கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்


பிரசங்க புஷணம், புலவர் பூலோகநாதர், அன்று பட்டம் சூட்டிக்கொள்ளப்போகும் பார்த்திபன் போலக் காணப்பட்டார். காரணம் உண்டு அவருடைய களிப்புக்கு, அன்று மாலை ஆலமரத்தடியார் கோயில் ஆறுகால் மண்டபத்திலே, அவருடைய சொற்பொழிவு ஏற்பாடாகி இருந்தது!

"குறும்புக்காரச்சிறார்கள் இன்று மாலை மட்டும், என்னைக் கண்டால், என்மொழி கேட்டால், மறுதினம் முதற்கொண்டு, மறந்தும், சேட்டை செய்யார். ஊர்ப் பிரமுகர்கள் பலருமன்றோ கூடி இருப்பர், என் புகழை எடுத்துரைப்பர், மாலை அணிவிப்பர், கைகொட்டி மகிழ்விப்பர், மகிழ்வர். இவைகளைக் கண்ட பிறகு காளைகளின் கண்கள் திறக்கும்" என்று புலவர் எண்ணிக்களிப்படைந்தார். அவருடைய சந்தனப்பொட்டு முதற்கொண்டு, சங்கராபரணம் வரையிலே சகலமும், பள்ளிக்கூடச் சிறார்களுக்கு, நகைச்சுவை தருவனவாசு இருக்கும். தொல்லை அதிகம், எனவே பிரசங்கபூஷணம், அறியதோர் சொற்பொழிவு செய்து, அதன் மூலம் புகழ் ஈட்டி, ஈட்டிய புகழை மாணவர் முன் நீட்டி, அவர் தம் சேட்டையினை ஓட்டிவிட இஃதோர் வாய்ப்பு என்று எண்ணினார். எனவே, இறுப்பூதெய்தினார்,

ஆலமரத்தடியார் கோயில் அர்ச்சகர் அருணாசல ஐயருக்கும் அன்று ஆனந்தந்தான். வௌவால் வாழ்ந்து வந்த அக்கோயிலின்மூலம் அவருக்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கும் ! கோயில் வாசலிலே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக்கிடந்தார். பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு, அவர் ஊர்மக்களுக்கு ஆலமரத்தடியார் கோயிலிடம் பக்தி சிரத்தை உண்டாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் கோயிலுக்குப் பலரும் வருவார்கள், வருமானம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தார். அவர், இந்தக் கோயில் பாத்யதையை ஒரு துரும்பாக மதித்தகாலம் ஒன்றுண்டு. அப்போது அவருக்குப் பட்டினத்திலே உத்யோகம். கிரகம் செய்த கோளாறினால் அதை இழக்க நேரிட்டது. அதன் பிறகே அவருக்கு ஆலமரத்தடியாருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற அக்கரை தோன்றிற்று "பார்த்திங்களா, சாமி என்னமோ பட்டணம் பட்டணமுன்னு போனிங்களே, பாருங்க, ஆலமரத்தடியார் அழைச்சிட்டு வந்தாரு, விடுங்களா அந்தப் புண்யம்" என்று கூறுவர் கிராம மக்கள். "இதிலேமட்டும் குறைவில்லை! கோயில் பக்கமோ வருவதில்லை. என்ன செய்வதாம் இந்தக் கோயிலைக் கட்டிக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று அருணாசல ஐயர், விசனத்துடன் கூறுவார். கடைசியிலேதான் யுக்தி தோன்றிற்று, மக்கள் மனதில பக்தி புகுத்தும் வழி கண்டுபிடித்தார். ஆலமரத்தடியார் கோயில் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறவும், பொதுவாகவே பக்தி மார்க்கத்தின் பெருமையை மக்களிடம் பேசவும், ஓர் சொற்பொழிவு ஏற்படுத்த எண்ணினார். சத்கதா காலட்சேபத்துக்குக் கொஞ்சம் பொருட் செலவு பிடிக்கும், எனவே, பிரசங்க பூஷணப் புலவர் பூலோகநாதரை, அன்புடன் அழைத்தார், அரியதோர் சொற்பொழிவு நடத்தும்படி. அவருக்குத்தான் இத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள்.

