கலைக்களஞ்சியம்/அரவிந்தர்
அரவிந்தர் அருட் புலவர் ; யோகி; சிந்தனைச் சிற்பி. இவர் 15-8-1872-ல் கல்கத்தாவிற் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் கிருஷ்ணதன கோஷ் ஆவர். 1879 முதல் 1893 வரை பதினான்காண்டுகள் இவர் இங்கிலாந்திலேயே படித்து, கேம்பிரிட்ஜ் பட்டம் பெற்று வந்து, பரோடாக் கல்லூரித் துணைத் தலைவரானார். அப்போதே இவர் வங்கமும் ஆரியமும் கற்று இந்தியாவின் ஞானச் சுரங்கத்தில் இறங்கினார்; 1905 முதல் யோகம் பயின்றார். 1907-ல் கல்கத்தாவுக்கு வந்து, தேசியக் கல்லூரித் தலைவரானார். பிறகு வந்தே மாதரம் என்னும் வெளியீட்டின் ஆசிரியர் குழுவிற் சேர்ந்தார். அரவிந்தரின் எழுத்து, சுதேசி இயக்கத்திற்குப் புதிய உணர்ச்சியும் வேகமும் அளித்தது. அயர்லாந்தில் நடந்த இயக்கம் போலவே இந்திய சுதந்திரக் கிளர்ச்சியை நடத்த இவர் விரும்பினார். தன்னுதவி, நாட்டுத் தொழிலாக்கம், நாட்டுக் கல்வி வளர்ச்சி, ஒற்றுமை, தியாகம் என்னும் இவற்றால் விடுதலை பெறலாம் என்று இவர் விளக்கினார். அக்காலத்தில் காங்கிரசில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. ஒன்று கோகலேயின் மிதவாதக்கட்சி; மற்றொன்று திலகரின் தீவிரக் கட்சி. அரவிந்தர் திலகரின் கட்சியையே போற்றி, அச்சிலும் மேடை மேலும் கிளர்ச்சி செய்தார். அரசாங்கத்தார் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டி அலிபூர் சிறையில் வைத்தார்கள். சிறைவாசத்தை அரவிந்தர் தியானத்தில் கழித்து, ஆன்ம லாபம் அடைந்தார். “அரவிந்தர் பலாத்காரப் புரட்சியாளரல்லர்; தேசாவேசக்கவி; இந்திய தீர்க்கதரிசி; மானிட மரபின் அன்பன்” என்று சித்த ரஞ்சன் தாசர் விளக்கினார். நீதிபதி அரவிந்தரை விடுதலை செய்தார். அரவிந்தரும் புதிய மனிதராக வெளிவந்து, தம் சிறையனுபவங்களையும், யோகக் காட்சிகளையும் ஆவேசமாகப் பொழிந்தார். பிறகு இவர் கர்மயோகி, தர்ம என்ற பத்திரிகைகளால் பகவத் கீதையின் அறத்தை உபதேசித்து, நாட்டிற்கு வழியும் காட்டி, அரசியலிலிருந்து விலகிக் கொண்டார். ஒரு
மாதம் சந்திர நாகூரில் தவமிருந்து, பிறகு கப்பலேறி புதுச்சேரிக்கு 4-4-1910-ல் வந்தார்.
15-8-1914-ல் அரவிந்தர் ஆங்கிலத்தில் ஆரியா என்ற அறிவுக் களஞ்சியத்தைத் தொடங்கி ஆறரை ஆண்டுகள் நடத்தினார். அதுவே அவருடைய மெய்ஞ்ஞான பூரண யோக வேதம். அதில் வந்த அரிய கட்டுரைகளே இப்போது நூல்களாக வெளிவருகின்றன. யோக இணைப்பு (Synthesis of Yoga), தெய்விக வாழ்க்கை (Life Divine), கீதைக் கட்டுரைகள், வேத ரகசியம் ஆகியவை அரவிந்த சித்தாந்த விளக்கங்களே யாம்.
