கரிகால் வளவன்/வளவன் பிறந்தான்

1. வளவன் பிறந்தான்

ரசன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான் என்ற செய்தி நாட்டு மக்களின் உள்ளத்தை என்னவோ செய்தது. வழி வழி வந்த சோழ நாட்டின் மணி முடி பெரிய வீரம் மிக்க மன்னர்களின் தலையை அணி செய்திருக்கிறது. சோழ சக்கரவர்த்திகளின் பெருமை காவியங் கண்டது. இளஞ்சேட்சென்னியின் வீரம் எவ்வளவு சிறந்தது! அவனுடைய கொடைத் திறத்தை உலகுள்ளளவும் எடுத்துச் சொல்வதற்கு நல்லிசைச் சான்றோர்களாகிய புலவர்களின் பாடல்கள் இருக்கின்றனவே சோழ நாட்டு மக்களின் உள்ளத்தில் அவன் இருந்தான்.

முடியுடை மன்னன் என்றாலும் அவன் குடி மக்களிடத்தில் எவ்வளவு எளிதில் பழகினான்! தங்களுக்குள்ள குறையை எந்த நேரத்திலும் அவனிடம் சென்று எடுத்து உரைக்கலாம். அவை யாவும் பெரிதல்ல. அவன் மணம் செய்து கொண்டானே, அதுதான் குடிமக்களின் பேரன்பை அவனுடைய காணியாக்கிக் கொண்டது. பாண்டியன் மகளும், சேர அரசன் புதல்வியும், வடநாட்டு மன்னர்களின் மடந்தையரும் இளஞ்சேட்சென்னிக்கு மாலையிடக் காத்துக் கிடந்தார்கள். ஆனால் அவன் காதல், அரண்மனையில் வளரும் பைங்கிளிகளை நாடவில்லை. சோழ நாடு சோற்றால் வளம் பெறுவது. அதற்குரிய நெல்லை விளைவிப்போரே சோழ நாட்டின் பெருமைக்குக் காரணமாக உள்ளவர்கள். அவர்களுடைய குலத்திலே பெண் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். எந்த அரசன் வாழ்ந்தாலும் எந்த அரசன் வீழ்ந்தாலும் காவிரியின் நீர் வளத்தால் நெல் விளைவித்து நாட்டைக் காக்கும் வேளாளர் பெருமை நிலையானது என்பதை உணர்ந்தவன் அவன். ஆகவே, பலரோடும் ஆராய்ந்து அழுந்துாரில் வாழ்ந்த பெரிய வேளாண் செல்வர் ஒருவருடைய அழகுத் திருமகளை மணம் செய்து கொண்டான். இளஞ்சேட்சென்னிக்கு வாழ்க்கைத் துணைவியாகிய மகளைப் பெற்றுத் தந்தவர் பெயர் நமக்குத் தெரியாது. அழுந்துார் வேள் என்று கௌரவமாக யாவரும் அவரை வழங்குவர்.

வீரமும் கொடையும் இன்ப வாழ்வும் நிரம்பிய சேட்சென்னியிடம் அரசுக்குரிய எல்லா உறுப்புக்களும் இருந்தன. பல பல தேர்கள் இருந்தன. அந்தப் புகழ் அவனுடைய பெயரோடு ஒட்டிக் கொண்டது. ‘உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி’ என்று நீட்டி முழக்கி அவன் பெயரைப் பாட்டில் வைத்துப் புலவர்கள் பாடுவாராயினர்.

