கலிங்கத்துப் பரணி/கடை திறப்பு

உடல் அழகு

தொகு

21.

சூதள வளவெனு மிளமுலைத் துடியள வளவெனு நுண்ணிடைக்
காதள வளவெனு மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. 1

மார்பழகு

தொகு

22.

புடைபட விளமுலை வளர்தொறும் பொறையறி வுடையரு நிலைதளர்ந்
திடைபடு வதுபட வருளுவீர் இடுகத வுயர்கடை திறமினோ. 2

நடை அழகு

தொகு

23.

சுரிகுழ லசைவுற வசைவுறத் துயிலெழு மயிலென மயிலெனப்
பரிபுர வொலியெழ வொலியெழப் பனிமொழி யவர்கடை திறமினோ. 3

ஊடிய மகளிர்

தொகு

24.

கூடிய வின்கன வதனிலே கொடைநர துங்கனொ டணைவுறா
தூடிய நெஞ்சினொ டூடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. 4

விடுமின் பிடிமின்

தொகு

25.

விடுமி னெங்கள்துகில் விடுமி னென்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினைப்
பிடிமி னென்றபொருள் விளைய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமினோ. 5

கனவா நனவா

தொகு

26.

எனத டங்கவினி வளவர் துங்கனருள் எனம கிழ்ந்திரவு கனவிடைத்
தனத டங்கண்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ. 6

ஊடலும் கூடலும்

தொகு

27.

முனிபவ ரொத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலு முத்துதிருங்
கயல்க ளிரண்டுடையீர் கடைதிற மின்றிறமின். 7

பொய்த் துயில்

தொகு

28.

இத்துயின் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
இதுபுல விக்குமருந் தெனமனம் வைத்தடியிற்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிற வாமடவீர் கடைதிற மின்றிறமின். 8

கனவில் பெற முயல்தல்

தொகு

29.

இகலி ழந்தரசர் தொழவ ரும்பவனி இரவுகந் தருளு கனவினிற்
பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ. 9

முத்துமாலையும் பவளமாலையும்

தொகு

30.

முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேன் முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 10

ஆத்திமாலையின் மேல் ஆசை

தொகு

31.

தண்கொடை மானதன் மார்புதோய் தாதகி மாலையின் மேல்விழுங்
கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 11

படைக்கும் கண்களுக்கும் ஒப்புமை

தொகு

32.

அஞ்சியே கழல்கெடக் கூடலிற் பொருதுசென்
றணிகடைக் குழையிலே விழவடர்த் தெறிதலால்
வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
மடநலீ ரிடுமணிக் கடைதிறந் திடுமினோ. 12

கூடலில் தோன்றும் நிகழ்ச்சிகள்

தொகு

33.

அவசமுற் றுளநெகத் துயினெகப் பவளவாய்
அணிசிவப் பறவிழிக் கடைசிவப் புறநிறைக்
கவசமற் றிளநகை களிவரக் களிவருங்
கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ. 13


கலவி மயக்கம்

தொகு

34.

கலவிக் களியின் மயக்கத்தாற்
    கலைபோ யகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்!
    நீள்பொற் கபாடந் திறமினோ!.

நனவும் கனவும்

தொகு

35.

நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
நனவெனத் தெளிவுறா ததனையும் பழையவக்
கனவெனக் கூறுவீர் தோழிமார் நகைமுகங்
கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ. 15

மகளிர் உறங்காமை

தொகு

36.

மெய்யே கொழுநர் பிழைநலிய வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கு மடநல்லீர் புனைபொற் கபாடந் திறமினோ. 16

கொழுநர் மார்பில் துயில்

தொகு

37.

போக வமளிக் களிமயக்கிற் புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக வமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாடந் திறமினோ. 17

பிரிவாற்றாமை

தொகு

38

ஆளுங் கொழுநர் வரவுபார்த் தவர்தம் வரவு காணாமல்
தாளு மனமும் புறம்பாகச் சாத்துங் கபாடந் திறமினோ. 18

ஒன்றில் இரண்டு

தொகு

39.

உந்திச் சுழியின் முளைத்தெழுந்த உரோமப் பசுந்தா ளொன்றிலிரண்
டந்திக் கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாடந் திறமினோ. 19

சிறைப்பட்ட மகளிர் நிலை

தொகு

40.

மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடிக்
கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின். 20

மகளிரை கப்பப்பொருளாக அளித்தல்

தொகு

41.

அலைநாடிய புனனாடுடை யபயர்க்கிடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையிற் கடைதிறமின். 21

தோளைத் தழுவி விளையாடல்

தொகு

42.

விலையி லாதவடம் முலையி லாடவிழி குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ. 22

கன்னடப் பெண்டிரின் பேச்சு

தொகு

43.

மழலைத்திரு மொழியிற்சில வடுகுஞ் சிலதமிழுங்
குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின். 23

தழுவிய கை நழுவல்

தொகு

44.

தழுவுங் கொழுநர் பிழைநலியத் தழுவே லென்னத் தழுவியகை
வழுவ வுடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 24

மகளிர் புன்னகை

தொகு

45.

வேகம் விளைய வருங்கொழுநர் மேனி சிவந்த படிநோக்கிப்
போகம் விளைய நகைசெய்வீர் புனைபொற் கபாடந் திறமினோ. 25

உறக்கத்திலும் முகமலர்ச்சி

தொகு

46

சொருகு கொந்தளக மொருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே
திருவ னந்தலினு முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ. 26


நெஞ்சம் களிப்பீர்

தொகு

47

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத வவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின். 27

மதர்விழி மாதர்

தொகு

48

கடலில் விடமென வமுதென மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலி னுயிரையு முணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ. 28

பிறைநிலவும் முழுநிலவும்

தொகு

49

முறுவன் மாலையொடு தரள மாலைமுக மலரின் மீதுமுலை முகிழினுஞ்
சிறுநி லாவுமதின் மிகுநி லாவுமென வருந லீர்கடைகள் திறமினோ. 29

திருகிச் செருகும் குழல் மாதர்

தொகு

50

முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிருந்
திருகிச் செருகுங் குழன்மடவீர் செம்பொற் கபாடந் திறமினோ. 30

கொழுநரை நினைந்தழும் பெண்கள்

தொகு

51

மெய்யில ணைத்துருகிப் பையவ கன்றவர்தா
மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்தறவே
கையில ணைத்தமணற் கண்பனி சோர்புனலிற்
கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்றிறமின். 31

ஊடன் மகளிர்

தொகு

52

செருவிள நீர்பட வெம்முலைச் செவ்விள நீர்படு சேயரிக்
கருவிள நீர்பட வூடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 32

நடந்துவரும் அழகு

தொகு

53

அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்
இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ. 33

இதழ் சுவைத்தல்

தொகு

54

மதுர மானமொழி பதற வாள்விழிசி வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
அதர பானமது பான மாகவறி வழியு மாதர்கடை திறமினோ. 34

வேதும் மருந்தும்

தொகு

55

தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலை வேதுகொண் டொற்றியுஞ்
செங்கனி வாய்மருந் தூட்டுவீர் செம்பொ னெடுங்கடை திறமினோ. 35

வேதும் கட்டும்

தொகு

56

பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு புண்கள் தீரவிரு கொங்கையின்
கருங்கண் வேதுபட வொற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினோ. 36

விழுதலும் எழுதலும்

தொகு

57

இடையி னிலையரி திறுமிறு மெனவெழா எமது புகலிட மினியிலை யெனவிழா
அடைய மதுகர மெழுவது விழுவதாம் அளக வனிதைய ரணிகடை திறமினோ. 37

சிலம்புகள் முறையிடல்

தொகு

58

உபய தனமசையி லொடியு மிடைநடையை ஒழியு மொழியுமென வொண்சிலம்
பபய மபயமென வலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 38

பெண்ணுக்கும் பொன்னிக்கும் ஒப்புமை

தொகு

59

பூவிரி மதுகரம் நுகரவும் பொருகய லிருகரை புரளவுங்
காவிரி யெனவரு மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ. 39

வண்டுகள் கூந்தலிற் பந்தலிடல்

தொகு

60

களப வண்டலிடு கலச கொங்கைகளின் மதியெ ழுந்துகனல் சொரியுமென்
றளக பந்திமிசை யளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 40

விழி சிவக்கும் உதடு வெளுக்கும்

தொகு

61

வாயிற் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி யமுதளிப்பீர் துங்கக் கபாடந் திறமினோ. 41

கலவியில் நிகழ்வன

தொகு

62

கூடு மிளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்
கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
கலவி விடாமடவீர் கடைதிற மின்றிறமின். 42

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது

தொகு

63

காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த களப்போர் பாடத் திறமினோ. 43

கருணாகரனின் போர்ச்சிறப்பு

தொகு

64

இலங்கை யெறிந்த கருணா கரன்தன்
    இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன்
    களப்போர் பாடத் திறமினோ. 44

நினைவும் மறதியும்

தொகு

65

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
      பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்!
      கனப்பொற் கபாடந் திறமினோ. 45

உறவாடும் மாதர்

தொகு

66

வாச மார்முலைகண் மார்பி லாடமது மாலை தாழ்குழலின் வண்டெழுந்
தூச லாடவிழி பூச லாடவுற வாடு வீர்கடைகள் திறமினோ. 46

வாய் புதைக்கும் மடநல்லீர்

தொகு

67

நேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கு மடநல்லீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 47

மதியொளிக்கு நடுங்குவீர்

தொகு

68

பொங்கு மதிக்கே தினநடுங்கிப் புகுந்த வறையை நிலவறையென்
றங்கு மிருக்கப் பயப்படுவீர் அம்பொற் கபாடந் திறமினோ. 48

தேயும் குடுமி

தொகு

69

வருவார் கொழுந ரெனத்திறந்தும் வாரார் கொழுந ரெனவடைத்துந்
திருகுங் குடுமி விடியளவுந் தேயுங் கபாடந் திறமினோ. 49

புலவியும் கலவியும்

தொகு

70

ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ ழிந்து கூடுதலி னுங்களைத்
தேடு வீர்கடைகள் திறமி னோவினிய தெரிவை மீர்கடைகள் திறமினோ. 50

கண்ணின் இயல்பு

தொகு

71

பண்படு கிளவியை யமுதெனப் பரவிய கொழுநனை நெறிசெயக்
கண்கொடு கொலைசெய வருளுவீர் கனக நெடுங்கடை திறமினோ. 51

தரையில் விரல் எழுதுவீர்

தொகு

72

பிழைநி னைந்துருகி யணைவு றாமகிழ்நர் பிரித லஞ்சிவிடு கண்கணீர்
மழை ததும்பவிரல் தரையி லேயெழுதும் மடந லீர்கடைகள் திறமினோ. 52

குலோத்துங்கன் போன்றீர்

தொகு

73

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனைவிட்
டக்கா னகத்தே யுயிர்பறிப்பீர் அம்பொற் கபாடந் திறமினோ. 53

பூவும் உயிரும் செருகுவீர்

தொகு

74

செக்கச் சிவந்த கழுநீருஞ் செகத்தி லிளைஞ ராருயிரும்
ஒக்கச் செருகுங் குழன்மடவீர் உம்பொற் கபாடந் திறமினோ. 54