கலைக்களஞ்சியம்/அகில இந்திய ரேடியோ
அகில இந்திய ரேடியோ (All India Radio): இந்தியவில் ஒலி பரப்புவதின் வரலாறு 1927 ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. அந்த ஆண்டில் இந்திய ஒலிபரப்புக் கம்பெனி என்பது ஏற்பட்டு ஒலிபரப்பும் நிலையங்கள். நிறுவி நடத்துவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் நிலையங்கள் அமைத்தது. ஆனால், அது பணத் தொல்லைகள் காரணமாக 1930-யில் ஒடுங்கவே, ஒலிபரப்பும் பொறுப்பை இந்திய அரசாங்கமே ஏற்று நடத்த முடிவு செய்து ,அதை அகில இந்திய ரேடியோ என்னும் பெயரால் 1936 ஜூன் மாதத்தில் அமைத்தது.
இந்தியப் பிரிவினைக்கு முன் இந்தியவில் 6 நிலையங்களே இருந்தன. பின்னர் புது நிலையங்கள் அமைந்ததாலும் சமஸ்தான நிலையங்களும் அகில இந்திய ரேடியோவின் ஆதிக்கத்தில் வந்துவிட்டதாலும் இப்போது இந்தியா முழுவதும் 21 நிலையங்கள் இருக்கின்றன. ஒலிபரப்பும் கலையை வளர்க்கும் பொருட்டு இப்போது ஐந்து ஆண்டுத் திட்டம் வகுக்கப்பட்டுளது, அதன்படி இப்போது குறைந்த சக்தியுடைய கருவிகள் உள்ள இடங்களில் மிகுந்த சக்தியுடைய கருவிகளை வைக்கவும், புதிய நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்திய மக்கள் நாளுக்குநாள் மிகுதியக ரேடியோவில் பிரியமுடையவர்களாக ஆகிவருகிறார்கள். லைசென்ஸ் பெற்ற ரேடியோக்களின் தொகை 1947-ல், 2,48,274 என்றிருந்தது 1951 டிசம்பரில் 6,58,508 ஆக ஏறியிருக்கிறது. பள்ளிக்கூங்களிலும் சிற்றூர்களிலும் தொழிற்சாலைப் பகுதிகளிலுமுள்ள பொது ரேடியோக்களின் தொகையும் மிகுந்து வருகிறது. அத்தகைய பொது ரேடியோக்கள் இப்போதுள்ளவை ஐயாயிரம். இவற்றுள் 250 தொழிற்சாலைப் பகுதிகளில் இருந்து வருகின்றன.
ஒலிபரப்பு வசதிகள் மிகுந்து வருவது போலவே ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும் மிகுந்து வருகின்றன. பொது நிகழ்சிகளுடன் பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் தொழிலாளிகளுக்காகவும் தனி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .இத்துடன் அரசங்க நிகழ்ச்சிகள் ,விழாக்கள், சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் போன்றவையும் ஒலிபரப்பப்படுகின்றன.
நாடோறும் பலமுறை செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வாறு ஒலிபரப்பப்படுவது உள்நாட்டினர்க்கு 16 மொழிகளிலும் ஆசிய ஆப்பிரிக்க நாட்டினர்க்கு 12 மொழிகளிலும் நடைபெறுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்க்கும் ஆங்கிலத்தில் ஒலிபரப்ப ஏற்ப்பாடு செய்யப்படுள்ளது. சீன மொழியிலும் வெளிநாட்டுச் செய்தி அனுப்பபடுகிறது. ஒரு நாளைக்கு 21 மணி நேரம் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளுக்காகச் செய்யப்படுகின்றன.
நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவிப்பத்ற்காக ஆங்கிலத்திலும், ஆறு இந்திய மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன. வெளி நாட்டினர்க்காக ஆங்கிலத்திலும், அரபு, பாரசீக மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
நிகழ்ச்சிகள் கேட்க மக்கட்கு உண்டாகும் விருப்பத்தை ஆராய்வதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்ச்சிப்பகுதி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.