கலிங்கத்துப் பரணி/கடவுள் வாழ்த்து
உமாபதி துதி
தொகு1.
- புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
- தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்
- செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்
- புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம் . 1
2.
- அருமறையி னெறிகாட்ட வயன்பயந்த
- நிலமகளை யண்டங் காக்கும்
- உரிமையினிற் கைப்பிடித்த வுபயகுலோத்
- தமனபயன் வாழ்க வென்றே. 2
திருமால் துதி
தொகு3.
- ஒருவயிற்றிற் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்குந்
- திருவயிற்றிற் றொருகுழவி திருநாமம் பரவுதுமே. 3
4.
- அந்நெடுமா லுதரம்போ லருளபயன் றனிக்கவிகை
- இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே. 4
நான்முகன் துதி
தொகு5.
- உகநான்கும் பொருணான்கு முபநிடத மொருநான்கு
- முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே. 5
6.
- நிலநான்குந் திசைநான்கு நெடுங்கடல்க ளொருநான்குங்
- குலநான்குங் காத்தளிக்குங் குலதீபன் வாழ்கவென்றே. 6
சூரியன் துதி
தொகு7.
- பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க
- ஓராழி தனைநடத்து மொண்சுடரைப் பரவுதுமே. 7
8.
- பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்கத்
- தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே. 8
கணபதி துதி
தொகு9.
- காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக்
- கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்
- டாரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும்
- ஐங்கரத்த தொருகளிற்றுக் கன்பு செய்வாம். 9
10.
- தனித்தனியே திசையானைத் தறிக ளாகச்
- சயத்தம்பம் பலநாட்டி யொருகூ டத்தே
- அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும்
- அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க வென்றே. 10
முருகவேள் துதி
தொகு11.
- பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய நிறம்படைத்த புயமுங் கண்ணும்
- பன்னிரண்டு மாறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம். 11
12.
- ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந் தொருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்
- ஈரிரண்டு படைத்துடைய விரவிகுலோத் தமனபயன் வாழ்க வென்றே. 12
நாமகள் துதி
தொகு13.
- பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் புயத்திருப்ப மிகவுயரத் திருப்ப ளென்று
- நாமாதுங் கலைமாது மென்னச் சென்னி நாவகத்து ளிருப்பாளை நவிலு வாமே. 13
14.
- எண்மடங்கு புகழ்மடந்தை நல்ல னெங்கோன் யானவன்பா லிருப்பதுநன் றென்பாள் போல
- மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே. 14
உமையவள் துதி
தொகு15.
- செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத்
- தெய்வமுத னாயகனை யெய்தசிலை மாரன்
- கையின்மலர் பாதமலர் மீதுமணு காநங்
- கன்னிதன் மலர்க்கழல்கள் சென்னிமிசை வைப்பாம். 15
16.
- கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக்
- கார்முகம்வ ளைத்துதியர் கோமகன்மு டிக்கட்
- பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
- பூழியர்பி ரானபயன் வாழ்கவினி தென்றே. 16
சத்த மாதர்கள் துதி
தொகு17.
- மேதி புள்ளலகை தோகை யேறுவணம் வேழ மென்றகொடி யேழுடைச்
- சோதி மென்கொடிக ளேழி னேழிருது ணைப்ப தந்தொழநி னைத்துமே. 17
18.
- கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடி
- தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப்பு லிக்கொடித ழைக்கவே. 18
வாழி
தொகு19.
- விதிமறை யவர்தொழில் விளைகவே விளைதலின் முகில்மழை பொழிகவே
- நிதிதரு பயிர்வளம் நிறைகவே நிறைதலி னுயிர்நிலை பெறுகவே. 19
20.
- தலமுத லுளமனு வளர்கவே சயதர னுயர்புலி வளர்கவே
- நிலவுமிழ் கவிகையும் வளர்கவே நிதிபொழி கவிகையும் வளர்கவே. 20