கலைக்களஞ்சியம்/அணைகள்

அணைகள் (Dams) : ஒர் ஆற்றின் போக்கைத் தடைசெய்து அதன் மட்டத்தையும் அளவையும் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைத்துப் பயனாக்கவும் அதன் குறுக்கே போடப்படும் தடை அணை எனப்படும். அணையின் மேற்புறம் தோன்றும் ஏரியானது நீர்த்தேக்கம் (த. க.) என அழைக்கப்படும்.

ஒரு நீர்த்தேக்கத்தில் நீர்ப்பரப்பைத் தவிர நீரைத் தடை செய்யும் அணையும், மிகையான நீரை வெளிவிடும் கலிங்குகளும், பாசனத்திற்காகவோ, குடிநீர் வசதிக்காகவோ அமைக்கப்படும் வாய்க்கால்களில் செல்லும் நீரைக் கட்டுப்படுத்தும் மதகுகளும், மின்னாக்கப் பொறிக ளுக்கு நீரைக் கடத்திச் செல்லும் குழாய்களும், இந்த அமைப்புக்களுக்குத் தேவையா வேறு உறுப்புக்களும் இருக்கும். மண், கல், கான்கிரீட்டு, மரம், எஃகு ஆகியவற்றால் அணைகளை அமைக்கலாம். அணை கட்டப் பயன்படும் பொருள்களை ஒட்டியும், அதைக் கட்டும் முறையை ஒட்டியும், அதன் அமைப்பை ஒட்டியும் பலவகையாகப் பிரிக்கலாம்.

பழங்காலத்தில் நம் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் பெரும்பாலும் மண்ணினால் ஆனவை. எத்தகைய நிலத்திலும், எந்த அளவிலும் மண் அணைகளை அமைக்க முடிவதோடு அவற்றைக் கட்டச் செலவும் குறைவாக இருக்கும். இதற்கேற்ற வகையான மண் போதிய அளவு அருகில் கிடைக்கும்போதும், அடிதளப் பாறை வேறு வகை அணைகள் கட்ட ஏற்றதாக இல்லாத போதும் மண் அணையே ஏற்றதாகிறது. சிறந்த பண்புகளும், நீரைக் கசியவிடாத தன்மையும் கொண்ட மண் போதிய அளவு கிடைத்தால், அணை முழுவதையும் இதைக் கொண்டே கட்டி விடலாம். அவ்வாறில்லையேல் உயர்ந்த ரக மண்ணைக் கொண்டு ஒரு திரைபோல் எழுப்பி, அதன் இரு புறங்களிலும் மட்ட ரக மண்ணை வைத்து மூடிவிடலாம். பாறையின் மேலோ, நீரைக் கசியவிடாத களிமண்ணின் மேலோ அணையை எழுப்பவேண்டும். அதன் உயரம் நீர் மட்டத்தின்மேல் 5 முதல் 10 அடி வரையும், அகலம் 10 முதல் 30 அடி வரையும் உள்ளவாறு அணை அமைக்கப்படுகிறது. பக்கங்களின் சரிவு 3:2 என்ற விகிதத்திலிருந்து 5:1 வரை இருக்கலாம். நீரோட்டம் வந்து தாக்கும் முகம் அலைகளால் அரிபடாமலும், சரியாமலும் இருக்க அது கான்கிரீட்டினாலோ கற்களாலோ மூடப்படும்.

பாறை நிரப்பு அணை (Rock fill Dam) என்பதை மண் அணையின் திருத்தம் எனலாம். தக்க மண் கிடைக்காதபோதும், கல் அல்லது கான்கிரீட்டு அணைக்குச் செலவு அதிகமாகும்போதும் இத்தகைய அணையைக் கட்டலாம். நிலையாக இருக்குமாறு அமைக்கப்பட்ட துண்டுப் பாறைகளால் இது அமைக்கப்படுகிறது. அவற்றின். நடுவே உள்ள பரலினாலான சுவரொன்று அணையின் வழியே நீர் கசியாமல் தடுக்கும். இவ்வகை அணைகள் புவி அதிர்ச்சியின்போது அதிகமாகச் சேதம் அடையாமல் தப்பும். பாறை நிரப்பு அணையின் உச்சியின் அகலம் 4 முதல் 28 அடி வரைக்கும். இதன் சரிவு 1:2 என்ற விகிதத்திலிருந்து 3:2ரை இருக்கலாம்.

