கரிகால் வளவன்/ஏற்றிய விளக்கு
கரிகாலன் உயிரோடிருப்பது சிலருக்குத் தெரிந்தாலும் ஆபத்து என்ற எண்ணம் இப்போது இரும்பிடர்த்தலையாருக்கு வந்துவிட்டது. அவன் சிங்காதனம் ஏறுவது கிடக்கட்டும். உயிரோடு வாழ வேண்டுமே! அவனுக்கு இடையூறு ஒன்றும் வராமல் கண்ணை இமை காப்பது போல் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாதென்று இரும்பிடர்த்தலையார் உறுதி பூண்டார். காவிரிப்பூம்பட்டினத்திற்குப் போவதைக் கூட நிறுத்திக்கொண்டார். அங்குள்ள சான்றோர்கள் மிகவும் வருத்தம் அடைவார்கள் என்பதை அறிந்திருந்தும், கடவுள் விட்ட வழியே யாவும் நடக்கட்டும் என்று கருவூரிலேயே இருந்து விட்டார்.
அது புதிய ஊர்; ஆகையால் அவர்கள் ஊருக்குப் புதிய மனிதர்களாகவே இருந்தனர். சோழ இளவரசன் தம்மிடையே வாழ்கிறானென்பதை அந்நகரில் உள்ள மக்கள் அறிய வகையில்லை. யாரோ அகதிகளாக, பிழைக்க வந்தவர்களாக அவர்கள் அங்கே இருந்தார்கள்.
காவிரிப்பூம் பட்டினத்தில் அமைச்சர்களும் சான்றோர்களும் தழல்மேல் இருப்பவர்களைப் போலத் தவித்தார்கள். சோழ இளவரசன் விடு விடுவென்று வளர்ந்து சிங்காதனத்தில் அமர்ந்துவிட வேண்டுமென்ற வேகம் அவர்களுக்கு இருந்தது. நாட்டில் பலவகை வதந்திகளைப் பகைவர்கள் பரப்பியிருந்தார்கள். அரசன் இன்றி எவ்வளவு காலம் நாட்டைப் பாதுகாக்க முடியும்? மக்களும் பொறுமையின் எல்லையைக் கண்டுவிட்டனர்.
இந்த நிலையில் இரும்பிடர்த்தலையார், சில நாட்களுக்கு ஒரு முறை வருபவர், சில காலமாக வரவே இல்லை. அவரைக் கண்டும், அவர் கூறும் செய்திகளைக் கேட்டும் நம்பிக்கை பெற்று, ஆட்சியைக் கவனித்து வந்த அமைச்சர்களுக்கு இப்போது கவலை உண்டாயிற்று. பகைவர்களின் பலம் வர வர அதிகமாவதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். “என்ன ஆயிற்றோ” என்ற ஐயம் அவர்கள் உள்ளத்தே தோன்றி அரித்து வந்தது. இரும்பிடர்த்தலையாரோ வரவில்லை. ஒரு செய்தியும் தெரியாமல் அலைகடல் துரும்பு போல மனம் சுழன்று தடுமாறினார்கள்.
நாள்தோறும் புதிய அபாயம் சோழ நாட்டுக்கு ஏற்பட்டு வந்தது. சேரனுடைய ஒற்றர்கள் இன்ன ஊருக்கு வந்தார்கள் என்ற செய்தி ஒரு நாள் வரும். பாண்டியன் படைவீரர் மாறு வேடம் பூண்டு கூட்டமாகச் சோழ நாட்டின் தென்பகுதி ஊர்களில் தங்கியிருக்கின்றனர் என்ற செய்தி ஒரு நாள் வரும். சோழ நாட்டில் வாழும் சிலர் கூடி, அரசன் இல்லாத இந்த நிலையை மாற்றவேண்டும் என்று கிளர்ச்சி செய்ய முயல்வதாக ஒரு செய்தி வரும். இவ்வாறு மன அமைதியைக் கலக்கிக் குடலைக் குழப்பும் சமாசாரங்கள் அலை அலையாக வந்து மோதும்போது அமைச்சர்கள் என்ன செய்வார்கள்? ‘இனி நாட்டின் நிலை என்ன ஆகுமோ?’ என்ற அச்சம் புரையோடிக்கொண்டிருந்தது.
