கலைக்களஞ்சியம்/அன்டார்க்டிக் சமுத்திரம்

அன்டார்க்டிக் சமுத்திரம்: தென் துருவத்தைச் சூழ்ந்துள்ள கடலை அன்டார்க்டிக் சமுத்திரம் என்பர். சிலர் இது பசிபிக், அட்லான்டிக், இந்திய சமுத்திரங்களின் தென் கோடிகளின் தொகுதியே யென்றும் கூறுகின்றனர். இச்சமுத்திரத்தில் பெரிய பனிக்கட்டித் திட்டுக்கள் மிதக்கின்றன. இவற்றில் சில, ஆயிரம் அடி திண்ணமும் பல ஏக்கர்கள் பரப்பும் உள்ளவை. இங்குச் சராசரி வெப்பநிலை 30° பா. நாடு காண்பவர்கள் இக்கடலைக் கடந்து தென் துருவத்தை யடைந்துள்ளனர். ஆர்க்டிக் சமுத்திரத்தைச் சூழ்ந்து நிலப் பரப்பு இருப்பதுபோல இக்கடலைச் சுற்றிலும் நிலப் பாகங்கள் ஒன்றும் இல்லை.