கலைக்களஞ்சியம்/அச்சுநாடுகள்

அச்சுநாடுகள் (Axis powers) : ஜெர்மனியும் இத்தாலியும் 1937-ல் ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வொந்தப்படி இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது 1940-ல் ஜெர்மனிக்கு உதவியாக இத்தாலி பிரான்சுமீது படையெடுத்தது. 1940 செப்டெம்பர் 27-ல் ஜப்பானும் இவ்விருநாடுகளோடு சேர்ந்து ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டது; இது மூவரசு ஒப்பந்தமாயிற்று. இம்மூன்று நாடுகளுக்கும் அச்சு நாடுகள் என்றும், இந்நாடுகளின் உறவு முறையை ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு என்றும் கூறுவது வழக்கம். 1945 செப்டெம்பரோடு இவ்வச்சு முறிந்துபோயிற்று.