கலைக்களஞ்சியம்/அருநெல்லி

அருநெல்லி அழகான சிறிய மரம். இலையுதிர்வது. 2-3 அங்குல நீளமுள்ள தனியிலைகள் கிளைகளிலே இரண்டு வரிசையாக மாறொழுங்கில் அமைந்திருக்கும். இந்தக் கிளைகள் மெல்லியவாகப் பார்வைக்குக் கூட்டிலைகள் போலக் காணும். பூக்கள் மிகச் சிறியவை. செந்நிறமானவை ; நெருக்கமாக அடர்ந்திருக்கும்; ஒரு பாலின. கனி மஞ்சள் நிறமானது. சற்று உருண்டையாக வரி வரியாக உப்பிக் கொண்டிருக்கும். சதைக் கனி. புளிப்பும் சிறிது தித்திப்பும் உள்ளது. வெயிற்காலத்தில் காய்ப்பது. பச்சையாகத் தின்பதற்கும், கறி சமைப்பதற்கும், ஊறுகாய் போடுவதற்கும் பயன்படுவது. வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வைத்து வளர்ப்பது குடும்பம்: யூபோர்பியேசி (Euphorbiaceae); இனம் : பில்லாந்தஸ் டிஸ்டிக்கஸ் (Phyllanthus distichus).