கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்

இரு பரம்பரைகள்


ஜுலியா! என்ன கண்ணு, கோபம்? ஜிம்மி! துஷ்டன் நீ போ! போய்ச் சமாதானம்செய் ஜுலியாவை.

ஜூலி! ஜூலி! இதோ பார் இப்படி! அடடா! புருஷன் மேலே கோபம் வந்துவிட்டால் நம்ம ஜூலியா செய்கிற அட்டகாசம் இருக்கே, சொல்லி முடியாது. எப்படி முறைத்துப்பார்க்கிறாள், பார்! ஜிம்மி, பாவம் கெஞ்சிப்பார்த்துத் தோற்றுப்போய், ஜூலியாவின் கோபம் தானாகத் தணியட்டும் என்று போய்விட்டான்.

"என்ன இருந்தாலும், ஜூலி! உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!"

"உங்களுக்கும் நாளைக்கு ஒரு புருஷன் வந்தால்....."என்று கேலிசெய்ய ஆரம்பித்தாள், மாரி; தேவா, அவள் காதைத்திருகிக்கொண்டே, "பேசாதே! எப்போது பார்த்தாலும் இந்தக் கல்யாணப் பேச்சே பேசிக் கேலிசெய்வதுதானா வேலை?" என்று, வேடிக்கையாகக் கண்டித்தாள். மாரி, இதுபோல் கலியாணப் பேச்சைக் கேட்டுக் கேலி செய்த எத்தனையோ "தேவா"க்கள், தொட்டிலாட்டி விட்டுத் தூங்கிய குழந்தைக்கு முத்தமிட்டதைப் பார்த் தவள். தேவா, கலியாணப் பேச்சைக்கேட்டு கோபித்தால், மாரி, அடங்கிவிடுவாளா என்ன!

"ஜூலியா எவ்வளவு ரோஷக்காரியோ அவ்வளவு ரோஷக் காரிதானேம்மா நீயும்!" என்று மாரி மேலும், கேலி செய்து கொண்டிருந்தாள். ஜூலியாவைச் சாந்தப் படுத்த முடியாமல், சோகமடைந்த ஜிம்மியின் பரிதாபப் பார்வையைக் கண்டு, தேவா, ஓடிச்சென்று, பிஸ்கட் துண்டுகளைக்கொண்டு வந்து போட்டாள் ஜிம்மிக்கு ஜூலியாவிடம் சரசமாடுவதிலே இருக்கிற சுவை, பிஸ்கட் தின்பதிலே ஏற்படுமா? தின்னவில்லை! ஜூலியாவும் ஓருமுறை ஜிம்மியின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் அலட்சியமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டது.

"அப்பா! அந்தக் குச்சு நாய்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன பார்த்தாயா? நேற்று, நான் ஜுலியாவைத் தொட்டுத்தடவிக் கொடுத்தேன், பட்டு மெத்தை மேலே கை வைப்பது போல இருந்ததப்பா !"

"அழகான நாய்கள் தான்! ஜூலியா, ஜிம்மி, இரண்டையும், பெங்களூரில் வாங்கினாராம். விலை என்ன தெரியுமா? போன மாதம், நமது கம்பங்கொல்லையை விற்றோமே, என்ன விலைக்கு?"

"250-க்கு?”

"ஜுலியா, ஜிம்மியின் விலையும் 250-தான்"

சுகானந்த முதலியாரும் அவர் மகன் சிங்காரமும், மார்வாடியிடம் அடமானத்திலிருந்த தங்கள் ஓட்டு வீட்டிலே உட்கார்ந்து கொண்டு, தனபாலச் செட்டியாருடைய பங்களாவிலே, 'தர்பார்' நடத்தி கொண்டு வந்த ஜூலியா, ஜிம்மி எனும் குச்சு நாய்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள் இதுபோல, வீடு, ஈடுகாட்டப்பட்டது! கம்பங்கொல்லை விற்றாயிற்று! 'அந்தக் கொல்லையின் விலையும், குலைக்கும்போதும் நாசுக்காகக் குலைக்கும் நாய்களின் விலையும் ஒன்று! அங்கே 250ரூபாயில் நாய் வாங்கினார்கள். இங்கே இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக இருந்த கம்பங் கொல்லையை 250-ரூபாய்க்கு விற்று விட்டார்கள்! இந்த நிலையிலே, பெயர் சுகானந்தம் என்று இருந்து பயன்? சுகமும் கிடையாது, ஆனந்தமும் கிடை யாது!

தனபாலச் செட்டியார், ஒரு காலத்தில், சுகானந்தத்தோடு, சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். சுகானந்தம் இன்னமும், அந்தச் "சுவல்ப" வியாபாரத்திலே தான் இருந்து வருகிறார். தனபாலச் செட்டியாரோ, எப்படியோ இலட்சாதிகாரியாகி விட்டார்? என்றாலும், பழைய சினேகத்தை மட்டும் விட்டுவிடவில்லை. வீட்டிலே நடைபெறும் எந்தக் காரியத்துக்கும் சுகானந்த முதலியாரை அழைப்பார் 'சிலதுகள் அதிர்ஷ்டம் வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடும் நம்ம தனபாலு அப்படிப் பட்டவனல்ல' என்று சுகானந்தம் தன் நண்பர்களிடமெல்லாம் கூறுவான்.

