கலைக்களஞ்சியம்/அரசாங்கம்
அரசாங்கம் : ஒரு சமூகத்தில் ஒருவனோ அல்லது ஒரு ஸ்தாபனமோ கட்டளையிட, அக்கட்டளைக்கு அடங்கி அச்சமூகத்தைச் சார்ந்த மற்றவர்கள் நடந்துவந்தால், அந்த மனிதனை அல்லது ஸ்தாபனத்தை அரசாங்கம் என்று சொல்வார்கள். அரசாங்கம் இல்லாத சமூகம் கிடையாது ; எந்தச் சமூகமும் அரசாங்கமில்லாமல் நிலைக்க முடியாது.
ஆதியிலே, வரலாற்றுக் காலத்துக்கு முன்னே, மக்கள் தனித்தும் தனிக் குடும்பங்களாகவும், சிற்சில குடும்பங்கள் ஒருங்கு சேர்ந்தும் வாழ்ந்துவந்தபோது அரசாங்கம் என்பது இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரிக வளர்ச்சி பெற்று வரும்போது அவர்கள் தனித்து வாழ்வதை விட்டுக் கூட்டங்களாக வாழலாயினர். அப்போது கூட்டத்தைச் சரிவர நடத்தவும் பாதுகாக்கவும் ஒரு தலைவன் தேவையாயினான். மக்ககளுள் சிலர் பலசாலிகளாகவும், சிலர் அறிவாளிகளாகவும், சிலர் திறமை மிக்கவராகவும், பலர் பலமோ அறிவோ திறமையோ குறைந்தவர்களாகவும் இருப்பது இயற்கை. ஆகவே பலமும் அறிவும் திறமையும் மிகுந்தவர்கள் சமூகத்தின் தலைவர்களாக, காவலராக, அரசராக ஆயினர்; மற்றவர்கள் குடிகள் ஆனார்கள். நாளடைவில் தலைமை வகிப்பதும் தலைவர்க்குப் பணிந்து நடப்பதும் பரம்பரை முறையாக வரலாயிற்று.
தொடக்கத்தில் பலசாலிகளாக இருந்த வீரர்களே அரசரானார்கள். அவர்கள் சமூகத்தில் உள்ள மக்களிடையே சச்சரவு ஏற்படாமலும் அவர்களைப் பிற சமூகத்தார் தாக்காமலும் பாதுகாத்து வந்தனர். அவர்கள் இதற்கு வேண்டிய திறமையுடையவர்களாக இருந்தபடியால் இத்திறமை இறைவனால் அருளப்பட்டது என்றும், அதனால் அரசர்கள் தெய்வாமிசமுடையவர்கள் என்றும் கருதினார்கள்.
ஆயினும் பல நாடுகளில் அரசர்கள் மக்கள் விருப்பத்தை அறிந்து, அதற்கேற்றவாறு நடந்து வந்துள்ளார்கள். இம்முறை நாளடைவில் வளர்ந்து வந்து, இப்பொழுதுள்ள ஜனநாயக முறையாகப் பரிணமித்திருக்கின்றது.
அரசாங்கங்களை அவற்றின் குறிக்கோளை வைத்துப் பலவகையாகப் பிரிப்பதுண்டு. அவற்றுள், காவல் அரசாங்கம் (Police Government), மக்கள் நலன் அரசாங்கம் (Welfare State) என்ற பாகுபாடுகளே இன்று மிகவும் முக்கியமானவை. அண்மைவரை அரசாங்கங்கள் பெரும்பாலும் காவல் அரசாங்கங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. அதாவது குடிகளுக்குச் சமூகத்திலுள்ள மற்றக் குடிகளாலும் அன்னியராலும் கேடுவராமலும், உள்நாட்டுக் குழப்பம் தோன்றாமலும் பாதுகாப்பதற்கே அரசாங்கம் உள்ளது என்று எண்ணி. வந்தனர். ஆனால் இப்போது அரசாங்கம் அந்த இரண்டு வேலைகளுடன், மக்கள் நலனுக்கு வேண்டிய கல்வி, தொழில் முதலிய பல காரியங்களையும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணமே சிறந்து தலைதூக்கி நிற்கின்றது.