” இந்த உலகிலேயே விண்ணுலக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்; கலி மாறிச் சத்திய யுகம் வர வேண்டும்; மானிட வாழ்க்கை அமரத் தன்மை பெற வேண்டும்; உடலிலும் தெய்வ ஒளி வீச வேண்டும்; உலகம் பொய், உடல் அநித்தியம் என்ற கொள்கை ஒழிய வேண்டும்” என்பவை அரவிந்தரின் அடிப்படையான கோட்பாடுகள். “இந்த உலகில் தெய்வ ஒளி வீசி, அழகும் ஆனந்தமும் வாழ்வில் நிலவக் காண்பதே எனது முயற்சி. அதற்கு மனத்திற்கு மேற்பட்ட விஞ்ஞான சக்தி இறங்கி வரவேண்டும். இந்த இறக்கத்திற்கு மனிதன் தன்னைப் புனிதனாக்கி, அடைக்கலம் புகுந்து, ஆர்வமுடன் அன்னையை உபாசிக்கவேண்டும்” என்கிறார் அரவிந்தர். ”இன்று மனிதன் கீழியற் கையில், ஆசை யாணவ மாயத்தில், மடமை இருளில் ஆழ்ந்து வருந்துகிறான். அவன் மனத்தில் நிகழும் போராட்டத்தினின்று மேலே உயரவேண்டும். உடல், உயிர், மனம், புத்தி எல்லாம் ஆணவத்தைத் துறந்து, ஆசை வலைகளை நீத்து, மெய்ஞ்ஞானச் சக்தி வடிவமான அன்னையைச் சரண் புகுந்தாலே உய்வுண்டு. பராசக்தி அன்னை அழுக்குப் பிடித்த மானிடக் குழந்தையை மாசு நீக்கித் தூய்மையாக்கி உருமாற்றுவாள்” என்பது அவர் நம்பிக்கை. ரூபாந்தரம் அல்லது மாறிப்பிறத்தலே அரவிந்த சித்தாந்தப் பயன். ”ரூபாந்தரம் என்பது கீழியல்பை முற்றிலும் மாற்றித் தெய்வத் தன்மை பெற்று, அன்பு, அமைதி, ஆற்றல், இன்பம், அறிவு, அருட்புலமைகளுடன் மனிதரை வாழச் செய்தலேயாம். இதற்குச் சிற்சத்தி மனிதனுள் செயல்புரிதல் வேண்டும். பழைய யோகங்களின்படி நான் சந்நியாசத்தையோ, சமாதி சித்தியையோ நோக்கமாகக் கொள்ள வில்லை. மனித தத்துவம் எதையும் அசட்டை செய்யாமல் பூரணமாக்கிப் புதுக்கித் தேவமனிதனை, பூசுரனை, நர நாரணனை இந்த உலகில் உண்டாக்குதலே எனது யோகக் குறிப்பு. இது புது யோகம். பழைய யோகங்களைப்போல் உலகைத் துறந்து, சுவர்க்கம், நிருவாணம் என்று தேடித்திரியும் யோகம் அன்று என்னுடையது. தெய்வ நிறைவேற்றமும் புதிய விஞ்ஞான மாற்றமுமே எனது குறிப்பு” என்று அரவிந்தர் சொல்லுகிறார்.
ஸ்ரீ அரவிந்தர் 1950 டிசம்பர் 4-ல் தமது பூத உடலை நீத்தார். சு. பா.
அரவிந்தர் கொள்கை : அரவிந்தருடைய தத்துவக் கொள்கையானது வெற்றுச் சிந்தனையின் விளைவுமன்று ; புலன்கள் வாயிலாகப் பெற்ற அனுபவங்களைக் கொண்டு வகுத்ததுமன்று ; வேதங்கள், உபநிடதங்கள், கீதையாகியவற்றை அவர் தமது ஆத்ம அனுபூதியைக் கொண்டு விளக்குவதாகும். ஆகவே அவருடைய கொள்கையானது அவர் மனத்துக்கு அப்பாற் சென்று கண்ட உண்மைகளை அறிவுக்கு ஏற்றவாறு பொருள் கூறுவதாகும்.
அவருடைய கொள்கையை அகண்ட விஞ்ஞான வாதம் என்றும், பூரண அத்வைத வாதம் என்றும் கூறலாம். அவர், மனத்துக்கு அதீதமான யோக முறை என்னும் பூரண யோக முறைக்கு அறிவு பூர்வமான அடிப்படை வகுத்தார். பூரண யோகம் என்பது அகண்ட வஸ்துவுடன் ஒருவன் தான் மட்டுமன்றி எல்லோரும் ஒன்றித்து வாழும் கலையாகும். தெய்விகச் சக்தி மனிதனிடம் பாயும்படி செய்யும் கலையே அது.
