கலிங்க ராணி/கலிங்க ராணி 35
"காதலி!" என்று ஒரு குரல் கேட்டுத் திடுக்கிட்டேன். அது என் அண்ணனின் குரல்! அவளும் திரும்பினாள். நானும் சத்தம் வரும் திக்கில் திரும்பினேன். "ஒழிந்தான் உன்னை ஆட்டிப் படைத்த தூர்த்தன். இதோ, அவனுடைய இரத்தம் ஒழுகுவது கண்டு களி. உன் கோபத்தையும் சோகத்தையும் இந்தச் செந்நீரால் கழுவிக் கொள்" என்று கூறிக்கொண்டே என் சகோதரர் அங்கு வந்தார். நானும் அவளும் ஏக காலத்தில் 'ஆ' என்று அலறினோம். என் அண்ணனின் கரத்திலே, குலகுருவின் தலை தொங்கிற்று, உடலற்று! இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
போர்க்களங்களிலே, தலை வேறு—உடல் வேறாக அறுபட்டதையும், இரத்தம் ஆறென ஓடினதையும், குருதி தோய்ந்த கரத்துடன் வீரர்கள் நிற்பதையும் நான் கண்டதுண்டு. கலங்கியதில்லை. ஆனால் நடுநிசியில், அரண்மனைப் பூங்காவில், அரசகுமாரன், குலகுருவின் தலையைவெட்டி, இரத்தம் ஒழுக ஒழுகப் பிடித்துக்கொண்டு நிற்பதை யார்தான் கண்டு கலங்காதிருக்க முடியும்! கலை இன்பத்திலே திளைத்திருக்கிறார் அண்ணன் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு அவர் கொலைத் தொழிலும் செய்வது காணக் கூசிற்று. அந்த இரவு, நிலவொளியிலே நான் கண்ட காட்சியை நினைத்தால் இப்போதும் நடுக்கம் பிறக்கிறது.
"நீ ஏன் இங்கு வந்தாய்?" என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டே அந்தத் தலையை அலட்சியமாகத் தரையில் போட்டார். அந்தச் சத்தம், எனக்கு என் நிலைமையைக் கவனத்திற்குக் கொண்டு வந்தது."அண்ணா! இங்கே நான் உலவ வந்தேன். இசை கேட்டது. பளிங்கு நோக்கி வந்தேன். இதைக் கண்டேன்" என்று நான் படபடத்துக் கூறினேன். அவர் மேலங்கியால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவளோ, பதுமை போலாகி விட்டாள். அசைவற்று நின்று கொண்டிருந்தாள்! கண்களிலே நீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது.
"தவக் கோலத்திலே உள்ள இக்காரிகை என் காதலுக்கு உரித்தானவள். இவளுடைய உடைக்கு இவள் பொறுப்பல்ல. காவியால் மூடி இவளுடைய கருத்தைத் தூங்க வைக்கலாம் என்று இக்காதகன் கருதினான். பின்னர் கபடத்தைத் தெரிந்து நான், இக்காரியம் செய்தேன்" என்று அண்ணன் கூறினார். எனக்கு அவருடைய விளக்கம் திருப்தியை உண்டாக்கவில்லை! முழுமையான மனச்சாந்தி ஏற்படாததால், நான், கீழே உருண்டு கிடந்த தலையையும், உக்கிரத்துடன் என் எதிரே நின்ற சகோதரனையும், நீர் புரளும் கண்களுடன் நின்ற அந்த நங்கையையும் மாறி மாறி நோக்கினேன். மருட்சியால் மயக்கம் வந்துவிடும் போலிருந்தது எனக்கு. வேடிக்கையைக் கேள் நடனா! நான் இப்படித் தவித்துக் கொண்டிருந்தேனே, அதை ஒரு துளியும் பொருட்படுத்தாது, என் அண்ணன் அந்த அணங்கை அருகே இழுத்து அணைத்துக் கொண்டு, கண்களைத் துடைத்து, "அஞ்சாதே! உன் அழகை ஆயுதமாகக் கொண்டு அக்ரமச் செயல் புரிந்து வந்தவனை அழித்தேன். இனி உன் வாழ்வு மலரும்; மனம் மருளாதே" என்று கூறித் தேற்றினான். நான் ஒருவன் நிற்பதையும் அண்ணன் மறந்து விட்டார். காலடியிலே உருண்டு கிடந்த குரு தலையேகூட அப்போது அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் என் தகப்பனார் திடீரெனச் சில காவலாட்களுடன் அங்குவரக் கண்டேன்!
