கலிங்கத்துப் பரணி/காளிக்குக் கூளி கூறியது

நாவாயிரம் நாளாயிரம்

தொகு

312

மாவா யிரமும் படக்கலிங்கர் மடிந்த களப்போ ருரைப்போர்க்கு
நாவா யிரமுங் கேட்போர்க்கு நாளா யிரமும் வேண்டுமால். 1

சிறியேன் விண்ணப்பம்

தொகு

313

ஒருவர்க் கொருவாய் கொண்டு ரைக்க ஒண்ணா தேனு முண்டாகுஞ்
செருவைச் சிறியேன் விண்ணப்பஞ் செய்யச் சிறிது கேட்டருளே. 2

காஞ்சனம் பொழிகாஞ்சி

தொகு

314

பாரெ லாமுடை யானப யன்கொடைப் பங்க யக்கர மொப்பெனப் பண்டொர்நாள்
காரெ லாமெழுந் தேழரை நாழிகைக் காஞ்ச னம்பொழி காஞ்சிய தன்கணே. 3

சித்திர மண்டபத்தில்

தொகு

315

அம்பொன் மேருவ துகொலி துகொலென் றாயி ரங்கதிர் வெய்யவ னையுறுஞ்
செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினிற் செய்த சித்திர மண்டபந் தன்னிலே. 4

நித்திலப் பந்தரின்கீழ்

தொகு

316

மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள் முகட் டெழுந்த முழுமதிக் கொப்பென
நெய்த்தி லங்கிய நித்திலப் பந்தரின் நின்று வெண்குடை யொன்று நிழற்றவே. 5

குடையும் சாமரையும்

தொகு

317

மேற்க வித்த மதிக்குடை யின்புடை வீசு கின்றவெண் சாமரை தன்றிருப்
பாற்க டற்றிரை யோரிரண் டாங்கிரு பாலும் வந்து பணிசெய்வ போலுமே. 6

சிங்க ஏறு

தொகு

318

அங்கண் ஞால மனைத்தும் புயத்தில்வைத் தாட கக்கிரி யிற்புலி வைத்தவன்
சிங்க ஆசனத் தேறி யிருப்பதோர் சிங்க வேறெனச் செவ்வி சிறக்கவே. 7

இருந்த மாட்சி

தொகு

319

பணிப் பணத்துறை பார்க்கொரு நாயகன் பல்க லைத்துறை நாவிலி ருந்தவன்
மணிப்ப ணிப்புயத் தேசிங்க வாகனி வந்து செந்திரு மாதொடி ருக்கவே. 8

தேவியர் சேவித்திருந்தனர்

தொகு

320

தரும டங்கமு கந்துத னம்பொழி தன்பு யம்பிரி யாச்சயப் பாவையுந்
திரும டந்தையும் போற்பெரும் புண்ணியஞ் செய்த தேவியர் சேவித் திருக்கவே. 9

ஏவற் பெண்டிர்

தொகு

321

நாட காதிநி ருத்தம னைத்தினு நால்வ கைப்பெரும் பண்ணினு மெண்ணிய
ஆடல் பாடல ரம்பைய ரொக்குமவ் வணுக்கி மாரும நேகரி ருக்கவே. 10

புகழ் பாடுவோம்

தொகு

322

சூதர் மாகத ராதிய மாந்தருந் துய்ய மங்கலப் பாடகர் தாமுநின்
பாத மாதர ராயவர் கட்கெலாம் பைம்பொன் மௌலியெ னப்புகழ் பாடவே. 11

இசை வல்லார் போற்றினர்

தொகு

323

வீணை யாழ்குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறிவை நூறுவி தம்படக்
காண லாம்வகை கண்டனம் நீயினிக் காண்டல் வேண்டுமெ னக்கழல் போற்றவே. 12

கல்வியில் பிழை

தொகு

324

தாள முஞ்செல வும்பிழை யாவகை தான் வகுத்தன தன்னெதிர் பாடியே
காள முங்களி றும்பெறும் பாணர்தங் கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே. 13

மன்னவர் பணிமாறினர்

தொகு

325

வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்னிடு
தங்கள் பொற்குடை சாமர மென்றிவை தாங்கள் தங்கரத் தாற்பணி மாறவே. 14

மன்னர் மனைவியர் சேடியர்

தொகு

326

தென்ன ராதிந ராதிப ரானவர் தேவி மார்கள்தன் சேடிய ராகவே
மன்ன ராதிபன் வானவ ராதிபன் வந்தி ருந்தன னென்னவி ருக்கவே. 15