ஒவ்வொரு நாளும் அமைச்சர் கூடிப் பேசினர். இரும்பிடர்த்தலையார் இன்று வருவார், நாளை வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அவர் வந்த பாடில்லை. நாட்டின் அமைதி வர வரக் குலைந்து வந்தது. இப்படியே வரையறையின்றி எவ்வளவு காலம் காத்திருப்பது?
திருமாவளவனுக்கு வந்த ஆபத்து அவர்களுக்குத் தெரியாது. பகைவர்களுக்கோ வளவன் பிழைத்துச் சென்ற செய்தி தெரியாது. தம்முடைய சூழ்ச்சியினால் வளவன் இறந்து போனான் என்றே அவர்கள் எண்ணினார்கள். ஆதலின் அவர்கள் மறைமுகமாகச் செய்து வந்த எதிர்ப்பு வேலைகள் பின்னும் வலி பெற்றன. எங்கேயோ வளர்ந்து வந்த இளவரசன் இப்போது இறந்துவிட்டான் என்ற வதந்தியைப் பரப்பினர். சோழநாட்டில் அது பரவியது. அமைச்சர்கள் காதிலும் விழுந்தது. இதற்கு முன் வந்த வதந்திகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்பொழுதெல்லாம் உண்மையை உணர்த்தித் தைரியமூட்ட இரும்பிடர்த்தலையார் இருந்தார். இப்போது அவர் இன்ன இடத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆகவே, இளவரசன் இறந்து போனான் என்ற வதந்தி அமைச்சர்களின் கருத்துக்குள் நுழைந்தது. அடுத்தபடி, ‘உண்மையாகவே இருக்குமோ?’ என்ற நினைவும் புகுந்தது.
‘ஆம், உண்மையாகவே இருக்கலாம். இளவரசன் இறந்த செய்தியை நமக்கு அறிவிப்பதால் பயன் இல்லை என்று இரும்பிடர்த்தலையார் இருந்து விட்டார் போலும் அன்றி அந்தத் துயரம் தாங்காமல் அவரும் உயிர் விட்டாரோ! இவ்வளவு காலம் எத்தனையோ இரகசியங்களைப் பாதுகாத்து வந்தாரே குழந்தை எப்படி இறந்தது? நோயினாலா? பகைவர்களின் சூழ்ச்சியினாலா? - அவர்கள் யோசனை தடைப்பட்டது. மேலே மனம் ஓடவில்லை.
ஒருவருக்கு ஒருவர் தம் தம் கருத்தைப் பரிமாறிக்கொண்டனர்.
“சோழ நாட்டுக்கு உரிய அரசன் ஒருவனைத் தெரிந்தெடுத்து அவன் கையில் நாட்டை ஒப்பிப்பதையன்றி வேறு வழி இல்லை.” இப்படி ஒருவர் சொன்னார்.
‘தெரிந்தெடுப்பதா? யாரை யென்று தெரிந்தெடுப்பது? என்ன தகுதியைக் கொண்டு தெரிந்தெடுப்பது?’ என்று கேட்டார் ஒருவர்.
“சோழ குலத்தோடு தொடர்பு உடையவர்களில் தகுதி உடையவரைத் தெரிந்தெடுப்பது.”
“சோழகுலத் தொடர்புடையவர்களென்று இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறவர் ஒருவரா, இருவரா? அத்தனை பேரும் நாட்டின் நன்மையை நினைப்பவர்களா? அவர்களில் யாரைப் பொறுக்குவது?”
புதிய அரசனைத் தெரிந்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் பல என்பதை அமைச்சர்கள் உணர்ந்தார்கள். “தெய்வமே வந்து ஒருவனைச் சொன்னாலொழிய, அமைதியாக ஒரு மன்னனை நாம் பெற முடியாது போல் இருக்கிறதே!” என்று ஒருவர் பெருமூச்சு விட்டார்.
