கலிங்க ராணி/கலிங்க ராணி 33
பிரிந்து கூடிய காதலரின் களியாட்டச் செய்தியைக் கேட்டுத் தெரிந்த பாண்டியன், புன்முறுவல் பூத்து, சித்திர மன்னன் அச்சிற்றிடையாள் சிந்திடும் சிரிப்பை உண்டு, சிந்தையில் கள்கொண்ட குமரனின் குதூகலத்தை எவ்விதத்திலும் குலைத்திடல் அடாத செயலாகும் என்று கூறி, மண்டலங்களை மறந்திடச் செய்வதும், கடமையைக் கூடத் துச்சமாகக் கருதிடச் செய்வதும், பாம்பைப் பழுதையென்றெண்ணிடச் செய்வதும், பாவையரின் பாகுமொழி தரும் சுகபோதையன்றோ! தம்மை மறந்து கவிவாணர் பாடிடுவதும் காரிகையின் கோலாகலக் கூத்தில் மூழ்குவதாலன்றோ என்று எண்ணினான். மேலும் நயனங்களில் நீர் ததும்பியபடி நின்ற நங்கைக்கு, ஏற்ற இந்நம்பி, நெடுநாள் பிரிந்திருந்து இன்று வந்து சேர்ந்தான்; அவள் இழந்த இன்பத்தை மீண்டும் பெற்று உண்ணத் தலைப்படும் நேரத்திலே, ஊறு விளைவித்தல் கூடாது என்றன்றோ ஆன்றோர் கூறுவர் என்று கருதினான். ஆனால், அந்த அணங்கு யார்? அவளுடைய அணைப்பிலே சொக்கிடும் காளை எந்நாட்டவன்? நீலமணி, அந்த நீண்டகன்ற கண்ணனிடம் எங்ஙனம் சிக்கிற்று என்பதைத் தெரிந்து கொள்ள மன்னன் துடித்தான்.
மதுரமான பழவகைகளையும், மணம் வீசும் புஷ்பக் கொத்துக்களையும், கலவைச் சந்தனத்தையும், பணியாட்கள் மூலம் அனுப்பிவைத்தான். சந்தனம் உலருகிறது; பூங்கொத்துக்கள் புழுதி படிந்துள்ளன; கனிகள் அப்படியே உள்ளன; காதலரோ பேசிக் கிடக்கின்றனர் என்று பின்னர் வந்துரைத்தனர் பணியாட்கள். பார்த்திபன், பூங்கொடி போன்ற அவள் ஆலிங்கனமே அவனுக்கு மதுரம்; கனியும் கலவைச் சந்தனமும், முல்லை மல்லிகை முதலியன அவனுக்கு இப்போது தேவையில்லைதான் என்று கூறி, "சரி, அவர்கள் பாண்டிய நாட்டு அரண்மனையில் இருப்பதும் அவர்களின் வரலாற்றினை அறிந்திடத் துடிக்கும் அரசனொருவன் இங்கே காத்துக் கிடக்கிறான் என்ற நினைவும் அவர்கள் பெறட்டும். பிறகு, நாம் அவர்களைக் கண்டு பேசுவோம்" என்று தீர்மானித்துக் கொண்டான்.
நாடாளும் மன்னனுக்கு, வீடாளும் வனிதையரின் விசாலமான கண்களில் விரகம் வீசும்போது, காதலரின்றி வேறெதுவும் ஒரு பொருளாகத் தோன்றாது என்பது தெரியும். காடுகளிலே கடுவேகத்துடன் ஓடிடும் மானினங்களும், சுனை நீரருகே பெண்மான் சென்றதும், 'நீரருந்த நாயகி செல்லட்டும்; நான் நிமிர்ந்து நின்று காவல் புரிவேன்' என்று கூறுவதுபோலத் தலைவன் நின்றிடும் நேர்த்தியை மன்னன் கண்டதில்லையா? கோணல் சேட்டையால் குவலயத்தைச் சிரிக்கச் செய்யும் குரங்கும், தன் காதற் கிழத்திக்குக் கனிவுடன் கனியூட்டும் காட்சியைக் கண்டதில்லையா! என்ன அதிசயம் கண்டானோ இவன்? ஏன் இப்படி அந்த மடந்தை சென்ற திக்கையே இமைகொட்டாது பார்த்துக் கிடக்கிறான் என்று கேலி செய்திடும் நண்பர்களைப் பொருட்படுத்தாது, காதலால் பிணைப்புண்ட குமரன், ஆயிரம் கேள்விகளுக்கும் ஒரே பெருமூச்சினைப் பதிலாகத் தருவதைப் பார்த்திபன் தன் வாலிபப் பருவத்திலே கண்டதில்லையா! தொழுவத்திலே முரட்டுக் காளைகள்; முற்றத்திலே வேட்டை நாய்கள்; இங்கு மங்கும் காவலர்; இவற்றினைச் சட்டை செய்யாது எழிலிடையாள் ஒருத்திக்காக, மை இருட்டில் மதில் தாவி, மனை நுழையும் மறவரின், காதல் திருவிளையாடல்களைப் பற்றி அவன் கேட்டதுண்டு. எனவே நடனராணியும், வீரமணியும், உலகையே மறந்து, உவகையிலே மூழ்கிக் கிடந்தது கேட்டு ஆச்சரியப்படவுமில்லை; ஆயாசமடையவுமில்லை; இது சகஜம் என்று இருந்தான்.