  1. கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.
  2. கனியிருக்கக் காய் தேடுதல்.
  3. என்கடன் பணிசெய்து கிடப்பதே.

ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்தநான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்றுகூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே வாசகத்தில் அமைத்தேன். எப்படி என் சமர்த்து "என்று புலவர் கூறுவதுபோலிருந்தது அவருடைய கெம்பீரமான கனைப்பும், பார்வையும். அருணாசல ஐயர், அதிகம் பேசவில்லை. தலைவரைத் தயார் செய்வதற்காக அவர் சென்று விட்டார். புலவர் தனது சீடனொருவனை அழைத்தார். "ஏடுதனில் எனது மொழியைப் பொறித்திடு, மாலைச் சொற்பொழிவுக்கு" என்றார். சீடன், பிரசங்க பூஷணமாக வேண்டியவன்! எனவே, ஏடும் கையுமாகப் புலவர் எதிரே அமர்ந்தான். ஈசனைத் தியானித்துவிட்டுப் புலவர் துவக்கினார், சொற்பொழிவை.

"அன்பரே!" என்றார், ஏடுஎழுதி, அன்பரே ! என்று எதிரொலித்தார் எழுதி முடித்து. புலவர், தலையை அசைத்தார், கனைத்தார், "வேண்டாம், அன்பரே! என்று அழைப்பதைவிட, மெய்யன்பரே! என்று இருக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓர் திருத்தம் உரைத்தார். அன்பரே அடிபட்டது, மெய்யன்பரே! பொறிக்கப்பட்டது ஏட்டில்.

"அப்பா! மெய்யன்பரே என்று கூறுவதைவிட, சைவ மெய்யன்பரே! என்று கூறிடல் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்" என்றார் புலவர். அவருடைய எண்ணத்தைத்தானே அவன் ஏட்டிலே எழுதவேண்டியவன். எனவே, மெய்யன்பரே! என்ற பதத்தையும் அடித்துவிட்டு, சைவமெய்யன்பரே! என்று எழுதினான்.

"என்ன எழுதினாய் தம்பி!" என்று கேட்டார் புலவர்.

"சைவமெய்யன்பரே என்று எழுதினேன்" என்றான் சீடன். புலவர் ஓர் புன்னகை புரிந்தார்."அது நியாயமல்ல!" என்று கூறினார். "எது?" என்று கேட்டான் ஏடுதாங்கி. "ஆலமரத்தடியார், சிவனார், அடியேனும் சைவனே! என்றாலும், இன்று அங்கு கூடப்போகும் அன்பர்களிலே, சைவர் மட்டுமா இருப்பர். எங்கேனும் உண்டா? வைணவரும் இருப்பர். எனவே, சைவமெய்யன் பரே ! என்று கூறுவதோடு அமைதல் ஆகாது, நியாயமுமாகது. ஆகவே சைவ, வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களே என்றுதான் சபையை அழைத்தல் பொருத்தம். ஆம்! அதுபோல் எழுது என்றார், எழுதினான். புலவருக்கு அப்போதுதான் திருப்தி உண்டாயிற்று "தம்பி! பலருக்குத் தெரிவதில்லை இந்தப் பக்குவம். ஒரு பெரிய கூட்டத்திலே, பலமதத்தினர் வந்திருக்கக்கூடுமே, நாம் அனைவரையும் அழைத்தன்றோ பேசல் வேண்டும் என்ற சாதாரண விஷயம்கூடப் புரிவதில்லை, அப்படிப்பட்டவர்களின் அணைப்பிலே இருந்துதான் தமிழ் தேய்கிறது. நான் அத்தகையவனா ! நான் சைவன், என்றாலும், வைணவ, பௌத்த, கிருத்தவ, இஸ்லாமிய அன்பர்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. இந்த நன்னெறியை மட்டும் நாட்டிலே நிலை நாட்டிவிட்டால், பூலோக கைலாசம் இதுவேயாகும் " என்று கூறினார்.

அன்பரே ! என்ற ஒரே பதத்தினால், இந்த நோக்கம் நிறைவேறுமே, ஏன் அதைவிட்டு, அடுக்கிக்கொண்டிருக்கிறீர், என்று கேட்க வேண்டுமென்று சீடனுக்குத் தோன்றிற்று. ஆனால் அவன் பிரசங்க பூஷணமா, மறுத்துரைக்க.

