கலைக்களஞ்சியம்/அபிதான சிந்தாமணி

அபிதான சிந்தாமணி உலகில் வழங்கும் பலவகைப் பொருள்களின் பெயர்கள், பழக்க வழக்கங்கள், இலக்கியங்களில் வரும் பாத்திரங்கள், கதைகள், மருத்துவம், சோதிடம் போன்ற நூற்பொருள்கள், பண்டை அரசர்கள், கவிஞர், வள்ளல்கள் ஆகிய இத்தகைய பொருள்கள்பற்றிச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியராயிருந்த ஆ. சிங்காரவேலு முதலியார் 1910-ல் எழுதி வெளியிட்ட பொருள் விளக்க அகராதி. மேனாட்டுக் கலைக்களஞ்சியங்களில் காணப்படும் பொருள்கள் அனைத்தும் இதில் காணப்படாவிடினும், இதுவே தமிழ்மொழியில் முதன்முதல் கலைக்களஞ்சிய முறையில் இயற்றப்பட்டதாகும்.