✽✽✽
"இன்னுயிரே! உன்னை இதுநாள்வரை காணாது கலங்கினேன்; கதி கெட்டேனோ என்று கூடக் கதறினேன்."
"ஊசலாடிக் கிடந்த உயிர், வினாடிக்கு வினாடி விடை பெற்றுக் கொள்ள எண்ணியபோதெல்லாம், 'என் மன்னனை ஒரே ஒருமுறை கண்டுவிட்டால் போதும். கவலையில்லை; நீ போகலாம்' என்றன்றோ உயிருக்கு உரைத்தேன். உத்தமனே, நீ சென்ற நாளிலிருந்து ஊண் உண்டா, உறக்கம் உண்டா?"
"எழிலார்ந்த நடனா! மலர்புரியாளின் ஆரிய போதை, ஆரியனின் மமதை, காட்டானின் கடு நெஞ்சு, அங்கோர் தூர்த்தையின் காமக்கூத்து, பின்னர் சித்தக் குழப்பம். புலியால் ஆபத்து, பிலத்திலே பாம்பு, மலைகளிலே ஓட்டம், காடுகளிலே உறக்கம், மண் மேடுகளிலே உபவாசம் எனப் பலப்பல தொல்லைகள் அடைந்தேன்; ஆனால் இன்று உன்னைக் கண்டேன்; அவ்வளவையும் மறந்தேன்; இனிப் பயமே இல்லை."
"கண்ணாளா! முதலிலிருந்து முறையாகக் கூறும். கலிங்கப் போரிலே, நீர் நம் காவலருக்கு என்ன குற்றம் இழைத்தீர்?"
"குற்றம் இழைப்பவன் நானா? கோமளமே, நீ இப்படிக் கேட்கலாமா."
காதலரின் இவ்வுரை தடைப்படும்படி, பாண்டியனின் பெருநகை கிளம்பிற்று. பக்கத்திலே அவன் நின்றதைக் கண்டு கொள்ளாது, காதலர் பேசிக்கொண்டிருந்தனர்.
"நீயா, குற்றம் இழைக்கவில்லை! எவ்வளவு கொடியவன் நீ? இந்த கொடியிடை துவளும்படி விட்டு வைத்ததைவிடக் கடுங்குற்றம் ஏதுளது?" என்று பூஞ்சிரிப்புடன் மன்னன் கேட்டான்.
மன்னனைக் கண்ட வீரமணி தலைதாழ்த்தி வணங்கியபடி, 'வேந்தே! தண்டனை தரும் உரிமை உமக்குண்டு. நான் சுற்றாத இடமில்லை; தேடாத மண்டலமில்லை. இவளே, மின்னல்போல் மறைந்து என் மனதைக் குழப்பினாள். தண்டனைக்குரியவள் இவளே' என்று வீரமணி கூறிட, வெகுண்டவள் போல் நடித்த நடனா, "வேந்தே! ஆடிக் கிடந்த என்னைத் தேடிப் பிடித்திழுத்தான் இக்கள்வன்; பின்னர் தேம்பித் தவித்திட விட்டுச் சென்றான்" என்று நடனா வழக்குரைத்தாள். "இவ்வித விசித்திர வழக்கை விசாரித்துப் பழக்கம் நமக்கில்லை. என்றபோதிலும், மண்டலத்து வழக்கனைத்தும் மன்னன் விசாரித்திடுதல் முறையாதல் பற்றி, உமது வழக்கினை விசாரித்திடுவோம்; ஆனால் வழக்குரைக்கு முன்னம் வாதாடலாமோ! கட்சிக்காரரான நீவிர் இருவரும், உமது ஊர் பேர் விவரம் கூறிடா முன்பு, வழக்கை விசாரிக்க முடியுமா? காதற் குற்றவாளிகளுக்கும் காலதேச வர்த்தமானம் கேளாது தீர்ப்பளிப்பது எங்ஙனம்?" என்று பாண்டியன் கேட்டிட, முத்துப்பற்கள் வெளியே தெரிய, பவழ இதழ் விரிய, பசும் பொன்பதுமையன்ன நடனா வீரமணியைச் சுட்டிக் காட்டி, "இவர் என் காதலர்" என்றாள்.
