கலைக்களஞ்சியம்/அரிச்சித்திரம்

அரிச்சித்திரம் (Etching) உலோகத் தகட்டில் அமிலத்தைக்கொண்டு அரித்து உண்டாக்கப்படுவதாகும். செதுக்குச் சித்திரமும் (Engraving) உலோகத் தகட்டில் வரைவதே. ஆனால் அது ஊசியைக் கொண்டு தகட்டைச் செதுக்குவதால் உண்டாவதாகும். அரிச்சித்திரத்தில் வரைகள் அமிலத்தினாலேயே உண்டாகின்றன.

அரிச்சித்திரத்தை உலோகத்தில் வரைவது போலவே கண்ணாடியிலும் வரையலாம். ஆனால் சித்திரத்தைக் கொண்டு பல பிரதிகள் பெற வேண்டுமானால், செப்புத் தகட்டைப் பயன்படுத்துவார்கள். செப்புத் தகட்டை நன்றாகத் தூய்மைசெய்து, அதன் மீது அரக்கு, மெழுகு, பிசின் முதலியவற்றைப் பூசி, 'அரிகளம்' (Etching ground) உண்டாக்குவார்கள். அதை மெழுகுவர்த்திச் சுடரின்மீது பிடித்து, அதற்குப் புகை ஊட்டுவார்கள். அப்படிச் செய்தால்தான் சித்திரம் நன்றாகக் கண்ணுக்குத் தெரியும். அதன்பின் ஓவியர் தாம் வரைய விரும்பும் சித்திரத்தை அந்தக் களத்தின்மீது கிராமபோன் ஊசியைப்போன்ற உறுதியான ஊசியினால் வரைவார். இதனால் வரைகள் உள்ள இடங்களில் மட்டும் அரிகளம் கீறப்பட்டு உலோகப் பரப்பு வெளியே தெரியும்.

ஓவியர் முதலில் கடுதாசியில் ஓவியத்தை வரைந்துவிட்டுப் பின்னர் அதை அரிச்சித்திரமாக ஆக்க விரும்பினால், அவர் ஒரு மெல்லிய கடுதாசியில் சீமைச் சுண்ணாம்பைத் தடவி, அதன்மீது சித்திரத்தை வரைந்து, அந்தக் கடுதாசியை அரிகளத்தின்மீது வைத்துக்கொண்டு, அந்தச் சித்திரத்தின்மீது ஊசியால் வரைந்து, களத்தின் மீது சித்திரம் காணுமாறு செய்வார். ஊசியானது உலோகத்தின்மீது படாவண்ணமே வரைவார். அதன்பின் தகட்டை அமிலம் நிறைந்த தட்டிற்குள் வைப்பார். பலவிதமான அமிலங்கள் உபயோகிக்கலாமாயினும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவன ஹைடிரோகுளோரிக் அமிலமும், நைட்டிரிக அமிலமுமாகும். ஆதியில் டச்சுக்காரர்களே இத்தகைய சித்திரம் வரையத் தொடங்கியதால் ஹைடிரோகுளோரிக அமிலமும் பொட்டாசியம் குளோரேட்டும் கலந்த நீரை 'டச்சு நீர்' என்று கூறுவர்.

தகட்டை அமில நீரில் இட்டதும் களம் கீறப்பட்ட இடங்களில் அமிலம் இறங்கி உலோகத்தை அரிக்கும். சித்திரத்திலுள்ள மெல்லிய கோடுகள் அரிக்கப்பட்டதும், தகட்டை வெளியே எடுத்து, அந்தக் கோடுகள் உள்ள இடத்தைப் பிரன்ஸ்விக் கறுப்பு என்னும் மெருகெண்ணெயைக்கொண்டு மூடிவிட்டு, மறுபடியும் அமில நீரில் இடுவார்கள். இவ்வாறு பலமுறை இட்டும் எடுத்து மூடியும் எல்லாக் கோடுகளும் தேவையான ஆழங்களுக்கு அரிக்கப்படுமாறு செய்வார்கள். சித்திரம் திருப்திகரமாக அரிக்கப்பட்டதும் தகட்டை எடுத்துத் தண்ணீரில் கழுவிவிட்டுக் கர்ப்பூரத் தைலத்தைக் கொண்டு களப்பொருளை நீக்குவார்கள்.

செதுக்குச் சித்திரத் தகட்டைக்கொண்டு பிரதிகள் எடுப்பது போலவே, அரிச்சித்திரத் தகட்டைக்கொண்டும் பிரதிகள் எடுப்பார்கள். தகட்டின்மீது ஒட்டக்கூடிய மையைத் தடவித் துணியைக்கொண்டு துடைத்தால், மையானது அரித்த பள்ளங்களில் மட்டும் நிரம்பி நிற்கும். ஈரமான கடுதாசியைத் தகட்டின்மீது வைத்து அழுத்தினால் மை கடுதாசியில் சிறிது மேடாகத் தோன்றும். இவ்வாறு கடுதாசியில் சித்திரத்தைப் பெற்று விடுவார்கள். செப்புத் தகடா யிருந்தால் ஐம்பது பிரதிகள் வரை எடுக்கலாம். தகட்டின் மீது எக்கோ குரோமியமோ பூசியிருந்தால் ஐம்பதுக்கும் அதிகமான பிரதிகள் கிடைக்கும்.

பல பெரிய ஓவியர்கள் தம் ஓவியங்களை நேராக அரிச்சித்திரமாகத் தகட்டில் வரையவோ, அல்லது முதலில் கடுதாசியில் வரைந்த சித்திரத்தைத் தகட்டில் வரையவோ, அல்லது பிறர் சித்திரங்களைத் தகட்டில் வரையவோ இந்த அரிச்சித்திர முறையைக் கையாளுகிறார்கள்.

அரிச்சித்திர முறை 15-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அரிச்சித்திரக்காரருள் மிகச் சிறந்தவர் என்று கூறப்படுபவர் டச்சு ஓவியரான ரெம்பிராண்ட் (Rembrandt 1606-69) என்பவர், அவருடைய அரிச்சித்திரங்களுள், 'மூன்று குடிசைகள்' என்பதும், ‘கிறிஸ்து நோயாளிகளைக் குணப்படுத்தல்’ என்பதும் புகழ் வாய்ந்தவை. பிற்காலத்து அரிச்சித்திரக்காரருள் பேர்பெற்றவர் ஸ்பெயின் நாட்டினரான பிரான்தீஸ்கோ காயா (Francisco Goya 1746-1828) என்பவராவர். அவருடைய ‘போரின் தீமைகள்’ என்பது மிகச் சிறந்ததாம். அமெரிக்காவிலிருந்த விஸ்லர் (Whistler 1834-1903) என்பவரும் பேர்பெற்றவர். தாமஸ் டேனியல் (Thomas Daniell 1749-1840) என்ற ஆங்கிலக் கலைஞர் 1784-ல் இந்தியாவிற்கு வந்து, நாட்டின் பல பகுதிகளிலும் கண்ட காட்சிகளை அரிச்சித்திரங்களாக வரைந்தார். சாதாரண முறையில் இவர் சித்திரத்தை வரைந்து, பிரதி எடுத்து, ஒவ்வொரு பிரதிக்கும் தனியே வர்ணங்கள் தீட்டினார். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேறு சில ஆங்கிலேயரும் இந்திய நாட்டுக் காட்சிகளை அரிச்சித்திரங்களாக வரைந்தார்கள். அவற்றுள் ஒன்று இங்கு தரப்பட்டுள்ளது.

அரிச்சித்திரம் : சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஒரு பகுதி
உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை.