கலைக்களஞ்சியம்/அனுராதபுரம்

அனுராதபுரம் இலங்கையில் கொழும்புக்கு வடகிழக்கே 128 மைலில் அமைந்துள்ள பழமையான நகரம். பண்டைக்காலந்தொட்டுப் பதினொன்றாம் நூற்றாண்டுவரையில் சிங்கள மன்னர்களுக்குத் தலைநகராக இருந்தது; அனுராதன் என்பவனால் நிறுவப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்பர். இதைச் சந்திரகுப்த மௌரியன் காலத்திலிருந்தபாண்டுகாபயன் என்னும் அரசன் முதன் முதலாகத் தலைநகராக்கிக்கொண்டான். இவன் காலத்தில் ஒரு பெரிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அதற்கு அபயவாவி என்பது பெயர். அது இன்று பசவக் குளம் எனப்படுகிறது. தேவானாம்பிரிய திஸ்ஸா (கி.மு.307-267) காலத்தில் மக்களுக்குப் பயன்பட வேண்டி மற்றுமோர் நீர்த்தேக்கம் நிறுவப்பட்டது. இதற்குத் திசாவாவி என்பது பெயர். கௌதம புத்தர் ஞானோதயம் பெற்றபோது அவருக்கு நிழலளித்த போதிமரத்தின் கிளையொன்று இங்குக் கொண்டுவந்து நடப்பட்டது. இம் மரத்தைக் கண்டு வணங்கப் பல நாடுகளிலிருந்தும் பௌத்தர்கள் வருவதுண்டு. துட்டகாமணி (கி.மு.161-137) மன்னன் கட்டிய 300 அடி உயரமுள்ள மகாத்தூபியின் அடிவாரத்தின் விட்டம் 298 அடி நீளமிருந்தது. இப்பொழுது அத்தூபி மிகவும் சிதைந்து கிடக்கிறது. பௌத்த பிக்குக்கள் தங்குவதற்காக ஒன்பது மாடிகள் கொண்ட பெரிய கட்டடம் ஒன்று இம்மன்னனாற் கட்டப்பட்டது. இக்கட்டடம் மரத்தாற் கட்டப்பட்டுத் தங்க முலாம் பூசிய செப்பேடு வேயப்பட்டிருந்தது. ஆயிரத்துநூறு கல் தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் மட்டுந்தான் இக் கட்டடம் இருந்த இடத்தில் இப்பொழுது காணப்படுகிறது. வட்டகாமணி அபயன் (சு. கி.மு. 104-77) நிறுவிய அபயகிரித்தூபி, மகாத்தூபியைக் காட்டிலும் மிகவும் பெரியது. இம் மன்னன் தட்சிணத்தூபி என்னும் வேறொரு தூபியையும் கட்டினான். மகா சேனன் (274-301) நிறுவிய ஜேதவனம் என்னும் தூபி அனுராதபுரத்திலுள்ள பழங் கட்டடங்கள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்தது. இது ஆதியில் 400 அடி உயரம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆயினும் இப்போது அதன் சிதைந்த நிலையில் 23 அடி. உயரமேயுள்ளது. மகாசேனன் காலத்திற்குப்பின் வந்த மன்னர்கள் பெருங் கட்டடங்கள் கட்டுவதில் ஈடுபடவில்லை. 5-8 நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட புத்தர் படிவங்கள், சந்திரவட்டக் கற்கள், துவார பாலகர் படிவங்கள் முதலியன உருவிற் சிறியவையாயினும் அழகிற் சிறந்தவையாகவே இருக்கின்றன.

சமயத் தொடர்பற்ற கட்டடச் சிற்பம் அனுராதபுரத்தில் அதிகமாக இல்லை. உள்நகரத்தில் பழைய அரண்மனையின் எஞ்சிய பாகங்கள் சில தென்படுகின்றன. இலங்கையிலன்றி வேறு இடங்களில் காணக்கிடைக்காத 'தியானக் கூடங்கள் ' என்னும் கட்டடங்களின் சிதைவுற்ற பாகங்களையும் காணலாம். இவற்றை அரண்மனைகளென்று தவறாகக் கூறுவர். இராசராசசோழன் இலங்கைமீது படையெடுத்த காலத்தில் இந்நகரம் பெருமையிழந்தது. சோழ மன்னர்களுடைய பிரதிநிதிகள் தலைநகரைப் பொலன்னருவாவிற்கு மாற்றிவிட்டார்கள். பிறகு வந்த சிங்கள அரசர்களும் பொலன்னருவாவையே தலைநகராகக் கொண்டனர். பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் அனுராதபுரம் இருந்த இடம் காடாகிவிட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்காடு அழிக்கப்பட்டு, அனுராதபுரத்தின் பழைய பெருமைகள் ஆராயப்பட்டன. அந்நகர் முன்பிருந்த இடத்தில் புதியதொரு நகரை நிருமாணிக்கப் பிற்காலத்திற் செய்யப்பட்ட முயற்சிகளால் பழைய கட்டடங்கள் பல, அடையாளம் காண இயலாதபடி அழிந்துவிட்டன. ஆயினும் தொல்பொருள் ஆராய்ச்சியின் பயனாகப் பல கலைச் செல்வங்கள் திரும்பவும் இப்போது கிடைத்துள்ளன. எஸ். ப.