அத்தகைய இளஞ்சேட்சென்னி நோய்வாய்ப்பட்டிருக்கிறான். குடி மக்களின் சிறப்பைத் தன் திருமணத்தால் உலகுக்குக் காட்டிய அவனிடம் அவர்களுக்கு இருந்த அன்புக்கு அளவுகடற முடியுமா? கடவுளே! எங்கள் மன்னர் பிரான் நோய் நீங்கிப் பழையபடியே வீரம் விளைக்கும் வலிமை உடையவனாக வேண்டும்” என்று வேண்டினர். ‘மன்னனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் என் செய்வது’ என்று நினைக்கும்போது அவர்கள் வயிறு பகீரென்றது. அவர்களுடைய துயரத்தை மிகுதியாக்குவதற்கு ஒரு தனிக் காரணம் உண்டு. இளஞ்சேட் சென்னிக்குப் பின் சோழ நாட்டை ஆள அவனுக்குப் பிள்ளை இல்லை. சோழர் குலம் இளஞ்சேட் சென்னியோடு அற்று விடுவதா? சோழ மரபில் உதித்த வேறு சிலர் அங்கங்கே இருந்தார்கள். சில வேளாளச் செல்வர்களெல்லாம் தாங்கள் சோழ மரபோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாயாதிகளெல்லாம் சோழ சிங்காதனத்தைத் தமதாக்கிக் கொள்ள முந்துவார்கள். அப்போது நாட்டில் அமைதி நிலவுமா? பலர் கூடிக் கலகம் விளைவிப்பார்கள். வாழையடி வாழையாக வளர்ந்து வந்த மன்னர் வரிசை இப்படியா குலைய வேண்டும்?—நாட்டில் உள்ள பெருமக்கள் இவ்வாறு எண்ணி எண்ணி மறுகினர்.

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்டான் இளஞ்சேட்சென்னி. பட்டினமென்றால் அது சாமானியமான பட்டினமா? கடற்கரையை அடுத்த மருவூர்ப்பாக்கம் முழுவதும் ஓயாத ஒழியாத கூட்டம்; ஆரவாரம்; வியாபாரப் பண்டங்கள் பெருமலை போலக் கிடக்கும். உலகத்தில் உள்ள பல நாடுகளிலிருந்து வணிகர்கள் அங்கே வருவார்கள். தங்கள் பண்டங்களை விற்கவும் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிச் செல்லவும் அவர்கள் வருவார்கள். மருவூர்ப்பாக்கம் திருமகள் நடமாடும் இடம்; வர்த்தகம் சிறக்கும் பகுதி. அதை அடுத்துள்ளது பட்டினப் பாக்கம். அதுதான் நகரத்தின் உட்பகுதி, அரண்மனையும், நகர மக்களும், செல்வர்களும் உள்ள இடம். சோழ நாட்டின் செல்வத்தைத் தன் தோற்றத்தால் புலப்படுத்திக் கொண்டு விளங்கியது அப்பகுதி.

இத்தகைய நகரம் இப்போது பொலிவற்று நிற்கிறது. மக்களுடைய முகத்தில் மலர்ச்சியைக் காணவில்லை. மன்னன் நோய்வாய்ப்பட்டிருப்பதுதான் காரணம். ஒவ்வொரு கணமும் மக்களுடைய கவலை மிகுதியாகிக் கொண்டே வந்தது. மன்னன் பிழைப்பான் என்ற நம்பிக்கை தளர்ந்து கொண்டு வந்ததே அதற்குக் காரணம்.

“இனிச் சோழநாடு என்ன கதியாவது?” என்ற கவலை சான்றோர்களின் உள்ளத்தில் சொல்லவொண்ணாத வேதனையை உண்டாக்கியது. என்ன என்னவோ யோசனை செய்தார்கள். மன்னனுடன் இருந்து அரசியலைக் கவனித்து வந்த அமைச்சர்களும், அவனுக்கு உறுதுணையாக இருந்த சான்றோர்களும், அறங்கூறவையத்தின் உறுப்பினர்களாகிய பெருமக்களும் கூடி ஆலோசித்தனர். மன்னன் இனிப் பிழைப்பது அரிது என்ற முடிவின்மேல் அவர்கள் ஆலோசனை படர்ந்தது. எவ்வளவு நேரம் கலந்து பேசியும் முடிவுக்கு வர இயலவில்லை. சோழ சிங்காதனத்துக்கு உரிமை கொண்டாடுவோர் பலர் இருந்தனர். அவர்களில் யார் என்ன செய்வார்களோ!