"அண்ணா, அரசர்!" என்று கூறினேன் அச்சத்துடன். அந்த மங்கை, என் அண்ணனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அவ்விடத்தைவிட்டு ஓடிவிடப் பார்த்தாள்; புன்சிரிப்புடன் என் அண்ணன் அவள் கரத்தைப் பிடித்திழுத்து நிற்க வைத்து, "நில்! ஏன் ஓடுகிறாய்?" என்று கேட்டார். இதற்குள் மன்னர் மன்னராகிய எங்கள் தந்தை அங்கு வந்து சேர்ந்துவிட்டார். அவர் பேசுவதற்குள் எனக்குப் பயத்தால் பாதி உயிர் போய்விட்டது.
"தவமணிǃ நீ இங்குதானா இருக்கிறாய்! உன் தாளினை வணங்குகிறேன். குருத்துரோகம் செய்த இக்கொலைப்பாதகனை, நொடியிலே நான் வீழ்த்துகிறேன். நீ பிழை பொறுத்துப் பாண்டிய மண்டலத்தின் மீது பகை காட்டாது விடு, அம்மையே" என்று கூறிக்கொண்டே என் பிதா, காவி உடைக்காரியின் காலில் விழலானார். அவள் அதைத் தடுத்து அவரைத் தூக்கி நிறுத்தினாள். இதற்குள் காவலர் உருண்டு கிடந்த தலையை எடுத்து ஓர் பீதாம்பரத்தில் மூடிப் பிடித்துக் கொண்டனர். இரு காவலர் உருவிய வாளுடன் என் அண்ணனின் இரு பருங்கிலும் நின்று கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்ததில், என் தந்தை, என் அண்ணனைக் கைது செய்யத் தீர்மானித்துவிட்டார் என்பது விளங்கிற்று.
ஆம்! "குருதேவனைக் கொலை செய்து விட்டார் உமது மூத்த குமாரன்" என்று யாரோ சீடர் கூறிடக் கேட்டுக் கொதித்தெழுந்த என் தந்தை, என் அண்ணனைத் தேடிப் பார்த்து, தோட்டம் வந்தார். அங்கு, குருவின் தலை உருண்டு கிடந்ததைக் கண்டார். குருவின் புத்திரி, தவமணி அங்கு இருக்கக் கண்டு அவள் தன் தபோபலத்தால் மண்டலத்தையே நிர்மூலமாக்கி விடுவாள் என்று பயந்து, அவளைப் பணிந்து, மன்னிப்பு கோரி நின்றார்.
தவமணியின் கோலம் ஒன்று, செயல் வேறு! அது எனக்குக் கோபமூட்டிற்று; என் பிதாவோ, அவளுடைய கோலத்தைக் கண்டு மதிமயங்கி மண்டியிடுகிறார். என் அண்ணனோ அவளுடைய அழகிலே சொக்கிக் கொலையும் புரிந்துள்ளார். இவ்வளவு நிகழ்ச்சிகளையும் நினைப்பையும் கிளறிவிட்ட அந்த நங்கை, என் பிதாவை நோக்கி, மிருதுவான குரலில் சிலவற்றைச் சொன்னாள்."அரசே! என் பிழை பொறுத்தருள வேண்டும். நான் தவசியுமல்ல, யோக சித்திகள் பெற்றவளுமல்ல. எவனுடைய தலை கீழே உருண்டு கிடப்பதற்காகக் கோபங் கொண்டு தாங்கள், தங்களின் மூத்த புதல்வர்மீது பாய்ந்திட வந்திருக்கிறீரோ, அந்தக் கபட சன்யாசிக்கு நான் மகளுமல்ல! அவனுடைய கருவியாக இருந்து வந்தேன். எங்கோ மரத்தடியிலே கிடந்த ஓர் குழந்தை, பார்க்க ரம்மியமாக இருப்பது கண்டு, தவவேடம் புனைந்து, தந்திரத்தால் வாழ்ந்துவந்த சத்யபிரகாசர் எடுத்து வளர்த்து வந்தார்; அந்தக் குழந்தையின் எழில் வளர, வளர, அவனுடைய புகழும் செல்வாக்கும் வளரலாயிற்று. பல இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு, இங்கு வந்து சேர்ந்தோம். ஆம்! நான்தான்...அவன் கண்டெடுத்த குழவி!
