கலைக்களஞ்சியம்/அடிபிக அமிலம்
அடிபிக அமிலம் (Adipic Acid): [HOOC-CH2-CH2-CH2-CH2 - COOH] இது பீட் கிழங்கில் உள்ளது. கொழுப்புக்களையும், ஆமணக்கெண்ணெயையும் ஆக்சிகரணித்து இதைப் பெறலாம். தொழில்களில் இது முக்கியமாகப் பயன்படுகிறது. சமையல் பொடிகளிலும், தாதுநீர்களிலும் இது டார்டாரிக அமிலத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. நைலான் என்ற தொகுப்புப் பட்டு இழையின் தயாரிப்பில் இது பயன்படுகிறது. ஹெக்சா- மெதிலீன்-டையமீன் (NH2— [CH2) – NH2] என்ற பொருளுடன் இது வினைப்பட்டு மூலக்கூறு நிறை உயர்ந்த பாலிஅமைடு ஒன்றை அளிக்கிறது. இளகிய நிலையில் இக்கூட்டை மெல்லிய இழைகளாக இழுக்கலாம். இந்த இழைகளை மேலும் இழுத்து நான்கு மடங்கு நீளமுள்ளதாகவும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் இப்பொருளின் தன்மை மாறி இழுவலிமிக்க பளபளப்பான இழைகளைப் பெறலாம். இவ்விழை நைலான் (த. க.) என்ற பெயருடன் வழங்குகிறது. எஸ். எஸ். க.