இத்தனை துயரச்சூழல்களுக்கிடையே ஒரே ஒரு சுடர்ப்பொறி அவர்களுடைய உள்ளத்துக்கு ஆறுதலைத் தந்தது. அரசியினுடைய தோழி ஒருத்தி வெளியிட்ட செய்தி ஒன்று, அவர்களுடைய கவலைக்கு மாற்றாக இருந்தது. அதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று தெரியவே, ‘இறைவன் திருவருள்தான் இப்படிக் கூட்டிவைத்திருக்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் உவகை மூண்டனர். மன்னனுக்கு மகன் இல்லையே என்ற பெருந் துயரத்தைப் போக்க அந்தச் செய்தி உதவியது. ஆம்! அரசி கருவுற்றிருந்தாள்.

இதனைக் கேட்டபோது சான்றேர்களுக்குத் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்பட்டன. ‘இத்தனை சிறப்போடு வாழ்ந்த மன்னன் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்க்க முடியாது போல் இருக்கிறதே! என்று துயருற்றார்கள். மன்னனுக்கு அந்தப் பாக்கியம் இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தையைச் சோழ நாட்டு மக்கள் மன்னனாகக் கொண்டு இன்புறுவார்கள்!’ என்ற எண்ணம் அவர்களுக்கு ஆறுதலையும் இன்பத்தையும் தந்தது.

இந்தப் புதுச் செய்தியை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். குழந்தை பிறந்து வளர்ந்து தக்க பருவம் வரும் வரையில் பாதுகாப்பது பெரிய காரியம் அல்லவா? இந்தச் செய்தி வெளிப்பட்டால் பகைவர்கள் சோழ குலத்தின் தொடர்பை நீடிக்க வந்த குழந்தையைக் கொல்லச் சதி செய்வார்கள். மற்றொரு நினைவும் அவர்களுடைய மகிழ்ச்சிக்குப் பெரிய தடையாக இருந்தது. அரசி கருவுற்றிருப்பது நல்ல செய்திதான். ஆனால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டுமே! இல்லாவிட்டால் சோழ நாட்டுக்கு என்ன பயன்? இவ்வளவையும் யோசித்து அரசி கருவுற்றிருக்கும் செய்தியைத் தக்க சிலரிடம் மாத்திரம் சொல்வதென்று தீர்மானித்தார்கள்.

ளஞ்சேட் சென்னி இறந்துவிட்டான். நாட்டின் அரசாட்சியை அமைச்சர்கள் மேற்கொண்டார்கள். அரசி கருவுற்ற செய்தி எப்படியோ சோழ நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது. முதலில் அரசியை அரண்மனையிலே வைத்திருக்கலாம் என்று எண்ணியிருந்தனர். ஆனால் எந்தச் சமயத்திலும் பகைவர்கள் நகரத்தை முற்றுகையிடக் கூடும். அரசி கருவுற்றிருக்கும் செய்தி எப்படியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் அரசிக்குத் தீங்கு இழைப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இந்த அபாயத்தினின்றும் அரசியைப் பாதுகாக்க வேண்டும். வந்தபின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இன்னும் சில மாதங்கள் தக்க பாதுகாப்பில் அரசி இருந்து, இறைவன் அருளால் குழந்தை பிறந்துவிட்டால், பிறகு பகைவர்களின் கொட்டத்தை ஒருவாறு அடக்கலாம். குடி மக்களுக்கும் தைரியம் உண்டாகும்.

யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பான ஓரிடத்திற்கு அரசியைக் கொண்டு போய்த் தக்க வசதிகளுடன் வைப்பதென்று தீர்மானித்தார்கள். நல்ல வேளையாக இந்தக் காரியத்தில் அவர்களுக்குப் பெருந்துணையாக ஒருவர் வாய்த்திருந்தார். இரும்பிடர்த் தலையார் என்பவரே அவர். அவர் பெரும் புலவர்; மதுரைச் சங்கத்துப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். இது மட்டும் அன்று; அரசியின் சகோதரர் அவர். அவருடைய பாதுகாப்பில் அரசியை விடுவதில் யாருக்குத்தான் தடை இருக்கும்?

பல காலம் வள வாழ்வில் தான் வாழ்ந்து வந்த அரண்மனையை விட்டுச் சென்றாள் அரசி. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பிரிந்த காட்சி சான்றோர்களின் உள்ளத்தை உருக்கியது. “வருத்தம் அடையாதீர்கள். நீங்கள் தாங்கியிருக்கும் மாணிக்கம் தக்க காவலில் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தால்தான் உங்களே அனுப்புகிறோம். திருடர்கள் வந்து சாரும் இடத்தில் வைர மணிப் பெட்டகத்தை வைக்கலாமா? உங்களுக்குத் திருமகன் பிறந்துவிட்டால் மீண்டும் இந்த அரண்மனை வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும்” என்று அரசிக்கு ஆறுதல் கூறினார்கள். அவள் உள்ளத்துக்குள் ஏதோ நம்பிக்கை இருந்தது. தனக்கு மகன்தான் பிறப்பான் என்ற உறுதி இருந்தது. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தால்—? அதை நினைக்கும்போதே அவள் உடம்பு நடுங்கியது. அவள் வாழ்ந்த வாழ்வென்ன! அரசன் உயிரோடிருந்தால் அவள் இருக்கும் நிலை என்ன! எல்லாம் கனவாகத் தோன்றின.

உலகத்தின் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத ஓரிடத்திலே அரசி தன்னிடம் புதைந்திருந்த மாணிக்கத்தை அடைகாத்து வந்தாள். இரும்பிடர்த் தலையார் ஒவ்வொரு கணத்தையும் முள்மேல் இருப்பவர்போலக் கழித்தார். ‘குழந்தை கருவில் வந்த போதே தந்தையைக் கொன்றுவிட்டதே! இது பிறந்து வளர்ந்து நாட்டுக்கு நன்மை உண்டாக்க வேண்டுமே!’ என்று அவர் கவலைப்பட்டார். அவருக்குச் சோதிட நூலில் நல்ல பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சியினாலும், அநுபவத்தினாலும் தம் தங்கைக்கு மகன் பிறப்பான் என்றே அவர் நம்பினார். ஆனால் அந்த மகன் நாளும் கோளும் நல்ல நிலையில் இருக்கும்போது பிறந்தால்தானே அவருடைய நம்பிக்கை நிறைவேறும்? “கடவுளே! நல்ல வேளையில் குழந்தை பிறக்கவேண்டும்” என்று வேண்டினார்.

அரசிக்குப் பிரசவ காலம் நெருங்கியது. இரும்பிடர்த்தலையார் ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். கெட்ட வேளையில் குழந்தை பிறக்கக் கூடாதே என்ற பயம் அவருக்கு. எல்லா வேளையும் நல்லனவாகவா இருக்கும்? நல்லதும் பொல்லாததும் கலந்து கலந்து தானே வரும்?

