கலிங்க ராணி/கலிங்க ராணி 24


24


"தேவியின் அருளால் தாங்கள் தப்பினீர்கள். உத்தரவிடும், இவனை என்ன செய்வது?" என்று அரசி கேட்க, ஆரியன், "காராக்கிரகமே இவனுக்குச் சரியான தண்டனை" என்று கூறிட, வீரமணியைச் சூழ்ந்து கொண்டனர், சில வீரர்கள். வீரமணிக்கு வீரர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்ட போதுதான், தன் நிலையை அவனால் உணர முடிந்தது.

"அரசியே இது பெரும்பழி! என்னை வீணாகச் சந்தேகிக்க வேண்டாம். ஆரியனே, கரிமுகனைத் தூண்டினவன்" என்று கூவினான். அரசியோ போர்வீரர்களை அழைத்து, "ஊம்! இழுத்துச் செல்லுங்கள் இவனை" என்று உத்தரவிட்டாள். மணிவீரனின் ஆட்களுக்கு, மனம் சஞ்சலமாக இருந்தது என்ற போதிலும், அரசியின் உத்தரவுக்கு அஞ்சி வீரமணியைக் கைது செய்தனர். மேலும் கத்திக் கூரைக்குச் சென்ற சம்பவம் அவர்களுக்கு ஆச்சரியத்தையும் பயத்தையும் கிளப்பிவிட்டது. எனவே வீரமணியைக் கைதுசெய்யாவிட்டால் தங்களுக்கு ஆபத்து வருமென்று பயந்தனர்.

வீரமணியைச் சிறைக்கூடத்திற்கு இழுத்துச் சென்ற போது ஊர் மக்கள் பதறினர். கோயிலிலே நடைபெற்ற ஆச்சரியமான சம்பவத்தைக் கேட்டு, மக்கள் ஏதும் கூற இயலாது திகைத்தனர். வெற்றியின் ஆனந்தம், ஆரியனின் முகத்திலே புதியதோர் ஜொலிப்பைத் தந்தது. கரிமுகன் செத்தான்; கெர்வமிக்க மணிவீரன் சிறை புகுந்தான்; ஊரிலே நமது மகிமை பற்றிய பேச்சாக இருக்கிறது; இனி நமது எண்ணம் சுலபத்திலே ஈடேறும் என்று எண்ணிக் களித்தான். உத்தமன் மட்டுமே ஆரியனை ஒழிக்க மிச்சமாக இருந்தவன். பெரும்பாலானவர் ஆரியனிடம் தேவசக்தி இருக்கிறது என்று நம்பி நடுங்கினர். அரசி, ஆரியனின் அடி பணிந்துவிட்டு, ஆசிபெற்று அரண்மனை சென்றாள்.

அன்று முதல் ஒரு கிழமை வரையில், தேவி சக்தியால், கூரைக்குப் பறந்து சென்ற வாள் தரிசனமும், அதற்கான பூசையும் நடைபெற்றது. ஊர் மக்கள், திரள் திரவாகக் கூடி வாளை வணங்கினர். சகலரும், 'தேவி சக்தியே, இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்' என்று கருதினர். ஆரியப் புரட்டுகள் பற்றி அடிக்கடி போதித்து வந்த கரிமுகனின் ஆசிரியரிடம் சிலர் சென்று இதுபற்றிக் கேட்டனர். அவரும் ஆலயம் சென்று, வாளைக் கண்டார்; நெடுநேரம் யோசித்தார். வீடு திரும்பினார், ஏடுகளைப் புரட்டினார்; சிரித்தார். அவருக்கு விஷயம் விளங்கிவிட்டது. ஆரியன் மிக்க விவேகத்துடன் அற்புத நிகழ்ச்சி ஏற்படச் செய்திருக்கிறான் என்பதை அறிந்தார்; தமிழர், ஆரியனின் மயக்க மொழியை மெய்ந்நெறி என்று நம்பத் துணிந்தது கண்டு ஆயாசமடைந்தார். தான் அறிந்த உண்மையை ஊராருக்கு உரைத்திடக் கருதினார். சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார். ஊரெங்கும் ஆரியனின் மகிமையைப் பற்றிய பேச்சாகவே இருக்கக் கண்டு ஏங்கினார்.

ஆலயமென்பது ஆரியக் கோட்டை என்பதும், தந்திர யந்திரம் என்பதும், பாமரருக்குப் பலிபீடம் என்பதும் சிந்தனைச் சுதந்திரத்தை இழந்தவர் சிக்கிச் சிதையும் சிலந்திக்கூடென்பதும் அவருக்குத் தெரியும். அதனைத் தெரிந்திருந்த தமிழரோ, அதனை மறந்தனர். சூதுகளைச் சூத்திரங்கள் என்று நம்பியும், மமதையாளரின் நோக்கை மகிமை என்று எண்ணவுமான நிலைபெற்றது கண்டு வாடினார். வீரமணியின் வாள் உறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதும், அது அவன் கரத்திலிருந்து மேலுக்கு இழுக்கப்பட்டது—தேவி சக்தியினாலும் அல்ல; மந்திரத்தினாலுமல்ல; சாதாரண காந்த சக்தியினாலேதான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவர் கூறும் மொழி கேட்க ஆட்கள் இல்லை. ருஜு கேட்பர்; நீ செய்து காட்டு என்று அறை கூவுவர் என்பது ஆசிரியருக்குத் தெரியும்.

