கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/10. வியாழனில் நான்கு சந்திரன்களைக் கண்டார்!

10. வியாழனில் நான்கு சந்திரன்களைக் கண்டார்!

கலீலியோ தனது ஆராய்ச்சியை, 1610-ஆம் ஆண்டு வாக்கில் வியாழன் என்று கூறப்பட்ட Jupiter கிரகத்தின் மேல் செலுத்தினார்.

வியாழன் கிரக ஆராய்ச்சியின் போது, ஒரே நேர்க்கோட்டில் மூன்று சிறு சிறு நட்சத்திரங்கள் இருப்பதை ஆழ்ந்து நோக்கினார்.

அந்த நட்சத்திரங்களில், இரண்டு வியாழன் கோள் கிழக்குப் பக்கத்திலும், மற்றொன்று மேற்குப் பக்கத்திலும் இருப்பதைக் கண்டு, அவற்றிற்கு இடையே உள்ள தூரங்கனையும் பார்த்து அதன் செயல்களைக் கவனித்தார்.

அதே சிறு நட்சத்திரங்களை மீண்டும் மீண்டும் அவர் பார்த்த போது, அவை முன்பு இருந்த இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு நகர்ந்துள்ளதைக் கவனத்துடன் ஆராய்ந்தார்.

அவற்றை மேலும் மேலும் நோக்கி அவர், ஊடுருவிய போது, வியாழன் அருகே உள்ள நட்சத்திரங்கள் மூன்றல்ல நான்கு என்று உணர்ந்தார்.

அந்த நட்சத்திரங்கள், வியாழன் கோளைச் சற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியந்தார். ஆனால், அவை என்ன; நட்சத்திரங்கள் தானா? அல்லது வேறு ஏதாவது பொருள்களா என்று சந்தேகப்பட்டார்.

வியாழனைச் சுற்றிவரும் அந்த சிறு சிறு பொருட்கள் நட்சத்திரங்கள் அன்று; அல்லது வேறு கோள்களும் அல்ல. எனவே, அவை உறுதியாகச் சந்திரன்களாகவே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் ஆராய்ந்து கொண்டே இருந்தார்.

அவரது ஆராய்ச்சியின் இறுதி ஒரு முடிவுக்கு வந்தது. பூமிக்குச் சந்திரன் இருப்பது போலவே, வியாழன் மண்டலத்திலும் சந்திரன் இருக்கிறது என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

பூமிக்கு ஒரே சந்திரன் தான் இருக்கிறது; ஆனால், வியாழன் கிரகத்துக்குள் நான்கு சந்திரன்கள் இருக்க முடியுமா? என்ற சந்தேகம் மீண்டும் அவருக்கு உண்டாயிற்று, பிறகு நான்கு நிலாக்கள் இருப்பது உண்மைதான் என்றே முடிவு செய்தார்.

அப்படியானால், ஒவ்வொரு சந்திரனும் வியாழன் கிரகத்தைச் சுற்றிவர எவ்வளவு காலமாகிறது என்பதையும் கணக்கிட்டுக் கூறினார்.

ஒரு சந்திரன் வியாழனைச் சுற்றி வர, நாற்பத்திரண்டு மணி நேரங்கள் ஆகின்றன என்றும், மற்ற மூன்றும் வியாழனைச் சுற்றி வர பதினேழு நாட்கள் ஆகின்றன என்றும் கணக்கிட்டுக் கூறினார்.

கலீலியோ கூறிய இந்த வியாழன் கிரக அதிசயங்களைக் கேட்ட மற்ற ஆராய்ச்சியாளர்கள் மிகவும் ஆச்சரியப் பட்டார்கள்! இப்படியும் ஓர் அதிசயம் வான வெளியில் நடக்கின்றதா என்று மக்கள் பிரமித்தார்கள்!

ஆனால், இவற்றை எல்லாம் கேட்ட ஐரோப்பா கண்டத்து அறிவியல் அறிஞர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, கலீலியோவின் தொலை நோக்கிகளைத் தோளில் சுமந்து கொண்டு, கண்ட கண்ட இடங்களிலே இருந்தெல்லாம், சந்திரனையும், வியாழனையும் ஆராய்ந்து ஆராய்ந்து அவரவர் உண்மைகளைக் கண்டு அறிவு மெய் மறந்தார்கள்.

வானத்திலே நடக்கும் இந்த வியத்தகு கோளியல் விளையாட்டுக்களைக் கேட்டு வியந்த அறிவியல் மாணவர்கள், அறிஞர்கள் அனைவரும்-கலீலியோவிடம் அவை பற்றிய பயிற்சிகளைப் பெற பிறநாடுகளிலே இருந்து வந்து பயிற்சி பெற்ற வண்ணம் இருந்தார்கள்.

கலீலியோ 610-ஆம் ஆண்டில் வியாழன் கிரகத்திலே உள்ள நான்கு நிலாக்களை ஆராய்ச்சி செய்து கூறிய பிறகு, அவரது பாதையிலே சென்ற கலீலியோ கொள்கையாளர்களில் ஒரு சிலர், 1892-ம் ஆண்டில், அதாவது மறைவுக்கு 282-ஆண்டுகளுக்குப் பின்பு, அவர்கள் கூடி ஒரு கருத்தை ஆய்ந்து வெளியிட்டார்கள்.

அந்த ஆய்வின் முடிவு என்ன வென்றால், 1892-ஆம் ஆண்டில் மவுண்ட் ஆமில்டன் என்ற இடத்தில் இருந்து பேராசிரியர் "பர்னார்ட்" என்பவர் ஐந்தாவது சந்திரனை வியாழன் கிரகத்திலே இருப்பதாகக் கண்டுபிடித்தார்" அந்த செய்தியை அவர் உலகுக்கு கூறினார்.

"அதற்குப் பிறகு, சில ஆண்டுகளில், அதே இடத்தில் இருந்து புகைப்படக் கருவிகளால் மேலும் இரண்டு நிலாக்கள் இருப்பதாகச் சில ஆய்வானர்கள் கண்டுபித்துக் கூறினார்கள்."

"1908-ஆம் ஆண்டின்போது, 'கிரீன்விச்' என்ற இடத்தில் இருந்து சில வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் எட்டாவது சந்திரனை வியாழன் மண்டலத்திலே இருப்பதாகக் கண்டு பிடித்து உலகுக்கு அறிவித்தார்கள். இந்த கணக்குகள் மூலமாக, வியாழன் மண்டலத்தில் மொத்தம் எட்டு சந்திரன்கள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.”

கலீலியோவின் வியாழன் கிரக ஆராய்ச்சி வீண் போகவில்லை; அவ்வளவும் உண்மையே என் நம்பிக்கையைத் தற்போதைய வான்வெளி ஆய்வுகள் நிரூபித்த விட்டன அல்லவா?

அவர் நான்கு நிலாக்கள் வியாழன் மண்டலத்தில் இருப்பதாகக் கண்டு பிடித்தார்! ஆனால், தற்கால வான் வெளி ஆய்வுகள் பன்னிரண்டு சந்திரன்கள் இருப்பதாகக் கூறியுள்ளன என்றால், அந்த மகான், வானியல் மேதை; வியாழன் மண்டல ஆய்வின் போது எவ்வளவு அரும்பாடுபட்டிருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்போருக்குத்தான் அவரது சிந்தனை திறனை உணவார்கள். இல்லையா?