'ஏம்பா தனபாலு!' என்றுதான், சுகானந்தம் அழைப்பது வழக்கம். நேரிலே பேசும்போது, தன் நண்பர்களிடம் பேசும் போதும், தனபாலு என்று அழைத்த அதே சுகானந்தமே, சில சமயங்களில் செட்டியார்! என்று அழைக்க வேண்டி நேரிட்டுவிடும். பங்களாவுக்கு ஒரு காவல்காரன் ஏற்பட்டு விட்டான். அவன் யார் உள்ளே போவதானாலும், "யார் ? என்ன வேலையாக வந்தீர்கள்?" என்று கேட்டுவிட்டுத்தான் அனுப்புவான். சுகானந்தமும், தனபாலும் ஒரே வியாபாரம் செய்தவர்கள், நண்பர்கள், என்று அவன் கண்டானா! தெரிந்தாலுந்தானென்ன! தனபாலச் செட்டியார், அவனுக்கு எஜமான், சுகானந்தம், யாரோ ஒரு ஆசாமிதானே! அப்படித்தானே அவன் கொள்ள முடியும்? ஒரு நாள், சுகானந்தத்தையும் அவன், வாயற்படியண்டை நிற்க வைத்துவிட்டான்.

"யார் நீங்கள் ?"

"நானா? நீ யாருடாப்பா? புதிசோ? ஏற்பாடே புதிசாகத்தான் இருக்கு நான் அவருக்குச் சிநேகிதன்" என்று சுகானந்தம் பதில் கூறினார். கூறிவிட்ட பிறகு யோசித்தார், 'அவர், இவர்.' என்றல்லவா கூறவேண்டி வந்து விட்டது, நம்ம தனபாலுவை, என்று, கொஞ்சம் கோபமும் அடைந்தார்.

"நீங்க யாரைப் பார்க்கவேண்டும்?” என்று கேட்டான், காவற்காரன். என்ன சொல்ல முடியும்? தனபாலுவை, என்று சொல்வதா மரியாதையாக இருக்குமா? உடனே, சுகானந்தம், "நான் தனபாலச் செட்டியாரைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார். கூறிவிட்டு, மறுவிநாடி யோசிக்கலானார் 'செட்டியார்' என்று கூற நேரிட்டதே நம்ம தனபாலுவை; நாமும் அவனும் எவ்வளவு அன்யோன்யமாகப் பழகினோம், 'ஒரே கடையிலே இருந்திருக்கிறோம், ஒரே வியாபாரம் செய்தோம் இன்று அவன் ஒரு பணக்காரனாகி விடவே, நாமே அவனைச் "செட்டியார்" என்று சொல்லவேண்டி நேரிட்டது', என்று கோபந்தான். அந்தக் கோபம் மேலும் அதிகரித்தது, 'இங்கேயே இரு! உள்ளே போய், "ஐயா"வைக் கேட்டுவிட்டு வருகிறேன்.' என்று சொல்லிவிட்டு, வேலையாள் உள்ளே போனபோது. "ஐயா"வாம், ஐயா? இவனுக்கு அவன் ஐயா, எனக்கென்ன? சே! நாம் இவனைப் பார்க்கவருவதே தவறு, பேசாமல் போய்விடுவோம்" என்றும் நினைத்தார். ஆனால் ஒரு யோசனை வந்தது, வந்ததே வந்தோம், இந்தத் தடவை மட்டும் தனபாலுவைப் பார்த்து இங்கே நடக்கும் அமுலைப்பற்றிச் சொல்லிக் கண்டித்துவிட்டுப் போய்விட வேண்டும், என்று தீர்மானித்தார்.

'ஏம்பா, தனபாலு! அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலே குடை பிடித்து நடப்பான் என்பார்களே, அதே கதையாத்தான் இருக்கு. ஏது, பெரிய அமுல் நடக்குதே இங்கே, இப்போ என்னமோ அதிர்ஷ்டம் அடிச்சுது, பணம் சேர்ந்தது, இதற்காகப் பழைய மரியாதை, பாசம், நேசம் எல்லாம் போயிடணுமா? நான் என்னமோ, மற்றவங்களைப் போலே தலை துள்ளிப் போகாமே, நீ மட்டு மரியாதையோடே இருந்து வருவேன்னுதான் நினைச்சேன். பணம் சேர்ந்ததும், நீயும், 'அதுக' போலத்தான் நடக்கறே. இது சரியல்ல! செல்வமிருக்கே, அது சாஸ்வதமல்ல! என்ன பணம் இருந்தாலும் பிரயோஜனமில்லை, குணம் இருக்கணும். அப்போதுதான், லட்சுமி தங்குவா!” என்று மள மளவென்று, தன் மனதிலுள்ளதைப் பூராவும் கொட்டிவிட வேண்டுமென்று கோபத்தோடுதான் மடமட வென்று, வேலைக்காரன் பின்னோடு, சென்றார் சுகானந்தம். அவ்வளவு கோபமும் பறந்து போகும்படி செய்துவிட்டார் தனபாலச் செட்டியார், சுகானந்தத்திடம் பேசி அல்ல வேலைக்காரனை ஏசி!