கல்லணைகளும், கான்கிரீட்டு அணைகளும் கவர்ச்சி வகையைச் சேர்ந்தவை. தமது எடையினாலேயே நிலைத்து நிற்குமாறு அமைக்கப்படும் அணைகள் கவர்ச்சி அணைகள் (Gravity Dams) எனப்படும். இவற்றின் குறுக்குவெட்டு ஏறக்குறைய முக்கோண வடிவமாகவும், இவற்றின் அமைப்பு நேராகவும் இருக்கும். இவை வளைவுகளையும், உதை சுவர்களையும் கொண்டிருக்கும். நீரின் விசையாலும், வெப்ப நிலை மாறுதல்களாலும், புவி அதிர்ச்சிகளாலும் அணையானது திரும்பாமலும், கவிழாமலும், நழுவாமலும் நிலைத்து நிற்குமாறு இது அமைக்கப்பட வேண்டும். அணையின் வழியே நீர் கசிந்து இதைச் சேதப்படுத்தாமல் வடிந்து செல்ல வசதி அமைக்க வேண்டும். இதன் உச்சி நீர் மட்டத் திற்கு மேல் 6 முதல் 10 அடி வரை உயரம் இருக்கும். தரையின் மாறுதல்களினால் அணை மேலெழும்பிக் காலப் போக்கில் இதன் உயரம் அதிகமாகிவிடலாம். இதையும் மனத்திற் கொண்டே அணையின் உயரம் முடிவு செய்யப்படுகிறது.

கல்லினாலும், கான்கிரீட்டினாலும் வளைவான அணைகளைக் கட்டுவதில் சில நலன்கள் உண்டு. இந்த அணைகளில் நீரின் அழுத்தத்தை அணையின் எடையே தாங்கி நிற்பதில்லை; அமைப்பே ஒரு நெம்புகோல் போல் இயங்கி, இதை ஓரளவு தாங்குகிறது. அழுத்தத்தில் பெரும்பகுதி வளைவு தாங்கிகளின் வழியே அடிப் பாறையை அடைகிறது. ஆகையால் இப்போது முழு அணையும் கிடையாக உள்ள பெரும் வளைவுபோல் இயங்குகிறது. அணை மேலெழும்புவதினாலும், வெப்ப மாறுதல்களாலும், முறுக்கு விளைவுகளாலும் தோன்றும் விசைகளையும் மனத்திற்கொண்டே அணையானது அமைக்கப்படும். அணை உச்சியின் அகலம் நீளத்தில் 1/60 பகுதி இருக்கும். ஆனால் மேலுள்ள பாதை இன்னும் அகலமாக இருக்கவேண்டுமாயின், அணை உச் சியின் அகலத்தை அதிகமாக அமைப்பதுண்டு. அணையின் அடிப்பாகம் இதைவிட அதிகமாயினும், கவர்ச்சி அணைகளைவிடக் குறைவாக இருக்கும். பக்கங்களிலும் அடித்தளத்திலும் உறுதியான பாறைகளைக் கொண்டு, மிக ஆழமாக உள்ள மலை இடுக்கின் குறுக்கே போட இவ்வகை அணை மிகவும் ஏற்றது.

