கலைக்களஞ்சியம்/அதீத மைக்ராஸ்கோப்பு

அதீத மைக்ராஸ்கோப்பு (Ultra microscope) : போதிய அளவு ஒளி விழுந்தால், மிகச் சிறு துகளுங்கூட, மைக்ராஸ்கோப்பில் தெளிவாகத் தெரியும். ஆனால், சிறு துகளின்மேல் விழும் ஒளியை, அது நாற்புறமும் சிதறுகிறது. இதனால் ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் விளிம்பு மாற்றத்தால் (Diffraction) ஒரு வட்டம் தோன்றும். இவ்விளைவை அடிப்படையாகக் கொண்டு, பொருளின் குறுக்கே அடர்த்தியான ஒளிக்கற்றை ஒன்றைச் செலுத்திச் சாதாரணமைக்ராஸ்கோப்பின்

அதீத மைக்ராஸ்கோப்பு

பொ-பொருள்
ஒ-ஒளிக் கற்றை

மை - மைக்ராஸ்கோப்பு

உதவியால் அதை நோக்கினால், சிறு துகள்களும் ஒளிப்புள்ளிகளாகத் தெரியும். இத்தகைய அமைப்புள்ள மைக்ராஸ்கோப்பு சிக்மாண்டி (Zsigmonety) என்பவரால் அமைக்கப்பட்டது. இது அதீத மைக்ராஸ்கோப்பு எனப்படும்.

அதீத மைக்ராஸ்கோப்பில் காணப்படும் ஒளிப் புள்ளிகளின் பிரகாசங்களிலிருந்து, அவற்றின் அளவுகளை மதிப்பிடலாம். தற்கால அதீத மைக்ராஸ்கோப்புகளில் கொலாயிடு நிலையிலுள்ள தங்கத் துகள்களைக் காண இயல்கிறது. இத்துகள்களின் அளவு சுமார் 17 ஆங்ஸ்ட்ராம் அலகுகள்.

கொலாயிடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் அதீத மைக்ராஸ்கோப்புப் பெரிதும் பயன்படுகிறது. புகை கலந்த காற்றிலுள்ள கரித்துகள்களை எண்ணவும், நீர் முதலிய திரவங்களில் உள்ள வேற்றுப் பொருள்களைக் கண்டறியவும் இது பயன்படுகிறது. சாதாரண மைக்ராஸ்கோப்பில் புலப்படாத உயிரினங்களைக் காணவும் இது பயனாகிறது.