"ஆலமரத்தடியார் கோயிலில், ஆன்றோரும் சான்றோரும் குழுமியுள்ள இக்கூட்டத்தின் கண் அடியேனைப் பேசுமாறு கேட்டது, என் பாக்கியமே அன்றோ. இத்தகைய சபையிலே, நின்று பேசக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டோ எனில், இல்லை என்பேன். ஏதோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்தும் பேசுமாறு அழைத்தனர்" என்று பிரசங்கபூஷணம் கூறிட, ஏடு எழுதி, வேகமாக எழுதி முடித்தான். மேற்கொண்டு, விஷயத்தை விளக்கப் போகுமுன், அதுவரை எழுதிய பிரசங்கத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டு இன்புற்றார் புலவர்.

"இதே போலத்தான், திரு. வி. கலியாண்சுந்தரனார் பேசுகிறார். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இத்தகைய சபையிலே நின்று பேசக்கூடிய அறிவாற்றல் உண்டோ எனில், இல்லை என்பேன் என்று கூறினீர், திரு. வி. க. இல்லை, என்று ஒரு முறை மட்டும் கூறார், இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறை கூறுவார்" என்று சீடன் கூறினான். சிரித்தார் புலவர், எழுது என்றார்.

"சிலர், எதனைக் கூறும்போதும், மும்முறை கூறுவர். உண்டு, உண்டு, உண்டு என்பர். என்னே, என்னே, என்னே என்பர். இந்த மும்முறைப் பிரயோகம் வீணாக நேரத்தையும் நினைப்பையும் விரயமாக்குவது அன்றோ 'அது நன்றோ' ஒருமுறை உரைத்திடில், சரியன்றோ. என்னிடம் அத்தகைய வழக்கம் கிடையாது எப்போதும் கிடையாது. நிச்சயமாய்க் கிடையாது" என்றார். சீடனுக்கு இதை எழுதும்போது, கஷ்டமாகத் தான் இருந்தது. மும் முறைகூறலை முறையன்று என்று மொழிந்திடு புலவர், அதனையே மும்முறை கூறுகிறாரே, முறையாமோ என்று எண்ணி ஏங்கினான். ஆனால் எங்ஙனம், மனத்திலுற்றதைக் கூறுவான்; தவறு இழைத்தவர் வெறும் தமிழ்ப்புலவரல்லவே ! பிரசங்க பூஷணமாயிற்றே !

"ஒவ்வோர் சொற்பொழிவாளரும், அவையடக்கம் என்ற அவசியமற்ற பகுதியை நீட்டிச் சபையை வாட்டுவர் அடியேனிடம் அந்த நோய் அணுகுவதில்லை, வீணான வார்த்தைகள் எனக்கு வேம்பு. அவை அடக்கம் ஒரு அவசியமற்ற, பயனற்ற, சுவையற்ற, உயிரற்ற, கருத்தற்ற, முறையற்ற, சுவைப்பயனற்ற, பயனுள்ள சுவையற்ற, கருத்துமுறையற்ற, முறையான கருத்தற்ற, உயிர்ச் சுவை அற்ற, கருத்துயிரற்ற, உயிர்க்கருத்தற்ற, காரியம், என்பதை எடுத்துக்கூற நான் அஞ்சப்போவதில்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்செழுத்தை ஓதினார் யார்க்கும் என்ற ஆன்றோர்மொழி ஈண்டு சிந்திக்கற்பாலது. ஆன்றோர் மொழியைச் சிந்திக்க வேண்டுவது ஏன் எனில், ஆன்றோர் சான்றோராகலின்." என்று, அவையடக்கத்தின் அவசியமற்ற தன்மைபற்றி, அழகுறக் கூறினார் பிரசங்க பூஷணம், சீடர் எழுதினார்.