இங்கு அவன், தங்களை எப்படி எப்படியோ மயக்கினான். என்னையும் பெரிய யோகி என்று கூறித் தங்களை நம்பிடச் செய்தான். இளமையும் எழிலும் இருந்தும், தவவேடமும் கபடத்துக்கு உடந்தையுமாக நான் காலங்கழித்து வருகையிலே, உமது புதல்வரின் கண்கள், என் காவி உடையைக் கிழித்தெறிந்து, என் இருதயத்திலே இயற்கையான எண்ணங்கள் தழுவுவதையும், பர்ணசாலையிலே பாழாகிக் கிடக்கும் வாழ்வை வெறுக்கிறேன் என்பதையும் தெரிந்து கொண்டன. ஆமாம்! கடலிற் குளித்து முத்து எடுக்கும் பணியாளனுக்கு எங்கு குளித்தால் முத்து கிடைக்கும் என்பது தெரியும். அதுபோலத்தான் அவர் என் அகத்தை மறைத்துக்கொண்டிருந்த புறக்கோலத்தால் மயங்காது, என்னைக் கண்டறிந்தார். என் மனம் அவரை நாடிற்று. என்னைப் பூஜிக்கப் பலர் வந்ததுபோலவே அவரும் வந்தார். ஆனால் என் வேடத்தைப் பூஜிக்காமல், என் அன்பை வேண்டினார்; நான் அளித்தேன் அகமகிழ்ச்சியுடன். தவக்கோலத்திலேயே நான் அவருக்குப் பிரியையானேன். சத்யப்பிரகாசர் இதனை எப்படியோ தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்டால் என்ன? என்னை என் வழிப்படி விட்டுவிடலாம். இல்லையேல் இங்கிருந்தால்தானே, இது நடக்கும், இனி வேறு இடம் செல்வோம் என்றாவது இங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கலாம்; இல்லையேல், என் அன்பரை அழைத்து, அறவுரை புகன்று தடுத்திருக்கலாம். அதுவும் இஷ்டமில்லையேல், என்னைக் கொன்றுவிட்டிருக்கலாம். இவை எதையுஞ் செய்யாது, என்ன செய்தார் தெரியுமோ! எந்த மடியிலே, நான் சிறு குழந்தையாகப் படுத்துக்கொண்டு தூங்கினேனோ, அதே மடியிலே, சாய்ந்துகொண்டு, மையல் ஊட்டவேண்டுமென்று மறைமுகமாகக் கட்டளையிட்டான்.