"ஏண்டா, தடியா! இவரையா, யாரோ வந்திருக்காங்க என்று சொன்னே. முட்டாளே! இவர் யாரு? நம்ம சினேகிதரடா! இந்த உலகத்திலேயே, என் குடும்ப விஷயமா அக்கரை கொண்டவர் யாராவது இருக்கிறாங்களான்னா, அது இவர் தாண்டா! மடப்பயலே ! இனி, எப்போதானாலும் சரி இவர் வந்தா, நீ நிறுத்தக்கூடாது, கேள்வி கேட்கக்கூடாது இவர்தான் நான், நான்தான் இவர்! போ! மனுஷாளுடைய தராதரம் தெரியலை" என்று தனபாலச் செட்டியார் வேலையாளைக் கண்டித்தார். உச்சி குளிர்ந்தது சுகானந்தத்துக்கு. மெய்மறந்தார். தனபாலுக்குக் கோடி கோடியாகச் சேர்ந்தாலும் தகும் என்று எண்ணிக்கொண்டார். பழைய சினேகிதத்தை எவ்வளவு மதிக்கிறான் தனபாலு ! எவ்வளவு அருமையான குணம்! குணம் அப்ப இருப்பதால்தான் பணம் சேர்ந்தது! என்று எண்ணிக்கொண்டான். தன்னைப் பெருமைப்படுத்திய நண்பனைப் பற்றி அன்று முதல், சுகானந்தமும் தானாகவே மரியாதையோடு பேசிப் பெருமைப்படுத்தலானான். இந்த நிலையிலே இருந்தது, இருவரின் நட்பும்.

சிங்காரத்துக்கு, அந்தக் குச்சு நாய்மீது ஏற்பட்ட ஆசை அடிக்கடி அவனைத் தனபாலச் செட்டியாரின் பங்களாவுக்கு இழுக்கலாயிற்று. ஜிம்மியும் ஜூலியாவும் ஊடலோடு திருப்தி அடைத்துவிடுமோ! அழகான இரண்டு "குட்டிகளை " ஈன்றெடுத்து ஜூலியா, பெருமையோடு அவைகளையும், அவைகளைக் கண்டு பூரிக்கும் ஜிம்மியையும் பார்த்து மகிழ்ந்தாள். குட்டிகளிலே ஒன்று வெள்ளை, மற்றொன்று கருப்பு! நிறத்திலே மாறுபாடு இருந்தது, அழகோ சமம். சிங்காரமோ, இரண்டிலே எதையாவது ஒன்றைப் பெற, தவம் இருக்கவும் தயாரானான். தகப்பனாரிடம் மன்றாடினான், ஒரு 'குட்டி'யை வாங்கித்தரச்சொல்லி.

"அப்பா........."

"என்னடா........."

"அந்த நாய்க்குட்டி..........."

"அடே, நமக்கேண்டா அந்தச் சனியனெல்லாம்"

"போ அப்பா ! எவ்வளவு அழகாக இருக்கு"

"ஆமாம், அழகுதான், ஆனால் அதற்குப் பாலும் பிஸ்கட்டும் வேண்டுமே ஒரு நாளைக்கு எட்டணாவுக்கு"

"எப்படியாவது வளர்க்கலாம் அப்பா நீங்கள் கேட்டுப்பாருங்களேன் செட்டியாரை"

"கேட்டால் கட்டாயம் கொடுப்பான் தனபாலு, ஆனாலும், நமக்கு ஏண்டா நாயும் பூனையும்"

தந்தைக்கும் மகனுக்கும் இது பேச்சு.

"கருப்பு நிறம்? செச்சே, டர்ட்டி, நமக்கு வேண்டாம்"

"வெள்ளை நிறத்திலும் ஒரு குட்டி இருக்கிறது சார். இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு ஒன்று, உங்களுக்கு ஒன்று தருவதாக நான் முன்பே தீர்மானித்துவிட்டேன்."

"சரி! வெள்ளை நிறத்திலே இருப்பதைக் கொண்டுவா. ப்யூன், இப்போதே வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை, இந்த நாய்க்குட்டியும் வந்துவிட்டால், தீர்ந்தது, அவன் முழுச் சோம்பேறியாகிவிடுவான்."

டிப்டி கலெக்டர் தாமோதரம் பிள்ளைக்கும், தனபாலச் செட்டியாருக்கும், அதே நாய்க்குட்டி விஷயமாக நடந்தது, இந்த உரையாடல், டிப்டிக் கலெக்டர், செட்டியார் போன பிறகு, தனது ப்யூனிடம் அந்தச் செட்டியார் பெரிய தொல்லை தருகிறார் என்றுகூடக் குறை கூறினார். செட்டியாரோ, கலெக்டர் துரை வீட்டிலே தான் கொடுத்த நாய் வளரப்போவது தெரிந்து பெருமை அடைந்தார்.

சிங்காரத்தின் தொல்லை தாங்காது சுகானந்தம் தனபாலச் செட்டியாரிடம் சென்று நாய்க்குட்டி வேண்டுமென்று கேட்டபோது, செட்டியார் மறுப்பார் என்று கொஞ்சங்கூட எண்ணவேயில்லை கேவலம் ஒரு நாய்க் குட்டியைப், பால்ய சிநேகிதனுக்குத்தர, தங்கமான குணம் படைத்த தனபாலு தடை சொல்வானா என்று நினைத்தார். செட்டியார் சொன்ன பதிலைக் கேட்டபோது, சுகானந்தத்துக்குத், தூக்கிவாரிப்போட்டு விட்டது.

