கலைக்களஞ்சியம்/அந்தாதி

அந்தாதி தொண்ணூற்றாறுவகைச் சின்னூல்களுள் ஒன்று. சின்னூல்களை விருந்து என்று தொல்காப்பியர் வழங்குவர் (தொல். செய். 239). நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள, இறுதி எழுத்து, அசை, சொல், சீர், அடி இவற்றுள் ஒன்று, அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் இறுதியும் முதற்பாடலின் முதலும் ஒன்றாக இணையும்படி மண்டலித்து, மாலைபோலத் தொடுத்து முடிப்பது அந்தாதி எனப்படும். இதனைச் சொற்றொடர் நிலை என்று வழங்குவதும் உண்டு. ஒரு செய்யுளுள்ளேயே ஓரடி யிறுதி மற்றையடிக்கு முதலாக அமையும்படி தொடுப்பதும் உண்டு. அது அந்தாதித்தொடை என்று வழங்கப்படும்.

ஏற்றப்பாட்டில், தொடுத்த சொல்லையே பிடித்துத் தொடுத்துத் தனியந்தாதியாக முடிப்பதும் உண்டு. “முப்பதுடனெடுத்து மூங்கில் இலை மேலே, மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே” என்பது அத்தகைய தனியந்தாதிப் பாட்டு.

கலம்பகம், இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை முதலிய பல்வேறு நூல்களும், சித்தர்கள் இயற்றிய மருத்துவ நூல்களிற் பலவும், திருவாசகத்தின் கண் உள்ள திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் முதலியனவும், திருவாய்மொழியும் ஆகிய இவையும், இவை போன்ற பல அரிய நூல்களும் அந்தாதியாக இயற்றப்பட்டிருப்பினும், அவைகளெல்லாம் வெவ்வேறு காரணங்களின் சிறப்புப்பற்றி வேறு வேறு பெயர்கள் பெற்றன. எனினும் அவைகளும் சொற்றொடர் நிலைகளே. என்றாலும் அந்தத்தை ஆதியாகக்கொண்டு வரும் ஒரு சிறப்பினைப்பற்றி அந்தாதி எனப் பெயர் பெற்ற நூல்களே அந்தாதி என்று வழங்கப்படும்.

சங்க காலத்திலேயே இத்தகைய சொற்றொடர் நிலை தொடங்கி விட்டது. பெருஞ்சோற்றுதியஞ் சேரலை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய, “மண்டிணிந்த நிலனும்” என்ற புறநானூற்றுப் பாடலிலேயே அந்தாதித்தொடை வந்தது. காப்பியாற்றுக் காப்பியனார் பதிற்றுப்பத்துள் நான் காம்பத்தினை அந்தாதியாகவே இயற்றியுள்ளனர். ஆயினும் இறுதிப் பாடலின் அந்தம் மட்டும் முதற்பாடலின் ஆதியோடு மண்டலிக்கப்படவில்லை. நக்கீரதேவ நாயனார், கபில தேவநாயனார் , பரணதேவ நாயனார் ஆகிய மூவரும் இயற்றிய அந்தாதிகள் பதினோராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டடுள்ளன. இம் மூவரும் சங்க காலத்துக் கபில பரண நக்கீரரே என்று கொள்ளின், அந்தாதி தோன்றிய காலம் கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்றே கொள்ளலாம். இம்மூவரும் பிற்காலத்தவர் என்று வேறாகக் கருதும் கொள்கையும் உண்டு. அவர் கொள்கைப்படி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கொள்ளலாம்.

சங்க காலத்துத் தொகை நூல்களுள் புறநானூறு, அகநானூறு, சிறுபாணாற்றுப்படை ஆகிய இவற்றுள் அந்தாதித்தொடை வந்திருத்தலானும், பதிற்றுப்பத்துள் ஒரு பதிகமே அந்தாதியாக வந்திருத்தலானும், அந்தாதிக்காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்பது நன்கு புலனாகும்.

