கலைக்களஞ்சியம்/அடியார்க்குநல்லார்

அடியார்க்குநல்லார் என்பவர். சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியத்திற்கு உரை எழுதியவர். இவர், நிரம்பை என்னும் ஊரில் பிறந்தவர் என்பதையும் பொப்பண்ண காங்கேயன் என்ற சிற்றரசனால் பாதுகாக்கப் பெற்றவர் என்பதையும் உரைச் சிறப்புப் பாயிரத்தில் வரும் "அடியார்க்கு நல்லான்; காருந்தருவும் அனையான் நிரம்பையர் காவலனே " என்பதாலும் "பொப்பண்ண காங்கேயர் கோனளித்த, சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே" என்பதாலும் அறியலாம். நிரம்பையென்னும் ஊர், கொங்கு மண்டிலத்தில் குறும்பு நாட்டில் விசயமங்கலத்தின் பக்கத்திலுள்ளது.

ஞானசம்பந்தர் தேவாரத்தில் வரும் "கண்ணு ளார் கரு வூரு ளானிலை யண்ணலார்அடி யார்க்கு நல்லரே" என்ற அடியில் சிவபிரானுக்குப் பெயராக வந்துள்ள அடியார்க்கு நல்லார் என்ற பெயரை இவ்வாசிரியர் தாங்கியிருத்தலால் இவர் சைவர் என்று கருத இடமுண்டு. "பிறவா யாக்கைப் பெரியோன்" (சிலப். 5-169) என்ற அடிக்கு, "என்றும் பிறவாத யாக்கையுடைய இறை வன்” என்று இவர் எழுதியிருத்தல் இதற்குத் துணை செய்யும். சிவன் என்று குறிக்கவேண்டிய இடத்தில் இறைவன் என்ற பொதுப்பெயரைக் குறித்திருத்தலின் சிவனையே இறைவனாகக் கொண்டவர் இவர் என்று ஊகிக்க இடமிருத்தல் காண்க. இவருடைய காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு என்பர். நச்சினார்க்கினியரால் மறுக்கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள்கையாக இருத்தலால் இவர் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர் என்பது அறியலாம்.

இவர், உரையெழுத எடுத்துக்கொண்ட சிலப்பதிகாரம், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுங் கூறும் நூலாகும். இதற்கு உரை வகுக்க இயற்றமிழ்ப் பயிற்சியுடன் இசைத்தமிழ் நாடகத்தமிழ்ப் பயிற்சியும் நிரம்பியிருத்தல் வேண்டும். அடியார்க்குநல்லார், முத்தமிழிலும் தமக்குள்ள வித்தகத்தை இவ்வுரையில் நன்கு காட்டியுள்ளார். இவருரை யில்லையேல் இசைத் தமிழ் பற்றியும் நாடகத்தமிழ் பற்றியும் கூறும் பழைய நூல்கள் இருந்தன என்பதையே அறியவியலாது. இவர் உரை, முதலிலிருந்து ஊர்சூழ்வரி வரையுமே யுள்ளது. அரங்கேற்று காதைக்கு இவர் எழுதிய உரை மிக விரிவானது ; அருமையானது. இவர் மதுரைக் காண்டம் முழுமைக்கும் உரை எழுதியிருந்தார் என்பதைச் சில குறிப்புகளால் அறியலாம். இவர், மற்றையுரையாசிரியர்கள் போலன்றித் தாம் எடுத்துக் காட்டும் மேற்கோள்கள் இன்ன இன்ன நூல்களிலுள்ளன என்று பெரும்பாலும் புலப்படுத்தி யிருக்கின்றார். இவர் உரையில் இயற்றமிழ் விளக்கத்திற்கு 39, இசைத்தமிழ் விளக்கத்திற்கு 7, நாடகத்தமிழ் விளக்கத்திற்கு 10, ஆக 56 நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

ஐந்திணைக்குமுரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய இவற்றுள் ஒவ்வொன்றின் வகை பலவற்றிற்கும் சிலப்பதிகாரத்திலிருந்தே இவர் உதாரணங்காட்டி விளக்கியிருத்தல் பெரிதும் பாராட்டற்குரிய செயலாகும்.

”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” (இந்திர.-64) என்றும், ”ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று, வெள்ளி வாரத்து” (கட்டு. 133-5) என்றும் வருவது கொண்டு ஊகித்துக், கோவலன் கண்ணகி இருவரும் இன்ன காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டார்கள் என்பது முதலியனவற்றை இவர் எழுதுவதால் இவரது கணிதநூற் பயிற்சியை யறியலாம்.

இவர் உரைநடை சிலவிடத்து எதுகை மோனைக்ளுடன் கூடி இனிய சுவை பயந்து செய்யுள் நடைபோல் அமைந்துள்ளது. ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே படிப்போர்க்கு அவ்வப்பகுதி ஆங்காங்குள்ள உரையாலேயே புலப்படவேண்டு மென்பது இவருடைய கருத்தாதலால், முன்னெழுதியவற்றையே பின்னும் எழுது மியல்பினர். இவர் மூலத்தில் எவ்விடத்தேனும் திசைச்சொல் வந்திருப்பின் அவற்றைத் தனித்தனியே எடுத்துக்காட்டி இன்ன சொல் இன்ன நாட்டின் வழக்கென்றும், முற்காலத்துப் பழமொழிகளின் கருத்து எவ்விடத் தேனும் வந்திருப்பின் அவற்றை யெடுத்துக் காட்டி இன்னது இன்ன பழமொழியென்றும் புலப்படுத்துவர். அணிகளையும் மெய்ப்பாடுகளையும் விளக்கிச் செல்வர். பதசாரம் எழுதுவதில் இவர்க்குள்ள திறமையை, (மனைய. 73-79) ”மாசறு பொன்னே வலம்புரி முத்தே” என்பது முதல், ”யாழிடைப் பிறவா இசையே யென்கோ” என்பது வரையுள்ள பகுதிக்கு இவர் எழுதிய விளக்கத்தா னறியலாம்.

ஒவ்வொரு காதையின் முடிவிலும் இஃது இன்ன செய்யுள் என்று விளக்கி எழுதுதலும், வினை முடிபுகளை விடாது கூறி அழகுடன் முடித்துக் காட்டுதலும் இவர் இயல்பாகும். பலரும் தமக்குத் தோற்றியாங்குப் பொருள் கொள்ளக்கிடந்த போற்றி என்பதை இவர் இகரவீற்று வியங்கோளாகக் கொண்டு ”போற்றுவாயாக” என்று பொருள் செய்திருக்கின்றார். முந்நீர் என்பதற்கு ”ஆற்று நீர் ஊற்றுநீர் மேனீர்” என்று பிறர்கூறும் உரையை உடன்படாது, ”ஆற்றுநீர் மேனீராகலானும்; இவ்விரண்டு மில்வழி ஊற்று நீருமின்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று” என்று மறுத்து, ”முச்செய்கையுடைய நீர் முந்நீர் என்பது; முச்செய்கையாவன : மண்ணைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாம்” என்று இவர் எழுதியுள்ள பகுதியால் இவருடைய தருக்க வுணர்ச்சியும் ஆராய்ச்சியும் புலனாகும். செ. வே.