கலைக்களஞ்சியம்/அன்னி

அன்னி: சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகிலுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக்கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையிலும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகையாக உள்ளது:

1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வளமிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக்கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என்பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக்குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர்.

2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும், அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளையுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத்திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அன்னி&oldid=1455549" இலிருந்து மீள்விக்கப்பட்டது