கலைக்களஞ்சியம்/அதிவிடையம்
அதிவிடையம் அக்கொனைட்டம் என்னும் சாதியைச் சேர்ந்த செடியினம்.
இந்தச் சாதியில் நூற்றுக்கு மேலான இனங்களுண்டு. இவை வடக்குச் சமசீதோஷ்ண வலயத்தில் வளர்பவை. இந்தியாவில் இருபத்து நான்கு இனங்களுண்டு. இமயமலை, காச்மீரம், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களில் இவை அகப்படுகின்றன. அக்கொனைட்டம் மிகவும் அழகான செடி. பூ ஊதா-நீலம் முதல், மஞ்சள், வெள்ளை வரையில் பல நிறமாக இருக்கும். வேர், இலை, விதை யெல்லாம் நஞ்சுள்ளவை. இவற்றின் வேர்க்கிழங்கிலிருந்து ஆற்றல் மிக்க மருந்து எடுக்கிறார்கள். அது வெளிக்குப் பூசவும் உள்ளுக்குக் கொடுக்கவும் உதவுகிறது. நரம்பழற்சிக்கும் குடைச்சலுக்கும் இதை மேலே தடவுவார்கள். சுரத்தில் வெப்ப நிலை குறைவதற்காகவும், இருதயத் துடிப்பு, மூச்சு இவற்றின் வேகம் குறைவதற்காகவும் இதை உள்ளுக்குக் கொடுக்கிறார்கள். வயிற்றுப்போக்கு, குன்மம், இருமல் முதலியவற்றிற்கும் இது மருந்து. இது மிகவும் ஆற்றலுள்ள கொடிய நஞ்சாதலால் மருத்துவர் கொடுத்தாலன்றி இதை உட்கொள்ளலாகாது.
அதிவிடையம் வச்சநாவி, விஷம் என்றும் சொல்லப்படும். இது அக்கொனட்டம் ஹெட்டெரோபில்லம் (Aconitum heterophyllum). ஐரோப்பிய மருத்துவத்தில் சீமை நாபி அ. நாபெல்லஸ் (A. Napellus) பெரிதும் உபயோகமாகிறது. குடும்பம், ரானன்குலேசி (Ranunculaceae).