அரசிக்குப் பிரசவ வேதனை உண்டாயிற்று. இரும்பிடர்த்தலையார் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டார். கிரகங்கள் எந்த எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்த்தார். ‘இன்னும் மூன்று நாழிகை வரையில் நல்ல காலம் இல்லை. அதற்குள் குழந்தை பிறந்தால் கதிமோட்சமே இல்லை!’ என்று தெரிந்தது. மூன்று நாழிகை கழித்துப் பிறந்தால் குழந்தை இராச யோகத்தோடு இருப்பான். பெரும் புகழை உடையவகை விளங்குவான். இளமையில் பல இன்னல்கள் வந்தாலும் பிறகு யாராலும் வெல்ல முடியாத நிலை பெறுவான், பல நாடுகள் அவனுக்கு உரிமையாகும்’—நல்ல பலன்களின் வரிசை நீண்டது. மூன்று நாழிகைக்குப் பின்பு பிறந்தால்தான் இந்த யோகம். அதற்கு முன்பு பிறந்து விட்டால் என்ன செய்வது? அவர் மனம் அடித்துக் கொண்டது. பஞ்சாங்கத்தைப் பார்ப்பார். உள்ளே போவார். பணிப் பெண்ணிடம், “எப்படி இருக்கிறது?” என்று கேட்பார்.

“மிகவும் வேதனைப் படுகிறார்கள்” என்பாள் அவள்.

“பிரசவம் ஆகிவிடுமா?” என்று கேட்பார்.

“அநேகமாக ஆகிவிடும் போல்தான் இருக்கிறது.”

“இன்னும் சில நாழிகை தாங்காதோ?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்பார்.

“இயற்கையை மாற்ற நாம் யார்?” என்பாள் பணிப் பெண்.

“சில நாழிகை பிரசவத்தைத் தாமதமாக்க வழி இல்லையா?” என்று கேட்பார்.

அவள் சிரிப்பாள். மிகச் சிறந்த மருத்துவப் பெண்ணை அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அப்போது அவருக்கு அந்த ஊரில் இருந்த பெரிய வைத்தியருடைய நினைவு வந்தது. ஆளை அனுப்பி அழைத்து வரச் செய்யலாம் என்றுகூட அவருக்குத் தோன்றவில்லை. திடீரென்று எழுந்து ஓடினார். சில கணத்தில் அவரை அழைத்து வந்துவிட்டார். அதற்குள் ஒரு நாழிகை கழிந்தது.

“மருத்துவ நூலில் எத்தனையோ அற்புதங்கள் உண்டென்று கேட்டிருக்கிறேன். நீங்கள் ஓர் அற்புதத்தைச் செய்யவேண்டும். என் தங்கைக்குப் பிரசவ வலி எடுத்துவிட்டது. என் உள்ளத்திலும் வேதனை உண்டாகியிருக்கிறது. குழந்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துப் பிறக்க வேண்டும். இப்போது பிறக்கக் கூடாது. இப்போது பிறப்பதை விடப் பிறக்காமலே இருக்கலாம். இதற்கு என்ன செய்வது?”

இரும்பிடர்த்தலையார் படபடவென்று பேசினார். ஆண்டில் முதிர்ந்த வைத்தியர் அவர் கூறியவற்றைக் காதிலே வாங்கிக்கொண்டார். யோசித்தார். தலையை இப்படியும் அப்படியும் அசைத்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று இரும்பிடர்த் தலையார் ஆவலோடு அவரையே கவனித்துக் கொண்டு நின்றார். கிழவர் பேச ஆரம்பித்தார்.

“நீங்கள் சொல்வது சாத்தியமான காரியந்தான்.”

“அப்படியா! எப்படி, எப்படி?”

“பொறுங்கள். ஆனால் தாயின் உயிருக்குத் தீங்கு நேர்ந்தாலும் நேரலாம். பிரசவத்தைச் சில நாழிகைகள் தாமதப்படுத்த வழி உண்டு. அதனால் உண்டாகும் வேதனை தாய்க்கு அதிகம். முதலில் அதை அவள் தாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வேதனையால், பிரசவமானவுடனே தாயின் உயிருக்கு ஒருகால் ஆபத்து நேரலாம்.”

இரும்பிடர்த்தலையார் குறுக்கிட்டார்.

“குழந்தை உயிருடன் பிறக்கும் அல்லவா?”