நக்கீரதேவ நாயனார் இயற்றிய, 'கைலைபாதி காளத்திபாதி' அந்தாதி, நல்ல நோக்கு உடையதாய், உள்ளத்தை உருக்கும் கவினுடையது. கபிலதேவ நாயனாரும் பரணதேவ நாயனாரும் ஒன்று என்று தொடங்கி, ஒன்று என்று முடித்துச் சிவபெருமான் திருவந்தாதியென இருவரும் ஒரு பெயரிட்டு, இரு நூல்கள் செய்து முடித்தார்கள். இவ்விரண்டு நூல்களிலும் உள்ள வெண்பாக்களில் இரண்டு இரண்டு அடிகள் மடக்காக (யமகமாக) அமைந்துள்ளன. இவையே பின்னால் யமக அந்தாதி பாடுவதற்கு வழிகாட்டி எனலாம். பின்னர்க் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி, சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பொன்வண்ணத்தந்தாதி, ஆழ்வார்கள் இயற்றிய அந்தாதிகள் முதலியன மல்கின. திருநூற்றந்தாதி சமண சமயத்தவரால் இயற்றப் பட்டது; பெரிதும் பாராட்டப்படுவது.

இவற்றிற்குப் பின்பு நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி கட்டளைக்கலித்துறையால் அமைந்தது. இது 63 நாயன்மார் வரலாற்றை வகைப்படுத்துப் பாடுகின்ற வகை நூலாக அமைந்து, வரலாற்றுச் சிறப்பெய்தி நிற்கின்றது. பின்பு தோன்றிய பதிற்றுப்பத்தந்தாதிகள் ஓசை நயமும் பொருள் நயமும் வாய்ந்தவை. பாடல்களை நினைவு கூர்தலுக்கு அந்தாதி அமைப்புப் பேருதவியாக இருந்துவருகிறது.

வெண்பாவந்தாதி, கலித்துறையந்தாதி, ஒருவகை ஓசைக்குப் பத்தாகப் பத்துவகை ஓசையில் பலவகை விருத்தங்களாலும் பாடப்படும் பதிற்றுப்பத்தந்தாதி, வண்ணமுங் கலைவைப்புந் தவறாமல் பதினாறு கலைவைப்பு ஒரு பாடலில் அமைத்து, அப்படி முப்பது பாடல் அந்தாதியாக இயற்றும் ஒலியந்தாதி, அவ்வாறே முப்பத்திரண்டு கலைவைப்பு ஒரு பாடலில் அமைத்து, முப்பது பாடல் அந்தாதியாக இயற்றும் கலியந்தாதி, அடி தோறும் முதற்சீர் மடக்காக வரும் யமக அந்தாதி, திரிபு அந்தாதி, உதட்டோடு உதடு படாமற் பாடக்கூடிய நிரோட்டக யமக அந்தாதி என்றிவ்வாறு பல்வகை யாப்பாலும் அந்தாதிகள் விரிவு பெற்றன.

கரைவினாற் காரைக்காலம்மையார் செய்த அற்புதத் திருவந்தாதி கவியுலகிற் பெண்களுக்கு ஓர் உயர்ந்த நிலைமையை வழங்குந் திறனுடையது. முதலாழ்வார்கள் செய்த அந்தாதிகள் அன்பர்களுக்கு முகுந்தனை ஞான விளக்கிட்டுக் காட்டும் நிலைமையன. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய பொன்வண்ணத்தந்தாதி பொன் வண்ணமாகவே மிளிர்கின்றது. கம்பர் பாடிய சரசுவதியந்தாதியும், சடகோபர் அந்தாதியும் கலையுலகில் அன்பர் நெஞ்சத்தை ஈர்த்துக் களிப்பில் மூழ்கச் செய்யும். பரஞ்சோதி முனிவர் பாடிய மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி மாட்சிமை வரையறுக்க வொண்ணாதது.

குட்டித் திருவாசகம் என்று போற்றப்படும் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, ”கன்னற்பாகில் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவி”களால் யாக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் செய்துள்ள குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி, கனிந்த பத்தியும் கவிப்பண்பும் இன்னோசையும் எளிய நடையும் உடையதாகிச் சிறந்து விளங்குகின்றது. ந. சே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அந்தாதி&oldid=1453831" இலிருந்து மீள்விக்கப்பட்டது