கலைக்களஞ்சியம்/அரேனியூஸ்

அரேனியூஸ் (Arrhenius 1859-1927) ஸ்வீடன் தேசத்திய விஞ்ஞானி. இவர் உப்சாலா நகரத்தருகே ஒரு செல்வரது குடும்பத்திற் பிறந்தார். இளமையிலேயே கணிதத்தில் வியக்கத்தக்க திறமை காட்டினார். தமது இருபத்தைந்தாம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இதற்காக இவர் செய்த ஆராய்ச்சியின் பயனாகக் கரைவுகளில் மின்சாரம் பாயும்போது நிகழும் விளைவுகளை விளக்க இவர் தமது அயான் கொள்கையை (lonic theory) வெளியிட்டார். அக்கொள்கைக் கருத்துக்கள் புதுமையாக இருந்ததால் இவருடைய ஆசிரியரும் அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவை சரியெனப் பின்னர் அறியப்பட்டபோது. இதற்காகவே இவருக்கு 1903-ல் நோபெல் பரிசளிக்கப்பட்டது. இவருடைய முக்கியமான ஆராய்ச்சிகள் அனைத்தும் இதைப்பற்றியே செய்யப்பட்டன. இதனால் பௌதிக ரசாயனத் துறையை நிறுவியவர்களில் இவரும் ஒருவரெனக் கருதப்படுகிறார். இவருக்கு வேறு பல துறைகளிலும் ஆர்வம் இருந்தது. உயிர்ப் பொருள்களில் விளையும் ரசாயன மாறுதல்களைப் பற்றி இவர் ஆராய்ந்தார். அண்டத்தின் தோற்றத்தைப் பற்றிய சிந்தனையிலும் இவர் ஈடுபட்டார். பார்க்க : மின் பகுப்பு.