அரசாங்கங்களை அவற்றை நடத்துபவரது எண்ணிக்கையை யொட்டிப் பிரிப்பதுண்டு. ஒரு மனிதன் நடத்தும் ஆட்சியை முடியரசு என்று கூறுவர். இப்போது உலகில் குறைவற்ற தனி முடியரசைக் காண இயலாது. முடியரசு நாடுகளில் எல்லாம் அரசன் பலவிதக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கியே நடந்து வருகிறான். அத்தகைய முடியரசை வரம்புடை முடியரசு (Limited Monarchy) என்று கூறுவர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பிரிட்டிஷ் அரசாங்கம். பிரபுக்கள் சிலர் ஆட்சி நடத்துவார்களானால், அதைப் பிரபுக்கள் ஆட்சி என்று கூறுவர். இத்தகைய அரசாங்கம் எங்கும் தனித்துக் காணப்படுவதில்லை. இதுபோன்ற ஒரு சிலர் ஆட்சி சுயநலம் கோரி நிற்குமானால், அது ஆலிகார்க்கி (Oligarchy) எனப்படும். குடிகளுக்குப் பொறுப்புள்ளதான அரசாங்கத்தை ஜனநாயக அரசாங்கம் என்று கூறுவர். மக்கள் அனைவருமே கூடிச் சட்டங்களை இயற்றி அமல் நடத்தினால் அது தூய ஜனநாயகம் ; ஆனால் அதை இப்போது எங்கும் காண முடியாது. அதற்குப் பதிலாக மக்கள் வோட்டுப் போட்டுப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பர். அவர்கள் மக்களின் சார்பாக அரசாங்கத்தை நடத்துவர். இது பார்லிமெண்டு முறை ஜனநாயகம் எனப்படும்.
அரசாங்கம் நடப்பதற்கு மூன்று பிரிவுகள் தேவை. அவையாவன : சட்டசபை, நிருவாகம், நீதிமன்றம். அமெரிக்காவில் மக்களே சட்டசபையையும் நிருவாகத் தலைவரான ஜனாதிபதியையும் நேரிடையாகத் தெரிந்தெடுக்கிறார்கள். ஆனால் பிரிட்டனில் மக்கள் சட்டசபையைத் தெரிந்தெடுக்கின்றனர். சட்டசபை மந்திரி சபையை நியமிக்கிறது. அமெரிக்க முறையை ஜனாதிபதி முறை என்றும், பிரிட்டிஷ் முறையை மந்திரிசபை முறை என்றும் கூறுவர். இந்திய முறை பெரும்பாலும் பிரிட்டிஷ் முறையைத் தழுவியதாகும். அமெரிக்க முறையில் காரியங்கள் மெதுவாக நடைபெறும்; திறமையும் குறைவாயிருக்கும். ஆனால், அரசாங்கக் கொடுங்கோன்மை அபாயம் குறையும் என்று கூறுவர்.
அரசாங்கங்களை அவை அதிகாரம் செலுத்தும். முறையையொட்டிக் குவியாட்சிமுறை (Centralised) என்றும், கூட்டாட்சிமுறை (Federal) என்றும் பிரிக்கலாம். முந்திய முறையில் அதிகாரம் முழுவதும் மத்திய அரசாங்கத்திடமே குவிந்திருக்கும். பிந்திய முறையில் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள் என்னும் இவற்றின் அதிகாரங்களை அரசியலமைப்பு வரையறை செய்யும். முந்திய முறை அரசாங்கம் விரைவாகவும் திறமையாகவும் செயலாற்ற உதவும். ஆனால் பிந்திய முறை அரசாங்கம் மக்கள் தம் கருத்தைக் கூற இடமளிக்கும். இரண்டு முறைகளிலும் நன்மையுண்டு. இந்திய அரசாங்கம் ஓரளவுக்குக் கூட்டாட்சி முறையைத் தழுவியதாகும்.
இவை தவிர, கம்யூனிஸ்ட் அரசாங்கம், பாசிச அரசாங்கம் என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றுள் பாசிச முறை இரண்டாவது உலக யுத்த சமயத்தில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பிரபலமாக நடந்து வந்தது. இப்போது அது அங்கே மறைந்துபோய்விட்டது. கம்யூனிஸ்ட் முறை சோவியத் நாட்டிலும் சீனாவிலும் சோவியத்துக்குட்பட்ட சில ஐரோப்பியநாடுகளிலும் நடைபெறுகிறது.
பாசிச முறையில் ஜன நாயகம் கிடையாது. அதிகாரம் முழுவதும் ஒரு தலைவன் கையில் தரப்படும். அவனுடைய அதிகாரத்திற்குத் தடை எதுவும் கிடையாது. அவன் விரும்பிய வண்ணம் சட்டம் இயற்றுவான். தனிச் சொத்துரிமை உண்டு. ஆனால் வாணிபமும் கைத்தொழிலும் அரசாங்கத்தின் ஆணைவழியே நடைபெற வேண்டும்.
கம்யூனிஸ்ட் முறையில் பொருள் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கையிலிருக்கும். அதற்காக முதலாளித்துவத்தை ஒழிப்பது அவசியம். இதற்கு முதலில் தொழிலாளர் சர்வாதிகாரம் தோன்ற வேண்டும். முதலாளித்துவம் முழுவதும் ஒழிந்து, வருக்கமற்ற சமூகம் அமைந்த பின்னர், நாளடைவில் அரசாங்கமே மறைந்துவிடும் என்று கூறுவர். இப்போது பல ஜனநாயக அரசாங்கங்கள் அநேக பொருளாதாரத் துறைகளில் பொது நலனை வேண்டித் தாமே புகுந்து செயலாற்றத் துவங்கியிருக்கின்றன.