"தம்பி!" என்று கூறினார் புலவர். சீடர் எழுதப் போந்தார். "எழுதாதே! இது எழுதுவதற்கல்ல, உனக்குக் கூறுகிறேன். ஒரு சொற்பொழிவின் இலட்சண விளக்கத்தைக்கேள். எந்த விஷயத்தைப்பற்றிப் பேசவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விஷயத்தைப் பற்றியே மறந்து, வீணான அவையடக்கம், சபை வணக்கம் கூறிக் காலத்தைக் கொலைசெய்வது இருக்கிறதே, அது கொடிது, மகாகொடிது. அவை அடக்கம் என்ற பகுதியை அதிகமாக வளர்த்தக்கூடாது. என் சொற்பொழிவிலே நீ எப்போதும் கூர்ந்து கவனித்தால் ஒரு முக்கியமான விஷயத்தைக் காணலாம். அதுதான், என் அனுபவத்தின் ஆராய்ச்சியின் விளைவு. என்னவெனில், நான் அனாவசியமாக அவை அடக்கம் கூறிக் காலத்தை வீணாக்கமாட்டேன்" என்று கூறினார். நாவை அடக்கி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்த சீடன், அவை அடக்கத்தை நீட்டிச் சொல்வது கூடாது, என்ற விஷயத்தையே, பிரசங்க பூஷணம், நீட்டிக்கொண்டு, நேரத்தை வீணாக்கிச் சொற்பொழிவுக்கேற்ற விஷயத்துக்கே வராமலிருக்கிறாரே என்று தெரிந்தது, கூறமுடியுமா! கூறுவது, குரு சீட முறைக்கே பங்கமன்றோ!

இடையே பேசிவிட்டதால், தொடர்பு மறந்துபோகவே மீண்டும் ஒருமுறை எழுதின வரையிலே படிக்கச்சொல்லிக் கேட்டார் பிரசங்க பூஷணம்.

"அந்தணர் என்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் இந்த வாசகத்தை, மணிவாசகம் என்பேன், அணிவாசகம் என்பேன், பணி வாசகமுமாகும், அறநெறியும், அன்புநெறியும் கொண்டவர் அந்தணர், அழகிய தன்மையை உடையவர், அவர்கள் எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டும் தகைமையினர், அவரே அந்தணர்.