"நாய்க்குட்டியா? சரிதான், டிப்டி கலெக்டர் இருக்கிறாரே, அவர், இந்தக்குட்டி தனக்கு வேண்டுமென்று, கெஞ்சிக் கூத்தாடினார். என்னசார் இது, ஒரு குட்டியை இன்கம்டாக்ஸ் ஆபீசர் வேண்டுமென்றார், சரி என்று அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன். இருப்பது இன்னும் ஒன்றுதான், அதையும் கொடுத்துவிட்டு எப்படிதான் சார் மனசு நிம்மதியிருக்கும் என்று எவ்வளவோ சமாதானம் சொன்னேன், அந்த ஆள் பிடிவாதக்காரன் நூறானாலும் ஆயிரமானாலும் தருகிறேன், குட்டி கட்டாயம் கொடுத்தாக வேண்டுமென்று "ஆர்டரே" போட்டுவிட்டார். நான் என்ன செய்வது! அடுத்த தடவை கட்டாயம் உனக்குத் தருகிறேன்" என்றார் தனபால செட்டியார். சுகானந்தத்துக்கு கோபந்தான். கேவலம் ஒரு நாய்க்குட்டி, அதைத் தர மறுக்கிறானே, என்று கோபந்தான், ஆனால் அந்தக் 'கேவலம்' கலெக்டர் துரை வீட்டுக்கு அல்லவா குடி போகிறது. என்ன செய்வது! அடுத்ததடவை ஆகட்டும் என்ற பதிலை, தன் மகனுக்கு கொஞ்சம் மெருகு பூசித்தந்தார். சிங்காரத்துக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது, என்ன செய்வது? டிப்டி கலெக்டர், இன்கம்டாக்ஸ் ஆபீசர், என்று சொல்லிவிட்டபிறகு, இவன் என்ன கூற முடியும், சிங்காரத்தின் சார்பிலே தேவா ஆஜரானாள்!

'என்னப்பா இது ! நமக்கு எவ்வளவு வேண்டியவர் சுகானந்தம். அவருக்குக் கொடுத்தால் என்ன? இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு நாய் வேண்டுமென்று யார் கேட்டார்கள், நீங்களாகத்தானே வலியவலியப் போய் கேட்கிறீர்கள் நாய்க்குட்டி வேண்டுமா, என்று' என்று தேவா வழக்குத் தொடுத்தாள். தனபாலச் செட்டியார் சிரித்தார், தேவாவின் உலக ஞானசூனியத்தைக் கண்டு!

'பைத்தியமம்மா நீ! நானாக வலியப்போவதாகக் கேலிசெய்கிறாயே, இன்கம்டாக்ஸ் ஆபீசர் வீட்டுக்கு மட்டுமல்ல டிப்டி கலெக்டர் வீட்டிற்கும் நானாகத்தான் சென்று, நாய்க்குட்டி வேண்டுமா என்று கேட்டேன். இன்னும் ஒரு குட்டி இல்லையே என்று வருத்தமும் படுகிறேன், உனக்கென்ன தெரியும் அந்த விஷயம்' என்று கூறினார்.

"இன்னொரு குட்டி இருந்தால் சுகானந்தத்துக்குத் தரலாம் என்று நினைக்கிறீரா? ஐயோ பாவம், அவ்வளவாவது உங்க சிநேகிதர் மீது அன்பு இருக்கிறதே அது போதும்" என்று தேவா கொஞ்சம் படபடப்பாகப் பேசி னாள். அந்தப் படபடப்பைக் கண்டு தனபாலச் செட்டியார் ஆச்சரியப்படவில்லை தேவாவுக்குத்தான் ஆச்சரியம் பிறந்தது, அவர் அதற்கு அளித்த மறுமொழி கேட்டு. "முட்டாள் பெண்ணே! மூன்றாவது குட்டி இருந்தால், அந்த விடியாமூஞ்சிக்குத் தருவேன் என்றல்ல நான் சொன்னதற்கு அர்த்தம், மூல்தானி இருக்கிறானே, நமக்கு கேட்கும்போது கடன் தருகிறானே, அவனுக்குக் கொடுத்திருப்பேன். நமது வீட்டு நாய்க்குட்டி, ஒன்று கலெக்டர் பங்களாவிலும், மற்றொன்று இன்கம்டாக்ஸ் ஆபீசர் வீட்டிலும் உலாவினால், எவ்வளவு இலாபம் தெரியுமோ நமக்கு. ஏது சார் நாய்க்குட்டி என்று யாராவது கேட்கிறபோதெல்லாம், டிட்டிக் கலெக்டரும், ஆபீசரும் "இதுவா, தனபாலச் செட்டியார் தந்தார்" என்று கூறுவார்களே! எத்துனை முறை என் பெயரை உச்சரிப்பார்கள். என்னைப் பற்றி பெரிய ஆபீசர்கள் பேசினால் ஊரிலே எனக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும். தபைாலச் செட்டியாருக்கும் கலெக்டருக்கும் பிராண சிநேகிதம், கலெக்டர் வீட்டிலே இருக்கிற நாய்க்குட்டி கூட, செட்டியார் கொடுத்ததுதான் என்று பெரிய மனிதர்களெல்லாம் பேசுவார்கள். இந்த நாய்க்குட்டிகள், நமது 'ஏஜண்டுகள்' போல அல்லவா, அங்கே இருக்கும். இது தெரியாமல் சுகானந்தத்துக்குக் கொடு என்று பேசுகிறாயே. பைத்தியமே! அவன், இந்த நாய்க்குட்டி தரவில்லையே என்று கொஞ்சம் கோபித்துக் கொள்வான், அதனாலே நஷ்டம் என்ன? கலெக்டர் வீட்டிலும், ஆபீசர் வீட்டிலும் இந்தக்குட்டிகள் போய்ச் சேருவதால் வருகிற இலாபம் எவ்வளவு! அதைக் கவனிக்க வேண்டும். வியாபாரியின் பெண்தான் இருந்து என்ன பயன்? சூஷ்மபுத்தி இல்லையே உனக்கு" என்று செட்டியார் உபதேசமே செய்துவிட்டார். தேவா தெளிவு பெற்றாள், தகப்பனார் காட்டிய வழி சரி என்றல்ல, அவர் ஓர் பணம்திரட்டும் கருவி என்ற தெளிவு பெற்றாள். ஏழையும் செல்வவானும் இணைபிரியா நண்பர்களாக இருப்பினும், இளமை முதலே பிராண சிநேகிதர்களாக இருந்தாலும் இருவர் உலகமும் வேறு வேறு, எண்ணம், ஏற்பாடு, திட்டம் தத்துவம் சகலமும் வேறு வேறாகத்தான் இருக்கும் என்பதை அறிந்தாள். அன்றிரவு அவளையும் அறியாமல் கண்ணீரும் சிந்தியது, அந்த அளவு உருக்கம் காரணமில்லாமல் பிறக்கவில்லை; சிங்காரத்திடம் தேவாவுக்குக் காதல் அதற்கு முன்பே பிறந்து தவழ்ந்து கொண்டிருந்தது! கலெக்டர் வீட்டிலே வாழ வேண்டிய நாய்க்குட்டியை கடன் சுமை ஏறிக்கிடக்கும் வீட்டிலே கொண்டு வரச், சிங்காரம் முயற்சித்தான், மாளிகையிலே வாழ வழி வகுத்துக்கொண்டிருந்தார் சுகானந்தம் தன் மகளுக்கு, அவள் அந்த மண்சுவர் வீட்டிலே தன் 'மனோஹரன்' இருக்கக் கண்டாள்! நாயைக் கொண்டே, 'இலாபம்' பெறும் எண்ணங் கொண்டவரின் மகளுக்குக் "காதல்" பூத்துப் பயன் என்ன? கருகும், அல்லது அவர் கசக்கி வீசி எறிவார் கோபத்தோடு!

