கலைக்களஞ்சியம்/அண்ணாமலை ரெட்டியார்
அண்ணாமலை ரெட்டியார் : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கரிவலம்வந்தநல்லூர் என்னும் சிவத்தலத்திற்கு அருகில் உள்ள சென்னிகுளம் என்னும் சிற்றூரில் சென்னவ ரெட்டியார், ஓவு அம்மாள் என்னும் இருவர்க்கும் அருமை மகனாக அண்ணாமலை ரெட்டியார் 1861 ஆம் ஆண்டிற் பிறந்தார். இவர், சிறு பருவத்தில் உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற் பயின்று, நிகண்டும், அந்தாதிகள் முதலான சில சிற்றிலக்கியங்களும் கற்றுத் தேறினார். பின்னர் யமகம் திரிபு முதலிய சொல்லணிகளும், பொருள் நயமும் அமையச் செய்யுளியற்றுந் திறன் படைத்தார். மேலும் தாம் இயற்றிய பாட்டுக்களை வெவ்வேறு இராகங்களிற் பாடிக்காட்டும் அளவிற்கு இசையறிவும் பெற்றிருந்தார்.
தந்தையார் விரும்பியவாறு பயிர்த்தொழில் செய்ய மனம் இல்லாத இவர், சேற்றூர்க்குச் சென்றார். சமீன்தாராயிருந்த சுந்தரதாசுப் பாண்டியத் தேவர் தமிழ்ச்சுவை தெரிந்தவராதலால் அங்கே அவரது ஆதரவிற் சிலகாலம் இருந்தார். பின்பு, திருவாவடுதுறை ஆதீனத்தை யடைந்து, அங்கு அப்போது பட்டத்திலிருந்த அருள்திருவாளர் சுப்பிரமணிய தேசிகர் அவர்களைக் கண்டு, அவர்மீது தாம் பாடிவந்த, "அரசனகராதியர்" என்னும் முதற்குறிப்புடைய செய்யுளை யெழுதிக் கொடுத்தார். தேசிகர் அச்செய்யுளைப் பார்த்து வருங்கால், அதன் ஈற்றடியிலுள்ள அரசன் என்ற சொல்லுக்குப் பொருள் இன்னதென அறிவிக்குமாறு குறிப்பித்தார். அக்குறிப்புணர்ந்த இவர், "அரசன்- ரசம் இல்லாதவன் ; சுவையற்ற கோது போன்றவன்" எனப் பொருள் கூறினார். அதனைக் கேட்ட தேசிகர் அகமகிழ்ந்து "நீர் சாதியிலும் ரெட்டி; அறிவிலும் இரட்டி" என்று பாராட்டித் தம் ஆதீனத்திலிருந்து கற்கும்படி திட்டஞ் செய்தார். அண்ணாமலையார் அங்கு ஓராண்டுவரையிலிருந்து இலக்கிய இலக்கணங்களைக் கற்றுக்கொண்டு தம் ஊர்க்கு வந்தார்.
பின்னர், ஊற்றுமலை மன்னராகிய இருதயாலய மருதப்பத் தேவருடைய குணநலங்களைக் கேள்வியுற்ற அண்ணாமலையார் அவரிடம் சென்று, அவர்மீது தாம்பாடிவந்த பாட்டுக்களைப் படித்துக் காட்டினார். இப்புதிய இளம்புலவருடைய பாட்டுக்கள் மன்னர்க்குப் பெரு மகிழ்ச்சி அளித்தன. இவரைத் தம் அரண்மனைப் புலவராக ஏற்றுக்கொண்டார். நாட் செல்லச் செல்ல இவரிடம் அரசர்க்குத் தனிமதிப்பு ஏற்பட்டது.
