கலைக்களஞ்சியம்/அக்டோபர்ப் புரட்சி

அக்டோபர்ப் புரட்சி : 1917-ல் ரஷ்யாவின் தலைநகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷவிக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்துபோன ரஷ்யப் படைகளும், அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிப்புரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையிழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்சிக்காக அமைந்த சோவியக் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ரஸ்கி தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின், ட்ராட்ஸ்கி ஆகிய இருவரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவம்பர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றிகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழைய கிரெக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டொபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க: சோவியத் ரஷ்யா வரலாறு.