பிரபஞ்சத்துக்கு அடிநிலையாகவுள்ள உள்பொருனானது ஒரு பொருளுமன்று, பல பொருளுமன்று, ஒன்றும் பலவுமாயுள்ள ஒரு தத்துவமாகும். அதுவே பலதிறப்பட்ட நனவுடன் கூடிய பூரணப் பிரமமாகும். அதன் பண்பை ஊன்றி ஆராய்ந்தால், அதனிடம் தனித்துவம், அகண்டத்துவம், அகண்டாதீதத்துவம் என மூன்று நித்திய அமிசங்கள் காணப்படும். அகண்ட அதீதநிலையில் அது பராத்பர பரப்பிரமமாக உளது. அது மனத்துக்கு எட்டாதது; குறைவு படாதது ; எல்லையற்றது. அதுவே ஈசுவரத்துவமும் சீவத்துவமும் உடையதாகும். அவ்விரண்டும் உள்பொருள்களே யல்லாமல் மாயா வாதிகள் கூறுவதுபோல் வெறும் தோற்றங்களல்ல. பிரமமே இருப்பு அமிசமாகிய சிவமாகவும், தோற்ற அமிசமாகிய சக்தியாகவும் இருக்கின்றது. ஆனால் சிவத்துக்கும் சக்திக்குமுள்ள உறவு இத்தகையது என்று தருக்க முறையாக வகுக்க முடியாது. பொருள் - பண்பு, காரணம் - காரியம், ஆன்மா யாக்கை, ஒற்றுமை - வேற்றுமை போன்ற பதார்த்த லட்சணம் கூறுதல் இதற்குப் பொருந்தாது.
அகண்டத்துவ நிலையில் பிரமம், ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று பண்புகளுடைய தத்துவமாகும். அந்நிலையில் அதை ஈசுவரன் என்பர். ஈசுவரன் அதாவது சகுணப் பிரமம் நித்தியமானது என்று விசிஷ்டாத்வைதம் கூறுவது முற்றிலும் சரியே. ஆயினும் பூரணப்பிரமத்தின் அகண்டாதீத நிலையே அனைத்திலும் உயர்ந்த நிலை என்பதையும் கவனித்தல் வேண்டும். மொழிகளால் கூற முடியாத பிரமம் அறிவுக்கு விளங்கும் வண்ணம் தோன்றும் ஆதி அமிசமே சச்சிதானந்தமாகும். அதன் உள்பொருள் நிலையில் இருப்பு, நனவு, இன்பம் ஆகிய மூன்றும் அதன் இணைபிரியாப் பண்புகளாகும். அகண்ட உலகங்களை ஆக்குபவன் என்ற நிலையில் நித்திய சத்திய நனவாகக் காணப்படுகின்றது. அந்த நனவு, விஞ்ஞானம், பிரஞ்ஞானம், சஞ்ஞானம் என மூன்று அமிசங்களுடையது. ஈசுவரன் பல பொருள்களாகத் தோன்றுவதற்கு அடிநிலையாயிருப்பது இந்த அகண்ட நனவேயாகும்.