அரசர் ஒருநாள், புலவர்களை நோக்கி, "சரிகம பதநி என்ற ஏழெழுத்துக்களும் முதலில் அமையும்படி யமகமாக ஒரு செய்யுளியற்றலாமா?" என்று கேட்டார். புலவர்கள் எல்லோரும், "அஃது எளிதன்று; இயலாது என்றனர். அண்ணாமலையார் ஒருவரே இயற்றலாம் என்று கூறிச் சிறிது நேரத்தில், "சரிகம பதநியேற்குச் சந்துசொ லென்பாள்" என்று தொடங்கும் செய்யுளை இயற்றி வந்து பாடிக்காட்டிப் பொருளுங் கூறினார், இந்நிகழ்ச்சி எல்லோர்க்கும் வியப்பூட்டியது.
அண்ணாமலையார் 24 ஆம் வயதில் குருவம்மாள் என்னுங் குலமங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். மணமக்களுக்கு வேண்டும் ஆடை அணிகலன்கள் முதலியன அனைத்தும் ஊற்றுமலை மன்னர் உதவினார்; அவர்கள் ஊர்வலத்திற்குத் தம் யானையையும் பல்லக்கையும் அனுப்பி இவரைப் பெருமைப்படுத்தினார். முருகன் திருக்கோயில்களுக்குக் காவடி யெடுத்துச் செல்லும் அன்பர்கள் விருப்பத்திற்கிணங்கி, இவர் பல வேறு சந்தங்களிற் பாடி வெளிப்படுத்திய காவடிச் சிந்துப் பாடல்கள் சொல் எளிமை, பொருள் இனிமை, ஓசை நயம் என்பவற்றால், கற்றவர் கல்லாதவர் ஆகிய எல்லாருடைய உள்ளங்களையுங் கவர்ந்தன. அந்நாளில் அப்பாடல்களைப் பாடாதவரும் கேளாதவரும் இல்லை. அதனால், தமிழ்நாடு முழுதும் அண்ணாமலையார் புகழ் பரவியது.
இவர், மணஞ் செய்துகொண்டபின் வீரகேரளம் புதூரிற் குடியேறி இரண்டாண்டுகள் இல்வாழ்க்கை நடத்தினார். அதன்மேல் இருமல் நோய் இவரைத் தொடர்ந்து பற்றியது. நாளுக்குநாள் உடல் நலங் குன்றியது. இனி இவர் பிழைத்தல் அரிதெனத் தோன்றியமையால் ஊற்றுமலை மன்னர் தமது பல்லக்கிலேற்றி இவரைச் சென்னிகுளத்திற்கு அனுப்பினார். அங்கே சென்ற சிலநாட்களில் அண்ணாமலை ரெட்டியார் இல்வுலக வாழ்வை நீத்தார். இறக்கும்போது இவ்ர்க்கு வயது 29. இவர்க்கு மக்கட்பேறு வாய்க்கவில்லை.
இவர் பாடிய வேறு நூல்கள் வீரை அந்தாதி, வீரை நவநீத கிருஷ்ணன் பிள்ளைத்தமிழ், சங்கரநாராயணர் கோயில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை முதலியன. இவை, வீரகேரளம்புதூர் அரண்மனை நூல் நிலையத்தில் ஏட்டுச் சுவடிகளாயுள்ளன என்கின்றனர். இவர் பாடல்கள் பெரும்பாலும் யமகம் திரிபுகளாயிருப்பினும், சொற்களைப் பிரித்தால் எளிதாகப் பொருள் தரும் சிறப்புடையனவாகவே யிருக்கும். ஊற்றுமலை மன்னர்மேல் இவர்பாடிய நூற்றுக்கணக்கான பாடல்கள் ஊற்றுமலைத் தனிப்பாடற்றிரட்டு என்ற தொகை நூலில் முதலிடம் பெற்றுள்ளன.
எட்டையபுரம், ஆற்றங்கரை என்னும் சமீன்களிலும் இவர்க்குச் சிறிது தொடர்பு இருந்தது.
இவர் நினைவாக இப்போது சென்னிகுளத்தில் அண்ணாமலை ஆரம்பப் பாடசாலை என ஒன்று நடைபெறுகிறது. மு. அ.