அமைச்சர் முதலியோர்

தொகு

327

மண்ட லீகரு மாநில வேந்தரும் வந்து ணங்குக டைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடியி ருக்கவே. 16

கப்பம் செலுத்தச் சென்றனர்

தொகு

328

முறையி டத்திரு மந்திர ஓலையாண் முன்வ ணங்கிமு ழுவதும் வேந்தர்தந்
திறையி டப்புற நின்றன ரென்றலுஞ் செய்கை நோக்கிவந் தெய்தியி ருக்கவே. 17

கூடியிருந்த அரசர்கள்

தொகு

329

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 18

330

கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 19

331

சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 20

332

வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 21

333

எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிடச்
சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே. 22

திறைப் பொருள்கள்

தொகு

334

ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்
ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்
ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய
ஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில் பதக்கமே. 23

335

இவையு மிவையு மணித்திரள் இனைய விவைகன கக்குவை
இருளும் வெயிலு மெறித்திட இலகு மணிமக ரக்குழை
உவையு முவையுமி லக்கணம் உடைய பிடியிவை யுள்பக
டுயர்செய் கொடியிவை மற்றிவை உரிமை யரிவையர் பட்டமே. 24

336

ஏறி யருளவ டுக்குமிந் நூறு களிறுமி வற்றெதிர்
ஏனை யரசரொ ருத்தரோர் ஆனை யிடுவரெ னிற்புவி
மாறி யருளவ வர்க்கிடை யாமு மிசைவமெ னப்பல
மான வரசர்த னித்தனி வாழ்வு கருதியு ரைப்பரே. 25

உளர் கொல்

தொகு

337

அரச ரஞ்சலென வடியி ரண்டுமவர் முடியின் வைத்தருளி யரசர்மற்
றுரைசெ யுந்திறைக ளொழிய நின்றவரும் உளர்கொ லென்றருளு பொழுதிலே. 26

திருமந்திர ஓலையின் மறுமொழி

தொகு

338

கடகர் தந்திறைகொ டடைய வந்தரசர் கழல்வ ணங்கினர்க ளிவருடன்
வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை வருகி லன்றிறைகொ டெனலுமே. 27

முறுவல் கொண்டான்

தொகு

339

உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர் உயிர் நடுங்கவொளிர் பவளவாய்
முறுவல் கொண்டபொரு ளறிகி லஞ்சிறிது முனிவு கொண்டதிலை வதனமே. 28

குலோத்துங்கனின் கட்டளை

தொகு

340

எளிய னென்றிடினும் வலிய குன்றரணம் இடிய நம்படைஞர் கடிதுசென்
றளிய லம்புமத மலைகள் கொண்டணைமின் அவனை யுங்கொணர்மி னெனலுமே. 29

தொண்டைமான் எழுந்தான்

தொகு

341

இறைமொ ழிந்தளவி லெழுக லிங்கமவை எறிவ னென்றுகழல் தொழுதனன்
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநக ரரசனே. 30

விடை அளித்தான்

தொகு

342

அடைய வத்திசைப் பகைது கைப்பனென் றாசை கொண்டடற் தொண்டைமான்
விடையெ னக்கெனப் புலியு யர்த்தவன் விடைகொ டுக்கவப் பொழுதிலே. 31

படைகள் திரண்டன

தொகு

343

கடல்க லக்கல்கொன் மலையி டித்தல்கொல் கடுவி டப்பொறிப் பணபணிப்
பிடரொ டித்தல்கொல் படைநி னைப்பெனப் பிரள யத்தினிற் றிரளவே. 32

திசை யானைகள் செவிடுபட்டன

தொகு

344

வளைக லிப்பவு முரசொ லிப்பவு மரமி ரட்டவும் வயிரமாத்
தொளையி சைப்பவுந் திசையி பச்செவித் தொளைய டைத்தலைத் தொடரவே. 33

இருள் பரந்தது

தொகு

345

குடைநி ரைத்தலிற் றழைநெ ருக்கலிற் கொடிவி ரித்தலிற் குளிர்ச துக்கமொத்
திடைநி ரைத்தலிற் பகல்க ரப்பவுய்த் திருநி லப்பரப் பிருள்ப ரக்கவே. 34

ஒளி பிறந்தது

தொகு

346

அலகில் கட்டழற் கனல்வி ரித்தலால் அரிய பொற்பணிக் கலனெ றித்தலால்
இலகு கைப்படை கனல்வி ரித்தலால் இருள்க ரக்கவே யொளிப ரக்கவே. 35