"ஐயகோ! அந்தணர் என்போர், நம்மனோரைக் கெடுப்பவர் என்றோர் சாரார் கூசாது பொய் கூறுகின்ற னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை? அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்குதான் என்னை? என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத்துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்களா என்பீரேல், இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். இக்காலத்து மட்டுமல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினையும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும், குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களையும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பலவற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூதெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண்களை, நான் நம்பாதிருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே நான் காண்கிறேன், அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் சில பலர், அடாதது கூறுகின்றனர், நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக்கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணராய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர் அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவியுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் கூவுவேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத்தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள், ஏட்டினைப் படித்தீர்கள், அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! எப்படி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி னது எங்ஙனம்? இதோ என் நண்பர், என் ஞானாசிரியன், அருணாசல ஐயர் கூட்டிவைத்தார் திரு அருளை என்னைத் தூண்டி, ஊக்குவித்து ஏடு எழுதச் செய்தார், செய்தேன். அன்புமழை பெய்தீர்கள். இதற்குக் காரணம், இவரன்றோ ! இவர் ஓர் அந்தணர் நான் அந்தணர் குலமல்ல ! எனினும், எனக்குக் கைகொடுத்தது அந்தணரே, என் புலமையை நீங்கள் தெரிந்துகொள்ளச் செய்தவரும் அவரே. இப்படிபட்ட அந்தணர் குலத்தை ஏனோ சில பலர் நிந்திக்கிறார்கள். தமது அறிவீனத்தை அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. சிவ! சிவ! அபசாரம்! அபசாரம்! இம்மை மறுமை இரண்டினுக்கும் இழுக்கு தேடுகிறார்கள் வழுக்கிவிழுந்த சழுக்கர்" என மள மள வென்று பொழிந்தார். சீடர் கை வலிக்க அதனை எழுதினார். அந்தப் பகுதி முடிந்ததும், பிரசங்க பூஷணம், வியர்வையைத் துடைத்துக்கொண்டு, "தம்பீ! எப்போதும் ஒன்று கவனமாகக் கேள், பிராமணர்களைப் புகழ்ந்தே பேசிவிட வேண்டும். ஏன் தெரியுமா? நாம் தமிழர், ஆகவே நாம் என்ன செய்தாலும் எதைப் பேசினாலும், எப்படி நடந்துகொண்டாலும், நமது தமிழ் மக்கள் நம்மைக் கெடுக்கமாட்டார்கள். பிராமணர்களோ, நமது இனமல்ல. ஆரியம் நுழைந்து, நம்மவரை அடுத்துக் கெடுத்திருக்கிறது. இன்னும் அதன் போக்கைத் தடுத்தால், நமக்குத் தொல்லைவிளையும். ஆகையினால் நமது சொற்பொழிவுகளிலே பிராமணர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டியும் ஆதரித்தும் வைத்தால், நமக்கு அவர்களால் தொல்லை வராது. தமிழர் கோபிப்பர், என்ன இந்தப் புலவன் இப்படிப் பிராமணர்களை ஆதரிக்கிறானே, இனப்பற்றே இல்லாமல் என்று கேட்பர். கேட்டால் என்ன! நண்பரே! நான், எந்தப் பிராமணனை ஆதரித்தேன், இன்றையப் படுபாவிகளையா? செச்சே! நான் என்ன மரக்கட்டையா? மண் பொம்மையா, எனக்கு ரோஷம் வராதிருக்க. நான் பாராட்டினது அந்தணர்களை! அன்பு நெறி, அருள்நெறி பூண்டவர்களை ஆதரித்தேன். அது பார்ப்பண குலத்துக்குள்ள பண்பா! என்று கூறினால், தமது தமிழ்த் தோழர்கள், நமது முதுகைத் தட்டிக் கொடுப்பர். ஆக நமக்கு ஆரியர், திராவிடர் ஆகிய இருவரிடத்திலும் சீரும் செல்வாக்கும் கிடைக்கும் " என்று கூறினார். சீடன் இந்த சீலத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறினான். பிரசங்கத்தைக் கூறலானார், கூறுமுன், மறுபடி ஒருமுறை சீடராகவே படித்துக் காட்டினார், தொடர்பு தெரிவிக்க. புலவர் புதுமுறுக்குடன் கூறத்தொடங்கினார் உடனே திகைத்தார். "தம்பி! ஒரு பச்சை நிறத்தாளைக் கண்டாயோ?" என்று கேட்டார். "இல்லையே! என்ன தாள் ?" என்றார் சீடர். "இன்றைய சொற்பொழிவு அழைப்பிதழ்" என்றார் பிரசங்க பூஷணம். உள்ளே ஓடினார் புத்தகங்களைப் புரட்டினார், துண்டுச் சீட்டுக் காணப்படவில்லை, துயருற்றார். மனைவியைக் கேட்டார், "அந்தக் குப்பையிலே அது எங்கே இருக்கிறதோ யார் கண்டது" என்று துடுக்காகக் கூறினர் அம்மையார். "உன் கண்களுக்கு அது குப்பைதான்! பேதாய்! அது குப்பை! அந்தக் குப்பையிலே கிடக்கும் மாணிக்கமும், மரகதமும், உனக்கென்னடி தெரியும்." என்று கண்டனக் குரலிலே பேசினார் புலவர். அம்மையார், சக்தி ஸ்வரூபமல்லவா! அவ்வளவு இலேசிலேவிடவில்லை.

"கோழி குப்பையைக் கிளறியாவது புழுபூச்சியைக் காண்கிறது, நீ இந்தக் குப்பையை கிளறிக்கிளறிக் கண்டது என்ன?” என்று கேட்டார்.

"பேதாய்! பெண்பேதாய்! பொன்னாசைகொண்ட பெண்பேதாய்! பொன்னும் பொருளும் எதற்கு? காதற்ற ஊசியும் வாராதுகாண் இக்கடைவழிக்கே" என்றார் புலவர் அந்த நேரத்திலே, அவர் காணாமற்போன சீட்டு இருக்கிறதா என்று பட்டினத்தார் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

"காதற்ற ஊசியும் வரத்தான்காணோம், நீ கத்திக் கத்தி வந்தும்" என்று கடிந்துரைத்தார் சக்தி. பூலோகநாதர் பதில் பேசவில்லை. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை. ஆனால் மனதிலேமட்டும் "கூறாமற் சன்யாசம் கொள்" என்ற வாசகம் குடியேறிக் குடையலாயிற்று. "குப்பையாம்! கம்பன் கோர்த்த இம்மணிகள் குப்பையாம்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பிரசங்க பூஷணம், புத்தகங்களின்மீது படிந்திருந்த தூசைத்தட்டிக் கொண்டிருந்தார்.

