கலைக்களஞ்சியம்/அட்டை (Cardboard)
அட்டை (Cardboard) : காகிதத்திற்குப் பதிலாகப் பழங்காலத்தில் பயனாகிவந்த பாபைரஸ் (Papy- rus) தாள்களை ஊறவைத்துப் போதுமான பருமனுக்கு ஒன்று சேர்த்து அடித்து, அழுத்தி, வெயிலில் காயவைத்து முன்னர் அட்டைகளைத் தயாரித்து வந்தனர். அக்காலத்தில் கீழ்நாடுகளில் புல்வகைகளைக் கொண்டு அட்டைகளைத் தயாரித்து விளையாட்டுச் சீட்டுக்களைச் செய்யப் பயனாக்கினர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டைத் துண்டுகளின்மேல் சீட்டுப் படங்களை வரைந்தார்கள்.
அட்டைகளைத் தயாரிக்கும் எந்திரம் காகிதத்தைத் தயாரிக்கும் எந்திரத்தைப் போன்றதே. இதிலும் செல்லுலோசைக் கொண்ட மூலப் பொருள் கூழ்போலாக்கப்படுகிறது. இத்துடன் தேவையான நிறப்பொருளைச் சேர்த்து அட்டை எந்திரத்தின் உதவியால் அட்டைக்ளாகச் செய்கிறார்கள். ஒட்டு அட்டை (Pasteboard) என்பது, பல காகிதத் தாள்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டித் தயாரிக்கப்படுகிறது. உட்புறத்தில் மலிவான தாள்களையும், வெளிப்புறங்களில் மட்டும் உயர்ந்த ரகக் காகிதங்களையும் வைத்து ஒட்டித் தேவையான தடிப்புள்ள அட்டைகளைப் பெறலாம். ஒட்டு அட்டை அச்சுத் தொழிலில் அதிகமாகப் பயன்படுகிறது. சிறு பெட்டிகள் செய்யவும், உள்ளங்கிகள் போன்ற பொருள்களைப் பொதியவும் பயனாகிறது. பிரிஸ்டல் அட்டை (Bristolboard) என்பது மிக நேர்த்தியான அட்டை வகை. இது சித்திரம் வரைய ஏற்றது. வைக்கோல் அட்டை (Strawboard) என்பது மலிவான அட்டை. வைக்கோலைக் கொதிக்க வைத்து அடித்துக் கூழாக்கி இது தயாரிக்கப்படுகிறது.
அமெரிக்கா, கானடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அட்டைத் தயாரிப்புத் தொழில் முக்கியமானது.