"அடுத்த தடவை" வந்தது, சிங்காரத்தின் சார்பிலே தேவா, மனு போட்டாள். இம்முறை தாயார் அதை நிராகரித்தாள், கடுமையான பேச்சுடன்.

"ரொம்ப இலட்சணந்தான்! அதுக பாவம், ஏழைக. அதுக வீட்டிலே நாயைக் கொடுத்தா, என்ன ஆகும், பாலும் பிஸ்கட்டும், வாங்கப் பணம் ஏது? நாய் நாலு நாளிலே சாகும், என்றாள் தேவியின் தாயார். உண்மைதான், ஆனால் உள்ளத்தைக் குமுறச் செய்யும் உண்மை. பாழாய்ப்போன ஜூலியா கர்ப்பமாகாமலிருக்கக் கூடாதா, குட்டியும் பிறந்து, அவருக்குக்கொடுக்க முடியாது என்றும் சொன்னால், அவர் எவ்வளவு வேதனைப்படுவார் பாவம், என்று குழம்பிக் கொண்டிருந்தாள், தேவா. 'அவர், அதாவது சிங்காரம், அடுத்த வீட்டு அன்னத்துக்கும் தனக்கும் மார்கழி போனதும் கலியாணம் என்ற ஆசையிலே இருந்தான். நாய்க்குட்டி ஆசையும் விடவில்லை. மறுபடியும் செட்டியார் வீட்டுக்கு நடந்தபடிதான் இருந்தான். ஊரிலே எந்த ஆபீசரும் இணங்கவில்லை, நாய்க் குட்டியை ஏற்றுக்கொள்ள. எனவே, "பழைய சிநேகிதம் மறக்கலாமா" "கவர்னரே கேட்டால்கூடத் தரமாட்டேன் உனக்குத் தருவதாகக் கூறிவிட்ட பிறகு," "பேச்சு என்றால் பேச்சுத்தானே," என்ற மொழிகளைச் சேர்த்து, தனபாலர் நாய்க்குட்டியைத் தந்தார், சுகானந்தத்திடம். சிங்காரம், அன்னத்துக்குத் தர எண்ணியிருந்த முத்தங்களிலே அரைப்பாகத்துக்கு மேலாகவே, தந்துவிட்டான், ஜார்ஜூக்கு—அதாவது நாய்க்குட்டிக்கு!

நாய்க்குட்டியைப் பராமரிக்க வேண்டிய முறைகளை விளக்கமாகக் கூறினாள் தேவா. பால் இந்த அளவு பிஸ்கட் இத்தனை துண்டு தரவேண்டும் என்று கூறினாள். இராத்திர் வேளையிலே "மெத்து மெத்து என்று" துணி போட்டுப் படுக்க வைக்கவேண்டும் தெரிகிறதா என்று கூறினாள். தனபாலர் கூறினதிலே தவறு என்ன! பைத்தியக்காரப் பெண்தானே தேவா! சிங்காரத்தின் நிலை என்ன, நாய் வளர்ப்புக்காகத் தேவா போதிக்கும் முறை அவனால் நடத்தக்கூடியதா? எண்ணிப் பார்த்தாளா? அவள்தான் அவனை, "அவர்” என்று மனதிலே கொண்டிருந்தாளே! ஆகவே அவரால், பாலும் பிஸ்கட்டும், பட்டு மெத்தையும் சம்பாதிக்க முடியும் என்று எண்ணிவிட்டாள்!! பித்தத்தில் ஒருவகைதானே காதல்! அந்தப் பித்தமும், ஒரே விநாடியிலே, ஒரே வாக்கியத்திலே போய்விட்டது தேவாவுக்கு. சிங்காரத்துக்கு தேவாவின் மனநிலை தெரியாது. நாய்க் குட்டியை எப்படி வளர்ப்பது என்று தேவா கூறிமுடித்ததும், சிங்காரம் "அதை எல்லாம் அன்னம் கவனித்துக் கொள்ளும்" என்று கூறினான் புன்னகையுடன். அன்னம் என்ற உச்சரிப்பே புன்னகைக்குக் காரணம் என்பது தேவாவுக்கு விளங்கிற்று. 'அன்னம் யார்?' என்று தேவா கேட்டாள். "ஏன் உனக்குத் தெரியாதா? அவளைத்தான், தை பிறந்ததும் அவன் கலியாணம் செய்துகொள்ளப் போகிறான்" என்று தேவாவின் தாயார் கூறினாள். அவன் புன்னகை பூத்த முகத்தோடு நின்றான்! பித்தம் தெளியும் நிலை பிறந்தது தேவாவுக்கு.