"தங்களைக் காண ஐயர் வந்திருக்கிறார்" என்று சீடன் தெரிவித்தான். ஓடோடிச் சென்றார், அருணாசல ஐயர் கூடத்திலே இருக்கக்கண்டு, "மாலை ஆறுமணிக்குத்தானே, இதற்குள்ளாகவா? நான் இன்னும் குறிப்புத் தயாரித்து முடிக்கவில்லையே" என்று கூறினார். "அவசரம் வேண்டாம். நிதானமாகவே தயாரிக்கலாம்" என்றார் ஐயர். அப்போதுதான், பிரசங்க பூஷணத்துக்கு நிம்மதியாயிற்று. பிரசங்கத்திலே இன்னும் குறள், நாலடியார், நன்னெறி, தேவார திருவாசகம், பட்டினத்தார் பாடல், தாயுமானார் பாடல் ஆகியவைகளை எங்கெங்கே புகுத்துவது என்றே தீர்மானிக்கவில்லை பிரசங்கத்துக்குரிய விஷயம் என்ன என்பது மறந்துவிட்டது. எந்த விஷயம் பற்றிப் பேசவேண்டுமெனக் குறிக்கப்பட்டிருந்தது என்பதை அறியத்தான் அந்தப் பச்சைத் துண்டுக் கடிதத்தைத் தேடினார். அந்தப் பாழாய்ப்போன கடிதம் காணவில்லை. இந்த நேரத்திலே ஐயர் வந்தால், பிரசங்க பூஷணம் பயப்படாமலிருப்பாரா! நல்லவேளை, அவசரம் இல்லை என்று கூறிவிட்டார். ஆகவே, அருமையாகத் தயாரித்துவிடலாம் பிரசங்கத்தை என்று மகிழ்ந்தார் "தலைவர் தயாராகத்தானே இருக்கிறார்?" என்று கேட்டார் ஐயரை, "நல்லகேள்வி கேட்டீர்கள். அவர் துடிக்கிறார்." என்றார் ஐயர். "அடடா! நமது ஜெமீன்தாரர் நிரம்பத் தமிழ் அறிவு அன்புபடைத்தவர். கவிதா உள்ளம் அவருக்கு" என்று அன்று தலைமை வகிக்க இருந்த ஆலூர் ஜெமீந்தாரரைப் பாராட்டிப் பேசினார் பிரசங்க பூஷ்ணம், பேசியபோதே அவர் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டிற்று.

"அடடா என்ன காரியம் செய்துவிட்டோம். முட்டாள் தனமாக காரியமல்லவா செய்தோம். பிரசங் கத்தை ஆரம்பிக்கும்போதே ஜெமீந்தாரரின் சீர் சிறப்புப் பற்றியும் குலப்பெருமை குடும்ப கௌரவம் பற்றியும் கொடை நடைபற்றியும் பாராட்டியன்றோ பேசவேண்டும். அவருக்கும், தமிழை அந்த காலத்திலே வளர்த்த மூவேந்தர்களுக்கும் உவமை காட்டி, அவருடைய உள்ளத்தை உருக்கவேண்டாமா? அதை எழுதாமல் வேறு எதை எதையோவன்றோ இதுவரை எழுதியிருந்தோம். இந்தப் பிரசங்கம் கூடாது. இதை மாற்றி எழுதியே ஆகவேண்டும். ஒரு விருத்தம், ஜெமீன்தாரரின் குணாதிசயத்தை புகழ்ந்துபாட வேண்டும் சரி! சரி! நிரம்ப வேலையிருக்கிறது. ஆனால் ஐயர்தான் அவசரம் வேண்டாம் என்று கூறிவிட்டாரே தயார்செய்து விடலாம் என்று எண்ணினார்.