தெய்வம் என்ற பேச்சு வந்தவுடன் எல்லாருக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று. தெய்வநம்பிக்கையில் சிறிதும் குறையாதவர்கள் அல்லவா? ஒருவர் சொன்னார்: “இனிமேல் தெய்வத்தின் திருவருளுக்கு இதை விட்டுவிடவேண்டியதுதான்.”
“என்ன செய்வது?” என்று இளைஞராகிய அமைச்சர் ஒருவர் கேட்டார்.
“பழைய காலத்தில் ஒரு வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன். பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து இறைவன் திருவருளே எண்ணி விட்டுவிட்டால் அது யாரிடம் சென்று மாலையைப் போடுகிறதோ அவனேயே அரசகை ஏற்றுக்கொள்ளுவார்கள்.”
யாவரும் மீண்டும் ஆலோசனையில் ஆழ்ந்தனர். முடிவாக அப்படியே செய்யலாம் என்று தீர்மானித்தனர்.
★
அரசன் இல்லாத அரண்மனையில் பட்டத்து யானைக்கு என்ன வேலை? அந்த யானையை வீணே கட்டி வைத்துக்கொள்வதைவிட நல்ல இடத்தில் இருக்கும்படி செய்யலா மென்ற எண்ணத்தால், காவிரிப்பூம் பட்டினத்தை அடுத்த கழுமலத்தில் விட்டுவைத்தனர். இன்று சீகாழி என்று வழங்கும் ஊரே அன்று கழுமலம் என்ற பெயரோடு விளங்கியது. அங்குள்ள திருக்கோயிலில் சோழ அரசனது பட்டத்து யானை இருந்து வந்தது. அரண்மனையில் வளர்ந்த யானை பிறரிடம் வாழ்வதை விடக் கோயிலில் வாழ்வது பொருத்தந்தானே?
பட்டத்து யானையைக் கொண்டு அரசனைத் தெரிந்தெடுக்க எண்ணிய அமைச்சரும் பிறரும் தம் கருத்தைச் சோழ நாடு அறியும்படி வெளியிட்டனர். ‘இறைவன் திருவருளால் நமக்குத் தக்க மன்னன் கிடைப்பான்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டாயிற்று.
ஒரு நல்ல நாளில் கழுமலத்தில் இருந்த களிற்றை அலங்கரித்துக் கடவுள் திருவருளை எண்ணிக் கட்டவிழ்த்து விட்டனர். காலாற நடை பழகாமல் இருந்த களிறு வேகமாகப் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் சென்றனர். களிறு மேற்குத் திசையை நோக்கிச் சென்றது. திருவருட் சக்தியே அதனை உந்திக்கொண்டு போவது போல இருந்தது. அங்கங்கே உள்ள மக்கள் யானையைக் கண்டு வழிபட்டனர். இறைவன் திருவருளை ஏந்தும் வாகனமாக அதனை எண்ணித் துதித்தனர். ஒவ்வோர் ஊரையும் கடந்து சென்றது யானை. சோழ நாடு முழுவதும், “இறைவன் திருவருள் என்ன செய்யப் போகிறதோ!” என்ற ஆர்வப் பேச்சு எழுந்தது. “எந்த ஊரில், எந்தக் குடிசையில் நம்மை ஆளப் போகும் மன்னன் பிறந்திருக்கிறானோ!” என்று பேசிக்கொண்டனர் மக்கள். யானை மேற்குத்திசையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
“ஒருகால் சேர நாட்டுக்கே போய்ச் சேர மன்னனையே வரித்து விடுமோ!” என்றனர் சிலர். யானை அவ்வளவு வேகமாகச் சோழ நாட்டின் மேற்கெல்லையை அணுகிக்கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் யானை புறப்பட்ட செய்தியை அறிந்து, முடிவை அறியும் ஆவலோடு இருந்தனர் மக்கள். சேர நாட்டாரும் பாண்டிய நாட்டாருங்கூடச் சோழ நாட்டின் மன்னராக யார் வரப் போகிறாரென்று அறியும் ஆர்வமுடையவராக இருந்தனர்.
