்டாம் என்று தடைசெய்த உன் குறிப்பைப் புறக்கணித்தேனே! அதற்குரிய தண்டனையாக இதுவரைக்கும் நான் பட்டது போதாதா? என் மங்கல வாழ்வை இழக்கும்படி செய்துவிடாதே” என்று மனமுருகிப் பிரார்த்தித்தாள். சில ஊர்களைக் கடந்து சென்றாள். ஆட்டனத்தியை அவள் காணவில்லை.
அவளுக்குக் கால் நோவெடுக்கவில்லை; கண் ஒளி மங்கவில்லை. அவ்வளவு தூரம் அவள் மனம் துணிவு பெற்றது. “எப்படியேனும் என் கணவரைக் கண்டுபிடித்துத்தான் மீள்வேன். காவிரிக்கு என் கணவனையும் மங்கல வாழ்வையும் பலி கொடுத்துவிட்டுத் திரும்ப மாட்டேன். கணவனை இழந்து நெருப்பைத் தழுவிய மங்கையர் வாழ்ந்த குலம் எங்கள் குலம், நான் நீரைத் தழுவிப் புண்ணிய உலகம் செல்வேன்” என்று அவள் புலம்பினாள். போய்க்கொண்டே இருந்தாள்.
ஒவ்வோர் ஊராகத் தாண்டிக் கடைசியில் காவிரிப்பூம்பட்டினத்துக்கே வந்துவிட்டாள். காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத்தை அடைந்தாள். அவளுடன் வந்தவர்கள் அவளருகே நின்றார்கள். அதற்கு மேல் எங்கே போவது? எதிரே கடல் அலைகளை வீசிக் குமுறிக் கொண்டிருந்தது.
சங்கமுகத்தில் கடலை நோக்கி நின்று அவள் அழுதாள். “கடலரசனே! உன்னிடம் என் காதலர் புகல் புகுந்தாரோ? அவருடைய உடம்பைப் பவளம் போலவும் முத்துப் போலவும் உன் திருவயிற்றில் அடக்கிக்கொண்டாயோ?” என்று அழுதாள்.
“சேர நாட்டிலிருந்து வந்த உங்கள் முகத்தைப் பார்த்த பிறகு, இனி நம் வாழ்வுக்குரிய இன்றுணை கிடைத்து விட்டது என்று இறுமாந்திருந்தேனே! மலையிலிருந்து வரும் காவிரி வெள்ளத்தைப் போல மலை நாட்டிலிருந்து அன்பு வெள்ளம் வந்தது என்று பூரித்தனே! எம்பெருமானே! காவிரி நீராட்டிலே உயிரைப் பறிகொடுக்கவா வந்தீர்கள்? இல்லை, இல்லை. நீங்கள் என்னைப் பிரிந்து போக மாட்டீர்கள். நீங்கள் உயிர் நீத்திருந்தால் என் உயிர் இந்த உடலிலிருந்து தானே போயிருக்கும். என் உயிர் போகாமல் நிற்பது ஒன்றே, நீங்கள் எங்கோ உயிருடன் இருப்பதற்கு அடையாளம். என் உள்ளத்துக்குள்ளே யிருந்து ஏதோ ஒன்று அப்படிச் சொல்கிறது. ஆகவே, வாருங்கள். என் உயிர்க்கு உயிராக நிற்கும் பெருமானே! வாருங்கள்” என்று கதறினாள்.
அவளுடைய துயரத்தைக் கண்டு உடன் இருந்தவர்கள் மனம் கலங்கினார்கள். அவர்களுக்கும் அழுகை வந்தது.
“காவிரியும் கடலும் கலக்கும் இந்த இடத்தில் நின்று முறையிடுகிறேன். காவிரி யென்னும் பெண்ணே! நீ மங்கலம் நிரம்பினவள்; போகின்ற இடங்களிலெல்லாம் மங்கலத்தை வளர்ப்பவள். நீ என் மங்கலத்தை மாற்றலாமா? என் தந்தையார் உன் கரையை அழகு செய்து தம் மகளைப் போலப் பாதுகாக்கிறாரே. அவர் மகளாகிய நான் உன் உடன் பிறந்தாள் போன்றவள் அல்லவா? சிறிதும் இரக்கமின்றி என் காதலரை நீ வவ்விக் கொள்ளலாமா? கடலரசனே ! உன்னிடம் என்
காதலர் வந்திருந்தால் அவரை என்னிடம் கொடுத்துவிடு. காவிரியென்னும் காதலி நெடுக வந்து உன்னைத் தழுவிக் கொள்ளும் இந்த இடம் மிகப் புனிதமானது. இங்கே நின்று எத்தனை காலமானாலும் நான் தவம் செய்யக் காத்திருக்கிறேன். என் ஆருயிர்க் காதலரைக் கொண்டு வந்து கொடு, காவிரிக்கும் கடலரசனுக்கும் சேர்த்து விண்ணப்பம் செய்து கொள்கிறேன். எப்படியாவது என்னுடைய இன்னுயிர்க் கணவரைக் கொண்டு வந்து கொடுங்கள்!”
