கலைக்களஞ்சியம்/அரம்

அரம் மிகப் பொதுவாகப் பயனாகும் ஒரு தொழிற் கருவி. உலோகப் பரப்புக்களையும், மற்றக் கடினமான பரப்புக்களையும் அராவி மழமழப்பாக்க இது பயன்படுகிறது. நாகரிகமற்ற பழங்குடி மக்களிடையில் கடினமான கற்களையும், மீனின் பற்களையும் கொண்டு அராவும் வழக்கம் உள்ளது. பல தொழில்களில் அரம் முக்கியமான கருவியாக விளங்குகிறது.ஆகையால் இது தேவைக்கேற்றவாறு பல வடிவங்களிலும், அளவுகளிலும் அமைக்கப்படுகிறது. கடிகாரம் செய்பவனது அரம் அங்குல நீளமே உள்ளது. தொழிற்சாலையில் பயானாகும் பெரிய அரம் 3 அடி நீளமுள்ளது.

அரத்தின் பற்கள் அமைந்துள்ள வகையை யொட்டி அது பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இணையாக உள்ள பல பற்களை வரிசையாகக் கொண்ட அரம்

அர வகைகள்
இரட்டை வெட்டு அரம்,
ஒற்றை வெட்டு அரம், அராவி.

ஒற்றை வெட்டு அரம் (Singlecut File) எனப்படும். மிருது மிருதுவான உலோகங்களை அராவ இது ஏற்றது. இரட்டை வெட்டு அரத்தில் இரண்டு வரிசைப் பற்கள் ஒன்றன் குறுக்கே மற்றொன்றாகச் சாய்வாக அமைந் திருக்கும். இவ்வாறு அமைப்பதால் வரிசையாக அமைந்துள்ள நீண்ட பற்களுக்குப் பதிலாகச் சிறு பற்கள் தோன்றுகின்றன. இவ்வகை அரம் கடினமான பரப்புக்களை அராவ ஏற்றது. மூன்றாவது வகை அரம் அராவி (Rasp) என்று அழைக்கப்படும். அதில் பல கூரிய பற்கள் இடைவிட்டு அமைக்கப்பட்டிருக்கும். இது மரத்தை அராவ ஏற்றது. அரத்தின் பரப்புத் தட்டையாகவோ, வளைந்தோ இருக்கலாம். அரங்களைச் செய்யக் கரியின் விகிதம் அதிகமாக உள்ள உயர்ந்த ரக எஃகு பயன்படுகிறது. இதைச் செய்வதில் தேவையான வடிவிற்கு உருட்டப்பட்ட எஃகு தடி முதலில் எந்திரங்களால் குறிப்பிட்ட நீளத்திற்கு வெட்டப்படுகிறது. இத் துண்டங்களைப் பழுக்கக் காய்ச்சிச் சம்மட்டியால் அடித்துப் பற்களை அவற்றில் வெட்ட ஏற்றவாறு செய்யவேண்டும். சாணை எந்திரங்களால் துண்டங்களைத் தேய்த்து, அவற்றின் பரப்பை மழமழப்பாக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட துண்டங்களில் பற்களை வெட்டவேண்டும். முன்பு இதைக் கைதேர்ந்த வேலையாட்கள் கையினால் செய்து வந்தார்கள். ஆனால் இக் காலத்தில் இதற்கு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. பற்களை வெட்டியபின் அரமானது தேவையான வெப்ப நிலைக்குச் சூடேற்றப்பட்டுக் குளிர்ந்த நீரில் அவிக்கப்படுகிறது. இதனால் பற்கள் உறுதியாகின்றன.

ஓர் அரத்தைச் சரியான முறையில் உபயோகிக்கா விட்டால் அது மிக விரைவில் தேய்ந்து பாழாய்விடும். கூரிய பற்களைக் கொண்ட அரத்தைக் கொண்டு கடினமான வார்ப்பிரும்புப் பரப்பை அராவக் கூடாது; அதிக அழுத்தத்துடன் அராவுவதாலும் அரம் தேய்ந்துவிடும். அதைப் பரப்பின்மேல் வைத்து, முன்னால் நகர்த்தி அராவியபின், அதைச் சற்று மேலே தூக்கியே பின்னுக்குக் கொண்டுவர வேண்டும். உபயோகப்படுத்திய பின் அரத்தைச் சுத்தம் செய்து வைப்பது நலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரம்&oldid=1489618" இலிருந்து மீள்விக்கப்பட்டது