கலைக்களஞ்சியம்/அப்சல்கான்

அப்சல்கான் பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் தக்காணத்திலிருந்த II-ம் அலியென்னும் பீஜப்பூர் சுல்தானுடைய சேனைத் தலைவர்களில் ஒருவன். இவனுக்கு அப்துல்லா பட்டாரி என்பது பெயர். பீஜப்பூர் சுல்தானுக்கு அடங்காமல், சுயேச்சையான ஆட்சி நிறுவுவதில் முனைந்திருந்த மகாராஷ்டிரத் தலைவனான சிவாஜியை எவ்வாறேனும் அடக்கவேண்டும் என்று கருதிய அலி அப்சல்கானைச் சேனையோடு அனுப்பினான்; அப்சல்கான் போகும் வழியில் ஷோலாப்பூர் அருகிலிருந்த பவானி கோவிலை இடித்துத் தகர்த்தான். அப்சல்கான் படையோடு வருவதும், இந்துக்கோவிலை யிடித்ததும் சிவாஜிக்கு எட்டின. அப்சல்கானை எதிர்ப்பதென்று சிவாஜி தீர்மானித்துவிட்டான். தன்மீது வஞ்சம் வைத்திருக்கும் அப்சல்கான் தன்னை எவ்வாறேனும் கொல்லக் காத்திருக்கிறான் என்று எண்ணிய சிவாஜி, பிரதாபகார் என்னுமிடத்தில் தன்னைத் தனியே சந்திக்குமாறு அவனுக்குத் தூதனுப்பினான். சிவாஜியை நம்பிய அப்சல்கான் குறிப்பிட்ட இடத்திற்கு ஒரே ஒரு துணையோடு வந்து சேர்ந்தான். இருவரும் வெளிப்படையாக நண்பர்களைப் போலச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சிவாஜி அப்சல்கானைத் தழுவிக் கொண்டான். சிவாஜியின் எண்ணத்தில் ஐயம்கொண்ட அப்சல்கான் அவனை இறுகப் பிடித்துக்கொண்டான். சிவாஜி தன் கையில் வைத்திருந்த வியாக்ர நகம் (புலி நகம்) என்னும் படைக்கலத்தால் அப்சல்கானைக் கொன்றுவிட்டான் (1659). பிறகு அவன் சேனையைச் சிவாஜி எளிதில் வென்றுவிட்டான். அப்சல்கானுடைய அரண்மனை அப்சல்புரி என்னுமிடத்தில் இருந்தது. அவன் சிவாஜியோடு போர் புரியப் புறப்படுமுன் தன் இருநூறு அழகிய மனைவியர்களையும் கொன்றுவிட்டான் என்பது கூறப்படுகிறது. இது உண்மையாயின், அவனைக் கொடியவன் என்று ஐயமின்றிக் கூறலாம். தே. வெ. ம.