கண்டவர் வியப்பு

தொகு

347

அகில வெற்புமின் றானை யானவோ அடைய மாருதம் புரவி யானவோ
முகில னைத்துமத் தேர்க ளானவோ மூரி வேலைபோர் வீர ரானவோ. 36

படையின் பரப்பு

தொகு

348

பார்சி றுத்தலிற் படைபெ ருத்ததோ படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம் நெடுவி சும்பலா லிடமு மில்லையே. 37

படை பொறுமை இழந்தது

தொகு

349

எனவெ டுத்துரைத் ததிச யித்துநின் றினைய மண்ணுளோ ரனைய விண்ணுளோர்
மனந டுக்குறப் பொறைம றத்தலான் மாதி ரங்களிற் சாது ரங்கமே. 38

யானைகள் சென்றன

தொகு

350

கடல்க ளைச்சொரி மலையுள வெனவிரு கடத டத்திடை பொழிமத முடையன
கனல்வி ளைப்பன முகிலுள வெனவிழி கனல்சி னத்தன கரியொடு பரிகளின்
உடல்பி ளப்பன பிறைசில வுளவென உயர்ம ருப்பின வுலகுகள் குலைதர
உருமி டிப்பன வடவன லுளவென ஒலிமு கிற்கட கரிகளு மிடையவே. 39

குதிரைகள் சென்றன

தொகு

351

முனைக ளொட்டினர் முடியினை யிடறுவ முடியின் முத்தினை விளைபுக ழெனநில
முதுகில் வித்துவ நிலமுறு துகளற முகின்மி திப்பன முகில்விடு துளியொடு
கனை கடற்றிரை நிரையென விரைவொடு கடலி டத்தினை வலமிடம் வருவன
கடலி டத்திறு மிடியென வடியிடு கவன மிக்கன கதழ்பரி கடுகவே. 40

தேர்கள் சென்றன

தொகு

352

இருநி லத்திட ருடைபடு முருளன இருபு டைச்சிற குடையன முனைபெறின்
எதிர்ப றப்பன விடுநுக மொடுகடி திவுளி முற்படி னிதுபரி பவமெனும்
ஒருநி னைப்பினை யுடையன வினையன உயர்செய் மொட்டொடு மலரென நிறுவிய
ஒழித ரச்செரு வுறுபுன லுமிழ்வன உலக ளப்பன விரதமு மருவியே. 41

வீரர்கள் சென்றனர்

தொகு

353

அலகில் வெற்றியு முரிமையு மிவையென
அவய வத்தினி லெழுதிய வறிகுறி
அவையெ னப்பல வடு நிரை யுடையவர்
அடிபு றக்கிடி லமரர்த முலகொடிவ்
வுலகு கைப்படு மெனினும தொழிபவர்
உடல் நமக்கொரு சுமையென முனிபவர்
உயிரை விற்றுறு புகழ்கொள வுழல்பவர்
ஒருவ ரொப்பவர் படைஞர்கண் மிடையவே. 42

வீரர் சிரிப்பொலி

தொகு

354

விழித்த விழிதனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்தவாய்
தெழித்த பொழுதுடல் திமிர்க்க விமையவர் திகைக்கண் மதகரி திகைக்கவே. 43

குதிரைகளின் வாய்நுரை

தொகு

355

உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் உவட்டி யெனமுகில் முகட்டின்மேல்
நகைத்த விடுபரி முகக்கண் நுரைசுர நதிக்கண் நுரையென மிதக்கவே. 44

யானைகளின் பிளிறல் ஒலி

தொகு

356

கழப்பில் வெளில்சுளி கதத்தி லிருகவுள் கலித்த கடமிடி பொறுத்த போர்க்
குழப்பி வருமுகின் முழக்கி லலைகடல் குளிக்கு முகில்களு மிடக்கவே. 45

தேர்ப்படைகளின் ஒலி

தொகு

357

கடுத்த விசையிருள் கொடுத்த வுலகொரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர்
எடுத்த கொடிதிசை யிபத்தின் மதமிசை இருக்கு மளிகளை யெழுப்பவே. 46

எழுந்தது சேனை

தொகு

358

எழுந்தது சேனை யெழலு மிரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானு மலையும் வெறுந்தரை யான திசைகள். 47

அதிர்ந்தன திசைகள்

தொகு

359

அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம். 48

புழுதியால் வறண்டன

தொகு

360

நிலந்தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு
வலந்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி. 49