“குழந்தை பூரண சுகத்துடன் பிறக்கும். தாயின் நிலையைப் பற்றித்தான் சொல்கிறேன்” என்று நிதானமாகப் பேசினார் வைத்தியர்.

"எப்படி ஆனாலும் சரி; குழந்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துப் பிறக்கவேண்டும்” என்று கெஞ்சும் குரலில் கூறினர் புலவர்.

“சரி, பணிப்பெண்ணை வரச் சொல்லுங்கள். அவளிடம் வேண்டியதைச் சொல்கிறேன்.”

பணிப் பெண் வந்தாள். கிழவர் அவளிடம் சில முறைகளைச் சொன்னார். “அரசியைச் சாதாரண நிலையிலே படுக்க வைத்திருக்கக் கூடாது” என்றார். கால் மிகவும் மேலே இருக்கும்படி கட்டி விடவேண்டும் என்றார். பாவம்! அவ்வளவுக்கும் உட்பட்டாள் அரசி. அவளைத் தலைகீழாகத் தொங்க விடுவது ஒன்றுதான் குறை. அவள் மார்பு அடைத்தது. உடம்பு முழுவதும் என்னவோ செய்தது. உயிரே போய்விடும்போல் இருந்தது. ஆனாலும் அவள் அதற்கு உட்பட்டாள். தன் மகன் அரசாள வேண்டும் என்ற ஆவலினால் அத்தனை செயலுக்கும் உட்பட்டாள்.

நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இரும்பிடர்த்தலையாருக்கோ மன வேதனை. அவர் புழுவைப் போலத் துடித்தார். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல் இருந்தது. அவருடைய தங்கையைப்பற்றி என்ன சொல்வது? அவளுடைய உள்ளம், உடல், உயிர் இந்த மூன்றும் துடித்தன. அவள் பட்ட துன்பத்தை எந்தத் தாய்தான் படுவாள்?

அப்பா இரண்டு நாழிகைக் காலம் ஆயிற்று. அரசி விடுதலை பெற்றாள். பழைய படுக்கையில் படுத்தாள். இரும்பிடர்த்தலையார் ஒரு காட்டாற்றை நீந்தினார். ஆனால் அடுத்த ஆறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும்; தாயும் சுகமாக இருக்க வேண்டுமே! வேண்டாத தெய்வங்களை யெல்லாம் வேண்டினார்.

“வீல்” என்ற உயிரை ஊடுருவும் தாயின் வேதனைத் தொனி; அதனை அடுத்து, “குவா” என்ற குழந்தையின் குரல் கேட்டது. அடுத்தபடி உள்ளிருந்து பணிப்பெண் ஓடிவந்தாள்; “ஆண் குழந்தை!” என்று கத்திக்கொண்டே வந்தாள். இங்கே இரும்பிடர்த்தலையார் மூர்ச்சை போட்டுக் கிடந்தார். குழந்தையின் அழுகை ஒலி அவருடைய உணர்ச்சியைத் தூண்டி அப்படிச் செய்து விட்டது. உள்ளே தாயும் மூர்ச்சையுற்றாள். அங்கே ஒருத்தி தாயைத் தெளிவித்தாள். இங்கே ஒருத்தி தமையனாரைத் தெளிவித்தாள்.

தெளிந்து எழுந்தவர் காதில், “ஆண் குழந்தை” என்ற வார்த்தைகள் விழுந்தன. அவர் கைகள் அவரை அறியாமலே தலைமேல் ஏறின.

அவர் ஆசையின்படியே ஆண் குழந்தை, இளஞ்சேட்சென்னியின் குலத்தைக் காக்க வந்த கான்முளை, பிறந்து விட்டது. தாயும் பிழைத்தாள்.

இப்படிப் பிறந்தவன்தான் திருமா வளவன்; கரிகாலன் என்று சரித்திரம் புகழும் சோழ சக்கரவர்த்தி.