கலைக்களஞ்சியம்/அடிசன், ஜோசப்

அடிசன், ஜோசப் (1672-1719): ஆங்கிலக் கவிஞரும் சிறந்த கட்டுரையாளருள் ஒருவருமாவர். அவர் படித்துத் தேறியபின் அவருடைய லத்தீன் கவிதையைக் கண்டு அரசினர் அவருக்கு உதவித்தொகை கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் மார்ல்பரோ என்னும் சேனாதிபதி வெற்றி பெற்றது குறித்துக் கவிதை எழுதியதும் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அவரும் அவருடைய நண்பர் ஸ்டீல் என்பவரும் சேர்ந்து டாட்லர், ஸ்பெக்டேட்டர் என்ற வாரப் பத்திரிகைகளை நடத்தி வந்தனர். அவற்றில் அடிசன்

அடிசன்
அடிசன்

எழுதிய கட்டுரைகள் மிகவும் சிறந்தவை. வாழ்க்கையைச் சித்திரிக்கும் கட்டுரையின் பண்பை வகுத்துக் காட்டியவர் அடிசன் என்று கூறுவர். அவருடைய கட்டுரைகளில் காணும் நகைச்சுவையும் எள்ளித் திருத்தும் சுவையும் (Satire) பிறர் மனத்தைப் புண்படுத்தாத பெருந்தன்மை உடையன. அடிசனுடைய கட்டுரைகள் இன்றும் இன்பம் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் அழகிய நடை கைவர விழைவோர் அல்லும் பகலும் அடிசன் கட்டுரைகளைப் பயிலக்கடவர் என்று டாக்டர் ஜான்சன் கூறுகிறார். அவருடைய கவிதையும் நாடகமும் அவர் காலத்தில் விரும்பப் பெற்றனவாக இருந்தபோதிலும் இக்காலத்தவர்க்குச் சுவை தருவனவாக இல்லை.