கலைக்களஞ்சியம்/அதிமதுரம்

அதிமதுரம்: அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைசிரைசா (Glycyrhiza) என்னும் சாதிச் செடியின் வேரும், வேரிலிருந்து எடுக்கும் ஒரு சத்தும் அதிமதுரம் எனப்படும். சாதிப்பெயரின் பொருள் இனிய வேர் என்பது. இந்தச் செடி ஐரோப்பாவின் வெப்பப் பிரதேசங்களில், முக்கியமாக மத்தியதரைக் கடற்கரை நாடுகளில், நெடுகவும், வட அமெரிக்காவில் சிறிதளவும் பயிர் செய்யப்படுகிறது. இது நீல நிறமான பூப் பூக்கும். 2, 3 அடி நீளம் உள்ளதாக வேரை வெட்டியெடுப்பார்கள். -1 அங்குலம் மொத்தமாக இருக்கும். வெளியில் மெதுவாகவும் மடிக்கக்கூடியதாகவும் நாராகவும் இருக்கும். உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு ஒரு சிறப்பான தித்திப்புச் சுவையுண்டு. இதில் திராட்சைச் சர்க்கரை, மாப்பொருள் பிசின், ஆஸ்பராகின், மாலிக்க அமிலம் முதலிய பொருள்களோடு கிளைசிரைசின் என்னும் குளூக்கோசைடும் இருக்கின்றது. வேரை இடித்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துக் கஷாயத்தைச் சுண்டவைத்தால் கருகிறமான அதிமதுரம் கிடைக்கும். இதைக் குச்சுக் குச்சாகத் திரட்டிக் கொள்ளுவார்கள். இதற்கு அதிமதுரப் பால் என்பது பெயர். அதிமதுரம் இருமலுக்கு நல்ல மருந்து. கசப்பு, குமட்டலான மற்ற மருந்துகளின் சுவையை மாற்றவும் இதைக் கலப்பார்கள். நமது நாட்டில் வளரும் குன்றிமணிக் கொடியின் வேரும் அதிமதுரம் எனப்படும். இது ஐரோப்பிய அதிமதுரத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. இதிலும் கிளைசிரைசின் சத்து இருக்கிறது. இதன் இலையிலும் அந்தச் சத்து இருக்கிறது. பார்க்க: குன்றிமணி.