சீவான்மா : பிரமமானது தனித்துவ நிலையில் அறிவதும் அனுபவிப்பதும் தோன்றுவதுமான பல திறப்பட்ட அமிசங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. ஆன்மா என்பது லுக்ரீஷியஸ் கூறிய அணுவுமன்று ; லைப்னிட்ஸ் கூறிய 'மோனட்' என்பதுமன்று ; அல்லது ஸ்பினோசா கூறிய அகண்ட வஸ்துவின் அமிசமாத்திரமுமன்று; அல்லது மாத்துவர் கூறிய தெய்விகச் சத்தியைச் சார்ந்த உண்மையுமன்று. அது ஒருவிதத் தோற்றமுடைய உள்பொருளேயாகும். சீவான்மாவுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. அது எவ்வித மாறுதலும் அடையாதது. காரண காரியச் சுழலில் அகப்படாதது. அந்த நிலையில் அது சத்துவ சொரூபம் உடைய நித்திய வஸ்துவேயாயினும் தொழிலிலும் தோற்றத்திலும் அதனின்றும் வேறுபட்டதேயாகும். அதுதான் அகண்ட, அகண்டாதீத உள்பொருளின் தொழில் நடத்தும் அமிசம். ஆதலால் ஆன்ம அனுபூதி பெறும்போது 'தான்' என்பது மட்டும் மறையுமேயன்றிச் சங்கரருடைய சீடர்கள் கூறுவதுபோல் சீவான்மாவின் 'தனித்துவம்' அழிந்து போவதன்று. சீவன் அவித்தையை நீக்கி, வினைத் தளையை அறுத்து, ஆன்ம விடுதலை பெறும்போது அகண்டாதீத மௌன நிலையாகிய மோட்சத்தையோ, அல்லது உள்பொருளுடன் கூடும் இன்ப ஐக்கிய நிலையாகிய காதலையோ, அல்லது பிரபஞ்சத்தின் பரிணாமமாகிய உள்பொருளின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உள்பொருளுடன் ஒத்துழைப்பதையோ தேர்ந்து கொள்ளலாம். இக்காலத்தவர் மூன்றாவது கூறியதையே தேர்ந்துகொள்ள வேண்டும் என்று அரவிந்தர் கூறுகிறார். ஏனெனில் அப்பொழுதுதான் மன்பதையைத் தெய்விகம் அடையும்படி செய்ய முடியும். இவ்வாறு மனிதன் தெய்வத்துடன் ஒத்துழைத்து மனிதனைத் தெய்விகம் அடையும்படி செய்வதற்கான கலையே அரவிந்தர் வகுத்துள்ள பூரண யோக முறை என்பதாகும்.
உலகம் என்பது உள்பொருளானது படைப்புத் தொழிலிற் கொள்ளும் வெள்ளமாகும். பிரமமானது அகண்டாதீத நிலையில் மாறாத தன்மையுடையதாக இருப்பினும், தன்னுடைய எல்லையற்ற சக்திகளைத் தோற்றுவிப்பதற்காக உலகமாகப் பரிணமிக்கின்றது. இந்தப் பரிணாமம் காலம் இடம் என்னும் இரண்டு இணைபிரியா அமிசங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றது. உள்பொருளின் உறக்க நிலையே உலகமாகும். தன்னையே சிந்தித்து, அதன் பயனாகத் தன்னையே மறந்த நிலை என்றும் கூறலாம். சச்சிதானந்தத்திலுள்ள சத்து என்பதன் தாழ்ந்த தோற்றமே சடப் பொருளாகும். உயிர் என்பது சித்து என்பதன் தாழ்ந்த தோற்றமும், மனம் என்பது ரித சேதனம் அல்லது உண்மை அறிவு என்பதன் தாழ்ந்த தோற்றமுமாகும். ஆனந்தமே ஆத்மாவாகத் தோற்றுகிறது. ஆதலால் மனிதனுடைய அடி நிலையான குறிக்கோள்கள் வெற்றுக் கற்பனைகளல்ல, உள்பொருளின் குறிக்கோள்களேயாம்.
சாதாரணமான மனித அறிவுக்கு மேலாகப் பல அறிவு நிலைகள் உள. அவை ஊர்த்துவ மனம், பிரபுத்த மனம், பிரஞ்ஞை, அதிமானசம் என்பன. அதிமானசமே உள்பொருளின் பிரதிநிதியாக உலகத்துக்கு வந்து சேர்வது. அது உள்பொருளுடன் உறவு கொண்டதாயிருப்பினும், ஒன்றாயிருப்பதை விட்டுப் பலவாகத் தோன்றுவதற்காக அவித்தை நிலையையே மேற்கொள்கின்றது. அவித்தை என்பது வித்தைக்கு எதிர்மாறான தன்று, வித்தையினிடமுள்ள ஒரு சக்தியேயாகும். அது பிரமம் தன்னுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே மறந்து நிற்பதாகும். பிரபஞ்சம் பரிணாம நிலையுடையது. அதனால் விலங்கினின்றும் மனிதன் பரிணமித்ததுபோலவே மனிதனின்றும் உயர்- மனிதன் பரிணமிப்பான். அப்பொழுது கடவுளுடைய அரசு பூலோகத்தில் அமையும்; அமைதியும் முன்னேற்றமும் ஆனந்தமும் உண்டாகும். ஹ.