"ஜார்ஜ்" சிங்காரத்தின் சினிமா, காபி, சீட்டாட்டம் முதலிய பல வழக்கங்களைப் போக்கிவிட்டான். கையில் கிடைக்கும் 'காசு', பிஸ்கட்டாகப் பாலாகச், சோப்பாக, மாறும்போது, சீட்டாட்டமும் சினிமாவும் ஏது? அன்னத்துக்கு அன்புடன் என்றேனும் ஓர் நாள் வாங்கித்தரும் கனகாம்பரம்கூட, பிஸ்கட்டாகிவிட்டது! 'ஜார்ஜ்' நன்றாக வளரவேண்டும் என்பதிலே அவன் அவ்வளவு அக்கரை காட்டினான் செலவைப் பொருட்படுத்தாமல், ஆனால் 'ஜார்ஜ்' இந்த ஏழை வீட்டுக்கு ஏற்றதா, திருப்தியோடு வளர மெலிந்தான். உடலிலே சொறி கண்டது, ஓயாது அழுவான். 'ஜார்ஜ்' வரவர அவலட்சணமாகவும் ஆகி வந்தான். சிங்காரம், இந்த நாய் குட்டிக்காகப் பணத்தைப் பாழாக்குவது, அன்னத்துக்குப் பிடிக்கவில்லை. "அதன் வயிறு என்ன வயிறோ, ஒரு நாளைக்கு நாலணா பிஸ்கட்டைத் தின்றுவிடுகிறதே. இவ்வளவு தின்றும், எலும்பும் நோலுந்தான் மிச்சமாக இருக்கிறது" என்று ஏசுவாள் அன்னம். இந்த வீண் செலவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தாள்.

"சோறு போடலாமே ஜார்ஜுக்கு" என்று யோசனை கூறினாள். செலவைக் குறைக்க, "செச்சே! ஒரு ஆறுமாத காலம், பாலும் பிஸ்கட்டுந்தான் தரவேண்டும். தேவா அதை வற்புறுத்தி வற்புறுத்திக் கூறினாளே தெரியுமா?" என்றான் சிங்காரம். "பொழுது சாயும்போது அந்த நாய்க் குட்டியைக் குளிப்பாட்டுவானேன்" என்று கேட்பாள் அன்னம், "இது தேவாவின் யோசனை" என்பான் சிங்காரம். கைதவறி நாய்க்குட்டியைக் கீழே போட்டு விட்டாலோ, அன்னத்தைக் கண்டிப்பான்! அந்தக் கண்டனம்கூட அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இல்லை, இடையிடையே தேவா, தேவா, என்று பேசியதுதான் கஷ்டத்தைத் தந்தது. தேவாமீது அன்னத்துக்கு அசூயையே பிறந்தது. தேவாவையே கொண்டு வந்து வளர்ப்பது தானே என்று கேலியாகக் கூறிவிட்டாள் ஒரு நாள். அந்தச் சமயம் சிங்காரம் பார்த்த பார்வை அன்னத்தின் கண்களிலே நீரைப் பெருக்கிவிட்டது. தேவாமீது பிறந்த கோபம், அன்னத்தின் வீட்டை விட்டுக்கிளம்பி, தனபாலச் செட்டியாரின் அழகான மாளிகைக்குள் நுழையுமா? "ஜார்ஜ்"மீதுதான் பாய்ந்தது, அதுவும், சிங்காரம் வீட்டில் இல்லாத சமயங்களில்.

அன்று மழை! தெருவெல்லாம் சேறாகிவிட்டது சிங்காரம் வசித்து வந்த வீதியிலே 'தார்ரோடு' இருக்குமா, அவன் என்ன தனபாலனா! அந்தச்சேற்றிலே உருண்டு புரண்டு "ஜார்ஜ்" தன்னுடைய வெள்ளை நிறத்தைக் கெடுத்துக்கொண்டு, வீதி சுற்றி வீட்டு இலைக்குக் குலைத்துக்கிடக்கும் 'மட்டரக' நாயாக நின்றான். அன்னம் தேவாவை எண்ணி, ஒரு வகையான திருப்தி பெற்றாள். அந்தத் தேவாவும், வாழ்க்கையிலே சேறும் அழுக்கும் நிறைந்த இடத்திலே போய்ச் சேர்ந்தால், இந்த ஜார்ஜு போலத்தான் உருமாறிப்போவாள். இப்போது உள்ள மினுக்கும் தளுக்கும் இராது என்று எண்ணினாள். கொஞ்சம் சந்தோஷமும் அடைந்தாள். அர்த்தமற்ற ஆனந்தந்தான், ஆனால் அன்னம் அதற்குமேல் என்ன எதிர்பார்க்க முடியும்! ஏழையின் கண்ணீருக்குத்தான் ஆழ்ந்தபொருள் இருக்கும். ஜார்ஜின் நிலையைக்கண்டான் சிங்காரம். அதை இந்தக் கதிக்கு ஆளாகவிட்டு, இளித்துக்கொண்டிருக்கும், அன்னத்தையும் கண்டான், கடுங்கோபம் கொண்டான்: சீறினான்; கண்டபடி ஏசினான், அன்னத்தை அடிக்கவும் கை ஓங்கினான்: தெருக்கோடியிலே, ஒரு கூட்டம் வரக்கண்டு, அடங்கினான்.