புழுதி தணிந்தது

தொகு

361

தயங்கொளி ஓடை வரைகள் தருங்கடம் தாரை மழையின்
அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய. 50

இரவு தங்கிப் பகலில் சென்றன

தொகு

362

எழுதூ ளியடங் கநடந் துதயத் தேகுந் திசைகண் டதுமீ ளவிழும்
பொழுதே கலொழிந் துகடற் படையெப் பொழுதுந் தவிரா துவழிக் கொளவே. 51

கருணாகரன் சென்றான்

தொகு

363

தண்ணா ரின்மலர்த் திரள்தோ ளபயன் தானே வியசே னைதனக் கடையக்
கண்ணா கியசோ ழன்சக் கரமாம் கருணா கரன்வா ரணமேற் கொளவே. 52

பல்லவ அரசன் சென்றான்

தொகு

364

தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி துங்க வெள்விடையு யர்த்தகோன்
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு மால்க ளிற்றின்மிசை கொள்ளவே. 53

அரையனும் சோழனும் சென்றனர்

தொகு

365

வாசி கொண்டரசர் வார ணங்கவர வாண கோவரையன் வாண்முகத்
தூசி கொண்டுமுடி கொண்ட சோழனொரு சூழி வேழமிசை கொள்ளவே. 54

போர்மேற் செல்லல்

தொகு

366

மறித்தோடி யெவ்வரசுஞ் சரிய வென்று
வருமனுக்கைப் பல்லவர்கோன் வண்டை வேந்தன்
எறித்தோடை யிலங்குநடைக் களிற்றின் மேற்கொண்
டிரைவேட்ட பெரும்புலிபோ லிகன்மேற் செல்ல. 55

ஆறு பல கடந்தனர்

தொகு

367

பாலா றுகுசைத் தலைபொன் முகரிப் பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும்
நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகடந் துநடந் துடனே. 56

368

வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய் மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
பெயலா றுபரந் துநிறைந் துவரும் பேரா றுமிழிந் ததுபிற் படவே. 57

369

கோதா வரிநதி மேலா றொடுகுளிர் பம்பா நதியொடு சந்தப்பேர்
ஓதா வருநதி யொருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக. 58

சூறையிடல்

தொகு

370

கடையிற் புடைபெயர் கடலொத் தமரர் கலங்கும் பரிசு கலிங்கம்புக்
கடையப் படரெரி கொளுவிப் பதிகளை அழியச் சூறைகொள் பொழுதத்தே. 59

கலிங்கர் நடுக்கம்

தொகு

371

கங்கா நதியொரு புறமா கப்படை கடல்போல் வந்தது கடல்வந்தால்
எங்கே புகலிட மெங்கே யினியரண் யாரே அதிபதி யிங்கென்றே. 60

372

இடிகின் றனமதி லெரிகின் றனபதி எழுகின் றனபுகை பொழிலெல்லாம்
மடிகின் றனகுடி கெடுகின் றனமினி வளைகின் றனபடை பகையென்றே. 61

முறையீடு

தொகு

373

உலகுக் கொருமுத லபயற் கிடுதிறை உரைதப் பியதெம தரசேயெம்
பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு படைமற் றவன்விடு படையென்றே. 62

கலிங்கர் நிலை

தொகு

374

உரையிற் குழறியு முடலிற் பதறியும் ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே
அரையிற் றுகில்விழ வடையச் சனபதி அடியிற் புகவிழு பொழுதத்தே. 63

அனந்தவன்மனின் செயல்

தொகு

375

அந்தரமொன் றறியாத வடகலிங்கர் குலவேந்த னனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி. 64

அனந்தவன்மன் கூற்று

தொகு

376

வண்டினுக்குந் திசையானை மதங்கொடுக்கு மலர்க்கவிகை யபயற் கன்றித்
தண்டினுக்கு மெளியனோ வெனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே. 65

இகழ்ந்து பேசினான்

தொகு

377

கானரணு மலையரணுங் கடலரணுஞ் சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது வருவதுமத் தண்டு போலும். 66

எங்கராயன் அறிவுரை

தொகு

378

என்று கூறலு மெங்க ராயனான்
ஒன்று கூறுவன் கேளென் றுணர்த்துவான். 67

379

அரசர் சீறுவ ரேனு மடியவர்
உரைசெ யாதொழி யார்களு றுதியே. 68

380

ஏனை வேந்தை யெறியச் சயதரன்
தானை யல்லது தான்வர வேண்டுமோ. 69

381

விட்ட தண்டினின் மீனவ ரைவருங்
கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ. 70

