கருவூரார் பூசா விதி

சித்தர் பாடல்கள்

நூல் வரிசை எண் 24

கருவூரார் பூசா விதி / பூஜா விதி

நூல் பக்க எண் 329

காப்பு

தொகு

எண்சீர் விருத்தம்

தெளிவு தனில் தெளிவு தரும் அருளும் காணும்

செணத்திலே சிவ மயமும் சேரத் தோணும்

வழி அதனில் நல்ல வழி ஞானம் கூடும்

மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்

ஒளிவு தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார்

உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும்

வெளி அதனில் வெளியாகி நாதத்து உள்ளே

விளங்கி நின்ற வாலைப் பெண்ணாதி காப்பே

நூல்

1

ஆதி அந்தம் வாலையவள் இருந்த வீடே

ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு

சோதியந்த நடுவீடு பீடமாகிச்

சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப் பெண்ணாத்தாள்

வீதியந்த ஆறு தெரு அமர்ந்த வீதி

விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்

பாதி மதி சூடியே இருந்த சாமி

பத்து வயதாகும் இந்த வாமி தானே

2

வாமியிவள் மர்மம் வைத்துப் பூசை பண்ண

மதியுனக்கு வேணுமடா அதிகமாக

காமிவெகு சாமி சிவ காமி ரூபி

காணரிது சிறுபிள்ளை கன்னி கன்னி

ஆம் இவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்

அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும்

நாம் இவளைப் பூசை பண்ண நினைத்த வாறு

நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே

3

காணப்பா இவளுடைய கற்பு மெத்த

கண்டவர்க்குப் பெண்ணரசு நானே என்பாள்

ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டி வைப்பாள்

உள்வீட்டுக்கு உள்ளிருந்து மேலே ஏறப்

பூணப்பா மனமுறைந்து வா வா என்பாள்

புத்திரனே என்மகனே என்று சொல்லி

வேணப்பா வேணது எல்லாம் தருவேன் என்பாள்

வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும் தானே

4

தானென்ற வாலையிவள் ரூபம் காணச்

சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானும் உண்டோ

பானென்ற வாமத்துக்கு உள்ளே யப்பா

பராபரையாள் பலகோடி விதமும் ஆடித்

தேனென்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம்

சிறுபிள்ளை பத்து வயதுள்ள தேவி

ஊனென்ற உடலுக்குள் நடுவும் ஆகி

உத்தமியாள் வீற்றிருந்த உண்மை தானே

5

உண்மையிவள் நாணமில்லாது இருந்த வீடே

ஊருக்குள் நடுவீடே உற்றுப் பாரு

செம்மையாய்க் கண்டவர்கள் உண்டோ அப்பா

செகசால வித்தை இவளாடும் வித்தை

உண்மையடா பஞ்சவண்ணம் ஆகிநின்ற

உலகதனில் அலைந்தவர்கள் கோடா கோடி

நின்மலமாய்க் கண்டவர்கள் சொல்லார் அப்பா

நேசமுடன் எனக்குரைத்த நிசம் கண்டேனே

6

கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு

கால்மேலும் தலைகீழும் நடுவுமாகி

அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற

ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று

தொண்டு பண்ணும் அவர்களிலே நாலு பேர்கள்

சுகம் பெறலாம் என்று சொன்ன வாசல் நாலு

கொண்டவர்கள் கண்டு வந்த தொண்ணூற்று ஆறு

கொள்கையெனக் காத்து இருந்த குறிப்பைப் பாரே

7

பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய்ப்

பலநூலைப் படித்துப் படுகுழியில் வீழ்வார்

ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே

ஏழைமதி போகாதே என் தாய் பாதம்

போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய்ப்

புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம்

பூத்தமலர் எடுத்து திருப் பாதம் போற்றப்

பொறி ஐந்து கருவி கரணாதி போமே

8

போச்சுதடா மனமாய்கை வீறு போச்சு

பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு

ஏச்சுதடா வென்று மனம் இறக்கல் ஆச்சு

எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு

வாய்ச்சுதடா மனமடங்க வங்கென்றோர் சொல்

வாய்பேசா மவுனத்தை அதிலே சேர்க்கக்

காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை யூன்று

கனியாகும் அக்கனியைக் கண்டு கொள்ளே

9

கொள்ளுதற்கு இங்கு இன்னமொரு குறிப்பைக் கேளு

கோடியிடி மின் முழங்கும் கண்ணை மூடு

விள்ளுதற்கு மனம் அடங்காப் பூதம் காணும்

விள்ளாதே யுள்ளபடி சிங்கென் றோர்சொல்

விள்ள விமே யுபாயம் அதால் நடுவே நில்லு

வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு

கள்ளரைப் போல் மயங்காதே மவுனத் தூன்று

