கலைக்களஞ்சியம்/அசீரணம்

அசீரணம் என்பது சீரணப் பாதையில் ஏற்படும் நோய்களுள், இதனால் ஏற்பட்டதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி, உண்ட உணவைச் சீரணிக்க ஏற்படும் கஷ்டத்தைக் குறிப்பதாகும். அசீரணமுண்டாவது (1) உணவையும், (2) உடல் நிலையையும் பொறுத்திருக்கிறது.

(1) உணவு: சீரணமாகாத உணவுப்பொருள்களை உட்கொள்வதாலும், அளவுக்கு மிஞ்சியோ, காலந்தவறியோ, அரைகுறையாக மென்றே உண்ணுவதாலும், பீர் முதலிய மது, தேநீர் ஆகியவற்றைப் பருகுவதாலும் அசீரண முண்டாகலாம். உணவு உண்ணும் சமயத்தில் நீரை மிகுதியாகக் குடித்தால் உணவுடன் உமிழ்நீர் கலவாமற் போவதோடு இரைப்பையில் சுரக்கும் சீரணநீர் நீர்த்தும் போகும். அப்போது சீரணம் மெதுவாக நடைபெறும். மதுபானப் பழக்கமுடையவர்களும் மிகுதியாகப் புகை பிடிக்கிறவர்களும் அசீரணமடைவர்.

(2) உடல்நிலை சம்பந்தமான காரணங்களுள் நரம்பு மண்டலக்கோளாறே முக்கியமானதாகும். துக்கச் செய்தி, மனக்கவலை போன்றவை சீரண சக்தியை அழித்துவிடும். சில சமயங்களில் வாந்தி உண்டாகும்படியும் செய்யும். பொதுவாக உடல் பலவீனமாக இருப்பின் அது இரைப்பையையும் பாதிக்கும். இரைப்பையின் தசைகள் தளர்ந்திருந்தால் அது கீழே இறங்கும், அப்பொழுது அசீரணம் உண்டாகும். சிறுநீரகத்தில் நோய் உண்டானாலும் அசீரணம் ஏற்படும். இரைப்பைப் புண்களும், முன் சிறுகுடல் (Duodenum) புண்களும் அசீரண முண்டாக்கும். உள்ளக்கிளர்ச்சிக் கோளாறுகளால் இரைப்பைக்கு இரத்தம் மிகுதியாக வந்து அதனால் சீரண உறுப்புக்களிலுள்ள கோழைச்சுரப்பிகளில் கோழைநீர் மிகுதியாகச் சுரந்து அசீரண முண்டாவதே அடிக்கடி காணப்படுவதாகும் என்பது அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளால் தெரியவருகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவராகவும் இதுவரை நல்ல சீரண முடையவராகவும் உள்ளவரிடம் அசீரணம் காணப்பட்டால் வைத்தியர்கள் அவருக்கு இரைப்பைப் புற்று நோய் உண்டாயிருப்பதாக ஐயுறுவர். மறிவினை நரம்புக் கோளாறுகளாலும் சீரண உறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் வந்து சேராமையாலும் அசீரணம் உண்டாவதுண்டு.

நோய்க்குறி நாவில் மாவு படிந்திருக்கும், வாய் நாறும், பசி யிராது, வாந்தியும் வாந்தியுணர்சியும் தோன்றும், நெஞ்சு நோகும், வயிறு பொருமும், புளித்த ஏப்பம் வரும், மலச்சிக்கலோ வயிற்றுப் போக்கோ காணும், வயிற்றுப் போக்குக் காணுவதைவிட மலச்சிக்கல் உண்டாவதே சாதாரணமாகும்.