382

போரின் மேற்றண் டெடுக்கப் புறக்கிடுஞ்
சேரர் வார்த்தை செவிப்பட்ட தில்லையோ. 71

383

வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ்
சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ. 72

384

மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
ஏறு பட்டது மிம்முறை யேயன்றோ. 73

385

தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள்
அளத்தி பட்டத றிந்திலை யையநீ. 74

386

கண்ட நாயகர் காக்குந விலையிற்
கொண்ட தாயிரங் குஞ்சர மல்லவோ. 75

387

உழந்து தாமுடை மண்டலந் தண்டினால்
இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன். 76

388

கண்டு காணுன் புயவலி நீயுமத்
தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே. 77

389

இன்று சீறினும் நாளையச் சேனைமுன்
நின்ற போழ்தினி லென்னை நினைத்தியால். 78

அனந்தவன்மனின் ஆத்திரப் பேச்சு

தொகு

390

என்றிவையு ரைத்தலுமெ னக்கெதிரு
ரைக்கவிமை யோர்களுந டுங்கு வர்புயக்
குன்றிவைசெ ருத்தொழில்பெ றாதுநெடு
நாண்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ. 79

391

பிழைக்கவுரை செய்தனை பிழைத்தனை
எனக்குறுதி பேசுவது வாசி கெடவோ
முழைக்கணிள வாளரி முகத்தெளி
தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ. 80

392

என்னுடைய தோள்வலியு மென்னுடைய
வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல்
நின்னுடைய பேதைமையி னாலுரைசெய்
தாயிதுநி னைப்பளவில் வெல்ல வரிதோ. 81

கலிங்கர்கோன் கட்டளை

தொகு

393

வேழமிர தம்புரவி வெம்படைஞர்
என்றினைய நம்படை விரைந்து கடுகச்
சோழகுல துங்கன்விட வந்துவிடு
தண்டினெதிர் சென்றமர் தொடங்கு கெனவே. 82

394

பண்ணுக வயக்களிறு பண்ணுக
வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செருநர் நண்ணுக
செருக்களம் நமக்கிகல் கிடைத்த தெனவே. 83

கலிங்கர் படையொலி

தொகு

395

கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு
பேரொலி கறங்குகட லேழு முடனே
மலங்கியெழு பேரொலி யெனத்திசை
திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே. 84

கரி பரிப் படைகள்

தொகு

396

தொளைமுக மதமலை யதிர்வன தொடுகடல் பருகிய முகிலெனவே
வளைமுக நுரையுக வருபரி கடலிடை மறிதிரை யெனவெழவே. 85

குடை சாமரை கொடி

தொகு

397

இடையிடை யரசர்க ளிடுகுடை
கவரிக ளிவைகடல் நுரையெனவே
மிடைகொடி பிறழ்வன மறிகடல்
அடையவு மிளிர்வன கயலெனவே. 86

படையின் புறப்பாடு

தொகு

398

அலகினொ டலகுகள் கலகல
வெனுமொலி யலைதிரை யொலியெனவே
உலகுகள் பருகுவ தொருகடல்
இதுவென வுடலிய படையெழவே. 87

தேர்களும் வீரர்களும்

தொகு

399

விசைபெற விடுபரி யிரதமு
மறிகடல் மிசைவிடு கலமெனவே
இசைபெற வுயிரையு மிகழ்தரும்
இளையவ ரெறிசுற வினமெனவே. 88

படை சென்றதன் விளைவு

தொகு

400

விடவிகண் மொடுமொடு விசைபட
முறிபட வெறிபட நெறிபடவே
அடவிகள் பொடிபட அருவிகள்
அனல்பட அருவரை துகள்படவே. 89

சினத்தீயும் முரசொலியும்

தொகு

401

அறைகழ லிளையவர் முறுகிய
சினவழ லதுவட வனலெனவே
முறைமுறை முரசுகள் மொகுமொகு
வதிர்வன முதிர்கட லதிர்வெனவே. 90

படைகளின் நெருக்கம்

தொகு

402

ஒருவர்த முடலினி லொருவர்தம்
உடல்புக வுறுவதொர் படியுகவே
வெருவர மிடைபடை நடுவொரு
வெளியற விழியிட வரிதெனவே. 91

வீரர்கள் போருக்கெழுந்தனர்

தொகு

403

வெளியரி தெனவெதிர் மிடைபடை மனுபரன் விடுபடை யதனெதிரே
எளிதென விரைபெறு புலியென வலியினொ டெடுமெடு மெடுமெனவே. 92