"நம்ம ஜெமீன்தாரர், இந்த விழாவை ரொம்ப விமரிசையாக நடத்திவிடவேண்டுமென்று முனைந்து நிற்கிறார். நான் சொற்பொழிவுடன் நிறுத்தலாம் என்றேன் அவர், "அது கூடாது. புலவரின் சொற்பொழிவுடன் பாட்டுக் கச்சேரியும், நடனக்கச்சேரியும் நடத்திவிடவேண்டும் என்று கூறினார். பிரசங்க பூஷணத்துக்கு பெரிய ரோஜாப்பூ மாலை போட்டாகவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். மல்லிகை மாலைதான் தயார் செய்தேன் என்று சொன்னேன். அவருக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவருடைய புலமை என்ன, அறிவு என்ன, ஆராய்ச்சி என்ன, அவருக்குக் கேவலம் மல்லிகை மாலையாபோடுவது. அதை உங்கள் கோயில் மாட்டின் கழுத்திலே போடு என்று கோபித்துக் கூறினார். ரோஜா மாலையே வாங்கிவிடுவோம் என்று கூறினேன்.

சதிர்க் கச்சேரிக்குச் சிந்தாமணி சகோதரிகளையும், பாட்டுக்கச்சேரிக்குப் பழனியப்பனையும் ஏற்பாடு செய்து விட்டாராம். செலவு அவருடையது. நாயனத்துக்கு நல்ல கண்ணு பார்ட்டி, ஏற்பாடாகிவிட்டது. நான் ஏதோ சாமான்யமாக ஒரு சொற்பொழிவு நடத்த நினைத்தேன், அது பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. இன்னும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சதிர் நடத்தப்போகும் சிந்தாமணி நமது ஆலமரத்தடியார் கோயிலில் தாசியாக போகிறாள். அந்த முத்திரை வைபவமும் நடைபெறப் போகிறது. உம்மிடம் உண்மையைச் சொல்லுகிறேன் இவ்வளவு "ஜோராக" ஏற்பாடுகளை ஜெமீந்தார் மாற்றிச் செய்வதற்குக் காரணமே, சிந்தாமணிக்கு அவருடன் இருக்கும் சிநேகிதந்தான். உம்ம பிரசங்க விஷயத்தைக் கூட ஜெமீன்தார் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டார். "நாட்டியக் கலையும் நாட்டு முன்னேற்றமும்" என்பது பற்றிப் பேசவேண்டும் என்று அருணாசல ஐயர், ஆனந்தமாகக் கூறினார். புலவருக்கோ விழா விமரிசையாக மாறுவது கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, என்றாலும், நாட்டியக்கலைபற்றி என்ன பேசுவது என்ற திகைப்பு உண்டாயிற்று. உடனே அது போய்விட்டது, சே! இது என்ன பிரமாதம்! சிலப்பதிகாரம் இருக்கவே இருக்கிறது என்று தைரியமடைந்து.

"சரி ஜெமீன்தார் இவ்வளவு அக்கரை எடுத்தது நமது அதிர்ஷ்டம் அவர் இஷ்டப்படியே நான் நாட்டியக் கலையைப்பற்றிப் பேசுகிறேன். அதில் என்ன தடை இருக்கிறது? அருங்கலைகளுள் அது ஒன்று. ஐயன் தில்லையில் அதனை விளக்குகிறான். அம்மைக்கும் அது ஆனந்தமே! பிரபஞ்சமே அரங்கம்! நாமெல்லாம் நாட்டியப் பதுமைகள் அவன் ஆட்டுவிக்கிறான்." என்றார் புலவர்.

"பேஷ் பேஷ்! சிந்தாமணி சொக்கிவிடுவாள் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு" என்றார் ஐயர். "தமிழ் இனிமை எனும் பொருளுடைத்து" என்றார் புலவர் பெருமையுடன்.

"சிந்தாமணி நம்ம கோயில் தாசியாகிவிட்டால் பிறகு, கோயிலுக்குக் கூட்டம் ஏராளமாக வரும். வாரந்தோறும் ஓர் பிரசங்கம் செய்யலாம் நீர்" என்று களிப்புடன் கூறினார் ஐயர். புலவருக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது அந்தப் பேச்சு, இருந்தாலும் சகித்துக்கொண்டார்.