தமிழர்கள் அறிவுத் திறனால், இயற்கையின் கூறுகளை, உண்மைகளைக் கண்டறிந்து, இயற்கையின் சக்தியை, மனிதனின் தேவைக்கு உபயோகித்ததை அவர் நன்கு அறிந்தவர். போர் முறைகளில் தமிழர் எவ்வளவு அபூர்வமான முறைகளைக் கையாண்டனர் என்பது அவருக்குத் தெரியும். உறையினின்றும் எடுக்கப்பட்ட வாள் மேலுக்கு எழும்பியதுபோன்ற அற்புதங்கள் பலவற்றைத் தமிழர் தமது வாழ்க்கையிலே நடைமுறையிலே காட்டி வந்தது, ஏட்டினால் அவருக்குத் தெரிந்தது. அத்தகைய ஏடுகளைத் தமிழர் மறந்து ஆரியக் கற்பனைகள் மலிந்து, சூதுகள் நெளிந்து கிடக்கும் ஆரிய ஏடுகளைக் கேட்டும் படித்தும் மதிகெட்டு வருவது அவருக்கு மிக்க வருத்தமூட்டிற்று. வாள் சம்பவத்தின் உண்மையை ஊர் மக்கள் உணரும்படி செய்யாவிட்டால், ஆரியன் எது சொன்னாலும் கேட்டு நம்பவும், எதைச் செய்தாலும் சரி என்று கூறித் தலை அசைத்துத் தாசராகவும் தமிழர் தயங்க மாட்டார்கள் என்று தெரிந்து அவர் திகில் கொண்டார்.

அரசியின் கண்கள் ஆரிய நோயினால் கெட்டுக் கிடப்பவை; தமிழகத்தையே கெடுத்துவிடும் என்று துக்கித்தார். சுவடிகளைப் புரட்டும் தமிழ்ப் புலவர், மனு சுலோகங் கூறுபவருக்கு அடைப்பம் தாங்கும் நிலை வருமோ என்று அஞ்சி, அறிவுத்துறையிலே ஆற்றலுள்ளவர்களாக இருந்து, அழியாப் புகழ்பெற்ற அருந்தமிழ்ப் புலவர்கள் அளித்த அரிய கருத்துக்கள் தேய்ந்து வருவதை எண்ணி மனம் புழுங்கினார்.

அதுவரை மூலையில் கிடந்தவரும் முத்தமிழில் முழுத்திறமையற்றவருமாக இருந்து, வெறும் ஏடுதாங்கிகளாக இருந்த சில தமிழ்ப் பண்டிதர்கள், வாள் சம்பவத்தால் ஆரியனுக்கு ஏற்பட்ட மகிமையைக் கண்டு, அவன் புகழ் பாடி, பல்லிளித்து நிற்கப் புறப்பட்டது கண்டு கடுங்கோபங் கொண்டார். சில்லரை அறிவும், சுயநல வேட்கையும், பொருளாசையும் கொண்ட சில புலவர்கள் "மணிவீரன் வீழ்ச்சி" — "தேவி திருவருள்" — "வாள் விடு தூது" என்று பாக்களமைத்து, ஆரிய பாதந் தாங்கிகளாகி அவற்றைப் படித்துப் பொருள் ஈட்டவும் ஆரியனின் ஆதரவைப் பெறவும் கிளம்பினர்.

தமது கவித்திறமையைக் கபடனுக்கு காணிக்கையாகத் தந்து, பொன் பெற்று வாழ வழிசெய்து கொண்டனர். இவ்விதம் தமிழும், தமிழ் அறிவும், கலையும், கலைவாணரும், ஆரியத்துக்கு அரணாக அமைக்கப்படுவது தன்மானத் தமிழ்ப் புலவருக்குத் தாங்கொணாத் துயர் கொடுத்தது. என்ன நேரிட்டாலும் சரி, உண்மையை உரைத்திடுவது என்று தீர்மானித்தார் புலவர். அரசிக்கு ஓர் ஓலை விடுத்தார். அதிலே ஆரியன் கூறியபடி, தேவி சக்தியினால், வாள் கூரையில் தொங்கவில்லை என்றும், இயற்கையான ஓர் பொருளின் சக்தியினாலேயே, இது நிகழ்ந்ததென்றும், இதனை விளக்கிடத் தயாராகத் தாம் இருப்பதாகவும், சபை கூட்டினால் அது பற்றிச் சகலமும் செப்ப முடியுமென்றும் புலவர் எழுதியிருந்ததுடன், இவ்விதமான மடல் விடுத்திருக்கும் செய்தியை நாற்சந்திகளிலே நின்று கூறிடவுமானார்.

ஊருக்கு இஃதோர் புதிய ஆச்சரியமாக இருந்தது. இவன் ஓர் புதிய பித்தன் என்று அரசி எண்ணினாள். நமது கீர்த்தியைக் கண்டு பொறாமைப்பட்டே இக்கிழவன் இதுபோலப் பேசுகிறான் என்று ஆரிய தாசராகிவிட்ட புலவர்கள் எண்ணினர். ஆரியனோ, 'ஒரு எதிர்ப்பு மடிந்தால் மற்றொன்று பிறக்கிறதே, என்ன செய்வது?' என்று சிந்திக்க ஆரம்பித்தான்.