தனபாலச் செட்டியாரின் தூரபந்து, குழந்தைவேலு முதலியார். செட்டியாருக்கு முதலியார் பந்துவா? என்று சந்தேகம் பிறக்கும், விஷயம் இது. 'செட்டியார்' என்று சிலபகுதிகளில் வாழும் முதலியார்களுக்குப் பட்டம்உண்டு. தனபாலர் அந்த வகை. குழந்தைவேலரின் ஒரே குமாரர் அருமைநாதன்; சமூகசேவாசங்கத்தலைவர், அந்தச் சங்கத்தை ஆரம்பித்தவர், நடத்துபவர், தலைவர் யாவும் அருமைநாதனே தான்! சர்க்கார் மானியமும், கன தனவான்களின் நன்கொடையும், அந்தச் சங்கத்துக்கு ஏராளம். அருமைநாதன்; ஏழை எளியவரின் நல்வாழ்க்கைக்காகத் தமது உடல்பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணிக்கத் தணிந்துவிட்டவர், என்று அவரைப்புகழாத பத்திரிகையே கிடையாது. சமூக சேவா சங்கத்தலைவரின் அபாரகான பணியினால், ஏழையின் எந்தப்பிணியாவது போயிற்றா என்று மட்டும் யாரும் கணக்குப் பார்த்ததில்லை; பார்க்கவுங் கூடாதல்லவா? அருமைநாதர் என்ன அன்னக்காவடியா, சீமான் மகன் அவர்; 'அடிக்கடி' ஏழைகளின் விடுதிகளைப் பார்வையிடுவார். பிய்ந்து போன கூரைகள், உடைந்த மண்பாண்டங்கள், சரியும் சுவர்கள், குப்பைகூளக் குவியல்கள், ஈமொய்க்கும் இடங்கள், புழு நெளியும் சாக்கடைக்கால்கள் ஆகியவற்றைப் பார்வையிடுவார். பிறகு, இந்த அசுத்தங்களினாலே தான், பிளேக், இன்புளூயென்சா, காலரா முதலான நோய்கள் பிறக்கின்றன. அவை ஏழைகளைச் சாகடித்துவிட்டுப் பிறகு, நகரெங்கும் பரவி, மக்களை அழிக்கின்றன, என்பதுபற்றிய விளக்கத்தை உரைப்பார். இந்த அசுத்தம் நிரம்பிய இடத்திலேயே இருந்து தீரவேண்டிய நிலை ஏன் ஏழைக்கு வந்தது, என்பது பற்றி அவர் பேசினதில்லை. பேசும்படி கேட்டவர்களுமில்லை. அருமைநாதரின் கண்கள் இந்த ஏழை விடுதியிலே உள்ள அசுத்தத்தைக் காண்பதோடு ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. அழுக்கு ஆடையை அணிந்து கொண்டிருந்த அழகிய அபலைகளையும், கூர்ந்து கவனித்து வந்தார்; கண்ணடியிலே விழும் கனியைச் சுவைப்பார், மற்றதுகளைப்பற்றி, சிச்சீ! இந்தப்புழம் புளிக்கும் என்பார். அவர் "சமூக சேவா சங்கவேலைசெய்ய" தேவா சகிதம், வந்தார் அன்று; அழகான மங்கையும் ஆடம்பர ஆடவனும், ஏழைகளின் விடுதிப்பக்கம் வந்தால், கும்பல் சேரத்தானே செய்யும். "ஜார்ஜை"யும் மறந்து, சிங்காரம், அந்தக் கும்பலைக் கவனிக்கத் தொடங்கினான். தேவாவின் கண்கள் சிங்காரத்தின்மீது கோபத்தைக் கக்கிற்று. "இதுதானா நீ நாய் வளர்க்கும் இலட்சணம்" என்று கேட்டாள். அருமைநாதன் விஷய விளக்கம் கேட்டான். கோபத்தோடு பதிலளித்தாள், தேவா. "அப்பா" கொடுக்க இஷ்டப்படவே இல்லை. அம்மாவும், இந்த அன்னாடிகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். நான்தான், பிடிவாதமாகப் பேசி, நாய்க்குட்டியை வாங்கிக்கொடுத்தேன். அதை இந்த இலட்சணமாக்கி விட்டார்கள்" என்றாள். தேவா கோபத்தைக் கக்கிக்கொண்டிருந்தபோது, சிங்காரம் பயத்தோடு, நாய்க்குட்டியைத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். "அன்னாடிகள் " என்ற சொல், சிங்காரத்தின் இருதயத்திலே வேல் பாய்வதுபோல் பாய்ந்தது. இருதயத்திலே ஆயிரம் வேல்பாய்வது போலாகிவிட்டது. அருமைநாதனின் பேச்சு! அவன் சொன்னான், 'என்ன தேவா! இந்த ஏழைகளிடம் தரலாமா. இந்த அருமையான நாய்க் குட்டியை, இதுகளுக்கே, சுத்தமாக வாழத்தெரியாமல், குப்பையில் புரண்டுகொண்டிருக்கின்றன. இதுகளைச் சீர் திருத்திக் கழுவிக் குளிப்பாட்டும் வேலையிலே நாம் ஈடுபட்டிருக்கிறோம் நீ, இவன் நாய்க்குட்டியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்று குறைப்படுவது தவறு. "ஜார்ஜ்"ஜின் உடல் அழுக்குக் கிடக்கட்டும், இவன் தலையைப்பார் வறண்டுகிடக்கிறது. சட்டையிலே பார் எவ்வளவு அழுக்கு, காலிலேபார் சேறு, கண்ணிலேபார் மசி, இவன் இருக்கும் இலட்சணத்தைக் கவனிக்காமல் நாய்க்குட்டியைக் கவனிக்கிறாயே, நீ ஒரு "பைத்யம்" என்றான். 'ஆமாம்' என்றாள் தேவா; ஆனால் அருமைநாதன் கூறியதை எண்ணியல்ல. இப்படிப்பட்டவனைக் கலியாணம் செய்து கொள்ளவேண்டுமென்றுகூட ஒரு சமயத்திலே நினைத்தோமே என்ற எண்ணத்தாலேதான். சிங்காரத்தால் அழத்தான் முடிந்தது, அன்னம் முணு முணுத்தாள், கையை நொடித்தாள், வேறு என்ன செய்வாள்? சேவா சங்கத்தலைவர் சேல் விழியாளுடன் போய்விட்டார். போகு முன்பு, அன்னத்தின் அழகை ஒரு முறை பார்த்துவிட்டார்!

