கலைக்களஞ்சியம்/அடிவானம்

அடிவானம் (Horizon) : வானமும் புவியும் தொடுவதுபோல் தோன்றும் வட்டவடிவான கற்பனை வரை அடிவானம் எனப்படும். கடலில் இந்த வரையை மிகத் தெளிவாகக் காண முடிகிறது. ஒருவர் பார்க்கத்தக்க தொலைவின் எல்லை அடிவானமேயாகும். ஆகையால் அடிவானமானது பார்ப்பவர் இருக்கும் உயரத்தைப் பொறுத்து வேறுபடும். கடல் மட்டத்தில் நின்றுகொண்டு பார்க்கும் ஒருவருக்கு அடிவானம் சுமார் 2 மைல் தொலைவில் இருக்கும். ஆனால் சுமார் ஒரு மைல் உயரமுள்ள மலையின் மேல் நின்று பார்ப்பவர் தெளிவான நாளில் 96 மைல் வரை பார்க்க முடிகிறது.

அடிவானம்

வானவியலில் அடிவானம் என்பது வேறொரு கற்பனை வட்டத்தைக் குறிக்கும். வானக் கோளத்தின் பெரு வட்டங்களில் எது மட்டக்குண்டிற்கு நேர்க்குத்தான தளத்தில் உள்ளதோ அது அடிவானம் எனப்படும். இது தோற்ற அடிவானம் என்றும்,பார்ப்பவரின் வழியே வரையப்படும் தளத்திற்கு இணையாகப் புவியின் மையத்திலிருந்து வரையப்படும் தளம் யுக்த அடிவானம் (Rational h.) என்றும் அழைக்கப்படுகின்றன. ஜி. கு