மேற்கே கருவூருக்கு வந்துவிட்டது யானை. அவ்வூரில் உள்ள மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கொங்கு நாட்டைச் சார்ந்த கருவூர் அப்போது சேர நாட்டின் பகுதியாக இருந்தது. சோழ நாட்டுக்குச் சேர நாட்டில் உள்ளவன் மன்னனாகப் போகிறானோ? யானை சேர நாட்டின் எல்லைக்குள் வந்துவிட்டதே!
யானை கருவூரைத் தாண்டிச் செல்லவில்லை, அந்த ஊருக்குள்ளே புகுந்தது. என்ன ஆச்சரியம்! மறைவாகக் கரிகாலன் வாழ்ந்திருந்த சிறு குடிலின் முன்வந்து நின்றது. ஊரே கூடிவிட்டது. கரிகாலன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். களிறு உடனே அவன் கழுத்தில் மாலையை இட்டது; தன் கையால் எடுத்து மத்தகத்தின்மேல் வைத்துக்கொண்டது. அவ்வளவுதான்; வெகு வேகமாகப் புறப்பட்டு விட்டது.
இரும்பிடர்த்தலையார் இவற்றை யெல்லாம் கண்டார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. முதலில் பயப்பட்டார். பிறகு தெளிந்தார். ‘அபாயம் நம்மைத் தேடி வந்துவிட்டது’ என்று முதலில் திடுக்கிட்டார். ‘திருவருள் கை கொடுக்க வந்தது’ என்பதைப் பின்பு தெரிந்து கொண்டார்.
திருவருள் எதைச் செய்யவேண்டுமோ அதையே செய்துவிட்டது. பட்டத்து யானை யாரைத் தன் மேல் ஏற்றிக்கொள்ள வேண்டுமோ அவனையே ஏற்றிக்கொண்டு சென்றது. கரிகாலன் காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான். யார் கண்ணிலும் படாமல், பகைவருடைய வஞ்சகச் செயலுக்குத் தப்பி உயிர் பிழைத்து வாழ்ந்திருந்த அவனைத் திருவருள் உலகறிய, ‘இவனே சோழ குலத் தோன்றல்’ என்று அறிவித்துவிட்டது. தெய்வத்தின் அருள் துணை அவனுக்கு இருந்தது. அதைக்காட்டிலும் வேறு பலம் எதற்கு? “பரம்பரையாகச் சோழ மன்னர் செய்த தவம் இப்படிப் பலித்தது!” என்று சான்றோர்கள் மனமுருகிச் சொன்னார்கள். “இதோ உங்கள் மன்னன் என்று தெய்வமே காட்டி விட்டது மன்னனை. இந்தப் பாக்கியம் வேறு எந்த நாட்டுக்கு உண்டு?” என்று மக்கள் பெருமிதத்தோடு மகிழ்ச்சி அடைந்தனர். பகைவர் தம் செயலடங்கி ஊக்கம் இழந்து சோர்வடைந்தனர்.
கரிகாலன் தான் சோழ இளவரசன் என்பதைச் சொல்ல இரும்பிடர்த்தலையாரும் இனி அவருக்கு என்ன பயம்? சோழ நாடு களி வெள்ளத்தில் மூழ்கியது. அமைச்சர்கள் சொர்க்க இன்பத்தில் ஆழ்ந்தனர். இரும்பிடர்த்தலையார் இறைவனையே கண்டது போன்ற நிலையில் இருந்தார்.
கரிகாலன், சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழ இளவரசன்; இன்னும் தக்க பருவம் வரப்பெறாத இளம் பருவத்தான்; ஆனாலும் நாட்டின் மன்னனாக மணிமுடி தரித்துச் சிங்காதனம் ஏறினான். மங்கியிருந்த சோழ நாடு விளக்கம் பெற்றது. மீண்டும் காவிரிப்பூம் பட்டினத்து அரண்மனையில் விளக்கை ஏற்றிவிட்டது தெய்வம்; அது ஒளிவிடத் தொடங்கியது.