கண்ணிணையும் திறக்காதே கருதிப் பாரே

10

பாரேது புனலேது அனலும் ஏது

பாங்கான காலேது வெளியுமாகும்

நாரேது பூவேது வாசமேது

நல்ல புட்பம் தானேது பூசை யேது

ஊரேது பேரேது சினமும் ஏது

ஓகோகோ அதிசயந்தான் என்ன சொல்வேன்

ஆறேது குளமேது கோயில் ஏது

ஆதிவத்தை அறிவதனால் அறியலாமே

11

ஆமெனவும் ஊமெனவும் இரண்டும் கூட்டி

அப்பனே ஓமென்ற மூன்றும் ஒன்றாய்

நாமெனவும் தாமெனவும் ஒன்றே யாகும்

நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான்

வாமம் வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம்

வந்தவர்க்குச் சத்திசிறு பிள்ளை வாலை

சோமநதி அமுதம் உண்ண வாவா என்பாள்

சுகம் உனக்கு பரமசுகம் அருள் செய்வாளே

12

செய்குவாய் பூசையது செய்யும் போது

செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்

உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம்

ஊமை யென்ற நடுத்தீயை அதிகம் கொண்டால்

பைகுவாய் அரவுவிடம் பொசுங்கிப் போகும்

பங்கம் உனக்கு இல்லையடா அங்கமீதில்

ஐகுவாய் உள்ளடங்கிப் பேச்சை விட்டே

அழைத்திடவே அஞ்சுமது கொஞ்சும் காணே

13

காணாத காட்சி யெல்லாம் கண்ணிற் காணும்

கலங்காதே மெய்ம் மயக்கம் மெத்த வாகும்

பூணாத பணிபூண்டு சிறு பெண்ணாகப்

போதமெனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய்

வாணாளை மடக்கியிவள் ரூபம் கண்டு

மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு

கோணாத முக்கோணக் குறியைப் பாரு

கூசாதே கண்கூசும் கூசுங்காணே

14

கூச்சமற்றும் பார்க்கையிலே இருள் போல் மூடும்

கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம் போடு

வாய்ச் சமர்த்துப் பேசாதே மவுனத் தூன்று

வாவா என்றே நீயும் வருந்திக் கூவச்

சூட்சமது இருந்த இடம் சொல்ல லாமோ

சொல்லுதற்கு வாய்விட்டுச் சொல்ல லாமோ

தாய்ச் சமர்த்துப் பாராதே தாயைப் போற்று

சற்குருபோல் உற்பனத்தைத் தாய் சொல்வாளே

15

சொல்வதற்கு இங்கு இவளையலால் சுகம் வேறுண்டோ

சூட்சம் எல்லாம் இவளை விடச் சூட்சம் உண்டோ

நல்லவர்க்கு நடுவில் விளையாடும் வல்லி

நாதவிந்து ஓங்கார நிலையும் காட்டி

வல்லவர்க்கும் வல்லவளும் நானே யென்பாள்

வரமவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி

புல்லர்க்கு இங்கு ஆயுதமும் புல்லேயாகும்

புத்தி கெட்ட லோபிகட்கு புகல் ஒணாதே

16

புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று

பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே

அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே

அறிவு கெட்டே ஊர்தோறும் சுற்றிச் சுற்றிச்

சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு

சடைமுடியும் காசாயம் தன்னைச் சாற்றி

இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய்

எண்ணம் எல்லாம் பெண்ணாசை பூசை தானே

17

பூசையது செய்வம் என்று கூட்டம் கூடிப்

புத்தி கெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்

பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்

படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்

ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே

அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்

பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி

புரட்டு உருட்டாய் நினைவுதப்பிப் பேசு வானே

18

பேச்சென்றால் வாய்ச் சமர்த்தாய்ப் பேசிப் பேசிப்

பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி

நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதும் காணார்

நிர்மூடர் அனேகவித சாலம் கற்றே

ஆச்சென்றால் அதனாலே வருவது ஏது

ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்

மூச்சென்ன செய்யுமடா நரகில் தள்ளும்

மோசமது போகாதே முக்கால் பாரே

19

முக்காலும் பொருந்தும் என்று சொன்ன போதே

மோசமில்லை சூட்சமது மொழிந்து கூடும்

தக்காமல் போனபேர் அநேகர் உண்டு

சமர்த்து அறிந்தால் அவன் வாமியவனே சித்தன்

எக்காலும் நடந்திரு நீகாலும் உன்னி

இருந்தடங்கி உள்ளிருந்து வெளியில் போன

அக்காலைக் காணாமல் அலைந்தே யோடி

அழிந்து கெட்டுப் போனவர்கள் அறிந்து கொள்ளே

20

அறிந்தகுறி அடையாளம் காண வேண்டும்

அக்குறியில் சொக்கி மனம் தேற வேண்டும்

அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும்