மகளாக இத்தனை காலம் இருந்ததுபோதும்; இனி எனக்கு மனையாளாகிவிடு" என்று வாய்விட்டுச் சொல்லாமல் கண்ணசைவில் அக்கருத்தை தெரிவித்தான் ஓரிரவு! பக்தகோடிகள் போய்விட்ட பிறகு, நான் படுத்துக்கொண்டிருந்த அறையிலே மினுக்கிக் கொண்டிருந்த தீபம் திடீரென்று அணைந்தது; இல்லை; அணைக்கப்பட்டது. ஓர் உருவம் என் மஞ்சத்தருகே நின்றது, பெருமூச்சுடன். நான் "அப்பா!" என்று அலறினேன்; அந்த உருவம், கலகலவெனச் சிரித்திடக் கேட்டுச் சித்தம் மருண்டது. சத்யப்பிரகாசரே அங்கு வந்து நின்றவர். என்னை வளர்த்த தந்தையே விளக்கை அணைத்துவிட்டு அங்கு நின்றார் என்பது தெரிந்தது. என் திகில் கொஞ்சம் நீங்கிற்று; நான் மஞ்சத்திலே எழுந்து உட்கார்ந்து கொண்டு, "என்னப்பா இது? ஒரு கணத்தில் இப்படி மிரட்டிவிட்டீர்" என்று கேட்டேன். அவர் என் பக்கத்திலே வந்து உட்கார்ந்தார். நான் வழக்கமாக அவரிடம் நெருங்குவதுபோல் நெருங்கினேன். அவரோ என்னை என்றும் அணைத்திடாதவிதமாக அணைத்தார். "அப்பா" என்று அழைத்தேன். அவரோ "மகளே" என்று அழைக்காமல், 'தவமணி' என்று அழைத்தார். குரலிலே ஒரு மாதிரியான தடுமாற்றம் தென்பட்டது. அவருடைய முகத்தைச் சரியாகப் பார்க்க விரும்பி, அணைப்பிலிருந்து விடுபட முயன்றேன்; அவரோ என்னை இறுகப்பிடித்துக் கொண்டார். எனக்குத் திகில் பிறந்தது. அவருடைய வலிமைக்கு நான் ஈடா? மஞ்சத்திலே நான் சாய்க்கப்பட்டேன். கூவிய என் வாயை, அவர் தமது கையால் மூடிவிட்டார். என் கன்னங்கள் அவருடைய கோரப் பற்களுக்கு இரையாயின. என் இதழ் துடித்தது. என் உடல் பதறிற்று! என் உயிர் போய்விடும் போலாகி விட்டது. 'மகளே' என்று அழைத்து வந்த அந்தக் காதகன், அன்றிரவு என்னைத் தன் காமத்துக்குப் பலியாக்கிவிட்டான்! அழுது அழுது என் கண்கள் சிவந்துவிட்டன. அவனோ சிரித்துச் சிரித்து என்னைச் சித்திரவதை செய்தான். "தான் பயிரிட்ட செடி, மரமாகிக் கனி தந்தால், அதனைச் சுவைக்க வேறு யாருக்கு உரிமை உண்டு?" என்று கேட்டான். என் நிலைமையை நினைத்தாலே நடுக்கம்.
நான் வெளியே சென்று யாரிடம் முறையிடுவேன்? எவரையும், என் மொழியைக் கேளா வண்ணம் அவன் தடுத்து விடுவான்! என் பிரிய பதியாக யாரைக் கொள்ள வேண்டுமென்று நான் நிச்சயித்திருந்தேனோ, அவர் முகத்தில் எங்ஙனம் விழிப்பேன் என்று திகைத்தேன். பகலிலே தவமணி! மாலையிலே உமது மூத்த மகனின் காதற்கனி! இரவிலே அந்தக் காமக் கள்ளனின் போக மாது! இந்நிலையிலே எத்தனை காலம் நான் தள்ள முடியும். என்னால் சகிக்க முடியவில்லை. எனவே இவரிடம் உண்மையைக் கூறினேன். இவன் தலை கீழே உருண்டது. என் நெஞ்சிலே இருந்து வந்த பாரம் குறைந்தது" என்று தவமணி என்ற அந்தத் தையல் தன் வரலாற்றினை உரைத்தாள்.
நான் திக்பிரமை அடைந்தது போலவே, என் தந்தையும் அதிர்ச்சி அடைந்தார். "தவவேடமிட்டுத் தகாத செயல் புரிந்து வந்த இந்தத் தூர்த்தன் ஒழிந்தது முறையே! மகளையே மஞ்சத்துக்கு இழுத்த மாபாவி ஒழிந்தது சரியே! இவன் தலை கீழே உருண்டது கண்டு மருண்டு என் மகனையேயன்றோ ஏதேதோ செய்திட எண்ணினேன்." என்று மன்னர் கூறினார். "சரி, ஒருவாறு தொல்லை தீர்ந்தது" என்று நான் நினைத்தேன். உடனே தந்தையைப் பார்த்து, "என் அண்ணன் மணம் புரிந்து கொள்ளத் தாங்கள் அனுமதி தரவேண்டும்" என்று வேண்டினேன். இச்சொல் கேட்ட என் தந்தை, தீயை மிதித்து விட்டவர்போல் துடித்துப் போனார்.