உதை சுவர் அணையில் (Buttress Dam) குறைவான அகலமுள்ள பல வளைவுகள் நீரோட்டத்திற்கு எதிராக அமைக்கப்படும். இந்த வளைவுகளை முக்கோண வடிவான உதை சுவர்கள் தாங்கி நின்று, வளைவுகளின் மேல் தொழிற்படும் விசைகளை அடித்தளத்திற்குக் கடத்தும். இந்த அணையில் பலவகை உண்டு. இது தனி அமைப்பாகவோ, பல அமைப்புக்களை இணைத்தோ கட்டப்படலாம். அடித்தளத்தில் தொழிற்படும் தகவுகள் (Stress) மிகக் குறைவாக இருக்குமாறு உதை சுவர் அணையை அமைக்கலாம். உதை சுவர்களுக்கு இடையே உள்ள இடத்தில் வடிகட்டிகளையும், நீரைச் சுத்தம் செய்யும் சாதனங்களையும் அமைக்கலாம். கவர்ச்சி அணையைக் கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கும் மனத்திற்கொள்ள வேண்டும்.

அணை போடப்படும் ஆற்றின் வெள்ளம் வரம்பு மீறிப் போய்விட்டால் அணையே சேதமடையலாம். ஆகையால் மிகையான நீர் வடிய உதவும் அமைப்புக்கள் ஒவ்வொரு அணையிலும் இருக்கும். தேவையான உயரத்தில் அமைக்க ஏற்றவாறு உள்ள தடைகளாலோ, வடிகால்களாலோ வாய்க்கால்களாலோ இந்நீரைத் தனியே செலுத்திவிடலாம்; அல்லது அணையின் உயரத்தை நீர்த்தேக்கத்தின் உச்சமட்டத்தைவிட 10 முதல் 30 அடிவரை குறைவாக அமைத்து, மிகையான நீர் அணையின் மேல் வழிந்தோடுமாறு செய்யலாம். இவ்வாறு வழியும் நீர் கீழே வரும்போது வெகு வேகத்துடன் தரையை அடைந்து, அங்கே பெருங் குழிகளைத் தோண்டக்கூடும். ஆகையால் அணையின் அடியில் நீரின் வேகத்தைத் தாங்கும் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அணை உச்சியின்மேல் பல எஃகுக் கதவுகளை அமைத்து, அவற்றை மூடியும் திறந்தும் அணையின்மேல் வழியும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இக்கதவு களின் மேலும், அணையின் மதகுகளின் மேலும், மின் னாக்கிகளுக்கு நீரைக் கடத்தும் குழல்களிலும் அதிகமான அழுத்தம் தொழிற்படும். இவ்வழுத்தத்தைத் தாங்கும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன. டி. பி. கு.

உலகிற் பெரிய அணைகள்

போல்டர் அணை (Boulder Dam) : உலகிலேயே மிக உயரமான அணை இதுதான். அமெரிக்காவிலுள்ள

போல்டர் அணைக்கட்டு

கொலராடோ நதியின் குறுக்கே கருங்குடைவு (Black Canyon) என்னுமிடத்தில் இது 1936-ல் கட்டி முடிக்கப்பட்டது. கொலராடோ நதியின் ஆற்றுப் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், அதில் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவும், நீர்ப்பாசனம் அளிக்கவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இது அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர்- அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கையில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது.

ஷாஸ்டா அணை (Shasta Dam): இது அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. இது இந்நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது.

கிராண்டு கூலி அணை (Grand Coulee Dam): கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது: 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர்

கிராண்டு கூலி அணைக்கட்டு
உதலி : அமெரிக்க நிலமீட்சிச் செயலகம்

இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ்வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல்.

பான்டானா அணை (Fontana Dam) : டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணைகளில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் 1,444, 300 ஏக்கர்-அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது.

போர்ட் பெக் அணை (Fort Peck Dam) : மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியியல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயரமும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்குவரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட்டப்பட்டது.

ஆண்டர்சென் ராஞ்சு அணை (Anderson Ranch Dam) : மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத்தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண்டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும், நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது.

ஷாம்பான் அணை (Chamban Dam): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ்வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி.

டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi Dam): சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக்கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உலகிற் பெரியது இதுவே போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள்.

அஸ்வான் அணை (Assuan Dam) : இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லினாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்டபோது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதிகளுக்கு இது பாசன மளிக்கிறது.

(மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அணைகள்&oldid=1455886" இலிருந்து மீள்விக்கப்பட்டது