கலைக்களஞ்சியம்/அசிட்டோன்

அசிட்டோன் (Acetone) [(CH3CO CH2.]: கீட்டோன் இன வரிசையில் முதலாவதாக உள்ளது அசிட்டோன். இது மரத்தைச் சிதைத்து வடித்தால் கிடைக்கும் பொருள்களுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் சில சமயங்களில் இது காணப்படுவதுண்டு.

தொழில் முறையில் இது கால்ஷியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலை வடித்துத் தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு வேண்டிய அசிட்டேட்டை மரத்தைச்சிதைத்து வாலைவடிப்பதால் கிடைக்கும் பைரோலிக்னிய அமிலத்திலிருந்து பெறலாம். அசிட்டிக அமில வாயுவை 500 வெப்ப நிலையிலுள்ள சுண்ணாம்பின்மேல் செலுத்தியும், எதில் ஆல்கஹாலை மிகச் சூடான (540°) மாங்கனீஸ் டையாக்சைடின்மேலோ, சுண்ணாம்பையும் இரும்பு ஆக்சைடையும் கலந்து அதன் மேலோ பாய்ச்சியும் இதைப் பெறலாம்.

அசிட்டிலீனை நீராவியுடன் கலந்து நாக ஆக்சைடின் மேலோ, பொட்டாசியம்-தோரியம் கார்போனேட்டின் மேலோ செலுத்தி இது தற்காலத்தில் தயாரிக்கப்படுகிறது. தகுந்த பாக்டீரியாவின் உதவியால் கார்போஹைட்ரேட்டுகளை கொதிக்கவைத்து இதைத் தயாரிக்கிறார்கள். ஒருவகை பாக்டீரியா மாப்பொருளிலிருந்து 10 முதல் 30% வரை ஆல்கஹாலையும் 6 முதல் 10% வரை அசிட்டோனையும் தருகின்றன.

அசிட்டோன் ஒரு தனிப்பட்ட வாசனையுடைய நிற மற்ற திரவம். இது தண்ணீரில் கலக்கும் தன்மையுடையது. அநேக முக்கியமான பண்டங்களை இதிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கலாம். உதாரணமாகக் குளோரோபாரம், அயடோபாரம் ஆகிய இரண்டையும் அசிட்டோனிலிருந்து தயாரிக்கலாம். செல்லுலோஸ் அசிட்டேட்டு, செல்லுலோஸ் நைட்ரேட்டு, அநேக கொழுப்புக்கள், பிளாஸ்ட்டிக்குகள், அசிட்டிலீன் முதலியவற்றின் கரைப்பானாக அசிட்டோன் பெரிதும் பயன்படுகிறது. ஏ. பி. ம.