அவளுடைய அறியாமையை நினைந்து அருகில் உள்ளவர்கள் இரங்கினார்கள்.
ஆதிமந்தி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கடலை நோக்கி நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது. கடலரசனுக்கு அருள் வந்தது.
ஏதோ ஒரு பொருள் கடலில் மிதப்பது போல இருந்தது. ஆடையும் தெரிந்தது. மனித உடல்போல் தோன்றியது. ஆட்கள் விரைந்து சென்று எடுத்தார்கள். ஆட்டனத்தியின் உடல்! ஆதிமந்தி அதை அணைத்துக் கொண்டாள். “உயிர் இருக்கிறது” என்று அவள் சொன்னாள்.
"ஐயோ பாவம் ஆசையைப் பார்!’ என்று அருகில் உள்ளவர் எண்ணினர்.
ஆனால் முயற்சி செய்வதில் தவறு இல்லையே! அத்தியை எடுத்துக்கறகறவென்று சுழற்றினார்கள். மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் நீர் ஒழுகியது. மெல்ல மூச்சு வருவது போலிருந்தது;
எல்லோருக்கும் மிக்க அதிசயமாக இருந்தது. மறுபடியும் சில சிகிச்சைகள் செய்தார்கள்.
ஆட்டனத்தி காவிரியிலே மூழ்கினாலும் மறுபடியும் மறுபடியும் முயன்று நீருக்கு மேலே மிதந்தான். உடலுரத்தாலும் பயிற்சியினாலும் நெடுந்துாரம் இப்படிப் போராடிக் கொண்டு வந்தான். சில நேரம் மிதந்தான். சில நேரம் மூழ்கினான். சிலபோது கையையும் காலையும் அசைத்தான். நீர் அவனை இழுத்துக்கொண்டே சென்றது. கடைசியில் சங்கமுகத்துக்கே வந்து விட்டான். அப்போது அவன் தன் உணர்வை இழந்தான். இழந்த சிறிது நேரத்தில் அலைகளால் மோதப்பெற்றுக் கரைக்கு அருகே மிதந்தான். அந்த நிலையில்தான் ஆட்டனத்தியை எடுத்து உயிரூட்டினார்கள்.
ஆட்டனத்தி பிழைத்துக்கொண்டான். ஆதி மந்தியின் கற்பு ஆற்றலுடையது என்று யாவரும் கொண்டாடினர். அவள், “கடல் தெய்வம் என் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குக் கணவரை. அளித்தது” என்றாள். சில புலவர்கள் அப்படியே பாடினர்கள்.
கரிகாலன் மனைவி மக்களுடன் நெடுங்காலம் வாழ்ந்தான். ஐந்து வயதில் செங்கோல் பிடித்து எண்பத்தைந்து ஆண்டு வரையில் வாழ்ந்தான் என்று ஒரு தனிப்பாட்டுச் சொல்கிறது.
சோழ பரம்பரையில் கதிரவனைப்போல விளங்கிப் புகழ் பெற்றான் கரிகாலன்; அவனுடைய
முயற்சியால் காவிரி கரை பெற்றது: சோழ நாடு வளம் பெற்றது; தமிழ் கவிதை பெற்றது. அந்தக் கவிதைகளின் வாயிலாக இன்னும் கரிகாலனுடைய பெரும் புகழை நாம் அறிந்து வாழ்த்துகிறோம்.
1. கரிகால் வளவன் பிறந்த வரலாற்றை எழுதுக.
2. கரிகாலன் என்ற பெயர் வரக் காரணம் யாது? நிகழ்ச்சியை விளக்குக.
3. கரிகாலன் முடிசூடியதற்குக் காரணமான நிகழ்ச்சியை வரைக.
4. வெண்ணிப்போரைப் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.
5. கரிகாலன் இமயத்தில் புலி பொறித்து வந்த வரலாறு யாது?
6. கரிகாலன் வேளாண்மையை எவ்வாறு பெருக்கினான்?
7. கரிகாலன் நீதியை நிலை நாட்டியது எப்படி?
8. பொருநராற்றுப் படையில் என்ன என்ன கூறப்படுகின்றன?
9. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி வரும் செய்திகள் எவை?
10. ஆதிமந்தியின் காதற் சிறப்பை விளக்குக.