"இது எனக்கு விளங்கிய விஷயமன்றோ! ஊர், பேர், விவரம் உரை", என்று மன்னன் கேட்டிட, நடனா, சோழ மண்டலத்திலே, வீரருக்கு மணியாக விளங்கிய வரலாறும், கலிங்கப் போர் மூண்ட காதையும், வெற்றிச் செய்தியுடன் வீரமணி நாடு கடத்தப்பட்டார் என்ற வேதனைச் செய்தியைக் கேட்ட கூற்றும், விம்மிய விழியுடன் கிடந்த சோகமும், மருத்துவன் கொண்ட காமநோயும், மாற்றானின் சதியினால் சோழ மண்டலத்திலே ஆபத்துவர இருந்ததும், அரசியாரின் உதவியால் உத்தமனுடன் தான் சோழநாட்டை விட்டு வெளியேறியதும், இடையே உத்தமன் பிரிய நேரிட்டதுமாகிய வரலாற்றினை நடனராணி விவரமாகக் கூறினாள். மன்னன்முன் இந்த வரலாறு கூறப்பட்டதால், மங்கையின் இதழ் தப்பிற்று. இல்லையேல், அவள் தன் வரலாற்றினைக் கூறிக் கொண்டிருக்கையில், மன நெகிழ்ந்த வீரமணி நடனாவைப் பற்றித் தழுவி முத்தமிட எண்ணியது, ஒருமுறை—இருமுறையல்ல!
வீரமணியும் பிறகு, தனது முழு வரலாற்றினையும் கூறினான். காட்டானின் சிற்றன்னையின் காமக்கூத்துப் படலத்தை வீரமணி கூறினபோது வேந்தன் விலாநோகச் சிரித்தான்.
இருவர் வரலாற்றினையும் கேட்டறிந்த பாண்டியன், "சோழனிடம், நீ மாசற்றவன் என்பதை நாமே கூறுவோம்; சோழ மண்டலத்திலே நீர் மீண்டும் வசித்திடும் உரிமையை வாங்கித் தருவோம்; மலர்புரியில், ஆரியம் மலர்ந்திருப்பதால் தமிழகமே கெட்ட வாடையால் வாடிடும். எனவே, அந்தத் தீய செடியினை வேரோடு களைந்தெறிவோம்" என்று மன்னன் கூறிவிட்டு, "நீலமணியை உனக்குக் கிழவனொருவன், கலிங்கப் போர் முடிவின்போது, குகையிலே தந்தான் என்றுரைத்தாயே, அவன் எப்படி இருந்தான்? அவன் உருவத்தைச் சற்று விவரமாகக் கூறமாட்டாயோ" என்று வீரமணியை மன்னன் கேட்டான். வீரமணி தனது நினைவிற்குத் தெரிந்தவரையில் கலிங்கக் கிழவனைப் பற்றி வர்ணித்தான். ஆனால் கலிங்கக் கிழவன், மலர்புரி அரசியின் காதற்கூத்தனாக இருந்தவனாதலால், மலர்புரி அரசியிடம் முழு விபரம் தெரிந்து கொள்ள முடியும் என்று யோசனை கூறினான்.
"இறந்தவனைப் பற்றி இவ்வளவு கவலையா! ஏதோ ஒரு நீலமணிக்கு இத்தனை விவாதமா" என்று சலித்துக் கேட்டாள் நடனா.
"பெண்ணே! உனக்குத் தெரியாது, இந்த நீலமணியின் நீண்ட கதை" என்று மன்னன் சோகத்துடன் கூறிக்கொண்டே, மடியிலிருந்து நீலமணியை எடுத்தான்; அதனைக் கண்டதும், நடனராணி, பதைபதைத்து, அதனை வாங்கிப் பார்த்து, "இதுவா நீங்கள் புகழ்ந்த நீலமணி; இது என் காதணியன்றோ! சோழ மன்னனின் வனபோஜன விழாவுக்கு நடனமாட நான் சென்றபோது, யாரோ என் காதணியைக் கவர்ந்து சென்றனர். அதுதான் இது; இதன் ஜதை எங்கே?" என்று கேட்டாள். மன்னனும் வீரமணியும் ஒரே சமயத்தில் நடனாவை நோக்கி, "இந்த நீலமணி, உன் காதணியா?" என்று கேட்டனர். "ஆமாம்! சந்தேகமே இல்லை" என்றாள் நடனா. பாண்டிய மன்னன் பூரித்துப் போனான்.