சிங்காரம், தன் உலகை உணர்ந்து கொண்டான். செல்வவான்களின் வாழ்க்கை அம்சங்களிலே சிலவற்றையாவது தானும் அனுபவிக்கவேண்டும் என்ற 'வீணான மோகம்' ஏற்பட்டதற்காக வருந்தினான். "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி"யானதால், வீணான சஞ்சலமே ஏற்பட்டதை உணர்ந்தான்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஓர் நாள், அருமைநாதன், மோட்டாரை ஓட்டிக்கொண்டு, அந்த வீதிப் பக்கம் வந்தான், சமூக சேவைக்காக அல்ல; அன்னத்தைத் தரிசிக்கலாம் என்று, "ஜார்ஜ்" கவனிப்பாரற்றுக் கிடந்த சமயம் அது. புழுதியிலே படுத்துக்கிடந்தது. மோட்டாரின் சக்கரத்தில் சிக்கிற்று, நொறுங்கிச் செத்தது; அன்னத்தைப் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று, அருமைநாதன், மோட்டாரை ஓட்டிக்கொண்டு போய் விட்டான்.

"அடபாவி" என்று அலறினாள் அன்னம். ஜார்ஜை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள். கூக்குரல் கேட்டு உள்ளே இருந்து ஓடிவந்தான் சிங்காரம். மோட்டாரைக் காட்டினாள் அன்னம். பேசாமல், ஜார்ஜை, அன்னத்தினிடம் இருந்து வாங்கிக்கொண்டான். இரண்டு சொட்டுக் கண்ணீர்விட்டான்.

"உடலிலே சேறு பூசிக்கொண்டதற்கு உருகிப் போனான் படுபாவி. இப்போது சாகடித்துவிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகிறான்" என்று கூறி அழுதாள் அன்னம். புறக்கடையிலே ஒரு பள்ளம் தோண்டிப் புதைத்தான் இறந்துபோன ஜார்ஜை மட்டுமல்ல, அன்னத்தின் மீது கொண்ட கோபத்தை, ஆடம்பரப் பிரியத்தை, பழைய நாளைய எண்ணங்களை.

நாலைந்து வருஷங்களுக்குப் பிறகு ஓர்நாள் "வெள்ளை" மீது கருப்பனை உட்கார வைத்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அன்னம். "கருப்பண்ண சாமி" தயவால் பிறந்தான் என்று எண்ணி, தன் குழந்தைக்குக் கருப்பண்ணன் என்று பெயர் வைத்தான், சிங்காரம். வெள்ளை அவன் வீட்டு நாய்; அது பிஸ்கட்டும் திண்பதில்லை, பாலும் குடித்ததில்லை; எங்கோ, எதையோ, எப்போதோ தின்றுவிடும், சிங்காரத்தின் வீட்டுக்குத்தான் காவல்புரியும். குழந்தைக்குக் குதிரையாக இருக்கும். கோலால் அடிபடும், ஆனால் வீட்டையும் மறக்காது, குடும்பத்தில் யாரைக் கண்டாலும் வால் ஆட்டிக் களிக்கவும் தவறாது. என்றைக்கேனும் ஓர்நாள் எச்சில் இலையிலே இரண்டுபிடி சோறுவைத்து அன்னம் கூப்பிடுவாள், "வெள்ளே வெள்ளே!!" என்று. வெள்ளைக்கு அதுவே விருந்து. வெள்ளை பிறந்த இடம் தெருக்கோடி பாழ் மண்டபம். தாயும், தந்தையும் தெருப்பொறுக்கிகள், தனபாலச் செட்டியாரின் வளர்ப்புகள் அல்ல. அந்தப் பரம்பரையில் பிறந்த 'வெள்ளைக்கு' விருந்துதானே அது. மனிதர்களிலே மட்டுமல்ல சகல ஜீவராசிகளிலும் இரண்டு வகையான பரம்பரை இருப்பதைச் சிங்காரம் தெரிந்து கொண்டான்; தெளிவு பெற்றான் !