அலகையது வழிபாதை அறிய வேண்டும்

மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண

மயக்கத்தைக் கண்டு உனையும் மதிக்க வேண்டும்

நிறைந்தமதி குறைந்த வகை அறிய வேண்டும்

நிச்சயத்தை அறிவார்க்கு முத்தி தானே

21

முத்தி தரும் என்று மனம் புத்தி யற்று

மோசமது போகாதே பாசம் கையில்

சித்தமதில் சந்திரனை நிறுத்திக் கொண்டு

செந்தீயில் உன் தீயை நடுவில் வாங்கிச்

சுத்தியுடன் ஆதியந்தம் வைத்துச்

சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி

நித்யமலர் அர்ச்சனை செய் பாதம் போற்றி

நீயுமதி மதியுமதில் அதிகம் ஆமே

22

மதிபெருகுங் கதிபெருகும் வாதம் வாதம்

வருந்தாதே யந்தமுறை யாகா தப்பா

நிதிபெருகும் இவள் குறியே வாத மாகும்

நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி

நதிகள் தனை அறியாமல் சலத்தில் மூழ்கி

நானே நான் என்று வாய் மதங்கள் பேசி

உரிய பொருள் உள்ள தெல்லாம் சுட்டுச் சுட்டே

உட்பொருளைப் பாராமல் அழிந்திட்டாரே

23

இட்டகுறி நாதவிந்து ரூபங் காண

இயலறியாச் சண்டாளர் சுட்டு மாய்வார்

விட்டகுறை வந்தது என்றால் தானே எய்தும்

விதியில்லார்க்கு எத்தனை தான் வருந்தினாலும்

பட்டுமனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை

பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ் போக்காதே

திட்டமதாய் பாணம் வைத்துத் தேவி பூசை

சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே

24

எட்டிரண்டும் ஒன்றுமது வாலை யென்பார்

இதுதானே பரிதிமதி சுழுனை யென்பார்

ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார்

உதித்தெழுந்த மூன்றெழுத்தை அறியா ரையோ

கொட்டும் ஒரு தேளுருவாய் நிற்கும் பாரு

கூட்டம் இட்டுப் பாராதே குறிகள் தோன்றும்

சுட்டசுடு காடுமது வெளியும் ஆகும்

சொல்லுவதற்கு வாய் விளங்காச் சூட்சந்தானே

25

சூட்சம் இவன் வாசமது நிலைத்த வீடு

சொல்லு தற்கே எங்குமாய்நிறைந்த வீடு

தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு

சித்தாந்த சித்தர் அவர் தேடு வீடு

ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடு

ஓகோகோ அதிசயங்கள் உள்ள வீடு

ஆசுகவி மதுரமது பொழியும் வீடு

அவன் அருளும் கூடி விளையாடும் வீடே

26

வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல்

வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்

தேடுகிற மூவருமே வணங்கும் வாசல்

திறமையான பன்னிருவர் காக்கும் வாசல்

ஆடுகிற புலியாகி நின்ற வாசல்

அரகர சிவசிவா வாசி வாசல்

கூடுகிற முக்கோணப் பரங்கள் ஆகிக்

குறுகுமதி பெருகுமதி கூற ஒண்ணாதே

27

ஒண்ணாகி இரண்டாகி விளைவும் ஆகி

உத்தமியாள் உட்கருத்தை அறியப் போமோ

தின்னாத விடக்கெடுத்துத் தின்னச் சொன்னாள்

செத்தசவம் போலிருந்து செபிக்கச் சொன்னாள்

பண்ணாத பணக் கோடிப் பண்ணி வைத்தாள்

பார்த்திருந்து கழுத்தறுக்கப் பார்த்தாள் பாவி

எண்ணாது எண்ணி மனம் ஏங்கி நாளும்

எனக்கபயம் ஏதெனவே எழுந்திட்டேனே

28

எழுந்திட்ட சிவன் பார்த்துத் தொடர்ந்து கூடி

என்னையுமே இழுத்து மடி பிடித்துக் கொண்டு

கொழுந்து விட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டிக்

குடிகேடி சத்துருப் போல் கூச்சலிட்டாள்

அழுதேனே முக்தியினி அந்த ஊரில்

அரகரா துணை எனக்கே யாருமில்லை

எழுந்திட்டார் எல்லோரும் ஓடிப் போனார்

என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கினேனே

29

ஏங்கினேன் ஈடழிந்தேன் விடும் அற்றேன்

என்னைத் தான் கண்டவர்கள் சீசீ எயன்னத்

தூங்கினேன் காலறிந்து மடக்க மாட்டேன்

துணை எனக்கு யாருமில்லை சூழ்ச்சியாக

வாங்கினேன் காலறிந்து மடக்க வேண்டும்

வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னேன்

தேங்கினேன் முன்னுவள் பின்னு மாகத்

திடம் எனக்குச் சொன்னது இந்தத் தெளிவுதானே

30

தெளிவதற்குச் சூட்சமிது தெளிவாய்ப் பாரு

சிவனிருந்து விளையாடும் தெருவைப் பாரு

மொழிவதற்கு இந்நூலைவிட வேறொன்று இல்லை

முன்னதி அந்தமொடு நடுவும் சொன்னோம்

சுழியதற்குள் சுழியிருந்த சூட்சம் சொன்னோம்

சொல்லாத மவுனமுதல் கருவும் சொன்னோம்

ஒளிபிறக்கும் உறுதியிந்த உறுதி சொன்னோம்

உற்பனமாய்ப் பார்த்தவர்கள் சித்தர் தாமே

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=கருவூரார்_பூசா_விதி&oldid=980509" இலிருந்து மீள்விக்கப்பட்டது