கலைக்களஞ்சியம்/அப்பைய தீட்சிதர்

அப்பைய தீட்சிதர் (1554-1626) விஜய நகர அரசர்களின் காலத்தில் தென்னாட்டில் சைவ மதத்தைப் பரப்பிய பெரியோர்களுள் ஒருவர். இவர் ஆரணிக்கருகிலுள்ள அடைப்பாலம் என்ற ஊரிற் பிறந்து, வேலுரில் அரசாண்ட சின்ன பொம்மன் என்ற சிற்றரசனால் கனகாபிஷேகம் செய்து பெருமைப் படுத்தப்பட்டார். பிற்காலத்தில் இவரைத் தஞ்சை அரசர்களும், விஜய நகர அரசரும் ஆதரித்தனர். இவர் பல அறிவுத் துறைகளில் புலமை பெற்றிருந்தார். ஸ்ரீகண்டரது சைவ பாஷ்யத்திற்கு இவர் உரை எழுதினார். மகா பாரதத்தையும், இராமாயணத்தையும் இவர் சுருக்கி எழுதியுளார். இவ்விரு காவியங்களும் சிவனே முதற்கடவுள் எனக் காட்டுகின்றன என்பது இவர் கருத்து. இவர் ஒரு சிறந்த புலவருமாவர்.