அசீரணம் தீவிரமாக (Acute) ஏற்பட்டதாயிருந்தால், எடுத்துக் காட்டாக வயிறு நிறைய உண்டு சிறிது நேரத்துக்குள் தோன்றுமாயின், நோவும் வாந்தியும் உண்டாகும். வாந்தி எடுத்தபின் இதமாக இருக்கும். அசீரணம் நாட்பட்டதாக (Chronic) இருப்பின் உணவு உண்டதும் இரைப்பையில் கனமாகத் தோன்றும். நோவு தோன்றலாம் தோன்றாமலும் இருக்கலாம். இந்த அசௌக்கரியம் உணவு உண்ணும் ஒவ்வோரு வேளையிலும் உண்டாகலாம், அல்லது சில குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் உண்டாகலாம். அல்லது சில குறிப்பிட்ட உணவுப்பொருள்களை உண்டவேளையில் மட்டும் உண்டாகலாம். இரைப்பை நெகிழ்ந்து உணவு நொதித்துக் காற்று உண்டாகி வயிறு பொருமுமாறு செய்யும். புளித்த ஏப்பம் வரும். சில வேளைகளில் சூடான புளித்த நீரோ அல்லது சுவையில்லாத நீரோ வாய்க்கு வரும். அல்லது சீரணமாகாத உணவுப் பொருட்களும் வாய்க்கு வரலாம். அந்தச் சமயங்களில் உணவு உணவு உண்டால் நோவு தற்காலிகமாக நீற்கும். ஆனால் சிறிது நேரம் சென்றதும் அசௌக்கரியம் முன்போல் உண்டாகும். அசீரணமுண்டாகும்போது உணவில் பிரியமில்லாமல் இருக்கலாம், ஆல்லது மிகுந்த பிரியம் உண்டாகலாம். தீவிரமான அசீரணமானால் மலச்சிக்கலும் ஏற்படுவது வழக்கம்.

அசீரணத்தால் இரைப்பையிலுண்டாகும் அசௌக்கரியத்தைவிட மற்ற உறுப்புக்களில் உண்டாகும் அசௌகரியமே அதிகமாகும். நெஞ்ச்சுநோகும், மூச்சுத்திணறும், இருதயம் படபடவென்று அடிக்கும், தலைநோகும், கிறுகிறுப்பு வரும், கைவிரல்களும் பாதங்களும் குளிரும், உடம்பில் சோர்வு தோன்றும்; தூக்கமின்மை, எளிதில் கோபமைடைதல், மனச்சோர்வு ஆகியவைகளும் உண்டாகும்.

சிகிச்சை : மருத்துவர் நோயின் சின்னங்களை மட்டும் நீக்குவதற்காக சிகிச்சை செய்யாமல் அதன் காரணத்தை நீக்குவதற்காகவே சிகிச்சை செய்ய வேண்டும். நோயின் காரணத்தைக் கண்டு பிடிப்பதற்காக மருத்துவர் நோயின் வரலாறைக் கேட்கவும், நோயாளியை பரிசோதிக்கவும், உணவுகொடுத்துச் சீரணமாவதைச் சோதிக்கவும், மலத்தை பரிசோதிக்கவும், பேரியம் கலந்த உணவைக் கொடுத்து உணவுப்பாதையை எக்ஸ் கதிர் படம் எடுத்துப் பார்க்கவும் வேண்டும்.

உணவு; ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்பதும் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்ணாதிருப்பதும் போதாது. மசாலை அதிகமாகச் சேர்காமல் உணவை நன்றாக வேகவைத்து உண்பது நல்லது. பச்சைக் காய்கறிகள், புதிதான ரொட்டி, பலகாரங்கள் ஆகியவை அசீரணப் பொருள்களாதலால் அறவே நீக்க வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகூட ஏற்றுக்கொள்ளாதிருத்தல், சிலநாட்கள் பால்மட்டுமே மித அளவேக்க் குடித்துவருதல் நல்லது.

மருந்து; நோயாளி மருத்துவரைக் கலக்காமல் தானாகவே மருந்து உண்ணலாகாது. அசீரணம் உடலுறுப்புக்கோளாறுகளினால் உண்டாகும்போது மருத்துவர் அவற்றிற்கு ஏற்ற மருந்துகளையும், உள்ளக் கிளர்ச்சியானால் உண்டாகும்போது நரம்பு மண்டலக் கிளர்ச்சியை ஆற்றக்கூடிய மருந்துகளையும் பயன்படுத்துவரார். கி. சீ. ச.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசீரணம்&oldid=1495504" இலிருந்து மீள்விக்கப்பட்டது