"சரி! நான் ஆறுமணிக்கு ஆலயம் வத்துவிடுகிறேன்" என்று கூறினார் புலவர், சீக்கிரமாக இவன் தொலைந்தால்தானே சிலப்பதிகாரத்தைத் தேடி எடுக்கலாம் என்ற சிந்தனையுடன் ஜெமீன்தார், "ஏற்பாடுகளிலே செய்த மாறுதலைச் சொன்னேனே தவிர, முக்கியமான மாறுதலைச் சொல்ல மறந்துவிட்டேனே, பிரசங்க தேதியை மாற்றி விட்டார், அடுத்த வெள்ளிக்கிழமைதான், இந்த வைபவம்" என்று ஐயர் கூறினார். பிரசங்கபூஷணர், பேசவும் முடியாத சோகமுற்றார். காலைமுதல் எவ்வளவு கஷ்டம்! சிந்தனை! தயாரிப்பு! கடைசியில் பிரசங்கம் இன்று இல்லை என்று எவ்வளவு சுலபத்தில் சொல்லிவிட்டார்கள்—என்று சோகமுற்றார். ஐயர் விடைபெற்றுக்கொண்டு போனார். புலவர், ஏடு எழுதுபவனை வீடு ஏகச்சொல்லிவிட்டு அதுவரையிலே தயாரித்த அரிய சொற்பொழிவைப் படித்துப் படித்து ரசித்தார். வேறென்ன செய்வார், பாபம்! சீடன் ஓடோடி வந்தான் அதே நேரத்தில். " மறந்தே போனேன்! நீங்களும் மறந்து போனீர்களே ! அடுத்த வெள்ளிக்கிழமை, புன்னைவனநாதர் கோயிலிலே ஓர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடாகி இருக்கிறதே. இங்கும் அதே கிழமையிலே எப்படி நடத்துவது " என்று கேட்டான்.

"என்ன தம்பி! இதுவா பிரமாதம். ஒரே நாளிலே இரண்டு சொற்பொழிவுகள் நடத்தவாமுடியாது. பிரசங்க பூஷணம் என்ற பெயர் என்ன அர்த்தமற்றதா பைத்தியக்காரப்பிள்ளை! புன்னைவன நாதர்கோயில் இங்கிருந்து மூன்று கல் தொலைவு. மாலை மூன்றுக்கு அங்கே பேசுவது. இங்கே 6-மணிக்கு மேல்தானே ஆரம்பம். ஒரு பேச்சுச் சொல்லி அனுப்பினா ஜெமீன்தார் தமது பெட்டி வண்டியை அனுப்பிவைக்கிறார்" என்று புலவர் கூறினார்.

"சரிதான்! எதற்கும் தங்களுக்குக் கவனப்படுத்தலாம் என்று வந்தேன் " என்று கூறினான் சீடன்.

"கவனப்படித்தினது நல்லதுதான். நான் மறந்துதான், போய்விட்டேன். ஆமாம், நினைவில்லை, புன்னைவனநாதர் கோயிலிலே எதைப்பற்றி நான் பிரசங்கம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது" என்று புலவர் கேட்டார்.

கொஞ்சம் பயத்துடன் சீடன், "நாட்டியக்கலையின் கேடுகள்" என்றான். பிரசங்க பூஷணத்தின் காதிலே அந்தப் பேச்சுப் புகுந்ததும், அவருக்குப் பிரபஞ்சமே நாட்டியமாடுவது போலிருந்தது! என்ன செய்வார்!!

"சரி! போடா!" என்று, சீடன் மீது காட்டினார், கோபத்தை! வேறு எங்கே காட்டுவது?

"நீ பிறந்தது வெள்ளிக்கிழமை
      ராஜாதேசிங்கு
உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை
      ராஜாதேசிங்கு
சண்டை பிறந்தது வெள்ளிக்கிழமை
      ராஜாதேசிங்கு"

என்றபாடல் வேறு அவர் மனதிலே புகுந்து குடைந்தது!